கர்ம வீரரும் கசந்தார்!
பெருந்தலைவர் காமராஜரும் கசக்க ஆரம்பித்ததுதான் இந்திரா வாழ்க்கையில் மறைக்க முடியாத வடுவாக இன்று வரைக்கும் இருக்கிறது.
பெரிய விவகாரமாக இருந்தால் எதையும் நான்கு பேராக
யோசித்துச் செய்ய வேண்டும் என்பார்கள். படேல் - ராஜாஜி, ஆசாத் ஆகிய
மூவரோடுதான் ஆரம்ப காலத்தில் நேரு ஆலோசனை நடத்துவார். அதன் பிறகு சாஸ்திரி -
காமராஜ் - இந்திரா ஆகிய மூவரோடுதான் கலந்து ஆலோசனை செய்தார். இதில்
காமராஜரின் பிம்பம்தான் இந்திராவை எரிச்சலூட்டுவதாக இருந்தது. ஏனென்றால்,
நேருவுக்கு இணையாக அகில இந்தியத் தலைவர்கள் அனைவராலும் காமராஜர்
மதிக்கப்பட்டார். நேருவிடம் சொல்ல முடியாததையும் காமராஜரிடம் அனைவரும்
சொல்வார்கள். நள்ளிரவைத் தாண்டியும் அவரது வீட்டில் ஆலோசனைகள் தொடரும்.
நேருவுக்கு அடுத்து பிரதமர் யார் என்ற போட்டி நிலவியபோது, சாஸ்திரியைக்
கொண்டு வந்ததும் அல்லாமல், அதற்கு எதிராக இருந்த மொரார்ஜி அணியை எழ
முடியாமல் ஆக்கிய சாமர்த்தியம் காமராஜருக்கு இருந்தது.
அதேபோல் சாஸ்திரிக்குப் பிறகு யார் பிரதமர் என்ற கேள்வி
வந்தபோது, ஏக காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் இந்திராவைவிட்டால் வேறு
வழியில்லை என்று சொல்லவில்லை. இந்திரா பெயரை காமராஜர் உச்சரித்ததால்தான்
அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். காமராஜர் இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை
என்பதால் அவர் மீது கூடுதல் பாசம்தான் வந்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ வேறு
விதமாக இந்திரா நினைத்தார்.
ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவர்கள் இனி கட்சியில்
இருந்தால் அது நம்முடைய பதவிக்கு, நாற்காலிக்கே வினையாகிவிடும் என்று
அரசியல் தலைவர்கள் நினைப்பது எந்தக் கட்சியிலும் வாடிக்கைதானே. இதற்கு
இந்திராவும் விதிவிலக்கு அல்ல. காரணம், அந்த அளவுக்கு காமராஜர் செல்வாக்கு
காங்கிரஸில் கொடிகட்டிப் பறந்தது.
இன்று டெல்லியில் நடக்கும் காங்கிரஸ் கமிட்டிக்
கூட்டத்தில் சோனியாவுக்கு என்ன மரியாதை தரப்படுகிறதோ அதைப்போல மரியாதை
அன்று காமராஜருக்கு தரப்பட்டு வந்தது. 1963-ல் நடந்த ஜெய்ப்பூர்
காங்கிரஸில், 'இனி நம்முடைய தலைவர் காமராஜர்தான்’ என்று அறிவித்தபோது
அத்தனை பேரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். அடுத்த ஆண்டு நடந்த
புவனேஸ்வர் காங்கிரஸில் ஹீரோவே காமராஜர்தான். இந்தக் காட்சியைப் பார்க்க
தமிழ்நாட்டில் இருந்து பலரும் கிளம்ப... சென்னை சென்ட்ரல் ரயில்
நிலையத்தில் இருந்து 'புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு ரயிலே போனது.
காமராஜரும் இந்த ரயிலில் போனார். சென்னையில் இருந்து ஒரிஸ்ஸா தலைநகர்
புவனேஸ்வர் வரைக்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும் காங்கிரஸ் தொண்டர்கள்
கூடி நின்று கூடை கூடையாகப் பூக்களைத் தூவினார்கள் காமராஜரோடு வந்த 700
பேருக்கும் அந்தந்த ஊரில் காங்கிரஸ் தொண்டர்கள் உணவு கொடுத்து
உபசரித்தார்கள். இப்படி வந்து சேர்ந்த காமராஜரை, ஒரிஸ்ஸா தலைவர் பட்நாயக்
ரயில் நிலையத்துக்கு வந்து வரவேற்றார். இது 68-வது காங்கிரஸ் என்பதால் 68
குண்டுகள் முழங்கி காமராஜர் வரவேற்கப்பட்டார். பல்வேறு கலைக்குழுவினர்
முன்னே நடந்து காமராஜர் அழைத்து வரப்பட்டார்.
மாநாட்டுப் பந்தலிலும் 68 குண்டுகள் முழங்க... 68 அடி
உயர கொடிக் கம்பத்தில் காங்கிரஸின் கொடியை காமராஜர் ஏற்ற... ஜோதிக்கு
எண்ணெய் ஊற்றிய நேரு... 'நீங்கள் எண்ணெய் ஊற்றுங்கள்’ என்று சொல்ல... அந்த
இடமே காமராஜரின் கும்பாபிஷேகமாக இருந்தது.
இதுவரை காங்கிரஸ் தலைவராக இருந்த சஞ்சீவய்யா, 'எனக்குத்
தமிழ் தெரியும். தலைவர் காமராஜுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளையும் தேக
ஆரோக்கியத்தையும் அளிக்குமாறு பிரார்த்திக்கிறேன்’ என்று சொல்லி மாலையைப்
போடுகிறார்.
'ஈவு இரக்கமற்ற அசோகச் சக்ரவர்த்தியை ஒரு மகாபுருஷராக
மனம் மாற்றம் செய்த இந்த இடத்துக்கு வந்துள்ளவர்களை வரவேற்கிறேன்’ என்று
சொல்லி காமராஜருக்கு மாலை அணிவிக்கிறார் பட்நாயக். 'காமராஜ் ஜிந்தாபாத்’
என்று மூன்று முறை முழக்கமிட்ட பட்நாயக்கின் மகன்தான் இன்றைய ஒரிஸ்ஸா
முதல்வர் நவீன் பட்நாயக்.
மாநாட்டில் நடந்து போய்க்கொண்டிருந்த சஞ்சீவி ரெட்டியை
தடுத்து நிறுத்திய ஜெகஜீவன்ராம், ''என்னைப் பார்க்க என் அறைக்கு வருவதாகச்
சொன்னீர்களே, ஏன் வரவில்லை?'' என்று செல்லமாகக் கடிந்துகொண்டார். ''நான்
என்ன செய்வேன்? மாப்பிள்ளைத் தோழன் போல காமராஜுக்குத் தோழனாக நான்
இருக்கிறேன். காமராஜுடன் இருப்பதால் ராஜோபசாரம் கிடைக்கிறது'' என்று
சஞ்சீவி ரெட்டி சொன்னார் என்றால் நிலைமையைக் கவனியுங்கள்.
காமராஜரைச் சந்திப்பதற்காக அவரது அறைவாசலில் மாஜி
மன்னர் ஒருவர் காத்திருந்தார் அவர் பெயர் ராஜா கிருஷ்ண சந்திரமான்சிங்
ஹரிச்சந்திர மராத்ராஜ் பிரமார்பரே பாரிகுட் ராஜா என்பதாகும். ''யாரையும்
பார்க்க முடியாது'' என்று காமராஜ் அவரைத் திருப்பிஅனுப்பினார் என்றால் கொடி
எவ்வளவு தூரம் பறந்தது என்று பாருங்கள்.இவ்வளவையும் இந்திரா
பார்த்துக்கொண்டுதான் இருந்தார் புவனேஸ்வரில். இந்த மாநாட்டுக்கு வந்த நேரு
உடல் நலிவுற்று திரும்பிவிட்டார். அவருக்கான நாற்காலி, காலியாகவே மேடையில்
இருந்தது. அந்த நாற்காலி தனக்கா... அல்லது காமராஜருக்கா? என்று இந்திரா
யோசித்திருப்பார்.
இந்த மாநாடு முடிந்ததும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்
என்ற முறையில் காமராஜர் சுற்றுப்பயணம் கிளம்பினார். 18 நாட்கள், 300
ஊர்கள், 2000 மைல்கள் கடந்து ஒரு கோடி பேரைச் சந்தித்த அந்தப்
பயணத்தில்தான் வட இந்திய மக்கள். 'காலா காந்தி... காலா காந்தி’ என்று
அழைத்தார்கள். கருப்பு காந்தியாக அவர் வலம் வரத் தொடங்கினார். இதன் பிறகே
நேருவின் மறைவும், சாஸ்திரி பிரதமர் ஆனதும், அவர் மறைந்ததும் நடந்தன.
சாஸ்திரிக்குப் பிறகு காமராஜர் பிரதமராக வரவேண்டும் என்று அதுல்யாகோஷ்
போன்றவர்கள் யோசனை சொன்னபோது, 'இந்த விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்’
என்று நேருக்கு நேராக மறுத்துவிட்டார். இதுவும் அவரது பெயரை உயர்த்தியது.
அதனால்தான் 1964 முதல் 67 வரை இரண்டு முறை அவரால் தலைவராக இருக்க
முடிந்தது. இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டு காலத்தில் இந்தியா மூன்று
பிரதமர்களை அதாவது நேரு, சாஸ்திரி, இந்திரா ஆகியோரைக் கண்டது. ஆனால்
கர்மவீரரை நகர்த்த முடியவே இல்லை.
''காமராஜ் எதை எல்லாம் செய்யச் சொல்கிறாரோ அதையெல்லாம்
செய்வேன். அவர் வழிகாட்டுதல்படியே நடப்பேன்'' என்று சொன்ன இந்திரா, அப்படி
நடந்துகொள்ளவில்லை. ஆனால் காமராஜர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. 1967 பொதுத்
தேர்தல் நெருங்கி வந்ததால் அமைதியாக இருந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ்
கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. மொத்தம் இருந்த 518 உறுப்பினர்களில்
(அன்று எம்.பி-க்கள் எண்ணிக்கை இதுதான்) 282 பேர் மட்டுமே காங்கிரஸ்
உறுப்பினர்கள். இந்த தடவையும் பிரதமர் பதவிக்கு இந்திராவை எதிர்த்துப்
போட்டியிட்டார் மொரார்ஜி. இந்திராவுக்கும் மொரார்ஜிக்கும் யார் பிரதமர்
என்பதற்கான தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் மொரார்ஜியை
சமாதானப்படுத்தினார் காமராஜர். ''யார் தோற்றாலும் கட்சி உடையும்.
காங்கிரஸைக் காப்பாற்ற நீங்கள் போட்டியிலிருந்து விலகித்தான் ஆக வேண்டும்''
என்று காமராஜர் சொன்னதை மொரார்ஜியால் தட்டமுடியவில்லை. போட்டியிலிருந்து
விலகினார். இறுதியில், ஏகமனதாக இந்திரா தேர்வு செய்யப்பட்டார்.
இங்குதான் காமராஜரின் ராஜதந்திரம் வெளிப்பட்டது.
கடிவாளம் இல்லாத குதிரையாக இந்திராவை விடுவது ஆபத்தானது என்பதைக் கடந்த
இரண்டாண்டு காலம் (1966-67) காமராஜருக்கு உணர்த்தி இருந்தது. மொரார்ஜியை
அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திராவிடம் வலியுறுத்திய
காமராஜர், 'அவருக்கு நிதி அமைச்சர் பதவி தரவேண்டும், மேலும் துணைப் பிரதமர்
பதவி கொடுத்தால் அமைதியாகிவிடுவார்’ என்று சொன்னார். இதை இந்திரா
எதிர்பார்க்கவில்லை. தன்னை பிரதமர் ஆக்குவதற்கு இருந்த அத்தனை
தடைக்கற்களையும் நொறுக்கிவிட்டு காமராஜர் நல்ல பாதை போட்டுக்கொடுத்துவிட்டு
ஒதுங்கிவிடுவார் என்று நினைத்து இந்திரா காத்திருக்க... மொரார்ஜி என்ற
சிவப்பு விளக்கை தலையில் கொண்டுவந்து மாட்டுவார் என்று எப்படி
எதிர்பார்த்திருக்க முடியும்?
ஆனால் கேட்டவர் காலா காந்தி ஆச்சே! கர்ம வீரர் ஆச்சே!
அப்பாவுக்கே தலைவராக இருந்தவர் ஆச்சே! இன்று நாம் பிரதமர் ஆகி ஆட்சி நம்
வசம் வந்தாலும், கட்சி அவர் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது! நினைக்க
நினைக்க சிக்கல், சிக்கிக்கொண்டே போனது. வேறு வழியில்லை. மொரார்ஜியை நிதி
அமைச்சராகவும், துணை பிரதமராகவும் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு இந்திரா
தள்ளப்பட்டார். ஆனால் அன்று முதல் காமராஜர் என்ற பெயர் இந்திராவுக்குக்
கசக்க ஆரம்பித்தது.
சினம் கொள்ள வைத்த சிண்டிகேட்!
''உங்கள் வழிகாட்டுதல்படிதான் இனி நான்
நடந்துகொள்வேன்'' - என்று பெருந்தலைவர் காமராஜருக்கு வாக்குறுதி
கொடுத்துவிட்டு இந்தியாவின் தலைமை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்ட இந்திரா
அப்படி நடந்துகொள்ளவில்லை.
சிறுசிறு சம்பவங்களில் இந்திரா அப்படி நடந்துகொள்வதை
காமராஜர் கண்டுகொள்வதில்லை. ஆனால் நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின்
நிகழ் காலத்தையும் பாதிக்கும் பல நிகழ்வுகளிலும் இந்திரா இப்படி
நடந்துகொள்வதை காமராஜர் சகிக்கத் தயாராக இல்லை.
முக்கியமான முரண்பாடு, இந்திய ரூபாயின் மதிப்பை
குறைப்பதில் ஏற்பட்டது. இந்திய ரூபாயின் மதிப்பை திடீரென இந்திரா
குறைத்தார். காமராஜர் இதனைக் கடுமையாகக் கண்டித்தார்.
இந்திய ரூபாயின் மதிப்பை எதற்காக இந்திரா குறைத்தார்
என்றால்... அன்று இந்தியப் பொருளாதாரம் வேகவேகமாக சீர்குலைந்துகொண்டு
இருந்தது. பாகிஸ்தான் ஊடுருவல் காரணமாக நாடும் அச்சுறுத்தலில் இருந்தது.
இந்தியா - பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து உலக வங்கியும், சர்வதேச நிதி
ஆணையமும் இந்தியாவுக்கு அதுவரை தந்துவந்த உதவிகளை நிறுத்திவிட்டன.
இந்தியாவுக்கு உதவ வேண்டும் என்று கேட்டபோது, 'ரூபாயின் மதிப்பைக்
குறையுங்கள்’ என்று இந்த இரண்டு நிறுவனங்களும்
நிபந்தனை விதித்தன. இப்படி நிபந்தனை விதிக்க அமெரிக்காவும் தூண்டியது.
இதனை ஏற்றுக்கொண்டு இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைத்தால் அந்நிய மூலதனம்
நம்முடைய நாட்டுக்குள் வரும் என்று பொருளாதார ஆலோசகர்கள் ஆலோசனை
சொன்னார்கள். இதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் இந்திரா, இந்திய ரூபாயின் மதிப்பை
35.5 சதவிகிதமாக குறைத்தார். 1966-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் நாள்
எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை எதிர்க் கட்சிகள் அனைத்தும் எதிர்த்தன.
'அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணிந்துவிட்டது என்று கண்டித்தன. இவர்களோடு,
சேர்ந்து காமராஜரும் இதனை எதிர்த்தார். 'பிரதமர் என்னைக் கலந்துகொள்ளாமல்
எடுத்த முடிவு’ என்று வெளிப்படையாகக் கூறினார்.
நடப்பது காங்கிரஸ் ஆட்சி. ஆனால் காங்கிரஸ் தலைவர்
காமராஜருக்குத் தெரியாமல் மிகமிக முக்கியமான ஒரு பொருளாதார முடிவு எடுக்கப்
படுகிறது. அதுவும் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய முடிவு என்றால் எப்படி
இருக்கும்?
''நாணய மதிப்புக் குறைப்பைத் தொழில் வளர்ச்சிபெற்ற
நாடுகள் தங்கள் உற்பத்தியில் ஈடுசெய்ய முடியும். ஆனால் விவசாயத்தை மட்டுமே
பெரிதாக நம்பியுள்ள நம் நாட்டுக்கு இது மேலும் துன்பத்தையே கொடுக்கும்''
என்பது காமராஜரின் எண்ணம், இதனை இந்திரா மறுத்தார். ''ரூபாயின் மதிப்பைக்
குறைத்தால் ஏற்றுமதிகள் அதிகரிக்கும். அந்நிய மூலதனம் அதிகமாக வரும்''
என்பதையே திரும்பத் திரும்பச் சொன்னார் இந்திரா. அமெரிக்காவிடம் அதிகமான
நிதியை இந்திரா வேண்டி நின்றார். தருவதற்கு ஒப்புக்கொண்ட அமெரிக்கா,
மொத்தமாகத் தராமல் பிய்த்துப் பிய்த்து வழங்கியது. இதனால் எந்தப் பயனும்
ஏற்படவில்லை. இந்தியா தனது விவசாயக் கொள்கையை மாற்ற வேண்டும் என்று
அமெரிக்கா நிபந்தனை விதித்தபோதுதான் இந்திராவுக்கு லேசான விழிப்பு
ஏற்பட்டது. வடக்கு வியட்நாம் மீது அமெரிக்கா தாக்குதல் தொடங்கியபோது முழு
விழிப்பு இந்திராவுக்கு வந்தது.
''நாம் ஏதோ ஒரு சுழலில் சிக்க வைக்கப் பட்டோம்'' என்று
ஓராண்டு கழித்துத்தான் இந்திரா உணர்ந்தார். ''அது நான் எடுத்த தவறான
முடிவு. இதனால் அதிகமான தீங்குதான் ஏற்பட்டன'' என்று பிற்காலத்தில் இந்திரா
அந்தத் தவறை ஒப்புக்கொண்டார்.
ஆனாலும், காமராஜர் இந்திராவை விட்டு மனதளவில்
விலகத்தொடங்கினார். 1967 தேர்தல் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது
தன்னிச்சையாக இந்திரா நடந்துகொள்வதாக காமராஜர் நினைத்தார். ''நான் செய்த
தவறு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் எல்லா அதிகாரமும் தன்னிடமே இருக்க
வேண்டும் என்று நினைக்கிறார். ஆகவே, யாரையும் எக்காரணத்துக்காகவும் அருகில்
நெருங்க விடுவது இல்லை'' என்று காமராஜர் வருந்திப் பேச ஆரம்பித்தார்.
காமராஜர் எதிர்பார்த்தது மாதிரியே 1967 தேர்தல் காங்கிரஸுக்கு
மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. மொத்தமுள்ள 518 நாடாளுமன்றத் தொகுதிகளில் 282
இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி பெற முடிந்தது என்பதைவிட முக்கியமானது...
அனைத்து மாநிலங்களிலும் அதுவரை ஏகபோகமாக இருந்த காங்கிரஸ் கட்சி தனது பழைய
செல்வாக்கை இழந்தது.
பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு, கேரளா எனப் பல்வேறு
மாநிலங்களில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ். இந்திராவின் தவறான
வழிகாட்டுதலும், தன்னிச்சையான நடத்தையுமே இதற்குக் காரணம் என்று நினைத்த
காமராஜ், ஒரு கடிவாளம் போட்டார்.
''காங்கிரஸின் கொள்கைகளைத் தெளிவுபட எடுத்துவைக்க
வேண்டியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பு. அவற்றை
செயல்முறைக்குக் கொண்டுவர வேண்டியது காங்கிரஸ் அரசின் கடமை'' என்ற
தீர்மானத்தை காங்கிரஸ் காரியக் கமிட்டியில் வைத்தே நிறைவேற்றினார்
காமராஜர். காங்கிரஸ் கட்சி சொல்வதைத்தான், காங்கிரஸ் ஆட்சி செய்ய வேண்டும்
என்ற நிலைமையை உருவாக்கியது இந்தத் தீர்மானம். அதாவது பிரதமர் பதவி
அதிகாரம் பொருந்தியது அல்ல. காங்கிரஸ் கட்சித் தலைவரே அதிகாரம்
பொருந்தியவர் என்பதைச் சொல்லாமல் சொல்லியது இந்தத் தீர்மானம்.
பிரதமர் ஆவது முக்கியமல்ல; காங்கிரஸ் தலைவராக இருப்பதே
அதைவிட முக்கியம் என்பதை உணர்ந்து இந்திரா உழன்றார். அந்த காங்கிரஸ் தலைவர்
பதவி எட்டு ஆண்டுகளுக்கு முன் தனக்கு கிடைத்தபோது, ஓராண்டு காலத்தில்
அலட்சியமாக ராஜினாமா செய்துவிட்டுப் போனோமே என்று வருந்தினார். மூன்று
விதமான சிந்தனைகள் அவரை அலைபாயவைத்தன.
இப்போது தலைவராக இருக்கும் காமராஜரை அந்த இடத்தில்
இருந்து நகர்த்த வேண்டும். காங்கிரஸ் தலைவராக தான் அந்த இடத்தில் அமர
வேண்டும். தான் வர முடியாவிட்டால், தனக்கு வசதியான தன் பேச்சைக் கேட்கக்
கூடிய ஒருவரை கொண்டுவந்துவிட வேண்டும். - இந்த மூன்றும் அவரை தூங்கிவிடாமல்
தவிக்கவைத்தன.
காமராஜர் மூன்றாவது முறையும் தலைவர் பதவிக்குப்
போட்டியிட்டால் அவரை எப்படி எதிர்கொள்வது என்று நினைத்தார் இந்திரா. ஆனால்,
அவருக்கு கஷ்டம் கொடுக்கவில்லை காமராஜர். இரண்டு முறை தலைவர் பதவியில்
இருந்த காமராஜருக்கு மூன்றாவது முறையும் இதனை அடைய விருப்பம் இல்லை.
முதல்முறை இருந்த மகிழ்ச்சி இரண்டாவது தடவை இருந்தபோது இல்லை என்பதை
அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்தார். ஆனால், அவரே தலைவராக இருக்க வேண்டும்
என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள். காமராஜர் என்ன நினைக்கிறார்
என்பதை அறிய அவரைச் சந்தித்தார் இந்திரா. அவரிடமும் தனது நிலைப்பாடு
இதுதான் என்பதை தெளிவுபடுத்தினார். இந்திராவுக்கு முதல் தடை உடைந்தது.
அடுத்து தன்னை கொண்டுவர காமராஜ் முயற்சிப்பாரா என்று
எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எந்தப் பேச்சையும் காமராஜர் எழுப்பாதது
அவருக்கு ஏமாற்றமே. காமராஜர் போட்டியிடவில்லை என்றதும் தலைமைப் பதவிக்கு
எஸ்.கே.பாட்டீல், அதுல்யா கோஷ் போன்றவர்கள் முயற்சித்தார்கள். 'யாரைத்
தேர்ந்தெடுத்தாலும் போட்டியின்றித் தேர்ந்தெடுப்பதே கட்சியின்
எதிர்காலத்துக்கு நல்லது’ என்று காமராஜ் சொன்னார்.
எஸ்.கே.பாட்டீல், மோகன் தாரியா, அனுமந்தயா ஆகிய மூவரும்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்கள்.
போட்டி என்று வந்துவிட்டது. அதுல்யா கோஷ், மனு தாக்கல் செய்யவில்லை.
காமராஜரைச் சந்தித்த இந்திரா, சில பெயர்களை பரிந்துரை செய்தார். சுகாதியா,
நந்தா, சஞ்சீவையா ஆகியோர் தலைவராக வந்தால் கட்சியின் எதிர்காலத்துக்கு
நல்லது என்று இந்திரா கோரிக்கை வைத்தார். ஆனால் காமராஜரின் பார்வையும்,
பாதையும் வேறு மாதிரி இருந்தது. தலைவர் பதவிக்கு மனுச்
செய்திருந்தவர்களையும் ஒதுக்கினார். இந்திரா கொடுத்த பட்டியலையும்
நிராகரித்தார். மைசூருக்கு தகவல் அனுப்பினார். மறுநாள் அந்த மனிதர்
டெல்லிக்கு வந்தார். நள்ளிரவு நேரம்... 'நீங்கள்தான் அகில இந்திய
காங்கிரஸின் அடுத்த தலைவர். நாளை காலை என்னை வந்து சந்தியுங்கள்’ என்று
சொல்லி அவரை அனுப்பினார். மறுநாள் காலை வந்த அவரை அழைத்துச் சென்ற காமராஜ்,
இந்திரா முன் உட்கார வைத்தார். அவர்தான் நிஜலிங்கப்பா.
தன்னால் பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவரைக்கூடத்
தலைவராக்க காமராஜ் விரும்பவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், டெல்லி
செல்வாக்கு இல்லாத நிஜலிங்கப்பாவை பின்னர் நம்மால் சமாளிக்க முடியும் என்று
இந்திரா திருப்திப்பட்டுக்கொண்டார். தான் தலைவராக வேண்டும் என்று
நினைத்தார். நடக்கவில்லை. தான் விரும்பியவரை தலைவராக்க வேண்டும் என்று
நினைத்தார். அதுவும் செயல்படவில்லை. காமராஜர் மீண்டும் தலைவராகக் கூடாது
என்று விரும்பினார். அது மட்டும் நடந்தது. பரவாயில்லை, சமாளிப்போம் என்று
சமாதானம் அடைந்தார். ஆனால் நிஜலிங்கப்பாவின் நிஜமுகம் சில மாதங்களிலேயே
இந்திராவுக்குத் தெரிய ஆரம்பித்து. அவர் முகம் இருளத் தொடங்கியது.
தன்னிடம் இருக்கும் பிரதமர் பதவியையே நிஜலிங்கப்பா
பறிந்துவிடுவாரோ என்ற பீதி வந்துவிட்டது இந்திராவுக்கு. காமராஜருக்காவது,
இது நேருவின் மகள் என்ற பாசம் இருந்திருக்கும். ஆனால் நிஜலிங்கப்பா,
நேருக்கு நேராக முஷ்டியை உயர்த்தினார். தலைமைக்குக் கட்டுப்பட்டதுதான்
கட்சி என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் நிரூபிக்க முயற்சித்தார். அதனை தயவு
தாட்சண்யம் இல்லாமல் வெளிப்படுத்தவும் தொடங்கினார்.
பெரிய தலைவர்கள் கூடிக்கூடி உட்கார்ந்துகொண்டு தனக்கு
அறிவுரை சொல்வதை அவஸ்தையாக நினைத்தார் இந்திரா. இந்தப் பெருந்தலைவர்கள்
'சிண்டிகேட்’ என அழைக்கப்பட்டார்கள். இந்திரா ஆதரவாளர்கள் இதனை கேலிச்
சொல்லாகவும் பயன்படுத்தினார்கள்.
''1962-ல் சீனப் படையெடுப்பு நிகழ்ந்த பின், அதனால்
மிகவும் மனம் நொந்துபோன நேருஜி, தேசத்தின் எதிர்காலம் பற்றி மிகவும்
அதிகமாகக் கவலைப்படத் தொடங்கினார். அந்த நாட்களில் நேருஜி, என்னையும்
சஞ்சீவி ரெட்டி போன்ற நண்பர்கள் சிலரையும் அடிக்கடி அழைத்து பல்வேறு
பிரச்னைகள் குறித்து விவாதிப்பார். இப்படி அவருடன் ஆலோசனை நடத்துவதற்காக
நாங்கள் அடிக்கடி சென்று வந்தபோது, இந்த ஆலோசனைக் குழுவை பத்திரிகையாளர்கள்
'சிண்டிகேட்’ என்று பெயரிட்டு அழைத்தார்கள். இந்த சிண்டிகேட்தான் நேருவின்
மறைவுக்குப் பிறகு லால்பகதூரைப் பிரதமராக்க முடிவு செய்தது. இதே
சிண்டிகேட்தான் அவர் மறைவுக்குப் பிறகு இந்திராவையும் பிரதமர் ஆக்கியது''
என்று 'சிண்டிகேட்’க்கு விளக்கம் சொன்னார் காமராஜர்.நேருஜியின் 'சிண்டிகேட்’ இந்திராவை சினம்கொள்ள வைத்தது. அதற்கு நிஜலிங்கப்பாவே நிஜக் காரணமாய் ஆனார்.
No comments:
Post a Comment