பெரியார் பேசுகிறார் 1965
திருச்சி
பெரியார் மாளிகைக்குள் காலடி எடுத்துவைக்கும்போதே, எங்கள் பார்வையில் பட்ட
கறுப்புச் சட்டை இளைஞர், ''ஐயா உள்ளேதான் இருக்கார். நீங்க வரப்போறீங்கனு
சொல்லியிருக்கேன். உள்ளே போங்க'' என்று புன்சிரிப்போடு வழி காட்டுகிறார்.
உள்ளே... கட்டிலின் மீது சம்மணமிட்டு அமர்ந்திருந்த பெரியாரைப் பார்த்ததும், ''வணக்கம் ஐயா!'' என்று கும்பிடுகிறோம்.
''வாங்க... வாங்க, ரொம்ப சந்தோசம்...'' எங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றபடியே ''இப்படி உட்காருங்க'' என்கிறார்.
சாதாரண வெள்ளைப் பனியன். நாலு முழம் வேட்டி. வயிற்றின்
நடுப் பாதியில் வேட்டியின் இரு முனைகளையும் பனியனுக்கு மேல்
கட்டியிருக்கிறார். அந்த முனைகள் இரண்டும் அவ்வப்போது தளர்ந்துபோகும்
நேரங்களில் கைகள் தாமாகவே அவற்றை இறுக்கிவிடுகின்றன. நாய் ஒன்று
வீட்டுக்குள்ளேயே குறுக்கும் நெடுக்கும் அலைகிறது, சிற்சில சமயங்களில்
பலமாகக் குரைத்து வீட்டையே அதிரவைக்கிறது. பெரியாரின் பேச்சு எதனாலும்
தடைபடவே இல்லை.
''ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து வந்திருக்கோம்.''
''தெரியுமே. வாசன் அவங்களை எனக்கு ரொம்பக் காலமாத்
தெரியும். நான் 'குடியரசு’ பத்திரிகை ஆரம்பிச்ச காலத்திலே அடிக்கடி
சந்திச்சுக்குவோம். 'கல்கி’ கிருஷ்ணமூர்த்தியும் என்கிட்டேதான் கதர்
போர்டிலே கிளார்க்கா இருந்தார். ரொம்ப யோக்யமானவரு. கதர் போர்டு ஆட்டம்
கொடுத்ததும், நான்தான் திரு.வி.க-வுக்கு கடுதாசி கொடுத்தனுப்பிச்சேன்.
'நவசக்தி’யிலே சேர்ந்து கொஞ்ச நாளைக்கு வேலை செஞ்சாரு. அப்புறம்தான்
விகடன்லே சேர்ந்துட்டார்.''
''ராஜாஜியோடு தங்களுக்குப் பழக்கம் ஏற்பட்டது எப்போது?''
''அதுவா? அந்தக் காலத்துலே ஈரோட்லே
பி.வி.நரசிம்மய்யர்னு எனக்கு ரொம்ப வேண்டிய வக்கீல் ஒருத்தர் இருந்தார்.
ஈரோட்லே நான் சேர்மனா இருந்தப்போ, குடியானவங்க வழக்கெல்லாம் என்கிட்டே
நிறைய வரும். அந்த கேஸ் எல்லாம் அவருக்கு அனுப்புவேன். யாருக்கு?
நரசிம்மய்யருக்கு. நான் சேர்மனா வர்றது சில பேருக்குப் பிடிக்கலே.
பொறாமையினாலே எம் பேரிலே கலெக்டருக்கு பெட்டிஷன் எழுதிப் போட்டாங்க.
சேர்மன் பதவின்னா இப்ப மாதிரி எலெக்ஷன்ல ஜெயிச்சதும் நேராப் போயி சேர்ல
உட்கார்ந்துட முடியாது. கலெக்டர் சிபாரிசு செய்யணும்னு வெச்சிருந்தாங்க.
அந்தச் சமயத்துலே சர் பி.ராஜகோபாலச்சாரிங்கிறவர் சப்-கலெக்டரா இருந்தார்.
அவருக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியுமானதாலே, பெட்டிஷனைப் பொய்னு
தள்ளிட்டு என்னை சேர்மனாக்கிட்டார்.''
''ஆமாம். அந்த மாதிரி உங்களைப் பற்றித் தவறா பெட்டிஷன் எழுதிப் போட்ட ஆசாமி யார்?''
''சீனிவாச முதலின்னு ஒரு வக்கீல். ஒரு நான்பிராமின்
வக்கீலாயிருக்காரே, முன்னுக்குக் கொண்டாருவோம்னு நான்தான் அவரை
முன்னுக்குக் கொண்டுவந்தேன். ஆனால், அவரே என் பேரில் பெட்டிஷன்
கொண்டுவந்தார். அப்ப ராஜகோபாலாச்சாரி சேலத்துலே வக்கீல். கெட்டிக்கார
வக்கீல்னு சொல்வாங்க. அதனாலே என்கிட்டே வர்ற கேஸெல்லாம் அவருக்கு
அனுப்பிவைப்பேன். அந்தப் பழக்கத்துலே அவர் வரப் போக இருந்தாரு. எங்க
வூட்டுக்கு அடிக்கடி வருவார். அவரும் அப்ப சேலத்துலே சேர்மன்.''
''எந்த வருஷம் அது?''
''தொள்ளாயிரத்துப் பத்தொன்பதுனு ஞாபகம்...''
''வரதராஜுலு நாயுடு கேஸ் சம்பந்தமா அவர் மதுரைக்குப் போறப்ப நீங்களும் கூடப் போறது உண்டு இல்லையா?''
''ஆமா; போயிருக்கேன். 'நீ சேர்மன் பதவியை விட்டுட்டு
காங்கிரஸ்ல சேர்ந்துடு. நானும் விட்டுடறேன். ரெண்டு பேரும் சேர்ந்து பொதுப்
பணி செய்யலாம்’னார். வரதராஜுலு நாயுடுவும் வற்புறுத்தினார். சரின்னு
விட்டுட்டேன். அப்ப காங்கிரஸ் சத்தியமூர்த்தி 'குரூப்’ கையிலே இருந்தது.
அமிர்தசரஸ் காங்கிரஸின்போது காங்கிரஸ் பிளவுபட்டு ரெண்டு குரூப்பாப்
பிரிஞ்சுட்டது. சத்தியமூர்த்தி, ரங்கசாமி ஐயங்கார், திலகர் இவங்க ஒரு
'குரூப்’... காந்தி, ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராஜன் இவங்களெல்லாம் ஒரு
'குரூப்’.
நான் காங்கிரஸ்ல சேர்ந்ததே அமிர்தசரஸ் காங்கிரஸுக்கு
அப்புறம்தான். அதுவரைக்கும் ராஜகோபாலச்சாரியும் நானும் நண்பர்கள்தான்.
அப்புறம்தான் சேர்ந்து வேலை செஞ்சோம்.''
''அதுக்கப்புறம் என்ன ஆச்சு?''
''எங்க நட்பு வளர்ந்தது. காங்கிரஸும் வளர்ந்தது.
எங்களுக்குள்ளே ஒற்றுமையாயிருந்தோம். நான் கோவை ஜில்லா காங்கிரஸ்
காரியதரிசி. அப்பவெல்லாம் செகரெட்டரிதான்; பிரசிடென்ட் கிடையாது. தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டி வந்தது. அப்பவும் நான்தான் செகரெட்டரி.''
''ஆமாம்; ராஜாஜி உங்களை எதுக்கு காங்கிரஸுக்கு இழுத்தார்?''
''ஜஸ்டிஸ் பார்ட்டிக்கு எதிரா காங்கிரஸ் வளர்றதுக்கு காங்கிரஸ்ல நான்பிராமின்ஸ் இருக்காங்கன்னு காட்டிக்க வேண்டியிருந்தது.''
''உங்களோடு வேறு யாரும் இல்லையா?''
''இருந்தாங்க... திரு.வி.க-வும் வரதராஜுலு நாயுடுவும்
இருந்தாங்க. எங்க மூணு பேரையும்தான் எந்தக் கூட்டத்துலேயும் முதல்லே பேச
விடுவாங்க. வரதராஜுலு நாயுடு பேச்சில் வசவு இருக்கும். திரு.வி.க. பேச்சு
தித்திப்பா இருக்கும். நல்ல தமிழ் பேசுவார். என் பேச்சில் பாயின்ட்
இருக்கும். பாயின்ட்டாப் பேசி கன்வின்ஸ் பண்ணுவேன். நாங்க மூணு பேரும்
பேசினப்பறம்தான், சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரி எல்லாம் எழுந்து
பேசுவாங்க...''
''இந்த 'பிராமின் - நான்பிராமின்’ தகராறு முதல் முதல் எப்ப ஏற்பட்டது?''
''எப்படி வந்தது வினைன்னா - வ.வே.சு.ஐயரால் வந்தது.
சேரன்மாதேவியில் 'நேஷனல் காலேஜ்’னு ஒண்ணு ஆரம்பிச்சு, வீரர்களை உற்பத்தி
செய்யப்போறதாச் சொன்னாங்க. பரத்வாஜ் ஆசிரமமோ என்னவோ அதுக்குப் பேர். அந்த
குருகுலத்துக்கு எல்லாரும் ஆதரவு கொடுத்தாங்க. சிங்கப்பூர், மலேயாவில்
இருந்தெல்லாம் பணம் வசூல் செஞ்சாங்க. தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டியிலேருந்தும் பணம் கேட்டாங்க. நான் அப்ப தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டி செகரெட்டரி. ராஜாஜி 'நாயக்கரைக் கேளு’ன்னுட்டார். வ.வே.சு.ஐயர்
வந்து உட்கார்ந்துக்கிட்டு இருபதாயிரம் வேணும்னார். நான், 'முதல்லே
பத்தாயிரம் இருக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்’னு சொன்னேன். ராஜாஜி
சரின்னுட்டார்.''
வ.வே.சு.ஐயர் அன்னிக்கு சாயந்திரமே பணம் வேணும்னு அவசரப்படுத்தினார். ஐயாயிரம்தான் கொடுத்தனுப்பிச்சேன்...''
''பத்தாயிரம் இருக்கட்டும்னு சொன்னீங்களே...''
''ஆமாம்; அப்படித்தான் சொன்னேன். ஆனா, எனக்கென்னவோ
சரியாப் படலே, அதனாலே ஐயாயிரம்தான் கொடுத்தேன். நான் சந்தேகப்பட்டதுக்குத்
தகுந்தாப்பலேயே காரியம் நடந்துட்டுதே!''
''என்ன ஆச்சு?''
''முதல் மந்திரியாயிருந்தாரே ஓ.பி.ஆர்.ரெட்டியார்...''
''ஆமாம்...''
''அவர் மகன் அந்தக் குருகுலத்துலே படிச்சுட்டிருந்தான்.
அடுத்த மாசமே அவன் வந்து கம்ப்ளெய்ன்ட் சொன்னான். 'என்னடா?’னு கேட்டோம்.
'குருகுலத்துலே பார்ப்பனப் பிள்ளைங்களையும் எங்களையும் வித்தியாசமா
நடத்துறாங்க. அவங்களுக்கு இலை போட்டு சாப்பாடு. எங்களுக்கு பிளேட்.
அவங்களுக்கு உப்புமா, எங்களுக்கு பழைய சோறு. அவங்க உள்ளே படுக்கணும். நாங்க
வெளியே படுக்கணும். அவங்களுக்கு ஒரு பிரார்த்தனை. எங்களுக்கு ஒரு
பிரார்த்தனை’னான். அவ்வளவுதான். ஜாதி வேற்றுமையை வளர்க்கிற குருகுலத்துக்கு
இனி பணம் கிடையாதுன்னுட்டேன். அத்தோடு இந்த சங்கதியைப் பற்றி
ராஜகோபாலாச்சாரிக்குத் தெரியப்படுத்தினேன். அவர் உடனே வ.வே.சு.ஐயரைக்
கூப்பிட்டு விசாரிச்சாரு. 'என்ன இது? காலம் என்ன? இதான் தேசியமா?
தேசாபிமானமா? கொஞ்சம்கூட நல்லாயில்லே’னு கோபிச்சுக்கிட்டார்.''
''வ.வே.சு.ஐயர் அதுக்கு என்ன சொன்னார்?''
''என்ன சொன்னாரு! 'நான் என்ன செய்யட்டும்? குருகுலம்
ஆரம்பிச்சிருக்கிற இடம் ஒரு வைதீக சென்டர். அதனாலே அந்த இடத்துல அப்படி
நடக்க வேண்டி வந்துட்டுது’னு சமாதானம் சொன்னார். அப்ப ரெண்டு ஜாயின்ட்
செகரெட்டரிங்க. கே.எஸ்.சுப்பிரமணியம்னு கடையத்துக்காரர் ஒருத்தர். அவர் ஒரு
செகரெட்டரி. வ.வே.சு.ஐயர், எனக்குத் தெரியாம அவர்கிட்டே போய் இன்னொரு
ஐயாயிரத்துக்கு செக்கை வாங்கிட்டுப் போயிட்டார். அதுக்குப் பின்னாலே ஒரு
மாசம் கழிச்சுத்தான் இந்த சங்கதி அம்பலத்துக்கு வந்தது.''
''கடையத்துக்காரர் எப்படி செக் கொடுக்கலாம்?''
''செகரெட்டரி டு சைன்’ங்கிறது ரெசல்யூஷன்.
கடையத்துக்காரர் ஒரு செகரெட்டரிங்கிறதால, அவர்கிட்டே தந்திரமா கையெழுத்து
வாங்கிட்டுப் போயிட்டார்.''
''அந்தக் கடையத்துக்காரர் இப்போ எங்கே இருக்காரு..?''
''அவரா! அவர் அப்ப எடுத்த ஓட்டம்தான். அப்புறம் எங்கே போனாரோ? ஆசாமி திரும்பி வரலே.
ராஜாஜிக்கு அப்பவே எல்லாம் புரிஞ்சுபோச்சு, கோளாறு
வந்துட்டுதுன்னு. அதுக்கப்புறம் நான் சும்மா இருக்க முடியுமா? அந்த
விஷயத்தை ஒரு முக்கியப் போராட்டமா எடுத்துக்கிட்டேன். அதுக்கு சேரன்மாதேவி
குருகுலப் போராட்டம்னு பேர். டாக்டர் வரதராஜலு நாயுடு, திரு.வி.க. இவங்க
ரெண்டு பேரும் எனக்கு ஆதரவு கொடுத்தாங்க. வரதராஜுலு நாயுடுவே இந்தப்
போராட்டத்தை நடத்தினார். குருகுலம் ஒழிஞ்சது.''
''ராஜாஜி உங்க போராட்டத்தில் சேர்ந்தாரா?''
''சொல்லிக்கிட்டு வர்றேனே கேளுங்க... வரதராஜுலு நாயுடு
காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமா வகுப்பு உணர்ச்சியைத் தூண்டுற மாதிரி
நடந்துக்கிறார்னு அடுத்த கமிட்டி மீட்டிங்ல ராஜாஜி ஒரு தீர்மானம்
கொண்டுவந்தார். எனக்கு அது சரியாப் படலே. வோட்டுக்கு விட்டாங்க. ஈக்வல்
ஓட்டாச்சு. நான் தலைவன்கிற முறையில் ஒரு வோட்டைப் போட்டு ராஜாஜி
தீர்மானத்தைத் தோற்கடிச்சேன். ராஜாஜி ராஜினாமா பண்ணிட்டார்.
என்.எஸ்.வரதாச்சாரி, சாமிநாத சாஸ்திரி, டாக்டர் ராஜன், கே.சந்தானம்,
ஹாலாஸ்யம் இவங்களெல்லாம் ராஜாஜி பக்கம் சேர்ந்துட்டாங்க. நான், ஓமந்தூர்
ராமசாமி ரெட்டியார், வரதராஜுலு நாயுடு எல்லாம் ஒரு பக்கம். எங்களுக்குள்
ஏற்பட்ட கருத்து வேற்றுமை பச்சையா நான் கண்டிக்கிற அளவுக்கு
வளர்ந்துட்டுது...''
''க்ளிக்!'' - போட்டோகிராபர் படமெடுத்துக் கொள்கிறார்.
இந்தச் சமயம் கறுப்புச் சட்டை அணிந்த இளைஞர் பெரியசாமி, காபி கொண்டுவந்து எங்கள் முன் வைக்கிறார்.
நானும் நண்பர் மணியனும் அந்தக் காபியை எடுத்து அருந்துகிறோம்.
''சாதி வேற்றுமையெல்லாம் இப்போ ரொம்பக் குறைஞ்சுபோச்சு.
முப்பது வருஷங்களுக்கு முன்னாலே பிராமணர்கள் யாராவது உங்க வீட்டில் இந்த
மாதிரி வந்து சாப்பிட்டிருக்காங்களா?'' - இவ்வாறு நான் கேட்டதும் பெரியார்
ஒரு கணம் என்னை உற்றுப் பார்க்கிறார்.
''வெங்காயம்! அதுக்கு இத்தனை வருஷமா நான்
செய்துக்கிட்டு வர்ற பிரசாரம்தான் காரணம். இன்னும் ரொம்ப மாறணும்.
புத்தனுக்கு அப்புறம் பகுத்தறிவுப் பிரசாரம் செய்றவன் யாரு? நான்
ஒருத்தன்தானே!'' -
உணர்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் பெரியாரின் கைகள், தளர்ந்துவிட்ட வேட்டியின் முடிகளைத் தாமாகவே இறுக்கிக் கட்டுகின்றன.
''அந்தக் காலத்துல எங்க வீட்டுக்கு ஒரு ஐயர் வருவார்.
எங்க அம்மா ரொம்ப ஆசாரம். ஒருநாள் அந்த ஐயர் தாகத்துக்குத் தண்ணி வேணும்னு
கேட்டார். குடுத்தோம். அந்த தண்ணியைக் குடிக்க வேண்டியதுதானே? கொஞ்சம் மோர்
இருக்குமானு கேட்டார். மோர் கொண்டுவந்து கொடுத்தோம். அந்தத் தண்ணியிலே
கொஞ்சம் மோரை ஊத்திக் குடிச்சாரு. அந்த மோர், அந்தத் தண்ணியைச்
சுத்தப்படுத்திட்டுதாம். அதெப்படி சுத்தப்படுத்தும்? தண்ணி எங்க வூட்டுது.
மோரும் எங்க வூட்டுது. எங்க வூட்டு மோர், எங்க வூட்டுத் தண்ணியைச்
சுத்தப்படுத்திடுமா?'' - சிரிக்கிறார் பெரியார்.
''வைக்கம் வீரர்னு உங்களுக்கு எப்படிப் பேர் வந்தது?'' - மணியன் கேட்கிறார்.
''அதுவா? அது ஒரு கதை... சொல்றேன். நீங்க என்னமோ
கேட்டீங்களே, என்னது?'' என்று என் பக்கமாகத் தலையைச் சாய்த்து காதைக்
கைவிரல்களால் அணைத்துக் கேட்கிறார்.
'' 'காந்தியை நீங்க சந்திச்சிருக்கீங்களா?’னு கேட்டேன்...'' என்கிறேன் நான்.
''எங்க வூட்டுக்கே வந்து தங்கியிருக்காரே. சட்டசபைப்
பிரவேசத்துக்கு காங்கிரஸை அவர் அனுமதிச்சபோது நான் 'கூடாது’னு தடை
பண்ணினேன்; எதிர்த்தேன்; வாதாடினேன். அப்ப அவர் சொன்னார்: ''நீ என்ன
இப்படிச் சொல்றே? மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் இவங்களையெல்லாம் நினைச்சுப்
பாக்கணும். அவங்களையெல்லாம் விட்டுட முடியுமா? உனக்கு வேணாம்னா, பேசாம
இருந்துக்கோ''ன்னாரு. ஏன் அப்படிச் சொன்னாருங்கிற ரகசியம் எனக்குத்தான்
தெரியும். என்ன ரகசியம்னா, காங்கிரஸ், சட்டசபைக்குப் போகலேன்னா ஜஸ்டிஸ்
கட்சியே நிலைச்சு இருந்துடுங்கிற பயம்தான்!''
''அதுக்கப்புறம் நீங்க என்ன செய்தீங்க?''
''சட்டசபைக்குள் போறதா இருந்தா அம்பது பெர்சன்ட் 'நான்
பிராமின்ஸ்’க்கு ஒதுக்கணும்னு ஒரு தீர்மானம் கொண்டு வந்தேன். 'இதைக்
கொள்கையா வேணும்னா வெச்சுக்குவோம். தீர்மானமாப் போட வேண்டாம்’னு ராஜாஜி
கேட்டுக்கிட்டார். 1920-ல் திருநெல்வேலி மகா நாட்டிலே வகுப்புவாரிப்
பிரதிநிதித்துவத்தை வற்புறுத்தி ஒரு தீர்மானம் கொண்டுவந்தேன். அப்ப
தலைவராயிருந்த எஸ்.சீனிவாசயங்கார் அதை அனுமதிக்காமத் தடுத்துட்டார்.
அப்புறம் திருப்பூர்ல, சேலத்துல, திருவண்ணாமலையில எல்லா இடத்துலேயும்
தடுத்துட்டாங்க...''
''உங்க தீர்மானத்தை அதோடு விட்டுட்டீங்களா?''
''விட்டுடுவனா? திரு.வி.க-வை காஞ்சீபுரம் மகா
நாட்டுக்குத் தலைவராக் கொண்டு வந்தேன். சட்டசபைக்குள் போறதா இருந்தா அம்பது
பெர்சன்ட் நான் பிராமின்ஸ்க்கு ஒதுக்கணும்கிற தீர்மானத்தைக் கொண்டு
வந்தேன். திரு.வி.க. 'பாலிஸிக்கு விரோதம்’னு சொல்லி பிரசிடென்ட்டுங்கிற
முறையிலே 'டிஸ் அலவ்’ பண்ணிட்டார். நான் கொண்டுவந்த தீர்மானத்தை நான்
கொண்டு வந்த தலைவரே அனுமதிக்க மறுத்துட்டார். எதிரிங்ககிட்டேருந்தும்
எனக்கு அடி. என் ஆளுகிட்டேருந்தும் அடி. ஆக, ரெண்டு பக்கத்திலேருந்தும்
அடி.''
''ரொம்பச் சங்கடம்தான்!''
''ஆனாலும் தீர்மானத்தை விட்டுடலே... ஓபன் மகாநாட்டிலே
கொண்டுவர்றதுக்குப் பாடுபட்டேன். ஓபன் மகாநாட்டிலே தீர்மானத்தை
எடுத்துக்கணும்னா, அம்பது பேர் கையெழுத்து வேணும்னாரு. அம்பது என்ன? இந்தா
எழுபத்தைந்து கையெழுத்துனு சொல்லிக் கையெழுத்தும் வாங்கிட்டுப் போனேன்.
திரு.வி.க., பயந்துபோய் தீர்மானத்தை அனுமதிக்க மறுத்துட்டார். எனக்குக்
கோவம் வந்துட்டுது. 'முதலியாரே! உங்களை யோக்கியன்னு நினைச்சேன்.
'கையெழுத்து வாங்கிட்டு வா’னு சொல்றப்போ சொந்த புத்தி, இப்ப வேற
புத்தியா?’னு கேட்டுட்டு, இப்படித்தான் துண்டை எடுத்து தோள் மேலே
போட்டுக்கிட்டு (பக்கத்திலுள்ள டவல் ஒன்றை எடுத்துத் தோள் மீது
போட்டுக்கொள்கிறார்.) வெளியே நடந்துட்டேன்.
அப்புறம் எல்லாருமாப் பஞ்சாயத்துக்கு வந்தாங்க.
காங்கிரஸ்காரங்க போக்கு எனக்குப் பிடிக்கலே. வெளியே வந்துட்டேன். ஆனா,
அதுக்கப்புறமும் கொஞ்ச நாளைக்கு காங்கிரஸ்காரனாத்தான் இருந்தேன். அப்படி
இருந்துக்கிட்டே காங்கிரஸை எதிர்த்துப் பிரசாரம் பண்ணினேன். காங்கிரஸை
எதிர்த்தாலும் ஜஸ்டிஸ் கட்சிக்குச் சாதகமா இல்லே.''
''உத்தியோகம், காலேஜ் அட்மிஷன் இதெல்லாம் வகுப்புவாரிப்
பிரதிநிதித்துவம் இருப்பது சரினு நினைக்கிறீங்களா? திறமையைப் பார்த்துத்
தேர்ந்தெடுத்துக்கட்டுமே...'' - மணியன் கேட்கிறார்.
பெரியாருக்குக் கோபம் வந்துவிடுகிறது.
''என்ன திறமை வேண்டியிருக்குது? வெங்காயம்!
ஜெயிலுக்குள்ளே போய்ப் பாருங்க. ஜாதிக் கணக்குப்படித்தானே அங்கேயும்
இருக்காங்க. பார்ப்பன ஜாதி கொஞ்சம் குறைச்சலா இருக்கும். அதுக்குக் காரணம்
என்னன்னா, அவன் கொஞ்சம் பயந்தவன். கொலை, கொள்ளைக்குப் போவ மாட்டான்.
அவ்வளவுதானே? மத்தப்படி ஜாதி விகிதாசாரப்படிதானே ஜெயில்லயும் இருக்காங்க?
ஆனபடியாலே சர்க்கார் உத்தியோகம், காலேஜ் அட்மிஷன் இதிலேயும் ஜாதி
விகிதாச்சாரம் இருந்துட்டுப் போவட்டுமே...''
''காங்கிரஸை விட்டு விலகினீங்களே... அப்புறம் என்ன ஆச்சு?''
'' 'கம்யூனல் ஃபீலிங்’ வளர ஆரம்பிச்சது.
சி.என்.முத்துரங்க முதலியார், சி.பி.சுப்பையா, காமராஜ் இவங்களை வெச்சு
காங்கிரஸை வளர்த்துட்டாங்க...'' சட்டென்று நண்பர் மணியன் பக்கமாகத்
திரும்பி ''நீங்க என்னமோ கேட்டீங்களே? ஆமா... வைக்கம் சங்கதி... சொல்றேன்,
கேளுங்க...'' என்கிறார்.
காலை நாங்கள் பெரியார் மாளிகைக்குள் சென்றபோது மணி
ஒன்பதரை இருக்கலாம். அப்போது அவர் கட்டிலின் மீது உட்கார்ந்திருந்தார்.
எங்களுடன் பேசி முடிக்கும்போது மணி இரண்டு. அந்த இடத்தில் எப்போது
உட்கார்ந்தாரோ தெரியாது. எங்களுடன் பேசி முடிக்கும் வரை அப்பால் இப்பால்
நகரவில்லை. இடையில் காபி கொண்டு வந்து வைக்கப்பட்டபோதுகூட ''ஐயா! காபி
ஆறிப்போறது'' என்று ஞாபகப்படுத்திய பின்னரே அதை எடுத்து அருந்தினார்.
இதற்குள் நான் இருபது முறை கால்களை மாற்றிப்
போட்டுக்கொண்டேன். பின்பக்கம் சாய்ந்தேன். முன்பக்கம் சாய்ந்தேன். முகத்தை
இடது கையினால் தாங்கிக்கொண்டேன். எத்தனைவிதமான கோணங்களில் உட்கார முடியுமோ,
அப்படியெல்லாம் மாறி மாறி உட்கார்ந்தேன்.
பத்து நிமிடங்களுக்கு மேல் எந்த இடத்திலும் நிலைத்து
உட்கார முடியாதவர் நண்பர் மணியன். அவர் நான்கு முறை எழுந்து நின்றார்.
இரண்டு முறை டெலிபோனில் பேசிவிட்டு வந்தார். கைகளைச் சொடுக்கினார். கால்களை
நீட்டினார். இப்படி ஏதேதோ தேகப் பயிற்சிகள் எல்லாம் செய்துகொண்டிருந்தார்.
சற்றும் சோர்வின்றி, அலுக்காமல், சலிக்காமல், சளைக்காமல் மணிக்கணக்கில்
பேசிக்கொண்டிருந்த பெரியாரின் அதிசய சக்தியைப் பற்றி நான் மனதுக்குள்
வியந்துகொண்டிருந்தேன். பெரியார் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்:
''வைக்கம் என்கிற ஊர் கேரளாவிலே இருக்குது.
அந்த ஊரிலே ஒரு தெரு வழியா தாழ்த்தப்பட்டவங்க யாரும் நடக்கக் கூடாதுனு
ரொம்ப நாளாக் கட்டுப்பாடு. இந்தப் பக்கத்துலே உள்ளவங்க குடிதண்ணீர்
கொண்டுவரணும்னா, குறுக்கே உள்ள அந்தத் தெருவைத் தாண்டித்தான் போய்
வரணும்.''
''வேற வழி இல்லையா?''
''வேறொரு தெருப் பக்கமாகவும் போகலாம். ஆனால், அது
சுத்து வழி. 'ஜாதிப் பேரால நடக்கிற இந்த அக்கிரமத்தை ஒழிச்சுடணும்,
தெருவிலே நடந்துபோறதுக்கு எல்லாருக்கும் சம உரிமை இருக்கணும்கிறதுதான்
போராட்டம். அந்தப் போராட்டத்தை ஜார்ஜ் ஜோசப், நீலகண்ட நம்பூதிரி
இவங்கள்லாம் நடத்தினாங்க. திருவாங்கூர் சர்க்கார் அவங்க எல்லோரையும்
புடிச்சு ஜெயில்லே போட்டுது. போராட்டம் கலகலத்துப்போச்சு. எனக்கு லெட்டர்
போட்டாங்க. யாரு? ஜார்ஜ் ஜோசப்பும் நீலகண்ட நம்பூதிரியும். நீங்க உடனே
வைக்கத்துக்கு வந்து போராட்டத்தை ஏற்று நடத்தினால்தான் எங்க மானம்
மிஞ்சும், கால தாமதம் செய்யாமல் புறப்பட்டு வரணும்னு
ஜெயிலுக்குள்ளேயிருந்து லெட்டர் எழுதி அனுப்பிச்சாங்க.
அப்ப
எனக்கு உடம்பு சரியில்லை. ஆனாலும், உடனே புறப்பட்டுப் போய்ப் போராட்டத்தை
நடத்தினேன். ரொம்பப் பேர் என்னோடு சேர்ந்து வந்தாங்க.
மலையாளத்துக்காரங்களும் வந்தாங்க. தமிழ்நாட்டுக்காரங்களும் வந்தாங்க.
போராட்டம் வலுவடைஞ்சுது. நான் ரெண்டு முறை ஜெயிலுக்குப் போனேன். கடைசியிலே
சத்தியாக்கிரகம் வெற்றி அடைஞ்சுது. அதோடு அந்தத் தெரு வழியா எல்லோரும்
நடக்கலாம்னு ஆயிட்டுது.''
வைக்கத்திலே உள்ள கோயில், கோயிலுக்குப் பக்கத்திலே உள்ள
அந்தத் தெரு, குடி தண்ணீருக்குச் சுற்றிக்கொண்டு போக வேண்டிய இன்னொரு வழி
இவ்வளவையும் ஒரு காகிதத்தில் 'பிளான்’ போட்டுக் காட்டுகிறார் பெரியார்.
''ரெண்டு முறை எதுக்கு ஜெயிலுக்குப் போனீங்க?''- நான் கேட்கிறேன்.
''முதல் முறை ஒரு மாசம் போட்டாங்க. இருந்துட்டு வெளியே
வந்தேன். அப்புறம் கேரளாவுக்குள்ளேயே கால் வைக்கக் கூடாதுனு தடை போட்டாங்க;
மீறினேன். மறுபடியும் தண்டனை கொடுத்து திருவாங்கூர் சென்ட்ரல் ஜெயில்ல
கொண்டுபோய்ப் போட்டாங்க...''
''அண்ணாதுரை உங்க கட்சியிலே எப்போது சேர்ந்தார்னு சொல்ல முடியுமா?'' மணியன் கேட்கிறார்.
''பொப்பிலி ராஜாகிட்டே கணக்கு எழுதிட்டிருந்தாரு.
என்கிட்டே வந்தாரு. இருக்கச் சொன்னேன். கூட்டத்துக்கெல்லாம் கூடவே வருவாரு.
ஒருநாள் எழுந்து பேசினாரு. இப்படியே பேசிப் பேசித் தலைவனாயிட்டாரு...''
('விடுங்க, இப்ப எதுக்கு அந்தப் பேச்செல்லாம்’ என்ற பாவனை பெரியார்
முகத்தில் தெரிகிறது.)
'ராஜாஜி உங்களை ஜெயில்ல போட்டாரே, அது எப்போ?''
''முப்பத்தேழுலே நடந்த எலெக்ஷன்ல ஜஸ்டிஸ் கட்சி
தோத்தது. அப்ப அந்தக் கட்சிக்கு பொப்பிலி ராஜாதான் தலைவர். பொப்பிலி,
பெத்தாபுரம் எல்லாரும் தோத்துப்போனாங்க. காங்கிரஸ் ஜெயிச்சுட்டுது. ராஜாஜி,
மந்திரிசபை அமைச்சாரு. அப்பத்தான் கட்டாய இந்தியைக் கொண்டுவந்தாங்க. நான்
எதிர்த்தேன். புரொகிபிஷனைக் காரணம் காட்டி விற்பனை வரி போட்டாங்க. என்னை
ஜெயில்ல போட்டாங்க. ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களைப் பழிவாங்க ஆரம்பிச்சாங்க.
நான் ஜெயிலுக்குள்ளே இருக்கிறபோதே பொப்பிலி எல்லாம் சேர்ந்து, என்னை
ஜஸ்டிஸ் கட்சித் தலைவனாக்கிட்டாங்க.''
''அப்புறம் எப்ப ஜெயில்லருந்து வந்தீங்க?''
''அஞ்சாறு மாசத்துக்கெல்லாம் என்னை விட்டுட்டாங்க. ஆனா, இந்தியை மட்டும் விடாம வெச்சுட்டிருந்தாங்க...''
''எப்பத்தான் விட்டாங்க?''
''இதுக்குள்ளே காங்கிரஸிலேயே தகராறு. 'பட்டாபி
சீதாராமய்யா தோல்வி, என் தோல்வி’னு காந்தி சொன்னாரே ஞாபகம் இருக்குதா?
அந்தத் தகராறுதான். தலைவர் தேர்தல்ல பட்டாபி தோத்துட்டாரு... சுபாஷ் போஸ்
ஜெயிச்சுட்டாரு. போஸ் கட்சியைச் சேர்ந்தவங்க, 'காங்கிரஸுக்குப் பதவி
மோகம்’னு சொன்னாங்க. கொஞ்ச நாளைக்கெல்லாம் ராஜாஜி மந்திரிசபை ராஜினாமா
செய்யவேண்டி வந்துட்டுது. அந்தச் சமயத்திலே கவர்னர் என்னைக் கூப்பிட்டு
'மந்திரிசபை’ அமைக்கச் சொன்னாரு.
சீமையிலே இப்படித்தான் வழக்கம். ஒரு கட்சி
விலகிட்டுதுனா, அடுத்த பெரிய கட்சியைக் கூப்பிட்டு மந்திரிசபை அமைக்கச்
சொல்லுவாங்க. இப்ப காங்கிரஸுக்கு அடுத்த பெரிய கட்சி, ஜஸ்டிஸ் கட்சிதான்,
'நீ என்ன சொல்றே?’னாரு. நான் 'மாட்டேன்’னேன். மந்திரிசபை அமைச்சா, அத்தோடு
ஜஸ்டிஸ் கட்சியே போயிடும். வேண்டாம்னு வந்துட்டேன். சண்முகம் செட்டி,
குமாரராஜா, பன்னீர்செல்வம் எல்லாரையுமே கூப்பிட்டுப் பேசினாரு கவர்னர்.''
''அவங்களெல்லாம் என்ன சொன்னாங்க?''
''அவங்கள்ல சில பேருக்கு ஆசைதான். எங்களுக்குள்ளே
விவாதம் நடந்தது. 'ஜஸ்டிஸ் கட்சிக்கு நோ எலெக்ஷன்; நோ மந்திரிசபை...
இதுதான் என் கொள்கை’ன்னேன். எல்லோரும் அப்போஸ் பண்ணாங்க. என் மேலே ரொம்பக்
கோவம் அவங்களுக்கு. சௌந்தரபாண்டியன்கூட 'ஏன் இப்படி முரட்டுத்தனமா
இருக்கீங்க?’னு கேட்டாரு.''
''நீங்க என்ன சொன்னீங்க?''
'''என்னைத் தலைவனாப் போட்டதுக்கு இதுதான் பலன்’னு
சொன்னேன். 'வேணும்னா என்னைத் தோற்கடிச்சுடுங்க’ன்னேன்.
பன்னீர்செல்வத்துக்கு மட்டும் என்னை விட்டுடறதுல இஷ்டமில்லே. அவருக்குத்
தெரியும், நான் இல்லாட்டி கட்சி ரொம்ப வீக்காப் போயிடும்னு...''
''உங்களை மந்திரிசபை அமைக்கச் சொன்னாரே, அவர் பேர் என்ன?''
''காளை மாடு, விவசாயம்னு சொல்லிக்கிட்டிருப்பாரே, ஒருத்தர்... யாரது?''
''லின்லித்கோ...''
''ஆ, லின்லித்கோ! அவனேதான். கிண்டிக்குக் கூப்பிட்டுப்
பேசினான். நான் சொன்னேன், 'மந்திரிசபை அமைச்சா யார் யாருக்கு
மந்திரிங்கிறதுலேயே எங்களுக்குள்ளே சண்டை வந்துடும். கொள்கை
அடிபட்டுப்போகும். 'முடியாது’ன்னேன். அப்புறம் வேவல்கூட என்னைக் கூப்பிட்டு
சம்மதிக்கச் சொன்னாரு. 'முடியவே முடியாது’ன்னுட்டு வந்துட்டேன்.
அப்புறம்தான் ரொம்ப முக்கியமான சங்கதி ஒண்ணு நடந்தது... கவனிக்கணும்.''
''சொல்லுங்க...''
''ராஜாஜி வந்தாரு. மெதுவா எங்கிட்டே வந்து, 'நாயக்கரே,
நல்ல சமயம்... கஷ்டப்பட்டுப் பிடிச்ச சர்க்காரை வெள்ளைக்காரன்கிட்டே
விட்டுடக் கூடாது. நீங்க மந்திரிசபையை ஒப்புக்கணும். நிலைச்சு நிக்கும்;
கவலைப்படாதீங்க. வேணுமானா காந்தி, காங்கிரஸ் எல்லார்கிட்டேயும் நான்
சம்மதம் வாங்கித் தர்றேன். இதிலே உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா,
நீங்களும் இஷ்டப்பட்டா, என்னையும் ஒரு மந்திரியாச் சேர்த்துக்குங்க; நானும்
உங்ககூட இருந்து பக்க பலமா வேலை செய்யறேன்’னாரு...''
''ராஜாஜிக்கு என்ன பதில் சொன்னீங்க?''
'' 'நீங்க சொல்றதுலே சந்தோஷம்தான். ஆனா, யார் யாரோ
சொல்லியும் மாட்டேன்னுட்டேன். இப்ப நீங்க சொல்றதுனாலே யோசனை பண்ணிப்
பாக்கறேன்’னேன். 'நல்லா யோசிச்சுச் சொல்லுங்க’னு போயிட்டாரு. எங்க
ஆளுங்களோட யோசிச்சேன். முதல்லே மந்திரிசபையை ஒப்புக்கணும்னு சொன்ன ஆசாமிங்க
எல்லாம், ராஜாஜி மந்திரிசபைக்கு வர்றார்னு சொன்னதும் 'வேணவே
வேணாம்’னுட்டாங்க''
''அப்புறம் என்ன நடந்தது?''
''ஒரு வேடிக்கை நடந்தது. என்ன வேடிக்கைனா... வாருக்கு
அப்புறம் வெள்ளைக்காரன் பவரை ஹேண்ட்ஓவர் பண்றப்போ, நான் போய்க் கேட்டேன்...
'நாங்க பாடுபட்டோம், சர்க்காரோடு ஒத்துழைச்சோம். கடைசியிலே பவரை அவங்க
கையிலே கொடுக்கிறது என்ன நியாயம்?’னு கேட்டேன்.''
''வெள்ளைக்காரன் அதுக்கு 'வி நோ ஹிண்டு அண்டு முஸ்லிம்
ஒன்லி. ரெண்டே ரெண்டு பார்ட்டிதான் எங்களுக்குத் தெரியும்.
பிராமின்-நான்பிராமின் இந்த விஷயமெல்லாம் தெரியாது’னு பதில்
சொல்லிட்டான்.''
''அதோடு நீங்க திரும்பி வந்துட்டீங்களா?''
''வருவேனா? 'இதுதான் வெள்ளைக்காரன் யோக்கியதையா?’னு கேட்டேன்.''
''என்ன பதில் சொன்னாங்க?''
''என்னத்தைச் சொல்லுவான். சிரிச்சு மழுப்பிட்டான்.
சரி... இத்தோட விட்டுடக் கூடாதுன்னு ஜின்னாவைப் பார்த்துப் பேசறதுக்காக,
பம்பாய் போயிருந்தேன். அவரைக் கண்டு எல்லா சங்கதியையும் பேசினேன். நான்
சொல்றதையெல்லாம் கவனமாக் கேட்டுக்கிட்டு 'சரி, நான் மெட்ராஸுக்கு வர்றப்போ
முஸ்லிமும் ஜஸ்டிஸ் பார்ட்டியும் சேர்ந்து சப்ஜெக்ட்டை ஒண்ணா டேபிள்
பண்ணுவோம்’னு சொன்னாரு.''
''அப்பறம் ஜின்னா வந்தாரா?''
''வந்தாரு. 'உன் கட்சி விஷயம் என்னா?’னு கேட்டாரு. 'என்
கட்சியிலே முக்கியமா ஒன்பது பேரு இருக்கோம். ஒன்பது பேரும் ஒன்பது ஜாதி.
ஆனா, ஆல் நான்பிராமின்ஸ்’னேன். ஜின்னா சிரிச்சுட்டு, 'என்ன நினைச்சு இப்படி
ஒரு கட்சி வெச்சிருக்கீங்க? நல்ல கட்டில்தான். ஆனா, கால் இல்லாக்
கட்டிலாயிருக்குதே’ன்னு கேலி பண்ணாரு.
'என்ன செய்யறது? எப்படியோ இதைத்தான் ஒரு கட்டிலா வெச்சு ஓட்டிட்டிருக்கோம்’னேன்.''
''ரெண்டு பேரும் சேர்ந்து டேபிள் பண்ணலாம்னு சொன்ன விஷயம் என்ன ஆச்சு?''
'' 'உன் பிரச்னையைத் தனியாவே எடுத்துச்
சொல்லிக்கோ’னுட்டுப் போயிட்டாரு. 'அப்பத்தான் ராமசாமி மூஞ்சியிலே ஜின்னா
கரியைப் பூசிட்டார்’னு பத்திரிகையிலே எழுதினாங்க.''
''52-லே ஜெனரல் எலெக்ஷன் நடந்ததே, அப்ப நீங்க யாரை ஆதரிச்சீங்க?''
''காங்கிரஸை எதிர்த்துப் பிரசாரம் செஞ்சேன். காங்கிரஸ்
தோத்தது. நல்லபடியாத் தோத்தது. மந்திரிசபை அமைக்கிறாப்ல எந்தக் கட்சிக்கும்
மெஜாரிட்டி கிடைக்கலே. மறுபடியும் ராஜாஜி வந்தாரு. படையாச்சி, கவுண்டரு
எல்லாரையும் சரிபண்ணிக்கிட்டு மந்திரிசபை அமைச்சாரு. குலக் கல்வி, ஒரு
நேரப் படிப்புன்னாரு. 6,000 பள்ளிக்கூடங்களை மூடினாரு. எதிர்த்தோம்...
அதுக்குப் பின்னாலதான் காமராஜ் முதல் மந்திரியா வந்தாரு. தமிழர் நலனுக்காக
நல்ல காரியமெல்லாம் செய்ய ஆரம்பிச்சாரு. அதிலிருந்து வெளிப்படையா நான்
காங்கிரஸை ஆதரிக்க ஆரம்பிச்சுட்டேன்.''
''காமராஜை நீங்க எப்பவாவது சந்திச்சிருக்கீங்களா?''
''எப்பவோ ஒரு சமயம் நான் ஜெனரல் ஆஸ்பத்திரியில
படுத்திருக்கப்போ, அவராகவே வந்து 'எப்படி இருக்கீங்க?’னு விசாரிச்சாரு.
அந்த நேரம் சி.சுப்பிரமணியமும் அதே ஆஸ்பத்திரியிலே படுத்திருந்தாரு. அவரைப்
பார்க்க வந்தப்போ, என்னையும் பார்த்துட்டுப் போனாரு.''
''அந்தக் காலத்துலே இந்தியை எதிர்த்துப் போராட்டமெல்லாம் நடத்தினீங்களே, இப்ப ஏன் சும்மா இருக்கீங்க?''
காதை வலது கையால் அணைத்து நான் சொல்வதை உற்றுக்
கேட்டுக்கொண்ட பெரியார் கோபத்தை வெளியே காட்டாமல், ''அப்படியா?
மன்னிக்கணும்; இப்ப இந்தி எங்கே இருக்குது? தெரியாமத்தான் கேக்கறேன்.
சொல்லுங்கோ?''
''இந்திதான் ஆட்சி மொழியா வந்துட்டுதே...''
''எங்கே வந்துட்டுது? உனக்குத்தான் இங்கிலீஷ்
இருக்குதே. இந்தியா ஒண்ணா இருக்கணும்னா, பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே?
இந்திக்காரன் உங்களை மாதிரி இங்கிலீஷை நினைக்கலையே. இங்கிலீஷை அவமானம்னு
நினைக்கிறானே. தமிழ்நாட்டுக்காரன் சொல்றபடி, இந்தியா நடக்குமா? அது
ஜனநாயகமா?''
''ஒரு நாளைக்கு இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு இந்தி வரத்தானே போகுது?''
''நல்லாருக்குதே! ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு
நாளைக்குச் சாவு வரத்தானே போகுதுன்னு எவனாவது இப்பவே போய் கிணத்துலே
விழுவானா? அப்படியே ஒருவேளை இந்தி வந்ததுன்னா, உயிரோடு இருந்தா... அதை
எதிர்க்கப்போறவன் நான்தானே?''
''மத்திய
சர்க்கார்ல உத்தியோகம் கிடைக்கிறதுக்கு இந்தி அவசியம் இல்லேன்னாலும்,
உத்தியோகத்துலே சேர்ந்தப்புறம் படிக்கச் சொல்றாங்களே...''
''படிச்சிட்டுப்போயேன். தாசில்தார் உத்தியோகம்
படிக்கப்போறவங்க 'சர்வே’ படிப்பு படிக்கிறதில்லையா? அந்த மாதிரி இந்தியைப்
படிச்சுக்கிறது. உனக்கு இதிலே என்ன கஷ்டம்? இல்லே, நஷ்டம்? அவன் நேரத்துலே
அவன் கொடுக்கிற சம்பளத்துல, நீ இன்னொரு மொழியைப் படிச்சுத்
தெரிஞ்சுக்கப்போறே... இது லாபம்தானே?''
முதன்முறையாக தங்களின் தளத்திற்கு வருகிறேன் ஐயா
ReplyDeleteஇனி தொடர்வேன்
நன்றி
நன்றி ஐயா
Delete