Tuesday, January 14, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை!-Part 2 (இந்திய பிரதமர்கள் )


ராபர்ட் கிளைவ் இறந்து விட் டார். ஆனால், இப்போது இருப்பவர்களுக்கும் ராபர்ட் கிளைவுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல முடி யுமா?  
 ''ராபர்ட் கிளைவ் குவித்த செல் வத்துக்கு அளவே இல்லை. வங் காளத்தில் இருந்த பொக்கிஷத்தை எல்லாம் தன்வசப்படுத்தினார். இந்திய மன்னர்கள் குவியல் குவியலாகச் சேகரித்து வைத்திருந்த நாணயம், நகைகள், ரத்தினங்கள் அனைத்தும் கிளைவுக்கு சொந்தம் ஆக்கப்பட்டது. கிளைவ், பொன்குவியல்களுக்கும் வெள்ளிக் குவியல்களுக்கும் இடையே உல்லாசமாக இருந்தார். வைரங்கள், நவரத்தினங்களுக்கு மத்தியில் கிளைவ் மூழ்கிக் கிடந்தார்'' என்று சுதேசித் தலைவர்கள் சொல்லவில்லை. தன்னுடைய குறிப்புகளில் இப்படி எழுதியிருப்பது மெக் காலே. இன்று நாம் எந்தச் சட்டத்தைக் கடைப்பிடிக்கிறோமோ... எந்தக் கல்வி முறையைப் பின்பற்றுகிறோமோ... அதற்கு அடித்தளம் அமைத்த மெக்காலேதான் இப்படி வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்!
ராபர்ட் கிளைவ் இறந்து போனார் என்றால் ராபர்ட் வதேரா யார்? கேத்தன் தேசாய் யார்? அமர் சிங் யார்?
இந்தியாவிலேயே உயர்ந்த ரியல் எஸ்டேட் அதிபராக ராபர்ட் வதேரா உயர்ந்திருக்கிறார். 2007-ம் ஆண்டு பித்தளை வியாபாரம் பார்க்க ஆரம்பித்த ராபர்ட் வதேரா, இந்தியாவின் உயர்ந்த குடும்பத்தின் மகளான பிரியங்காவை அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டவர். ஒரே ஒரு இடத்தை விற்று 42 கோடி ரூபாய் பணம் கிடைத்தது. ஆனால், 2009-ம் ஆண்டுக்குப் பிறகு வாங்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு மற்றும் அவை வந்த பாதைகள் பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம். அவரது சொத்தும் முதலீடும், 20 ஆண்டுகளாக பெருந்தொழிலில் இருப்பவர்களால்கூட அடைய முடியாதது. ஊடகங்களுக்கு முன்னால் தலைதொங்கி ராபர்ட் வதேரா நின்றுகொண்டு இருக்கிறார். சோனி யாவிடம் ராகுல் சொன்னதாக டெல்லியில் ஒரு ஜோக் உண்டு.
 
''முதலில் 2ஜி, அப்புறம் நிலக்கரிஜி, இப்போது ஜிஜாஜி'' என்றாராம் ராகுல். (ஜியாஜி என்றால் மச்சான்!)
2008-ம் ஆண்டு இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு ஏற்பட்டது. இதனால், இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக்கொண்டதால், காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லா வாக்கு கோரப்பட்டது. பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்களுக்கு மாற்றி வாக்களிக்குமாறு கோரிக்கை வைத்த அமர் சிங், ஒவ்வொரு எம்.பி-க்கும் மூன்று கோடி ரூபாய் தருவதாக வாக்களித்தார். 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்துக்கு வந்த எம்.பி-க்கள் சிலர், தங்களுக்குத் தரப்பட்ட ஒரு கோடி ரூபாயைக் கொண்டுவந்து காட்டினர். கரன்சியால் மிதந்தது நாடாளுமன்றம். ஒரே ஒரு தடவைதான் இப்படி பணத்தைக் கொண்டுவந்து காட்டினர் என்பதால், ஒரே ஒரு தடவைதான் இப்படி நடந்திருக்கும் என்று சொல்ல முடியுமா? அந்தப் பெரிய மனிதர்கள் யாரும் இதுவரை சிக்கவில்லை!
இப்படித்தான் சுதந்திரத்துக்கு முந்தைய இந் தியாவிலும் பணம் பொங்கியது!
''கடல் பொங்குவதுபோல் இந்தியாவின் பணம் இங்கிலாந்துக்குப் பொங்கி வந்தது''- என்று எழுதினார் மெக்காலே. அந்த அளவுக்கு கிழக்கிந்திய கம்பெனி மூலமாக இந்தியாவின் பணம் இங்கிலாந்துக்குப் போனது. கிரீஸ் தேசத்து அலெக்சாண்டர், இந்தியாவுக்குள் நுழைந்ததும் எப்படி நடந்துகொண்டாரோ... கஜினி, வட இந்தியாவின் கானோஜ் சமஸ்தானத்தில் எதைச் செய்தாரோ... அதைத்தான் பிரிட்டிஷ் அரசாங்கமும் செய்தது. இப்படி, வந்தவர்கள் எல்லாம் கொள்ளையடிக்கும் வசதி கொண் டதாகத்தான் இந்தியா இருந்தது.
இந்தியாவுக்கு பிரிட்டிஷார் ஏன் வந்தனர்? வியாபாரம் செய்வதற்கு! இந்தியா ஏழை நாடாக இருந்திருந்தால், யாராவது வியாபாரம் செய்வதற்கு வந்திருப்பார்களா? வளமுள்ள இடத்தில்தானே வியாபாரம் நடக்கும்? எனவே, பிரிட்டிஷார் வருவதற்கு முன்பே இந்தியா வள மாகத்தான் இருந்தது.
''வங்கதேசம் சொத்து உள்ள நாடாக இருந்தது. வழிப்போக்கர்களில் யாராவது சொத்தை வழியில் இழந்து விட்டால், அந்த சொத்தைக் கண்டெடுத்தவர்கள் பக்கத்து மரங்களில் அதைக் கட்டி வைத்து விடுவார்கள். அதன்பிறகு அருகில் உள்ள காவலர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள்'' என ஹால்வெல் என்ற வெளிநாட்டுப் பயணி எழுதி இருக்கிறார். இதே வங்கநாடு, பிரிட்டிஷ் ஆளுகைக்கு வந்த பிறகு, பெரிய மாறுதலை அடைந்தது. இந்தியாவில் இருந்து இங்கிலாந்து போகும் ஒவ்வொரு கப்பலிலும் வங்கநாட்டு நிதிக்குவியல் போய்க்கொண்டே இருந்தது.
இந்த நிலைமை 1850-களில் அப்படியே மாறி விட்டது. இதை, டாக்டர் மார்ஷமன் எழுதினார். ''வங்கநாட்டில் உள்ள மக்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக மாறியிருக்கிறது. நாய் வசிக்கத் தகுதியற்ற பாழடைந்த சிறு குடிசைகளில், கந்தல் துணியுடனும் ஒருவேளை உணவு இல்லாமலும் மக்கள் துன்பப்படுகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு 40 லட்சம் ரூபாய் வருமானத்தை மட்டும் திரட்டுபவர்களின் காதுகளில், மக்களின் பரிதாபக் கூக்குரல் விழாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?'' என்று கேட்டார்.
நான்கு விதங்களில் பணத்தை கிழக்கிந்திய கம்பெனி திரட்டி, இங்கிலாந்துக்குக் கொண்டுசென்றது. அன்றைக்கு இருந்த மன்னர்களிடம் இனாமாகவும் காணிக்கையாகவும் பெற்ற பணம், மக்களிடம் வசூல் செய்தது, கம்பெனி ஆட்கள் செய்த வர்த்தகத்தின் மூலமாக திரட்டிய பணம், சுதேச சமஸ்தானங்களிடம் இருந்து தட்டிப்பறித்த பணம்... என்று பொன்னும் பொருளும் பணமும் திரட்டப்பட்டது.
இந்தியாவின் உள்நாட்டு வியாபாரம் அனைத்தும் கம்பெனியின் நன்மைக்காக நடந்தது. கம்பெனி அதிகாரிகள் இந்திய தறி நெசவாளர்களைக் கொடுமைப்படுத்தினர். ஒரு விலையைச் சொல்லி, அந்த விலைக்குத்தான் பொருட்களைத் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். தொழிலாளர்களையும் நெசவாளர்களையும் கம்பெனிக்காக மட்டுமே தவிர, மற்றவர்களுக்கு வேலை செய்யக் கூடாது என்று கட்டளையிட்டனர். இதை எழுதி வாங்கினர். எழுதித்தர மறுத்தவர்களை, மரத்தில் கட்டிவைத்து அடித்தனர். இந்தக் கொடுமைக்குப் பயந்த பல நெசவாளிகள் தங்களது கையின் கட்டை விரலை வெட்டிக்கொண்டனர். 'விரல் இருந்தால்தானே நெசவு நெய்துதரச் சொல்வாய்?’ என்று நினைத்து கட்டை விரலை வெட்டிக்கொண்டார்களாம். சில இடங்களில் தங்களது பேச்சைக் கேட்காத தொழிலாளர்கள் மற்றும் நெசவாளிகளின் கட்டை விரலை பிரிட்டிஷாரே வெட்டியுள்ளனர்.
1765 முதல் 1771 வரையிலான ஐந்து ஆண்டு காலத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு நான்கு கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் கம் பெனிக்கு வந்த மொத்தப் பணம் 13 கோடி என்றால், மூன்றில் ஒரு பங்கு பணம் இங்கிலாந்துக்குச் சென்றது. படை நடத்த, போர் புரிய, சம்பளம் கொடுக்க, சாப்பிட, உள்கட்டமைப்பு வசதி போக மிஞ்சியது அனைத்தையும் இங்கிலாந்துக்குக் கொண்டுபோனார்கள்.
கம்பெனி வர்த்தகம் செய்தது போக, கம்பெனியின் அதிகாரிகள் தனியாக வர்த்தகம் பார்த்தனர். உப்பு, வெற்றிலை பாக்கு, புகையிலை வியாபாரம் பார்த்தார் கிளைவ். அவர் இதைச் செய்யக் கூடாது என்று கம்பெனியின் வர்த்தகர்களும், கீழே இருந்த அதிகாரிகளும் கோரிக்கை வைத்தனர். ஆனாலும், அவர் கேட்கவில்லை.
புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான விசாரணை ஆணையத்தை பிரிட்டிஷ் அரசு அமைத்தபோது, அதில் ஜான்ஸவிவன் என்ற நிர்வாகி (1804 முதல் 1841 வரை இந்திய நிர்வாகத்தில் அதிகாரியாக இருந்தவர்) சாட்சியம் அளித்தார். ''தர்மத்தின்படியும் பொருளாதார நிலை மையின்படியும் என்னைக் கேட்டால், அவர்களது பழைய சுதேச மன்னர்களிடமே இந்த ஆட்சியை ஒப்படைத்துவிடுவதே சரியானது என்று கூறுவேன். அவர்களிடம் இருந்து நாம் பணம் பெறுவதை அவர்கள் குறை சொல்லவில்லை. ஆனால், அவர்களிடம் இருந்து பெறும் பணத்தை அவர்களது நாட்டில் செலவழிக்காததையே அவர்கள் குறை சொல்கிறார்கள். இந்தியா சுரண்டப்படுவதாக நினைக்கிறார்கள். எல்லா நல்ல பொருள்களையும் - பஞ்சு, பன்னீரை இழுத்துக்கொள்வதைப் போல - நம் ஆளுகைக்கு இழுத்துக்கொண்டு, கங்கையில் உள்ளதை தேம்ஸ் நதிக்கரையில் கொண்டுபோய் கொட்டிக்கொண்டு இருக்கிறோம்'' என்று அவர் சாட்சியத்தில் சொன்னார்.
அப்போது தேம்ஸில் மட்டுமே கொட்டினார்கள். இன்று எல்லா நாடுகளிலும் கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதில் பேதம் காட்டுவது இல்லை!
இந்த வருத்தங்கள் மெள்ள எழுந்தபோது, 'உங்களுக்கு என்ன சலுகை எல்லாம் செய்து தருகிறோம்’ என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் பட்டியல் போட ஆரம்பித்தனர். ''தற்கால நாகரிகத்தை ஒட்டிய தொழில்களையும், தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சாதகமான ஒரு அரசாங்கத்தை அடைந்த பாக்கியம் ஒன்றே உங்களுக்குப் போதுமே'' என்று, லண்டனில் இருந்த இந்திய ஆலோசனை சபை உறுப்பினர் ஸர்ஜான் ஸ்ட்ராச்சி சொன்னார்.
இதைப் படிக்கும்போது ஆ.ராசா சொன்னது உங்களுக்கு ஞாபகம் வரவேண்டும். ''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் செய்த ஒரே தவறு, சாமான்யர்கள் அனைவர் கையிலும் செல்போன் இருக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டேன் அல்லவா... அது ஒன்றுதான் நான் செய்த தவறு'' என்றார் ஆ.ராசா. பிரிட்டிஷார் எல்லாம் செய்துவிட்டு, தொழில் வளர்ச்சி என்று பேசினர். இன்றைய இந்திய ஆட்சியாளர்கள், மக்கள் நலன் என்கிறார்கள்.
அன்றைக்கு ராபர்ட் கிளைவ் கொள்ளையடித்துச் சென்ற பணத்துக்கு அவரை மட்டுமே குற்றம்சாட்டி தண்டனை வழங்கியது பிரிட்டிஷ் கோர்ட். இன்றும் அதுதானே நடக்கிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கில், ஆ.ராசா மட்டுமே குற்றவாளி என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை அறிக்கை சொல்கிறது. ''இல்லை! இந்தியாவின் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் தெரியாமல் எந்த விதிமுறையையும் நான் மாற்றவில்லை. அனைவருக்கும் எனது நடவ டிக்கைகளைச் சொல்லியே வந்தேன்'' என்கிறார் ஆ.ராசா. இன்னும் ஒருபடி மேலே போன கருணாநிதி, ''தனிப்பட்ட ஒருவரால் இவ்வளவு பெரிய விஷயத்தைச் செய்திருக்க முடியுமா?'' என்று கேட்டார். ராசாவை மட்டும் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. பிரதமரையும் நிதி அமைச் சரையும் ராசா குற்றம் சாட்டுகிறார். இதில் இருந்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதி என்ன?
கற்பரசி கண்ணகியா, சீதையா என்று பட்டிமன்றம் நடந்ததாம். கண்ணகியை கற்பரசி என்று பேசியவர்கள், சீதையைக் கொச்சைப்படுத்தினர். சீதையைக் கற்பரசி என்று பேசியவர்கள், கண்ணகியைக் கொச்சைப்படுத்தினர். விவாதத்தைக் கேட்டவர்கள், கண்ணகியையும் சீதையையும் சந்தேகப்பட ஆரம்பித்தார்களாம். அப்படித்தான் நடந்தது ஸ்பெக்ட்ரம் விவகாரமும்!
''அனைத்து நிலைகளிலும் ஊழல்கள் நமது சமுதாயம் முழுவதும் பெருநோயாக பரவிவருகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஊழல் என்ற நோய்க்கு ஏழைகள்தான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. அவர்கள்தான் அதன் சுமையைச் சுமக்க வேண்டி இருக்கிறது'' என்று 83-வது காங்கிரஸ் மாநாட்டில் சோனியா சொன்னார். அதையே அவரது அத்தை இந்திராவும் சொன்னார். அதையே நேருவும் சொன்னார். ஆனால், என்றும் மாறாததாக ஊழல் இருந்தது. இருக்கிறது. இருக்கும்!
''கள்ளச் சந்தைக்காரர்களும் கறுப்புப் பணக்காரர்களும் அதிகமாகிவிட்டார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் அருகில் உள்ள மின் கம்பங்களில் அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்படுவார்கள்'' என்று அடிமை இந்தியாவில் நேரு சொன்னார். ஆனால் அவரால் அதைச் செய்ய முடிந்ததா?
மரத்தை வெட்ட மரக்கோடரியே பயன்படுவதைப்போல, பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்திய முறைகேடுகளை அவரது மருமகன் ஃபெரோஸ் காந்தியே வெளிப்படுத்த வேண்டியதாயிற்று!
 இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி, மேனகா காந்தி, ராகுல் காந்தி, வருண் காந்தி, பிரியங்கா காந்தி... என்று 'காந்தி’யை ஒட்டாகச் சேர்க்கப்பட்டு இருப்பதற்குக் காரணம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மீதான பாசம், பற்று, நேசத்தால் அல்ல. காந்தி என்பது ஃபெரோஸ் காந்தியின் குடும்பப் பெயர். குஜராத்தைச் சேர்ந்த ஜஹான்கீர் காந்திக்கும் ஹட்டா காந்தி என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர் ஃபெரோஸ் காந்தி. பார்சி வகுப்பைச் சேர்ந்தவர்கள் இவர்கள். குஜராத்தில் பார்சிக்களும் இந்துக்களும் தங்களது குடும்பப் பெயராக காந்தி என்று வைத்துக்கொள்வது உண்டு. அதனால்தான் மகாத்மாவுக்கும் காந்தி என்ற பெயர் வந்தது. ஃபெரோஸுக்கும் காந்தி என்ற பெயர் வந்து சேர்ந்தது. ஆனால், மகாத்மா காந்தியின் வாரிசுகளாக இவர்கள் அடையாளப்படுத்திக் கொண்டு அரசியல் நடத்தியதுகூடப் பரவாயில்லை. அது தவறுகளை மறைப்பதற்கான முகமூடியாகப் போனதுதான் மகாத்மாவுக்கு அவலம்.
இந்திராவின் கணவர் என்பதற்காகவோ, நேருவின் மருமகன் என்பதற்காகவோ ஃபெரோஸுக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை. சுதந்திர தாகம்கொண்ட இளைஞராகத்தான் இளமைப் பருவம் முதல் அவர் வளர்ந்தார். வர்த்தகக் குடும்பத்துக்கு அரசியல் அலர்ஜி என்பதால், போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றில் கலந்துகொள்ளாமல் பிள்ளையை வளர்க்கவே ஃபெரோஸின் பெற்றோர் விரும்பினார்கள். அலகாபாத் ஈவினிங் கல்லூரியில் மதியநேர உச்சி வெயிலில் பெண்கள் படையோடு ஆர்ப்பாட்டம் செய்யப் போன, நேருவின் மனைவி கமலா மயங்கி விழ... அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த ஃபெரோஸ் போய் அவரைத் தாங்கிப்பிடிக்க... அதன் பிறகுதான் ஆனந்த பவனத்துக்குள் அவர் போனார். ஆரோக்கியமற்ற உடல்நிலையைக் கொண்ட கமலா பெரும்பாலும் மருத்துவமனையிலும் படுக்கையிலும் காலம் கழித்தபோது அடிக்கடி போய் பார்த்து வந்தார் ஃபெரோஸ். அதன்பிறகு இவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அந்தக் காலக்கட்டத்தில்தான் இந்திராவைச் சந்தித்தார். காதல் வயப்பட்டார். இந்திராவுக்கு 16 வயது இருக்கும்போது தன்னுடைய காதலைச் சொன்னார் ஃபெரோஸ். ஆனால், அதனை இந்திரா ஏற்கவில்லை. அம்மாவின் சிகிச்சைக்காக ஜெர்மன் போனார் இந்திரா. ஃபெரோஸும் படிக்க லண்டன் போனார். கமலாவின் உடல்நிலை மோசமானது. கமலாவைப் பார்க்க ஃபெரோஸ் சென்றிருந்த நேரத்தில்தான் அவர் இறந்து போனார். அதற்கு முன்னரே இந்திரா மீதான தனது காதலை ஃபெரோஸ், கமலாவிடம் சொல்ல, 'அவள் சின்னப் பெண்’ என்று சொல்லி மறுத்துவிட்டார். தன்னுடைய அம்மாவின் கடைசிக் காலத்தில் கவனித்துக் கொண்டவர் என்ற அடிப்படையில் இந்திராவுக்கும் ஃபெரோஸ் மீது கரிசனம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. அதாவது 1933 ஃபெரோஸ் வெளிப்படுத்திய காதலை, நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் இந்திரா ஏற்றுக்கொண்டார். அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் நேருவிடம் இந்திரா சொன்னார். அவரும் இந்தக் காதலை ஏற்கவில்லை. தட்டிக் கழிக்க நினைத்தவர் காந்தி உட்பட தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரது சம்மதத்தையும் இந்திரா வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார் நேரு. காந்தி ஏற்றுக் கொண்டார். ஆனால் நேரு குடும்பத்தினர் அனைவரும் எதிர்த்தார்கள். ஆனால், இந்திரா தன்னுடைய வைராக்கியத்தால் வென்று, ஃபெரோஸைக் கைப்பிடித்தார்.
தன்னை நேரு, முதலில் இருந்தே ஏற்கவில்லை என்ற கோபம் ஃபெரோஸுக்கு இருந்தது. திருமணம் ஆனதும், இந்திராவை அந்த பெரிய வீட்டில் இருந்து அழைத்துச் சென்று தனிக்குடித்தனம் வைத்தார் ஃபெரோஸ். நேருவின் வெளிச்சத்தில் வாழ விரும்பவில்லை. ஆனால் இந்தியத் தலைவர்கள் அனைவரும் சுற்றிச்சுற்றி கைதான சூழ்நிலையில் ஃபெரோஸும், இந்திராவுமே கைதாகி பல மாதங்கள் சிறையில் இருந்தார்கள். விடுதலை ஆகி வந்தவர்கள், ஆனந்தபவனத்தில் குடியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏனென்றால் அப்போது நேரு, சிறையில் இருந்தார். அதன்பிறகு அப்படியே தங்கிவிட்டார் ஃபெரோஸ்.
முதல் குழந்தை பிறந்தது. ராஜீவ் ரத்னா என்று பெயர் வைக்க ஆசைப்பட்டார் இந்திரா. பிர்ஜிஸ் என்று வைக்க நினைத்தார் நேரு. 'எங்காவது நேரு என்று சேர்க்க முடியுமா?’ என்று தாத்தா மனது துடித்தது. ஃபெரோஸ் தனது குடும்பப் பெயரான காந்தி என்பதைச் சேர்க்க ஆசைப்பட்டார். அனைத்தையும் சேர்த்து ராஜீவ் ரத்னா பிர்ஜிஸ் நேரு காந்தி என்று பெயர் வைக்கப்பட்டது. தன்னை மனப்பூர்வமாக நேரு ஏற்றுக் கொள்ளவில்லை என்று நினைத்த ஃபெரோஸ், தனது வாழ்க்கையை லக்னோவை நோக்கி நகர்த்தினார். அடிப்படையில் மார்க்சீய ஆர்வம் கொண்டவர் ஃபெரோஸ். பாசிசத்துக்கு எதிரான குரல்களைப் பதிவு செய்தவர். அடக்குமுறைகளை எதிர்த்தவர். எழுதுவதிலும் அதீத விருப்பம் கொண்டவர். 'நேஷனல் ஹெரால்ட்’ இதழின் நிர்வாக இயக்குநராக ஆனார். இது ஒருகாலத்தில் நேரு நடத்திய பத்திரிகைதான். லக்னோவுக்கும் அலகாபாத்துக்கும் போய் வந்துகொண்டு இருந்தார் இந்திரா. அதன் பிறகு சஞ்சய் பிறந்தார். சஞ்சய் என்று பெயர் வைக்கப் போகிறோம் என்றோ, என்ன பெயர் வைக்கலாம் என்றோ ஃபெரோஸிடம் யாரும் கேட்கவில்லை, இந்திரா உட்பட. அதனையும் சகித்துக்கொண்டார். இந்திராவுக்கு இளமைக் காலம் முதல் காச நோய் உண்டு. அதனால், குழந்தைகளை தனியாக வளர்ப்பது சாத்தியம் இல்லை என்பதால் அப்பா வீட்டோடு இருந்தாக வேண்டிய நெருக்கடி அவருக்கு. இந்த நிலையில் ரேபரேலி தொகுதியில் இருந்து ஃபெரோஸ் எம்.பி-யாக தேர்வானார். எம்.பி-களுக்கான பங்களா கிடைத்தது. நேருவின் தீன்மூர்த்தி பவனில் இருந்து படிப்படியாக வெளியேறி எம்.பி. பங்களாவில் தங்க ஆரம்பித்தார்.

 

நேருவின் தலைமையில் புதிய முகங்கள் அதிகாரம் செலுத்தும் ஆட்சி உட்கார்ந்து இருந்ததை ஃபெரோஸால் ஏக்கத்தோடும் ஏமாற்றத்தோடும் பார்த்துக்கொண்டு இருக்கவே முடிந்தது. அந்த வட்டாரத்துக்குள் அவரால் போகவே முடியவில்லை. அந்த விரக்தியும், தன்னை ஆரம்பத்தில் இருந்தே உதாசீனம் செய்த நேருவின் மீதான கோபமும், தன்னைவிட அப்பா நேருவின் வார்த்தைகளுக்கே மனைவி இந்திரா கட்டுப்படுகிறார் என்ற எரிச்சலும் சேர்ந்தது. அப்போது அவருக்குள் இந்த பத்திரிகையாளன் மெள்ளத் தலைதூக்கினான். நேருவும் நேருவைச் சுற்றி இருப்பவர்களும் என்ன செய்கிறார்கள் என்பதைத் தோண்டித்துருவ ஆரம்பித்தார். காங்கிரஸ் கட்சியைத் தாண்டி வேறு கட்சியில் இருந்து வந்த எம்.பி-க்களோடு கைகோத்து அலைய ஆரம்பித்தார். அப்போது அவர் கையில் இன்ஷூரன்ஸ் மோசடி வசமாக மாட்டியது. இன்ஷூரன்ஸ் திட்டத்தில் செய்யவேண்டிய மாறுதல்கள் சம்பந்தமான புதிய மசோதா அமல்படுத்தப்பட்டபோது மைக் பிடித்தார் ஃபெரோஸ். வீட்டுக்குள் இருந்தே வாள் பாய்ந்து வரும் என்று நேரு எதிர்பார்க்காத பேச்சு அது.
இதோ நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் பேசுகிறார்...
''காலம் தாழ்ந்து நடந்திருந்தாலும் நல்லதே நடந்திருக்கிறது. இந்தியாவில் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களைப்போல எக்கச்சக்கமான இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் நிறைய முளைத்துவிட்டன. இவற்றில் நடந்துவரும் குளறுபடிகள்தான் இப்போது இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரக் காரணம். இவர்கள் பொதுமக்கள் பணத்துடன் விளையாடுவதை அனுமதிக்க முடியுமா?
ஒரு கம்பெனியில் முதலீடு, பின்பு வேறு கம்பெனியில், அதன் பிறகு வேறு ஒரு கம்பெனியில், பின்னர் பேர் இல்லாத பற்பல கம்பெனிகள் என்ற வகையில் பணத்தை பந்தாடிப் பந்தாடி கொள்ளை லாபம் அடித்துள்ளார்கள். இவை அனைத்துமே அவர்கள் உடல் உழைத்து ஈட்டிய பணமா? இல்லவே இல்லை. ஒன்றும் தெரியாத அப்பாவி பொதுமக்கள் பணம்தான். இது நமது நிதித் துறை வசம் உள்ள வருமானவரித் துறைக்குத் தெரியாதா? தெரியாது என்று சொன்னால் நம்பும்படியாக இருக்கிறதா? ஏன் இந்த அரசாங்கம் கண்டும் காணாதது போல இருக்கிறது? யாரைக் காப்பாற்ற இந்த அரசாங்கம் தன் நம்பகத்தன்மையை இழக்க வேண்டும்? நிதி அமைச்சர் எதற்காக காலஅவகாசம் கொடுக்கிறார்? ஏன் ஒட்டு மொத்தமாக இந்தப் பணத்தைத் திரும்பப்பெற முயற்சி எடுக்கவில்லை?

இதற்கெல்லாம் நம்முடைய அரசாங்கமும் நிதி அமைச்சகமும் முழுபொறுப்பேற்று நிலைமையை சீரடையச் செய்ய வேண்டுமா இல்லையா? அங்கும் இங்கும் சிற்சில விசாரணைகள் மட்டுமே நடைபெற்றன. நான் நமது வருவாய்த் துறை அமைச்சரிடம் கேட்டேன். அவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஜால்ஜாப்பு சொல்கிறார். 'நான் அட்டர்னி ஜெனரலை கன்சல்ட் செய்கிறேன்’ என்பார். சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பார். ஆனால், இரண்டரை வருடங்கள் ஓடிவிட்டன. ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை. நான் இறுதியாக நிதி அமைச்சரைக் கேட்டுக் கொள்வதெல்லாம்,
எப்படியாவது மோசடி செய்யப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுங்கள். கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் என்பது பொதுமக்கள் வியர்வை சிந்தி உழைத்துச் சம்பாதித்த பணம். இவ்வாறு செய்வது இந்த அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் கடமை.'' - ஃபெரோஸின் இந்தப் பேச்சு இன்றுவரை பொருத்தமாகத்தான் இருக்கிறது. இரண்டரை வருடங்களில் எதுவும் நடக்கவில்லை என்று ஃபெரோஸ் வருந்தினார். 60 ஆண்டுகளாக அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. 'சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன்’ என்ற வார்த்தைக்கு வாய் இருந்தால் கதறிக்கதறி அழும். பிரதமர் ஆரம்பித்து, விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் உட்பட அனைவருமே, 'சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’ என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். எந்தச் சட்டப்படி என்பதுதான் இன்றுவரை விளங்கவில்லை. அட்டர்னி ஜெனரல் பற்றியும் ஃபெரோஸ் சொன்னதில் இன்றுவரை மாற்றம் இல்லை. நிலக்கரி வழக்கில் கோப்புகளே மாயம் ஆனது. 'கோப்புகளைக் காணாமல் போனதைக் கண்டுபிடிக்க என்ன முயற்சி எடுத்தீர்கள்? இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்தீர்களா?’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்டபோது, அட்டர்னி ஜெனரல் வாகனவதி, 'சி.பி.ஐ-க்கு நிலக்கரித் துறை அமைச்சகம் ஒத்துழைப்பு அளிக்கும்'' என்று மையமாகச் சொன்னார். இன்னொருநாள் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டார். ''எல்லா விவரங்களையும் மூளையில் பதிவுசெய்து ஒப்பிக்க என்னால் இயலாது. முன்னறிவிப்பு இன்றி என்னிடம் எழுப்பப்படும் கேள்விகள் சங்கடமாக உள்ளது'' என்று மழுப்பினார். மறுநாள் வந்து, ''நான் இப்படி பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று சொன்னதும் அவர்தான்.
ஃபெரோஸின் பேரன் பிரதமர் ஆகப் போகும் காலக்கட்டத்திலும் எதுவுமே மாறவில்லை!


No comments:

Post a Comment