Sunday, June 24, 2012

இந்தியா - பாகிஸ்தான் போரும் சமாதானமும்!

கொண்டாட்டம் நிறைந்த பிறந்தநாள் விழாவில், முழு கேக்கைத் துண்டாக்குவது ஆங்கிலேயர் மரபு. இந்தியாவுக்கு சுதந்திரக் கொண்டாட்டத்தை வழங்கியபோதும் தங்கள் மரபுப்படி துண்டு போடத் தவறவில்லை வெள்ளைக்காரர்கள். அப்போது அவர்கள் துண்டுபோட்டது கேக்கை அல்ல, தேசத்தை! 1947-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதற்கு முதல் நாளே (ஆகஸ்ட் 14) பாகிஸ்தான் என்ற இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட  புதிய சுதந்திர நாட்டை தந்துவிட்டது பிரிட்டிஷ் அரசு.

முஸ்லிம் நாடாக பாகிஸ்தானும் மதசார் பற்ற நாடாக இந்தியாவும் அறியப்பட்டாலும் மதத்தை முன்வைத்து இருநாடுகளிலும் பிரச்சினைகள் ஏற்பட்டதோடு, இருநாடுகளுக் கிடையிலான பிரச்சினைகளும் 63 ஆண்டு களாகத் தொடர்ந்து வருகிறது. அதன் காரண மாக எல்லையோர மோதல்கள், இருநாட்டுக்கு மான போர், அதன்பின் சமாதான பேச்சு வார்த்தைகள், புதிய ஒப்பந்தங்கள் என பல விதமான சூழல்கள் ஏற்பட்டாலும் நிரந்தரத் தீர்வு இன்றுவரை ஏற்படவில்லை.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பெரும் பிரச்சினையாக முன்வைக்கப்படுவது, காஷ்மீர். முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதி என்பதால் பாகிஸ்தான் அதனை உரிமை கொண்டாடு கிறது. நிலவியல் அடிப்படையில் அது நம்முடையது என்கிறது இந்தியா. காஷ்மீரின் மண்ணின் மைந்தர்களோ  இருநாடுகளுடனும் சேர விரும்பாமல் தனிநாடு கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

1947-ல் காஷ்மீர் யாருக்கு என இருநாடு களுக்கும் முதன்முதலாக சிக்கல் எழுந்தபோது, அந்த மாநிலத்தைக் கையகப்படுத்த பாகிஸ் தான் தன் படைகளை அனுப்பியது. காஷ் மீரின் மகாராஜா இந்தியாவின் உதவியை நாடி னார். இதையடுத்து இந்தியப் படைகளுக்கும் பாகிஸ்தான் படைகளுக்கும் 1947-ஆம் ஆண்டு  அக்டோபரில் தொடங்கிய போர், 1948 ஏப்ரல் வரை நடந்தது. ஐ.நா.சபை தலையிட்டது. மகாராஜா விருப்பப்படி இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தது. அதேநேரத்தில், காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்கள் எந்த நாட்டுடன் சேர விரும்புகிறார்கள் என்பதை அறிய வாக் கெடுப்பு நடத்தவேண்டும் என்றும் தீர்மானிக் கப்பட்டது. இன்றுவரை அதற்கான வாக் கெடுப்பு நடத்தப்படவில்லை.  காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு ஒன்று வரை யறுக்கப்பட்டு, அந்தக் கோட்டினை இருநாடு களும் மீறக்கூடாது என முடிவானது.

இந்த முடிவுகள் மீறப்படும்போது எல்லைப் புற மோதல்களும் பெரிய அளவிலான போர்களும் நடப்பது தொடர்கதையாகி விட்டது. 1965-ல் காஷ்மீருக்குள் பாகிஸ்தான் படைகள் நுழைந்ததால் போர் மூண்டது. இந்தியப் பிரதமராக லால்பகதூர் சாஸ்திரி இருந்தார். ஜெய் ஜவான்-ஜெய் கிஸான் என்ற முழக்கத்துடன் இந்தியப் படைகள் போரில் ஈடுபட்டன. நாடு முழுவதும் இந்த முழக்கம் எதிரொலித்து, எல்லையில் போராடும் வீரர் களுக்கு உத்வேகம் அளித்தது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் அதிக அளவில் பீரங்கி டாங்கிகள் பயன்படுத்தப்பட்ட இந்தப் போரில் இந்தியப் படைகள் வேகமாக முன்னேறின. பாகிஸ்தான் படையால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

1966-ல் அன்றைய சோவியத் யூனியனுக்கும் பட்ட (இன்றைய உஸ்பெகிஸ்தான்) தாஷ் கண்ட் நகரில் இந்திய பிரதமர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டது. போருக்கு முன்பு இரு நாட்டுப் படைகளும் எங்கு இருந்தனவோ அந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டும் என்றும், ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் இன்னொரு நாடு தலையிடக்கூடாது என்றும் இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவு வளர் வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த ஒப்பந்தத்தில்  வலி யுறுத்தப்பட்டது. ஒப்பந்தத்திற்காக தாஷ் கண்ட் சென்ற பிரதமர் சாஸ்திரி , உடல்நலக் குறைவால் அங்கேயே மரணமடைந்தார் .

தாஷ்கண்ட் ஒப்பந்தத்திற்குப்பிறகும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த காஷ் மீரின் சில பகுதிகள் இந்தியாவசம் ஒப்படைக் கப்படவில்லை. ஆசாத் காஷ்மீர்  என்று பாகிஸ்தான் அதை அழைக்கிறது. இந்தியாவோ, அதை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் என்கிறது. தொடர்ச்சியாக பல மோதல்கள் நிலவி வந்த சூழலில், பாகிஸ்தான் பிரிவினையின்போது அந்நாட்டுடன் இணைக்கப்பட்ட கிழக்கு வங்காள மாநில மக்கள் தங்களுக்கான தனிநாடு கோரி போராடினர். அவர்கள் மீது பாகிஸ்தான் ஏவிய அடக்குமுறையின் காரணமாக, இலட்சக் கணக்கான கிழக்கு வங்காளிகள்  இந்தியா விற்கு அகதிகளாக வந்தனர். நெருக்கடிக் குள்ளான இந்தியா, வங்கதேச விடுதலையை ஆதரிக்கும் விதத்தில் பாகிஸ்தான் மீது போர் தொடுத்தது.

1971-ல் நடந்த இந்தப் போரை இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி மிகத் திறம்பட வழிநடத்தினார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்காவும், இந்தியாவுக்கு ஆதரவாக சோவியத் யூனியனும் (ரஷ்யா) களமிறங்கிய தால் இது உலகப்போராக மாறுமோ என்ற அச்சம் பரவியது. இப்போரில் இந்தியா  பெரும் வெற்றி பெற்று, பங்களாதேஷ் என்ற சுதந்திர நாடு உருவாக காரணமானது. இப் போரில் பாகிஸ்தான் படையினர் 90ஆயிரம் பேர் இந்தியாவிடம் சரணடைந்தனர்.  இந்தியாவின் வலிமையையும் இந்திரா காந்தியின் வல்லாண்மையையும் உலக அளவில்  எடுத்துக்காட்டும் விதத்தில் இந்தப் போர் அமைந்தது. இந்தப் போருக்குப்பின் 1972-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் நாள் போடப் பட்ட சிம்லா ஒப்பந்தத் தின் படி இருநாடுகளும் அமைதி வழியில் பிரச் சினைக்குத் தீர்வுகாண வலியுறுத்தியது.

இருநாடுகளுமே அûதியை நிலை நிறுத்து வதில் உண்மையான அக்கறைசெலுத்த வில்லை என்பதைத் தான் தொடர்ச்சியான மோதல்கள் காட்டுகின்றன. 1999-ல் கார்கில் எல்லைப்புறம் வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் படைகளை இந்தியப் படைகள் எதிர் கொண்டன. கார்கில் போர் என வர்ணிக்கப்பட்ட இந்த யுத்தத்தில் இந்தியப் படைகளின் வேகமான முன்னேற்றத்தினால் பாகிஸ்தான் படைகள் எல்லைக் கட்டுப் பாட்டு கோட்டுக்கு அப்பால் திரும்பின. இதையடுத்து 2001-ஆம் ஆண்டில் ஆக்ராவில் இந்தியப் பிரதமர் வாஜ்பாயும், பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபும் சந்தித்தனர். முக்கியமான முடிவுகள் எடுக்கப்படாவிட்டாலும் அமைதித் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை பிறந்தது.

இருநாடுகளுக்குமிடையே மீண்டும் பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை சீராயின. எனினும், இந்திய நாடாளுமன்றம் மீது 2001, டிசம்பர் 13-ந் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல், 2008, நவம்பர் 26-ல் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் ஆகிய வற்றில் பாகிஸ்தான் அரசுக்குத் தொடர்பிருப்ப தாக இந்திய அரசு தெரிவித்துவரும் குற்றச் சாட்டுகளை பாகிஸ்தான் அலட்சியப்படுத்துவ தாலும், இத்தாக்குதல் சம்பவத்தில் தொடர் புடைய தீவிரவாதிகளை ஒப்படைக்க பாகிஸ் தான் அரசு மறுப்பதாலும் அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரோஷி இடையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தை முறிந்ததுடன், இந்தியத் தரப்பு கசப்பான அனுபவங்களை சந்திக்க நேர்ந்தது.

காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. மன்றத்தின் மூலம் சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகள் இன்றுவரை பயனளிக்க வில்லை. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் தங்கள் நாடு இப் பிரச்சினையில் தலையிடாது எனத் தெரிவித்து விட்டார். உண்மையான அமைதியை விரும்பாத வரையில், கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு கைகுலுக்குவதுபோலத் தான் இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவு.

No comments:

Post a Comment