Monday, June 25, 2012

இந்தியாவின் ஜனாதிபதி

'இந்தியாவின் ஜனாதிபதி, இங்கிலாந்தின் முடிமன்னருக்கு இணையானவர். அவர் நாட்டின் தலைவரே அன்றி, நிர்வாகத் தலைவர் இல்லை. தேசத்தின் புறவுருவாய் தோற்றம் தரும் அவர், ஆட்சி செய்வது இல்லை. நாட்டின் அடையாளச் சின்னமாக விளங்கும் அவருடைய பெயரால் நிர்வாக முடிவுகள் மேற்கொள்ளப்படுவது வெறும் வினைமுறை ஏற்பாடு’ (ceremonial device) என்று அண்ணல் அம்பேத்கர் நவம்பர் 4, 1948 அன்று அரசியல் நிர்ணய சபையில் தெளிவுபடுத்தினார்!
அமெரிக்க ஜனாதிபதியோ, நிர்வாகத் தலைவர். அமைச்சரவை அவருக்குக் கட்டுப்பட்டது. ஆனால், இந்தியக் குடியரசுத் தலைவர், அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டவர்; அமைச்சரவையின் அறிவுரைப்படி நடக்க வேண்டியவர். அரசமைப்புச் சட்டப்படி ஜனாதிபதி ஓர் அலங்கார பொம்மை என்ற கருத்தேற்றத்தை டாக்டர் ராஜேந்திர பிரசாத் அங்கீகரிக்க​வில்லை. அரசமைப்புச் சட்டத்தின் 74(1) உறுப்பு 'அமைச்சரவை, ஜனாதிபதிக்கு உதவவும், அறிவுரை வழங்கவும் உள்ளது என்று​தான் உரைக்கிறது. அதன் அறிவுரைப்படியே அவர் எப்போதும் செயற்படவேண்டும் என்று குறிப்பிடப்​படவில்லை’ என்பது ராஜன் பாபுவின் அபிப்ராயம் ஆகும்.
நாட்டின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், முதல் பிரதமராக விளங்கிய ஜவகர்லால் நேருவுக்கு செப்டம்பர், 1952-இல் எழுதிய கடிதத்தில், 'சில தருணங்களில் ஜனாதிபதி சுயேச்சையாக முடிவெடுக்க வாய்ப்பு உண்டு’ என்று குறிப்பிட்டார். இந்தக்குறிப்பை நேருவால் ரசிக்க இயலவில்லை. ஆனாலும், தன் கருத்து வேற்றுமையை வெளிப்படுத்த நேரு தயங்கினார். காரணம், இருவரும் காந்தியப் படையின் தளகர்த்தர்களாக இருந்தவர்கள். ராஜன் பாபு, மூன்று முறை காந்தியால் காங்கிரஸ் தலைவராக்கப்பட்டவர். சட்டப் படிப்பில் டாக்டர் பட்டம் பெற்ற பிரசாத், அரசமைப்புச் சட்டத்துக்கு வடிவம் வழங்கிய அரசியல் நிர்ணய சபையின் தலைமை நாற்காலியை அலங்கரித்தவர்.
ராஜன் பாபுவுடன் மோதலைத் தவிர்க்க விரும்பிய நேரு, அவர் எழுதிய கடிதத்தின் நகலை அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி ஐயருக்கும், அன்றைய அட்டர்னி ஜெனரலாகப் பதவி வகித்த எம்.சி. செதல்வாடுக்கும் அனுப்பி வைத்து அவர்​களுடைய கருத்தை வழங்கும்படி வேண்டினார். 'நம் அரசமைப்புச் சட்டம் பிரிட்டிஷ் அமைப்பு முறையை முன்மாதிரியாகக் கொண்டு இருப்பதால், குடியரசுத் தலைவர் அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டியர் ஆவார்’ என்று இருவரும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். ராஜன் பாபுவுக்கு இது மனநிறைவைத் தராவிடினும் நாட்டு நலனை முன்னிறுத்திப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆயினும், தான் ஓர் அலங்கார பொம்மை என்பதை இறுதிவரை அவர் ஏற்கவில்லை.
உச்ச நீதிமன்றம் 'சம்ஷேர் சிங் - இந்திய யூனியன்’ வழக்​கில், 'குடியரசுத் தலைவர், அமைச்சரவையின் முடிவு​களுக்கு ஏற்பவே செயற்பட வேண்டும் என்றும், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படும் 'ஜனாதிபதியின் மனநிறைவு’ என்பது அவரது தனிப்பட்ட மனநிறைவு அன்று; அமைச்சரவையின் மனநிறைவே’ என்றும் தெளிவுபடுத்தியது. ஆனாலும், ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பவர் எந்த நேரத்​திலும் ஏதாவது ஒரு வழியில் அமைச்சரவைக்கு நெருக்கடியைத் தரக்கூடும் என்ற அச்சம் ஒவ்வொரு பிரதமருக்கும் அந்தரங்கமாக இருந்தது. இந்த அச்சம்தான் 'ரப்பர் ஸ்டாம்ப்’ மனிதர்களைத் தேர்ந்தெடுக்க அடித்தளமிட்டது.
ராஜன்பாபு, மத்திய அமைச்சரவையின் முடிவுகளுக்கு மறுப்பேதும் குறிப்பிடாத மௌனப் பார்வையாளராக வீற்றிருக்க விரும்​பவில்லை. அவருக்​கும் நேருவுக்கும் இடையில் அந்தரங்​கமான மோதல்கள் அடிக்கடி அரங்கேறின. கஜனி முகம்மதுவால் பாழாக்கப்பட்ட சோமநாதர் ஆலயம் புதுப்பிக்கப்பட்ட பணியில் நேருவின் விருப்பத்தை மீறி வெளிப்படையாகப் பங்​கேற்றார் பிரசாத். காசியில் சாமியார்கள் கால்களில் ஜனாதிபதி விழுந்து எழுந்ததை நேருவால் ஜீரணிக்க முடியவில்லை. ராணுவத்தளபதி திம்மையாவின் ராஜினாமா விவகாரம், திபெத் பிரச்னையில் நேருவின் அணுகுமுறை, கேரளாவில் 1959-ல் நம்பூதிரிபாட் தலைமையில் இயங்கிய கேரள அரசைக் கவிழ்த்தது போன்றவற்றில் அமைச்சரவை முடிவுகளை மனநிறைவுடன் ராஜன்பாபு ஏற்கவில்லை.
தன் விருப்பங்களுக்குத் தலை அசைக்காத அவரை, இரண்டாவது முறை ஜனாதிபதியாக்க நேரு விரும்பவில்லை. ஆனால், மௌலானா அபுல்கலாம் ஆசாத் வற்புறுத்தியதால் ராஜன்பாபு மீண்டும் ஜனாதிபதியாய் நீடிக்க  விருப்பம் இல்லாமல் பணிந்து கொடுத்தார் நேரு. மூன்றாவது முறையும் பிரசாத் பதவியில் தொடர விரும்பிய போது, நேரு பச்சைக்கொடி காட்டவில்லை. தொடர்ந்து 12 ஆண்டுகள் (1950-62) ஜனாதிபதி பதவியில் பவனி வந்தவர் பாபு ராஜேந்திர பிரசாத் ஒருவர் மட்டுமே.

தத்துவ மேதை ராதாகிருஷ்ணன் ஜனாதி​பதியானால் தனக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று நேரு நம்பினார். ஆனால், சீன ஆக்கிரமிப்பில் இந்தியாவின் கௌரவம் களங்​கமுற்றபோது ராதாகிருஷ்ணன், நேருவின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்றார்; பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.கே.கிருஷ்ணமேனன் பதவி விலக வேண்டும் என்று பிரதமருக்கு அழுத்தம் கொடுத்தார். நேரு, சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகிய மூவரும் ராதாகிருஷ்ணன் ஜனாதிபதியாக இருந்தபோது பிரதமர்களாகப் பதவி வகித்தனர். இந்திரா காந்தியின் அரசியலும் ஆட்சி நிர்வாகமும், உயர்ந்த லட்சியங்களில் பிடிப்புள்ள ராதாகிருஷ்ணனுக்கு ஏற்புடையதாக இல்லை. பொறுப்பில் இருந்து விலகுவதற்கு முன்பு தன்னுடைய இறுதிக் குடியரசு நாள் உரையில் 'நிர்வாகத் திறமையற்ற அரசு’ என்று வெளிப்படையாகவே விமர்சித்தார் அந்தத் தத்துவ ஞானி.

ராஜன் பாபுவுக்குப் பின், துணை ஜனாதிபதி யாக இருந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி யானார். அவருக்குப் பின், துணை ஜனாதிபதி ஜாகீர் உசேன் ஜனாதிபதியானார். பிரசாத், சட்ட நிபுணர். ராதாகிருஷ்ணனும், ஜாகீர் உசேனும் உன்னதமான கல்வியாளர்கள். அரசியல் சூழ்ச்சி​களுக்கு அப்பாற்பட்ட குடியரசுத் தலைவர் பதவியை அலங்​கரித்த முதல் மூவரும் அந்தப் பதவிக்குரிய கௌரவத்தைக் காப்பாற்றியவர்கள்; நாட்டு நலனைப் பெரிதாக நினைத்​தவர்கள்; பதவியைக் காப்பாற்றிக்கொள்ளப் பிரதமரின் கைப்பொம்மையாக இருக்க விரும்பாதவர்கள்.
இந்திரா காந்தியின் ஆட்சிப்படலம் ஆரம்​பமானது. குடியரசுத் தலைவர் கொலு பொம்மை ஆக்கப்பட்டார்.
நேரு, ராஜேந்திர பிரசாத் இணக்கமாக இல்லாத​ போதும் 12 ஆண்டுகள் பொறுமை காத்தார். அவருடைய மகள் இந்திரா காந்தியால் ராதாகிருஷ்ணனை ஓர் ஆண்டுகூட ஏற்க முடியவில்லை. பதவி நாற்காலிக்குப் பெருமை தேடித் தந்த தத்துவ ஞானியை இரண்டாவது முறை ஜனாதிபதியாக்க இந்திரா விரும்பவில்லை. அவருடைய மருமகள் சோனியா காந்தி, இளைஞர்களால் ஆராதிக்கப்படும் அப்துல்கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க இசையவில்லை. நேரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் ஜனாதிபதி தேர்வும் அரசியலாக்​கப்பட்டது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகிய மூவருமே ரப்பர் ஸ்டாம்பாக ஜனாதிபதியை மாற்றிய பெருமைக்கு உரியவர்கள்(!)

காங்கிரஸை 1969-ல் இரண்​டாகப் பிளந்து, கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் சஞ்சீவ ரெட்டியைத் தோற்கடிக்க, வி.வி.கிரியைத் தேர்தலில் நிறுத்தி, மனசாட்சிப்படி வாக்களிக்கும்படி காங்கிரஸ்காரர்களைத் தூண்டிவிட்டு, தான் ஆடிய அரசியல் சதுரங்கத்தில் ஜனாதிபதி பதவியைப் பகடைக்காயாக மாற்றியவர் இந்திரா காந்தி. அன்றுதான் வி.வி.கிரி வடிவத்தில் ஜனாதிபதி, ரப்பர் ஸ்டாம்ப் ஆனார்
இந்திரா காந்தியால் ஜனாதிபதியான வி.வி.கிரி நன்றிக் கடனாற்றுவதற்காக, விரும்பியே ரப்பர் ஸ்டாம்பாக மாறினார். ஆனால், அவராலும் ரயில்வே வேலை நிறுத்தத்தை இந்திரா காந்தி கையாண்ட விதத்தை வரவேற்க முடியவில்லை. குஜராத் மாநில அரசுக் கவிழ்ப்பில் கிரியின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டது. 'ஏழை எளிய மக்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றத் தவறி விட்டது’ என்று அவர் செய்த விமர்சனம் இந்திரா காந்தியின் கசப்பைத் தேடிக்கொண்டது. கிரியைவிட அழுத்தமான ரப்பர் ஸ்டாம்பை அடுத்து இந்திரா தேடியபோது பொருத்தமாகக் கண்டெடுக்கப்பட்டவர்தான் பக்ருதீன் அலி அகமது. இந்திரா காந்தி ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்து நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்த முனைந்தபோது, மறுப்பின்றிக் கையப்பமிட்ட மகாவிசுவாசி அவர். அவரை விடவும் விசுவாசி தேவைப்​பட்டபோது இந்திராவின் கண்களில் தட்டுப்​பட்டவர்தான் கியானி ஜெயில்சிங். 'இந்திரா காந்தி விரும்பினால் அவருடைய அறையில் துடைப்பம் பிடித்துப் பெருக்கவும் தயங்க மாட்டேன்’ என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்த ஜெயில் சிங்குக்கு இணையாக யாரே இருக்க வல்லார்! அன்று இந்திரா காந்தியின் கண்டுபிடிப்பு ஜெயில்சிங், நேற்று சோனியாவின் கண்டுபிடிப்பு 'உலகம் சுற்றிய’ பிரதீபா பாட்டீல். இந்திய அரசியலில் இந்திரா குடும்பத்துப் பங்களிப்பை நினைத்தாலே நெஞ்சு 'இனிக்கிறது’!
இன்று, சோனியா விரும்பி அறிவித்த மனிதர் அல்லர் பிரணாப் முகர்ஜி. அவருடைய ஆசை அமைதியின் வடிவம் ஹமீது அன்சாரியை ஜனாதிபதி​யாக்குவதுதான். முலாயம் சிங்கும் மம்தாவும் அவருடைய ஆசையை நிராசையாக்கி விட்டனர். பிர​ணாபின் திறமையை விட அன்சாரியின் அடக்கம்தான் சோனியாவுக்குத் தேவை. ஏன் பிரணாபிடம் சோனியா அஞ்ச வேண்டும்? ரப்பர் ஸ்டாம்ப் பதவி, அலங்கார பொம்மைப் பதவி என்றாலும் ஜனாதிபதி பதவி ஓரளவு கூர் தாங்கிய கத்தி. அதைக்கொண்டு கொஞ்சமாவது பயமுறுத்த முடியும். அனுபவத்தில் சோனியா காந்தி அதை அறிவார்.
இந்திரா காந்தியால் தோற்கடிக்கப்பட்ட சஞ்சீவ ரெட்டி, ஜனதா ஆட்சியின் கருணையால் குடியரசுத் தலைவரானார். கட்சிக்குள் நேர்ந்த குழப்பத்தால் மொரார்ஜி தேசாய் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகியதும், ஜகஜீவன்ராம் ஆட்சியமைக்க ஆதரவு எம்.பி-க்கள் பட்டியலுடன் ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகர், சஞ்சீவ ரெட்டியைச் சந்தித்தபோது அவர் ஏற்க மறுத்தார். கோபத்துடன் வெளியேறிய சந்திரசேகர், ஜனாதிபதி மாளிகையின் வெளியே பத்திரிகையாளர்களிடம், ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பொங்கினார். தீட்டிய மரத்திலேயே கூர் பார்த்தது சஞ்சீவ ரெட்டி கத்தி.
இந்திரா காந்தியின் தீவிர விசுவாசி ஜெயில்சிங், ராஜீவ் காந்தியின் ஆட்சியைக் கவிழ்க்க ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தப் பார்த்தார். ராஜீவ், ஜெயில் சிங்கை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. பிரதமர் நாட்டு நடப்புகளை, நிர்வாக முடிவுகளை அவ்வப்போது ஜனாதிபதியைச் சந்தித்துப் பரிமாறிக் கொள்ளும் நடைமுறையை ராஜீவ் புறக்கணித்தார். 'மரபை உடைக்கலாமா?’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்டபோது, 'நான் பல மரபுகளை உடைத்தவன்’ என்றார் ராஜீவ். ஜெயில்சிங் இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதை அவர் தடுத்தார். நேரம் பார்த்துக் காத்திருந்த ஜெயில் சிங்குக்கு, போஃபர்ஸ் ஊழல் கைகொடுத்தது. 'ஊழல் மலிந்த நிர்வாகம்’ என்று குற்றம் சாட்டி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜீவ் அரசை 'டிஸ்மிஸ்’ செய்யவும், வெங்கட்ராமனைப் பிரதமராக்கவும் முடிவெடுத்தார். இதை அறிந்த ராஜீவ் காந்தி அதிர்ந்து போனார். நாடாளுமன்றத்தின் அதிகாரத்​தை ஜனாதிபதி பயன்படுத்த முடியாது என்று கிடைத்த அறிவுரையால், ஜெயில் சிங்கின் பழிவாங்கும் புத்தி தெளிந்தது. இந்தச் சதி குறித்து அவருக்குப் பின் பொறுப்பேற்ற ஆர்.வெங்கட்ராமன் ‘My Presidential years’ என்ற நூலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கும் ஆட்சியாளரை அச்சுறுத்தும் அதிகாரம் உண்டு. மென்மையான தண்ணீரில் பாறையைத் தகர்க்கும் வன்மை மறைந்திருக்கிறது என்கிறார் சீனஞானி லயோட்சு. அதைப் போல!
அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்வில் காங்கிரஸ் கூட்டணி பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போகலாம். தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம். அந்த நேரத்தில் ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவரின் ஒத்துழைப்பு முக்கியம். அதற்கு ஒரு பூரண விசுவாசி அந்த நாற்காலியில் அமர்வது நல்லது. பிரணாப் முகர்ஜி தன் மேதைமையை மூட்டை கட்டி மூலையில் வைத்துவிட்டு 'முதல்தர விசுவாசி’ முகமூடியை அணிந்துகொள்ளத் துணிந்து விட்டார். அவர் ஜனாதிபதியாவது நிச்சயம். சோனியா காந்தி கம்பெனியில் தயாரான அக்மார்க் முத்திரையுடன் கூடிய அடுத்த ரப்பர் ஸ்டாம்பை ஜனாதிபதி மாளிகையில் அமரச்செய்து அழகு பார்க்க நாடு தயாராகி விட்டது. இன்னொரு சஞ்சீவ ரெட்டியும், ஜெயில் சிங்கும் மீண்டும் உயிர்த்தெழுவார்களா?

காலம்தான் விடை சொல்ல வேண்டும்!

Source:Vikatan

No comments:

Post a Comment