Monday, June 25, 2012

இந்தியாவின் ஜனாதிபதி

'இந்தியாவின் ஜனாதிபதி, இங்கிலாந்தின் முடிமன்னருக்கு இணையானவர். அவர் நாட்டின் தலைவரே அன்றி, நிர்வாகத் தலைவர் இல்லை. தேசத்தின் புறவுருவாய் தோற்றம் தரும் அவர், ஆட்சி செய்வது இல்லை. நாட்டின் அடையாளச் சின்னமாக விளங்கும் அவருடைய பெயரால் நிர்வாக முடிவுகள் மேற்கொள்ளப்படுவது வெறும் வினைமுறை ஏற்பாடு’ (ceremonial device) என்று அண்ணல் அம்பேத்கர் நவம்பர் 4, 1948 அன்று அரசியல் நிர்ணய சபையில் தெளிவுபடுத்தினார்!
அமெரிக்க ஜனாதிபதியோ, நிர்வாகத் தலைவர். அமைச்சரவை அவருக்குக் கட்டுப்பட்டது. ஆனால், இந்தியக் குடியரசுத் தலைவர், அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டவர்; அமைச்சரவையின் அறிவுரைப்படி நடக்க வேண்டியவர். அரசமைப்புச் சட்டப்படி ஜனாதிபதி ஓர் அலங்கார பொம்மை என்ற கருத்தேற்றத்தை டாக்டர் ராஜேந்திர பிரசாத் அங்கீகரிக்க​வில்லை. அரசமைப்புச் சட்டத்தின் 74(1) உறுப்பு 'அமைச்சரவை, ஜனாதிபதிக்கு உதவவும், அறிவுரை வழங்கவும் உள்ளது என்று​தான் உரைக்கிறது. அதன் அறிவுரைப்படியே அவர் எப்போதும் செயற்படவேண்டும் என்று குறிப்பிடப்​படவில்லை’ என்பது ராஜன் பாபுவின் அபிப்ராயம் ஆகும்.
நாட்டின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், முதல் பிரதமராக விளங்கிய ஜவகர்லால் நேருவுக்கு செப்டம்பர், 1952-இல் எழுதிய கடிதத்தில், 'சில தருணங்களில் ஜனாதிபதி சுயேச்சையாக முடிவெடுக்க வாய்ப்பு உண்டு’ என்று குறிப்பிட்டார். இந்தக்குறிப்பை நேருவால் ரசிக்க இயலவில்லை. ஆனாலும், தன் கருத்து வேற்றுமையை வெளிப்படுத்த நேரு தயங்கினார். காரணம், இருவரும் காந்தியப் படையின் தளகர்த்தர்களாக இருந்தவர்கள். ராஜன் பாபு, மூன்று முறை காந்தியால் காங்கிரஸ் தலைவராக்கப்பட்டவர். சட்டப் படிப்பில் டாக்டர் பட்டம் பெற்ற பிரசாத், அரசமைப்புச் சட்டத்துக்கு வடிவம் வழங்கிய அரசியல் நிர்ணய சபையின் தலைமை நாற்காலியை அலங்கரித்தவர்.
ராஜன் பாபுவுடன் மோதலைத் தவிர்க்க விரும்பிய நேரு, அவர் எழுதிய கடிதத்தின் நகலை அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி ஐயருக்கும், அன்றைய அட்டர்னி ஜெனரலாகப் பதவி வகித்த எம்.சி. செதல்வாடுக்கும் அனுப்பி வைத்து அவர்​களுடைய கருத்தை வழங்கும்படி வேண்டினார். 'நம் அரசமைப்புச் சட்டம் பிரிட்டிஷ் அமைப்பு முறையை முன்மாதிரியாகக் கொண்டு இருப்பதால், குடியரசுத் தலைவர் அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டியர் ஆவார்’ என்று இருவரும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். ராஜன் பாபுவுக்கு இது மனநிறைவைத் தராவிடினும் நாட்டு நலனை முன்னிறுத்திப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆயினும், தான் ஓர் அலங்கார பொம்மை என்பதை இறுதிவரை அவர் ஏற்கவில்லை.
உச்ச நீதிமன்றம் 'சம்ஷேர் சிங் - இந்திய யூனியன்’ வழக்​கில், 'குடியரசுத் தலைவர், அமைச்சரவையின் முடிவு​களுக்கு ஏற்பவே செயற்பட வேண்டும் என்றும், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படும் 'ஜனாதிபதியின் மனநிறைவு’ என்பது அவரது தனிப்பட்ட மனநிறைவு அன்று; அமைச்சரவையின் மனநிறைவே’ என்றும் தெளிவுபடுத்தியது. ஆனாலும், ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பவர் எந்த நேரத்​திலும் ஏதாவது ஒரு வழியில் அமைச்சரவைக்கு நெருக்கடியைத் தரக்கூடும் என்ற அச்சம் ஒவ்வொரு பிரதமருக்கும் அந்தரங்கமாக இருந்தது. இந்த அச்சம்தான் 'ரப்பர் ஸ்டாம்ப்’ மனிதர்களைத் தேர்ந்தெடுக்க அடித்தளமிட்டது.
ராஜன்பாபு, மத்திய அமைச்சரவையின் முடிவுகளுக்கு மறுப்பேதும் குறிப்பிடாத மௌனப் பார்வையாளராக வீற்றிருக்க விரும்​பவில்லை. அவருக்​கும் நேருவுக்கும் இடையில் அந்தரங்​கமான மோதல்கள் அடிக்கடி அரங்கேறின. கஜனி முகம்மதுவால் பாழாக்கப்பட்ட சோமநாதர் ஆலயம் புதுப்பிக்கப்பட்ட பணியில் நேருவின் விருப்பத்தை மீறி வெளிப்படையாகப் பங்​கேற்றார் பிரசாத். காசியில் சாமியார்கள் கால்களில் ஜனாதிபதி விழுந்து எழுந்ததை நேருவால் ஜீரணிக்க முடியவில்லை. ராணுவத்தளபதி திம்மையாவின் ராஜினாமா விவகாரம், திபெத் பிரச்னையில் நேருவின் அணுகுமுறை, கேரளாவில் 1959-ல் நம்பூதிரிபாட் தலைமையில் இயங்கிய கேரள அரசைக் கவிழ்த்தது போன்றவற்றில் அமைச்சரவை முடிவுகளை மனநிறைவுடன் ராஜன்பாபு ஏற்கவில்லை.
தன் விருப்பங்களுக்குத் தலை அசைக்காத அவரை, இரண்டாவது முறை ஜனாதிபதியாக்க நேரு விரும்பவில்லை. ஆனால், மௌலானா அபுல்கலாம் ஆசாத் வற்புறுத்தியதால் ராஜன்பாபு மீண்டும் ஜனாதிபதியாய் நீடிக்க  விருப்பம் இல்லாமல் பணிந்து கொடுத்தார் நேரு. மூன்றாவது முறையும் பிரசாத் பதவியில் தொடர விரும்பிய போது, நேரு பச்சைக்கொடி காட்டவில்லை. தொடர்ந்து 12 ஆண்டுகள் (1950-62) ஜனாதிபதி பதவியில் பவனி வந்தவர் பாபு ராஜேந்திர பிரசாத் ஒருவர் மட்டுமே.

தத்துவ மேதை ராதாகிருஷ்ணன் ஜனாதி​பதியானால் தனக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று நேரு நம்பினார். ஆனால், சீன ஆக்கிரமிப்பில் இந்தியாவின் கௌரவம் களங்​கமுற்றபோது ராதாகிருஷ்ணன், நேருவின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்றார்; பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.கே.கிருஷ்ணமேனன் பதவி விலக வேண்டும் என்று பிரதமருக்கு அழுத்தம் கொடுத்தார். நேரு, சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகிய மூவரும் ராதாகிருஷ்ணன் ஜனாதிபதியாக இருந்தபோது பிரதமர்களாகப் பதவி வகித்தனர். இந்திரா காந்தியின் அரசியலும் ஆட்சி நிர்வாகமும், உயர்ந்த லட்சியங்களில் பிடிப்புள்ள ராதாகிருஷ்ணனுக்கு ஏற்புடையதாக இல்லை. பொறுப்பில் இருந்து விலகுவதற்கு முன்பு தன்னுடைய இறுதிக் குடியரசு நாள் உரையில் 'நிர்வாகத் திறமையற்ற அரசு’ என்று வெளிப்படையாகவே விமர்சித்தார் அந்தத் தத்துவ ஞானி.

ராஜன் பாபுவுக்குப் பின், துணை ஜனாதிபதி யாக இருந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி யானார். அவருக்குப் பின், துணை ஜனாதிபதி ஜாகீர் உசேன் ஜனாதிபதியானார். பிரசாத், சட்ட நிபுணர். ராதாகிருஷ்ணனும், ஜாகீர் உசேனும் உன்னதமான கல்வியாளர்கள். அரசியல் சூழ்ச்சி​களுக்கு அப்பாற்பட்ட குடியரசுத் தலைவர் பதவியை அலங்​கரித்த முதல் மூவரும் அந்தப் பதவிக்குரிய கௌரவத்தைக் காப்பாற்றியவர்கள்; நாட்டு நலனைப் பெரிதாக நினைத்​தவர்கள்; பதவியைக் காப்பாற்றிக்கொள்ளப் பிரதமரின் கைப்பொம்மையாக இருக்க விரும்பாதவர்கள்.
இந்திரா காந்தியின் ஆட்சிப்படலம் ஆரம்​பமானது. குடியரசுத் தலைவர் கொலு பொம்மை ஆக்கப்பட்டார்.
நேரு, ராஜேந்திர பிரசாத் இணக்கமாக இல்லாத​ போதும் 12 ஆண்டுகள் பொறுமை காத்தார். அவருடைய மகள் இந்திரா காந்தியால் ராதாகிருஷ்ணனை ஓர் ஆண்டுகூட ஏற்க முடியவில்லை. பதவி நாற்காலிக்குப் பெருமை தேடித் தந்த தத்துவ ஞானியை இரண்டாவது முறை ஜனாதிபதியாக்க இந்திரா விரும்பவில்லை. அவருடைய மருமகள் சோனியா காந்தி, இளைஞர்களால் ஆராதிக்கப்படும் அப்துல்கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க இசையவில்லை. நேரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் ஜனாதிபதி தேர்வும் அரசியலாக்​கப்பட்டது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகிய மூவருமே ரப்பர் ஸ்டாம்பாக ஜனாதிபதியை மாற்றிய பெருமைக்கு உரியவர்கள்(!)

காங்கிரஸை 1969-ல் இரண்​டாகப் பிளந்து, கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் சஞ்சீவ ரெட்டியைத் தோற்கடிக்க, வி.வி.கிரியைத் தேர்தலில் நிறுத்தி, மனசாட்சிப்படி வாக்களிக்கும்படி காங்கிரஸ்காரர்களைத் தூண்டிவிட்டு, தான் ஆடிய அரசியல் சதுரங்கத்தில் ஜனாதிபதி பதவியைப் பகடைக்காயாக மாற்றியவர் இந்திரா காந்தி. அன்றுதான் வி.வி.கிரி வடிவத்தில் ஜனாதிபதி, ரப்பர் ஸ்டாம்ப் ஆனார்
இந்திரா காந்தியால் ஜனாதிபதியான வி.வி.கிரி நன்றிக் கடனாற்றுவதற்காக, விரும்பியே ரப்பர் ஸ்டாம்பாக மாறினார். ஆனால், அவராலும் ரயில்வே வேலை நிறுத்தத்தை இந்திரா காந்தி கையாண்ட விதத்தை வரவேற்க முடியவில்லை. குஜராத் மாநில அரசுக் கவிழ்ப்பில் கிரியின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டது. 'ஏழை எளிய மக்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றத் தவறி விட்டது’ என்று அவர் செய்த விமர்சனம் இந்திரா காந்தியின் கசப்பைத் தேடிக்கொண்டது. கிரியைவிட அழுத்தமான ரப்பர் ஸ்டாம்பை அடுத்து இந்திரா தேடியபோது பொருத்தமாகக் கண்டெடுக்கப்பட்டவர்தான் பக்ருதீன் அலி அகமது. இந்திரா காந்தி ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்து நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்த முனைந்தபோது, மறுப்பின்றிக் கையப்பமிட்ட மகாவிசுவாசி அவர். அவரை விடவும் விசுவாசி தேவைப்​பட்டபோது இந்திராவின் கண்களில் தட்டுப்​பட்டவர்தான் கியானி ஜெயில்சிங். 'இந்திரா காந்தி விரும்பினால் அவருடைய அறையில் துடைப்பம் பிடித்துப் பெருக்கவும் தயங்க மாட்டேன்’ என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்த ஜெயில் சிங்குக்கு இணையாக யாரே இருக்க வல்லார்! அன்று இந்திரா காந்தியின் கண்டுபிடிப்பு ஜெயில்சிங், நேற்று சோனியாவின் கண்டுபிடிப்பு 'உலகம் சுற்றிய’ பிரதீபா பாட்டீல். இந்திய அரசியலில் இந்திரா குடும்பத்துப் பங்களிப்பை நினைத்தாலே நெஞ்சு 'இனிக்கிறது’!
இன்று, சோனியா விரும்பி அறிவித்த மனிதர் அல்லர் பிரணாப் முகர்ஜி. அவருடைய ஆசை அமைதியின் வடிவம் ஹமீது அன்சாரியை ஜனாதிபதி​யாக்குவதுதான். முலாயம் சிங்கும் மம்தாவும் அவருடைய ஆசையை நிராசையாக்கி விட்டனர். பிர​ணாபின் திறமையை விட அன்சாரியின் அடக்கம்தான் சோனியாவுக்குத் தேவை. ஏன் பிரணாபிடம் சோனியா அஞ்ச வேண்டும்? ரப்பர் ஸ்டாம்ப் பதவி, அலங்கார பொம்மைப் பதவி என்றாலும் ஜனாதிபதி பதவி ஓரளவு கூர் தாங்கிய கத்தி. அதைக்கொண்டு கொஞ்சமாவது பயமுறுத்த முடியும். அனுபவத்தில் சோனியா காந்தி அதை அறிவார்.
இந்திரா காந்தியால் தோற்கடிக்கப்பட்ட சஞ்சீவ ரெட்டி, ஜனதா ஆட்சியின் கருணையால் குடியரசுத் தலைவரானார். கட்சிக்குள் நேர்ந்த குழப்பத்தால் மொரார்ஜி தேசாய் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகியதும், ஜகஜீவன்ராம் ஆட்சியமைக்க ஆதரவு எம்.பி-க்கள் பட்டியலுடன் ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகர், சஞ்சீவ ரெட்டியைச் சந்தித்தபோது அவர் ஏற்க மறுத்தார். கோபத்துடன் வெளியேறிய சந்திரசேகர், ஜனாதிபதி மாளிகையின் வெளியே பத்திரிகையாளர்களிடம், ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பொங்கினார். தீட்டிய மரத்திலேயே கூர் பார்த்தது சஞ்சீவ ரெட்டி கத்தி.
இந்திரா காந்தியின் தீவிர விசுவாசி ஜெயில்சிங், ராஜீவ் காந்தியின் ஆட்சியைக் கவிழ்க்க ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தப் பார்த்தார். ராஜீவ், ஜெயில் சிங்கை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. பிரதமர் நாட்டு நடப்புகளை, நிர்வாக முடிவுகளை அவ்வப்போது ஜனாதிபதியைச் சந்தித்துப் பரிமாறிக் கொள்ளும் நடைமுறையை ராஜீவ் புறக்கணித்தார். 'மரபை உடைக்கலாமா?’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்டபோது, 'நான் பல மரபுகளை உடைத்தவன்’ என்றார் ராஜீவ். ஜெயில்சிங் இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதை அவர் தடுத்தார். நேரம் பார்த்துக் காத்திருந்த ஜெயில் சிங்குக்கு, போஃபர்ஸ் ஊழல் கைகொடுத்தது. 'ஊழல் மலிந்த நிர்வாகம்’ என்று குற்றம் சாட்டி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜீவ் அரசை 'டிஸ்மிஸ்’ செய்யவும், வெங்கட்ராமனைப் பிரதமராக்கவும் முடிவெடுத்தார். இதை அறிந்த ராஜீவ் காந்தி அதிர்ந்து போனார். நாடாளுமன்றத்தின் அதிகாரத்​தை ஜனாதிபதி பயன்படுத்த முடியாது என்று கிடைத்த அறிவுரையால், ஜெயில் சிங்கின் பழிவாங்கும் புத்தி தெளிந்தது. இந்தச் சதி குறித்து அவருக்குப் பின் பொறுப்பேற்ற ஆர்.வெங்கட்ராமன் ‘My Presidential years’ என்ற நூலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கும் ஆட்சியாளரை அச்சுறுத்தும் அதிகாரம் உண்டு. மென்மையான தண்ணீரில் பாறையைத் தகர்க்கும் வன்மை மறைந்திருக்கிறது என்கிறார் சீனஞானி லயோட்சு. அதைப் போல!
அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்வில் காங்கிரஸ் கூட்டணி பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போகலாம். தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம். அந்த நேரத்தில் ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவரின் ஒத்துழைப்பு முக்கியம். அதற்கு ஒரு பூரண விசுவாசி அந்த நாற்காலியில் அமர்வது நல்லது. பிரணாப் முகர்ஜி தன் மேதைமையை மூட்டை கட்டி மூலையில் வைத்துவிட்டு 'முதல்தர விசுவாசி’ முகமூடியை அணிந்துகொள்ளத் துணிந்து விட்டார். அவர் ஜனாதிபதியாவது நிச்சயம். சோனியா காந்தி கம்பெனியில் தயாரான அக்மார்க் முத்திரையுடன் கூடிய அடுத்த ரப்பர் ஸ்டாம்பை ஜனாதிபதி மாளிகையில் அமரச்செய்து அழகு பார்க்க நாடு தயாராகி விட்டது. இன்னொரு சஞ்சீவ ரெட்டியும், ஜெயில் சிங்கும் மீண்டும் உயிர்த்தெழுவார்களா?

காலம்தான் விடை சொல்ல வேண்டும்!

Source:Vikatan

Sunday, June 24, 2012

பிரதிபா பாட்டீலின் சாதனை பெருமிதப்படத் தக்கதுதானா?

ஓவ்வொரு குடியரசுத் தலைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து விடைபெறும்போது, அவர்களது பதவிக்காலத்தில் நிகழ்த்திய சாதனைகள் என்று சொல்லிக் கொள்ள ஒரு சில முக்கியமான நிகழ்வுகள் இருக்கும். சுதந்திர இந்தியாவின் 12-வது குடியரசுத் தலைவராக ஐந்தாண்டுகள் பதவி வகித்துவிட்டு விடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முதல் பெண்மணி என்கிற பெருமைக்குரிய பிரதிபா பாட்டீலின் சாதனை பெருமிதப்படத் தக்கதுதானா என்பதில்தான் நமக்குச் சந்தேகம் எழுகிறது.
கொலைக் குற்றவாளி உள்ளிட்ட எந்தக் குற்றவாளியாக இருந்தாலும் அவருக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. சாதாரணமாக, குடியரசுத் தலைவர்களாகப் பதவி வகித்தவர்கள் அனைவருமே, கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுவின் மீது முடிவெடுப்பதில் மிகுந்த எச்சரிக்கை காட்டி வந்திருக்கிறார்கள். முந்தைய குடியரசுத் தலைவர்களில் கே.ஆர். நாராயணன் ஒரு குற்றவாளிக்குக்கூட மன்னிப்பு வழங்கவில்லை. அப்துல் கலாம் இரண்டு பேருக்கு மட்டும் மரண தண்டனையை ரத்து செய்யக்  கையொப்பமிட்டார்.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் சாதனை, இதுவரை பதவி வகித்த எந்தவொரு குடியரசுத் தலைவரும் செய்யாத சாதனை, கடந்த 28 மாதங்களில் 30 தூக்குத் தண்டனைக் கைதிகளுக்குக் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவர்களது தண்டனையை ஆயுள் தண்டனையாகச் சுருக்கி இருப்பதுதான். இதுவரை சுதந்திர இந்திய சரித்திரத்தில் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனைக் கைதிகளில் 90 விழுக்காடு பேர் பிரதிபா பாட்டீலுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள். 

 உண்மையிலேயே செயற்கரிய சாதனைதான் இது!பிரதிபா பாட்டீலால் மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் தூக்குத் தண்டனைக் கைதிகள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்த்தால் அதைவிடத் திடுக்கிட வைக்கிறது அவர்களது குற்றமும், பின்னணியும். பிரதிபா பாட்டீலால் மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் 30 பேரில் 22 பேர் கொடூரமான கூட்டுப் படுகொலை, கதறக் கதறக் கற்பழிப்பு, குழந்தைகளை ஈவு இரக்கமின்றிக் கொல்வது, சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவும், கிரிமினல் குற்றங்களுக்காகவும் சிறைச்சாலைக்குப் போவதைப் பொழுதுபோக்காகக் கொள்வது போன்றவற்றில் ஈடுபட்டவர்கள்.ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகைச் சேர்ந்த ஒன்பது வயது பாலகன் சிர்க்கு பேஸ்ரா. அவனைக் காணவில்லை என்று பெற்றோர் தேடிக் கொண்டிருக்க, 1996-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி சுசீல் முர்மு என்பவன் அந்தச் சிறுவனைக் கடத்திக் கொண்டுபோய், காளி தேவிக்குப் பலி கொடுத்துப் பூஜை நடத்தி இருக்கிறான். பிறகு அந்தச் சிறுவனின் சடலத்தை ஒரு சாக்குப் பையில் கட்டி ஒரு ஏரியில் வீசி எறிந்திருக்கிறான். இது ஒன்றும் முர்முவுக்கு முதல் கொலை அல்ல. அவன் ஏற்கெனவே தனது சகோதரனையே காளிக்குப் பலி கொடுப்பதற்குக் கொன்றிருப்பவன்.2004-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் "இது மனித குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றம்' என்று குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்ட சுசீல் முர்முவின் தூக்குத் தண்டனையை கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி, பிரதிபா பாட்டீல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்திருக்கிறார்.உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நரேந்திர யாதவ் 15 வயது சிறுமி ஒருத்தியைக் கற்பழிக்க முயற்சித்திருக்கிறான். அவள் தப்பி ஓடிவிட்டாள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாத நரேந்தரும் அவனது நண்பன் தர்மேந்திர சிங்கும், 1994-இல் அந்தக் குடும்பத்தையே கொன்று குவித்து விட்டனர். அந்த 15 வயது சிறுமியும் பெற்றோரும் தலை வேறு உடல் வேறாக வெட்டிச் சாய்க்கப்பட்டனர். அந்தச் சிறுமியின் 10 வயது சகோதரன் உயிருடன் எரிக்கப்பட்டான். கொலைகாரர்கள் இருவருக்கும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஜூன் 2010-இல் மன்னிப்பு வழங்கிப் புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறார்.
பிரதிபா பாட்டீலால் தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கும் பெருவாரியான பேர்கள் நமது ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரமான கொலைகளை ஈவு இரக்கமில்லாமல் செய்திருப்பவர்கள். இவர்களுக்குக் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கக் குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு என்பதற்காக, 28 மாதங்களில் 30 கொலையாளிகளின் தூக்குத் தண்டனையை ரத்து செய்திருக்க வேண்டுமா என்ன?ஒரு குற்றத்தின் பல்வேறு அம்சங்களையும், சாட்சிபூர்வமான ஆதாரங்களையும் அலசி ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவதுடன் நீதிமன்றத்தின் வேலை முடிந்து விடுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிபாரிசின் பேரில்தான் குடியரசுத் தலைவர் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்குகிறார் என்றாலும், மன்னிப்பு வழங்காமல் தவிர்க்கும் உரிமை நிச்சயமாகக் குடியரசுத் தலைவருக்கு இருக்கத்தானே செய்கிறது.அரசியல் சட்டத்தில் 72-வது சட்டப் பிரிவு, தூக்குத் தண்டனை உள்ளிட்ட எந்தவொரு தண்டனையையும் நிறுத்தி வைக்கவோ, குறைக்கவோ, ரத்து செய்யவோ, மன்னிப்பு வழங்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கி இருக்கிறது. அப்படியானால், குடியரசுத் தலைவரோ அவருக்கு வேண்டியவர்களோ, விலைபேசப்பட்டு அந்த அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் கேள்வி முறையே கிடையாதா?
             ஏன் கிடையாது? நிச்சயமாக உச்ச நீதிமன்றத்துக்கு அதற்கான அதிகாரம் உண்டு. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலால் மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் கருணை மனுக்கள் தொடர்பான எல்லா ஆவணங்களையும் உச்ச நீதிமன்றம் கோரி இருப்பதாகத் தெரிகிறது. குடியரசுத் தலைவரேயானாலும் மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்பட்டால், அதைக் கேள்வி கேட்கும் உரிமை உச்ச நீதிமன்றத்துக்கும், மக்கள் மன்றத்துக்கும் உண்டு என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.மிக அதிகமான கொலைகாரர்களுக்கும், சமூகவிரோதிகளுக்கும் தூக்குத் தண்டனையிலிருந்து கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி சாதனை புரிந்திருக்கும் பிரதிபா பாட்டீல், நிச்சயமாக நினைவுகூரப்படுவார். இதற்காகவாவது...
Source: Dinamani

பெரியார் தமிழர் பகைவரா?

மிழர்களுக்காகப் போராடுவதாகச் சொல்பவர்கள் சமீப காலமாக, பெரியாரைப் புறக்கணிப்பதும் எதிரியாகச் சித்திரிப்பதும் தொடர் கிறது. இந்தப்பட்டியலில் புதுவரவு, சீமான் நடத்தும் 'நாம்தமிழர் கட்சி’. கோவையில் கடந்த 18-ம் தேதி அந்தக் கட்சி வெளியிட்ட கொள்கை ஆவணத்தின் சில பகுதிகள் பெரியாருக்கு எதிரானவை. 'பெரியார் படத்தை இனி நாம் பயன்படுத்தக் கூடாது’ என்ற அளவுக்கு தீவிரம். இதற்கு, பெரியாருடன் நெருங்கிப் பழகியவரும் மார்க்ஸியப் பெரியாரிய பொதுஉடமைக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளருமான பெரியவர் வே.ஆனைமுத்துவின் பதில் என்ன?
''நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணத்தில் '1938-ல் சென்னை மாகாண முதல்வரான ராஜாஜி, பாடத் திட்டத்தில் இந்தியைப் புகுத்தினார். அதை எதிர்த்து நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள் ஆகியோரின் தலைமையில் தமிழ்நாடு தமிழருக்கே என்று தமிழர்கள் திரண்டனர். அந்நேரத்தில் அவர்களை ஆதரிப்பதுபோல வந்த பெரியார், தமிழர்களை அடிமைப்படுத்தும் திட்டத்தின்கீழ் திராவிட நாடு முழக் கத்தை முன்னெடுத்தார்..’ என்று கூறப்பட்​​டுள்ளது. அதுகுறித்த உங்களது விளக்கம் என்ன..?''
''வரலாற்றை ஒழுங்காகப் படிக்கா​தவர் கூற்று இது! இந்தியாவில் அன்று இருந்த ஒன்பது மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்தன. அதில் வங்காளம், பஞ்சாப், குஜராத், சென்னை போன்ற பெரும்பான்மையான மாகாணங்களில் இந்தி பேசுபவர்கள் இல்லை. அந்த மாகாணங்களில் ஆட்சி செய்பவர்கள் யாரும் இந்தியைப் புகுத்த நினைக்காத​போது ராஜாஜி மட்டும் சென்னை மாகாணத்தில் இந்தியைப் பாடத் திட்டத்தில் புகுத்தினார். தமிழ் அறிஞர்கள் அதை எதிர்த்தனர். அன்று இந்தியை எதிர்த்தவர்களைக் கருத்து ரீதியாக எதிர்த்தவர்கள், களப்பணி ஆற்றியவர்கள் என இரண்டாகப் பார்க்க வேண்டும். ஈழத்து சிவானந்த அடிகள்தான் ராஜாஜியின் அறிவிப்பை எதிர்த்து முதலில் அறிக்கை வெளியிட்டவர். திருச்சி தி.பொ. வேதாசலம், கி.ஆ.பெ. விசுவநாதம், சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள் என்று பலரும் இந்தியை எதிர்த்து எழுதினர். அவர்களைக்கொண்டு அப்போது திருச்சியில் நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர் பெரியார். அதாவது களப்பணி ஆற்றியவர் பெரியார்.
அதைத்தொடர்ந்து, இந்தி எதிர்ப்புப் போராட்டம் பெரியார் தலைமையில் தமிழ்நாட்டில் 20 மாதங்கள் நடந்தன. தினமும் இரண்டு பேர் சிறைக்குச் செல்வார்கள். அப்படியாக, 20 மாதங்களில் 1,230 பேர் சிறைக்குச் சென்றனர். பெரியாருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி, பெல்லாரி சிறைச்சாலையில் அடைத்தனர். அண்ணா உள்ளிட்ட பல தலைவர்கள் சிறை சென்றனர். சிறைக்கொடுமையில் இரண்டு தோழர்கள் இறந்துபோனார்கள். மக்கள் மனதில் அது பெரும்கொந்தளிப்பாக இருந்தது. இந்த நேரத்தில் ராஜாஜி, 'சோற்றுக்கு இல்லாதவர்களும் படிப்பறிவு இல்லாதவர்களும்தான் இந்தியை எதிர்த்துச் சிறைக்குப் போகிறார்கள்’ என்றார். அது, கொந்தளிப்பை மேலும் அதிகமாக்கியது. ஆறு மாதங்களில் சிறையில் இருந்து பெரியார் விடுதலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து திருச்சி முதல் சென்னை வரை  இந்தி எதிர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது. சென்னையில் பேரணியை நிறைவுசெய்து பேசிய பெரியார், 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கினார்.
அந்தச் சூழலில் நடந்த நீதிக்கட்சிக் கமிட்டிக் கூட்டத்தில் ஆந்திர, கன்னட, ஒரிஸா மற்றும் கேரளத் தலைவர்கள், தமிழ்நாடு தமிழருக்கே என்றால் நாங்கள் எல்லாம் யார் என்று பெரியாரிடம் கேட்டனர். அதன்பிறகே 'திராவிட நாடு திராவிடருக்கே’ என்று அறிக்கை வெளியிட்டார். 1940-ல் திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் தமிழில் ஒரு மணி நேரம் பேசிய பெரியார், தெலுங்கில் அரை மணி நேரம் பேச வேண்டியிருந்தது. அந்த மாநாட்டில் தெலுங்கர்கள் அந்த அளவுக்கு இடம் பெற்றிருந்ததே அதற்குக் காரணம். ஆக, அன்றைய சென்னை மாகாணம் தென்னிந்தியாவை உள்ளடக்கியதாக இருந்ததால், திராவிட நாட்டுக் கொள்கை இயல்பாக எழுந்த ஒன்றே. 40-களில் வெளிவந்த ஜி.டி. நாயுடுவின் 'இந்தி போர்முரசு’, ம.இளஞ்செழியனின் 'தமிழன் தொடுத்த போர்’ என்ற நூல்கள், பெரியாரின் இந்தி எதிர்ப்புப் போரை விரிவாக விளக்கும். எனவே, பெரியார்தான் 1938 போராட்டத்தில் களப்பணி ஆற்றியவர்!''
''தமிழை அறிவியல் அற்ற மொழி. அதை தமிழர் வாழ்வியலில் இருந்து தலை முழுகிவிடுவதே அறிவுடமை.. எனப் பெரியார் கூறியதையும் அந்தக் கொள்கை ஆவணத்தில் கண்டித்திருக்கிறார்கள். பெரியார் ஏன் அவ்வாறு கூறினார்?''
''தமிழில் அறிவியல் கலைச்சொற்கள் குறைவாக இருப்பதைத்தான் அவர் சொன்னார். 'சென்றுடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று பாரதி பாடினார். ஆனால், தமிழர்கள் அதைச் செய்யவில்லை. அது தமிழர்களின் குறைபாடே அன்றி, தமிழின் குறைபாடு அல்ல. மருத்துவ, பொறியியல், இயற்பியல், வேதியியல் நூல்கள் தமிழில் இன்னமும் வெளியாவது இல்லையே.. அறிவியல் அற்ற மொழி என்று, தமிழை அவர் சொன்னது அந்தப் பொருளில்தான்.
பன்னிருப் பாட்டியல் என்ற யாப்பெருங்கலக்காரிகை நூல் தமிழில் உண்டு. அதில், தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் எது பிராமண எழுத்து, எது சூத்திர எழுத்து, எது சத்திரிய எழுத்து என்றெல்லாம் உள்ளது. ஆங்கிலத்தில் அவன் என்பதற்கு லீமீ என்று ஒரு வார்த்தை உள்ளது. ஏழை, பணக்காரன்,பெரியவர், சிறியவர், கடவுள் எல்லாவற்றுக்கும் அதுதான். ஆனால் தமிழில் அவன், அவர், அவர்கள் என்று எழுது கிறோம், சொல்கிறோம். ஆக, எழுத்தில் வர்ணபேதம் உள்ளதை, புராணக் கட்டுக்கதைகள் மிகுந்திருப்பதைக் கண்டிப்பதற்காக தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று ஒரு கட்டத்தில் சொன்னார். தமிழ் மொழியின் பெருமையையும் பல சமயங்களில் பேசியிருக்கிறார். தமிழ் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று பேசினார். நெடிய வாழ்க்கை வாழ்ந்து வெவ்வேறு போராட்டங்களைக் கண்டவர் பெரியார். வெவ்வேறு பிரச்னைகளின்போது அவர் கூறியதில் சில வார்த்தைகளை மட்டும் தனியாகப் பார்த்தால், பெரிய முரண்பாடு இருப்பதுபோலத் தெரியும். நாம் அவர் சொன்ன சூழலையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது அவசியம்.''
''ஈழத் தந்தை செல்வா, பெரியாரிடம் ஆதரவு கேட்டபோது, நானே அடிமை, இன்னொரு அடிமைக்கு உதவுவது எப்படி? எனவும் சிங்களர் களுக்குப் பணிந்து செல்லுமாறு கூறியதாகவும் நாம் தமிழர் அமைப்பு கண்டித்திருக்கிறதே..''
''22.2.72 அன்று செல்வா சென்னைக்கு வந்து பெரியாரைச் சந்தித்துப் பேசினார். 'ஒரு அடிமை இன்னொரு அடிமைக்காகப் போராட முடியாது. நீங்கள் அங்கு சென்று போராடுங்கள்’ என்றுதான் பெரியார் சொன்னார்... பணிந்து போய்விடுங்கள் என்று சொல்லவில்லை!''
- ஜூனியர் விகடனில் இருந்து

காவிரி... 10 உண்மைகள்!

காவிரி... 10 உண்மைகள்!

மேட்டூர் அணையின் வரலாற் றில், 53-வது ஆண்டாக ஜூன் 12-ம் தேதி அணை திறப்பது தள்ளிப்போய் இருக்கிறது. இந்த ஆண்டும் குறுவைச் சாகுபடி இல்லை. குறுவைச் சாகுபடி இல்லாமல்போனால் என்னவாகும்? காவிரிப் படுகை காய்ந்துபோனால் என்ன இழப்பு? சில
உண்மைகள்...
உண்மை 1: தமிழகத்தின் நெல் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியைத் தரவல்லது காவிரிப் படுகை. குறுவை, சம்பா, தாளடி என்று மூன்று பருவச் சாகுபடி. இதில் குறுவை 4 லட்சம் ஏக்கர்; சம்பா 8 லட்சம் ஏக்கர்; தாளடி 4 லட்சம் ஏக்கர் சாகுபடியாகும். இந்த மூன்று பருவங்களில் குறுவைப் பருவம்தான் நல்ல விளைச்சல் தரும். தவிர, குறுவைச் சாகுபடி இல்லாமல் போனால், 17.36 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வீட்டில் முடங் கிப்போவார்கள்.
உண்மை 2: காவிரி கர்நாடகத்தில் உற்பத்தியாகிறது. ஆனால், அதைவைத்து 2,000 ஆண்டுகளுக்கு மேலாக நெல் சாகுபடி செய்துவருவது தமிழக விவசாயிகள்தான். நதி நீர் உரிமையைப் பொறுத்த அளவில், அது உற்பத்தியாகும் இடத்தைவைத்துத் தீர்மானிக்கப்படுவது இல்லை. பாரம்பரிய மாக அதைப் பயன்படுத்தி வருவோருக்கே முதல் உரிமை. இது சர்வதேச அளவிலான நடைமுறை.
உண்மை 3: தமிழகத்தில் கரிகாலன் கட்டிய கல்லணை, அதற்குப் பின் ஆங்கி லேயர் காலத்தில் கட்டப்பட்ட மேலணை, கீழணை நீங்கலாக, காவிரியில் 1924 வரை அணைகள் எதுவும் கிடையாது. இங்கு மேட்டூர் அணையைக் கட்டும்போது, இன்றைய கர்நாடகத்தின் முதல் அணையான கிருஷ்ணராஜசாகர் அணையைக் கட்டிக்கொள்ள மைசூர் மன்னருக்கு ஆங்கிலேய அரசு அனுமதி அளித்தது. கர்நாடகம் நெல் சாகுபடியை ஆரம்பித்ததும் காவிரி அரசியலை ஆரம்பித்ததும் இதற்குப் பிறகுதான். கிருஷ்ணராஜசாகர் அணை நீங்கலாக கர்நாடகம் காவிரியில் கட்டிய அனைத்து அணைகளும் சட்டத்துக்குப் புறம்பானவை. அதாவது, மத்திய அரசின் அனுமதி பெறாதவை. ஒரு மாநில அரசு இப்படி முறைகேடாக நடந்துகொண்டால், அந்த அரசைக் கலைக்க மத்திய அரசுக்கு உரிமை உண்டு. கர்நாடகத்தின் இந்த முறைகேடு அரசியலை முதலில் தொடக்கிவைத்தது காங்கிரஸ் அரசு.
உண்மை 4: 1901-ல் அன்றைய மைசூர் மாகாணத்தின் சாகுபடிப் பரப்பு - 1.11 லட்சம் ஏக்கர். 1970-ல் கர்நாடகத்தின் சாகுபடிப் பரப்பு - 6.83 லட்சம் ஏக்கர். 1991-ல் நடுவர் மன்றத்தில் தன்னுடைய சாகுபடிப் பரப்பு 11.2 லட்சம் ஏக்கர் என்று சொன்னது கர்நாடக அரசு. இதற்கு மேல் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கக் கூடாது; தண்ணீர்ப் பற்றாக்குறை மேலும் தீவிரமாகும் என்று கர்நாடகத்துக்குக் கட்டுப்பாடு விதித்தது நடுவர் மன்றம். ஆனால், இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்துக்கு அதே நடுவர் மன்றம் 18.85 லட்சம் ஏக்கருக்குத் தண்ணீர் ஒதுக்கியது. இப்போது தன்னுடைய பாசனப் பரப்பை 23.85 லட்சம் ஏக்கராக விரிவாக்கியுள்ளது கர்நாடகம். மேட்டூர் அணை பயன்பாட்டுக்கு வந்த 1934-ல் தொடங்கி 1970 வரை ஆண்டு தோறும் அணைக்கு வந்த சராசரி நீரின் அளவு 378 டி.எம்.சி. காவிரி நடுவர் மன்ற இடைக் காலத் தீர்ப்பு இதை 205 டி.எம்.சி. ஆக்கியது; இறுதித் தீர்ப்பு 192 டி.எம்.சி. ஆக்கியது. 
உண்மை 5: காவிரிப் பிரச்னையில் கர்நாடக அரசியல் கட்சிகள் எல்லாக் காலங்களிலும் சேர்ந்தே செயல்படுகின்றன. மாநில நலனே அங்கு பிரதானம். தமிழகத்திலோ நேர் எதிர்நிலை. காவிரிப் பிரச்னையில் ராஜதந்திரரீதியாக ஒரு வரலாற்றுத் தவறைத் தமிழகம் செய்தது. காவிரிப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தபோது, 1971-ல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்திரா காந்தியுடன் கூட்டணி சேர்ந்த பிறகு, அவருடைய சமரசத்தை ஏற்று பேச்சுவார்த்தைக்காக அந்த வழக்கைத் திரும்பப் பெற்றார் கருணா நிதி. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா மூவருமே காவிரியை அரசியல்ரீதியாகவே அணுகினார்கள்.
உண்மை 6: இதற்கிடையே 1983-ல் காவிரி விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் இழுத்தடித்து, 21 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தபோது, மீண்டும் உச்ச நீதிமன்றப் படியேறி தன்னையும் அந்த வழக்கில் இணைத்துக்கொண்டது தமிழகம். உச்ச நீதிமன்ற ஆணைப்படி, 1990-ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 17 ஆண்டுகள், 568 அமர்வுகளுக்குப் பின் இறுதித் தீர்ப்பை வழங்கியது நடுவர் மன்றம். காவிரியின் ஒட்டுமொத்த நீரோட்டத்தை 740 டி.எம்.சி. எனக் கணக் கிட்டு அதில், தமிழகம் 562 டி.எம்.சி., கர்நாடகம் 465 டி.எம்.சி., கேரளம் 92.9 டி.எம்.சி., புதுவை 9.24 டி.எம்.சி. கேட்டன. இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு, 419 டி.எம்.சி., கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி., கேரளத்துக்கு 30 டி.எம்.சி., புதுவைக்கு 7 டி.எம்.சி., சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 10 டி.எம்.சி., கடலில் கலக்கும் அளவு 4 டி.எம்.சி. என ஒதுக்கீடு செய்தது நடுவர் மன்றம். தமிழகத்துக்கு இது சேதம் தரும் தீர்ப்பு. எனினும், இரு தரப்பு விவசாயிகளின் நலன்களையும் ஒப்பிட்டு, அரை மனதோடு ஏற்க வேண்டிய நிலை. ஆனால், இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குப் போனது கர்நாடகம். வேறு வழி இல்லாமல் தமிழகமும் உச்ச நீதிமன்றத்துக்குப் போனது. இந்த முறையீடுகள் ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் முடங்கிக்கிடக்கின்றன. 
உண்மை 7: காவிரிப் படுகையில் ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், குட்டைகள் இருந்தன. ஊருக்கு ஊர் கோட்டகம் எனப்படும் நீர்ப்பிடிப்புப் பகுதி இருந்தது. குடிமராமத்து முறை வழக்கொழிந்த பின், படிப்படியாக இவற்றில் பெரும்பாலானவை ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்தன. அரசு ஆழ் குழாய் விவசாயத்தை ஆதரித்தது. இதனால், நாலைந்து அடிக்குள் பிள்ளைக்கேணி தோண்டி விவசாயம் செய்த இடங்களில், இன்றைக்கு நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழே போய்விட்டது. இந்த நீர்நிலைகளை மீட்டுருவாக்குவதுடன் காவிரி நீர்ப் பாதையைப் புனரமைத்துக் கட்டுக்கோப்பாக்கி, மழைக் காலங்களில் உபரியாகக் கிடைக்கும் நீரைத் தேக்கிவைக்க கதவ ணைகள் கட்டினால், சுமார் 50 டி.எம்.சி. வரை நீராதாரத்தை உருவாக்க முடியும். 1980-களில் இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்த 1,000 கோடி ஆகலாம் என்று சொன்னது உலக வங்கி. இன்றைக்கு 10,000 கோடி ஆகலாம். ஆனால், தமிழக அரசு அதை இன்றுவரை பொருட்படுத்தவே இல்லை.
உண்மை 8: காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான ஆணையத்தின் வழிமுறைகள், நீதிமன்ற உத்தரவுகள், நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு... இப்படி எதையும் கர்நாடகம் இதுவரை மதித்தது இல்லை. தமிழகத் துக்குத் தண்ணீர் தர முடியாது என்று கூறாத கர்நாடக முதல்வர்களே வரலாற் றில் இல்லை. மத்தியில் ஆண்ட காங்கிரஸ், பாரதிய ஜனதா, ஜனதா தளம் ஆகிய தேசியக் கட்சிகளே கர்நாடகத்தையும் ஆண்டன; ஆள்கின்றன.
உண்மை 9: உலகில் எத்தனையோ நாடுகள் நதி நீரை நியாயமான முறையில் பகிர்ந்துகொள்கின்றன. தண்ணீருக்கு அலையும் சூழலில் உள்ள பரம்பரை வைரிகளான இஸ்ரேலும் பாலஸ்தீனமும்கூட நியாயமான முறையில் தண்ணீரைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்திய அரசால் பாகிஸ்தானுடன் சுமுகமான முறையில் தண்ணீரைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால், உள்நாட்டுக்குள் பகிர்ந்தளிக்க முடியவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் காவிரிப் படுகை மாவட்ட விவசாயிகள் பல முறை வறட்சியிலும் பஞ்சத்திலும் அடிபட்டனர். நாட்டுக்கே உணவு கொடுத்தவர்கள் கஞ்சித் தொட்டியில் கஞ்சி வாங்கிக் குடிக்கும் நிலைக்கும் வயல்களில் எலிகளைப் பிடித்துத் தின்னும் நிலைக்கும்கூடத் தள்ளப்பட்டனர். ஆனால், மத்திய அரசு துளியும் அலட்டிக்கொள்ள வில்லை. இயற்கைக்கு முரணான நதி நீர் இணைப்புபற்றி நம்முடைய ஆட்சியாளர் கள் நிறையப் பேசுகின்றனர். ஆனால், நதிகளை தேசிய உடைமையாக்கி - அதாவது, நதி நீர்ப் பங்கீடு உள்ளிட்ட சகல உரிமைகளையும் மத்திய அரசே நிர்வகிக்க - எவரும் குரல் கொடுக்கவில்லை.
உண்மை 10: காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு... துரோகங்கள் தொடர்கின்றன. நாம் வேடிக்கை பார்க்கிறோம்.
ஆனந்த விகடனிலிருந்து...

அயோத்தியின் வரலாறு


யோத்தி இந்து, முஸ்லீம் ஆகிய இரு பிரிவு மக்களுக்கும் புனிதத் தலமாக விளங்குகிறது. இந்து மக்கள் ராமர் பிறந்த பூமியாக  கருதுகின்றனர்.  முஸ்லீம்களுக்கு  அயோத்தியில் சராயு ஆற்றின் கரையில் ஷியா, "ஆதாமின் பேரன்' புதைக்கப்பட்ட இடு காடாகும். அயோத்தி ராமர் இந்து காலண்டு படி  தீர்த்த யுகத்தில்  9,00,000 வருடங்களுக்கு முன் பிறந்ததாக  நம்பப்படுகிறது. புராதன வரலாறுப்படி அயோத்தி கோசல ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது. மேலும் கி.மு. ஆறாவது மற்றும்  ஐந்தாவது நூற்றாண்டுகளில் எழுச்சி யுற்ற புத்த மதத்தினால் அதன் தலை நகரத்துடன் இணைந்ததாகவும், அங்கே புத்தர் சில காலம்  தங்கியதாகவும் கூறப்படுகிறது. அன்றைய சாக்தான் என்றழைக்கப்பட்ட பகுதிதான் இன்றைய அயோத்தி என அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் அயோத்தி  விக்கிரமாதித்தனால் புனரமைக்கப் பட்டதாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் புத்த மதம் பிராமண ஆதிக்கத்தால் மறைய  தொடங்கியது. பேராசிரியர் ரொமிலா தாபர்,  ""இரண்டாம் சந்திரகுப்தர் தான் விக்கிரமாதித்தன் என்ற பட்டப்பெயரை கொண்டவர்'' என கூறுகிறார். பேராசிரியர் ஷேர் சிங், ""ஸ்கந்தகுப்தா தனது தலைநகரை சாக்தா (அயோத்தி)  மாற்றியதற்கான ஆதாரமில்லை'' என்று கூறுகிறார்.   

அயோத்தி இந்துக்களின் ஏழு புனித தலங் களில் ஓன்றாக விளங்குவதற்கான காரணம் அது ராமர்  பிறந்த இடமாக சொல்லப்பட்டது. அயோத்தியாவில் உள்ள 6,000 இந்து கோயில் களில் 4,000 கோயில்கள் ராமர் தொடர்புடைய தாகும். இதனால் இந்து  அமைப்புகள் அயோத்தி இந்துக்களின் தலைநகரம் என்றும், ராமர் தேசிய கடவுள் என்றும் கூறி வருகின்றனர். அயோத்தி இல்லை என்றால் நாடே இல்லை என்றும், எப்படி கிறிஸ்துவர்களுக்கு வாடிகன் புனித பூமியோ அதுபோல இந்துக்களுக்கு அயோத்தி புனித பூமி  என்பது அவர்கள் வாதம்.அடுத்த பிரச்சினையானது அயோத்தியின் இருப்பிடம் பற்றியது. அயோத்தி  பைசாபாத் மாவட்டத்தில் சராயு நதிக்கரைக்கு வலது புறத்தில் தொல்லிலியல் அறிஞர்கள் நடத்திய ஆராய்ச்சியில், அயோத்தியில்   மனித வாழ்க்கை யானது வடக்கு பள்ளப்பான கருப்பு மண் பானை நாகரிகத்தை   (Northern Black Polished ware-NBPW) தாண்டி போகவில்லை என காட்டியது. இது கி.மு 700-ஆம் ஆண்டை சேர்ந்ததாகும். இராமாயணம் உண்மையாகவே நடந்திருந்தால் அதற்கான வரலாற்றுஆதாரங்கள் கிடைத்திருக்கும்.(பி.பி.லால்-ராமாயணா இடங்களின் அகழ்வாராய்ச்சி அறிக்கை-1992)  அதேபோல வால்மீகியின் ராமாயணமும் சில நூல்களையும் பேராசிரியர் ஷேர்சிங் ஒப்பிட்டு கூறுகையில், ""வால்மீகியின் கூற்றுப்படி  அயோத்தியா சரி என்றால், அது நேபாளத்தில் பாயும் சராயு ஆற்றின் தெற்கே 22 கிலோமீட்டர் உள்ள இடமாகும். ( பி.எஸ். ஸ்ரீதர மூர்த்தியின் நூல்- ராமா, இராமாயணா மற்றும் பாபர். 1988- ஆம் ஆண்டு வெளியீடு)

முஸ்லீம் வெற்றிக்கு பின்னர் அயோத்தி பிரச்சினை முக்கியக் கட்டத்திற்கு வந்தது. மன்னர் பாபரின் தளபதியான மீர்பாக்ஷி 1528-ம் ஆண்டில் அயோத்தியில் இராமர் கோயிலை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு,  அந்த இடத்தில் பாபர் மசூதியை கட்டினார் என கூறப்படுகிறது. இப்போது இதுதான் பிரச்சினை. அயோத்தியில் 1975-ம் ஆண்டு முதல் ஆய்வு செய்த  தொல்பொருள் நிபுணர் பி.பி. லால் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு இதை மறுத்துள்ளது. மேலும் அங்கு கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்க வில்லை என்று தெரிவித்தது. ராஷ்டீரிய சேவா சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பு நடத்தும் மானதன்  (Manthan)  பத்திரிக்கையில் 1990 -ஆம் ஆண்டு அக்டோபர் மாத இதழில் இராமர் கோயிலின் தூண்கள் தென்பட்டதாக செய்தி வெளியிட்டது.

18-ஆம் நூற்றாண்டில் நவாப்கள், அவாத், ஷீஜா-உத்-தௌலத் மற்றும் ஆசப்-உத்-தௌலத் ஆதரவினால் அயோத்தி மீண்டும் இந்துக்களின் புனிததலமாக விளங்கியது. பின்னர் இந்து பக்தி இயக்கம் அவந்தி நோக்கி திரும்பியதனால் ஆங்கிலேய அரசு அயோத்தியை தங்களுக் காக எடுத்துக்கொண்டது. இந்த சமயத்தில் நிர்மோஸ் என்ற இந்து துறவி இது இராமர் பிறந்த இடமென பாபர் மசூதி உள்ள இடத்தை உரிமைக்கோரினார். மேலும் ராமர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பாபர் மசூதி கட்டப் பட்டுள்ளதாகவும் கூறினார். அப்போதுதான் அயோத்தி பிரச்சினை உருவானது. இது 1853-55-இல் மிகப்பெரிய கலவரம் வெடிக்க காரணமாக அமைந்தது. (வரலாற்று அறிஞர் சுசில் ஸ்ரீவத்சவா, மசூதிப் பிரச்சினை: ஒரு வரலாற்று விசாரணை என்ற நூல்.). 1883-ம் ஆண்டு மே மாதம் பைசாபாத் கமிஷனர் இந்துக்கள் சாபூத்ரா (நடைபாதை) வலது பக்கத்தில் கோயில் அமைக்க முயன்றபோது முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதற்கு அனுமதி மறுத்தார். 1885-ல் மசுந்ந் ரகுபார் தாஸ் பைசாபாத் சப்கோர்ட்டில் கோயில் கட்ட அனுமதி கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கோயில் கட்ட 1886 -இல் அனுமதித்ததுடன், அதற்கு எதிரான மனுக்களையும் தள்ளுபடி செய்தார். இதனால் பதட்டம் நிலவியது. முஸ்லீம் போராட்டக் காரர்கள் பாபர் மசூதி முன் கூடினார்கள். இந்துக்களும் அருகிலுள்ள அனுமர் சிலை முன்பு கூடினார்கள். இரு தரப்புக்கும் இடையே மூண்ட கலவரத்தில் 75 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். இந்துக்கள் பாபர் மசூதியை கைப்பற்றினார்கள்.

19-ம் நூற்றாண்டில்தான் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியதாக பரப்பப்பட்ட செய்தி ஆவணங்களில் பதிவானது. 1822-ல் பைசாபாத் நீதிமன்ற அலுவலர் ஹபிஜுல்லா என்பவர்  பாபரால் கட்டப்பட்ட மசூதி ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது என்று கூறினார். அதன்பின்பு இந்த கதையானது, பி.கார்னேகி என்பவரால் பைசாபாத் வரலாற்று ஆவணத்தை 1870- இல் தயாரித்து அலுவலக ஆவணமாக மாற்றப்பட்டது. இது குறித்து பைசாபாத் மாவட்ட ஆவணத்தில் பாபரின் நினைவுகள் என்ற நூலை இதற்காக மொழி பெயர்த்திருப்பது பதிவாகியுள்ளது. ஆங்கிலேய அரசு தனது கோப்பில் "ஜன்மஸ்தன் மசூதி அஜிதியா' என்று எழுதி அதை பதற்றம்  நிறைந்த கோயிலிலின் முன்பாக வைத்தது. 1920-30-ஆம் ஆண்டுகளில் மசூதி முஸ்லீம்களிடம் இருந்த போது அவர்கள் அதை தூக்கி எறிந்தனர். இதனை பைசாபாத் கமிஷனர் 1938- ஆம் ஆண்டு செப்டம்பர் 16- ம் நாள்  கண்டித்தார்.

1949-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி இரவு மசூதியின் உள்ளே சிலைகள் வைக்கப்பட்டன. இதனால் அப்போதைய நிர்வாகம்  இருதரப்பி னருக்கும் கலவரம் ஏற்படாமலிலிருக்க மசூதியை மூடியது. அதையடுத்து முதன் முதலாக இப் பிரச்சினைக்காக  முதல் விசாரணை அறிக்கை பதிவு செய்யப்பட்டது.  அதில் அபதி ராம்தாஸ், சுதர்சன் தாஸ், ராம் சுக்லா தாஸ் ஆகிய மூவர் மீதும் முதல் தகவல் அறிக்கை அயோத்தி காவல் நிலையத்தில் பதிவுவானது. இவர் களுடன் மேலும்  50-லிருந்து 60 பேர் வரை கையில் சிலைகளுடன் மசூதியில் நுழைய முயன்றதை அப்போது பணியில் இருந்த அதிகாரிகளும்,  பொதுமக்களும் பார்த்தனர். இதன் அடிப்படையில் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதற்கு சிறிது காலத்திற்கு பிறகு 5,000- 6,000 மக்கள் கீர்த்தனைகள் மற்றும் கோஷங்கள் எழுப்பியவாறு மசூதிக்குள் நுழைய முயன்றனர். ஆனால்  அவர்கள் தடுத்து  நிறுத்தப்பட்டனர். 1950-ஜனவரி 16-ம் தேதி கோபால் சிங் விஷார்ட் என்பவர் கோயிலில் வழிபட அனுமதி வேண்டி பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.  நீதிபதி சிலைகளை அப்புறப் படுத்த உத்தரவிட்டு வழிபாட்டுக்கு அனுமதி மறுத்தார். இதை எதிர்த்து 1950-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி  உத்திரபிரதேச அரசு நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது குறித்து வரலாற்று அறிஞர் சுசில் ஸ்ரீவத்சவா கூறும்போது ""1951-1986  வரை பைசாபாத்தில் நிலைமை அமைதியாகவே இருந்தது. 1936-1950 வரை பதட்டமான சூழ்நிலை நிலவியது. 1951- 1986 வரை எந்த  ஒரு கலவரமும் இல்லாமல் அமைதி காணப்பட்டது. அனைத்திந்திய இந்து மகாசபா மற்றும் பாரதீய ஜனசங்கம் அயோத்தி, மதுரா மற்றும் காசிக்கு ரதயாத்திரை நடத்தியது. 1983-ம் ஆண்டு முழுவதும் விஷ்வ இந்து பரிஷத் பல முக்கிய தலைவர்களுடன் ரதயாத்திரை நடத்தி பல நதிகளின் புனிதநீரை சேகரித்தது  பிரச்சினையை அதிகரிக்க தொடங்கியது''.

1984-ம் ஆண்டு அக்டோபர் வி.ஹெச்.பி          தனது ஸ்ரீ ராம ஜென்ம பூமி முக்தி யாஜ்னா சமிதி மூலம் இதனை தேசிய அளவில் பிரச்சினை ஆக்க முயன்றது. இந்த சமிதி 1984-ஆம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி உருவாக்கப் பட்டது. 1984-ம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி  அயோத்தியிலிலிருந்து மாநில தலைநகர் லக்னோவிற்கு 130 கிலோமீட்டர் பாதயாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரை அக்டோபர் 14-ஆம்  தேதி லக்னோ வந்தடைந்தது. அங்கு நடைப்பெற்ற பொதுகூட்டத்தில் முதலமைச் சரிடம் இந்துக்களின் கோரிக்கைகள் நிறைவேறப்பட  வேண்டும் என வலிலியுறுத்தப் பட்டது. அதற்கு அடுத்த நாளே ஸ்ரீ ராம ரத யாத்திரை உத்திர பிரதேசத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும்  நடத்தப்பட்டது. இந்த ரதயாத்திரை அக்டோபர் 31-ஆம் தேதி டெல்லி வந்தடைந்தது.  அங்கு நவம்பர் 2-இல் நடை பெறும் இந்துக்கள்  மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இவர்கள் வந்திருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதால்  இந்நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது.

1985-இல்  பைசாபாத் மாவட்ட நீதிபதி மசூதியின் பூட்டை  திறக்க உத்தரவிட்டு சாமியார்கள் உள்ளே செல்ல அனுமதித்தார். இந்த உத்தரவின் காரணமாக 1986-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி மசூதியின் பூட்டு திறக்கப் பட்டது. அப்போதைய ராஜீவ் காந்தி அரசு தேர்தலிலில் மக்களின் வாக்குகளை பெற இவ்வாறாக நடந்துக் கொண்டது. இதனால் நாடு முழுவதும் முஸ்லீம் மக்களிடையே ஒருவித பதட்டம் எழுந்தது., வி.ஹெச்.பி தொண்டர்கள் பேரணிகளை நடத்தினார்கள். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த  ராஜேந்திரகுமாரி பாஜ்பாய் ""முஸ்லீம்கள் நீதி மன்ற ஆணையை மதித்து அமைதிகாக்க வேண்டும்'' என்றார்.

சங்க் பரிவார் அமைப்பின் இயக்கம் நாடு முழுவதும் தேசிய சிந்தனை மாநாடுகளை நடத்தியது. பெரும் இக்கட்டான சூழ்நிலை 1989 தேர்தல்களின் போது ஏற்பட்டது. அப் போது மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்ட நாடு முழுவதிலிலிருந்து செங்கற்கள் கொண்டு  வரப்பட்டன. இதை பற்றி என். ராம் கூறுகையில் ""1989 பொது தேர்தலுக்கு முன்பாக ராஜீவ் காந்தி அரசு வி.ஹெச்.பி அமைப்பினை அடிக்கல் நாட்ட அனுமதித்தது. இது வி.ஹெச்.பி பிஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களை உற்சாகப்படுத்தியது'' என்றார். 1989-ஆம் ஆண்டு நவம்பர் 22-24 பொது தேர்தல்கள் மோசமான வன்முறை களமாக இந்திய வரலாற்றில் அமைந்தது. இதில் 800 பேர் உயிரிழந்தனர். பாரதீய ஜனதா  கட்சியின் ஆதரவோடு 88 தொகுதிகளை கைப்பற்றி வி.பி.சிங் பிரதமரானார். அவர் பதவி ஏற்றவுடன் இந்த மோதல் குறித்து விவாதிக்க அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு குழுவை ஜனவரி 8, 1990-ஆம் ஆண்டு அமைத்தார். நீதி மன்றம் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்தது.

1990-ஆம் ஜனவரி 12-இல் சுப்ரீம் கோர்ட்டு இந்து அமைப்பை சேர்ந்தவர்களிடம் விளக்கம் அளிக்குமாறு கோரியது. அப்போது "அனைத் திந்திய  பாபர் மஸ்ஜித் நடவடிக்கை குழு' சம்பவம் குறித்து விசாரிக்க தென் மாநிலங்களை சேர்ந்த நீதிபதிகளை நியமிக்கலாம் என்றும், ஆனால்  அவர்கள் இந்துவாகவோ, முஸ்லீ மாகவோ இருக்ககூடாது என்று கூறியது. பிறகு முஸ்லீம் தலைவர்கள் வி.பி. சிங்கை சந்தித்து இது இடத்திற்கான பிரச்சினை அல்ல, வரலாற்று பிரச்சினை என்றும் இதில் கோர்ட்டு முடிவு செய்ய தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும்  கூறினர். 1990-ஆம் ஆண்டு ஜனவரி 27-28-இல் தர்மாச்சாரியா சாமிகள் தலைமையில் இந்து அமைப்புகள் அலகாபாத்தில் கூடி, அதில்  பிப்ரவரி 14-ஆம் தேதி கோயில் கட்டலாம் என்று முடிவு செய்தன. வி.பி. சிங் மிகுந்த சிரமங்களுக்கு இடையே காஷ்மீர் மற்றும் பஞ்சாப் நிலையை எடுத்து கூறி கட்டுமான பணியை தள்ளி வைத்தார். அதற்கு பிறகு அரசாங்கத்திடம் இருந்து எந்த ஆதரவான பதிலும்  வராததால் ஹரித்துவாரில் கூடிய வி.ஹெச்.பி கட்டுமான பணியை அக்டோபர் 30-இல் தொடங்குவது என்று முடிவு செய்தது.

வி.பி.சிங் பாராளுமன்றத்தில் மண்டல் கமிஷன் மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு மேல் ஜாதி இந்துக்கள், பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சமயத்தில் எல்.கே. அத்வானி அயோத்தியில் கோயில் கட்ட அனுமதிக்க கோரியும் இந்துத்துவாவிடம் அதை  ஒப்படைக்க கோரியும் 10,000 கி.மீட்டர் ரதயாத்திரையை தொடங்கினார். அத்வானியும் அவருடன் யாத்திரை மேற்கொண்டவர்களும்  அக்டோபர் 23-ஆம் தேதி பீகாரில் கைது செய்யப்பட்டனர். இதனால் பாரதீய ஜனதா கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் வி.பி.சிங் அரசு நவம்பர் 9-ஆம் தேதி பதவி விலகியது.

நவம்பர் 1990 முதல் மார்ச் 1991 வரை பிரதம ராக இருந்த சந்திரசேகர் வி.ஹெச்.பியையும் முஸ்லீம் அமைப்பையும் பேச்சுவார்த்தையில்  ஈடுபட செய்தார். இந்த இரு அமைப்புகளும் முதல்முறையாக டிசம்பர் 1, 1990-ஆம் தேதி சந்தித்தன. இந்த இரு அமைப்புகளும் தங்களிடம்  இருந்து ஆதாரங்களை டிசம்பர் 23-ஆம் தேதி  அரசாங்கத்திடம் அளித்தன.  பின்பு மீண்டும் ஜனவரி 10, 1991-இல் மீண்டும் சந்தித்தன. அப்போது அவை இரு அமைப்புகளில் இருந்து நான்கு குழுக்களை அமைக்க ஒப்புதல் அளித்தன. இதன் மூலம் வரலாற்று ஆய்வு நடத்தி  அறிக்கை அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. பின்னர் பிரதமரான நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் இந்து அமைப்புகள் மசூதியை இடிப்போம் என்று  அறிவித்தன. இருந்தபோதிலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயங்கினார் நரசிம்மராவ்.

1992, டிசம்பர் 6 பி.வி. நரசிம்மராவ் அயோத்தி பற்றி பாராளுமன்றத்தில் பேச இயலாமல் போன நேரத்தில் 70,000 சேவா தொண்டர்கள் ராம சதா காஞ்ச்  பகுதியில் பொதுக் கூட்டத்திற்காக கூடினார்கள். மேலும் 500 சாதுக்களும், சாமியார்களும் அடிக்கல் நாட்டு பூஜைக்கு தயாரானார்கள். காலை  11.50 மணிக்குள் ஏறத்தாழ 1500 கர சேவர்கள் தடுப்பை தகர்த்து உள்ளே நுழைந்து போலீசார் மீது கற்களை வீசினார்கள். 1,000 கரசேவா தொண்டர்கள் பாபர் மசூதி உள்ளே நுழைந்த னர். சிலர் மசூதியின் மேலேறி கோபுரங்களை உடைத்தனர். 12.20 மணியளவில்  ஏறத்தாழ 25,000 கரசேவர்கள் வளாகத்தினுள் கூடினர். 2.40 மணியளவில் 75,000 பேர் மசூதியை சூழ்ந்து கொண்டு இடித்தனர்.  இப்போது  பிரதமர் பி.வி. நரசிம்மராவ் தனது இல்லத்தில் தூங்கிக் கொண்டிருந்தார் என பின்னர் தெரிய வந்தது. அத்வானி, முரளி  மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அசோக் சிங்கால், விஷ்ணு ஹரி டால்மியா  (வி.ஹெ.ச்.பி) பஜ்ரங்தலை சேர்ந்த வினய் கதியார் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

டிசம்பர் 8-ஆம் தேதி அன்று அத்வானி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இது நாட்டுக் காக இந்து மக்களுக்காக நடத்தப்பட்ட யுத்தம்  என்றும், இதில் அரசாங்கம் தலையிட்டு தொண்டர்களை கைது செய்தது அடக்குமுறையே என்றும், இது அமைப்பை பலப்படுத்துமே  அன்றி அதை அழிக்க இயலாது என்றும் குறிப்பிட்ட அவர், பாபர் மசூதி இடிப்பு  அயோத்தி இயக்கத்தின் ஒரு பகுதியே என்று ஆவேசமாக  குறிப்பிட்டார்.

உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகே பிரச்சினைக்குரிய இடத்தில் அமைதி திரும்பும்

திராவிடக் கட்சிகளால்தான் வீழ்ந்தோம்???

  ""திராவிடக் கட்சிகளால்தான் வீழ்ந்தோம். எனவே இனி திராவிடக் கட்சிகளோடு எப்போதும் கூட்டணியே இல்லை''’என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மேடைதோறும் பேசிக் கொண் டிருக்கிறார். அதேபோல் நாம் தமிழர் இயக்க சீமானும் தனது கட்சிக்கான கொள்கை ஆவணத்தில் பல இடங்களில் திராவிட இயக் கத்தை குற்றம் சுமத்தி இருக்கிறார். இது திராவிடர் கழகத்தினரை ரொம்பவே கொதிப்படைய வைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ’தந்தை பெரியாரும் திராவிட இயக்கங்களும் தமிழகத் திற்கு செய்தவைகளை பட்டிமன்றங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு செல்லுங்கள்’ என திரா விடர் கழகத் தலைவர் வீரமணி,  இயக்கத்தின ருக்கு வேண்டுகோள் விடுக்க... திருச்சி திராவிடர் கழகத்தினர் முதல் பட்டிமன்றத்தை பரபரப்பாக நடத்தினர்.

முனைவர் துரை.சந்திரசேகர் :  நடுவர் அவர்களே, நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. சென்னையில் ஒருகாலத்தில் ரொம்பவும் புகழ்பெற்ற சினிமா கொட்டகையான ஒத்தவாடை கொட்டகையில், அபிதான சுந்தரின்னு ஒரு நாடகம் நடந்தது.  அதற்கான விளம்பர நோட்டீஸில், சூத்திரர்களுக்கும் தொழுநோயாளிகளுக்கும் அனுமதியில்லைன்னு பிரசுரம் பண்ணியிருந் தானுங்க. இதைப்பார்த்து தந்தை பெரியார், யாரையடா இழிவுபடுத்தறீங்கன்னு கொதிச்சுப் போய்ட்டார். மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி, எல்லோரும் நாடகம் பார்க்கலாம்ங்கிற நிலைமையை ஏற்படுத்தினார். தந்தை பெரியார் அப்படி போராடலைன்னா, இன்னைக்கும் சீமான் மாதிரியான ஆளுங்க தியேட்டருக்குப் போய் சினிமா கூட பார்த்திருக்க முடியாது. சுதந்திரத்துக்கு முன்னாடி நீடாமங்கலத்தில் காங்கிரஸ் மாநாட்டில் உயர் ஜாதிக்காரர்களோடு சாப்பிட உட்கார்ந்ததற்காக தாழ்த்தப்பட்டவர்களை கட்டிவைத்து மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தினார்கள் சனாதனவாதிகள். அப்போ அவங்களுக்காக சிங்கம்போல் கிளர்ந்தெழுந்து சனாதனவாதிகளை கண்டித்ததோடு பாதிக்கப்பப்படவர்களை நேரில் சந்தித்து ஒத்தடம் கொடுத்தவர் தந்தை பெரியார். இதையெல்லாம் தெரிந்துகொள்ளாத ராமதாஸ் போன்றோரை அறியாமை கொண்டோரின் பட்டியலிலேதான் சேர்க்க வேண்டும்.

அதிரடி அன்பழகன் : நடுவரே அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துடாதீங்க. ஆரியர்கள் நம்மை வீழ்த்தணும்னு அனைத்து சாம பேத தண்ட உத்திகளையும் கையாண்டாங்க.. ஆனா அவங்களால் நம்மை வீழ்த்த முடியலை. காரணம் பெரியார் என்ற அரண் நமக்கு பாதுகாப்பாக நின்றது. அதனால் ஆரியர்கள் தங்கள் காலை நக்கக்கூடியவர்களை பொறுக்கி எடுத்து அவர்களை நமக்கு எதிராக களமிறக்கிக்கொண்டிருக்கிறார்கள். "சிந்திக்கத் தெரியாதவன் முட்டாள், சிந்திக்க மறுக்கிறவன் அயோக்கியன்' என்று பெரியார் சொல்வார். இவர்கள் அயோக்கியர்கள். தமிழ்பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்கள் என்றால் இங்குள்ள ஆரியர்கள் கூட தமிழ்பேசுகிறவர்கள்தானே. அதனால்தான் மொழி அடிப்படையில் நாம் பார்க்காமல் இன அடிப்படையில் நாம் நம்மைப் பார்க்கிறோம். அதனால்தான் நாம் திராவிடர்களாக நம்மை பறைசாற்றிக் கொள்கிறோம். இதெல்லாம் தெரிந்தும் நமக்கு எதிராகவே பேசிவருபவர்கள் கண்டிப்பாக அகம்பாவம் பிடித்தவர்கள்தான்.


பெரியார் செல்வம் : ராமதாசும் சாமான்யனாக இருந்து சீமானாகியிருப் பவரும் அறியாமை என்ற நிலையையும் கடந்து மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போலாகிவிட்டார் கள். கம்யூனிஸ்ட் உடையாமல் ஒரே கம்யூனிஸ்ட்டாக இருந்தபோது தலைவராக இருந்தவர் டாங்கே. அவர் தமிழகம் வந்தபோது ஒரு சுயமரியாதைத் திருமணத்தைப் பார்த்துவிட்டு, இப்படி ஒரு அமைதிப் புரட்சியை இங்கே நடத்தியிருக்கும் பெரியார்தான் உண்மையான சீர்திருத்தவாதி என்று பாராட்டினார். உண்மையான தமிழ்ப்புத்தாண்டு தை முதல்நாள் என்பதை மாற்றிவிட்டு ஆரிய வழக்கப்படி சித்திரை 1 தான் தமிழ்ப்புத்தாண்டு என்று ஆரியம் அறிவித்தபோது, இந்த தமிழ் உணர்வாளர்கள் எங்கே போனார்கள். தெரிந்தே அந்த ஆரியத்தின் அதிகார மையத்தைப் பாராட்டும் இவர்கள் அகம்பாவம் பிடித்தவர்கள்தான்.

பூவை.புலிகேசி : படித்த பாமரன் படிக்காத பாமரன் என்று ரெண்டு வகையாக பெரியார் பிரிப் பார். படிக்காத பாமரனை விட படித்த பாமரன் மோச மானவன். சென்னை மாநிலக் கல்லூரியில் பணி யாற்றிய தமிழ்ப் பேராசிரியர் நமச்சிவாய முதலியாருக்கு 80 ரூபா மட்டுமே சம்பளம். சமஸ்கிருதப் பேராசிரியரான குப்புசாமி ஐயருக்கு 300 ரூபாய் சம்பளம். தமிழ் என்ன இளக்காரமா? என்று போர்க் குரல் கொடுத்து சம்பள வேறுபாட்டைக் களைந்தவர் தந்தை பெரியார். இதையெல்லாம் தெரிந்தும் கூட பெரியாரால் என்ன நடந்தது? திராவிடத்தால்தான் வீழ்ந்தோம் என்று சொல்பவர்கள், நிச்சயமாக அகம்பாவம் கொண்டவர்கள்தான்.

தீர்ப்புரையில் நடுவர் அறிவுக்கரசு : பிராமணர்கள் மட்டுமே கோயில் கருவறைக்குள் நுழைய முடியும் என்பதை மாற்றி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் கொண்டு வந்து சாதித்தது திராவிடர்களின் ஆட்சிதான். முன்பெல்லாம் பிராமணர்கள் சாப்பிடும் இடம் என்று ஓட்டலில் அவர்களுக்கு ஸ்பெஷலாக இடம் ஒதுக்குவார்கள். அந்த இழிநிலையைத் துடைத்தெறிந்த கைகள் திராவிட இயக்கத்தினரின் கைகள். இதையெல்லாம் அறிந்தும் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் திராவிட இயக்கங்களோடு உறவு இல்லை என்றும் கூப்பாடு போடுபவர்கள் நிச்சயமாக அகம்பாவக்காரர்கள்தான்.

-இப்படி விறுவிறுப்பாக பட்டிமன்றம் நடந்த நிலையில் சிறப்புரை ஆற்றிய தி.க. தலைவர் வீரமணி, ""திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று அறியாமையால் சொல்பவர்களைக் கூட விட்டுவிடலாம். ஆனால் அகம்பாவத்தால் அப்படி சொல்பவர்களை நாம் கண்டித்தே ஆகவேண்டும். அவர்கள் திருத்தப்பட வேண்டியவர்கள்''’என தீர்ப்பிற்கு அழுத்தம் கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சேகர் இல்லத்  திருமணம் சாதி மற்றும் மத மறுப்புத் திருமணமாக எளிமையாக நடந்தது.

அரசியல் நிகழ்வுகளை விவாதிக்கும் இது போன்ற பட்டிமன்றங்கள், மக்களை ரொம்பவே கவரத் தொடங்கியுள்ளன. 
Ref:Nakkeeran

இந்தியா - பாகிஸ்தான் போரும் சமாதானமும்!

கொண்டாட்டம் நிறைந்த பிறந்தநாள் விழாவில், முழு கேக்கைத் துண்டாக்குவது ஆங்கிலேயர் மரபு. இந்தியாவுக்கு சுதந்திரக் கொண்டாட்டத்தை வழங்கியபோதும் தங்கள் மரபுப்படி துண்டு போடத் தவறவில்லை வெள்ளைக்காரர்கள். அப்போது அவர்கள் துண்டுபோட்டது கேக்கை அல்ல, தேசத்தை! 1947-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதற்கு முதல் நாளே (ஆகஸ்ட் 14) பாகிஸ்தான் என்ற இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட  புதிய சுதந்திர நாட்டை தந்துவிட்டது பிரிட்டிஷ் அரசு.

முஸ்லிம் நாடாக பாகிஸ்தானும் மதசார் பற்ற நாடாக இந்தியாவும் அறியப்பட்டாலும் மதத்தை முன்வைத்து இருநாடுகளிலும் பிரச்சினைகள் ஏற்பட்டதோடு, இருநாடுகளுக் கிடையிலான பிரச்சினைகளும் 63 ஆண்டு களாகத் தொடர்ந்து வருகிறது. அதன் காரண மாக எல்லையோர மோதல்கள், இருநாட்டுக்கு மான போர், அதன்பின் சமாதான பேச்சு வார்த்தைகள், புதிய ஒப்பந்தங்கள் என பல விதமான சூழல்கள் ஏற்பட்டாலும் நிரந்தரத் தீர்வு இன்றுவரை ஏற்படவில்லை.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பெரும் பிரச்சினையாக முன்வைக்கப்படுவது, காஷ்மீர். முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதி என்பதால் பாகிஸ்தான் அதனை உரிமை கொண்டாடு கிறது. நிலவியல் அடிப்படையில் அது நம்முடையது என்கிறது இந்தியா. காஷ்மீரின் மண்ணின் மைந்தர்களோ  இருநாடுகளுடனும் சேர விரும்பாமல் தனிநாடு கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

1947-ல் காஷ்மீர் யாருக்கு என இருநாடு களுக்கும் முதன்முதலாக சிக்கல் எழுந்தபோது, அந்த மாநிலத்தைக் கையகப்படுத்த பாகிஸ் தான் தன் படைகளை அனுப்பியது. காஷ் மீரின் மகாராஜா இந்தியாவின் உதவியை நாடி னார். இதையடுத்து இந்தியப் படைகளுக்கும் பாகிஸ்தான் படைகளுக்கும் 1947-ஆம் ஆண்டு  அக்டோபரில் தொடங்கிய போர், 1948 ஏப்ரல் வரை நடந்தது. ஐ.நா.சபை தலையிட்டது. மகாராஜா விருப்பப்படி இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தது. அதேநேரத்தில், காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்கள் எந்த நாட்டுடன் சேர விரும்புகிறார்கள் என்பதை அறிய வாக் கெடுப்பு நடத்தவேண்டும் என்றும் தீர்மானிக் கப்பட்டது. இன்றுவரை அதற்கான வாக் கெடுப்பு நடத்தப்படவில்லை.  காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு ஒன்று வரை யறுக்கப்பட்டு, அந்தக் கோட்டினை இருநாடு களும் மீறக்கூடாது என முடிவானது.

இந்த முடிவுகள் மீறப்படும்போது எல்லைப் புற மோதல்களும் பெரிய அளவிலான போர்களும் நடப்பது தொடர்கதையாகி விட்டது. 1965-ல் காஷ்மீருக்குள் பாகிஸ்தான் படைகள் நுழைந்ததால் போர் மூண்டது. இந்தியப் பிரதமராக லால்பகதூர் சாஸ்திரி இருந்தார். ஜெய் ஜவான்-ஜெய் கிஸான் என்ற முழக்கத்துடன் இந்தியப் படைகள் போரில் ஈடுபட்டன. நாடு முழுவதும் இந்த முழக்கம் எதிரொலித்து, எல்லையில் போராடும் வீரர் களுக்கு உத்வேகம் அளித்தது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் அதிக அளவில் பீரங்கி டாங்கிகள் பயன்படுத்தப்பட்ட இந்தப் போரில் இந்தியப் படைகள் வேகமாக முன்னேறின. பாகிஸ்தான் படையால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

1966-ல் அன்றைய சோவியத் யூனியனுக்கும் பட்ட (இன்றைய உஸ்பெகிஸ்தான்) தாஷ் கண்ட் நகரில் இந்திய பிரதமர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டது. போருக்கு முன்பு இரு நாட்டுப் படைகளும் எங்கு இருந்தனவோ அந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டும் என்றும், ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் இன்னொரு நாடு தலையிடக்கூடாது என்றும் இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவு வளர் வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த ஒப்பந்தத்தில்  வலி யுறுத்தப்பட்டது. ஒப்பந்தத்திற்காக தாஷ் கண்ட் சென்ற பிரதமர் சாஸ்திரி , உடல்நலக் குறைவால் அங்கேயே மரணமடைந்தார் .

தாஷ்கண்ட் ஒப்பந்தத்திற்குப்பிறகும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த காஷ் மீரின் சில பகுதிகள் இந்தியாவசம் ஒப்படைக் கப்படவில்லை. ஆசாத் காஷ்மீர்  என்று பாகிஸ்தான் அதை அழைக்கிறது. இந்தியாவோ, அதை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் என்கிறது. தொடர்ச்சியாக பல மோதல்கள் நிலவி வந்த சூழலில், பாகிஸ்தான் பிரிவினையின்போது அந்நாட்டுடன் இணைக்கப்பட்ட கிழக்கு வங்காள மாநில மக்கள் தங்களுக்கான தனிநாடு கோரி போராடினர். அவர்கள் மீது பாகிஸ்தான் ஏவிய அடக்குமுறையின் காரணமாக, இலட்சக் கணக்கான கிழக்கு வங்காளிகள்  இந்தியா விற்கு அகதிகளாக வந்தனர். நெருக்கடிக் குள்ளான இந்தியா, வங்கதேச விடுதலையை ஆதரிக்கும் விதத்தில் பாகிஸ்தான் மீது போர் தொடுத்தது.

1971-ல் நடந்த இந்தப் போரை இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி மிகத் திறம்பட வழிநடத்தினார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்காவும், இந்தியாவுக்கு ஆதரவாக சோவியத் யூனியனும் (ரஷ்யா) களமிறங்கிய தால் இது உலகப்போராக மாறுமோ என்ற அச்சம் பரவியது. இப்போரில் இந்தியா  பெரும் வெற்றி பெற்று, பங்களாதேஷ் என்ற சுதந்திர நாடு உருவாக காரணமானது. இப் போரில் பாகிஸ்தான் படையினர் 90ஆயிரம் பேர் இந்தியாவிடம் சரணடைந்தனர்.  இந்தியாவின் வலிமையையும் இந்திரா காந்தியின் வல்லாண்மையையும் உலக அளவில்  எடுத்துக்காட்டும் விதத்தில் இந்தப் போர் அமைந்தது. இந்தப் போருக்குப்பின் 1972-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் நாள் போடப் பட்ட சிம்லா ஒப்பந்தத் தின் படி இருநாடுகளும் அமைதி வழியில் பிரச் சினைக்குத் தீர்வுகாண வலியுறுத்தியது.

இருநாடுகளுமே அûதியை நிலை நிறுத்து வதில் உண்மையான அக்கறைசெலுத்த வில்லை என்பதைத் தான் தொடர்ச்சியான மோதல்கள் காட்டுகின்றன. 1999-ல் கார்கில் எல்லைப்புறம் வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் படைகளை இந்தியப் படைகள் எதிர் கொண்டன. கார்கில் போர் என வர்ணிக்கப்பட்ட இந்த யுத்தத்தில் இந்தியப் படைகளின் வேகமான முன்னேற்றத்தினால் பாகிஸ்தான் படைகள் எல்லைக் கட்டுப் பாட்டு கோட்டுக்கு அப்பால் திரும்பின. இதையடுத்து 2001-ஆம் ஆண்டில் ஆக்ராவில் இந்தியப் பிரதமர் வாஜ்பாயும், பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபும் சந்தித்தனர். முக்கியமான முடிவுகள் எடுக்கப்படாவிட்டாலும் அமைதித் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை பிறந்தது.

இருநாடுகளுக்குமிடையே மீண்டும் பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை சீராயின. எனினும், இந்திய நாடாளுமன்றம் மீது 2001, டிசம்பர் 13-ந் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல், 2008, நவம்பர் 26-ல் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் ஆகிய வற்றில் பாகிஸ்தான் அரசுக்குத் தொடர்பிருப்ப தாக இந்திய அரசு தெரிவித்துவரும் குற்றச் சாட்டுகளை பாகிஸ்தான் அலட்சியப்படுத்துவ தாலும், இத்தாக்குதல் சம்பவத்தில் தொடர் புடைய தீவிரவாதிகளை ஒப்படைக்க பாகிஸ் தான் அரசு மறுப்பதாலும் அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரோஷி இடையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தை முறிந்ததுடன், இந்தியத் தரப்பு கசப்பான அனுபவங்களை சந்திக்க நேர்ந்தது.

காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. மன்றத்தின் மூலம் சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகள் இன்றுவரை பயனளிக்க வில்லை. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் தங்கள் நாடு இப் பிரச்சினையில் தலையிடாது எனத் தெரிவித்து விட்டார். உண்மையான அமைதியை விரும்பாத வரையில், கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு கைகுலுக்குவதுபோலத் தான் இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவு.

மாநிலங்களும் இந்திய ஒன்றியமும்!

ன்றைக்குஇந்தியாவில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி வருகிறது தெலுங்கானாபோராட்டம். தனி மாநில கோரிக்கைக்கான இப்போராட்டம் ஆந்திர சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல், மாணவர்களின் போராட்டங்கள், உயிர்தியாகங்கள் போன்றவற்றால் அம்மாநிலமே நிலை குலைந்து போயுள்ளது. கடலோரமாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா என மூன்று பகுதிகளையும் உள்ளடங்கியதுஆந்திர மாநிலம். இதில் தெலுங்கானா ஒப்பிட்டு அளவில் பெரியது. வாரங்கல்,ஹைதராபாத், ரெங்காரெட்டி, கரீம்நகர், நிஜாமாபாத், மேடக், நலகொண்டா ஆகியமாவட்டங்கள் தெலுங்கானா என்று அழைக்கப்படுகிறது.

தமிழ் இலக்கிய வரலாறு

   லக்கு + இயம் = இலக்கியம். இலக்கினை உடையது இலக்கியம்.இலக்கியத்திற்கு "நூல்' என்னும் மற்றொரு பெயரும் உண்டு. கட்டடம்கட்டும்பொழுது கோணல்களைக் கண்டு ணர்ந்து சரி செய்ய "நூல்' இட்டுப்பார்ப்பது மரபு. அதுபோல் தனிமனித, சமுதாய அளவி லுள்ள சிக்கல்களையும் காரணங்களையும் சுட்டிக் காட்டித் தீர்வுகளுக்கு வழிவகுக்கும் புத்தகங்களே "நூல்' என்று போற்றப்படும். இத்தகைய நூல்கள் ஒரு நாட்டின் பண்பு நலனைமதிப்பீடு செய்ய உதவும் துலாக்கோலாகச் செயல்படுகின்றது. தமிழ் மொழியில்,மாந்தர் தம் மனக் கோட்டம் தீர்த்து குணக் குன்றில் ஏற்றவல்ல ஏராளமானஇலக்கியங்கள் மின்னி மிளிர்கின்றன. அவற்றை ஒரு பருந்தின் பார்வையில்காணப்புகுவோம்.

கடல் கொண்ட முச்சங்கங்கள்:

மதுரை, கபாடபுரம் ஆகிய இடங்களில் முச்சங்கங் கள் வைத்து முத்தமிழ்வளர்த்தனர் நம் முன்னோர். முரஞ்சியூர் முடி நாகராயர், தொல்காப்பியர்,நக்கீரர் முதலான புலவர்களின் நாவில் நவிலப்பட்ட நற்றமிழ் நூல்கள் ஏராளம்!ஏராளம்!!. கி.மு. 2387-இல் கற்பனைக் கும் எட்டாத "பிரளயம்' ஒன்று உலகில்நிகழ்ந்தது. சீற்றம் கொண்ட ஆழிப் பேரலைகள் முன் உலகின் மிக உயரமான இமயமலைகூடக் கண்ணுக்குப் புலனாக வில்லை. வீசி எறியப்பட்ட கடல்பொருள்களில் பலஉயரமான இமயமலையில் சிக்கி, தங்கி, உறைந்து, படிவங்களாக மாறிப் போயுள்ளன. அதன் பின்னர் கி.மு. 504 மற்றும் கி.மு. 306-இல் நிகழ்ந்த அடுத்த இருகடல்கோள்கள் என முப்பெரும் கடல்கோள்கள் தெற்கே பரந்து விரிந்திருந்ததமிழகத்தையே வழித்து வாரிக் கொண்டு போன நிலையில், எண்ணிறந்த பல தமிழ்நூல்களும் கடல்வாய்ப்பட்டு அழிந்தன. முச்சங்க நூல் களுள் சிலவாகியமுதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, மாபுராணம், பூத புராணம், இசைநுணுக்கம், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை, பெருங்கலி, வெண்டாழி, வியாழமாலை, அகவல் என்னும் நூல்கள் பற்றிய குறிப்பு இறை யனார் களவியல் உரை யின்மூலம் வெளிப்படுகின்றது. கடல் கோள் களில் எஞ்சிய நூல்கள் தொல்காப்பியம்,பரி பாடல், நெடுந்தொகை (அகநானூறு), குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு,ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை ஆகியனவே.

எட்டுத்தொகை நூல்கள்

மேற்காண் நூல்களுள் தொல்காப்பியம் நீங்கலான எட்டு நூல்களும், "எட்டுத்தொகை'நூல்கள் எனப்படும். எட்டுத் தொகையின் ஒவ்வொரு நூலும் பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. எட்டுத் தொகையுள் "பதிற்றுப்பத்து'என்னும் பத்துச் சேர மன்னர்களைப் பத்துச்சேரநாட்டுப் புலவர்கள்பாடியது.சேரநாடுஎன்பது இன்றையகேரளா! தமிழிலிருந்து தெலுங்கு, கன்னட மொழிகளுக்குப்பிறகுகடைசியாகப் பிரிந்த தென் திராவிட மொழியான மலையாள இலக்கியத்தின் மூத்தநூலான பதிற்றுப்பத்து, தமிழ் எழுத்து வடிவத்திலேயே சங்க எட்டுத் தொகையுள் ஒன்றாக இருப்பது தமிழின் தொன்மையையும், மலையாளத்தின் "பின்மை'யையும் உணர்த்தும் ஆவணம் எனலாம்.

பத்துப்பாட்டு நூல்கள்

திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறு பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல் வாடை,குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலை படுகடாம் (கூத்தராற்றுப் படை)என்னும் பத்து நூல்களும் கடல் கோள்களுக்குப் பின்னர் நிறுவப்பட்ட சங்கத்துநூல்கள். இவற்றுள் ஒவ்வொரு நூலும் ஒரு மன்னரை புலவரொருவர் பாடிய பாங்கில்அமைந்துள்ளன. "பேராசிரியர்' (கி.பி.13) என்னும் உரையாசிரியரே இப்பத்துநூல்களையும் ஒன்றாகச் சேர்த்து "பத்துப்பாட்டு' என முதன்முதலில் இனம்காட்டினார். இப்பத்து நூல்களுள் செம்பாகி ஆற்றுப் படை நூல்கள்.இவ்வாற்றுப்படை நூல்கள் இன்றைய "பயண இலக்கியத்தின் முன்னோடி'யாகத்திகழ்கிறது.

திணை இலக்கியங்களும் வீரநிலை இலக்கியங்களும்

பொதுவாக சங்க இலக்கியங்களை அக இலக்கியங் கள், புற இலக்கியங்கள் என இருவகையாகப் பகுக் கலாம். அக நூல்களில் குறிப்பிட்ட எவரின் பெயரும்குறிக்கப்படாமல் அகச்செய்திகளை மட்டும் கூறும் மாண்புகாக்கப்பட்டிருக்கும். அக இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளின் அடிப் படையில் பாடப்பட்டுள்ளதால்"திணை இலக்கியங்கள்' எனப் போற்றப்படுகின்றன: வெட்சி, கரந்தை, வஞ்சி,காஞ்சி, நொச்சி, சழிஞை, தும்பை, வாகை என்னும் போர்முறை களைப் பாடுவதால்புறப்பாடல்கள் "வீரநிலை இலக்கியங்கள்' எனச் சிறப்பிக்கப்படுகின்றன.

காப்பிய நூல்கள்

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் கூறுவன பெருங்காப்பியங்கள். வீடு நீங்கலாக ஏனையவற்றைக் கூறுவன சிறுகாப்பியங்கள்.கி.பி. 2-9- இல் ஐம்பெருங்காப்பியங்களும், கி.பி. 6-16-இல்ஐஞ்சிறுங்காப்பியங்களும் தோன்றின. காப்பிய வகைக்கு வித்திட்ட இளங்கோவடிகளின் சிலம்பும், சாத்த னாரின் மேகலையும் முதல் தமிழ்க் காப்பியங்களாவதோடு பெண்ணின் பெருமை பேணும் காப்பியங்களாகவும் மிளிர்கின்றன. இவற்றோடு சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசியும் சேர்ந்து ஐந்தும்  பெருங்காப்பியங்கள். நீலகேசி, சூளாமணி, யசோதர காவியம், உதயண குமாரகாவியம், நாககுமார காவியம் என்பன ஐஞ்சிறுகாப்பியங்கள். இவற்றுள்மேகலையும், குண்டலகேசியும் மட்டும் பௌத்த சமயத்தைப் பாட ஏனைய 8காப்பியங்களும் சமணம் போற்றுகின்றது. இது, அக்கால கட்டத்தில் சமணம் பெற்றிருந்த செல்வாக்கைச் சுட்டுகிறது. ஐம்பெருங்காப்பியப் பட்டியலுக்குள் வராவிட்டாலும் பெருங்கதை (கி.பி. 6) பெருங்காப்பிய வரிசையுள் மூன்றாவதாக வரிசைப்படுத்தத் தக்க சிறப்புடையது. கம்பரின் கம்பராமாயணத்தை அடியொற்றிஇரகுவம்சம் (கி.பி. 15), இராமாயண நூல் களுக்கு மறுதலையாக எழுந்த புலவர் குழந்தையின் இராவண காவியம் (கி.பி. 1946) தமிழர்ப் பண்பாட்டைப் பேணுவதற்காகவே எழுந்தது. இவற்றைத் தொடர்ந்து 20-ம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியங்களுள் கண்ணதாசனின் இயேசு காவிய மும், சிற்பியின் "மௌன மயக்கமும்' கவிஞர்வைரமுத்துவின் "கவிராஜன் கதை'யும் குறிப்பிடத்தக்கன.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

காலம் ஏறக்குறைய 4 (அ)-ஆம் நூற்றாண்டு கணக்கு = நூல். 50 முதல் 500 முடியஅதிக அடிகளைக் கொண்ட நூல் மேற்கணக்கு நூல்கள். அவற்றைவிடக் குறைந்தஅடிகளைக் கொண்டவை கீழ்க்கணக்கு நூல்கள். கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது,ஐந்திணை எழுபது, திணை மொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது, கைந்நிலைஎன்னும் ஆறும் அகநூல்கள்: பொய்கையார் பாடிய களவிழி நாற்பது மட்டும்புறநூல்: ஏனைய நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது,முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக்கோவை, பழ மொழி, சிறுபஞ்சமூலம்,முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்னும் 11 நூல்களும் அறநூல்கள். இவற்றுள்திருக் குறள் "உலகப் பொது மறை' என்னும் அரியணை ஏறியது.பதினொண்கீழ்க்கணக்கின் அறநூல்கள் அடியாற்றிப் பிற்காலத்தில் பல அறநூல்கள்எழுந்தன. ஔவையாரின், கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, ஆத்திசூடி முதலியனவையும் அறநூல்கள். ஔவையின் ஆத்தி சூடியைப் பின்பற்றி பாரதி, பாரதிதாசன் முதல் வாணிதாசன் முடிய ஒன்பதின்மர் "ஆத்திசூடி வகை' நூல்களை இயற்றியுள்ளனர். மேலும், உலகநீதி, நீதிநெறி விளக்கம், பெண் மதிமாலை முதலானவும் அறநூல்களாக அணி செய்கின்றன.

இலக்கண நூல்கள்

இலக்கணம் என்பது மொழியின் வேலி. நமக்கு முழுமையாக கிடைக்கும் முதல் இலக்கணநூல் தொல் காப்பியமே. அகத்தியரை முதன்மைப்படுத்திக் கூறும் மனப் போக்கு,அவரைத் தொல்காப்பியரின் ஆசிரி யர் எனவும், அவரது அகத்தியம்தொல்காப்பியத்தின் மூலநூல் எனவும் கூறலாயிற்று: ஆயின் "அதங் கோட்டாசான்'என்பவரே தொல்காப்பியரின் ஆசிரியர் என்பதனைத் தொல்காப்பியம் பாயிரம் பதிவுசெய்துள்ளது. கி.பி. 5-ஐச் சேர்ந்த தொல்காப்பியத்தைத் தொடர்ந்து பவணந்திமுனிவரின் "நன்னூ'லும் (கி.பி. 12) சொல்லமைப்புகளை ஆராயும் "இலக்கணக்கொத்து'ம் (கி.பி. 17) இயற்றப்பட்டன. தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் அகஒழுக்கங் களைப் பற்றிய இலக்கணங்கள் கி.பி. 8-16-இல் தோன்றின. இவற்றுள் இறையனார் அகப்பொருள் (கி.பி. 8) குறிப் பிடத்தக்கது. ஐயனாரிதனாரின் "புறப்பொருள் வெண்பாமாலை' (கி.பி. 9)-யில் தான் "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துவாளொடு, முன்தோன்றி மூத்தகுடி' என்னும் வரிகள் இழை யோடுகின்றன. செய்யுள்இயற்றுவதற் குரிய யாப்பிலக்கணங்களை அவி நயம் (அவி நயனார்), யாப்பெருங்கலம்மற்றும் யாப்பருங்கலக்காரிகை (அமித சாகரர்)யும், செய்யுள் அணிகளைக் கூறும்தண்டியலங்காரம் (கி.பி. 12) நூலும் எழுந்தன. இத்தாலி நாட்டின ரானவீரமாமுனிவரின் "தொன்னூல் விளக்கம்' ஐந்திலக்கணங்களைக் கூறுவது. தமிழின்யாப்பு வடிவங் களைப் "பாட்டியல் நூல்கள்' நவிலு கின்றன. இவை போக, சொல்லின்பொருள்களை விளக்கும் 67 நிகண்டுகள் தமிழில் உள்ளன என்பர். திவாகரர்இயற்றிய திவாகரம் "முதல் நிகண்டு' எனப் போற்றப்படுகிறது. காலப்போக்கில்நிகண்டுகள் உரைநடை வடிவில் அகராதிகளாக உருமாற்றம் பெற்றன. வீரமாமுனிவரின்"சதுர்அகராதி' புகழ் பெற்றது. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி"லெக்சிகன்' எனப்படுகிறது. இலக்கணக் கூறுகளை அகர வரிசையில் வை.மு.கோபாலய்யர் 25 ஆண்டு களாகப் பாடுபட்டு உருவாக்கிய 17 தொகுதிகளைக் கொண்ட"தமிழ் இலக் கணப் பேரகராதி' 2005-இல் வெளியிடப்பட்டது.

தொன்ம இலக்கியங்கள்

தொன்மை வாய்ந்த பழங்கதைகளைக் கூறும் புராணங்கள் கி.பி. 11-இல் தோன்றின.கல்லாடம் சிவ பெருமானின் திருவிளையாடல்களைக் கூறும் முதல் புராணநூல்,தொன்மங்களில் பெரியபுராணமும்  (சேக் கிழார்), கந்தபுராணம் (கச்சியப்பமுனிவர்) புகழ் வாய்ந்தன.

சமயங்கள் வளர்த்த தமிழ்

தமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றும் ஏதாவதொரு சமயப் பெருமையைப் பேச உதவும் கருவியாகவே ஆளப்பட்டு வந்திருப்பது கண்கூடு. பாரதிதாசன்தான் "அழகின்சிரிப்பு' மூலம் இம்மரபினை உடைத்தார் எனலாம். கி.மு. 5-இல் தோன்றியபௌத்தக் கருத்து களை மணிமேகலை, குண்டலகேசி, வீர சோழியம் முதலான நூல்கள்எடுத்துரைக்கின்றன. கி.பி. 3-இல் தோன்றிய சமண சமயப் பெருமையை "ஜைனஇராமாயணம்' மேரு மந்திரபுராணம்' சிலம்பு, வளையா பதி, பெருங்கதை முதலானஇலக்கியங்களும், ஐஞ்சிறு காப்பியங்களும் பேசுகின்றன. கி.பி. 7,8,9-இல்சோழர் கட்டிய சிவாலயங்கள் 63 "நாயன்மார்' மூலம் சைவத்தை வளர்த்தன. தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரிய புராணம் முதலான "பன்னிருதிருமுறைகள்' தோற்றம் கண்டன. ஏறக்குறை இக்காலகட்டத்தில் தோன்றிய வைணவம்"பன்னிரு ஆழ்வார்கள்' மூலம் நாலாயிர திவ்விய பிரபந்தங்களைத் தந்தது.மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் ஆண்டாளின் திருப்பாவையும் மார்கழி மாதப்பாராயண நூல்களாகத் திகழ்கின்றன. வணிகப் பொருட்டு நுழைந்த மேலை நாட்டினருள்இத்தாலியைச் சேர்ந்த ஜோசப் பெஸ்கி செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்மூலம் "வீரமாமுனிவர்' எனப் போற்றப்படுகிறார். இவரது "தேம்பாவணி'யும்" பரமார்த்த குருகதை'யும் சிறப்புடையன. இன்னும் அகராதிகள், ஒப்பிலக்கணங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், சுவடிப் பணிகள், கிறித்தவரின்தமிழ்ப் பணிக்குச் சான்றுகளாக நிலவுகின்றன. கி.பி. 14-இல் தமிழகத்தில்படையெடுத்த "மாலிக்காபூர்' மூலம் இஸ்லாமியத் தாக்கம் எழுந்தது. அதன் மூலம்உமறுப்புலவரின் சீறாப்புராணம் தமிழுக்குக் கிடைத்தது. சிற்றிலக்கியங்கள்,சூபி, முனா ஜத்து, நாமா இலக்கிய வகைமைகளில் பல இஸ்லாமிய நூல்கள்இயற்றப்பட்டன. நபிகள் நாயகம் வரலாற்றை அப்துல் ரஹீம் "நாயகம் காவியம்'எனவும், கவிஞர் மேத்தா "நாயகம் ஒரு காவியம்' எனவும் காப்பியங்களாக்கியுள்ளனர்.

சிற்றிலக்கியங்கள்

மாலிக்காபூரின் படையெடுப்பும், விஜய நகரப் பேரரசின் ஆட்சிமுறையும் காப்பியசருவாக்கங்களை நிறுத்தித் தனி மனிதப் போற்றலை வளர்த்தன. இதன் விளைவாக 96வகைச் சிற்றிலக்கியங்கள் தோற்றம் கண்டன. ஆற்றுப்படை, பிள்ளைத் தமிழ், உலா,தூது, கலம்பகம் முதலாயின அவற்றுள் சில.

சித்தர் இலக்கியங்கள்

அணிமா, மகிமா, கிரிமா, இலகிமா, பிராப்தி, பர காமியம், ஈசத்துவம்,வசித்துவம் என்னும் எட்டுவகைச் சித்துக்களில் வல்லவர்கள் சித்தர்கள். 18,108, 1008 என்னும் எண்சிறப்பு முறை அடிப்படையில் "பதினெண் சித்தர்கள்' எனவரையறுக்கப் படுகின்றனர். திருமூலர், சிவாக்கியர், பட்டினத்தார் முதலானோர்அவர்கள். இவர் தம் நூல்களில் மெய்யுணர்தலும், இரைத் தேடலும், மருத்துவ,பச்சிலைக் குறிப்புகளும் பொதித்துள்ளன.

இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள்

மேலை நாட்டினர் தொடர்பால் இந்நூற்றாண்டில் இலக்கியங்கள் பன்முகப்பார்வையுடன் பல்வேறு வகைமைகளுக்குத் தோற்றம் தந்து ஏற்றம் கண்டு வருகின்றன. பாரதியார், பாரதிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர், சுரதா,கண்ணதாசன் முதலானோருடன் சிற்பி, வைரமுத்துவின் மரபுக் கவிதைகள் இருபதாம்நூற் றாண்டின் தொடக்க காலத்தை அணி செய்தன. வீரமா முனிவரின் (கி.பி. 18)பரமார்த்த குருகதை "தமிழ்ச் சிறு கதைகளின் முன்னோடி'யாகத் திகழ்கிறது.வ.சே.சு. ஐயரின் குளத்தங்களை அரசமரம் "முதல் தமிழ்ச் சிறு கதை' எனலாம்.புதுமைப்பித்தன், கல்கி, ஜெயகாந்தன், கு.ப.ரா. இராஜம்கிருஷ்ணன் முதலானோர்சிறுகதை உல கில் தடம் பதித்தவர்கள். பத்திரிகைகளின் வாயிலாகப் பெருகியசிறுகதைகள் "அரைப்பக்கச் சிறுகதை'களைக் கண்டு "ஒரு நிமிடச்சிறுகதை'களையும் ஈன்றெடுத் துள்ளன. மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் "பிரதாபமுதலியார் சரித்திரம்' (1879) தமிழின் முதல் புதினம். இராஜம்ஐயர்,அ.மாதவையாவின் புதினங்களும் "சரித்திரங்கள்' என்றே குறிக்கப்பட்டன. ஆரணிகுப்பு சாமி, தேவன், தமிழ்வாணன் வாயிலாகத் துப்பறியும் புதினங்கள்அறிமுகமாயின. வினோ, மீண்டும் ஜினோ முதலான புதினங்களின் மூலம் சுஜாதாஅறிவியல் புதினங்களை வித்திட்டார். அகிலன், மு.வ. நா. பார்த்த சாரதிமுதலானோர் சமூகப் புதினங்களை வளர்த் தெடுத்தனர். கல்கி, சாண்டில்யன்,மு.மேத்தா, கலைஞர், பூகண்ணன் முதலானோர் வரலாற்றுப் புதினங்களைப்புனைந்தனர். இலஷ்மி, சிவசங்கரி, இராஜம் கிருஷ்ணன் முதலான பெண்எழுத்தாளர்கள் புதின உலகில் தடம் பதித்தோராவர். கள ஆய்வுப் புதினங்கள்( கூட்டுக் குஞ்சுகள்) தருவதில் இராஜம் கிருஷ்ணன் தேர்ச்சி மிக்கவராகவிளங்குகிறார்.

மரபுக் கவிதையின் யாப்புக் கட்டுக்களை உடைத்து உருவானவை புதுக்கவிதைகள்.ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, அப்துல் ரகுமான், சிற்பி, மு.மேத்தா, மின்னூர்சீனி வாசன், பொன். செல்வகணபதி, ஈரோடு தமிழன்பன் முதலானோர் புதுக்கவிதைஉலகில் குறிப்பிடத்தக்கோர். மு.மேத்தாவின் "ஆகாசத்துக்கு அடுத்த வீடு'சாகித்திய அகாதெமி பரிசு பெற்றது. புதுக்கவிதையின் எளிய வடிவம் ஹைக்கூ.ஜப்பானிய இறக்குமதி. அமுத பாரதி, அறிவுமதி முதலானோர் ஹைக்கூ கவிஞர்கள்.ஹைக்கூவின் இறுக்கம் குறைந்த வடிவம் சென்ரியூ. ஈரோடு தமிழன்பனின் "ஒருவண்டி சென்ரியூ' தமிழின் முதல் சென்ரியூத் தொகுப்பு நூல் என்னும் சிறப்பினைப் பெறுகிறது. ஹைக்கூவைத தமிழ்ப் படுத்திய வடிவம் குக்கூ. மீ.ரா-வின்"குக்கூ' என்னும் நூலே முதல் குக்கூ-வின் தொகுப்பாக உள்ளது.

அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு என மு.வ. எழுதிய கடித இலக்கியங்கள்அரசியல் சார்ந்த கடித இலக்கியங்களுக்கு வழிகோலின எனலாம். தனிநாயகஅடிகளார், மு.வ, வ.சுப. மாணிக்கம் (தமிழ்க்காதல்), க.கைலாச பதி (வீரயுகப்பாடல்) முதலானோர் ஒப் பிலக்கியங்கள் காண வழிவகுத்தனர். அயல்நாட்டு வணிகத்தொடர்பும், அரசியல், அறிவியல் கலப்பு களும் மொழிக்கலப்பை உருவாக்கியதன்மூலம் ஒப் பிலக்கணம் உருவெடுத்தது. நூல்களை மதிப்பீடு செய்யும் திறனாய்வுநூல்களும், மொழிபெயர்ப்பியதும், நாட்டுப்புறவியலும், குழந்தை இலக்கியங்களும், பயண இலக்கியங்கள், வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள்,பெண்ணிய, தலித்திய, ஊடக இலக்கியங்கள் இன்னோ ரன்னவை இருபதாம் நூற்றாண்டுஇலக்கியங்களாக இலங்குகின்றன.

எதிர்வருங்காலத்தில் சட்டத்தமிழ், கணிப்பொறித் தமிழ், அறிவியல் தமிழ்,மருத்துவத் தமிழ், பொறியியல் தமிழ் எனத் தமிழ்க் கலைச் சொல்லாக்கங்கள்முழு வீச்சில் பன்முகப் பாங்கில் பரவலாக்கப்படல் வேண்டும். மேலும்உலகெங்களிலும் பல்வேறு பகுதிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழ் ஓலைச்சுவடிகள், கையெழுத் துப் பிரதிகள் முதலான தமிழ்க் கருவூலங்கள் தமிழகம்கொணரப்பட்டு அச்சில் ஏற்றப்படல் வேண்டும். தமிழ் நூல்கள் அனைத்தும்காக்கப்படல் வேண்டும்.

தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு

முடியாட்சி காலத்திலேயே ஜனநாயகத்தின் மீதான பார்வை தமிழகத்திற்கு இருந்துள்ளது. சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட குடவோலை முறை என்பது இன்றைய தேர்தல் முறைகளுக்கு ஒரு முன் னோடியாக இருந்திருப்பதை கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது. ஐம்பெருங் குழு, எண்பேராயம் போன்ற அரசவை நிறுவனங் கள் முடியாட்சிக்குள் முளைவிட்ட ஜனநாயகக் குருத்துகள் எனலாம்.

பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் தமிழகம் தேர்தலை சந்தித்தது. இதில் வாக்களிக்கும் உரிமை கொண்ட குடிமக்களாக வரிசெலுத்துவோர், பட்டம் பெற்றோர் உள்ளிட்டவர்கள் இருந்தனர். வெள்ளையர்கள் ஆட்சியில் மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் காரணமாக 1919Š-ஆம் ஆண்டில் இரட்டையாட்சி முறை கொண்டு வரப்பட்டது. அரசியல் சட்டமாக நடை முறைக்கு வந்தது. இதன்படி ஆளுநருக்கு மட் டுமே பதிலளிக்கக்கூடிய உயரதிகாரிகள் ஒரு பக்கம் ஆட்சி செய்வார்கள். அதே நேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்றத்திற்குக் கட்டுப்பட்ட அமைச்சர்கள் கொண்ட அவை இன்னொரு பக்கம் ஆட்சி செய்யும் .

அப்போது நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் கிடையாது. தமிழர்கள் வாழும் பகுதியுடன் ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றின் சில பகுதிகளும் இணைந்து சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது. 1920-ஆம் ஆண்டு முதல் மாகாணத் தேர்தல் நடந்தது. இரட்டையாட்சி முறையை ஏற்க வில்லை என காந்தியடிகள் அறிவித்ததால், காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் போட்டியிட வில்லை. இத்தேர்தலில் நீதிகட்சி வெற்றி பெற்றது. சென்னை மாகாணத்திற்கான முதல் அமைச்சரவையில் ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராக (அப்போது அதற்கு பிரிமியர் எனப் பெயர்) பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் சில நாட்களில் சுப்பராயலு மரண மடைந்ததால், பனகல் அரசர் என அழைக்கப் பட்ட இராமராய நிங்கார் முதலமைச்சரானார். 1923-ல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலிலும் இவரே முதல்வரானார்.

மருத்துவக் கல்லூரியில் (எம்.பி.பி.எஸ்) ஒரு மாணவன் படிக்க வேண்டுமென்றால் சமஸ் கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை அப்போது இருந்தது. இதனை உடைத்தெறிந்த வர் பனகல் அரசர். இதன் மூலமாக பிற்படுத்தப் பட்ட-தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந் தவர்களும் பெண்களும் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு உருவானது பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப் பட்ட மிக முக்கியமான சீர்திருத்தம், அற நிலையப் பாதுகாப்புச் சட்டம். சரியான பராமரிப்பின்றி தனிப்பட்டவர்களால் ஆண்டு அனுபவிக்கப்பட்டு வந்த கோவில் சொத்து களை இச்சட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தார்.

சென்னை மாகாணத்திற்கான மூன்றாவது தேர்தல் 1927-ஆம் ஆண்டு நடைபெற்றது. இத் தேர்தலில் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியடைந்தனர். அக்கட்சியின் ஆதர வுடன் சுயேட்சைகளின் ஆட்சி நடைபெற்றது. முதலமைச்சர் சுப்பராயனுடன் எஸ்.முத்தையா முதலியாரும் எஸ்.ஆர். சேதுரத்தினமய்யரும் அமைச்சரானார்கள். முத்தையா முதலியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவ வேலைவாய்ப்பு முறையை சட்டமாகக் கொண்டு வந்தார். 1929-ல் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒவ் வொரு சமுதாயத்தின்மக்கள்தொகையின் அடிப்படையில் வேலையினை பங்கீட்டு அளிக்கும் சட்டமாக இது அமைந்தது. 1937 வரை நீதிக்கட்சி ஆட்சி நீடித்தது.

1937-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்று வெற்றி பெற்றது. ஜூலை 17-ஆம் நாள் சென்னை மாகாணத்தின் முதல மைச்சராகப் பொறுப்பேற்றார் சுதந்திரப் போராட்ட வீரரும் வழக்கறிஞரும் ராஜாஜி என அழைக்கப்படுவருமான ராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவதற்கான ஆலயப் பிரவேசச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. உழவர் கடன் நிவாரணச் சட்டம், கைத்தொழில் பாதுகாப்புச்சட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டங்களாகும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர் களுக்கும் இந்தியைக் கட்டாயப் பாட மாக்கினார் ராஜாஜி. இந்த மொழியாதிக் கத்தை எதிர்த்து பெரியார்-அண்ணா தலை மையில் தமிழகத்தில் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. பலர் சிறை சென்றனர். இரண்டாம் உலகப்போரில் இந்தி யாவை பிரிட்டிஷ் அரசு வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தது.

1946-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. டி.பிரகாசம் 1946 ஏப்ரல் 30-ஆம் நாள் முதலமைச்சரானார். இவரையடுத்து, ஓமந்தூர் ராமசாமி ரெட்டி யார் முதல்வரானார். இந்தியா சுதந்திரமடைந்த போது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் ஓமந்தூரார்தான். அவர் ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தார். 1949-ல் சென்னை மாகாண கவுன்சிலுக் கான தேர்தல் நடந்தது. இதிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. குமாரசாமி ராஜா முதல்வரானார். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெறுகிறவரை இவரே முதல்வர் பொறுப்பினை வகித்தார்.

இந்திய நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் 1952-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், பல கட்சி களின் ஆதரவுடன் 1952-ஆம்ஆண்டு ஏப்ரல் 10-ஆம் நாள் சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி பதவியேற்றார். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் நிலவி வந்த உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ராஜாஜி அக்கறை செலுத்தினார். பண்ணையாள் பாது காப்பு சட்டத்தின் மூலமாக விவசாயத் தொழி லாளர்களுக்குநலன் விளைவித்தார் ராஜாஜி. அவருடைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டம் பெரும் சர்ச்சையையும் போராட்டத்தையும் உண்டாக் கியது. இதனால் 1954-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் முதல்வர் பதவியிலிருந்தும் காங் கிரஸ் கட்சியிலிருந்தும் ராஜாஜி விலகினார்.

அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல் வராகப் பொறுப்பேற்ற காமராஜர் 1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராகப் பணி யாற்றினார் 1957, 1962 தேர்தல்களில் இவ ரது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியே வெற்றி பெற்றது. இலவச கல்வி, மதிய உணவுத் திட்டம், தமிழ் ஆட்சிமொழி சட்டம்,. வைகை நீர்த்தேக்கம், அமராவதி- சாத்தனூர் -கிருஷ்ண கிரி -மணிமுத்தாறு-ஆரணியாறு நீர்த்தேக்கங் கள் உருவாக்கம், குந்தா நீர் மின்திட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் உருவானவை யாகும். மத்திய அரசுடன் வாதாடி,நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் மிகுமின் நிலையம், ஆவடி கனரக வாகன தொழிற் சாலை, ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை ஆகியவற்றைக் கொண்டுவந்தார். இவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம் எனப்படுகிறது.

மூத்தவர்கள் பதவி விலகி, புதியவர்களுக்கு வழிவிடுவது என்ற அவரது திட்டத்தின்படி முதல்வர் பதவியிலிருந்து காமராஜர் விலகிய தால் 1963-ல் பக்தவத்சலம் முதல்வரானார். இவ ரது ஆட்சிக்காலத்தில் இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. மாண வர்கள் போர்க்கோலம் பூண்டனர். இவரே காங்கிரசின் கடைசி முதல்வர்.

1967-ஆம் ஆண்டு நடந்த நான்காவது பொதுத்தேர்லில் தி.மு.க வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வராக அண்ணா பொறுப் பேற்றுக் கொண்டார். இரண்டாண்டுகளுக் கும் குறைவாகவே ஆட்சி செய்த அண்ணா, நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார். சீர்திருத்த திருமணச் சட்டம், இரு மொழித் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி, போக்குவரத்து நாட்டுடைமை, இரண் டாம் உலகத்தமிழ் மாநாடு ஆகியவை இவரது ஆட்சியின் சாதனைகளாகும். 1969 பிப்ரவரி 3-ஆம் நாள் அண்ணா காலமானார்.

அண்ணாவின் மறைவையடுத்து 1969-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் மு.கருணாநிதி, 1969-1971, 1971-76, 1989-91, 1996-2001, 2006 முதல் தற்போது வரை என 5 முறை தமிழக முதல்வராகப் பொறுப் பேற்றுள்ளார். இதில் இரண்டு முறை அவரது ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, பெண்களுக்கு சொத்துரிமை, சமத்துவபுரங்கள், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழு, மிகபிற் படுத் தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, பெண்கள் திருமண உதவித்திட்டம், குடிசை மாற்று வாரியம், கைரிக்ஷா ஒழிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் இவரது ஆட்சிக்காலத்து சாதனை களாகும். தொழில்வாய்ப்புகள் பலவற்றை இவர் உருவாக்கியுள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக மதுவிலக்கைத் தளர்த்தியது இவரது ஆட்சியே. மாநிலத்தில் உள்ள பல பாலங்கள், கட்டிடங்கள் இவரது ஆட்சியில் கட்டப் பட்டவை. வள்ளுவர்கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், குமரிமுனையில் வள்ளுவர் சிலை ஆகியவை இவர் படைத்த பண்பாட்டுச் சின்னங்களாகும்.

தி.மு.கவிலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். தனது தலைமையில் அ.தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கினார். 1977-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானார். 1977-1980, 1980-1984, 1984-1987 எனத் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்று 11 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பை வகித்து இயற்கையெய்தும் வரை அதே பொறுப்பில் இருந்தவர். சத்துணவுத் திட்டம், ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், புகளூர் காகித தொழிற் சாலை ஆகியவை இவரது ஆட்சியின் சாதனை களாகும். சுயநிதி தொழிற்கல்லூரிகள் இவரது ஆட்சிக்காலத்தில்தான் தோன்றின. ஏழை- எளிய மக்களின் நலனை மனதிற்கொண்டு இவர் ஆட்சி செய்தார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் அவரது துணைவியார் வி.என்.ஜானகி முதல்வரானார். இவரால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. ஆட்சி கலைக்கப் பட்டது. 1991-ல் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற, செல்வி ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார். 1991-96, 2001-2006 என இருமுறை முதல்வராகி 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய் துள்ளார். இடையில், சட்டச்சிக்கல் காரண மாக இவரது பதவி பறிபோனதால் 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. அனைத்து மகளிர் காவல்நிலையம், கோவில் களில் அன்னதானம், மழை நீர் சேகரிப்பு திட்டம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, சென்னைக்கு வீராணம் குடிநீர் ஆகியவை இவரது ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட திட்டங் களாகும். சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை, காஞ்சி சங்கராச் சாரியார் கைது ஆகியவை ஜெயலலிதா ஆட்சியின் அதிரடி நடவடிக்கைகளாகும். பொடா சட்டத்தைப் பயன்படுத்தி நக்கீரன் ஆசிரியர் கோபால், அரசியல் தலைவர்கள் வைகோ, நெடுமாறன் ஆகியோரை கைது செய்தது, அரசு ஊழியர் கள் மீதான நடவடிக்கைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு, ஆளுநர் மீது தாக்குதல், மகாமக குளத்தில் ஏற் பட்ட பலிகள், விவசாயிகளின் பட்டினிச் சாவு, நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்த அவலம், வளர்ப்பு மகன் ஆடம்பரத் திரு மணம் ஆகியவை இவரது ஆட்சி மீது கடும் விமர்சனத்தை உண்டாக்கின.

தமிழகத்தில் ஆட்சிகள் மாறி மாறி அமைந்ததால் பல திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ள அதே வேளையில், காவிரி பிரச் சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, பாலாற்று விவகாரம் , கச்சத்தீவு ஒப்பந்தம் என தமிழகத்தின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்பது சாத்தியமற்றதாகவே உள்ளது. ஜன நாயகத்தில் ஆளுங்கட்சியின் செயல்பாடு களுக் குத் தூண்டுகோலாக அமைவது எதிர் கட்சி களின் செயல்பாடுகளேயாகும். காங்கிரஸ் அரசில் கொண்டுவரப்பட்ட பண்ணையாள் பாதுகாப்பு சட்டம், ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம், தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூலி உயர்வுச் சட்டம், நில உச்சவரம்பு சட்டம் ஆகியவை விவசாயிகளின் நலனுக்காக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்களின் விளைவுகளே. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு கிடைத்ததற்கு பாட்டாளி மக்கள் கட்சி (வன்னியர் சங்கம்) நடத்திய போராட்டங்களே அடிப்படை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கான உரிமைகளைப் பெறுவதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட் டவை தொடர்ந்து போராடி வருகின்றன. சிறு பான்மை அமைப்புகள், சமுதாய இயக்கங் கள் ஆகியவை நடத்தும் போராட்டங்களின் தாக்கம் அரசின் திட்டங்களை விரைவுபடுத்து கின்றன. எனவே, ஆட்சியில் பங்கு பெற முடியா விட்டாலும் மக்களுக்கானப் போராட்டங் களை நடத்தும் கட்சிகள் தங்கள் கொள்கை களில் வெற்றி பெறுகின்றன.

நீதிக்கட்சி-காங்கிரஸ் - தி.மு.க- அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்துள்ளன. இந்த ஆட்சிகளில் நிறைவேற்றப் பட்ட திட்டங்களினால் சமூகநீதி-சமுதாய நல்லிணக்கம்- தனிநபர் வளர்ச்சி- புதிய தொழில்நுட்பம்- ஏழைகளுக்கான நலத் திட்டங்கள்- புதிய முதலீடுகள்-பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றில் தமிழகம் இந்தி யாவின் பல மாநிலங்களுக்கும் முன்னோடி யாகத் திகழ்கிறது. பரவலான தொழில் வாய்ப்பு கள், நீராதாரங்களைப் பெருக்குதல், சிறு தொழில் வளர்ச்சி, வேளாண் உற்பத்தி போன்ற துறைகளில் பல படிகள் முன்னேற வேண்டி யுள்ளது. சுயநலன், ஊழல், அரசியல் காழ்ப் புணர்ச்சி, தனிநபர் மீதான தாக்குதல் இவற் றைப் பின்தள்ளி மாநில நலனை ஆளுங் கட்சியும் எதிர்க்கட்சிகளும் மனதில் கொண்டு செயல்பட்டால் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடம் பெற்ற மாநிலமாகத் திகழும். 
By கோவி லெனின்

திராவிடர் இயக்கம் part III

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் அடிப்படையில் நடந்த முதல் தேர்தலிலில் (1920) சென்னை மாகாணத்தில் அதிக இடங்களை வென்ற நீதிக்கட்சியே ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றிருந்தது. அதன் தலைவர் பிட்டி. தியாகராயரை ஆட்சி அமைக்க அழைத்து கடிதம் எழுதினார் ஆளுநர் லார்டு வெலிலிங்டன். தனது தலைமையில் ஆட்சி அமைக்க விருப்பமில்லை என்றும்  தனது கட்சியில் உள்ள தன்னைவிட பெரியவர்கள் ஆட்சி அமைக்க அவர்களை நெறிப்படுத்துவேன் என்றும் பதில் எழுதி, அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் யார் யார் என்பதையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் தியாகராயர்.

நீதிக்கட்சி அமைச்சரவையில் முதல் அமைச்சராக (ச்ண்ழ்ள்ற் ம்ண்ய்ண்ள்ற்ங்ழ்) கடலூர் எ.சுப்பராயலு ரெட்டியார் பொறுப்பேற்றார். இரண்டாவது  அமைச்சராக பி.இராமராய நிங்கார் எனப்படும் பனகல் அரசரும், மூன்றாவது அமைச்சராக சர்.கே.வி.ரெட்டி நாயுடுவும் பொறுப்பேற்றனர். சென்னை மாகாணத்தில் 17.12.1920 முதல் இரட்டை ஆட்சி நடை முறைக்கு வந்தது. 1921-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள், முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றக் கூட்டத்தைக் தொடங்கிவைத்த கன்னாட் பிரபு தனது உரையில், ""நிர்வாகத் திறனும் நல்ல பாரம்பரியமும் கொண்ட இந்தியர்கள் கையில் அதிகாரத்தை ஒப்புவிப்பதில் பெருமையும் பூரிப்பும் அடைகிறேன். இது ஜனநாயக வரலாற்றின் ஆரம்பக் கட்டம் என்றாலும் முக்கியத் திருப்பத்திற்கு வழிகோலும்'' என்றார்.

1921 மார்ச் மாதம் நீதிக்கட்சி ஆட்சியின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதே ஆண்டு ஜூலையில், சுப்பராயலுவுக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டதால் முதல் அமைச்சர் பொறுப்பிலிலிருந்து அவர் விலகினார். டிசம்பர் மாதம் சுப்பராயலு காலமானார். அவருக்குப் பின், பனகல் அரசர் முதல் அமைச்சரானார். இரண்டாவது அமைச்சராக கே.வி.ரெட்டி நாயுடுவும், மூன்றாவது அமைச்சராக ஏ.பி.பாத்ரோவும் பொறுப்பேற்றுக்  கொண்டனர். ஏ.பி.பாத்ரோ இன்றைய ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெர்காம்பூரைச் சேர்ந்தவர். அப்போது  அப்பகுதி, சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்தது.

பனகல் அரசர் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டபின், 1921-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ஆம் நாள், அனைத்துச் சமூகத்தினருக்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பளிப்பதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். ""உத்தியோகத் துறையில் குறிப்பிட்ட வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்குமானால் அது நாட்டுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கும். எல்லாச் சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு உத்தியோகங்களை வழங்கவேண்டும்'' என்கிற அந்த மசோதா, பலத்த எதிர்ப் பையும் மீறி நிறைவேறியது. இதன் மூலம் சென்னை மாகாணத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை பிறப் பிக்கப்பட்டது. எனினும், அதிகாரிகள் இதனை நடைமுறைப் படுத்தாமல் கிடப்பிலேயே போட்டிருந்தனர்.


அரசாங்கப் பணிகளில் தாழ்த்தப்பட்ட- ஒடுக்கப்பட்ட- பிற்படுத்தப்பட்ட-பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு ஒதுக்கீடு அளிக்கவேண்டுமென்றால், அவர்களுக்கு கல்வியிலும் உரிய வாய்ப்புகள் வழங்கவேண்டும் என்பதை நீதிக்கட்சி யினர் உணர்ந்திருந்தனர். இதற்காக, ஒவ்வொரு கல்லூரி யிலும் குழுக்களை அமைத்து அதன் மூலமே மாணவர் களின் சேர்க்கை நடைபெறவேண்டும். கல்லூரித் தலைவர்கள் தங்கள் விருப்பம்போல் மாணவர்களைச் சேர்க்கக்கூடாது என மூன்றாவது அமைச்சரான ஏ.பி.பாத்ரோ ஓர் ஆணையைப் பிறப்பித்தார். இந்த ஆணையின் மூலமாக கல்லூரிகளில் பிராமணரல்லாத மாணவர்கள் சேர்வதற்கு வாய்ப்பு உருவானது. அதற்கு முன் கல்லூரி நிர்வாகத்தில் இருந்த பிராமணர்களே தங்கள் விருப்பம் போல தங்களுடைய சமுதாயத்து மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து வந்தனர். இன்று அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களும் மருத்துவப்படிப்பு, பொறியியல் படிப்பு, வேளாண் அறிவியல், தகவல் தொழில் நுட்பம், நுண்ணறிவியல் போன்ற பலதுறைகளிலும் பட்டம் பெற முடிகிறதென்றால் அதற்கான அடித்தளத்தை நீதிக் கட்சி ஆட்சியே அமைத்தது எனலாம்.

தாழ்த்தப்பட்ட-பழங்குடி சமுதாயத்து மக்களை பஞ்சமர், பள்ளர், பறையர் என இழிவாக அழைக்கும் வழக்கமும்,   அப்படியே பதிவேடுகளில் குறிப்பிடும் வழக்கமும் இருந்து வந்தது. இந்நிலையை மாற்ற வேண்டும் என நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டாக்டர் சி. நடேசனார் தனது திராவிடர் சங்கத்தின் சார்பில் அரசாங்கத்திற்கு ஒரு மனு அனுப்பினார். இதனையடுத்து, 1922 மார்ச் 25-ஆம் நாள், தாழ்த்தப்பட்ட- பழங்குடி மக்களை இனி பஞ்சமர் உள்ளிட்ட சொற்களால் இழிவுபடுத்தக்கூடாது என்றும், ஆதிதிராவிடர் என்ற சொற்களையே பயன்படுத்தவேண்டும் என்றும் சென்னை மாகாண சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கல்வி நிலையங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்து மாணவர்களுக்கான அனுமதியை உறுதி செய்யவும், அவர் களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான கட்டணத்தை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு கல்லூரிகளிலும் உயர்நிலைப்பள்ளிகளிலும் அரைச் சம்பளம் மட்டுமே என்ற சலுகை அளிக்கப்பட்டது. கல்வி- வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, தொழிலாளர் நலனுக்கான ஆணையங்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குடியிருப்பு உள்ளிட்ட வசதிகள் ஆகியவை 1920 முதல் 1923 வரை யிலான நீதிக்கட்சியின் முதலாவது அமைச்சரவையில்  நிறைவேறியது.

நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை

1923 நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலிலிலும் நீதிக் கட்சியே அதிக இடங்களைப் பிடித்தது. எனினும், முதல் பொதுத் தேர்தலிலில் பெற்றது போன்ற பெரும் வெற்றியை நீதிக்கட்சியினால் பெறமுடியவில்லை. நீதிக்கட்சியின் இரண் டாவது அமைச்சரவையில் முதல் அமைச்சராக பனகல் அரசர் பொறுப்பேற்றார். இரண்டாவது அமைச்சராக சர் ஏ.பி.பாத்ரோவும், மூன்றாவது அமைச்சராக டி.என்.சிவஞானம் பிள்ளையும் பொறுப்பேற்றனர்.

நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் நிறைவேறின. அன்றைய கால கட்டத்தில் ஒரு மாணவன் மருத்துவக் கல்லூரியில் (எம்.பி.பி.எஸ்) படிப்பது என்றால் அவனுக்கு சமஸ்கிருதம் தெரியவேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இதனால், பிராமண மாணவர்களே டாக்டராக முடியும் என்ற நிலைமை இருந்தது. இந்த நிர்பந்தத்தை பனகல் அரசர் உடைத் தெறிந்தார். தனிச்சட்டம் மூலம் மருத்துவத்துறையில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அகற்றி, மருத்துவத் துறையில் இந்தியர்களைப் பங்கு பெறச் செய்தார். ""எதிர்ப்பு எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும் அது இந்த நாட்டிற்கு நன்மையை விளைவித்தால், அதை வரவேற்கத் தயாராய் இருக்கிறேன்.  தீமை விளைவிக்குமானால் அதை எதிர்த்து முறியடிப்பேன்'' என்று சட்டமன்றத்தில் அறிவித்தார்  பனகல் அரசர்.

கல்வித்துறைக்குப் பொறுப்பேற்றிருந்த அமைச்சர் ஏ.பி.பாத்ரோ, சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்த ஆந்திரப் பகுதிகளுக்காக ஆந்திரப் பல்கலைக்கழகம்  ஒன்றை உருவாக்க முன்வந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் மாணவர்களின் நலன் கருதி தனிப்பல்கலைக்கழகம் உருவாக்கப்படவேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் அமைப் பதற்கான பணி தொடங்கப்பட்டது. (இது தனியார் பல்கலைக்கழகமாகும்)


தமிழகத்தில் கோவில்கள் அதிகம். அதற்கான சொத்து களும் மிகுதி. இவை ஒழுங்காகவோ நேர்மையாகவோ பராமரிக்கப்படவில்லை. பொறுப்பாளர்கள் தங்கள் சொந்த நலன்கருதி கோவில் சொத்துகளைப் பயன்படுத்தி வந்தனர். இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக நீதிக்கட்சி ஆட்சியில் 1925-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறநிலையப் பாதுகாப்பு மசோதா நிறைவேறியது. இதுவே இன்றுள்ள இந்து அறநிலையத்துறைக்கு முன்னோடியாகும். இதன் மூலமாக கோவில் சொத்துகள் தனிநபர்களின் ஆதிக்கத்தி லிலிருந்து மீட்கப்பட்டு அரசு வசமானது.

நீதிக்கட்சியின் மூன்றாவது அமைச்சரவை

1926-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் நாள் மூன்றாவது பொதுத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலிலில் நீதிக்கட்சிக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. மொத்த இடங்கள் 98-இல் சுய ராஜ்ஜியக் கட்சியினர் 36 இடங்களையும் சுயேச்சைகள் 36 இடங்களையும் நீதிக்கட்சியினர் 21 இடங்களையும் பெற்றனர். காங்கிரஸ் கட்சியின் முடிவின்படி, அதன் துணைக்கட்சியான சுயராஜ்ஜியக்கட்சி அமைச்சரவை ஏற்க வில்லை. நீதிக்கட்சியை சேர்ந்த சுப்பராயன் கட்சியிலிலிருந்து விலகினார். சுயேச்சையாக அமைச்சரவை அமைத்தார். அவருடன் இணைந்து சுயராஜ்ஜியக் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்கள் ஆட்சியமைத்தனர். 1928-இல் அவருடைய ஆட்சிக்கான ஆதரவை சுயராஜ்ஜியக் கட்சி விலக்கிக் கொண்டதால், நீதிக்கட்சி மற்றும் சுயேச்சைகளின் துணை யுடன் சுப்பராயன் அமைச்சரவை மாற்றம் பெற்றது.

இந்த அமைச்சரவையில் இரண்டாவது அமைச்சராக இருந்த எஸ்.முத்தையா முதலிலியார், 1921-இல் நிறைவேற்றப் பட்ட வகுப்புவாரி உரிமை ஆணையை செயல்படுத்த முன்வந்தார். புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, அரசு அலுவலகங்களில் 12 இடங்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டுமென்றால், பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் 5 பேர், பார்ப்பனர் 2 பேர், முஸ்லிலிம்கள் 2 பேர், அய்ரோப்பியர் மற்றும் ஆங்கிலோ இந்தியக் கிறித்துவர் 2 பேர், தாழ்த்தப்பட்டவர் ஒருவர் என்ற விகிதாச்சாரத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பதே இந்த ஆணை. இதுவே, சமூகநீதியின் அடித் தளமாக அமைந்தது. இன்று தமிழகத்தில், 69% இட ஒதுக்கீடு நிலவுவதற்கு முத்தையா முதலிலியார் கொண்டு வந்த வகுப்புவாரி இடஒதுக்கீடே அடிப்படையாகும்.

மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தத்தின் அடிப் படையிலான தேர்தலிலில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. அவர்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிப்பது பற்றி மாகாண அரசே முடிவு செய்துகொள்ளலாம் என்பதால், தமிழக சட்டமன்றத்தில் முதல் பெண் நியமன உறுப்பினராக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பொறுப்பேற்றார். இவரே முதல் பெண் மருத்துவரும் ஆவார். இவர் 1929-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் நாள், தேவதாசி ஒழிப்பு மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார்.

கோவில்களில், குறிப்பிட்ட சமுதாயத்துப் பெண்களை கடவுள் தொண்டு என்ற பெயரில் தேவதாசிகளாக நியமித்துவிடுவார்கள். கோவிலை நிர்வகிப்பவர்களின் விருப்பத்திற்கு ஆட்படவேண்டிய அவலம் இப்பெண்களுக்கு நேர்ந்தது. பாலிலின இழிவை வெளிப்படுத்தும் இத்தகையப் பழக்கம் ஒழிக்கப்படவேண்டும் என்பதே இச்சட்டத்தின் நோக்கமாகும். இதனை, சத்தியமூர்த்தி போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர். ""சமூகத்திற்குத் தாசிகள் தேவை. ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயல்'' என்றார் சத்தியமூர்த்தி. அதற்குப் பதிலளித்த முத்துலட்சுமி ரெட்டி அம்மையார், ""ஒரு குலத்தில் மட்டும்தான் தாசிகள் தோன்றவேண்டுமா? உங்கள் சமூகம் உள்பட மற்ற குலத்துப் பெண்களுக்கு ஏன் இந்தப் பொறுப்பைத் தரக்கூடாது?'' என்று சத்தியமூர்த்தியைப் பார்த்து சூடாகக் கேட்டார். மிகுந்த எதிர்ப்புக்கு நடுவே தேவதாசி ஒழிப்பு மசோதா நிறைவேறியது.

நீதிக்கட்சியின் நான்காவது அமைச்சரவை.

1930 செப்டம்பரில் நடந்த நான்காவது  தேர்தலிலில் நீதிக் கட்சி பெரும் வெற்றி பெற்றது. 70% வாக்காளர்கள் நீதிக் கட்சிக்கு வாக்களித்தனர். பி.முனுசாமி நாயுடு முதல் அமைச்சரானார். பி.டி.ராஜனும் குமாரசாமி ரெட்டியாரும் மற்ற இரு அமைச்சர்களாவர். இந்த  அமைச்சரவை  இரண் டாண்டு காலம் மட்டுமே நீடித்தது. நீதிக்கட்சியின் தலை வராக பொப்பிலிலி அரசர் எனப்படும் ரவு ஸ்வெட சல்லபதி ராமகிருஷ்ண ரங்காராவ் தேர்ந்தெடுக்கப்பட, அவரே 5.11.1932-இல் முதல் அமைச்சரானார்.

மூன்றாண்டுகளுக்கொரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். ஆனால், 1934-இல் சைமன் கமிஷனின் புதிய சீர்திருத்த சட்டங்கள் நடைமுறையாவதில் தாமதம் ஏற்பட்டதால் சென்னை மாகாணத்திற்குத் தேர்தல் நடை பெறவில்லை. அதனால் பொப்பிலிலி அரசரின் அமைச்சரவை 7 ஆண்டுகாலம் பதவியில் நீடித்தது. இனாம்தாரி சட்டம்,  வேளாண்மைத் துறையில் சீர்திருத்தங்கள், கூட்டுறவுத் துறையில் சீர்திருத்தங்கள், பொது தெருக்கள்- பொதுக் கிணறுகள்- பொது இடங்களை எந்த சாதியைச் சார்ந்தவர்களும் பயன்படுத்தும் உரிமை ஆகியவை பொப்பிலிலி அரசர் காலத்தின் முக்கிய சாதனைகளாகும்.

1920-இல் தொடங்கி 1937 வரை சுமார் 17 ஆண்டுகள் நடைபெற்ற நீதிக்கட்சியின் ஆட்சியில் சமூகநீதிக்கான ஆணைகள், சமஸ்கிருத ஆதிக்கத் தகர்ப்பு, பெண்களுக்கான உரிமைகள்- பிரதிநிதித்துவம், கல்வித்துறையில் சீர் திருத்தங்கள் உள்ளிட்ட சமுதாய மாற்றங்களுக்கானத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளும் இவைதான். ஆங்கிலேயரின் இரட்டையாட்சி முறையில் மிகக்குறைந்த சட்ட அதிகாரங்களை வைத்துக்கொண்டு நீதிக்கட்சி தனது திட்டங்களை நிறைவேற்றியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 
Ref:Nakkeeran

திராவிடர் இயக்கம் part II

திராவிடர் இயக்கம் part II நூறாண்டு காலத்திற்கு முன் அனைத்துத்  தரப்பு மக்களும் கல்வி கற்கக்கூடிய வாய்ப்பு இல்லை. தகுதியான கல்வி கற்று உரிய வேலையைப் பெறவும் முடியாத நிலை இருந்தது. சமுதாயத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகளின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டு, அதன் காரணமாக வேலை வாய்ப்பினைப் பெற முடியாத நிலை நீடித்தது.

உயர்சாதியினர் எனப்படும் பிராமண சமுதாயத்தினரே அதிகம் படித்தவர்களாகவும், அரசின் முக்கிய பதவிகளில் இடம்பிடிக்கக்கூடியவர்களாகவும் இருந்தனர். இந்நிலையில் தான், 1912-இல் சென்னையில் டாக்டர் சி.நடேசனாரும் மற்றவர்களும் தொடங்கிய தி மெட்ராஸ் யுனைடெட் லீக் என்ற அமைப்பு, 1913-இல் திராவிடர் சங்கம் என்ற பெயர் பெற்றது. பிராமணரல்லாத மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக திராவிடர் இல்லம் என்ற இலவச விடுதியை அமைத்து, உணவு வசதியையும் இலவசமாக செய்து கொடுத்தார். திராவிடர் சங்கத்தின் விழாக்களில் சிந்தனையாளர் சிங்கார வேலர், தமிழ்த்தென்றல் திரு.வி.க, அன்னிபெசன்ட் அம்மையார் உள்ளிட்ட பலரும் உரையாற்றி வந்தனர். திராவிடர்கள் பற்றிய நூல்களும் வெளியிடப்பட்டன.

அப்போது இந்தியாவில் காங்கிரஸ் கட்சி வளர்ந்து வந்தது. தமிழகத்திலும்  அதன் செல்வாக்கு உயர்ந்திருந்தது. காங்கிரஸ் கட்சியில் செயலாற்றி வந்த சென்னைப் பிரமுகர் களில் டாக்டர் டி.எம்.நாயர் (தாரவாட் மாதவன் நாயர்) முக்கியமானவர் ஆவார். இவர் புகழ்பெற்ற காது-மூக்கு- தொண்டை மருத்துவர். அன்றைய சென்னை நகராட்சியின் (தற்போதைய மாநகராட்சி) உறுப்பினராக இருந்தவர். பொதுநலனில் அக்கறை கொண்டவர். காங்கிரஸ் கட்சியில் பிராமண சமுதாயத்து பிரமுகர்களுக்கே முக்கியத்துவமும் கட்சிப் பொறுப்புகளும் கிடைத்து வந்தன. சென்னை மாகாண சட்டமன்றத்திலிலிருந்து டெல்லிலி இம்பீரியல் சட்டமன்றத்துக்குத் தேர்வுசெய்யப்படும் உறுப்பினர் பதவிக்கு டி.எம்.நாயர் போட்டியிட்டார். வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட டி.எம்.நாயர் தோல்வியடைந்தார். தன்னை பிராமண சமுதாயத்து காங்கிரஸ் பிரமுகர்கள் புறக்கணிப்பதை உணர்ந்து, கட்சிப்பணிகளிலிலிருந்து ஒதுங்கியபடி இருந்தார் டி.எம்.நாயர்.

சென்னை நகரில் காங்கிரசின் மற்றொரு முக்கிய பிரமுகர் சர் பிட்டி.தியாகராயர். இவர் பெரும் செல்வந்தர். பொதுநலத்தில் அக்கறை கொண்ட வள்ளல். சென்னை நகராட்சியின் 40 ஆண்டுகால உறுப்பினர். சென்னை மாநகராட்சியின் (அதிகாரப் பற்றற்ற) முதல் தலைவர். அவர் மயிலாப்பூர் கபாலீஸ்வரர்  கோவில் திருப்பணிக்காக 5000 ரூபாய் நிதி வழங்கினார். அன்றைக்கு அது மிகப் பெரிய தொகை. குடமுழுக்கு நாளில் அவர் கோவிலுக்கு சென்றபோது அவரை கோபுரத்தின் மீது ஏற அங்கிருந்த பிராமணர்கள் அனுமதிக்கவில்லை. திருப்பணிக்காக பெருந் தொகையை நன்கொடையாகக் கொடுத்திருந்தாலும், சாதியில் பிராமணர்களுக்குக் கீழான சூத்திரர் என்பதால் அவர் மேலே ஏறக்கூடாது என அவரிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்த பிராமணர் ஒருவரே தியாகராயரைத் தடுத்துவிட்டார். இந்த நிகழ்ச்சி தியாகராயருக்கு பெரும் அவமானமாகிவிட்டது. பிராமணர்களே சமுதாயத்திலும் அரசாங்கத்திலும் செல்வாக்குடையவர்களாக இருக்கிறார்கள் என்றும், மற்ற சாதியினருக்கு உரிய வாய்ப்புகள் அமையவில்லை என்பதை யும் உணர்ந்தார் தியாகராயர்.

திராவிடர் சங்கத்தின் செயலாளராக இருந்த டாக்டர் சி.நடேசனார், பிராமணரல்லாத பிரமுகர்களை ஒருங் கிணைக்கும் பணிகளில் தீவிரமாக இருந்தார். அவருடைய முயற்சியால் டாக்டர் டி.எம்.நாயரும், சர். பிட்டி தியாகராயரும் பிராமணரல்லாத மற்ற சமுதாயத்தினர் விழிப்புணர்வு பெறும் வகையில் பொதுத்தொண்டாற்ற முன் வந்தனர். 1916-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் நாள் பிராமணரல்லாத பிரமுகர் களின் கூட்டம் ஒன்று கூடியது. அதுவே, நீதிக்கட்சி-ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் தோற்றமாகும். இந்த இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட, பிராமணரல்லாதார் அறிக்கையே நீதிக்கட்சியின் நோக்கத்தையும் குறிக்கோளையும் முழுமையாக வெளிப்படுத்தியது.

பிராமணரல்லாதார் முதலில் தங்களுக்குத் தாங்களே உதவி புரிந்து கொண்டு முன்னேறி வரவேண்டியது  அவசியமாகும். பரந்த நிரந்தர அடிப்படையில் அவர்கள் கல்வி, சமுதாயம், அரசியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முன்னேற்றமடைவதற்கு அவசியமான எல்லாச் செயல்களையும் மேற்கொள்ள வேண்டும்- என்பதே அந்த அறிக்கையின் சாராம்சமாகும். திராவிடர் இயக்கத்தின் முன்னோடிகளாக டாக்டர் சி.நடேசனார், சர் பிட்டி.தியாகராயர், டாக்டர். டி.எம்.நாயர் ஆகியோர் அழைக்கப்படுகிறார்கள்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சார்பில் ஜஸ்டிஸ் என்ற ஆங்கில ஏடு நடத்தப்பட்டது. அதனால் அந்த இயக்கத்தை ஜஸ்டிஸ் கட்சி என்று குறிப்பிட்டனர்.  அதை அப்படியே தமிழில் நீதிக்கட்சி என்று அழைக்கத் தொடங்கினர். அரசியல் நிர்வாகத்தில் பங்கேற்பதன் மூலமாக திராவிடர்களான பிராமணரல்லாத மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு- சமுதாய அந்தஸ்து ஆகியவை கிடைக்கச் செய்யவேண்டும் என்பதைக் குறிக்கோளாகக்  கொண்டிருந்தது நீதிக்கட்சி.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் அதிகாரம் மிக்கவர்களாக ஆங்கிலேயர்கள் இருந்தார்கள். ஆட்சி நிர்வாகத்தில் இந்தியர்களுக்குக் குறைந்தளவே அதிகாரமும் பிரதிநிதித்துவமும் இருந்தன. 1909-ஆம் ஆண்டு, இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ஆங்கிலேயர் மிண்டோவும்- இங்கிலாந்தில் இந்தியாவின் அமைச்சராக இருந்த ஆங்கிலேயர் ஜான் மார்லிலியும் வழங்கிய அரசியல் சீர் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன்படி, இந்தியாவில் உயர் பதவிகளிலும் நீதித்துறையிலும் இந்தியர் களுக்கு பொறுப்பளிப்பது, லண்டனில் உள்ள இந்தியாவுக் கான அமைச்சரின் ஆலோசனை சபையில் இந்தியர்களுக்கு இடமளிப்பது, மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர் களுக்குத் தனித்தொகுதிகள் ஒதுக்குவது ஆகியவை இச்சீர் திருத்தத்தின் முக்கிய அம்சங்களாகும். இதன்படி செயல்பட்ட இந்தியாவின் மத்திய சட்டமன்றமும், மாநில சட்டமன்றங்களும் போதிய அளவு சட்டமியற்றும் அதிகாரங்களைப் பெற்றிருக்கவில்லை. இதனால், மிண்டோ- மார்லிலி சீர்திருத்தங் களுக்கு காங்கிரஸ் கட்சியும் சுதந்திரப் போராட்டத் தலைவர்களும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இதனையடுத்து, மாண்டேகு-செம்ஸ்போர்ட் வழங்கிய சீர் திருத்தங் களை இந்தியாவில் நடைமுறைப்படுத்த பிரிட்டிஷ் அரசு முன்வந்தது. மாண்டேகு, இந்தியாவுக்கான அமைச்சராக இங்கிலாந்தில் செயல்பட்டவர். செம்ஸ்போர்ட், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்.

லண்டனிலிலிருந்து மாண்டேகு இந்தியாவுக்கு வந்து, இங்குள்ள கட்சிகளுடன் ஆலோசனைகள் நடத்தினார். அப்போது, நீதிக்கட்சி சார்பில் அவரை சந்தித்த டாக்டர் டி.எம்.நாயர், பிராமணரல்லாதாருக்குத் தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் எனும் வகுப்புவாரி உரிமைக் கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், இக்கோரிக்கையை மாண்டேகு-செம்ஸ்போர்டு குழு ஏற்றுக்கொள்ளவில்லை. வாக்குரிமைக் கமிட்டியிடம் வலிலியுறுத்தி, தனித் தொகுதி கோரிக்கையை வலிலியுறுத்திப் பெறவேண்டும் என நீதிக்கட்சி முடிவுசெய்தது. இதற்காகத் தன் சொந்த செலவில் லண்டன் சென்று ஆதரவைத் திரட்டினார் டி.எம்.நாயர். நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிடம் தன் கருத்துகளைத்  தெரிவிப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டார். கூட்டுக்குழுவிடம் சாட்சியம் சொல்வதற்கு முதல்நாளான, 1919 ஜூலை 17-ஆம் தேதி நாயரின் உயிர் பிரிந்தது. இது நீதிக்கட்சியின் கோரிக்கைக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையிலான  இந்தியச் சட்டத்தை 1919-ஆம் டிசம்பர் 23-ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இதன்படி, இந்தியாவுக்கான மத்திய சட்டமன்றம், இரண்டு அவைகளுடன் ஏற்படுத்தப்பட்டன. சென்னை உள்பட எட்டு மாகாண சட்டமன்றங்கள் அமைந்தன. இந்த சட்டமன்றங் களில் இரட்டையாட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. நிதி, நீதி உள்ளிட்டவை ஆங்கிலேய கவர்னரிடமும், கல்வி- விவசாயம்-உள்ளாட்சி போன்றவை இந்தியர்களிடமும் இருக்கும் என்பதே இரட்டையாட்சி முறை.

வகுப்புரிமை கோரிக்கையை நீதிக்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலிலியுறுத்தியதால், இது பற்றி கவனிக்க லார்டு மெஸ்டன் என்பவரை பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்தது. வகுப்புவாரி உரிமை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டது. முஸ்லிலிம்கள், சீக்கியர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டதுபோல தனித் தொகுதிகள் எதுவும் பிராமணரல்லாதாருக்கு ஒதுக்கப்படவில்லை. ஆனால், சென்னை மாகாணத்தின் 65 பொதுத் தொகுதிகளிலேயே 28 இடங்கள் பிராமணரல்லாதாருக்கு ஒதுக்கப்பட்டன.

(அன்றைக்குத் தனித் தொகுதி என்பது ஒரு தொகுதி யிலேயே பொதுவான வாக்குரிமைக்காக ஒன்றும், குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கான வாக்குரிமை ஒன்றுமாக அமைந்திருந்தது)

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் அடிப்படையில், 1920-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. 21 வயது நிறைந்த பிரிட்டிஷ்-இந்திய குடிமக்களில் சொத்து உள்ளவர்கள், வரிசெலுத்துவோர், எழுதப்படிக்கத் தெரிந்தோருக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்பட்டது. இதிலும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. இந்தத் தேர்தலிலில் காங்கிரஸ் கட்சி நேரடியாகப் பங்கேற்கவில்லை. அக்கட்சியைச் சேர்ந்த சிலர் சுயராஜ்ஜியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டனர். சென்னை மாகாணத் தேர்தலிலில் நீதிக்கட்சி போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றது. சட்டமன்றத்திற்கான மொத்த இடங்கள் 127-இல் 81 இடங்கள் நீதிக்கட்சிக்குக் கிடைத்தன. 
தொடரும்