போராட்டக் காலத்தில் கொள்கை பொங்கப் பேசுபவர்கள்,
பதவியை அடைந்ததும் பெரும்பாலும் பதுங்கிப் படுத்துவிடுகிறார்கள் என்பதற்கு
நேருவும் விதிவிலக்கு இல்லை. அதற்குக் காரணம், நேருவை எதிர்க்க
காங்கிரஸுக்குள்ளேயே தலைவர்கள் இல்லாமல் போனதுதான்!
'ஜவஹர்லால் நேருதான் என்னுடைய வாரிசு’ என்று சொன்ன
மகாத்மா காந்தி, சுதந்திரம் அடைந்த சில மாதங்களில் மரணத்தைத் தழுவினார்.
அடுத்த பிரதமர் யார் என்ற போட்டி வந்தபோது நேருவுக்கு அடுத்த இடத்தில்
வைத்துப் பேசப்பட்ட சர்தார் வல்லபபாய் படேல், சில ஆண்டுகளில் மரணம்
அடைந்தார். குடியரசுத் தலைவர் ஆகிவிட்டதால் நடைமுறை அரசியல் விவகாரங்களில்
இருந்து ஒதுங்கிவிட்டார் பாபு ராஜேந்திர பிரசாத். உடம்பு முழுக்க மூளை
கொண்டவர் என்று வர்ணிக்கப்பட்ட ராஜாஜியும், அதேபோல் அரசியல் செய்ய முடியாத
கவர்னர் ஜெனரல், மேற்கு வங்க ஆளுநர் என்ற பதவிகளில் போய் உட்கார்ந்தார்.
காந்தியின் சீடரான ஆச்சார்ய கிருபளாளி, கிசான் மஸ்தூர் பிரஜா என்ற கட்சியை
உருவாக்கிவிட்டுப் போய்விட்டார். நேரு தலைமையிலான இடைக்கால அமைச்சரவையில்
அங்கம் வகித்த ஸ்யாமா பிரசாத் முகர்ஜி, ஜனசங்கம் தொடங்கி அங்கே
போய்விட்டார். கொள்கையும் அஞ்சாமையும் கொண்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன்,
காங்கிரஸில் இருந்து
விலகி பிரஜா சோஷலிஸ்ட் கட்சியை உருவாக்கிக் கொண்டார். மௌலானா அபுல்கலாம்
ஆசாத் அரசியல் ஆர்வம் இல்லாமல் போனார். இவரது அறிவு நமக்குத் தேவை என்று
எந்த அம்பேத்கரை நேரு தனது அமைச்சரவையில் சேர்த்தாரோ... அந்த அம்பேத்கர்,
பதவி விலகிவிட்டார்.
தனித்திறமை கொண்ட ஒவ்வொரு ஆளுமைகளும் வெவ்வேறு
காரணங்களால் காங்கிரஸை விட்டும், தன்னுடைய அமைச்சரவையை விட்டும்
வெளியேறியது நேருவுக்கு வசதியாகப் போனது. தன்னைத் தவிர யாருமே இல்லையே என்ற
யதார்த்த நிலைமை, தன்னைத் தவிர இனி யார் இருக்கிறார்கள் என்ற கர்வ எண்ணமாக
மாறியது. 'காங்கிரஸ்தான் நாடு; நாடுதான் காங்கிரஸ்’ என்று அவர் சொல்லத்
தொடங்கினார். இதைத்தான் அவரது மகள் இந்திரா ஆட்சி காலத்தில், 'இந்திராவே
இந்தியா; இந்தியாவே இந்திரா’ என்று மாற்றிச் சொல்லப்பட்டது.
சிலர் விலகிப் போனார்கள் என்றால் சிலரை அடக்கியாக
வேண்டும் என்று நேரு முடிவெடுத்தார். அதற்குக் காரணம், படேல். 'இன்னொரு
படேல் கட்சிக்குள் வந்துவிடக் கூடாது’ என்பதில் நேரு உறுதியாக இருந்தார்.
எனவே, லேசாகத் தலைதூக்கிய பிரபலங்களை எல்லாம் முடிந்த அளவுக்கு களையெடுக்க
நேரு முயற்சித்தார்.
நேர்மையும் சுயசிந்தனையும் கொண்ட தலைவர்களில் ஒருவராக
அன்றைய தினம் புருஷோத்தம்தாஸ் டாண்டன் இருந்தார். அவரை காங்கிரஸ் தலைவர்
ஆக்குவதற்குத்தான் பலரும் விரும்பினார்கள். அவரும் உத்தரப்பிரதேசத்தைச்
சேர்ந்தவர் என்பதால் நேருவுக்கு ஏனோ பிடிக்கவில்லை. எல்லாவற்றிலும்
கறாராகக் கருத்துச் சொல்லக்கூடியவர் டாண்டன் என்பதும் நேருவின் கோபத்துக்கு
காரணமாக இருக்கலாம். 'டாண்டனுக்கு பதிலாக கிருபளானியை தலைவர் ஆக்கலாம்’
என்றார் நேரு. ஆனால், இதனை படேல் போன்றவர்கள் ஆதரிக்கவில்லை. டாண்டனுக்கு
ஆதரவு அதிகமானது. உடனடியாக பிரதமர் பதவியை விட்டும் கட்சிப் பதவியை
விட்டும் விலக நேரு திட்டமிட்டார். 'இனி நான் கட்சிக்கும் ஆட்சிக்கும்
பயன்பட மாட்டேன்’ என்றார். அவர் ராஜினாமா அஸ்திரத்தை எடுப்பது அது முதல்
தடவை அல்ல.
காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு
முன்னால், 'நான் ராஜினாமா செய்யப் போகிறேன்’ என்று மிரட்டல் விடுத்தவர்
நேரு. 'ராஜேந்திர பிரசாத்தை குடியரசுத் தலைவர் ஆக்கக் கூடாது’ என்று சொல்லி
அதனை யாரும் ஏற்காதபோதும், 'ராஜினாமா செய்யப் போகிறேன்’ என்றவர் நேரு.
அரசியலில், 'ராஜினாமா’ அஸ்திரத்தை அதிகமாகவிட்டு, அதனை வாபஸ் வாங்கியும்
சாதனை படைக்கலாம் என்பதைத் தொடங்கிவைத்து அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டியவர்
நேரு என்றும் சொல்லலாம்.
அவர்தான் டாண்டன் தலைவர் ஆகக்கூடாது என்பதற்காகவும்
ராஜினாமா அஸ்திரத்தை எடுத்தார். 'என்னை எல்லோரும் துணிக் கடை பொம்மைபோல
நடத்த நினைக்கிறார்கள்’ என்றும் சொல்லிக் கொண்டார். அவை எதுவும்
எடுபடவில்லை. டாண்டன்தான் தேர்தலில் வென்றார். ஆனால், அவரைத் தனது கட்சித்
தலைவராகவே நேரு நடத்தவில்லை. டாண்டனுக்கு யாரையெல்லாம் பிடிக்காதோ அவர்களை
எல்லாம் நாடாளுமன்றக் கமிட்டியில் இணைத்தார் நேரு. தன்னுடைய அதிகாரத்தைப்
பயன்படுத்தி அவர்களையெல்லாம் சேர்ப்பதைத் தடுத்தார் டாண்டன். 'நான்
உபயோகமாக இருந்த காலம் முடிந்துவிட்டது’ என்று நேரு வருந்தி
சொல்லிக்கொண்டார். இந்தப் பிரச்னைகள் அனைத்துக்கும் ராஜாஜியை பஞ்சாயத்து
செய்பவராக நேரு வைத்திருந்தார். ஒருகட்டத்தில் தன்னுடைய வாழ்க்கையே
வெறுத்துப்போகும் நிலைமைக்கு ராஜாஜி தள்ளப்பட்டார். ஆனாலும் எந்த
முடிவையும் ராஜாஜிக்கு தெரியாமலேயே நேரு எடுத்தார். ஒரு காரியத்தைச்
செய்துவிட்டு தகவல் தருவதுதான் நேருவின் வழக்கமாக மாறியது.
'இப்படியெல்லாம் செய்து காங்கிரஸைக் குழப்பி
அழிப்பதற்கு முன்னதாக என்னை நீங்கள் விடுவித்துவிட வேண்டும். தயவுசெய்து
என்னை பைத்தியக்காரனாக ஆக்கிவிடாதீர்கள்'' என்று நேருவுக்கு கடிதம்
எழுதிவிட்டு டெல்லியில் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓடி
வந்துவிட்டார் ராஜாஜி. அவரை எப்படியாவது டெல்லியில் உட்காரவைத்து தன்னுடைய
காரியங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நேரு நினைத்தார்.
அப்போது ராஜாஜி சொன்னது இன்றைய அரசியல் தலைவர்கள் அனைவரும் ஞாபகம்வைக்க
வேண்டியது. ''நான் 'ஞாபகசக்தியை இழந்துவிட்ட வயதான முட்டாள்’ என்று
அறிவிக்கப்பட்ட பிறகு ஓய்வெடுக்க விரும்பவில்லை'' என்று சொன்னார் ராஜாஜி.
அதாவது தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக நேரு எப்படியெல்லாம் செயல்பட்டார் என்பதற்கு இவை எல்லாம் உதாரணங்கள்!
'அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும், அதிக அதிகாரம் அதிக
ஊழலுக்கு வழிவகுக்கும்’ என்பது புகழ்பெற்ற அரசியல் பொன்மொழிகளில் ஒன்று.
தட்டிக் கேட்பதற்கான சகாக்கள் தனக்கு இல்லை என்பதால்தான் செய்வதும்,
சொல்வதும்தான் சரியானது என்ற நிலைமை நேருவின் ஆட்சி காலத்திலேயே
தொடங்கியது. ஆனால், அதனை எல்லாம் பச்சையாக இல்லாமல் சாமர்த்தியமாக நேரு
செய்தார். ஏனென்றால் அவர் சாராசரி அரசியல்வாதி அல்ல!
அடிமை இந்தியாவில் ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தவர்.
மகாத்மாவை அருகில் இருந்து தரிசித்தவர். தந்தை மோதிலால் நேருவின் தர்க்க
நியாயங்களைக் கவனித்தவர். அனைத்துக்கும் மேலாக உலக நாடுகளை நேரில் கண்டவர்.
பல்வேறு நாடுகளில் அடக்குமுறை ஆட்சியாளர்கள் எப்படி எல்லாம் வீழ்ந்தார்கள்
என்பதை எழுத்தெண்ணிப் படித்தவர் நேரு. 'பிரதமர்’ நேருவை, 'தியாகி’ நேரு
சிலநேரங்களில் பின்னால் இருந்து இழுத்துக்கொண்டே இருந்தார். அதனால், முதல்
வாரம் சோசலிசத்துக்கு ஆதரவாகவும் அடுத்த வாரமே, அதற்கு எதிராகவும் பேச
வேண்டியதாயிற்று. ''புதிய தொழில்களை அரசாங்கமே ஆரம்பிக்கும். தொழில்
முறைகள் அனைத்தையும் அரசாங்கமே நடத்தும். தனிப்பட்டவர்களிடம் தொழிலைக்
கொடுக்காது’ என்று ஒருநாள் நேரு பேசிவிட்டார். அடுத்த நாளே பிர்லா, மோடி,
ஷராப் போன்ற தொழிலதிபர்கள் அவரை வந்து சந்தித்தார்கள். 'இப்போதைக்கு எந்தத்
தொழிலையும் அரசாங்கம் ஏற்றுச் செயல்படுத்தப் போவதில்லை’ என்று நேரு
சொன்னார். இதில் எது ஒரிஜினல் என்ற குழப்பம் அவர் ஆட்சியில் இருந்த 16
ஆண்டுகளும் இருந்தது. இந்த ஊசலாட்டத்தின் காரணமாகச் சிலரை காங்கிரஸ்
கட்சிக்குள் கொண்டுவர நேரு நினைத்தார்.
பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவரான ஜெயப்பிரகாஷ் நாராயணனை
அழைத்துப் பேசினார். அவரை காங்கிரஸ் கட்சிக்குள் வர வேண்டும் என்று நேரு
கேட்டுக்கொண்டார். அப்படியானால் நேரு என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டும்
என்று ஜே.பி. பட்டியல் கொடுத்தார். அந்தப்பட்டியல் இன்றுவரை
பொருத்தமானதுதான்.
''மத்தியில் அதிகாரங்கள் குவிந்து கிடக்கிறது. அதனைப்
பகிர்ந்துகொடுத்து நிர்வாகச் சீர்திருத்தங்கள் செய்தால்தான் ஊழலை ஒழிக்க
முடியும். வணிகத் துறையை அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும். அரசியல்
அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும்...'' என்று பல்வேறு
கோரிக்கைகளை ஜே.பி. அடுக்கினார். ஆறு மாத காலம் பேச்சுவார்த்தையை இழுத்த
நேரு இறுதியில், 'இதை எல்லாம் நிறைவேற்றும் அதிகாரம் எனக்கு இல்லை.
பிரதமராகவும் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருக்கின்ற என்னால்
இதையெல்லாம் நிறைவேற்ற இயலாது’ என்றுசொல்லி அமைதியாகிவிட்டார். ''மாஸ்கோவை
இந்தியாவுக்கு கொண்டுவந்து காட்டுவேன்'' என்று சொன்ன நேருவே, ''எதனையும்
ஒழுங்காக இயக்குவதற்குரிய வழிமுறைகள் வகுக்காமல் நாட்டுடமை ஆக்குதல்
ஆபத்தானது'' என்று சொல்லும் அளவுக்கு தன்னை மாற்றிக்கொண்டார். சோஷலிசத்தை
திசை திருப்பும் தந்திரம் என்று சோஷலிசத் தலைவர்கள் சொன்னார்கள். அன்று
அண்ணா சொன்ன வாசகம்தான், ''காகிதப் பூ மணக்காது, காங்கிரஸின் சோஷலிசம்
இனிக்காது!’
அதற்காக நேரு தனது ஆட்சிக்காலத்தின் அனைத்து முறைகேடுகளுக்கும்
உடன்பட்டார், அவருக்குத் தெரிந்துதான் அனைத்தும் நடந்தன என்று சொல்ல
வரவில்லை. 'எனக்குச் சொத் துடைமை மனப்பான்மை இல்லை. செல்வத்தையும்
சொத்துக்களையும் சுமந்துகொண்டு இருப்பது ஒரு பெரிய பாரம் என்பதையும் நான்
அறிவேன். தொல்லை என்பதையும் உணர்வேன்’ என்றார். ஆனால், ஊழல் புரிந்தவர்களை
அவரால் தடுக்க முடியவில்லை. முறைகேடுகளைத் தட்டிக் கேட்க முடியவில்லை.
அதற்கு ஓர் உதாரணம்... அவரது செயலாளர் எம்.ஓ.மத்தாய்.
அதிகாரம் அப்பாவிடம் இருந்து மகளுக்கு!
பிரதமராக நேரு இருந்தபோது அதிக அதிகாரம் பொருந்தியவராக
அவரது செயலாளர் மத்தாய்தான் இருந்தார். அமைச்சர்களுக்கே உத்தரவிடும்
கட்டளைத் தளபதியாகவும் அவர் இருந்தார். வருமானத்தை மீறிச் சொத்துச்
சேர்த்ததாக மத்தாய் மீது புகார் கிளம்பியது. தேயிலைத் தோட்டங்கள் அவருக்கு
இருந்ததாகக் கண்டுபிடித்துச் சொன்னார்கள். அதனை முதலில் நேரு நம்பவில்லை.
ஆதாரங்கள் தரப்பட்டதும் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இறுதியில்
மத்தாய் பதவி விலகவேண்டியது ஆயிற்று. இவையெல்லாம் ஒவ்வொன்றாக
வெளிச்சத்துக்கு வந்தபோதுதான், நேருவின் மீதான பிம்பம் படிப்படியாக
உடைந்தது. அவர் அதிகாரம் பொருந்தியவராக இருந்தார். அவரை யாரும் கேள்வி
கேட்க முடியாது. அதனால், அவருக்கு ஆலோசனை சொல்வதற்குக்கூட யாருமே இல்லாமல்
போனார்கள். அதிகாரத்தை தன்னுடைய கொள்கைகளை அமல்படுத்துவதற்காக நேரு
செலுத்தவில்லை என்பதுதான் துரதிருஷ்டமான உண்மை. அந்த அதிகாரத்தை மற்றவர்களை
அடக்குவதற்குப் பயன்படுத்தினார். இதனால் அவரது நிர்வாகம் தேங்கிக்
கிடந்தது. சிறந்த நிர்வாகத்தில் அதிகாரக் குவிப்பு இருக்காது. தான் ஒன்றை
எப்படிச் செய்வோமோ அதனை அப்படியே செய்து காட்டக்கூடிய திறமைசாலிகளை தன்னோடு
வைத்துக்கொண்டு வேலை வாங்குவதுதான் சிறந்த நிர்வாகத்துக்கு அழகு. 'நானே
அனைத்தும் செய்து முடிப்பேன்’ என்பது திறமையைக் காட்டாது. ஆணவத்தையே
வெளிப்படுத்தும். இதனால் காலப்போக்கில் திறமைசாலிகள் வெளியேறினார்கள்.
அதனால் சோஷலிசம் என்ற அலங்காரமான வார்த்தை மட்டும்தான் அவரிடம் மிச்சம்
இருந்தது.
'விழாக்களில் நேரு கொஞ்சுவதற்காக கொழுகொழு குழந்தைகளைத்
தேடிப் பிடித்தார்களே தவிர, சராசரி இந்தியக் குழந்தை அப்படி இல்லையே’
என்று கிண்டல் செய்யும் அளவுக்குத்தான் நேருவின் ஆட்சி நிலைமை இருந்தது.
மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் அவரது ஆட்சியில் போடப்பட்டன. மூன்றாவது
ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, ''எவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும்
இன்றளவும் இந்தியாவின் பல பாகங்களில் ஒரு பானை குடிநீருக்குக்கூட மக்கள்
அலைந்து திரிகின்ற காட்சிகளைப் பார்க்கின்றபோது நான் வெட்கப்படுகிறேன்,
வேதனைப்படுகிறேன்’ என்றுதான் பிரதமர் நேருவால் சொல்ல முடிந்தது. ''ஊழல்
என்பது ஜனநாயக முறைகளின் கீழ் இயங்கும் நாட்டின் நடைமுறையில் ஒரு பகுதியாக
மாறி வருகிறது. அது ஓரளவு வளர்ந்துள்ளது என்று சொல்வதற்காக நான்
பயப்படுகிறேன். ஜனநாயகக் கோட்பாடு தருகின்ற தீமைகளின் பங்கு இது'' என்று
வெளிப்படையாகச் சொல்லியாக வேண்டிய நிலைமைக்கு நேருவே தள்ளப்பட்டார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்து ஊழல்களை ஃபெரோஸ்
வெளிப்படுத்தினார் என்றால், இந்த ஆட்சி மீதான மிகத் தெளிவான விமர்சனங்களை
வைத்ததில் முதன்மையானவர் ராஜாஜி.
இந்தியா சுதந்திரம் அடைந்து 6 மாதம்கூட ஆகவில்லை. ராஜாஜி என்ன சொன்னார் தெரியுமா?
'50 ஆண்டுகள் போராடிப் பெற்ற இந்திய சுதந்திரம் என்பது
வெறும் லஞ்ச ஊழலாக முடியுமானால் அதைவிடச் சோகம் வேறென்ன இருக்க முடியும்?''
என்று ராஜாஜி கேட்டபோது, அவர் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார்.
காங்கிரஸ் அளித்த பதவியில் இருந்தார். பிரதமர் நேருவுக்கு நெருக்கமாக
இருந்தார். அவரது அமைச்சரவைக்கு ஆலோசனை சொல்பவராக இருந்தார். இதனாலேயே
அதிகார மையத்தில் இருப்பவர்களால் உதாசீனப்படுத்தப்பட்டு ராஜாஜி,
காங்கிரஸைவிட்டு வெளியேறினார். ''நேரு சொல்லும் சோஷலிசம், இந்தியாவுக்குப்
பயன்படாது'' என்று சொல்லிவிட்டு சுதந்திராக் கட்சி ஆரம்பித்தாலும்,
''இன்றைய காங்கிரஸ் கட்சியும் அதனுடைய ஆட்சியும் நாம் எதிர்பார்க்கும்
நேர்மைத் திறத்துடன் இல்லை'' என்பதுதான் ராஜாஜிக்கு அதிகப்படியான
கோபத்துக்குக் காரணம். அதனால்தான் நேரு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்
அன்றைய காங்கிரஸ் கட்சியின் முறைகேடுகளை அதிர்வேட்டுகளைப்போல ராஜாஜி
வெளிப்படுத்தினார்.
''காங்கிரஸ்காரர்கள் ரொம்ப வசதியாக இருப்பதுபோல்
காணப்படுகிறார்கள். அவர்கள் ஏதாவது புதிய தொழிலை மேற்கொண்டு பணம்
சம்பாதிக்கிறார்களா என்ன? எங்கிருந்து அவர்களுக்கு கிடைத்தது பணம்?''-
இந்தக் கேள்வியை 1956-ல் ராஜாஜி கேட்டுள்ளார்.
''முழுநேரக் காங்கிரஸ்காரர்கள் பலர் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு காங்கிரஸ்காரனாக இருப்பதே உத்தியோகமாகிவிட்டது. இவர்கள் ஆட்சி,
அரசியல் மட்டங்களில் தங்களது அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள். ஒட்டுண்ணி
போலிருந்து பணத்தைச் உறிஞ்சிக் கொள்கிறார்கள்'' - என்று 1958-ல் ராஜாஜி
சொல்லி இருக்கிறார்.
அன்றைய மத்திய அரசுக்கு அவர் ஒரு பெயரை வைத்தார், 'பட்மிட்-லைசென்ஸ்-கோட்டா ஆட்சி.’ சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 'பட்மிட் ராஜ்.’
குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சலுகை கொடுத்தார்கள்,
லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகைகள் கிடைத்தன என்று ராஜாஜி
குற்றம்சாட்டினார். ''பட்மிட் - லைசென்ஸ்-கோட்டா முறையானது காங்கிரஸ்
கட்சியின் பணக்கார நண்பர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்கியது. ஏழைகளை மேலும்
ஏழைகள் ஆக்கியது'' என்று பகிரங்கமாக ராஜாஜி சொல்ல ஆரம்பித்தார். நேருவின்
காலமே இத்தகைய விமர்சனத்துக்கு ஆளாகியது என்றால் கல்மாடி காலத்தில் எப்படி
இருக்கும்? இதனை இன்று தடுக்க முடியாதவராக மன்மோகன் சிங்
இருப்பதைப்போலத்தான் நேருவும் இருந்துள்ளார். அதனால்தான் விமர்சனங்கள் அவர்
மீது இவ்வளவு வந்தன.
நேரு எப்படிப்பட்டவர் என்பதை நேதாஜி முன்பு ஒருமுறை சொன்னார்,
''ஒரு நெருக்கடியான நேரத்தில் நீங்கள் வெற்றிபெறும்
வகையில் செயல்படுவது இல்லை. ஊசலாடும் மனம் உங்களுடையது'' என்பதே அது. ஆனால்
நேரு அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. இந்த விமர்சனங்களை எல்லாம்
தூரத் தூக்கி வைத்துவிட்டு, மகள் இந்திராவுக்கு மகுடம் சூட்டும் காரியத்தை
நேரு கனகச்சிதமாகப் பார்த்தார். நேருவின் மறைவுக்குப் பிறகு சாஸ்திரி
வந்தார், சாஸ்திரி இறந்த பிறகு, 'வேறு வழியில்லாமல் இந்திரா
அழைத்துவரப்பட்டார்’ என்று சிலர் புதிய வரலாற்றை உருவாக்கிவிட்டார்கள்.
உண்மை அது அல்ல. பிரதமர் நாற்காலியில் நேரு உட்கார்ந்து இருக்கும்போதே
காங்கிரஸ் தலைவராக இந்திரா உட்கார வைக்கப்பட்டார். அன்றைய இந்திராவுக்கு
'அலங்கார பொம்மை’ என்று பெயர். எமர்ஜென்சியைக் கொண்டுவந்த அடங்காத இந்திரா
அல்ல, அவர் அப்போது!
நேரு எங்கே போனாலும் மகளை அழைத்துச் சென்றார். அரசாங்கச் செலவில் வெளிநாடுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டார். எங்கே நேரு இருந்தாலும் இந்திரா அருகில் இருப்பார். யாரோடும் பேசமாட்டார். லேசாகச் சிரிப்பார் அவ்வளவுதான். ஒரு அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நேருவுக்கு அருகில் புரோட்டக்கால் நெறி முறைகளை மீறி இந்திரா உட்கார வைக்கப்பட்டார். அந்த விழாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட அழைப்பு இல்லை. ''ஏன் எங்களுக்கு அழைப்பு அனுப்பவில்லை?'' என்று ஃபெரோஸ் காந்தி கேட்டார். ''யாருக்குமே அழைப்பு அனுப்பவில்லையே?'' என்று நேரு பதில் சொன்னார். ''அப்படியானால் உங்கள் மகள் மட்டும் அந்த விழாவில் கலந்துகொண்டது எப்படி?'' என்று கேட்டார் ஃபெரோஸ். நேருவால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. கேள்வி கேட்பது மருமகன். கேட்பது மகளைப் பற்றி. நேருவின் எதிரிகள் அனைவரும் ரசித்த காட்சி அது. ஆனாலும் இந்திராவை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்வதை நேரு விடவில்லை. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக இந்திரா ஆக்கப்பட்டார். அடுத்து கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு தேர்தல் குழுவில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவே 1959-ல் இந்திரா உட்கார வைக்கப்பட்டார். 'இனி என்ன செய்வீர்கள்?’ என்று கேட்பதைப்போல இருந்தது நேருவின் நடவடிக்கைகள்!
காமராஜர் இருக்கும்போது, லால்பகதூர் சாஸ்திரி
இருக்கும்போது, நிஜலிங்கப்பா இருக்கும்போது, கோவிந்த வல்லபந்த்
இருக்கும்போது துணிச்சலாக இந்திராவை காங்கிரஸ் தலைவர் நாற்காலியில்
கொண்டுவந்து நேரு உட்கார வைக்கிறார் என்றால், இந்தக் கட்சியில் தனக்குப்
பிறகு தன்னுடைய மகள் இந்திராதான் இந்தப் பதவிக்கு வரத் தகுதியானவர்,
இந்திரா மட்டுமே தகுதியானவர் என்று நினைத்ததுதான் காரணம். இன்று ராகுல்
காந்தியின் துதிபாட ஒரு திக் விஜய்சிங் இருப்பதைப்போல அன்று இந்திராவுக்கு
கோவிந்த வல்லபந்த் கிடைத்தார். 'நான் பிரதமராக இருக்கும்போது என் மகள்
காங்கிரஸ் தலைவராக இருப்பது நல்லதல்ல’ என்று நேரு சும்மா சொல்லிப்
பார்த்தார். கடைசியில் 'வேறு வழியில்லாமல்’ இந்திரா தலைவர் ஆனார். இன்று
ராகுலை அறிமுகப்படுத்துவதற்கு எந்த வார்த்தையைச் சொல்கிறார்களோ அந்த
வார்த்தையை நேரு சொன்னார். ''புது முகங்களை வரவேற்க மக்கள்
தயாராகிவிட்டார்கள்'' என்று நேரு அன்று சொன்ன வார்த்தைதான் இன்று வரைக்கும்
அனைத்து அரசியல் தலைவர்களாலும் தந்திரமாக உச்சரிக்கப்படுகிறது.
'இந்திரா என்னுடைய மகள் என்பதில் முதலில்
பெருமைப்பட்டேன். என்னுடைய தோழர் என்பதில் அடுத்ததாகப் பெருமை அடைந்தேன்.
இப்பொழுது என்னுடைய தலைவர் என்ற பெருமையும் அடைந்துவிட்டேன்'' என்று நேரு
சொன்னார்.
ஆனால் நேரு பெருமைப்படுவது மாதிரி எதையும் செய்பவராக இந்திரா இல்லை!
No comments:
Post a Comment