Sunday, November 17, 2013

வங்கிகளை தேசிய உடமையாக்கியது ஏன்?

தினான்கு வங்கிகளை தேசிய உடமையாக்கியுள்ள நடவடிக்கையானது கண்டிப்பான பொருளாதார ரீதியில் பார்த்தாலும் சரி, கோடிக்கணக்கான நம் மக்களின் நம்பிக்கைகளும் ஆதர்சங்களும் பலியாகிவிடாமல் பார்த்துக் கொள்வதற்காக நாம் கொண்டுள்ள பரந்த லட்சியங்களை, நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வரப்போகும் லட்சியங்களைக் கொண்டு கவனித்தாலும் சரி, முற்றிலும் நியாயமானதே ஆகும். 1964-லேயே சோஷலிச பாணி சமுதாயத்தை ஏற்படுத்தும் லட்சியம் பார்லிமெண்டில் அங்கீகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுத் தரப்புத் தொழில்களில் வரவர அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டது. அதனால், தொழில்கள் மேலும் விருத்தி அடைவதற்கு வேண்டிய அடிப்படையான ஆதார அமைப்புகள் உருவாயின.

தனியார் தரப்பு, சர்க்கார் தரப்பு முயற்சிகளின் தராதர மதிப்புகள் பற்றி விவாதிப்பது ஒரு கற்பனை ரீதியிலான விவாதமென்று நான் கருதுகிறேன். அவை இரண்டுக்கும் நம் பொருளாதாரத்தில் முக்கியமான பங்குண்டு. தனியார் தரப்பு சகல சிறப்புகளுக்கும் உறைவிடம் என்று கருதிவிட வேண்டாம். உண்மையில் அதன் சாதனைகளைப் பார்த்தால் உற்சாகமோ ஊக்கமோ ஏற்படுவதற்குக் காரணமில்லை. நாட்டில் உள்ள வர்த்தக பங்குகளில் பெரும்பாலானவை செயல்பட்டு வந்த தன்மையைப் பரிசீலிக்கும் தோறும், நாம் இப்போது விவாதிக்கிற இந்த மசோதா கண்டிப்பாய் செய்தே ஆகவேண்டிய, தவிர்க்க முடியாத ஒரு ஏற்பாடு என்ற அபிப்பிராயத்திற்கே வருவோம்.

வங்கி தொழிலுக்கும் மற்றத் தொழில்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கிறது. வங்கிகள் விஷயத்தில் பங்குதாரர்களுக்குள்ள நிதி ஈடுபாடு வெகு சொற்பம். இந்த வங்கிகள் விஷயத்தில் 1968 டிசம்பர் 31-ந்தேதி மொத்தம் 2, 750 கோடி ரூபாய் டெபாசிட் இருந்ததற்கு மாறாக, வங்கிகளின் செலுத்தப்பட்ட மூலதனம் 28. 5 கோடி ரூபாயாகத்தானிருந்தது; அதாவது ஒரு சதவீதத்துக்குச் சற்று கூடுதலாகத் தானிருந்தது. எனவே, வங்கி நிர்வாகஸ்தர்கள் பெரும்பாலும் பிறத்தியார் பணத்தை வைத்துதான் லோவாதேவி செய்து வந்திருக்கிறார்கள்.

வங்கி நடவடிக்கைகளிலுள்ள இந்த அம்சம் சோஷலிசத்தை மேற்கொள்ளாத நாடுகளில் கூட எப்போதும் கவலைக்குரிய ஒரு விஷயமாகவே இருந்து வந்திருக்கிறது. உண்மையில், பிரதானமாய் முதலாளித்துவ பொருளாதார அமைப்பே உள்ள சில நாடுகள் கூட வங்கிகளைத் தேசிய உடமையாக்கி விட்டிருக்கின்றன; அல்லது வங்கிகள் மீது வெகு கண்டிப்பான கண்காணிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. பிரான்ஸ் அதன் பிரதான வங்கிகளில் நான்கைத் தேசிய உடமையாக்குவது அவசியமென்று கருதி அவ்வாறு செய்திருக்கிறது. எஞ்சி விட்டுவைக்கப்பட்ட இரு வங்கிகளிலும் சேர்த்து கூட்டாக அந்நாட்டின் மொத்த வங்கி ஆஸ்திகளில் 1/20 பங்குதான் இருந்தது. இதேபோல், இத்தாலியிலும் பிரதான ஐந்து வங்கிகளில் நான்கு அரசுத்தரப்பிலேயே இருக்கின்றன. ஸ்வீடன் தேசத்தில், இரு வங்கிகளின் மூலதனத்தை சர்க்கார் மேற்கொண்டுவிட்டார்கள்;  அந்த வங்கிகள் 1950-ல் ஒன்று சேர்க்கப்பட்டன.
 சமூகக் கட்டுப்பாட்டின் சில பலவீனங்கள்

வங்கிகள் மீதுள்ள சமூகக் கட்டுப்பாடு பற்றிப் பலர் கேள்விகள் எழுப்புகிறார்கள். இதை ஏன் இன்னும் சற்று அதிக காலத்துக்கு பரீட்சித்துப் பார்க்கக் கூடாது என்று கேட்கிறார்கள். சமூகக் கட்டுப்பாடு விஷயத்தில் பல பயனுள்ள அம்சங்கள் இருக்கின்றன. உதாரணமாக, தொழில் ரீதியான நிபுணர்கள் நிர்வாகம் அதில் வற்புறுத்தப்பட்டிருக்கிறது; இது இனியும் பொருத்தமான அம்சமாகவே இருந்து வரும். விவசாயம், ஏற்றுமதி, சிறுதொழில்கள் ஆகியவைகளுக்கு இன்னும் உயர்தர முதன்மைக் கிரமம் அளிக்கப்படவேண்டும் என்று அதில் வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால், சமூகக் கட்டுப்பாட்டில் சில பலவீனங்கள் இருந்தன. பல வங்கிகள் விஷயத்தில் அவைகளின் கொள்கைகளைத் தங்கள் அதிகாரத்துக்குள் வைத்திருந்தவர்களே பிறகும் ஏதாவதொரு வழியில் தொடர்ந்து தங்கள் செல்வாக்கைப் பிரயோகித்து வந்தார்கள்; சில சமயங்களில் முன்பிருந்த போர்டு தலைவரோ உப தலைவரோ போர்டில் பதவி வகிப்பதன் மூலம் இவ்வாறு செய்யப்பட்டு வந்தது. அவர்கள் இட்ட கட்டளைகளையும், உத்தரவுகளையும் வங்கிகள் அனுசரித்து நடக்கலாம்; சில வங்கிகள் அப்படி நடந்து மிருக்கின்றன. ஒரு கொள்கையை மனமார உற்சாகத்தோடு நடத்தி வைக்கிறவர்களுக்கும், ஏதோ சில கட்டளை களுக்காக மாத்திரமே அவ்வாறு செய்கிறவர்களுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. இந்தச் சட்டங்களைக் கூட சில வங்கிகள் ஏற்று நடக்கவில்லை. உரிமை குறைந்த மக்கள் தங்கள் காலில் நிற்பதற்கு உதவி புரிய நாம் செய்யும் முயற்சிகளை அவர்கள் ஆத்திரத்தோடும் ஏமாற்றத்தோடும் கவனித்து வருகிறார்கள் என்பதை இனியும் நாம் தொடர்ந்து புறக்கணிப்பதற்கில்லை.

சிறிய வங்கிகள் இச்சட்டத்தில் சேர்க்கப்படாதது பற்றிக் கூறப்படுவது மற்றொரு குறை. வங்கிகள் தேசிய உடமையாக்கப்பட்டதன் நோக்கம், விவசாயம், சிறு தொழில்கள், ஏற்றுமதிகள் ஆகியவை விஷயத்தில் துரித வளர்ச்சி ஏற்படும்படி செய்வதற்கும், புதிதாகத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஊக்கமளிப்பதற்கும், பின்னடைந்த நிலையில் உள்ள எல்லாப் பகுதிகளையும் விருத்தி செய்வதற்கும் வழி செய்வதுதான். 50 கோடி அல்லது அதற்குமேல் டெபாசிட் உள்ள வங்கிகளுக்குப் பல மாநிலங்களில் கிளைகள் உள்ளன. இதற்கு மாறாக, சிறிய வங்கிகள் குறிப்பிட்ட சில பகுதிகளில் மாத்திரமே  உள்ளன; இப்போது சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 14 வங்கிகள் விரிவான ரீதியில் தொழில் செய்கிற அனுகூலத்தால், சர்க்காரின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு அவை சிறிய வங்கிகளைவிட நல்ல நிலையில் உள்ளன. சிறிய வங்கிகள் ஏற்கெனவே பிரதானமாய் சொற்பக் கடன் வாங்குபவர்களுக்கே சேவை செய்து வருகின்றன. அவை வழங்குகிற கடன்களின் சராசரித் தொகை குறைவாக இருப்பதி லிருந்து இது புலனாகும். சிறிய வங்கிகள் அவை சேவை செய்து வருகிற சமூகத்தோடு ஒட்டிய ஓர் அம்சமாகவே இருந்து வருகின்றன. சிறிய வியாபாரிகளுக்கும், சிறிய தொழில் துறையாளர்களுக்கும் அவைகளின் நடவடிக்கைகள் மீது ஓரளவு செல்வாக்கு இருந்து வருகிறது.
இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள வங்கிகளை நடத்துவதற்காக ஒரே முழு பிண்டமான மத்திய  ஸ்தாபனம் ஒன்றை ஏற்படுத்தும் உத்தேசம் நமக்கில்லை. மத்திய ஸ்தானத்தில் உள்ள ஸ்தாபனத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம்தான்; ஆனால் ஒவ்வொரு வங்கிகளுக்கும் சுயேச்சை அதிகாரம் இருக்கும்;  அவைகளின் போர்டுகளுக்கு நன்கு வரையறை செய்யப் பட்ட அதிகாரங்கள் இருக்கும். இப்படி இப்படிச் செய்ய வேண்டுமென்று கட்டளைகள் இடத்தான் செய்வோம்; ஆனால், அவை கொள்கை ரீதியாகவும் பொதுப் பிரச்சினைகள் பற்றியவையாகவுமே இருக்கும். குறிப்பிட்ட தரப்பாருக்குக் கொடுக்கப்படும் தனித் தனிக் கடன்கள் பற்றியவையாக இருக்காது. அளவுக்கதிகமான குறுக்கீடு களால் ஆபத்து ஏற்படாமல் வெகு ஜாக்கிரதையாகக் கண்காணித்து வருவோம். அத்தகைய குறிக்கீடுகள் அரசியல் காரணங்களால் ஏற்படுபவையாயிருப்பினும் சரி, மற்றக் காரணங்களால் ஏற்படுபவை யாயிருப்பினும் சரி நம் கண்காணிப்பு இருக்கும்.

அதிகார வர்க்கக் கட்டுக்கோப்பு ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நான் முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த வங்கிகளின் சுய முயற்சி ஊக்கத்தையும், ஆர்வ ஊக்கத்தையும் தனித் தன்மையையும் நாம் பாதுகாக்க வேண்டியதுதான். நல்ல முறையில் போட்டா போட்டியும், சுய முயற்சி ஊக்கமும் மறைந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறபடி நாம் இதைச் செய்வோம்.

நியாயமான நஷ்ட ஈடு


நாம் ஏற்பாடு செய்துள்ள நஷ்ட ஈடு நியாயமானதும் நேர்மையானதும்தான் என்று பங்குதாரர்களுக்கு இச்சந்தர்பத்தில் நான் கூற விரும்புகிறேன். வாஸ்தவமாய் பங்கு வைத்திருப்பவர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் நஷ்ட ஈடு கிடைக்கச் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிடைக்கும்படி செய்ய முயன்று வருகிறோம். சர்க்கார் பத்திரங்கள் ரூபத்தில் நஷ்ட ஈட்டுத்தொகையைக் கொடுப்பதால், பங்குதாரர்களுக்குக் கஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதை நான் பலமாக மறுக்கிறேன். சமீபத்தில்தான் இந்திய சர்க்கார்  சதவீத வட்டியுடன் 7 வருஷத்தில் திருப்பித் தருகிற ஒரு கடனை எழுப்பி னார்கள். அந்தப் பத்திரங்கள் இப்போது மார்க்கெட்டில் சற்று அதிகமான விலைக்கே விற்கப்படுகிறது.  சதவிகித வட்டியுள்ள 30 வருஷக் கடனுக்கும் சற்று அதிக விலைதான் இருந்து வருகிறது. நிதியாக வழங்கப்படும் பத்திரங்கள் காரணமாய் பங்குதாரர்களுக்கு மூலதனம் நஷ்டமாகிவிடும் என்று கூறுவது மிகவும் அபாயகரமான பொறுப்பற்ற பேச்சாகும்.

சற்று ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் பிரிவினரின் ஆஸ்திகளின் உண்மையான பெறுமதியைப் பற்றி சந்தேகங்களைக் கிளப்பிவிடுவதன் மூலம் அவர்கள் தங்கள் உடமைகளை அவைகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விலையைவிடக் குறைந்த மதிப்பிற்கு விற்றுவிடும்படி செய்யப்படுகிறது. அவ்வாறு அவர்கள் ஏய்க்கப்படுவதற்கு வழி செய்யக்கூடிய எதையும் யாரும் சொல்லமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். இப்போது கொடுக்கப்படுகிற பத்திரங்கள் கைமாற்றக் கூடிய பத்திரங்கள். அவைகளை விற்கலாம்; எவ்வித நஷ்டமும் ஏற்பட அவசியமில்லாதபடி நல்ல விலை அவைகளுக்குக் கிடைக்கும்.
 
வாக்குறுதிகள்

வங்கி நிர்வாகிகள், சிப்பந்திகள் ஆகியோரின் நியாயமான நலன்களை நாங்கள் நன்கு கவனித்துக் கொள்வோம் என்ற உறுதியை நான் அவர்களுக்கு அளிக்க விரும்புகிறேன். இனி நாட்டின் நலத்தையோ  அல்லது வங்கி தொழிலின் நன்மையையோ புறக் கணிக்கிற எந்தவிதமான கிளர்ச்சி மனப்பான்மையும் இருக்கக்கூடாது. தொழில் சிப்பந்திகளும், நிர்வாகிகளும் ஒத்துழைப்பு தருவார்கள் என்றும் பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொள்வார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

தொழில் துறைக்கோ வர்த்தகத்திற்கோ அல்லது விவசாயத்திற்கோ உண்மையாக வேண்டுகிற கடன் வசதிகள் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளப்படும். வங்கிகளிடம் டிபாசிட்டர்கள் ஒப்படைத்துள்ள நிதிகளை வங்கிகள் புனிதமான தர்மப் பொறுப்பாக பாவிக்கும். இந்தியப் பொது மக்களுக்கு ஏற்கனவே சர்க்கார் தரப்பு வங்கிகளிடம் லேவாதேவி செய்து பழக்கம் உண்டு. ஸ்டேட் வங்கியும் அதன் துணை ஸ்தாபனங்களும் ஏற்கனவே மொத்த டிபாஸிட்டுகளில் மூன்றில் ஒரு பங்கின் மீது கட்டுப்பாடு உள்ளவையாக இருக்கின்றன.              இதனால் டிபாஸிட்டர்களின் நலன் எந்தவிதத்திலாவது ஆபத்திற்குள்ளாகி இருப்பதாக யாரும் கூறியதில்லை. ஸ்டேட் வங்கி பரிபூரணமாய் செவ்வையானது என்று நான் கூறவில்லை. ஆனால் சமூகத்திற்கு சேவை செய்வதில் ஒப்பிட்டுப் பார்த்தால், திறமையிலாயினும் சரி கடன் வழங்குவதிலாயினும் சரி எந்தத் தனியார் வங்கிக்கும் அது பின் வாங்கவில்லை. தபால் ஆபீஸ் சேவிங்ஸ் வங்கிகள் எட்டாத் தொலைவிலுள்ள கிராமங்களில் கூட மக்களிடையே வங்கி லேவாதேவிப் பழக்கத்தைப் பரப்புவதில் முக்கிய பங்கு எடுத்து வந்துள்ளன. தபால் ஆபீஸ் சேவிங்ஸ் வங்கிகளிடம் 1967 இறுதியில் ஒன்றரை கோடி பேர் டிபாசிட் கணக்கு வைத்திருந்தனர். 700 கோடி ரூபாய்க்கு மேல் டிபாசிட் தொகை இருந்தது. தபால் ஆபீஸ் சேவிங்ஸ் வங்கிகளின் பணம் போட்டவர்கள் எந்த சந்தர்ப்பத்திலாயினும் சரி தங்கள் நலன்களுக்கு ஆபத்து ஏற்பட்டதென்று பயந்ததாக, சர்க்காரைப் படுமோசமாகக் குறை கூறுபவர்கள் கூடச் சொல்லமாட்டார்கள்.

பொது மக்களுக்கு இன்னும் சீரான விரிந்த அளவு சேவை கிடைக்கும் என்று நாங்கள் உறுதி கூறுகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளிலோ வங்கி வசதிகள் விஷயத்தில் ஏற்பட்டு வந்துள்ள அபிவிருத்தி எங்கும் ஒரே சமசீராக இருக்கவில்லை. வங்கி வசதிகள்             குறைந்துள்ள மாநிலப் பகுதிகளில் வங்கி வசதிகளை விஸ்தரிப்பது அவசியம். அபிவிருத்தி ஏற்பட்டுள்ள மாநிலங்களில் கூட வங்கி வசதிகள் நகர்ப்புறங்களில் மட்டும்தான் இருக்கின்றன; முக்கியமாய் பெரிய பட்டணங்களில்தான் இருக்கின்றன. ஓரளவு நகரமாய் இருக்கிற பகுதிகளும் கிராம கேந்திரங்களும் சற்று             அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன என்றே கூறலாம். மாநிலங்களில் கடனுக்கும் டிபாசிட்டுத் தொகைகளுக்கும் உள்ள விகிதாசாரக் கணக்கைக் கவனித்தால் பல ராஜ்யங்களில் அது மிகக் குறைவாகவே இருக்கிறது. உதாரணமாக, அஸ்ஸாம், பீஹார், ராஜஸ்தான், ஒரிஸ்ஸா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகியவைகளைக் கூறலாம். இது காரணமாய் புகார்களும் வந்துள்ளன. அதாவது வங்கிகள் சில பகுதிகளில் டிபாசிட் மூலம் நிதி வசதியைத் திரட்டிக் கொண்டு வேறு இடங்களில் அவைகளைக் கடனாக வழங்கிப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று குறை கூறப்படுகிறது. இதனாலும் பிரதேச ரீதியில் சம வளர்ச்சி ஏற்படுத்துவதற்கு மேலும் குந்தகம் உண்டாகிறது என்கிறார்கள். வங்கிகள் பொதுத் தரப்புக் கட்டுப்பாட்டில் இருந்தால் இந்தப் போக்குகளைத் திருத்தலாம். அடிக்கடி வற்புறுத்தப்படுகிற சம ரீதியான பிரதேச வளர்ச்சிக்கு வழி செய்யும் கொள்கையை நிறைவேற்றலாம்.

மக்கள் ஆதரவு

இந்தச் சட்டத்தை நிறைவேற்றும்போது சர்க்கார் தங்களுக்கு இந்த நடவடிக்கைக்காக தெரிவிக்கப்பட்டுள்ள விரிவான மனமார்ந்த ஆதரவுகளுக்கு அருகதை உள்ளவர்களாக நடந்து கொள்வார்கள். இந்த ஏற்பாட்டை அமுல் செய்வதில், கடன் வசதிகளை விஸ்தரிப்பது மாத்திரம் கருத்தல்ல; அந்தக் கடன் வசதி குறிப்பிட்ட காரியத்துக்குப் பயன்படும்படி விஸ்தரிக்க  விரும்புகிறோம். சுதந்திரம் ஏற்பட்டதிலிருந்து தேசத்தின் பல்வேறு பகுதி மக்களுக்கும் பல்வேறு பகுதி இடங் களுக்கும் இருந்து வருகிற ஆழ்ந்த அதி முக்கியமான பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதே அந்தக் காரியம்.

இது சரித்திர முக்கியத்துவம் உள்ள நடவடிக்கை  அல்ல; ஆனால் சரியான திசையில் செல்லும் நடவடிக்கையாகும். அதை வெற்றிகரமாக நடத்திவைக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ள எல்லாரும் தங்கள் கருத்துகளையும் யோசனைகளையும் தெரிவித்து எங்களுக்கு உதவி புரியும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். அவைகளை நாங்கள் நிச்சயமாய் பரிசீலிப்போம். அவர்களுக்கோ நாட்டு மக்களுக்கோ ஏமாற்றம் ஏற்படாத வகையில் அதை நடத்தி வைப்பதற்காக அவர்களின் யோசனைகளை நாங்கள் நன்கு கவனிப்போம். 

No comments:

Post a Comment