Sunday, April 7, 2013

சோவியத் ரஷ்யா உடைய காரணம்...


கூடன்குளம் அணுமின் நிலையம் இன்னும் ஒரு மாதத்திற்குள் தன் உற்பத்தியைத் தொடங்கும் என இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்ய அதிபர் புதினுடன் இணைந்து அறிவித்துள்ளார். இந்நிலையில் கூடன்குளத்தில் நிறுவப்படும் ரஷ்ய தயாரிப்பான அணு உலைகள் பாதுகாப்பானதா? என்கிற கேள்வியை சர்வதேச மீடியாக்கள் எழுப்பியுள்ளன.

ஈழப் போரில் நடைபெற்ற அவலங்களை சேனல்-4 வெளி யிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதுபோல கூடன் குளத்தில் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப் படும் அணு உலைகள், பாதுகாப்பானவையா? என்கிற கேள்வியை முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் மிகைல் கோர்பச்சேவ்வும் சாரா பிலிப்ஸ் என்கிற உக்ரைன் நாட்டு விஞ்ஞானியும் சர்வதேச அரங்கில் எழுப்பியுள்ளனர்.

பரபரப்பான இந்த குற்றச்சாட்டை பற்றி மிகைல் கோர்பச்சேவ் கூறுகையில் ""எல்லோரும் நான் கொண்டுவந்த சீரமைப்பு நடவடிக்கைகள்தான், "சோவியத் யூனியனும் அதன் கம்யூனிச முறையிலான ஆட்சியும் சிதறுண்டு போனதற்கு காரணம்' என்கிறார்கள். உண்மையில் அதற்கு காரணம் 1986-ம் வருடம் ஏப்ரல் 26-ம் தேதி செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட வெடி விபத்துதான் சோவியத் யூனியனையும் அதன் தலைமை அமைப்பான கம்யூனிச ஆட்சியையும் சிதறுண்டு போக செய்தது. அதுவரை எங்களது தயாரிப்பான அணு உலைகள் மிகவும் பாதுகாப்பானது என நம்பியிருந்தோம். இந்த அணு உலைகளை விட நூறு மடங்கு பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை ஒவ்வொரு எஸ்.எஸ்.18 ராக்கெட்டுகளில் பொருத்தி வைத்திருந்தோம்.


செர்னோபில் அணுமின் நிலையத்தின் நான்காவது அணு உலை வெடித்தது. உடனே ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொலிட் பீரோ கூடியது. செர்னோபிலுக்கு விஞ்ஞானிகள் குழுவை அனுப்பி வைத்தது. அந்த விஞ்ஞானிகளுக்கு எதுவும் புரியவில்லை. செர்னோபிலுக்கு போன அவர்கள் கதிரியக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் உடைகள் எதுவும் அணியாமல் அந்த பகுதியில் இருந்த உணவுகளையும் தண்ணீரையும் குடித்தார்கள்.

அத்துடன் சாதாரண தீவிபத்தை கட்டுக்குள் கொண்டு வருவது மாதிரி ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை எரிந்து கொண்டிருந்த அணு உலைகளில் ஊற்றினார்கள்.

தண்ணீரை ஊற்றிய ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஐந்து ராணுவ வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்தி லேயே மரணம் அடைந்ததுதான் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் கதிரியக்க தாக்குதலின் வலுவை உலகுக்கு வெளிக்காட்டியது. அந்த தகவலை கேட்டு நாங்கள் அதிர்ந்து போனோம். அணு உலைகளில் எரியும் கதிரியக்கம் மிக்க தீயை வெறும் தண்ணீரால் அணைப்பது தவறான காரியம் என நாங்கள் புரிந்து கொள்வதற்குள் நிலைமை கைமீறி போய்விட்டது.

அணு உலையில் இருந்த கதிரியக்கம் கொண்ட மூலப் பொருட்கள் அணு உலைகளில் ஊற்றப்பட்ட தண்ணீர் மூலம் டினீப்பர் ஆற்றில் கலந்து ரஷ்யாவின் நகரங்கள் மற்றும் உக்ரைன், பைலோரஷ்யா போன்ற சோவியத் யூனியனில் இருந்த நாடுகளை தாண்டி ஐரோப்பாவில் உள்ள ஸ்வீடன் வரை பரவியது.

அதன் பிறகுதான் இந்த அணு உலை விபத்து பற்றிய செய்தியை சோவியத் யூனியனின் அதிகாரப்பூர்வ நாளிதழான பிராவ்தா தனது மூன்றாவது பக்கத்தில் ஒரு மூலையில் தட்பவெப்ப நிலை குறித்த செய்திகளுடன் ஒரு செய்தியாக வெளியிட்டது.

முதலில் அணுஉலையில் தண்ணீர் ஊற்றிய போர் வீரர்கள் உட்பட வெடித்த அணு உலையில் வேலை செய்த 25 பேர்தான் பலியானார்கள். அடுத்த சில தினங்களில் செர்னோபில் நகரத்தில் வசித்த மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்துபோனார்கள். அதைத் தொடர்ந்து அணு உலையைச் சுற்றியுள்ள நாடுகளில் வாழ்ந்த லட்சக்கணக்கான மக்கள் அணு கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டனர். இது சோவியத் யூனியனில் பெரிய பீதியை கிளப்பிவிட்டது. இந்த அணுஉலை வெடிப்புக்கு காரணம் சோவியத் யூனியன் என்கிற கூட்டமைப்பும் அதன் தலைமையாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியும்தான் என மக்கள் நினைத்தனர்.


தரமற்ற அணு உலையை தயாரித்தது சோவியத் நிர்வாகம் என மக்கள் குற்றம் சாட்டினார்கள். அது வெடித்தது என்கிற செய்தியைக் கூட மறைத்தது பெரிய அநியாயம் என மக்கள் பொங்கியெழுந்தார்கள்.

அதுவரை வல்லரசாக இருந்த சோவியத் யூனியனின் செல்வம் முழுவதும் செர்னோபில் அணு உலைகளை மேலும் வெடிக்காமல் கட்டுப்படுத்த பெருமளவு செலவழிக்கப்பட்டது.

அந்தச் செலவினங்களினால் ஏற்பட்ட கடனை இன்னும் ரஷ்யா, உக்ரைன், பைலோ ரஷ்யா போன்ற நாடுகள் தாங்கிக் கொண்டி ருக்கின்றன. இந்த பொருளாதார செலவு மக்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. உக்ரைன், பைலோரஷ்யா போன்ற நாடுகள் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து செல்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் கிளர்ச்சி ஏற்பட்டது.

செர்னோபில் அணு உலை விபத்து நடந்த ஒரு வருடத்திற்குள் சோவியத் யூனியனும் அதை ஆண்ட சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு காணாமல் போயின.
செர்னோபில் அணுஉலையை உற்பத்தி செய்த சோவியத் கம்பெனி கடைப்பிடித்த தொழில்நுட்பங்களின் அடிப்படையில்தான் இன்றளவிலும் அணு உலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய சோவியத் தொழில்நுட் பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அணு உலைகள்தான் நட்பு நாடான இந்தியாவிற்கும் வழங்கப்பட்டது. சோவி யத் வடிவிலான அணு உலையை வைத்து மின் சாரம் தயாரித்த ஜப் பானின் புகுஷிமாவிலும் அணு உலை செர்னோபில் மாதிரியே வெடித்தது.

இது அணு உலை கள் மூலம் மின்சாரம் தயாரிப்பதும் அணு ஆயு தங்களை வைத்திருப்பதும் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்துகிறது'' என்கிறார். இதை அல்லா யாரோ ஷின்ஸ்யோ என்கிற ரஷ்ய பத்திரிகையாளர் கட்டுரையாக வெளியிட்டுள்ளார்.

""86-ல் நடந்த செர்னோபில் விபத்திலிருந்து உலகம் எந்த வகையிலும் பாடம் கற்றுக் கொள்ள வில்லை என்பதை 2011-ல் ஜப்பானின் கடற்கரை நகரான புகுஷிமாவில் சுனாமியால் நடந்த அணு உலை விபத்து மறுபடியும் தன் ஆபத்தை நிரூபித்தது.

செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட தீயை அணைக்க தண்ணீரை ஊற்றியது மாதிரியே புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட தீயை அணைக்க தண்ணீர் ஊற்றப்பட்டது.

அதனால் செர்னோபில் விபத்து கதிரியக்கத்தை பரப்பியது மாதிரியே புகுஷிமா விபத்தும் ஜப்பான் முழுவதும் கதிரியக்க தாக்குதலை நடத்தியது.

புகுஷிமாவின் கதிரியக்க தாக்குதல் அதைச் சுற்றி 200 கி.மீ. சுற்றளவிலுள்ள நகரத்தில் வசித்த குழந்தைகளின் தைராய்டு சுரப்பிகளில் கேன்சரை வரவைத்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கேன்சர் மற்றும் மனநோய் பாதிப்புகளால் இன்றளவிலும் தவித்து வருகிறார்கள்'' என்கிறார் செர்னோபில்லையும் புகுஷிமாவையும் ஆய்வு செய்த விஞ்ஞானி சாரா பிலிப்ஸ்.

""செர்னோபில் விபத்துக்குள்ளான அதே மாதிரி அணு உலை, புகுஷிமாவில் விபத்துக்குள்ளானது மாதிரி கடற்கரையில் அமைக்கப்பட்டு கூடன்குளத்தில் அடுத்த மாதம் உற்பத்தியை துவக்குகிறது. விபத்துக்கான செர்னோபில்லுக்கும் புகுஷிமாவிற்கும் கூடன்குளத்திற்கும் உள்ள ஒரே வித்தியாசம்... கூடன்குளம் மக்கள் அணுஉலையை எதிர்த்து நடத்தும் வீரஞ்செறிந்த போராட்டம்தான்'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
Source:Nakkeran

No comments:

Post a Comment