Wednesday, January 22, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை!-Part 8 (இந்திய பிரதமர்கள் )

சஞ்சய் காந்தியை காங்கிரஸ் கட்சியின் எதிரிகள் மட்டுமல்ல, இந்திராவுக்கு அருகில் இருந்தவர்களே எரிச்சலோடுதான் பார்த்தார்கள். இவர் இருப்பதால், இவரது பேச்சைத்தான் இந்திரா அதிகமாகக் கேட்கிறார் என்ற விரக்தி கலந்த கோபம் ஒரு பக்கம் இருந் தாலும், இந்திராவைத் தவறாக வழிநடத்துவதன் மூலமாக காங்கிரஸ் கட்சியை விரைவில் சஞ்சய் காந்தி அதள பாதாளத்துக்குத் தள்ளிவிடுவார் என்றும் அவர்கள் பயந்தார்கள்.
 சஞ்சய் காந்தியின் போக்கு கட்சிக்கும் நல்லதல்ல; இந்திராவுக் கும் நல்லதல்ல என்று முதலில் சொன்னவர் பி.என்.ஹக்ஸர். இவர் வேறு யாருமல்ல, பிரதமர் இந்திராவின் செயலாளர். ஆனால் அவர் சொன்னது, சஞ்சய் மற்றும் இந்திராவின் விசுவாசிகளால் தவறான எண்ணத்துடன் பார்க்கப் பட்டது.
''சஞ்சய் காந்தி கார் கம்பெனி ஆரம்பிப்பது நல்லதல்ல. அவரால் நினைத்த அளவுக்குத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்ய முடியாது. கொடுத்த வாக்குறுதிப்படி 50 ஆயிரம் கார்கள் தர முடியாது. இந்த நிறுவனம் தொடங்குவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் பலாத்காரத்தின் அடிப்படையில் பறிக்கப்பட்டிருப்பதால் அரசுக்கு கெட்ட பெயர்தான் ஏற்படும்'' என்று இந்திராவிடமே நேரில் சொன்னார் பி.என்.ஹக்ஸர்.
''கார் நிறுவனத்துக்கு அருகில் பி.என்.ஹக்ஸருக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. சஞ்சய், தன்னுடைய நிலத்தையும் பறித்துவிடுவார் என்று ஹக்ஸர் பயப்படுகிறார். அதனால்தான் சஞ்சய்க்கு எதிராக தவறான பிரசாரம் செய்கிறார்'' என்று இந்திராவிடம் போட்டுக்கொடுத்தார்கள். இதனை இந்திராவும் நம்பினார்.
அந்தக் காலகட்டத்தில் இந்திராவின் குடும்ப நண்பராக இருந்த முஹம்மது யூனுஸை சந்தித்த பி.என்.ஹக்ஸர், ''அந்தப் பிள்ளையை இந்தப் பைத்தியக்காரத்தனமான திட்டத்தை கைவிடச் சொல்லுங்கள்'' என்று சொன்னார். ஆனால், ஹக்ஸர் தன்னுடைய சுயநலனுக்காக இப்படிச் சொல்வதாக யூனுஸும் நினைத்தார். இந்தக் காலகட்டத்தில்தான் சஞ்சய் மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை வைக்க ஆரம்பித்தன. இவர்கள் வெறும் அரசியல் தாக்குதல்களாக இல்லாமல், பல்வேறு ஆதாரங்களுடன் பேசினார்கள். அரசுக்கும், மத்திய தொழில் துறைக்கும், சஞ்சய் காந்திக்கும் மட்டுமே தெரிந்த ஆவணங்களை இவர்கள் வெளியிட்டார்கள். இது இந்திராவுக்கும் சஞ்சய்க்கும் சந்தேகம் கிளப்பியது.
பி.என்.ஹக்ஸர் தான் இந்த செய்திகளை வெளியில் விடுகிறார்... தன்னுடைய இடதுசாரி நண்பர்களுக்குத் தகவல்களைக் கொடுத்து பரப்புகிறார்... அவர்தான் தூண்டிவிடுகிறார்... என்று இந்திராவும் சஞ்சயும் நம்பினார்கள். இந்த நிலையில் பி.என்.ஹக்ஸர் பதவியில் இருந்து தூக்கப்பட்டார். ஹக்ஸருக்கு இந்த நிலைமை வரும் என்று யாரும் நினைக்கவில்லை. அந்தளவுக்கு செல்வாக்கான இடத்தில் இருந்தவர் அவர்.
சஞ்சய் காந்தியின் செல்வாக்கை காங்கிரஸ் பிரமுகர்களும் மற்றவர்களும் இதில் இருந்துதான் உணர்ந்து கொண்டனர். சஞ்சயை விமர்சித்தால் காங்கிரஸிலும் இருக்க முடியாது என்ற யதார்த்தம் வெளிப்பட்டது. சஞ்சய் காந்தியை காக்கா பிடித்தால்தான் காங்கிரஸில் காலம் தள்ள முடியும் என்ற நிலையே உருவானது.
அந்தக் காட்சிகளை முஹம்மது யூனுஸ் வர்ணிக்கிறார்...
''பல முதல்வர்கள் அடிக்கடி எனக்கு டெலிபோன் செய்து, 'யூனுஸ் சாகிப், சஞ்சய் பஞ்சாப், ஹரியானாவுக்கு மட்டும் போகிறாரே... நாங்கள் இருப்பது ஞாபகம் இல்லையா? எங்கள் மாநிலத்துக்கு அவரை அனுப்பி வையுங்கள்’ என்று ஒப்பாரி வைத்தார்கள். ஆந்திராவில் இருந்து வெங்காலராவ், தமிழக ஆளுநர், மகாராஷ்டிராவில் இருந்து எஸ்.பி.சவான் இப்படி எல்லோரும் சஞ்சயை வரவேற்றனர். எஸ்.பி.சவான் எல்லை மீறிப் புகழ்ந்தார். 'அவர் இளைஞர்கள் தலைவர் மட்டுமல்ல... தேசத்தின் தலைவரும்’ என்று பேசினார். அந்தக் காலத்தில் அதைப் புகழ்ச்சி என்றுகூடக் கூற முடியாது. அது தவிர்க்க முடியாத ஒன்றாகத் தெரிந்தது. இது காங்கிரஸின் அன்றைய நிலைமையை வைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று. காங்கிரஸார் தங்கள் லட்சியங்களை இழந்து போயினர். அநேகர் குறுக்கு வழியில் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். மற்றவர் புகழில் மறைந்து கொள்வதைக் காட்டிலும் சுலபமானது எதுவும் இல்லை. தனயனைப் புகழ்ந்து தாயாரை உச்சி குளிர வைத்து தங்களை நிலைநிறுத்திக்கொள்வதே அவர்களின் நோக்கமாகும்'' என்று எழுதி இருக்கிறார். இந்திரா குடும்பத்தின் முக்கியமான தலையாட்டி பொம்மைகளில் ஒருவரான முஹம்மது யூனுஸே இப்படி எழுதி இருக்கிறார் என்றால், நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதைக் கவனியுங்கள்.
இப்படிப்பட்ட நேரத்தில் பி.என்.ஹக்ஸர் மட்டும்தான், ''பிரதமருடன் ஒரே வீட்டில் வசிக்கும் வரை, எந்தவிதமான வர்த்தகரீதியான செயல்பாடுகளிலும் சஞ்சய் காந்தி ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்'' என்று துணிச்சலாகச் சொன்னார். இதனாலேயே ஓரங்கட்டப்பட்டார்.
இதேபோன்ற எண்ணம் இந்திரா காந்தியின் நெருங்கிய தோழி புபுல் ஜெயகருக்கும் இருந்தது. சஞ்சய் பற்றி வெளிப்படையாகச் சொன்னால் இந்திராவுக்குப் பிடிக்காது என்று புபுல் ஜெயகருக்குத் தெரியும். 'சஞ்சய் இதே மாதிரியான தொழில் எல்லாம் செய்ய வேண்டுமா? அரசியல் எதிரிகள் இதனைப் பயன்படுத்திக்கொள்வார்களே?’ என்று வருத்தப்பட்டு கேட்பதுபோல இந்திராவுக்குச் சொல்லிப் பார்த்தார். அதற்கு இந்திரா சொன்ன பதில், புபுல் ஜெயகரை பதில் யோசிக்கவிடாமலே தடுப்பது மாதிரி இருந்தது.
''பிரதமரின் மகன் என்பதற்காக சஞ்சய்க்கு ஆர்வமான தொழிலைச் செய்து சாதனை படைப்பதற்கு தடை போட முடியாது'' என்று சொன்ன இந்திரா,
''அது ஒரு கார் கம்பெனியைப் போலவே இல்லை என்று சிலர் கிண்டல் செய்கிறார்கள். ஒருநாள் நான், கான்ஸன்டைன் என்ற கிறிஸ்தவப் பாதிரியாரைச் சந்தித்தேன். அவருக்கு விமானம் செய்வதில் அதீத ஆர்வம் இருந்தது. இரண்டே இரண்டு அறைகள் கொண்டது அவரது கம்பெனி. அதில் அவர் ஒரு சிறிய விமானத்தை உருவாக்கி இருந்தார். அதில் தன்னுடைய நண்பர்களுடன் சுற்றி வருவார். ஒரு பாதிரியாரால் ஒரு விமானத்தை உருவாக்க முடியும்போது, சஞ்சயால் ஒரு காரைத் தயாரிக்க முடியாதா?'' என்று கேட்டாராம்.
ஒரு அறைக்குள் பறப்பதை விமானம் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால், சஞ்சய் தயாரித்ததையும் கார் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்திரா இப்படிச் சொன்னார் என்பதை அவர் இறந்ததற்குப் பல ஆண்டுகள் கழித்துத்தான் புபுல் ஜெயகருக்கே வெளியில் சொல்லத் தைரியம் வந்தது.
அந்தளவுக்கு யாராலும் இந்திராவால்கூட தட்டிக் கேட்க முடியாதவராக சஞ்சய் வலம் வந்தார். ஒரு உதாரணம் சொன்னால் புரியும்!
பாரத ஸ்டேட் வங்கியின் நாடாளுமன்ற வீதி கிளையின் தலைமைக் கணக்காளர் வேத பிரகாஷ் மல்ஹோத்ராவுக்கு ஒரு போன் வந்தது. ''நான் பிரதமரின் செயலாளர் ஹக்ஸர் பேசுகிறேன். பிரதமருக்கு அவசரமாக 60 லட்சம் பணம் தேவைப்படுகிறது'' என்று அந்தக் குரல் சொன்னது. அந்தக் குரல், போனை இன்னொருவரிடம் கொடுத்தது. அடுத்துப் பேசுபவர் பெண். ''பணத்தை நீங்கள் எடுத்து வந்து கொடுங்கள்'' என்றது. இது பிரதமர் இந்திராவின் குரல்தான் என்று அந்தக் கணக்காளர் பின்னர் நடந்த விசாரணையில் சொன்னார்.
60 லட்சம் ரூபாயை எடுத்தார் மல்ஹோத்ரா. காரில் வைத்தார். சொன்ன இடத்துக்குப் போனார். நின்ற நபரிடம் கொடுத்தார். பணத்தை வாங்கியவர் பெயர்தான் நகர்வாலா.
60 லட்சம் ரூபாய் என்பது இன்றைய ஊழல்களோடு ஒப்பிடும்போது குறைவாகத் தெரியலாம். 1971-ல் 60 லட்சம் ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு இருக்கும் எனப் பாருங்கள்!
60 லட்சம் ரூபாய் பணத்தை யாரிடமும் தான் கொடுக்கச் சொல்லவில்லை என்று ஹக்ஸர் கையை விரித்துவிட்டார், அப்படி யாருக்கும் நான் போன் செய்யவில்லை என்று சொல்லிவிட்டார். எதிர்கட்சிகள் இதனை நாடாளுமன்றத்தில் எழுப்பி இந்திராவை வளைத்தது. இந்திரா இதற்கு பதிலே பேசவில்லை. ''அந்த அதிகாரி சொல்வது நம்பும்படியாக இல்லை'' என்று சொல்லி, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நகர்வாலா கைது செய்யப்பட்டார். அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சில மாதங்களிலேயே நகர்வாலா சிறையில் இறந்தார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி டி.கே.காஷ்யப், ஒரு சாலை விபத்தில் இறந்து போனார்.
நகர்வாலா சாதாரண ஆள் அல்ல. இந்தியப் புலனாய்வுத் துறையில் வேலை பார்த்தவர். ஒரு வங்கி அதிகாரியையும், புலனாய்வு அதிகாரியையும் யார் பயன்படுத்த முடியும் என்பது தெரியாதது அல்ல. இது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என்று தெரிந்ததும், நகர்வாலாவை உடனடியாக கைது செய்கிறார்கள். அவரிடம் இருந்து பணம் அப்படியே கைப்பற்றப்படுகிறது. மிகப்பெரிய கிரிமினலாக இருந்திருந்தால் நகர்வாலா, உடனடியாக எங்காவது தப்பி இருக்கக் கூடும். அதைச் செய்யாமல் தானே சிக்கிக்கொண்டு, பணத்தையும் திருப்பி ஒப்படைத்தார்.
ஆனால் கடைசி வரை, போனில் பேசியது யாருடைய குரல் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இந்திரா அமைத்த விசாரணையில் மட்டும் அல்ல... அவரது ஆட்சிக்குப் பிறகு அமைந்த ஜனதா அரசு அமைத்த விசாரணையிலும் இதனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. 'விசாரணைக்குப் பிறகும் சந்தேகம் அதிகரிக்கவே செய்கிறது’ என்று நீதிபதி சொன்னார். ஆனால் உண்மைகள், விசாரணை கமிஷன்கள் வைத்து தேட வேண்டியதாக எப்போதும் இருக்காது.
60 லட்ச ரூபாய்  பணத்தை எடுத்துக் கொடுத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட மல்ஹோத்ராவுக்கு, தன்னுடைய கார் கம்பெனியில் சஞ்சய் காந்தி வேலை போட்டுக் கொடுத்திருந்ததன் மூலமாக உண்மை உணரத்தக்கது!
டுபாக்கூர் கம்பெனிகளை 'மன்னார் அண்ட் கம்பெனி’ என்று கிண்டல் செய்வார்கள். அம்மா இந்திராவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மகன் சஞ்சய் அந்தக் காலத்தில் ஆரம்பித்த கார் கம்பெனிக்கும் இந்த மன்னார் அண்ட் கம்பெனிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இல்லாத கறுப்புப் பூனையை இருட்டில் தேடுவது என்பார்களே... அப்படித்தான் சஞ்சய் அந்தத் தொழிலை நடத்தினார். கார் உற்பத்தி செய்யப்போவதாக எண்ணிக்கையைக் காட்டி, ஒரு நிறுவனத்தின் பெயரில் அனுமதியைப் பெற்று, பல்வேறு முறைகளில் பணத்தைத் திரட்டிய முறைகேடு சஞ்சய் மூலமாகத் தொடங்கியது. போஃபர்ஸ் முதல் ஸ்பெக்ட்ரம் வரை அனைத்து முறைகேடுகளுக்கும் அரிச்சுவடி போட்டுக்கொடுத்தது சஞ்சய் காந்தியின் செயல்.
 ராஜீவ் காந்தியைப்போல அமைதியானவர் அல்ல சஞ்சய். இளம் வயதிலேயே துடுக்கும் மிடுக்கும் நிறைந்தவராக வளர்ந்தார். ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி என்றால் எப்படித் துள்ளும்! அதைவிட அதிகமாகவே துள்ளினார். பெரும் குடும்பத்துப் பிள்ளைகள் படிக்கும் டூன் பள்ளியில் படித்தாலும், அவருக்கு அந்தக் கல்வி மீது ஆர்வம் இல்லை. அவரது எண்ணம் எப்போதும் கார், கார், கார்.
காரை வெகுவேகமாக ஓட்டுவதும், எந்த காராக இருந்தாலும் பிரித்து மேய்வதும் அவரது ஆசையும் வாடிக்கையாகவும் இருந்தன.
எந்த கார் கிடைத்தாலும் எடுத்துக்கொண்டு பறப்பார். அது பரவாயில்லை. யாருடைய காராக இருந்தாலும் எடுத்துச் செல்ல முடியுமா? அதையும் சஞ்சய் செய்தார். அதுதான் சிக்கல். அவரைப்போலவே கார் ஆசை கொண்ட இளைஞர்கள் படை ஒன்றை உருவாக்கிக்கொண்டார். கார்களில் இரவு பகலாக டெல்லியைச் சுற்றுவதே இவர்களின் ஒரே பொழுதுபோக்கு. இந்த நிலையில் ராணுவ அதிகாரி ஒருவரின் கார் காணாமல் போனது. மறுநாள், டெல்லி பாலம் விமான நிலையம் அருகில் அது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மயங்கிய நிலையில் ஒரு இளைஞன் இருந்தார். அவர், சஞ்சய் காந்தியின் நெருக்கமான நண்பரான அடில் ஷர்யார். இந்த கார் திருட்டை அன்றைய 'கரன்ட்’ பத்திரிகை அம்பலப்படுத்தியது. ஆனால், எந்தப் பயனும் இல்லை.
இதன் மூலமாக மகனுக்கு, மிக மோசமான இளைஞர்களின் சகவாசம் இருக்கிறது என்று இந்திரா உணர்ந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால், கார்களின் மீது மகனுக்கு ஆர்வம் இருப்பதை மட்டும்(!) இந்திரா உணர்ந்துகொண்டார். இங்கிலாந்தில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப அறிவு பெற அனுப்பிவைக்கப்பட்டார் சஞ்சய். மூன்றாண்டு படிப்பை முழுமையாக முடிக்காமல், இரண்டாவது ஆண்டே இந்தியா திரும்பினார் சஞ்சய். இந்திராவே அவரைக் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு வயதாலும் அனுபவத்தாலும் வளர்ந்திருந்தார். கார் மோகம் அவருக்கு இன்னும் அதிகமாகி இருந்தது. தனது நண்பர்களோடு கார் மெக்கானிக் வேலைகளில் மும்முரம் ஆனார்.
இந்தக் காலம் மாதிரி அப்போதெல்லாம் விதவிதமான கார்கள் கிடையாது. அதுவும் சிறிய கார்களும் இல்லை. இந்தியாவில் சிறிய கார்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனை மத்திய அரசுக்கும் இந்த தொழிலில் இருந்த நிறுவனங்களுக்குமே இருந்தது. மிகமிகக் குறைந்த விலையில், அதாவது அன்றைய (1968) மதிப்பில் சுமார் 6,000 ரூபாய்க்கு கார் உற்பத்தி செய்துவிட வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தது. அவர்கள் திட்டமிட்டதில், அறிவித்ததில் எந்தத் தவறும் இல்லை. நோக்கம் நல்ல நோக்கம்தான். ஆனால் அதனைச் செயல்படுத்தும்போதுதான் அதிகாரம் உள்ளே நுழைந்தது.
சிறிய கார் உற்பத்தியில் இறங்க அனுமதி கேட்டு 14 விண்ணப்பங்கள் வந்தன. அதில் ஒன்று சஞ்சய் காந்தியின் விண்ணப்பம். ரெனால்ட், சிட்ரன், டொயோட்டா, மஸ்டா போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தப் போட்டியில் இருந்தன. ஆனால் அவை, சஞ்சய் காந்தியைப்போல பிரதமரின் மகன் என்ற தகுதியைப் பெற்றதா என்ன?
சஞ்சய் காந்தி, இந்திய மக்களுக்கு புதிய கார் ஒன்றை தயாரித்துத் தரப்போகிறார் என்று அன்றைய மத்திய தொழில் துறை இணை அமைச்சர் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். '6,000 ரூபாய் மதிப்பில் சிறிய கார் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. அது லிட்டர் ஒன்றுக்கு 90 கி.மீ. ஓடும். அதனுடைய வேகம் மணிக்கு 85 கி.மீட்டர்’ என்றும் அவர் தெரிவித்தார். அதுதான் சஞ்சய் காந்தியின் கற்பனையில் உருவான 'மாருதி’ நிறுவனம். எல்லா லட்சியங்களுமே கனவுகளால் உருவாவதுதான். ஆனால், லட்சங்களைப் பெற்ற பிறகும் கனவிலேயே படம் காட்ட முடியுமா? காட்டும் திறமை சஞ்சய்க்கு இருந்தது.
50 ஆயிரம் கார்களைத் தயாரிப்பதற்கான அனுமதி, பிரதமர் இந்திரா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டது. அதற்கான கடிதத்தை சஞ்சய் காந்தியிடம் கொடுத்தவர், அன்றைய மத்திய தொழில் துறை அமைச்சர் தினேஷ் சிங்.
பிரதமர் மகன் தொடங்கும் கம்பெனி என்றால் அதிகார வர்க்கம், காலால் இட்ட வேலையை தலையால் செய்யும் அல்லவா? இங்கே வாருங்கள், அங்கே வாருங்கள்... என்று பலரும் அழைக்க, இறுதியில் அரியானா மாநிலத்தில் இந்த நிறுவனத்துக்கான இடம் தரப்பட்டது. கொடுத்தவர் பன்சிலால். டெல்லிக்கு சற்றே அருகில் உள்ள இடம் இது. ஆனால், அவை விவசாய நிலங்கள். அவை பலாத்காரமாகப் பறிக்கப்பட்டதாக முதல் புகார் எழுந்தது. விலை அதிகம் உள்ள இடத்தை குறைவான விலைக்கு வாங்குவதாக அடுத்தப் புகார் எழுந்தது. இவை எதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
எந்தத் தாமதமும் இல்லாமல் 1971-ல் நிறுவனம் தொடங்கப்பட்டது. கார் உற்பத்தி செய்வதற்கான அடிப்படை வேலைகள், உள்கட்டமைப்புகள் செய்யப்படுவதற்கு முன்பே... காரை விற்பனை செய்யும் டீலர்களை நியமித்தார் சஞ்சய். நாடு முழுவதும் நியமிக்கப்பட்ட 75 டீலர்களிடம் இருந்து பல லட்ச ரூபாய் முன்பணம் வாங்கப்பட்டது. முதல் லாபம் இது. ஆனாலும் நிறுவனத்தைத் தொடங்க முடியவில்லை. இந்தப் பணம் போதாது என்று நினைத்தார் சஞ்சய். தன்னுடைய கவலையை காங்கிரஸ் பிரமுகர்களிடம் சொன்னார். அவர்களுக்கு தெரிந்த, வசதியான ரூட்டைக் காட்டினார்கள்... வங்கிகள் நமக்கு தாராளமாக பணம் கொடுக்குமே என்று.  இரண்டு வங்கிகளிடம் கடன் கேட்டார்கள். ஏதாவது ஒன்று தந்தால் போதும் என்று நினைத்தார்கள். சஞ்சய் காந்தியின் அதிர்ஷ்டம், இரண்டு வங்கிகளுமே கடன் கொடுத்தன. 'வங்கிகளிடம் போய் ஏன் நிற்க வேண்டும்? எங்களிடம் கேட்டால் தரமாட்டோமா?’ என்று பல காங்கிரஸ் பிரமுகர்கள் முன்வந்தார்கள். பிரதமர் மகனின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் நமக்கு வேறு வசதிகள், லாபங்கள் கிடைக்கும் என்பதை எதிர்பார்த்து பல தொழிலதிபர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் முதலீடு செய்தார்கள். சஞ்சய் கையில் கோடிகளில் பணம் புரளத் தொடங்கியது. ஆனால், அந்தப் பணத்தை வைத்து நிறுவனம் பெரியதாக அமைக்கப்படவில்லை. அன்றைய இந்திராவின் எதிரிகள், 'கார் மெக்கானிக்கல் ஷெட்டை, கார் கம்பெனி என்று சஞ்சய் சொல்லிக்கொண்டு இருக்கிறார்’ என்று கிண்டல் அடித்தனர். பின்னர் 1977-ல் நடந்த தேர்தலில் ஜனதா கட்சித் தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்திலும் இப்படித்தான் சொன்னார்கள்.
இந்த நிலையில், 1972 நவம்பர் மாதம் டெல்லியில் நடந்த ஆசிய வர்த்தக கண்காட்சியில் தனது கனவு காரின் மாடலை கொண்டுவந்து நிறுத்தினார் சஞ்சய். இதனை சோதனை செய்துபார்க்க அப்போது சிலர் முயன்றதாகவும், அதற்கு அனுமதி தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், விரைவில் கார் ஓடும் என்று சஞ்சய் நம்பிக்கையுடன் சொன்னார்.
சில மாதங்கள் கழிந்தன...
இந்திய மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் கார் தரவேண்டும் என்ற முதல் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதுதான் இந்த அனுமதி. அதற்கே முதலில் வேட்டு வைத்தார் சஞ்சய்.
''6,000 ரூபாயில் கார் உற்பத்தி செய்ய முடியாது. புதிய காரின் விலை 11 ஆயிரத்து 300 ரூபாய்'' என்று சொன்னார். 6,000 ரூபாய்க்குத்தான் கார் தரவேண்டும் என்று மத்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு விலையை இரண்டு மடங்கு கூட்டியதைப்போல வேறு யாராவது செய்திருந்தால் அரசாங்கம் அனுமதிக்குமா? செய்தது சஞ்சய் என்பதால், யாராலும் தடைபோட முடியவில்லை.  
இந்த காரில் என்ன மாதிரியான இன்ஜின் பொருத்துவது என்ற குழப்பம் கடைசிவரை சஞ்சய்க்கு ஏற்பட்டது. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்று சொன்னார் அவரது நண்பர். சஞ்சய்யும் சரி என்று சொல்லிவிட்டார். வரவழைத்து பொருத்திவிட்டார்கள். ஆனால், இதுவும் அப்பட்டமான விதிமுறை மீறல்தான். அரசின் ஒப்பந்தப்படி, தயாராகும் காரில் பொருத்தப்படும் உதிரிப் பாகங்கள் அனைத்தும் இந்தியத் தயாரிப்பாகத்தான் இருக்க வேண்டும்.
ஒப்பந்தத்தின் முதல் ஷரத்து, காரின் விலை குறைவாக இருக்க வேண்டும். அதனை மீறி இரண்டு மடங்கு விலை அதிகமாக ஆக்கப்பட்டது. இரண்டாவது ஷரத்து, இந்திய உதிரிப் பாகங்கள்தான் பொருத்த வேண்டும். அதற்கு மாறாக ஜெர்மன் பாகங்கள் பொருத்தப்பட்டன. ஆனால், பிரதமர் மகன் நிறுவனத்தில் யாராவது கேட்க முடியுமா?
சரி, விதிமுறைகள்தான் மீறப்பட்டன. காராவது தயாரிக்கப்பட்டதா என்றால், அதுவும் இல்லை!
இப்போது வரப்போகிறது, அப்போது ஓடப்போகிறது என்ற செய்திதான் பரப்பப்பட்டதே தவிர, காரையே காணவில்லை. ஆனால், புதிய துணை நிறுவனங்களைத் தொடங்கி, கம்பெனி வளர்ந்துகொண்டு வருவதாகக் காட்டிக்கொண்டார். ரோடு ரோலர்கள் தயாரிப்பில் குதித்து, அதற்கான டெண்டர்களை கைப்பற்றத் தொடங்கினார் சஞ்சய். துணை நிறுவனங்கள் தொடங்கியதும்தான் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இதனைக் கேள்வியாய் போட்டு மடக்கியது. பிரதமர் இந்திரா, ''என்னுடைய மகன் என்பதற்காக, துடிப்பும் ஆர்வமும் உள்ள இளைஞரை ஊக்கப்படுத்தாமல் இருக்க முடியாது'' என்று பொத்தாம்பொதுவாகச் சொன்னாரே தவிர, விதிமீறல்களுக்கு விளக்கம் சொல்ல அவரால் முடியவில்லை.
ஆனால் சஞ்சய் காந்தியை, அளவுக்கு அதிகமாக இந்திரா ஊக்கப்படுத்தியதால் இந்தியா அடைந்த அவஸ்தைகள்தான் அதிகம்!

No comments:

Post a Comment