Wednesday, February 27, 2013

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை என்பது என்ன ?

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை என்பது என்ன ?
“தமிழக கேரள எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணை கட்டி 116 வருடமாகிவிட்டது. இந்த அணை பலவீனமாகிவிட்டது. எனவே உடைந்தால் கேரள மக்களுக்கு ஆபத்து. புதிய அணை கட்ட வேண்டும். இப்போதுள்ளதை உடைக்க வேண்டும்” என்பது கேரள அரசின் நிலை. “அணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. புதிய அணை தேவையில்லை. இருக்கும் அணையை அழித்து புது அணை கட்டுவதில் இறங்கினால், தமிழ்நாட்டில் பாசன வசதி பெறும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவ்ட்டங்களின் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரிலும் விவசாயம் பாதிக்கப்படும்” என்பது தமிழக அரசின் நிலை.
இரண்டில் எது உண்மை ?
அணை பலவீனமாகிவிட்டது என்று 1979ல் கேரள அரசு சொல்ல ஆரம்பித்தது. மெல்ல மெல்ல இந்த பிரச்சினை வளர்ந்து உச்ச நீதிமன்றத்தின் முன்பு வழக்காக வைக்கப்பட்டது. நிபுணர் குழுவை அமைத்து பிரச்சினையை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் அணை பலவீனமாக இல்லை என்றும் தற்காலிகமாக குறைத்துத் தேக்கிய நீரின் அளவை பழையபடி அதிகரிக்கலாமென்றும் 2006ல் தீர்ப்பு வழங்கியது. இந்த்த் தீர்ப்பை எதிர்த்து கேரளத்திலிருந்து தாக்கல் செய்த மனுக்கள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.
அப்படியானால் விஷயம் ஏற்கனவே முடிந்து போய்விட்டதே? ஏன் மறுபடியும் பிரச்சினை ?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு எதிர்த்து தோல்வியடைந்தபின், அணைகள் பாதுகாப்புக்கென்று ஒரு தனிச்சட்டம் கொண்டு வந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படவிடாமல் தடுத்தது. காவிரி நீர் பிரச்சினையிலும் இதே போல உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடகம் சட்டம் கொண்டு வந்தபோது அந்த சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதைச் சுட்டிக் காட்டி கேரள அரசின் சட்டமும் செல்லாது என்று தமிழக அரசு போட்ட வழக்கில் தொடர்ந்து இன்னும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அந்த வழக்கில் நீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கை வருவதற்கு சற்று முன்னதாக கேரளத்தைச் சேர்ந்தவர்களால் எடுக்கப்பட்ட டேம் 999 படம் வெளியானது. அணை உடைந்து மாபெரும் விபத்து ஏற்படுவது பற்றிய படம் இது. கேரளத்தில் ஆட்சியில் இருக்கும் கூட்டணியின் எதிர்காலத்தை தீர்மானம் செய்யக் கூடிய இடைத் தேர்தல் நடக்கும் சமயம். எல்லாமாக சேர்ந்துகொண்டு கேரள மக்களின் பயத்தை கிளப்பிவிட்டு அரசியல் லாபமடையும் நோக்கத்தில் மறுபடியும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமானது என்ற பிரசாரம் எழுப்பப்பட்டிருக்கிறது.
இந்த அணை யாருக்கு சொந்தம் ? கேரளாவுடையதா? தமிழ்நாட்டுடையதா?
முல்லைப் பெரியாறு அணை ஒரு விசித்திரமான அணை. கட்டப்பட்ட அணை தமிழக அரசுக்கு சொந்தமானது. ஆனால் கட்டியிருக்கும் இடம் கேரளாவுடையது என்ற அடிப்படையில் தமிழக அரசுக்கு 999 வருட குத்தகையில் தரப்பட்டிருக்கிறது.
அப்படியானால் அணை கட்டப்பட்டிருக்கும் பெரியாறு ஆறு யாருக்கு சொந்தமானது ?
பெரியாறு ஆறு உற்பத்தியாவது தமிழ்நாட்டில்தான்.திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் சிவகிரி மலையில்தான் இந்த ஆறு உற்பத்தியாகி வடக்கு நோக்கி 48 கிலோமீட்டர் ஓடி கேரளாவுக்குள் நுழைந்து அங்கிருக்கும் முல்லையாற்றில் சேர்ந்து பின் கிழக்கு நோக்கிச் சென்று இன்னும் பல ஆறுகளுடன் அங்கே இணைந்து பிரும்மாண்டமாகி கடைசியில் அரபிக் கடலில் கலக்கிறது. வீணாகும் நீரை பயன்படுத்தி தமிழகத்தின் தென் மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினையையும் விவசாயப் பாசனத் தேவையையும் பூர்த்தி செய்யல்லாமென்பது 160 வருடம் முன்பு உதயமான திட்டம். அதை பிரிட்டிஷ் ராணுவப் பொறியாளர் மேஜர் ஜான் பென்னிகுயிக் கடும் சிரமத்துடன் நிறைவேற்றினார். பெரியாறு நீர்த்தேக்கத்தை செயற்கையாக ஏற்படுத்தி அதிலிருந்து தமிழகத்துக்கு நீர் வருவதற்காக மலையைக் குடைந்து சுரங்கக் கால்வாய் உருவாக்க வேண்டியிருந்தது. முதற்கட்டத்தில் கட்டுமானம் வெள்ளத்தில் உடைந்ததும் பிரிட்டிஷ் அரசு பணம் தர மறுத்துவிட்டது. பென்னிகுயிக் தன் சொத்தை விற்றும் அடமானம் வைத்தும் சொந்தச் செலவில் அணையை கட்டினார். அவருடைய சாதனையை நேரில் கண்டபின்னர் அரசு பணத்தை திருப்பிக் கொடுத்தது. இந்தியாவின் இரண்டு பருவ மழைகளிலிருந்தும் பயனடையக்கூடிய ஒரே மலைப்பகுதியில் இருப்பதுதான் முல்லைப் பெரியாறு அணயின் சிறப்பான தனித்தன்மை.
அணை கட்டி நூறு வருடங்களுக்கு மேலாகிவிட்டதால், அது பலவீனமாகியிருக்க வாய்ப்பு உண்டுதானே ?
பராமரிப்பு இல்லையென்றால் கட்டி இரண்டே வருடத்தில் கூட ஒரு வீடு நாசமாகப் போகும். தொடர்ந்து சீரான பராமரிப்பு இருந்தால் பல நூறு வருடம் கழித்தும் ஒரு கட்டுமானம் பலமாகவே இருக்க முடியும். கரிகாலன் கட்டிய கல்லணை 1900 வருடமாகியும் பலமாகவும் பயன்பாட்டிலும் இருந்துவருகிறது. காரணம் தொடர்ந்து பழுதுபார்த்து பராமரித்துவருவ்துதான். பென்னிகுயிக் முல்லைப்பெரியாறு அனையைக் கட்டிய சமயத்தில் கவர்னராக இருந்தவர் சர் ஆர்தர் காட்டன். அவர் ஆட்சியில் முல்லைப் பெரியாறுக்கும் முன்னதாகக் கட்டப்பட்ட, கோதாவரி, தௌலேஸ்வரம், கிருஷ்ணா அணைகள் எல்லாம் தொடர்ந்த பராமரிப்பினால் பலமாகவே இருந்துவருகின்றன. முல்லைப்பெரியாறு அணையையும் அவ்வப்போது பலப்படுத்தும் பராமரிப்பு வேலையை தமிழகப் பொறியாளர்கள் செய்துவந்துள்ளனர். உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு இந்த வட்டாரத்தின் நில அதிர்ச்சி தன்மை உட்பட எல்லா அம்சங்களையும் ஆராய்ந்தபிறகே அணைக்கு ஆபத்தில்லை என்று கூறியிருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வருவதால், கேரளாவுக்கு ஏதாவது இழப்பு இருக்கிறதா?
இல்லவே இல்லை. பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீர் அளவு 4,867.9 மில்லியன் கன மீட்டர். இன்னும் பத்து வருடம் கழித்துப் பார்த்தாலும் கூட,2021-ம் ஆண்டில் கேரளத்தின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தொழிலுக்கும் தேவையான மொத்த நீர் அளவு 2254 மி.க.மீட்டர்தான். வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரின் அளவு 2313 மி.க.மீ. ஆகும். இப்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடிக்கு மேல் இருக்கக்கூடாது என்ற நடைமுறைதான் 1979லிருந்து பின்பற்றப்படுகிறது. இதை பழையபடி 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியும் நடக்கவில்லை. அப்படி உயர்த்தினால் கூட, தமிழகத்துக்குத் தர வேண்டிய நீரின் அளவு வெறும் 126 மி.க.மீட்டர்தான்.கேரளத்துக்கு எந்த தண்ணீர் நஷ்டமும் இல்லை. மாறாக கேரளம் ஏற்கனவே தமிழகத்தின் தண்ணீரை மறைமுகமாக அனுபவித்து வருகிறது. தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அதிகாரப்பூர்வமாக 700 டன் அரிசி அனுப்பப்படுகிறது. இதை உற்பத்தி செய்ய 511 மில்லியன் கன மீட்டர் நீர் செலவாகிறது. கேரளத்தின் இதர உணவுத்தேவைகளையும் தமிழகம்தான் வழங்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கேரளாவில் எந்த ஆற்றுப்படுகையிலிருந்தும் மணல் எடுக்க அனுமதியில்லை. தமிழக ஆற்றுப்படுகைகளிலிருந்து எடுக்கப்படும் மணல்தான் கேரளாவில் கட்டட வேலைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அப்படியானால் ஏன் கேரளா முல்லைப்பெரியாறு அணை விஷயத்தில் இப்படி பீதியை கிளப்பிவிடுகிறது ?
இந்தப் பிரச்சினையின் வேர் தொடக்கத்திலேயே இருக்கிறது. பென்னிகுயிக் அணை கட்ட திட்டம் போட்டபோது அங்கே திருவிதாங்கூர் அரசும் இங்கே பிரிட்டிஷ் அரசும் இருந்தன. அணைப் பகுதி அமையவேண்டிய தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் 90 சதவிகிதம் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பகுதிகள். ஆனால் பிரிட்டிஷ் அரசு தவறாக அந்தப் பகுதிகளை திருவிதாங்கூருக்கு சொந்தமானது என்று கருதியது. அந்த அடிப்படையில் ஒப்பந்தம் போட்டது.
ஆனால் திருவிதாங்கூர் மகாராஜா இருமுறை பிரிட்டிஷ் அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாக ஆய்வாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். அணை இருக்கும் இடம் சென்னை ராஜதானிக்கு சொந்தமானது. எனவே சுற்றிலும் இருக்கும் பகுதிகலையும் சென்னையே எடுத்துக் கொண்டு தனக்கு 6 லட்ச ரூபாய் தந்தால் போதுமானது என்று மன்னர் சொல்லியிருக்கிறார். அஞ்சியோ, தங்கச்சேரி, பாலம் ஆகிய மூன்று பகுதிகளை சென்னை தனக்குக் கொடுத்துவிட்டு பதிலுக்கு முல்லைப் பெரியாற்றை சுற்றியுள்ள பகுதிகளையும் எடுத்துக் கொள்ளட்டும் என்று சொல்லியிருக்கிறார். இதை பிரிட்டிஷ் அரசு பொருட்படுத்தவே இல்லை. அப்போதே அப்படி செய்திருந்தால், பின்னாளில் மொழி வாரி மாநிலம் அமைக்கும்போது 90 சதவிகித தமிழர்கள் இருக்கும் தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் தமிழகத்தோடே இருந்திருக்கும்.
தங்கள் நிலத்தில் அணையை வைத்துக் கொண்டு தண்ணீரை எடுத்துக் கொள்ளும் தமிழகம் கையில் அணை தொடர்பான எல்லா அதிகாரமும் இருப்பதை கேரள அரசு விரும்பவில்லை. படிப்படியாக ஒவ்வொரு அதிகாரமாக அது பறித்துக் கொண்டது. 1979 எம்.ஜி.ஆர்- அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது. அது மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு தமிழக காவல் துறையிடமிருந்து கேரல காவல் துறைக்கு பிடுங்கித் தரப்பட்டது. ஆனால் கேரள போலீசுக்கான சம்பளத்தை தமிழகமே தருகிறது. அணையில் படகு விடும் உரிமை தமிழகத்திடமிருந்து பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை வரையிலான சாலையும் தமிழக அரசிடமிருந்து பிடுங்கப்பட்டது. அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும் அணைக்கு செல்ல பொறியாளர்கள் உடபட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக இப்போது அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் கவலையென்றால் புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல்லவா சொல்ல வேண்டும் ? தான் கட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக் ஏன் சொல்ல வேண்டும் ?
ஒரு வாதத்துக்காக, அணை பலவீனமாகிவிட்டதாகவும் ஒரு பூகம்பத்தில் உடைந்துவிடுமென்றும் வைத்துக் கொண்டால், 30 லட்சம் கேரள மக்கள் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படத்தானே செய்யும் ?
இல்லை. இந்தக் கருத்தே கேரளத்தில் மலையாளிகள் ஆதரவைத் திரட்ட அவர்களிடையே பீதியைக் கிளப்ப சொல்லப்படும் கருத்துதான். அணை உடைந்து எந்த மக்களாவது பாதிக்கப்பட்ட்டால், அதில் பெரும்பாலோர் தமிழர்கள்தான். இந்த வட்டாரத்தில் அவர்கள்தான் இப்போதும் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். தவிர அனை உடைந்தால் அந்த தண்ணீர் நேராக கீழே உள்ள இடுக்கி அணைக்குத்தான் போய்ச் சேரும். இடுக்கி அணையே முல்லைப் பெரியாறிலிருந்து வரும் உபரி நீரைத் தேக்கக் கட்டப்பட்டதுதான். வழியில் இருக்கும் ஊர்கள் குமுளி, ஏலப்பாறா இரண்டு மட்டுமே. குமுளி கடல் மட்டத்திலிருந்து 3350 அடி உயரத்திலும் ஏலப்பாறாI 4850 அடி உயரத்திலும் உள்ளன. முல்லைப்பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2890 அடி உயரத்தில்தான். எனவே அதில்லிருந்து வெள்ளம் இந்த ஊர்களுக்கு மலையேறிச் செல்ல முடியாது.
இந்தப் பிரச்சினையைத் திரும்பவும் பேசித் தீர்த்துக் கொள்ளமுடியாதா ?
பேச்சுகளின் மூலம் தீர்க்க முடியாத நிலையில்தான் நீதிமன்றத்தை இரு தரப்புமே அணுகுகின்றன. அதன்பின்னர் நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்வதுதான் முறை. ஆனால் கேரள அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுக்கிறது. மேல் முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட
பின்னரும் உத்தரவை ஒப்புக் கொள்ள மறுத்து, அணைக்கு ஆபத்து என்று மக்களிடையே கலவரத்தை தூண்டிவிட்டு தான் விரும்புவதை சாதிக்க நினைக்கிறது.
அப்படியானால் என்னதான் தீர்வு ?
நிச்சயம் வன்முறை உதவாது. இங்கே நாயர் டீக்கடையையோ மேனன் நகைக்கடையையோ தாக்குவது தீர்வல்ல. பதிலுக்கு கேரளத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் தொழிலாளர்கள், வணிகர்கள் மீதான தாக்குதல் அங்கே ஆரம்பிக்கும். இதற்கு முடிவே இல்லை. கேரளத்திலேயே உண்மை நிலையை அறிந்தவர்கள் உண்டு. இலக்கியவாதி பால் சக்கரியா, மத்திய நீரியல் கழகத் தலைவர் தாமஸ் போன்றோர் உண்மை நிலையை பகிரங்கமாகப் பேசியவர்கள். ஜெயலலிதா போல மலையாளத்தில் நன்றாகப் பேசத் தெரிந்த தமிழகத் தலைவர்கள் தொலைக்காட்சி வாயிலாகவும் தேவையானால் நேரில் கேரள நகரங்களுக்கு சென்றும் மலையாளத்திலேயே பேசி மலையாளிகளிடையே தூண்டிவிடப்பட்டிருக்கும் பயத்தை நீக்க முயற்சிக்கலாம். தமிழக சினிமா கலைஞர்களுக்கு கேரளத்தில் சாதாரண மக்களிடையே பெரும் செல்வாக்கு இருக்கிறது. தமிழ் திரைப்படங்கள் அங்கே பெரும் வசூலைக் குவிக்கின்றன. தமிழ் சினிமா பாடல்கள் இல்லாத கேரள ஊரே இல்லை. எனவே தமிழ் சினிமா பிரமுகர்கள் கேரள சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொய் பயத்துக்கெதிரான பிரசாரம் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு தொடர்ந்து ஏற்க மறுத்தால் அந்த அரசை அரசியல் சட்டத்தின் கீழ் டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. அதைப் பயன்படுத்த முன்வரும்படி மத்திய அரசை நாம் வற்புறுத்த வேண்டும்.தமிழகம் காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினாலே கேரளம் தாங்காது. கேரளத்துக்கு உணவுப் பொருட்களையோ மின்சாரத்தையோ மணலையோ ஒரு வாரத்துக்கு வழங்காமல் ஒத்துழையாமை செய்தால், கேரளம் பெரும் சிக்கலில் ஆழ்ந்துபோகும்.

No comments:

Post a Comment