Sunday, December 29, 2013

தகவல் உரிமைச் சட்டம்


●    மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் செயல்பாடு குறித்து, நாம் கேட்கும் தகவல்களை அந்த அமைப்புகள் நமக்கு அளிக்க வேண்டியதை கட்டாயமாக்கும் தகவல் உரிமைச் சட்டம் 2005-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

●   இச்சட்டத்தை நம் நாடாளுமன்றம் இயற்றியது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.

●   2002-ஆம் ஆண்டில் ஜம்மு- காஷ்மீர் தவிர, இதர மாநிலங்களுக்கு பொருந்துகிற தகவல் சுதந்திர சட்டத்தை நம் நாடாளு மன்றம் நிறைவேற்றியது. இந்த சட்டமும் பலவீனமான சட்டம் என்பதைவிட, இந்த சட்டம் அரசிதழில் வெளியிடப்படவில்லை. மேலும், 2002- ஆம் ஆண்டு முதல் செயலற்ற நிலையில் இருந்த அந்த சட்டத்திற்குப் பதிலாக, 2005-ஆம் ஆண்டு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது.

●   இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம், மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், நீதிமன்றம், சட்டப் பேரவை முதலியனவற்றுக்குப் பொருந்தும். அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள், அரசிடமிருந்து நேரடி யாகவோ, மறைமுக மாகவோ உதவிபெறும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியா அமைப்புகளும் இச்சட்டத்தின்கீழ் வரும். அரசிடமிருந்து சலுகை விலையில் நிலத்தைப் பெற்ற நிறுவனங்கள் அல்லது வரிச்சலுகை பெற்ற தனியார் பள்ளிகள், மருத்துவ மனைகள் மற்றும் இதர வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.

●   தனியார்துறை தொடர்பாக, அரசு தற்போதுள்ள சட்டத்தைப் பயன்படுத்தி பெறும் தகவல்களை இந்திய குடிமகனும் இச்சட்டத்தின் மூலம் பெறலாம்.

●   இப்புதிய சட்டம், "தகவல்' என்ற சொல்லுக்கு விரிவான விளக்கத்தை அளிக்கிறது. இதன்படி ஒரு விஷயம் குறித்து, அதிகாரிகள் அளிக்கும் ஆலோசனைகளும் கருத்துகளும்கூட, நிபந்தனையின் பேரில் வெளியிடப்பட வேண்டும். இச்சட்டத்தின் 8-வது பிரிவின் கீழ், விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலன்றி, ஒரு விஷயம் குறித்து அதிகாரிகள் கோப்புகளில் எழுதிய குறிப்புகளும், கேட்பவருக்கு அளிக்கப்பட வேண்டும்.

●   ஒவ்வொரு அரசுத்துறையும் பொது  மக்களிடமிருந்து மனுக்களைப் பெறவும், அது தொடர்பான தகவல்களைத் தரவும், மக்கள் தகவல் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறப் படும் மனுவுக்கு 30 நாளில் பதிலளிக்க வேண்டும். இருப்பினும், மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பின், அது தொடர்பான தகவல்களை அளிப்பதற்கு மேலும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. என்றாலும், ஒரு நபரின் உயிர் அல்லது சுதந்திரம் தொடர்பான தகவல்கள் 48 மணி நேரத்திற்குள் அளிக்கப்பட வேண்டும்.


●  
இச்சட்டத்தின் கீழ் சில வகைத் தகவல்களை வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டிருக்கிறது. நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை, பாதுகாப்பு, அறிவியல்  அல்லது பொருளாதார நலன்களைப் பாதிக்கும் தகவல்கள், அண்டை நாடு களுடன் உறவைப் பாதிக்கும் அல்லது வன்முறையைத் தூண்டிவிடும் தகவல்கள் ஆகியவற்றை வெளியிட இச்சட்டம் தடை செய்கிறது. நீதிமன்றத்தாலோ, தீர்ப்பாயத்தாலோ தடை செய்யப்பட்ட தகவல்கள், நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் உரிமையைப் பாதிக்கும் தகவல்களை வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.


●   மூன்றாம் நபரின் வர்த்தக நலன்களைப் பாதிக்கக்கூடிய, வர்த்தக ரகசியங்கள், அறிவுசார் உரிமைகள் தொடர்பான தகவல்கள் ஆகியவற்றை வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், பொதுமக்கள் நலன் கருதி, அவற்றை வெளியிடலாம் என்று தகுதியுடைய அதிகாரி தெரிவிக்கும் பட்சத்தில், அத்தகவலை வெளியிடலாம் என்று இச்சட்டத்தில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

வெளிநாட்டு அரசுகளிடமிருந்து பெறப் படும் ரகசியத் தகவல்கள் ஒரு வழக்கின் விசாரணையைப் பாதிக்கும் என்பதாலோ, ஒருவரின் உயிருக்கோ, பாதுகாப்பிற்கோ குந்தகம் விளைவிக்கும் என்பதாலோ, அத்தகைய தகவல்களை வெளியிடுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவைக் குறிப்புகள், அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் கருத்துகள், செயலர்கள் மற்றும் இதர அதிகாரிகள் நிலையிலான கூட்டங்களில் எடுக்கப்படும் குறிப்புகள் ஆகியவற்றை வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், அத்தகைய முடிவுகளை மேற்கொள்வதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை இந்த சட்டத்தின் ஏதாவது ஒரு பிரிவின் கீழ் வெளியிடத் தடையில்லை என்றால், அந்த தகவலையும் மக்களுக்காக வெளியிடலாம்.
●   அரசின் பதிப்பக உரிமை தவிர, இதர பதிப்பக உரிமைகளை மீறும் தகவல்கள், தனிநபர் சுதந்திரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் தகவல் ஆகியவற்றை வெளியிடுவதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், பொதுநலன் கருதி, இவற்றை வெளியிடலாம்.

●   நாடாளுமன்றத்திற்கும் சட்டப் பேரவைக்கும் மறுக்கக்கூடாத தகவல் எந்த ஒரு தனி நபருக்கும் மறுக்கக்கூடாது. அதேபோல, ஆவணம் ஒன்றில், வெளியிடத் தடை செய்யப்பட்ட பகுதி தவிர, எஞ்சியவற்றை வெளியிட வேண்டும் என்றும் இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.

புகார்களும் மேல்முறையீடுகளும்


●   இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம், சுயேட்சையான தகவல் ஆணையங்களை அமைக்க வகை செய்கிறது. இதன்படி, மத்தியில் ஒன்றும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்றும்(பிரிவு 15-ன்படி) என ஆணையங்கள் அமைக்கப்படும். இந்த ஆணையத்தின் தலைவராக தலைமைத் தகவல் ஆணையர் இருப்பார். அவருக்கு கீழ் 10 தகவல் ஆணையர்கள் இருப்பார்கள். இச் சட்டத்தை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக தகவல் ஆணையத்தில் முறையீடு செய்யலாம்.

●   தகவல் தர மறுக்கும் அல்லது தாமதப்படுத்தும் தகவல் அதிகாரிக்கு எதிராக இரண்டு நிலைகளில் முறையீடு செய்யலாம். தகவல் அதிகாரியைவிட, மூத்த அதிகாரியிடம் முதலாவதாக முறையீடு செய்யலாம். இரண்டாவதாக மத்திய அல்லது மாநில தகவல் ஆணையத்தில் முறையீடு செய்யலாம். ஒரு விஷயம் தொடர்பான தகவலை தர மறுப்பதற்கான காரணத்தை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு மக்கள் தகவல் அதிகாரிக்கு உண்டு. தகவல் அதிகாரிக்கு எதிரான முறையீடுகளை 30 முதல் 45 நாட்களுக்குள் பைசல் செய்துவிட வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது.

●   ஒரு விஷயத்தில் குறிப்பிட்ட தகவலை வெளியிட வேண்டாம் என்று நிரூபிக்கப் பட்டால் அன்றி,  அனைத்து தகவல்களும் வெளியிடப்பட வேண்டியவையே என்றும் மேல் முறையீட்டு அதிகாரிகள் கருத இச்சட்டம் வகை செய்கிறது.

●   இச்சட்டத்தை மீறும் தகவல் அதிகாரிகள் மீது அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது. காரணம் ஏதும் இல்லாமல் செய்யப்படாத தாமதத்திற்கு, தகவல் ஆணையம் நாளொன்றுக்கு ரூ.250 அபராதம் விதிக்கலாம்.
●   மக்களிடமிருந்து மனுக்களை பெற மறுக்கும் அதிகாரிகள் மீதும் ரூ. 2500 வரை அபராதம் விதிக்கலாம். இருப்பினும் தகவல் அதிகாரிகள் நேர்மையாகவும் மனப்பூர்வமாகவும் செயல்படும்போது ஏற்படும் தவறுகளிலிருந்து சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

●   அனைத்துத் தர மக்களும், குறிப்பாக கிராம மற்றும் நகர்ப்புற ஏழை மக்கள் அரசிடமிருந்து தகவல் பெறுவதற்கு இச்சட்டத்தில் வழிவகைகள் செய்யப் பட்டுள்ளன. இந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டுதான், இச்சட்டம் நியாயமான கட்டண விதிப்பிற்கு வகை செய்கிறது.

●   வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள எளிய மக்களுக்கு இந்த கட்டணவிதியிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது.

●   தகவல் கோருவோர், தகவலைப் பெறுவதற்கான காரணத்தை சொல்லத் தேவையில்லை. அதேபோல் தங்களைப் பற்றிய விவரங்களை எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை. தகவல் கோரும் அனைவருக்கும், குறிப்பாக புலன் வளர்ச்சி குன்றியவர்களுக்கு கோரிக்கை களை எவ்வாறு அரசிடம் சமர்ப்பிப்பது என்பதை எடுத்துச் சொல்வதில் உதவவும் அரசு கடைமைப்பட்டிருக்கிறது.

●   தமிழக அரசு 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு தகவல் பெறுவதற்கான உரிமைச் சட்டத்தினை வெளியிட்டது.    
 

No comments:

Post a Comment