Tuesday, January 14, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை!-Part 3 (இந்திய பிரதமர்கள் )








அடிமடியில் கை வைப்பது என்பார்கள்... அதைத்தான் மாமா நேருவுக்கு எதிராக மருமகன் ஃபெரோஸ் செய்தார்.
 1957-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் பேசிய பேச்சு, சுதந்திர இந்தியாவில் வீசப்பட்ட முதல் ஊழல் வெடிகுண்டாக இருந்தது. அடிமை இந்திய நாடாளுமன்றத்தில் பகத்சிங் வீசிய கந்தக வெடிகுண்டுகளுக்கு இணையான அதிர் வலைகளை இது உருவாக்கியது. ஃபெரோஸ் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டிய நெருக்கடி அன்றைய நிதி அமைச்சரும் நேருவின் ஆத்மார்த்தமான நண்பருமான டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு ஏற்பட்டது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான அளவுக்கு பணத்தைச் செலவு செய்ததாகச் சொல்லப்பட்ட ஹரிதாஸ் முந்த்ரா என்ற பிரபலமான வர்த்தகருக்கு எதிராகத்தான் ஃபெரோஸ் பேசினார்.
சோஷலிசம் பேசிய நேரு, பிரதமர் பதவியில் இருக்கிறார். 'அடுத்த பத்து ஆண்டுகளில் தனியார் துறைகள் அனைத்தும் தேசியமயமாக்கப்படும்’ என்று நெஞ்சை நிமிர்த்தி நேரு அறிவித்துவிட்டார். இதையே அடிப்படையாக வைத்து ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டிக்கொண்டு இருந்தார்கள். ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாடு (1955 ஜனவரி) அறிவித்த இரண்டு முக்கியமான தீர்மானங்கள் அந்தக் கட்சியின் அந்தஸ்தை வானளாவ உயர்த்திவிட்டன. ஒருவருக்கு ஒரு பதவிதான் என்ற அடிப்படையில் பிரதமர் நேருவே, தான் இதுவரை வகித்துவந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை யு.என்.தெப்பருக்கு தாரைவார்த்தார். சோஷலிச சமுதாயத்தை உருவாக்க காங்கிரஸ் பாடுபடும் என்று அறிவித்த இந்த மாநாடு, தேசிய சொத்துக்களை பொதுமக்களுக்கு உரிமை ஆக்கியது. நேருவின் நடவடிக்கைகளைப் பார்த்து கம்யூனிஸ்ட்களே மிரண்டுபோனார்கள். எந்த அளவுக்குப் போனது என்றால், புரட்சியே நடக்காமல் இந்தியாவில் கம்யூனிஸத்தை நேரு உருவாக்கி வருவதாக கம்யூனிஸ்ட் தலைவர்களே பேச ஆரம்பித்துவிட்டார்கள். பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்குவதற்கான திட்டங்களைப் பற்றி மட்டுமே பிரதமரும் நிதி அமைச்சரும் இதர அமைச்சர்களும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அன்றைக்கு இருந்த ஒரே பிரதான எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட்களும் குழப்பமான சூழ்நிலையில் இருக்கும்போது... அத்தனைக்கும் சேர்த்து ஆப்புவைத்தார் ஃபெரோஸ்.
 
சோஷலிச சமுதாயம், பொதுத் துறைக்கு ஆதரவு, தனியார் துறைக்கு தடங்கல்... என்று பிரதமர் நேரு புகழ் மயக்கத்தில் இருந்தபோது, இன்னொரு பக்கத்தில் இதற்கு எதிரான வேலைகளை காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சில பெரிய மனிதர்கள் பார்த்தார்கள். அதனைத்தான் ஃபெரோஸ் அம்பலப்படுத்தினார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஹரிதாஸ் முந்த்ராவின் நிறுவனங்களில் ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஏராளமான பணத்தை முதலீடு செய்திருந்தது. அனைத்தும் பொதுத் துறைக்கு மாற வேண்டும் என்று ஒரு அரசாங்கம் கொள்கை வகுத்திருக்கும்போது, ஒரு தனியார் நிறுவனத்தில் பொதுத் துறை நிறுவனம் முதலீடு செய்வது எத்தகைய முரண்பாடு என்பதே ஃபெரோஸின் கேள்வி.
''நொடித்துப்போன நிலையில் இருக்கும் ஒரு நிறுவனத்துக்கு, இனிமேல் இந்த நிறுவனத்தை நடத்த முடியுமா, முடியாதா என்ற கவலையில் இருக்கும் ஒரு மனிதருக்கு, நிதி நெருக்கடியில் இருந்து தன்னைக் காப்பாற்றுவதற்கு யார் இருக்கிறார்கள் என்ற அச்சத்தில் இருக்கும் ஒருவருக்கு, இப்படிப்பட்ட சலுகையை இந்த அரசாங்கம் எப்படிச் செய்யலாம்?'' என்றார் ஃபெரோஸ்.
ஹரிதாஸ் முந்த்ராவின் ஆறு நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் இருந்தன. அந்த நிறுவனங்களை மீட்டெடுக்க முந்த்ராவுக்கு அவசர அவசியம் பணம். ஆனால், வீழ்ந்துகொண்டு இருக்கும் நிறுவனத்தில் யார் முதலீடு செய்வார்கள்... யார் கடன் கொடுப்பார்கள்... யார் அதன் பங்குகளை வாங்குவார்கள்? ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை பலிகடா ஆக்கியது காங்கிரஸ் அரசு. அதன் லட்சக்கணக்கான சந்தாதாரர்களின் கண்ணீரால் சேமிக்கப்பட்ட கரன்சி, சில கையெழுத்துக்களால் முந்திராவின் கஜானாவுக்குப் போனது. காங்கிரஸை காவல் தெய்வமாக நினைத்து வணங்க ஆரம்பித்தார் முந்திரா. இதனால், அவரது நிறுவனத்தின் பங்குகள் சடசடவென ஏற ஆரம்பித்தன. இதனைத்தான், 'இந்த அரசாங்கத்தின் அவமானகரமான செயல்’ என்று ஃபெரோஸ் வர்ணித்தார்.
'சரிய ஆரம்பித்திருந்த முந்த்ரா நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்காகவே, ஆயுள் காப்பீட்டுக் கழகம் அதிகளவிலான பணத்தை முதலீடு செய்துள்ளது. முந்த்ரா நிறுவனத்தில் இருந்து பங்குகளை வாங்கலாமா என்று ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பரிசீலனை நடந்திருந்தால் அவர்கள் இந்த நிறுவனத்தைத் திரும்பிக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முதலீட்டு கமிட்டியின் எதிர்ப்பையும் மீறி பங்குகளை வாங்கி இருக்கிறார்கள் என்றால், அது யாரோ ஒரு அதிகாரம் பொருந்தியவர் தூண்டுதலின் பேரில் இது நடந்துள்ளது. இந்தப் பணப்பரிமாற்றம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தியாக வேண்டும்'' என்று ஃபெரோஸ் பொங்கினார்.
குற்றச்சாட்டை நேரடியாகவே வைத்தார் ஃபெரோஸ். முதலில் குற்றச்சாட்டை மறுத்த நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, பின்னர் அதுகுறித்து விளக்கமாகப் பேசியாக வேண்டியதாயிற்று.
''உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல நான் மறுக்கவில்லை. அந்தப் பொறுப்பில் இருந்து விலகிச்செல்ல நான் விரும்பவில்லை. அதிகாரிகள்தான் அனைத்துக்கும் காரணம் என்று சப்பைக்கட்டு கட்ட முயலவில்லை. முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை மத்திய நிதித் துறை அமைச்சகம் நேரடியாக நிர்வகிக்கவில்லை. எனவே, அதில் நாங்கள் நேரடியாகத் தலையிட்டு எதனையும் செய்ய முடியாது. இது மாதிரித்தான் நீங்கள் செயல்பட வேண்டும் என்றோ, இந்தப் பங்குகளைத்தான் வாங்கவேண்டும் என்றோ நாங்கள் கட்டளையிட முடியாது. அவர்கள் இதுபற்றி எங்களிடம் ஆலோசனை நடத்துவதும் இல்லை'' என்று நிதி அமைச்சர் சொன்னார்.
 

ஆனாலும், ஃபெரோஸ் விடவில்லை. ''நிதியமைச்சரின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன'' என்று நிதியமைச்சரின் முகத்தை நோக்கிச் சொன்னார் ஃபெரோஸ். நண்பரைக் காப்பாற்றுவதா, மருமகன் குற்றச்சாட்டை மறுப்பதா என்பதற்கு மத்தியில் நேரு துடித்தார். அடுத்த அறிவிப்பை நிதியமைச்சர் செய்தார். ''சொல்லப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய விசாரணை கமிஷன் அமைக்கப்படும்'' என்று நிதியமைச்சர் பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் சொன்னார்.
1958-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி நீதிபதி எம்.சி.சக்லா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷன் அமைக்கப்பட்ட மூன்றாவது நாளே தன்னுடைய விசாரணையை நீதிபதி சக்லா தொடங்கினார். பிப்ரவரி 5-ம் தேதி விசாரணையை முடித்தார். பிப்ரவரி 10-ம் தேதி தன்னுடைய அறிக்கையை அரசாங்கத்திடம் கொடுத்தார் நீதிபதி. இந்திய வரலாற்றில் இவ்வளவு துரிதமாக நடந்த முதலும் கடைசியுமான விசாரணை இதுதான்.
ஜனவரி மாதம் 17-ம் தேதி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் 10-ம் தேதி அறிக்கை தரப்பட்டது. இது ஏதோ கண்துடைப்பு விசாரணையாக இல்லை. இந்த விசாரணைக்கு உத்தரவிட்ட நிதியமைச்சரை நோக்கியே கையை நீட்டியது சக்லா கமிஷன்.
இந்த கமிஷனின் முக்கியப் புள்ளியாக நிதித் துறையின் செயலாளர் ஹெச்.எம்.படேல் குறிக்கப்பட்டார். ''நிதித் துறைச் செயலாளராக இருந்த ஹெச்.எம்.படேலின் அறிவுரையின் பெயரிலேயே முந்த்ராவின் பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. அவரது தூண்டுதலால்தான் இந்தப் பங்குகளை வாங்கவேண்டிய நெருக்கடி ஆயுள் காப்பீட்டுக் கழக அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. பங்குகள் வாங்க தேர்வு செய்யப்பட்ட தேதி உட்பட முந்த்ராவுக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. அந்தத் தேதியில் தனது நிறுவனப் பங்குகளை மார்க்கெட்டில் கூட்டிவைத்து முந்த்ரா விளையாடிவிட்டார். அதாவது, செயற்கையாகத் தனது பங்குகளின் விலையை அதிகப்படுத்திக் கொண்டார்கள். இதனால் தேவையில்லாமல் அநியாய விலைக்கு காப்பீட்டுக் கழகம் இந்தப் பங்குகளை வாங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவை அனைத்தும் நிதித் துறையின் செயலாளர் ஹெச்.எம்.படேலுக்குத் தெரியும்'' என்ற முடிவுக்கு கமிஷன் வந்தது.
நிதித் துறை அமைச்சர் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்றாலும்... நீதிபதி சக்லா, தீர்மானமான ஒரு கருத்தைச் சொன்னார். ''நிதித் துறை செயலாளர்தான் இதனைச் செய்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இந்த விவகாரங்கள் நிதித் துறை அமைச்சருக்குத் தெரியாமல் இருக்க முடியாது. தன் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் செய்யும் செயல்களுக்கு, அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அமைச்சர்தான் முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். இந்தியாவில் நடப்பது நாடாளுமன்ற ஜனநாயகம். இங்கு தனது அமைச்சகம் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்தான் முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும்'' என்று சொன்னார். இந்த அறிக்கை நேருவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது. அறிக்கை தாக்கல் ஆனதுமே, தனது பதவி விலகல் கடிதத்தை நிதியமைச்சர் டி.டி.கே. கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து டி.டி.கே.வும் நேருவும் எழுதிக்கொண்ட கடிதங்கள் முக்கியமானவை.
''அதிகாரி செய்யும் தவறுக்கு அமைச்சர்தான் பொறுப்பு என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டியவன் நான்தானே'' என்றார் டி.டி.கே.
''இந்த விவகாரத்தை அமைச்சர் நேரடியாக அறியாவிட்டாலும், அவர் முழு பொறுப்பை ஏற்றே தீர வேண்டும்'' என்றார் பிரதமர் நேரு.
இருவருமே அவரவர் அளவில் தங்களது நேர்மையை நிரூபிக்க நினைத்தார்கள்.  ஆனால்  இன்று, எந்தக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும் அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று விசாரணை கமிஷன்கள் அமைக்கப்படுவது இல்லை. அப்படியே அமைக்கப்பட்டாலும் அதற்குத் தேவையான ஆவணங்களைத் தருவது இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு முன்னால் ஆஜராவது இல்லை. முதல் அறிக்கை, இரண்டாம் அறிக்கை, மூன்றாம் அறிக்கை, அரைக் காலாண்டு அறிக்கை, அரையாண்டு அறிக்கை, வரைவு அறிக்கை, இறுதி அறிக்கைக்கு முந்தைய வரைவு அறிக்கை... என்று இழுத்து, ஆட்சிக் காலக்கட்டமான ஐந்து ஆண்டுகளையே முடித்துவிடுகிறார்கள். உச்ச நீதிமன்றம் போடும் கிடுக்கிப்பிடிகளைக்கூட சாமர்த்தியமாகச் சமாளித்து தப்பிக்கும் தந்திரமும் இன்றைய அரசியல்வாதிகளுக்குத் தெரிந்துள்ளது. ஆனால், 100 ரூபாய் லஞ்சம் வாங்கியவனும் 5,000 கையூட்டு கேட்டவனும் வேலையை இழந்து வாழ்க்கையைத் தொலைத்து ரோட்டில் அலைகிறான். ஆனால், ஆயிரம் கோடிகளில் புரள்பவர்களுக்கு பண மழை பொழிவது எப்போதும் நிற்கவில்லை. அப்படியானால், உண்மையான சுதந்திரம் இவர்களுக்கு மட்டும்தானே கிடைத்துள்ளது?
''சுதந்திரம் என்பது ஆட்சியாளர்களை மாற்றுவது மட்டுமல்ல. சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பொருளாதார முன்னேற்றமே சுதந்திரத்தின் அளவைத் தீர்மானிக்கும்'' என்று ஃபெரோஸ் பேசினார். இது மாமா, மனைவி, மகன்... ஆட்சி வரை தொடர்ந்தது!
நேருவின் ஷர்வானி கோட்டில் உள்ள ரோஜாவுடன் சேர்த்து சிறு துளி கறையும் இருந்துவிட்டதே எதனால்?
 ''நாம் ஒரு யுகத்தின் முடிவுக்கு வந்துவிட்டோம். பசப்பு வார்த்தைகள், அரசியல் தந்திரம், மோசடி மற்றும் சராசரி அரசியல்வாதியின் எல்லா வித்தைகளுக்கும் இனி இடமில்லை''- என்று டேராடூன் சிறையில் இருந்த நேரு, காந்திக்கு எழுதிய கடிதத்தில் உள்ள வரிகள். அதனை அவரது ஆட்சியிலேயே கடைப்பிடிக்க முடியவில்லை என்பதுதான் வேதனை.
''நமது அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்னைகள் மிகவும் முக்கியமானவை. அவற்றைத் தீர்க்காமல் நாம் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அரசியல் சுதந்திரம் என்பது முதலும் முடிவும் அல்ல. நாம் நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு அது ஒரு சாதனம். மனித உறவைப் பற்றிய பிரச்னையின் தீர்வுக்கு ஒரு சாதனம். ஆனால் அரசியல் மற்றும் பொருளாதாரத் தடைகளை அகற்றாமல் நாம் முன்னேற முடியாது''- சுதந்திரத்துக்கு 10 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி மாணவர்களிடம் நேரு பேசினார். அந்த இலக்கை அவரது 16 ஆண்டு கால ஆட்சியில்கூட நிறைவேற்றிக் காட்ட முடியாமல் போனதற்கு என்ன காரணம்?
''உங்களுடைய லட்சியம் எப்படி இருக்க வேண்டும்? எஜமானர்கள் மாறி உங்கள் துன்பங்கள் நீடிக்குமானால் அதனால் உங்களுக்கு அதிகமான பயன் இருக்காது. ஒருசில இந்தியர்கள் அரசாங்கத்தின் உயர்ந்த பதவிகளை வகிப்பதால் அல்லது அதிகமான லாப ஈவுத் தொகைகளை அடைவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைய முடியாது. உங்களுடைய பரிதாபகரமான நிலைமை அப்படியேதான் இருக்கும். நீங்கள் இடைவிடாமல் உழைத்துப் பட்டினியில் ஓடாகத் தேய்வீர்கள். உங்களுடைய நெஞ்சில் எரியும் விளக்கு அணைந்துவிடும்''- என்று சுதந்திரத்துக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய நேரு, பிரதமர் பதவிக்கு வந்த பிறகு இப்படிப் பேச முடியவில்லையே... ஏன்?
பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்த ஆரம்ப காலக்கட்டத்தில் இந்தியாவில் வகுப்பு வன்முறை வெறியாட்டம் அதிகமாக நடந்தது. அதனைக் கட்டுப்படுத்தி ரத்தச் சகதியை நிறுத்தியாக வேண்டிய பெரும் பொறுப்பு பிரதமர் நேருவுக்கு இருந்தது. தன்னுடைய மனதளவில் இந்துத்துவா கொள்கையும் மத மேலாண்மைச் சிந்தனையும் இல்லாதவராக மட்டுமல்ல, தன்னை நாத்திகர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதிலும் பெருமைப்பட்டுக் கொண்டவர் நேரு. துணிச்சலாய் சில நடவடிக்கைகளை அவர் எடுத்தார். நேருவின் பிம்பம் அத்தகைய நடவடிக்கைகளுக்கு தடங்கலற்ற அனுமதியை அளித்தது. இது முதல் சாதனை.
அடுத்த சிக்கல் சமஸ்தானங்கள் வடிவில் வந்தன. பெரிய சமஸ்தானங்கள் தாங்கள் சுதந்திரமான அரசுகளாகச் செயல்பட விரும்பின. 'நாங்கள் சுதந்திரமான அரசுகள்தான்’ என்று சில சமஸ்தானங்களின் அரசர்கள் அறிவித்தார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனி நாடுகளாகப் பிரிந்திருக்கும் சூழ்நிலை அது. இந்தியாவைச் சுற்றி சின்னச் சின்ன சமஸ்தானங்கள் இருந்தால் இந்தியாவுக்கு தீராத் தலைவலியாக அது அமையும் என்று பிரதமர் நேருவும், அன்றைய உள்துறை அமைச்சரும் நேருவின் சகாவுமான படேலும் நினைத்தார்கள். தன்னுடைய தனித்திறமையால் நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தார் படேல். சிக்கல் ஏற்படுத்தியவர்கள் மூன்று பேர். திருவிதாங்கூர், போபால், ஹைதராபாத் ஆகியவை அவை. ''நாம் உடனடியாக இதனைச் சரி செய்யாவிட்டால் தியாகங்கள் பெற்று அடைந்த சுதந்திரக் காற்று, சமஸ்தானங்களின் வழியாக வெளியே போய்விடும்'' என்று சமஸ்தானங்கள் இணைப்புத் துறைச் செயலாளராக இருந்த வி.பி.மேனன் எச்சரித்தார். முரண்டுபிடித்த சமஸ்தானங்களை இணைப்பதற்கும் ஆரம்பக் காலக்கட்டத்தைச் செலவுசெய்ய வேண்டியதாயிற்று. படையெடுத்தும் பயமுறுத்தியும் இந்த ஐக்கியத்தை படேல் சாதித்தார். சமஸ்தானத்தையும் தங்களது அதிகாரத்தையும் ஒப்படைத்த அரசர்களுக்கும் மன்னர்களுக்கும் ஆயுட்கால மானியம் வழங்கப்பட்டது. அன்றைய மதிப்பில் 4.66 கோடி ரூபாய் மன்னர்களுக்கு மானியமாகத் தரப்பட்டது. இவ்வளவு சலுகை விலையில் வேறு எந்த நாட்டுக்கும் நாடுகள் கிடைத்திருக்காது. இது இரண்டாவது சாதனை.
வலிமையான மத்திய அரசு அமைய வேண்டுமானால், இந்தியாவின் ஒருமைப்பாடு காக்கப்பட வேண்டும் என்று நேரு நினைத்தார். இந்திய வரலாற்றை மிக உன்னிப்பாகப் படித்த முதலும் கடைசியுமான பிரதமர் நேரு. பல்வேறு பட்ட மொழி, இனம், மதம் கொண்ட மக்களின் கூட்டமைப்புதான் இந்தியா என்பதை உணர்ந்தவர். ஒப்புக்கொண்டவர். அதன் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தவர். இந்தி மொழி திணிக்கப்பட்டால் தமிழன் இரண்டாம் தர குடிமகனாக ஆக்கப்படுவான் என்ற கிளர்ச்சி 1938 முதல் தமிழகத்தில் நடந்துவந்தது. ''இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும்'' என்று பிரதமர் நேரு செய்த அறிவிப்புதான் (7.8.1959) இன்று வரைக்கும் நடைமுறையில் இருக்கிறது. ''இதை எப்போது மாற்றலாம் என்று என்னிடம் கேட்டால், அதனை இந்தி பேசாத மாநில மக்கள்தான் முடிவு செய்வார்கள்'' என்றும் சொல்லும் பரந்த மனப்பான்மை நேருவுக்கு இருந்தது. மொழிவாரி மாகாணங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற போதும், அது இந்தியாவைச் சிதைத்துவிடும் என்று பலரும் பயமுறுத்தினார்கள். 'இல்லை அது இந்தியாவைப் பலப்படுத்தும்’ என்று சொன்னவர் நேரு. இன்று ஏக இந்தியா காப்பாற்றப்பட்டு இருப்பதற்கு இந்த மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதும் முக்கியக் காரணம். இது நேருவின் மூன்றாவது சாதனை.
பாசிசம், காலனியம், இனவெறி, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நேரு எதிர்த்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் உலக நாடுகள் சில அமெரிக்காவின் தலைமையிலும் சில நாடுகள் ரஷ்யாவின் தலைமையிலும் பிரிந்தன. வல்லரசு நாடுகளின் கூட்டணிக்குள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அனைத்து நாடுகளும் கட்டாயப்படுத்தப்பட்டன. இந்தியா இதில் எந்தக் கூட்டணிக்குள்ளும் போய் சிக்கிக்கொள்ளக் கூடாது, எந்த அணியிலும் சேராத அணி சேராக் கொள்கைதான் நம்முடைய அடித்தளம் என்று சொன்னவர் நேரு. தன்னுடைய சோசலிசக் கொள்கை காரணமாக நேரு, பின்னர் சோவியத் பக்கம் சாய்ந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனாலும் அவர் எந்த ஏகாதிபத்திய நலன் சார்ந்தும் முடிவுகள் எடுப்பதற்கு கடைசி வரைக்கும் தயங்கினார். இது அவரது நான்காவது சாதனை.
ஐந்தாவது சாதனையாக அவரது சோசலிச எண்ணம் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு அது சோதனையைத்தான் கொடுத்தது. அதுவே இந்தியாவுக்கான வேதனையாகவும் மாறியது.
'கிராம ராஜ்ஜியமே ராம ராஜ்ஜியம்’ என்ற கனவுலகில் சஞ்சரிக்கும் மனிதராக காந்தி வலம் வந்தார். ஆனால் நேரு முன்மொழிந்த வார்த்தைகள் கிராமம், நகரம், படித்தவர், பாமரர், பணம் படைத்தவர், ஏழை ஆகிய அனைத்துத் தரப்பையும் கவனிக்க வைத்தது. சமத்துவம், சம வாய்ப்பு, சமூக நீதி, அறிவியல் மூலமாக சமூகத்தின் வளர்ச்சி என்று நேரு சொன்னார். அவராகச் சொல்லிக்கொண்ட சோசலிசத்தின் அடிப்படைகள் இவை. இதற்கும் மார்க்சியத் தத்துவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அதுதான் வேறு வார்த்தைகளில் வருகிறது என்று வர்த்தகர்கள் பயந்தார்கள். அதுதான் இது என்று சொல்லி பொதுவுடைமைவாதிகள் சிலரும் வழிமொழிய ஆரம்பித்தார்கள். ஏழைகளுக்குச் சாதகமான மாற்றங்களைச் சும்மா செய்ய முடியாது என்று நேருவும் நினைத்தார். அதனால்தான் அதற்கு, 'அறுவைச் சிகிச்சை’ என்று பெயரும் வைத்தார்.
இதனை நாடாளுமன்ற, சட்டசபைகளின் மூலமாகத்தான் செய்ய முடியும் என்று அவர் நினைத்தது முதல் சறுக்கல். பொதுத் துறை நிறுவனங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று முதலில் சொன்னார். தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஒரு காலக்கட்டத்தில் பொதுத் துறை நிறுவனம் ஆகிவிடும் என்று அடுத்துச் சொன்னார். 'தேசிய வருமானத்தை அதிகப்படுத்த வேண்டுமானால் பொதுத் துறையும் தனியார் துறையும்  இணைந்து செயல்பட வேண்டும்’ என்று கொஞ்சம் இறங்கினார். 'லாபகரமான தொழில்களில் அரசு இறங்கும்’ என்றார். 'நஷ்டம் அடைந்தால் அந்தத் தொழிலைக் கைவிட்டுவிடுவோம்’ என்று சொல்லிக்கொண்டார். அதனைச் செயல்படுத்த ஐந்தாண்டுத் திட்டங்கள் என்ற அஸ்திரத்தை எடுத்தார்.
ஐந்தாண்டுத் திட்டம் என்ற சிந்தனையே சோவியத் இறக்குமதிதான். ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி முதன்முதலாக 1923-28 காலக்கட்டத்தில் தன்னுடைய நாட்டு மக்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டது. அதுதான் ஐந்தாண்டுத் திட்டம் என அழைக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு நாடுகள் இதனைப் பின்பற்றத் தொடங்கின. நேருவும் அதனையே பின்பற்றினார். அவருக்கு அப்படிப்பட்ட சிந்தனைத் தூண்டுதலைச் செய்தவர் வி.எம்.விசுவேஸ்வரய்யா. அவர்தான் 'இந்தி யாவின் திட்டமிட்ட பொருளாதாரம்’ என்ற புத்தகத்தை, அடிமை இந்தியாவில் முதலில் எழுதினார். இது காங்கிரஸ் கட்சியைக் கவர்ந்தது. இதனைப் பற்றி ஆய்வுசெய்ய 'தேசிய திட்ட கமிட்டி’யை நேருவின் தலைமையில் அமைத்தார்கள். அரசியல் கொந்தளிப்பு அதிகம் ஆனதால் இந்த கமிட்டி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. சுதந்திரம் அடைந்ததும் பிரதமர் ஆன நேருவுக்கு, தான் முன்பு வகித்த கமிட்டி பதவி ஞாபகத்துக்கு வந்தது. அதை வைத்து ஒரு கமிஷனை அமைத்தார். அதுதான் இன்றுவரை நடைமுறையில் இருக்கும் 'திட்ட கமிஷன்’. அதன் தலைவராகவும் நேரு இருந்தார்.
''தேச மக்கள் அனைவரும் சரிநிகர் சமானமாக, வாழ்க்கை நடத்தப் போதிய வசதி பெறுவதற்கு உள்ள உரிமை தேவை. சமூகத்தின் பொருள் வசதிகள் முழுதும் பொதுமக்களின் பொதுநலத்துக்காகப் பயன்படும் விதத்தில் விநியோகிக்கப்படும் முறைகள் இருக்க வேண்டும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட முறைகள் பொதுநலம் பாதிக்கப்படும் முறையில் இருக்கக் கூடாது. ஒரு சிலரிடம் செல்வமும் பொருள் உற்பத்தி வசதிகளும் குவிந்திருக்காமல் செய்வதற்கான நடவடிக்கைகளும் தேவை’- என்று அன்றைய அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அது மாதிரி நடக்க முடியவில்லையே ஏன்?
டாக்டர் அம்பேத்கர் அடிக்கடி ஒரு உதாரணத்தைச் சொல்வார். ''சீனாவைச் சேர்ந்த புகழ்பெற்ற டெய்லர் ஒருவரிடம், தன்னுடைய கிழிந்த, நைய்ந்துபோன கோட் ஒன்றை எடுத்துக்கொண்டு ஒருவன் வந்தான். 'இதே மாதிரி எனக்கு ஒரு கோட் தைத்துக்கொடு’ என்று கேட்டான். இரண்டு வாரத்தில் அவனுக்கு கோட் தைத்துத் தரப்பட்டது. பழைய கோட்டில் எங்கெல்லாம் கிழிந்திருக்குமோ அங்கெல்லாம் கிழித்து, எங்கெல்லாம் நைய்ந்திருந்ததோ அங்கெல்லாம் அதேமாதிரி செய்து, அந்த புகழ்பெற்ற டெய்லர் கோட் தைத்துக் கொடுத்தார்'' என்று சொல்வார் அம்பேத்கர். பிரிட்டிஷிடம் இருந்து சுதந்திரம் பெறப் போராடியவர்களும், அதே மாதிரியான ஒரு ஆட்சியைத்தானே கொடுத்தார்கள்? நேருவால்கூட அது முடியாமல் போனதற்கு என்ன காரணம்?








No comments:

Post a Comment