Tuesday, December 18, 2012

இ-மெயில் தமிழன்!

மெயிலைக் கண்டுபிடித்தது யார்? இதுவரை தெரியவில்லை என்றால் விடுங்கள்... இனி, தலை நிமிர்ந்து சொல்லுங்கள்...
இமெயிலைக் கண்டுபிடித்தது ஒரு தமிழன் என்று.
தென் தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த அந்தக் கறுப்புத் தமிழனின் பெயர் சிவா அய்யாதுரை. இந்த ராஜபாளையத்துக் காரர் இப்போது வசிப்பது அமெரிக்காவில்.
டைம்’ பத்திரிகை இவரை 'டாக்டர் இமெயில்’ என்று அழைக்கிறது. 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, 'வாஷிங்டன் போஸ்ட்’, 'நியூயார்க் டைம்ஸ்’ எனப் பிரபல மீடியாக்கள் 'இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ எனக் கொண்டாடுகின்றன. உலகின் மிகச் சிறந்த அறிவுஜீவி என போற்றப்படும் பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, 'டாக்டர் சிவாதான் இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ என்று செல்லும் இடங்களில் எல்லாம் பேசுகிறார். உலகின் பிரசித்தி பெற்றதும், மிகப் பெரியதுமான அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆவணக் காப்பகம் (Smithsonian museum), ''மின்சார விளக்கு, செயற்கை இதயம் போன்ற மிக முக்கியமான கண்டுபிடிப்புகளின் வரிசையில் இமெயிலையும் மதிப்பிட வேண்டும்!'' என்று வர்ணிக்கிறது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் சிஸ்டம்ஸ் விஷ§வலைசேஷன் (Systems Visualization) மற்றும் கம்பேரடிவ் மீடியா ஸ்டடீஸ் (Comparative Media Studies) ஆகிய இரு துறைகளில் பேராசிரியராக இருக்கும் சிவா அய்யாதுரை, நோம் சாம்ஸ்கி தலைமையில், இந்தியாவின் சாதிய அடுக்குநிலை தொடர்பாக ஆய்வுசெய்தவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் ஏழு நிறுவனங்களைத் தொடங்கி நடத்திவருபவர். (அதில் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்... அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை).
ஓர் அதிகாலை நேரத்தில் சிவா அய்யாதுரையுடன் நடத்திய மிக நீண்ட 'ஸ்கைப்’ உரையாடல் ஆச்சர்யங்களால் நிரம்பியது. ''ஹாய் பாரதி... வணக்கம்'' என்று அன்புத் தமிழுடன் வந்து அமர்கிற சிவா அய்யாதுரைக்கு 48 வயது.

''நீங்கள் யார்? இத்தனை நாளும் எங்கு இருந்தீர்கள்?''
''ஹா... ஹா... என் அப்பா அய்யாதுரைக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர். அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் பரமன்குறிச்சி. இருவரும் அந்தக் காலத்திலேயே நன்றாகப் படித்தவர்கள். ஆறு வயதுக்குள்ளாகவே எனக்குப் படிப்பின் மீது மிகப் பெரிய ஆர்வம் உண்டாகியது. மும்பையில் வசித்த எங்கள் குடும்பம், என்னை மேற்கொண்டு நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தது. இந்தியாவில் கோடை காலத்தில் பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதைப் போன்ற... ஒரு சம்மர் கிளாஸில் 'ஃபோர்ட்ரான் 4’ ­(FORTRAN IV) என்ற புரொகிராமிங் மொழியைக் கற்றுக்கொண்டேன். அப்போது எனக்கு பள்ளிப் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துகொண்டே வந்ததால், பள்ளியைவிட்டு நிற்கப்போவதாக அம்மாவிடம் சொன்னேன். அப்போது அம்மா 'யுனிவர்சிட்டி ஆஃப் மெடிசின் அண்ட் டென்டிஸ்ரி’யில் (University of Medicine and Dentistry of New Jersey) டேட்டா சிஸ்டம் அனலிஸ்ட்டாகப் பணிபுரிந்துகொண்டு இருந்தார். தன்னுடன் பணிபுரிந்த பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனிடம் என்னை அழைத்துச் சென்றார். மைக்கேல்சன், அப்போது அந்த மருத்துவமனையின் அன்றாட நடவடிக்கைகளைக் கணினி வழியாக ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறியும் முயற்சி யில்  இருந்தார். அவர் என்னைத் தன் ஆராய்ச்சி உதவியாளர்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டார். சவால் நிறைந்த அந்தப் பணி என் மனதுக்குப் பிடித்திருந்தது.
அப்போது அந்த மருத்துவ மனையில் ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக 'மெமோரண்டம்’ எழுதுவார்கள். நோயாளிபற்றிய விவரம், மருத்துவர்பற்றிய விவரம், டூ, ஃப்ரம், சப்ஜெக்ட் எல்லாம் எழுதப்பட்ட அந்த மெமோ ரண்டத்தை அங்கு இருக்கும் தபால் பெட்டி மூலம் மருத்துவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வார்கள். இதை அப்படியே மின்மயப்படுத்த வேண்டும். அந்த மெமோரண்டத்தை மருத்துவமனையில் உள்ள எந்த ஒரு கணினியில் இருந் தும், மற்றொரு கணினிக்கு எலெக்ட்ரானிக் வடிவத் தில் அனுப்ப முடிய வேண்டும். இதுதான் எங்கள் நோக்கம்.
இந்த ஆராய்ச்சியில் நான் உருவாக்கியதுதான் இமெயில் சிஸ்டம். 'ஃபோர்ட்ரான் 4’ மொழியில் 50 ஆயிரம் வரிகள்கொண்ட அந்த புரொகிராமை எழுதியபோது எனக்கு வயது 14. அது 1978-ம் ஆண்டு. அதற்கு இமெயில் (email) என்று பெயரிட்டேன். எலெக்ட்ரோ மெயில் என்பதன் சுருக்கம் அது.  'ஃபோர்ட்ரான் 4’ மொழியில் ஒரு புரொகிராமில் அதிகபட்சம் 5 எழுத்துருக்கள்தான் பயன் படுத்த முடியும் என்பதாலும், இமெயில்  என்ற சொல் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்ததாலும் அந்தப் பெயரை வைத்தேன். அகராதியில் அதற்கு முன்பு இமெயில் என்ற வார்த்தையே கிடையாது!''

''ஆனால், டேவிட் க்ராக்கர், ரே டாமில்சன் ஆகியோர் பெயர்கள்தான் இமெயில் கண்டுபிடித்தவர்கள்பற்றிய ஆய்வுகளில் பேசப்படுகின்றனவே?''
''அதெல்லாம் அப்போது. நான்தான் இ மெயிலைக் கண்டுபிடித்தேன் என்பதை ஸ்மித் சோனியன் ஆவணக் காப்பகம் அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு, இந்த சர்ச்சை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. 1978-ம் ஆண்டு உலகின் முதல் இமெயிலை எனது வழிகாட்டியான பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனுக்கு அனுப்பினேன். அது ஒரு டெஸ்ட் மெயில். அதன் ஒரிஜினல் புரொகிராமிங் கோடு, இப்போதும் ஸ்மித் சோனியன் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. பேராசிரியர் நோம் சாம்ஸ்கி என் ஆய்வுகளின் நேரடிச் சாட்சியாக இருக்கிறார்.
டேவிட் க்ராக்கர் கண்டுபிடித்தது 'டெக்ஸ்ட் மெசேஜ்’ அனுப்பும் தொழில்நுட்பத்தை. ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறோம் இல்லையா? அதைப் போல அவர் வெறுமனே டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாறிக்கொள்வதைக் கண்டறிந்தார். அதை இமெயில் என்று சொல்ல முடியாது. அதோடு ஒப்பிடுவதானால், நாம் தந்தி அனுப்புவதைத்தான் இமெயில் என்று அழைக்க வேண்டியிருக்கும். மாறாக, இமெயில் என்பது ஒரு முழுமையான சிஸ்டம். இன்று நாம் பயன்படுத்தும் இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், டிராஃப்ட்ஸ், டு, ஃப்ரம், சப்ஜெக்ட், டேட், பாடி,  சிசி, பிசிசி, கம்போஸ், அட்டாச்மென்ட்ஸ், க்ரூப்ஸ், உள்ளிட்ட 86 வகையான இ மெயில் புரொகிராம்களை எழுதி, வடிவமைத்தது நான்தான். இதுதான் முழுமையான இமெயில் சிஸ்டம். ரே டாமில்சன் இமெயிலில் இன்று பயன்படுத்தும் '@’ குறியீட்டைக் கண்டுபிடித்தார். அதற்கு மேல் அவரது பங்களிப்பு இதில் எதுவும் இல்லை.''

''ஆனால், இமெயிலைக் கண்டறிந்தவர் நீங்கள்தான் என்பது ஏன் பெரிய அளவுக்கு வெளியே தெரியவில்லை?''
''அமெரிக்காவில் பலருக்குத் தெரியும். ஒருவேளை தமிழ்நாட்டுக்குத் தெரியாமல் இருக்கலாம். 1981-ம் ஆண்டு அமெரிக்க அரசிடம் இருந்து பெற்ற இமெயிலுக்கான 'காப்பிரைட்ஸ்’ இன்றும் என்னிடம்தான் இருக்கிறது. இங்கு கண்டுபிடிப்பு என்பது வேலையின் ஒரு பகுதி. ஆனால், எனது கண்டுபிடிப்பை இவர்கள் ஒப்புக்கொள்ளாமல் சர்ச்சை ஏற்படுத்தக் காரணம், புலம் பெயர்ந்த; கறுப்பு நிறத் தோல் உடைய; 14 வயதுச் சிறுவன் ஒருவன்... இமெயிலைக் கண்டுபிடித்தான் என்பதை இவர்கள் நம்ப மறுப்பது தான். 50 ஆயிரம் வரிகளைக்கொண்ட ஒரிஜினல் புரொகிராமிங் கோட் வெள்ளைத் தோல் உடைய ஒருவரிடம் இருந்தால், இந்தச் சர்ச்சைகளுக்கு வாய்ப்பே இல்லை!''

''இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தீர்கள்?''
''1993-ம் ஆண்டு நான் பி.ஹெச்டி. ஆய்வில் ஈடுபட்டு இருந்தபோது, கிளின்டன் அமெரிக்க அதிபர். அப்போது வெள்ளை மாளிகைக்கு நாள் ஒன்றுக்கு 5,000 இமெயில்கள் வந்து குவியும். அதை நிர்வகிக்கும் வேலை சிக்கலானதாக இருந்தது. ஆகவே, அந்த மெயில்களை வகைவாரியாகப் பகுத்துப் பிரிக்கும் தானியங்கித் தொழில்நுட்பத்தைக் கண்டறிவதற்கான போட்டி ஒன்றை அறிவித்தது வெள்ளை மாளிகை. 147 பேர் கலந்துகொண்ட அந்தப் போட்டியில் நான் கண்டறிந்த 'எக்கோ மெயில்’ (Echo Mail) என்ற தொழில்நுட்பம் வெற்றிபெற்றது. பிறகு, இந்த 'எக்கோ மெயிலை’ ஒரு நிறுவனமாகத் தொடங்கினேன். இன்று 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த நிறுவனம், உலகின் மிக முக்கியமான நிறுவனங்களைத் தனது வாடிக்கையாளர்களாகக்கொண்டு இருக்கிறது. அதுபோக, வேறு சில நிறுவனங்களையும் நடத்துகிறேன். கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட மூடப்படும் நிலையில் நஷ்டத்தில் இயங்கிய அமெரிக்கத் தபால் துறையில் எனது புதிய இமெயிலிங் சிஸ்டத்தை நடைமுறைப்படுத்தியபோது, அது லாபகரமாக மாறியது. அப்போது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பில் இருந்து தப்பினார்கள். அமெரிக்க ஊடகங்கள் என்னைக் கொண்டாடின. ஆனால், எனக்கு இந்தியாவில் பணிபுரியவே விருப்பம். அதே சமயம், அங்கு எனக்குக் கிடைத்தவையோ கசப்பான அனுபவங்களே...'' 

''என்ன நடந்தது இந்தியாவில்? நீங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டீர்கள் என்று அறிகிறேன்...'' 
''ஆம், உண்மைதான். 2007-ம் ஆண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான சி.எஸ்.ஐ.ஆர். (கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்) துறையில் என்னைக் கூடுதல் செயலாளராக நியமித்தார் மன்மோகன் சிங். சில காலம் அங்கு இருந்தேன். அந்த சி.எஸ்.ஐ.ஆர். நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு. ஆனால், 60 ஆண்டுகளில் அதில் உள்ளவர்கள் எதுவுமே செய்யவில்லை. எங்கும் லஞ்சம், ஊழல். அறிவியல் கண்டுபிடிப்புக்கான சூழலே அங்கு இல்லை. இதைப் பற்றி 'கண்டுபிடிப்புகளுக்குச் சுதந்திரம் வேண்டும்’ என்ற தலைப்பில் 47 பக்கத்துக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதை உலகின் முக்கியமான 4,000 விஞ்ஞானிகளுக்கு மெயில் அனுப்பினேன். உலக அளவில் அது பெரிய விவாதமானது. உடனே, இந்தியாவின் சட்டத்தை நான் மீறிவிட்டதாகச் சொல்லி, திடீரென ஒரு நாள் என் வீடு முடக்கப்பட்டது. நான் நேபாளம், கத்தார் வழியே அமெரிக்கா வந்தேன். 'சிவா அய்யாதுரையை வெளியேற்றியது இந்தியா செய்த பெரிய தவறு’ என்று பல விஞ்ஞானிகள் எழுதினார்கள். அதைப் பற்றி இந்தியா கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இப்போதும் அங்கு சூழல் மாறிவிடவில்லை. அங்கு இருக்கும் நேர்மையற்ற அரசியல் சூழலில் அறிவியல் ஒருபோதும் வளராது!''

''உங்கள் பேச்சை வைத்துக் கேட்கிறேன்... நீங்கள் சயின்டிஸ்ட்டா, கம்யூனிஸ்ட்டா?''
''எம்.ஐ.டி-யில் படிக்கும்போது மாணவர் சங்கத்தில் இணைந்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். இலங்கையில் நம் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கொண்டு இருந்த சமயத்தில், அப்போது இலங்கை அதிபராக இருந்த பிரேமதாசாவை எதிர்த்து இங்கு போராடியது உட்பட. 'த ஸ்டூடன்ட்’ என்ற பெயரில் நான்கு ஆண்டுகள் பத்திரிகை நடத்தினேன். அதனால், நான் அடிப்படையில் கம்யூனிஸ்ட். பிறகுதான் சயின்டிஸ்ட். இன்று தொழில்நுட்பத்தையும் அறிவியல் வளர்ச்சியையும் பெரும் நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற இணைய நிறுவனங்களும் செல்போன் கம்பெனிகளும் மக்களை அன்றாடம் கண்காணிக்கின்றன. சந்தர்ப்பம் வரும்போது மக்களுக்கு எதிராகக் கைகோத்துக்கொள்கின்றன. சமீபத்தில், எகிப்தில் நடந்த மக்கள் புரட்சியை, எஸ்.எம்.எஸ். அனுப்புவதைத் தடைசெய்து ஒடுக்க முயன்றதே இதற்குச் சிறந்த உதாரணம்!''

''உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?''
''எனது முழு வாழ்க்கையும் அறிவியலில்தான் செலவாகும். அதில் சந்தேகம் இல்லை. அமெரிக்காவிலும் இந்தியாவிலுமாக மாறி மாறி இயங்கவே விரும்புகிறேன். இந்திய சித்த மருத்துவத்தின் மேன்மைகளை ஆராய்ச்சி செய்து, அதைக் கிழக்குலகின் பாரம்பரிய மருத்துவத்துடன் இணைத்து, மருத்துவத் துறையில் புதிய புரட்சியை உருவாக்குவதுதான் என் அடுத்த இலக்கு. இன்றைய கார்ப்பரேட் உலகம், தொழில்நுட்பங்களையும், அறிவியலை யும், அறிவையும் மேலும் மேலும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது. அது எல்லோ ருக்கும் கைவராத கலை என்பதைப் போலச் சித்திரிக்கிறது. ஆனால், அப்படி அல்ல. உலகத்தில் ஆயிரமாயிரம் சாம்ஸ்கிகள், சிவாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வெளியே கொண்டுவர வேண்டும். நான் அடிக்கடி சொல்லும் வாசகத்தையே இங்கும் சொல்கிறேன்: புதுமைகளை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், யாராலும் நிகழ்த்த முடியும்!''


Source: Vikatan

Thursday, December 6, 2012

அரசியலில் ஒரு மனிதன்!-இந்தர் குமார் குஜ்ரால்


http://www.vikatan.com/jv/2012/12/zmziyt/images/p35.jpg
ந்தர் குமார் குஜ்ரால் இறந்துபோனது, இன்றைய இந்தியாவுக்கு தலைப்புச் செய்தியாகக்கூட இடம்பெறவில்லை. இதுவரை இருந்த பிரதமர்களில் அவரும் ஒருவர் என்ற பட்டியலில் க்விஸ் கேள்விகளில் மட்டும்தான் இடம் பிடித்தார். ஆனால், தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள எத்தகைய கீழான காரியத்தையும் செய்யலாம் என்பதே விதியாகிவிட்ட இன்றைய அரசியல் உலகத்துக்கு, இந்தர் குமார் குஜ்ரால் போன்ற ஒருவரின் மறைவு... மாபெரும் ஏக்கப் பெருமூச்சைக் கிளப்புகிறது.

குஜ்ரால் என்பது அவரது பெயர் அல்ல. அவர் பிறந்த கிராமத்தின் பெயர். அது இந்தியாவில் இல்லை. பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் இருக்கிறது. ஆனால் குஜ்ரால், அப்பழுக்கற்ற இந்தியனாகவே இருந்தார். அவரது பூர்வீகம், காங்கிரஸ் கட்சி அல்ல. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்தவர். ஆனால், 35 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சிக்காகவே வாழ்ந்தவர்.
நல்லவர், நாணயஸ்தர் என்பதற்காக, அவருக்குப் பதவிகளைக் கொடுத்தனர். அதைத் தக்க​வைத்துக் ​கொள்வதற்காக யாரோடும் சமரசம் செய்து கொள்ளவே இல்லை அவர். அப்படி செய்திருந்​தால், இந்திரா காந்திக்கு அடுத்த இடத்தை அவர் தக்கவைத்துக் கொண்டு, காங்கிரஸிலேயே தொடர்ந்து இருக்கலாம். காங்கிரஸ் கட்சி ஒரு தலையாட்டிப் பிரதமரைத் தேடிக்கொண்டு இருந்த 1997-ல், குஜ்ரால் பதவியைப் பிடித்தார். ஆனால், அவர் தலையாட்டிப் பிரதமராக செயல்பட்டு இருந்தால், 11 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்தவர் என்ற நிலை வந்திருக்காது. காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியின் பூசாரியாக இருக்கச் சம்மதிக்காமல், ராஜினாமா செய்தவர் குஜ்ரால். அவரது மரணம் இந்தக் குணாம்சத்தின் வெற்றிடத்தையே நினைவுபடுத்துகின்றன.
பிரதமர் இந்திராவுக்கு மிகப்பெரிய களங்கம் 1975-ம் ஆண்டு காலத்து அவசரநிலைப் பிரகடனம். இந்திராவுக்கு எதிராக யாரும் எதுவும் எழுதக் கூடாது என்று பத்திரிகைகள் அனைத்தும் மௌனிக்கச் செய்யப்பட்டன. இந்த நேரத்தில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறையின் அமைச்சராக இருந்தவர் இந்தர் குமார் குஜ்ரால். மேலோட்டமாகப் பார்த்தால் இத்தனை காரியங்களையும் அவர்தான் செய்தார் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள் இருந்துகொண்டே, இந்திராவுக்குப் பக்கத்தில் இருந்தபடியே எமர்ஜென்சி நடவடிக்கை​களுக்கு எதிராகச் சண்டை போட்டவர் குஜ்ரால். அமைதியானவர், அதிர்ந்து பேசாதவர் என்று பெயர் எடுத்த குஜ்ரால், அன்றைய 'கிரேட் டிக்டேட்டர்’ சஞ்சய் காந்தியை எதிர்த்து சரிக்குச் சரி நின்றார். எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதற்கு அடுத்த நாள், குஜ்ராலை வீட்டுக்கு வரச்சொன்னார் சஞ்சய். 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததாகச் சொல்லி அவர் கோபப்பட, 'நீங்கள் என் மகன் வயது. நான் உங்கள் அம்மாவுடன் அரசியல் நடத்துபவன். உங்கள் அப்பாவின் நண்பராக இருந்தவன். மரியாதையாக நடத்துங்கள்’ என்று சொல்லி விட்டு வந்தார். அந்தக் காலகட்டத்தில் வெளியாகும் செய்தி புல்லட்டின்​களை சஞ்சய் காந்திக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு துறையின் அமைச்சர் சொன்ன​போது, மறுத்தார். அதன்பிறகு, பிரதமர் இந்திராவுடன் நேரடி மோதல் ஏற்பட்டது. அவர் சொன்னதை ஏற்க குஜ்ரால் மறுக்கவே, 'நீங்கள் விலகி விடுங்கள். எனக்கு வேண்டிய​வரை வைத்து இந்தத் துறையைக் கவனித்துக் கொள்கிறேன்’ என்று இந்திரா இவரைத் திருப்பி அனுப்பினார். வேறு துறைக்குத்தான் அவரை மாற்ற முதலில் இந்திரா நினைத்தார். பிறகு ரஷ்யத் தூதராக... கிட்டத்தட்ட மாஸ்கோவுக்கு நாடு கடத்தினார்.
அன்று அமைதியாக இருந்திருந்தால், இன்று மன்மோகன் சிங் இடத்தை நிரப்பி இருக்கலாம். இந்தப் பஞ்சாபிக்கு பதிலாக அந்தப் பஞ்சாபி இருந்திருக்​க​லாம். ஆனால், குஜ்ராலுக்கு மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. எமர்ஜென்சியை எதிர்த்துக் கிளம்பிய ஜனதாவில் தன்னை இணைத்துக்கொண்டார். 96-க்குப் பிறகு ஏற்பட்ட தொங்கு நாடாளுமன்றத்தில் குஜ்ராலும் 11 மாதங்கள் பிரதமர் ஆகும் பாக்கியம் கிடைத்தது.
ஒரு பக்கம் சீதாராம் கேசரி தலைமையிலான காங்கிரஸ், இன்னொரு பக்கம் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் தலைமை​யிலான இடதுசாரிகள், முலாயம், லல்லுபோன்ற இந்தி மாநிலத் தலைவர்கள், கருணாநிதியும் மூப்பனாரும் சந்திரபாபு நாயுடுவுமான தென்னகத் தலைவர்கள்... என, ஏக இந்தியாவும் சேர்ந்து குஜ்ராலை பிரதமராக முன்மொழிந்தது. அந்த அளவுக்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவராக இருந்தார். இதில் சிக்கலை உண்டாக்கியது ஜெயின் கமிஷன். ராஜீவ் கொலை வழக்கில் உள்ள சதிச் செயல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட இந்தக் கமிஷன், தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, 'இந்தக் கொலையில் தி.மு.க-வுக்குத் தொடர்பு இருக்கிறது. விடுதலைப்புலிகளை தமிழர்கள் ஆதரித்ததால், அவர்களுக்கும் கொலையில் பங்கு இருக்​கிறது’ என்று பெரிய காமெடி நடத்தியது. சொந்த வாழ்க்கையில் எந்தச் சாதனையும் செய்ய முடியாத சீதாராம் கேசரிக்கு, இந்த அறிக்கை கிடைத்தது. 'தி.மு.க-வை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்’ என்று குஜ்ராலைக் கட்டாயப்படுத்தினார். 'இதைவிடப் பெரிய அபத்தம் எதுவும் இருக்க முடியாது’ என்றார் குஜ்ரால். 'அப்படியானால் காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் வாங்கும்’ என்றார் கேசரி. 'நீங்கள் என்ன வாபஸ் வாங்குவது... நானே ராஜினாமா செய்கிறேன்’ என்று கும்பிடு போட்டார் குஜ்ரால். தன் மனசாட்சியை அடமானம் வைத்துவிட்டு நாற்காலி​யைத் தொட மாட்டேன் என்று வாழ்ந்த குஜ்ராலின் மறைவு, ஈடு செய்ய இயலாத இழப்பு.
பிரதமர்களின் வரிசையில் அல்ல... மகத்தான மனிதர்​களின் வரிசையில் இந்தர் குமார் குஜ்ரால் இடம் பிடித்து விட்டார்!

நன்றி : விகடன்