Thursday, March 27, 2014

வரலாற்றுப் பக்கங்களிலிருந்து.... செந்தமிழ் மொழிப் பாதுகாப்பு

""திராவிட நாகரிகம் மனிதனுக்கு மனிதன் பிறப்பினால் பேதமுண்டு என்பதை ஒப்புக் கொள்வதில்லை. திராவிடச் சிந்தனையின் தலைவர்களான திருவள்ளுவர், அவ்வை, கம்பர் போன்றோர் பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்ததாகப் பறைசாற்றிக் கொள்ளவில்லை... பிறப்பினால் பேதமுண்டு என்பதைப் பரப்பியவர்களும், பல்வேறு கொடுமைகளுக்குக்  காரணமான வர்ணாஸ்ரம தர்மம் என்னும் முறைப்படி அதை விரிவுபடுத்தியவர்களும் அவர்கள்தான்!''.

""நாம் சேர, சோழ,* பாண்டிய மன்னர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஆங்கிலேயர் இங்கு அடியெடுத்து வைப்பதற்கு முன்வரை சக்கரவர்த்திக ளாக இருந்த அசோகனுக்கெதிராக, சந்திர குப்தனுக்குக் கெதிராக, அக்பருக்கெதிராக, அவுரங்க சீப்புக்கெதிராகத் தங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள்!''. - இவை இருவர் பேசிய பேச்சுக்களின் பகுதிகளாகும்!.

இவ்விதம் பேசியவர் யார்? தந்தை பெரியாரா? அறிஞர் அண்ணாவா? கலைஞரா? பேராசிரியரா?

அப்பேச்சுக்களின் ""பாணி'' அவர்களுடையது போல் தானே இருக்கிறது? நிச்சயம் அவர்களில் இருவரது பேச்சுக்களாகத்தான் இருக்க வேண்டும்! - இவ்விதம் தோன்றுவதுதான் இயற்கை!

ஆனால், அப்பேச்சுக்களை அவர்கள் யாரும் பேசவில்லை. அவை பேசபட்டபோது கலைஞரும், பேராசிரியரும் பிறக்கவேயில்லை. அறிஞர் அண்ணா 7 அல்லது 8 வயதுச் சிறுவனாக இருந்தார். தந்தை பெரியாருக்கோ அப்போது 38 அல்லது 39 வயது இருக்கலாம் - தமிழகம் தெரிந்த புள்ளியாக அல்ல: ஈரோட்டுப் பிரமுகராக, தாலுக்கா போர்டு துணைத் தலைவராக, கௌவர மாஜிஸ்திரேட்டாக இருந்தார்! - அப்படியானால் அப்பேச்சுக்களுக்கு உரியவர்கள் யார்?

1917-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் முதல் மாநாட்டில் வெள்ளுடை வேந்தர் தியாகராயர் பேசியதுதான் முதலில் தரப்பட்டிருக்கிற பகுதியாகும்!. இரண்டாவது பகுதி, 1918-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற மதுரை மாவட்ட பிராமணரல்லாதார் மாநாட்டிற்குத் தலைமை வகித்த (திருச்சி பாரிஸ்டர்) டி.சி. தங்கவேல் (பிள்ளை) பேசியதாகும். ஆம்: இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் அன்று அமைப்பு ரீதியாகத் தூவப்பட்ட விதைதான் இன்று திராவிட இயக்கமும், அதன்  கொள்கைகளும் ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேர்விட்டு, யாராலும் அழிக்க முடியாக விதத்தில் வளர்ந்திருக்கிறது!.

மண்ணைப் பக்குவப்படுத்தாமல் விதையைத் தூவி னால் என்ன பயன் விளையக் கூடும்? வித்தூன்றிய தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தாரைப் போலவே மண்ணைப் பக்குவப்படுத்தியவர்களும் முக்கியமானவர்களே. இந்தியாவின் வரலாற்றையும், கலாச்சாரப் பெருமையையும் கண்டறிய எவ்விதம் ஐரோப்பியர் உதவி னரோ, அது போலவே திராவிட கலாச்சார மேம்பாட்டை எடுத்துவைக்கவும் அவர்களே பெரிதும் உதவினர். குறிப்பாக கிறித்துவப் பாதிரியார்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழ்நாடு வந்தபோது, அவரவர்கள் தாய்மொழியில் மதத்தைப் போதிக்க வேண்டும் - என்கிற குறிக்கோள் காரணமாகத் தமிழ் மொழியிலும், கலாச்சாரத்திலும் காட்டிய ஆர்வம் கலாச்சார மறுமலர்ச்சிக்கு ஏற்றதொரு ஆதார சூழ்நிலையை உருவாக்கிற்று.

தமிழில் அதிகம் ஈடுபாடு காட்டிய முதல் கிறித்துவப் பாதிரியார் இராபர்ட்-டி-நோபிலி (Robert Di Nobli, 1577-1656) ஆவார். திருமலை நாயக்கர் காலத்தில் மதுரைப் பகுதியில் வாழ்ந்த இவர், கிறித்துவ மதப் பிரச்சாரத்துக்காகத் தமிழில் உரைநடை நூல்களை இயற்றினார். தமிழையும், வடமொழியையும் கற்ற முதல் ஐரோப்பியர் இவரே! அடுத்து குறிப்பிட்டுக் கூறவேண்டியவர், வீரமாமுனிவர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்ட; மதப்பணியோடு, தமிழ்ப் பணியும் ஆற்றிய இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெஸ்கி (Constantius Beschi, 1680-1743) ஆவார்.

1711-ஆம் ஆண்டு மே 8-ஆம் நாள் மதுரையை வந்தடைந்த இவர், பழனி சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழிலக்கண இலக்கியம் கற்றார். நோபிலி போல் அல்லாது, தான் இயற்றிய நூல்களில் வடமொழியை இவர் அதிகம் கலக்கவில்லை. அக்காலத்தில் எ-ஏ, கெ-கே, கொ-கோ-என்று எழுதும் வழக்கமில்லை. எ, ஓ - என்னும் உயிர் எழுத்துக்களையும், இவ்வுயில்ô எழுத்துக்கள் ஏறிய மெய்யெழுத்துக்களையும் எழுதி, அவற்றின் மேல் புள்ளி வைத்தால் குறிலாகவும், புள்ளி வைக்காவிட்டால் நெடிலாகவும் கொள்வது வழக்கமாக இருந்தது. இவர்தான் அதை மாற்றி, எ-ஏ, கெ-கே, கொ-கோ- என்று எழுதும் மரபைப் புகுத்தி, ""தண்டமிழ் மொழிக்கு அதுவரைக்கும் யாரும் செய்யாத பெருந்தொண்டு செய்து அழியாப் புகழ் பெற்றார்''.

அதுமட்டுமின்றி, தமிழ் அகராதிகளுக்கெல்லாம் முதல் நூலாக விளங்கும் ""சதுரகராதி'' இயற்றித் தமிழகராதியின் தந்தை என்ற புகழையும் பெற்றார். திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் லத்தீனில் மொழிபெயர்த்து மேலைநாட்டுக்கு வழங்கினார். ஐந்திலக்கணங்களையும் கூறும் "தொன்னூல்', தமிழ்ப்பேச்சு மொழியைப் பற்றிய "கொடுந்தமிழ் இலக்கணம்' - ஆகியவை இவர் இயற்றிய இலக்கண நூல்கள். அன்று அவர் உருவாக்கிய அடிப்படைதான் பிற்காலத்தில் சான்றோர் பலர் தமிழ் மொழியிலும் கலாச்சாரத்திலும் தொடர்ந்து ஆய்வு நடத்திடப் பேருதவியாக இருந்தது. அது போலவே - அயர்லாந்தில் பிறந்த இராபர்ட் கால்டுவெல் (தர்க்ஷங்ழ்ற் ஈஹப்க்ஜ்ங்ப்ப். 1819லி1891) வேறு எந்த ஐரோப்பியரையும் விட திராவிட மறுமலர்ச்சிக்கு ஆதார சுருதியைத் தனது ஆய்வின் மூலம் உருவாக்கிக் கொடுத்தார்.

1838-இல் சென்னை வந்திறங்கி, தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் நடத்தி, தமிழ்மொழியில் மூழ்கி, நமது மொழியிலும், வரலாற்றிலும் நிபுணர் என்கிற  பெயரைப் பத்தாண்டுகளில் பெற்றார். அவர் 1856-இல் வெளியிட்ட "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages) எனும் அவரது ஒப்பற்ற ஆய்வு நூல் மொழியியலுக்குத் தரப்பட்ட உயர்ந்த காணிக்கை மட்டுமல்ல; திராவிட மொழிகளுக்குப் புத்துயிரூட்டிய மாமருந்து மட்டுமல்லத் தூங்கிக் கிடந்த திராவிட மக்களுக்கு அளிக்கப்பட்ட கண் திறப்புச் சிகிச்சையுமாகும்! அது வெறும் மொழி இயல் ஆராய்ச்சி நூல் மட்டுமல்ல! தமிழ்-திராவிட இன வரலாறும் அதில் கூறப்பட்டிருந்தது!

திராவிட மொழிகளின் தொன்மை


  ""திராவிட மொழிகளின் தொன்மை, ஆரியர் வருகைக்குப் (அதாவது கி.மு. 1600-க்கு) பல நூற்றாண்டுகட்கு முன்னென்று தெளியலாம்'' - என்று அவர் தனது ஆராய்ச்சி முடிவினைக் கூறினார்.

- இதற்கென பல மேற்கோள்களைக் காட்டியிருக்கிறார். உதாரணமாக, கரூர் என்ற சேரன் தலைநகர் அப்படியே கரூர் என்று கிரேக்க வழக்கிலும் காண்பதால் இதிலுள்ள தமிழ் ஒலிகள் கடந்த மூவாயிரம் ஆண்டுகளிலும் இன்று ஒலிக்கப்படுவதைப் போன்றே ஒலிக்கப்பட்டன - என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார்.

தமிழின் தனித்தியங்கும் ஆற்றல்


  திராவிட மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்துதான்            பிறந்தன என்கிற சமஸ்கிருதம் பண்டிதர்களின் கொள்கை யையும், அதை அப்படியே ஏற்றுக்கொண்ட ஏ.எச். வில்சன் போன்ற மேலை நாட்டு அறிஞர் பெருமக்களின் கொள்கையையும் ""குருட்டுக் கொள்கையே என்பதில் ஐயமில்லை'' - என்று கூறினார். இத்தகைய "குருட்டுக் கொள்கை' தோன்றிடக் காரணம் என்ன?

""தங்களுக்குத் தெரிந்த ஒவ்வொன்றும் பார்ப்பனர் களிடமிருந்து பெறப்பட்டதாகத்தான் இருக்க வேண்டுமென்று வடமொழியில் பண்டிதர்கள் இயல்பாகவே நம்பி வந்தார்கள். அதனையொட்டியே அவர்கள், திராவிட மொழிகள், வடஇந்திய மொழி மரபுகளிலிருந்து எத்துணையோ மாறுபட்டிருப்பினும், வடமொழியினத்திலிருந்து பெறப்பட்டவைகளே என்று சாதித்து வந்தனர். இதனைப் பண்டைய ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் எளிதில் நம்பி வந்தனர். அவர்கள் ஆராய்ந்த திராவிட மொழிகள் ஒவ்வொன்றிலும் ஓரளவிற்கு வடமொழிச் சொற்கள் தத்பவமாகவும், தற்சமமாகவும் கலந்திருக்கக் கண்டனர். ஆனால் அம்மொழிகளில் வடமொழிக் கலப்பில்லாத சொற்களும், மரபு மொழிகளும் பல இருந்தன என்பதையும், அவையே அம்மொழியில் சிறப்பியல்புகள் என்பதையும், அவற்றிலேதான் அவ்வம்மொழி களின் தனிப்பட்ட உயிர்நிலை அமைந்து கிடந்தது என்பதையும் அவர்கள் கண்டறிந்து கொள்ளவில்லை''.

- இவ்வாறு தன் ஆய்வினை மேற்கொண்ட கால்டுவெல் தமிழ் சமஸ்கிருத மொழியின் தயவின்றியே தனித்தியங்கும் தன்மை பெற்றது என்பதையும் துணிவுடன் எடுத்துக்காட்டினார்.

செந்தமிழ் மொழிப் பாதுகாப்பு

பண்டைய இலக்கியங்கள் இயற்றப்பட்ட தூய தமிழ் மொழியாம் செந்தமிழ் இன்றைய பேச்சுத் தமிழோடும், உரைநடைத் தமிழோடும் மாறுபட்டுக் காணப்படக் காரணமென்ன?

இதோ, கால்டுவெல் காரணம் கூறுகிறார்-

""எதனால் அவ்வாவெனிலோ, கண்ணும் கருத்துமாய் இருந்து வடசொற்களையும், வடமொழியெழுத்துக்களையும் விலக்கி, தூய தமிழ்ச் சொற்கள், மரபு மொழிகள்,   அமைப்புகள் ஆகியவற்றையே கையாண்டு வந்துள்ளமையினாலேதான் தமிழ் மக்களிடையே இச்செந்தமிழ் மொழிப் பாதுகாப்பு எவ்வளவுக்குப் பரவியிருந்ததென்பது, எழுதப்பட்ட ஒரு தமிழ் நூலில் எவ்வளவுக்கெவ்வளவு வட சொற்கள் அருகிக் காணப்படுகின்றனவோ  அவ்வளவுக்கு அவ்வளவு அது சிறந்ததொரு நூலென்றும், எவ்வளவுக்கெவ்வளவு வடசொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு அது தாழ்ந்ததொரு நூலலென்றும் கருதி மதிப்பிடும் பழக்கம் பண்டுதொட்டுப் பயின்று வருகின்றமையினாலேயே இனிது தெளியப்படும். பிறமொழி நூல்கள் சிலவற்றில் எவ்வளவுக்கெவ்வளவு வடமொழிச் சொற்கள் பயின்று வருகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு அந்நூல்கள் அவ்வம்மொழியினராற் சிறப்புடன் போற்றப்படும். தமிழிலோ, எவ்வளவுக்கெவ்வளவு தமிழ் நூல்கள் வடமொழியின் உதவியை நாடாமல் தனித்தியங்குகின்றனவோ  அவ்வளவுக்கவ்வளவு சிறப்புடன் போற்றப்படும்''.

இன்றும் கிராமப்புறங்களில் வாழ்வோரும், நகர்ப்புறத்தில் வாழும் பாமர மக்களும் வடமொழிச் சொற்களைக் கையாளாமல் ஒதுக்குவதையும்: அப்படியே அவசியம் கருதிக் கையாள நேரிட்டாலும் "ஜிலேபி' என்பதை "சிலேப்பி' என்றும், "ஸ்டேஷன்' என்பதை "டேசன்' என்றும் உச்சரிப்பதையும் காணலாம். இயல்பு காரணமாக தமிழ் மக்களுக்கு வடமொழி உச்சரிப்பு வாயில் நுழையாமலிருப்பதை வைத்துக் கால்டுவெல் மேற்கொண்டு கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

""...சிற்றூர்களிலும் நாட்டுப்புறங்களிலும் வாழ்ந்து வரும் தாழ்ந்த மக்களிடையே வடமொழிச் சொற்களைப் பேச்சுவழக்கிலும் கையாளாமல் ஒதுக்கும் தூய பழக்கம் காணப்படுகிறது. ஒரு மொழியின் தொன்மைச் சிறப்பு நிலை அம்மொழியிலும், செய்யுள்களிலும், தாழ்ந்த குடிமக்களின் பேச்சுக்களிலுமிருந்ததே ஆராய்ந்து காணப்படும் என்பது ஒரு பொது உண்மையாகும். பிற்காலத்தில் மிகவும் வலிந்து முயன்று எழுதப்பட்ட தமிழ் உரைநடை நூல்களிலும், பார்ப்பனர்கள் பேசும் தமிழிலும், மிகவும் கற்றவர்களாகக் கருதப்படும் தமிழர்களின் பேச்சிலுமே வடமொழி மிகைப்படப் பரவி வழங்குகின்றது. அதுவும், சமய உண்மை, அறிவியல், தத்துவம், ஏனைய கலைகளிலுள்ள மரபுச் சொற்கள் ஆகியவற்றை விளக்குமிடங்களில் மட்டுமே இவ்வாறு வடசொற்கள் பெரும்பான்மையும் கையாளப்படுகின்றன. ஆனால், இவ்வாறு காணப்படும் வடசொற்களின் தொகை, ஆங்கில நூல்களில் கையாளப்பட்டுக் காணப்படும் இலத்தீன் மொழிச் சொற்களின் தொகையைவிட மிகுதியானதொன்றன்று''

தமிழ் தவிர்த்த ஏனைய திராவிட மொழிகளில் வடமொழிக் கலப்பு மிகுந்து காணப்படுகிறதென்றால், " "அவை புதுமை கருதி எடுத்தாளப்பட்டனவல்ல. கிட்டத்தட்ட இன்றியமையாதனவாகவே கருதிக் கையாளப்பட்டன'' - என்று கூறும் கால்டுவெல், ""இந்த நிலைமை வந்ததற்குக் காரணம் அம்மொழிகளின் இலக்கிய வளர்ச்சி முதன்மையாகப் பார்ப்பனர்கள் கையிலேயே ஒப்படைக்கப்பட்டு வந்துள்ளமையேயாம்'' - என்றும் கூறியிருக்கிறார்.
""தமிழ் இலக்கிய ஆசிரிய வரிசையில் பார்ப்பனர்கள் எய்தியதெல்லாம் உரையாசிரியர் என்ற நிலைக்கு மேற்பட்டதில்லை. தாழ்ந்த வகுப்பினரான திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளுக்கு பார்ப்பனரான  பரிமேலழகர் என்பார் வகுத்துள்ள உரையே மிகவுஞ் சிறந்ததொன்றாகப் பாராட்டப்படுகிறது''. - இவ்வாறு கால்டுவெல் கூறியுள்ளார்.

அவர் ஆரியருக்கு முற்பட்ட திராவிட நாகரிக மேன்மை குறித்தும் விளக்கியுள்ளார். "திராவிட மதத்'தின் தனித்தன்மை குறித்தும் அவர் தவறவில்லை.

""திராவிடர் இந்துக்களானது போரில் தோல்வியடைந்ததாலன்று... நமக்குக் கிடைத்துள்ள மரபுரைகள் அனைத்தும் ஆரியரைக் குறிக்க இந்நாட்டில் எழுந்த பார்ப்பார் (அதாவது சமய மேற்பார்வையாளர்) ஐயர் (தலைவர்) என்ற பெயர்களும் அவர்களது வெற்றி, உடல்வலியால் ஏற்பட்டதன்று: அறிவாலும், ஆட்சித் திறனாலுமே ஏற்பட்டது என்தைக் காட்டும்''.

உயர்ந்தவை அனைத்தும் பிறந்தது அவர்களாலேதான் என்பதற்கு உண்டான கட்டுக்கதைகளையும் கால்டுவெல் வெளிப்படுத்தத் தவறவில்லை. "கலைகளும், இலக்கியமும் திராவிட மக்களுக்கு வகுத்தளித்த தமிழ்முனி' என்று கொண்டாடப்படும் அகஸ்தியர் யார்?

""(அகஸ்தியர் என்று ஒருவர் இருந்தாரென்பது உண்மையானால்) அவர் ஆரிய வந்தேறிகளின் தலைவர் என்று கூறுவதைவிட, அக்குடியேற்றக் கட்டுக்கதைக்குத் தலைவரே என்று கூறலாம்''. - இவ்வாறு கால்டுவெல் கூறினார் என்பதைவிட, அதை 1856-இல் கூறினார் என்பதுதான் முக்கியமானது.

அடுத்து தமிழ்க் கலாச்சார மேன்மையையும், பழமையையும் மேலைநாட்டு அறிஞர்களிடையே பரப்பியவர் ஜி.யு. போப் (G.U. Pope, 1820-1907) ஆவார். சைவ சிந்தாந்தப் பெருமை கூறும் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தளித்தது அவரது அரிய படைப்புகளில் ஒன்றாகும்.         


ஆதார நூல்கள்: "திராவிட இயக்க வரலாறு' முரசொலி மாறன் (பக்கம் 169- 179)

"கால்டுவெல் ஒப்பிலக்கணம்', மொழி பெயர்த்தியற்றியவர்கள் காழி. சிவகண்ணுசாமிப்பிள்ளை, கா. அப்பாதுரையார் (பக்கம் (54- 142)

Saturday, January 25, 2014

இன்னும் விலகாத மர்மம்- நேதாஜி

 
இந்தியாவுக்கு வெளியே மூன்று லட்சம் பேரைக் கொண்ட இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வழிநடத்தியவர் நேதாஜி. 1944-ல் இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாய் அது. அப்போதுதான், ஹிரோஷிமா - நாகசாகி அணுகுண்டு தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் ராணுவத்திடம் சரணடைகிறது ஜப்பான். அப்போது சிங்கப்பூரில் ஐ.என்.ஏ. தலைமையகமான ‘கதே மாளிகை’யில் இருந்தார் நேதாஜி. அவரை அங்கிருந்து வெளியேறிவிடும்படி தகவல் அனுப்புகிறார் ஜப்பான் அதிபர் டோஜோ.
இதையடுத்து 18.08.1945 அதிகாலையில், தன்னுடைய உதவியாளர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் ஜப்பான் தளபதிகள் உள்ளிட்ட ஒன்பது பேருடன் தனி விமானம் மூலம் சிங்கப்பூரை விட்டுப் பறக்கிறார் நேதாஜி. எரிபொருள் நிரப்புவதற்காக ஜப்பான் எல்லைக்குள் (இப்போது தாய்வான்) மஞ்சூரியா என்ற இடத்தில் அந்த விமானம் தரையிறக்கப்படுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இதுவரை புரியாத மர்மம்!
வானொலியில் வந்த மரணச் செய்தி
“நேதாஜி பயணம் செய்த விமானம் மதியம் 12.45 மணிக்கு மஞ்சூரியாவை விட்டுப் புறப்படும்போது, எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானதில் நேதாஜி உள்ளிட்டவர்கள் இறந்துவிட்டார்கள். அவரது உதவியாளர் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் காயங்களுடன் உயிர்தப்பினார்கள்” என்று 1945 ஆகஸ்ட் 22-ல் ஜப்பான் வானொலி சேதி சொன்னது. நேதாஜி அபிமானிகள் இந்தச் செய்தியை நம்பவில்லை. காரணம், அதற்கு முன்பும் பலமுறை அவர் விமான விபத்தில் இறந்துவிட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டிருக்கின்றன.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கும் நேதாஜிக்கும் நெருக்கம் உண்டு. நேதாஜி இறந்துவிட்டதாகச் செய்தி வந்தபோது, தேவர் அரசியல் கைதியாக ஆந்திர மாநிலம் அமராவதி சிறையில் இருந்தார். அங்கிருந்தபடியே, “விமான விபத்து ஏதும் நடக்கவில்லை. இது திட்டமிட்ட நாடகம்” என்று அறிக்கை கொடுத்தார். ஆனால், விடுதலையான பிறகு, இரண்டு ஆண்டுகள் நேதாஜியைப் பற்றி எதுவும் பேசவில்லை தேவர். 1949 ஜனவரி 23-ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் நேதாஜி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய தேவர், “நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டது” என்று உறுதிபட அறிவித்தார். இந்த நிலையில், 1950-ல் தேவரும் தலைமறைவானார். அவர் எங்கே போனார் என்ற விவரம் யாருக்குமே தெரியாமல் இருந்த நிலையில், ஓராண்டு கழித்து, மீசையை மழித்துக்கொண்டு பாகவதர் கிராப்பில் வித்தியாசமான தோற்றத்துடன் மீண்டும் வெளியுலகுக்கு வருகிறார்.
சுஜ்ஜோ எல்லையில் நேதாஜி முகாம்
1951-ல் நடந்த நேதாஜி பிறந்த நாள் விழாவில், “நேதாஜி உயிருடன் இருக்கிறார். அவரை நான் சந்தித்துவிட்டு வந்தேன்” என்று மீண்டும் அறிவித்தார் தேவர். நான்கு ஆண்டுகள் கழித்து, பர்மா சென்று திரும்பும் வழியில் கொல்கத்தாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தேவர், “நம்முடைய நேதாஜி இறக்கவில்லை. இந்தியா, சீனா, பர்மா ஆகிய மூன்று நாட்டு எல்லைகளும் சந்திக்கும் இடத்தில் சுஜ்ஜோ என்ற ரயில் நிலையம் இருக்கிறது. அதற்கு அருகில் முகாம் அமைத்துத் தங்கியிருக்கிறார் நேதாஜி. அங்கே ‘ஆசிய சுதந்திர சேனா’அமைத்து, போர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார். விரைவில் அவர் இந்தியாவில் ராணுவ ரீதியிலான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார். இவை அனைத்தும் பிரதமர் நேருவுக்கும் அவரது சகோதரியும் ரஷ்யாவுக்கான இந்தியத் தூதருமான விஜயலட்சுமி பண்டிட்டுக்கும் தெரியும். தங்களது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், அவர்கள் மௌனம் காக்கிறார்கள். உண்மையிலேயே இவர்களுக்கு நல்லெண்ணம் இருக்குமானால், நேதாஜி மர்மம்குறித்து விசாரணை ஆணையம் அமைக்கட்டும்” என்று பேட்டி கொடுத்தார். இதை அடுத்துதான் 1956-ல், ஐ.என்.ஏ-யில் லெஃப்டினென்டாக இருந்த ஷாநவாஸ் கான் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார் நேரு.
மத்திய அரசு அமைத்த மூன்று ஆணையங்கள்
ஓராண்டுக்குள் விசாரணையை முடித்த ஷாநவாஸ் கான், நேதாஜி விமான விபத்தில் இறந்துவிட்டதாக 1957-ல் அறிக்கை சமர்ப்பித்தார். இதை இரண்டு ஆண்டுகள் கழித்து நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தது காங்கிரஸ் அரசு. “விபத்து நடந்ததாகச் சொல்லப்படும் மஞ்சூரியாவுக்கே போகாமல், அறைக்குள் உட்கார்ந்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை ஏற்க முடியாது” என ஃபார்வர்டு பிளாக் மட்டுமல்லாமல், காங்கிரஸில் இருந்த நேதாஜி அபிமானிகளுமே கேலிசெய்தார்கள். அத்தோடு அடங்கிப்போனது அந்த அறிக்கை பிரளயம். இதன் பிறகு, இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட கோஸ்வாமி ஆணையமும் நேதாஜி இறப்பை உறுதிசெய்தது. 1999-ல் பா.ஜ.க. ஆட்சியில் மீண்டும் எம்.கே. முகர்ஜி என்பவர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார்கள்.
விமான விபத்தே நடக்கவில்லை - தாய்வான்
விமான விபத்து நடந்ததாகச் சொல்லப்படும் தாய்வான் நாட்டு அரசிடம், 1945 பிப்ரவரியிலிருந்து டிசம்பர் மாதம் வரை நடந்த விமான விபத்துகள்பற்றிய விவரங்களைக் கேட்டது முகர்ஜி ஆணையம். அதற்கு, ‘அந்தக் காலகட்டத்தில் எந்த விமான விபத்தும் தங்கள் எல்லைக்குள் நடக்கவில்லை’ என அங்கிருந்து வந்த அறிக்கையால் மேலும் சர்ச்சையானது. ஆனால், ஆட்சி மாற்றத்தால் நாடாளுமன்றம் வராமலேயே அறிக்கை படுத்துக்கொண்டது. இதற்கிடையில், 1964-ல் நேரு இறந்தபோது, அவருக்கு நேதாஜி அஞ்சலி செலுத்த வந்ததாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அதன் பிறகும், நேதாஜி ரஷ்யாவில் இருக்கிறார், மத்தியப் பிரதேசம் சவுல்மாரி ஆசிரமத்தில் கும்னாமி பாபாவாக இருந்த துறவிதான் நேதாஜி என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டே இருந்தன.
அந்த 33 கோப்புகளில் இருப்பது என்ன?
இவை எதுவுமே நம்பும்படியாக இல்லை என்று சொல்லும் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர்கள், ‘‘இந்திய சுதந்திர ஒப்பந்தத்தின்போது நேதாஜி சர்வதேசப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதன் பிறகு ஸ்டாலின் காலத்தில் ரஷ்யாவில் கைதுசெய்யப்பட்ட நேதாஜி, அங்கேயே சிறைவைக்கப்பட்டார். அவர் மீதிருந்த நல்லெண்ணத்தால்கூட அவரை ஸ்டாலின் பிரிட்டிஷ் காரர்களிடம் ஒப்படைக்காமல் இருந்திருக்கலாம். இது சம்பந்தமான 33 கோப்புகளை ரஷ்ய அரசாங்கம் இந்திய அரசிடம் ஒப்படைத்திருக்கிறது. அதில் உள்ள விவரங்களை வெளியிட மறுக்கிறது மத்திய அரசு’’ என்கிறார்கள்.
போராடும் நேதாஜியின் உறவுகள்
நேதாஜி பற்றிய ரகசியக் கோப்புகளை வெளியிட உதவுமாறு நேதாஜியின் அண்ணன் சரத் சந்திர போஸின் பேரன் சந்திரகுமார் போஸ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியிடம் ஒரு ஆண்டுக்கு முன்பே கோரிக்கை மனு கொடுத்தார். ‘‘தாத்தா நேதாஜி போஸ் தொடர்பாக ரஷ்யா தங்களிடம் அளித்த 33 கோப்புகள் பத்திரமாக இருப்பதாக, தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட ஒரு நபருக்குப் பதில் கொடுத்திருக்கிறது மத்திய அரசு. அதை வெளியிட்டு, தாத்தாபற்றிய ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் மம்தாவின் உதவியை நாடினோம். ஆனாலும், இதுவரை எங்களது கோரிக்கை எடுபடவில்லை. இனியாவது, தாத்தா சம்பந்தமாக மத்திய அரசும் உளவு அமைப்புகளும் தங்கள் வசம் உள்ள ரகசிய விவரங்களை உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய இயக்கம் நடத்தத் தீர்மானித்திருக்கிறோம்’’ என்கிறார் சந்திரகுமார் போஸ்.
நகைகள் யாருக்கு?
இதற்கிடையே, “ஐ.என்.ஏ-வுக்காகப் பொதுமக்கள் நன்கொடையாகக் கொடுத்த தங்க நகைகள் 40 பெட்டிகளில் இருந்தன. இவை அனைத்தும் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ‘நேதாஜி பவன்’ என்ற அமைப்பை உருவாக்கி, நேதாஜி விட்டுச்சென்ற பணியைத் தொடரப்போகிறோம். அதற்காக, இந்திய அரசு வைத்திருக்கும் அந்த நகைப்பெட்டிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கோரிக்கை எழுப்பிக் கொண்டிருக்கிறது அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி.
இத்தனைக்கும் மத்தியில், இன்னமும் நேதாஜி உயிருடன் இருப்பதாக நம்புகிறார்கள் அவரது அதிதீவிர அபிமானிகள்.
- குள.சண்முகசுந்தரம்

Wednesday, January 22, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை!-Part 8 (இந்திய பிரதமர்கள் )

சஞ்சய் காந்தியை காங்கிரஸ் கட்சியின் எதிரிகள் மட்டுமல்ல, இந்திராவுக்கு அருகில் இருந்தவர்களே எரிச்சலோடுதான் பார்த்தார்கள். இவர் இருப்பதால், இவரது பேச்சைத்தான் இந்திரா அதிகமாகக் கேட்கிறார் என்ற விரக்தி கலந்த கோபம் ஒரு பக்கம் இருந் தாலும், இந்திராவைத் தவறாக வழிநடத்துவதன் மூலமாக காங்கிரஸ் கட்சியை விரைவில் சஞ்சய் காந்தி அதள பாதாளத்துக்குத் தள்ளிவிடுவார் என்றும் அவர்கள் பயந்தார்கள்.
 சஞ்சய் காந்தியின் போக்கு கட்சிக்கும் நல்லதல்ல; இந்திராவுக் கும் நல்லதல்ல என்று முதலில் சொன்னவர் பி.என்.ஹக்ஸர். இவர் வேறு யாருமல்ல, பிரதமர் இந்திராவின் செயலாளர். ஆனால் அவர் சொன்னது, சஞ்சய் மற்றும் இந்திராவின் விசுவாசிகளால் தவறான எண்ணத்துடன் பார்க்கப் பட்டது.
''சஞ்சய் காந்தி கார் கம்பெனி ஆரம்பிப்பது நல்லதல்ல. அவரால் நினைத்த அளவுக்குத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்ய முடியாது. கொடுத்த வாக்குறுதிப்படி 50 ஆயிரம் கார்கள் தர முடியாது. இந்த நிறுவனம் தொடங்குவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் பலாத்காரத்தின் அடிப்படையில் பறிக்கப்பட்டிருப்பதால் அரசுக்கு கெட்ட பெயர்தான் ஏற்படும்'' என்று இந்திராவிடமே நேரில் சொன்னார் பி.என்.ஹக்ஸர்.
''கார் நிறுவனத்துக்கு அருகில் பி.என்.ஹக்ஸருக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. சஞ்சய், தன்னுடைய நிலத்தையும் பறித்துவிடுவார் என்று ஹக்ஸர் பயப்படுகிறார். அதனால்தான் சஞ்சய்க்கு எதிராக தவறான பிரசாரம் செய்கிறார்'' என்று இந்திராவிடம் போட்டுக்கொடுத்தார்கள். இதனை இந்திராவும் நம்பினார்.
அந்தக் காலகட்டத்தில் இந்திராவின் குடும்ப நண்பராக இருந்த முஹம்மது யூனுஸை சந்தித்த பி.என்.ஹக்ஸர், ''அந்தப் பிள்ளையை இந்தப் பைத்தியக்காரத்தனமான திட்டத்தை கைவிடச் சொல்லுங்கள்'' என்று சொன்னார். ஆனால், ஹக்ஸர் தன்னுடைய சுயநலனுக்காக இப்படிச் சொல்வதாக யூனுஸும் நினைத்தார். இந்தக் காலகட்டத்தில்தான் சஞ்சய் மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை வைக்க ஆரம்பித்தன. இவர்கள் வெறும் அரசியல் தாக்குதல்களாக இல்லாமல், பல்வேறு ஆதாரங்களுடன் பேசினார்கள். அரசுக்கும், மத்திய தொழில் துறைக்கும், சஞ்சய் காந்திக்கும் மட்டுமே தெரிந்த ஆவணங்களை இவர்கள் வெளியிட்டார்கள். இது இந்திராவுக்கும் சஞ்சய்க்கும் சந்தேகம் கிளப்பியது.
பி.என்.ஹக்ஸர் தான் இந்த செய்திகளை வெளியில் விடுகிறார்... தன்னுடைய இடதுசாரி நண்பர்களுக்குத் தகவல்களைக் கொடுத்து பரப்புகிறார்... அவர்தான் தூண்டிவிடுகிறார்... என்று இந்திராவும் சஞ்சயும் நம்பினார்கள். இந்த நிலையில் பி.என்.ஹக்ஸர் பதவியில் இருந்து தூக்கப்பட்டார். ஹக்ஸருக்கு இந்த நிலைமை வரும் என்று யாரும் நினைக்கவில்லை. அந்தளவுக்கு செல்வாக்கான இடத்தில் இருந்தவர் அவர்.
சஞ்சய் காந்தியின் செல்வாக்கை காங்கிரஸ் பிரமுகர்களும் மற்றவர்களும் இதில் இருந்துதான் உணர்ந்து கொண்டனர். சஞ்சயை விமர்சித்தால் காங்கிரஸிலும் இருக்க முடியாது என்ற யதார்த்தம் வெளிப்பட்டது. சஞ்சய் காந்தியை காக்கா பிடித்தால்தான் காங்கிரஸில் காலம் தள்ள முடியும் என்ற நிலையே உருவானது.
அந்தக் காட்சிகளை முஹம்மது யூனுஸ் வர்ணிக்கிறார்...
''பல முதல்வர்கள் அடிக்கடி எனக்கு டெலிபோன் செய்து, 'யூனுஸ் சாகிப், சஞ்சய் பஞ்சாப், ஹரியானாவுக்கு மட்டும் போகிறாரே... நாங்கள் இருப்பது ஞாபகம் இல்லையா? எங்கள் மாநிலத்துக்கு அவரை அனுப்பி வையுங்கள்’ என்று ஒப்பாரி வைத்தார்கள். ஆந்திராவில் இருந்து வெங்காலராவ், தமிழக ஆளுநர், மகாராஷ்டிராவில் இருந்து எஸ்.பி.சவான் இப்படி எல்லோரும் சஞ்சயை வரவேற்றனர். எஸ்.பி.சவான் எல்லை மீறிப் புகழ்ந்தார். 'அவர் இளைஞர்கள் தலைவர் மட்டுமல்ல... தேசத்தின் தலைவரும்’ என்று பேசினார். அந்தக் காலத்தில் அதைப் புகழ்ச்சி என்றுகூடக் கூற முடியாது. அது தவிர்க்க முடியாத ஒன்றாகத் தெரிந்தது. இது காங்கிரஸின் அன்றைய நிலைமையை வைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று. காங்கிரஸார் தங்கள் லட்சியங்களை இழந்து போயினர். அநேகர் குறுக்கு வழியில் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். மற்றவர் புகழில் மறைந்து கொள்வதைக் காட்டிலும் சுலபமானது எதுவும் இல்லை. தனயனைப் புகழ்ந்து தாயாரை உச்சி குளிர வைத்து தங்களை நிலைநிறுத்திக்கொள்வதே அவர்களின் நோக்கமாகும்'' என்று எழுதி இருக்கிறார். இந்திரா குடும்பத்தின் முக்கியமான தலையாட்டி பொம்மைகளில் ஒருவரான முஹம்மது யூனுஸே இப்படி எழுதி இருக்கிறார் என்றால், நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதைக் கவனியுங்கள்.
இப்படிப்பட்ட நேரத்தில் பி.என்.ஹக்ஸர் மட்டும்தான், ''பிரதமருடன் ஒரே வீட்டில் வசிக்கும் வரை, எந்தவிதமான வர்த்தகரீதியான செயல்பாடுகளிலும் சஞ்சய் காந்தி ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்'' என்று துணிச்சலாகச் சொன்னார். இதனாலேயே ஓரங்கட்டப்பட்டார்.
இதேபோன்ற எண்ணம் இந்திரா காந்தியின் நெருங்கிய தோழி புபுல் ஜெயகருக்கும் இருந்தது. சஞ்சய் பற்றி வெளிப்படையாகச் சொன்னால் இந்திராவுக்குப் பிடிக்காது என்று புபுல் ஜெயகருக்குத் தெரியும். 'சஞ்சய் இதே மாதிரியான தொழில் எல்லாம் செய்ய வேண்டுமா? அரசியல் எதிரிகள் இதனைப் பயன்படுத்திக்கொள்வார்களே?’ என்று வருத்தப்பட்டு கேட்பதுபோல இந்திராவுக்குச் சொல்லிப் பார்த்தார். அதற்கு இந்திரா சொன்ன பதில், புபுல் ஜெயகரை பதில் யோசிக்கவிடாமலே தடுப்பது மாதிரி இருந்தது.
''பிரதமரின் மகன் என்பதற்காக சஞ்சய்க்கு ஆர்வமான தொழிலைச் செய்து சாதனை படைப்பதற்கு தடை போட முடியாது'' என்று சொன்ன இந்திரா,
''அது ஒரு கார் கம்பெனியைப் போலவே இல்லை என்று சிலர் கிண்டல் செய்கிறார்கள். ஒருநாள் நான், கான்ஸன்டைன் என்ற கிறிஸ்தவப் பாதிரியாரைச் சந்தித்தேன். அவருக்கு விமானம் செய்வதில் அதீத ஆர்வம் இருந்தது. இரண்டே இரண்டு அறைகள் கொண்டது அவரது கம்பெனி. அதில் அவர் ஒரு சிறிய விமானத்தை உருவாக்கி இருந்தார். அதில் தன்னுடைய நண்பர்களுடன் சுற்றி வருவார். ஒரு பாதிரியாரால் ஒரு விமானத்தை உருவாக்க முடியும்போது, சஞ்சயால் ஒரு காரைத் தயாரிக்க முடியாதா?'' என்று கேட்டாராம்.
ஒரு அறைக்குள் பறப்பதை விமானம் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால், சஞ்சய் தயாரித்ததையும் கார் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்திரா இப்படிச் சொன்னார் என்பதை அவர் இறந்ததற்குப் பல ஆண்டுகள் கழித்துத்தான் புபுல் ஜெயகருக்கே வெளியில் சொல்லத் தைரியம் வந்தது.
அந்தளவுக்கு யாராலும் இந்திராவால்கூட தட்டிக் கேட்க முடியாதவராக சஞ்சய் வலம் வந்தார். ஒரு உதாரணம் சொன்னால் புரியும்!
பாரத ஸ்டேட் வங்கியின் நாடாளுமன்ற வீதி கிளையின் தலைமைக் கணக்காளர் வேத பிரகாஷ் மல்ஹோத்ராவுக்கு ஒரு போன் வந்தது. ''நான் பிரதமரின் செயலாளர் ஹக்ஸர் பேசுகிறேன். பிரதமருக்கு அவசரமாக 60 லட்சம் பணம் தேவைப்படுகிறது'' என்று அந்தக் குரல் சொன்னது. அந்தக் குரல், போனை இன்னொருவரிடம் கொடுத்தது. அடுத்துப் பேசுபவர் பெண். ''பணத்தை நீங்கள் எடுத்து வந்து கொடுங்கள்'' என்றது. இது பிரதமர் இந்திராவின் குரல்தான் என்று அந்தக் கணக்காளர் பின்னர் நடந்த விசாரணையில் சொன்னார்.
60 லட்சம் ரூபாயை எடுத்தார் மல்ஹோத்ரா. காரில் வைத்தார். சொன்ன இடத்துக்குப் போனார். நின்ற நபரிடம் கொடுத்தார். பணத்தை வாங்கியவர் பெயர்தான் நகர்வாலா.
60 லட்சம் ரூபாய் என்பது இன்றைய ஊழல்களோடு ஒப்பிடும்போது குறைவாகத் தெரியலாம். 1971-ல் 60 லட்சம் ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு இருக்கும் எனப் பாருங்கள்!
60 லட்சம் ரூபாய் பணத்தை யாரிடமும் தான் கொடுக்கச் சொல்லவில்லை என்று ஹக்ஸர் கையை விரித்துவிட்டார், அப்படி யாருக்கும் நான் போன் செய்யவில்லை என்று சொல்லிவிட்டார். எதிர்கட்சிகள் இதனை நாடாளுமன்றத்தில் எழுப்பி இந்திராவை வளைத்தது. இந்திரா இதற்கு பதிலே பேசவில்லை. ''அந்த அதிகாரி சொல்வது நம்பும்படியாக இல்லை'' என்று சொல்லி, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நகர்வாலா கைது செய்யப்பட்டார். அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சில மாதங்களிலேயே நகர்வாலா சிறையில் இறந்தார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி டி.கே.காஷ்யப், ஒரு சாலை விபத்தில் இறந்து போனார்.
நகர்வாலா சாதாரண ஆள் அல்ல. இந்தியப் புலனாய்வுத் துறையில் வேலை பார்த்தவர். ஒரு வங்கி அதிகாரியையும், புலனாய்வு அதிகாரியையும் யார் பயன்படுத்த முடியும் என்பது தெரியாதது அல்ல. இது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என்று தெரிந்ததும், நகர்வாலாவை உடனடியாக கைது செய்கிறார்கள். அவரிடம் இருந்து பணம் அப்படியே கைப்பற்றப்படுகிறது. மிகப்பெரிய கிரிமினலாக இருந்திருந்தால் நகர்வாலா, உடனடியாக எங்காவது தப்பி இருக்கக் கூடும். அதைச் செய்யாமல் தானே சிக்கிக்கொண்டு, பணத்தையும் திருப்பி ஒப்படைத்தார்.
ஆனால் கடைசி வரை, போனில் பேசியது யாருடைய குரல் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இந்திரா அமைத்த விசாரணையில் மட்டும் அல்ல... அவரது ஆட்சிக்குப் பிறகு அமைந்த ஜனதா அரசு அமைத்த விசாரணையிலும் இதனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. 'விசாரணைக்குப் பிறகும் சந்தேகம் அதிகரிக்கவே செய்கிறது’ என்று நீதிபதி சொன்னார். ஆனால் உண்மைகள், விசாரணை கமிஷன்கள் வைத்து தேட வேண்டியதாக எப்போதும் இருக்காது.
60 லட்ச ரூபாய்  பணத்தை எடுத்துக் கொடுத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட மல்ஹோத்ராவுக்கு, தன்னுடைய கார் கம்பெனியில் சஞ்சய் காந்தி வேலை போட்டுக் கொடுத்திருந்ததன் மூலமாக உண்மை உணரத்தக்கது!
டுபாக்கூர் கம்பெனிகளை 'மன்னார் அண்ட் கம்பெனி’ என்று கிண்டல் செய்வார்கள். அம்மா இந்திராவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மகன் சஞ்சய் அந்தக் காலத்தில் ஆரம்பித்த கார் கம்பெனிக்கும் இந்த மன்னார் அண்ட் கம்பெனிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இல்லாத கறுப்புப் பூனையை இருட்டில் தேடுவது என்பார்களே... அப்படித்தான் சஞ்சய் அந்தத் தொழிலை நடத்தினார். கார் உற்பத்தி செய்யப்போவதாக எண்ணிக்கையைக் காட்டி, ஒரு நிறுவனத்தின் பெயரில் அனுமதியைப் பெற்று, பல்வேறு முறைகளில் பணத்தைத் திரட்டிய முறைகேடு சஞ்சய் மூலமாகத் தொடங்கியது. போஃபர்ஸ் முதல் ஸ்பெக்ட்ரம் வரை அனைத்து முறைகேடுகளுக்கும் அரிச்சுவடி போட்டுக்கொடுத்தது சஞ்சய் காந்தியின் செயல்.
 ராஜீவ் காந்தியைப்போல அமைதியானவர் அல்ல சஞ்சய். இளம் வயதிலேயே துடுக்கும் மிடுக்கும் நிறைந்தவராக வளர்ந்தார். ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி என்றால் எப்படித் துள்ளும்! அதைவிட அதிகமாகவே துள்ளினார். பெரும் குடும்பத்துப் பிள்ளைகள் படிக்கும் டூன் பள்ளியில் படித்தாலும், அவருக்கு அந்தக் கல்வி மீது ஆர்வம் இல்லை. அவரது எண்ணம் எப்போதும் கார், கார், கார்.
காரை வெகுவேகமாக ஓட்டுவதும், எந்த காராக இருந்தாலும் பிரித்து மேய்வதும் அவரது ஆசையும் வாடிக்கையாகவும் இருந்தன.
எந்த கார் கிடைத்தாலும் எடுத்துக்கொண்டு பறப்பார். அது பரவாயில்லை. யாருடைய காராக இருந்தாலும் எடுத்துச் செல்ல முடியுமா? அதையும் சஞ்சய் செய்தார். அதுதான் சிக்கல். அவரைப்போலவே கார் ஆசை கொண்ட இளைஞர்கள் படை ஒன்றை உருவாக்கிக்கொண்டார். கார்களில் இரவு பகலாக டெல்லியைச் சுற்றுவதே இவர்களின் ஒரே பொழுதுபோக்கு. இந்த நிலையில் ராணுவ அதிகாரி ஒருவரின் கார் காணாமல் போனது. மறுநாள், டெல்லி பாலம் விமான நிலையம் அருகில் அது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மயங்கிய நிலையில் ஒரு இளைஞன் இருந்தார். அவர், சஞ்சய் காந்தியின் நெருக்கமான நண்பரான அடில் ஷர்யார். இந்த கார் திருட்டை அன்றைய 'கரன்ட்’ பத்திரிகை அம்பலப்படுத்தியது. ஆனால், எந்தப் பயனும் இல்லை.
இதன் மூலமாக மகனுக்கு, மிக மோசமான இளைஞர்களின் சகவாசம் இருக்கிறது என்று இந்திரா உணர்ந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால், கார்களின் மீது மகனுக்கு ஆர்வம் இருப்பதை மட்டும்(!) இந்திரா உணர்ந்துகொண்டார். இங்கிலாந்தில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப அறிவு பெற அனுப்பிவைக்கப்பட்டார் சஞ்சய். மூன்றாண்டு படிப்பை முழுமையாக முடிக்காமல், இரண்டாவது ஆண்டே இந்தியா திரும்பினார் சஞ்சய். இந்திராவே அவரைக் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு வயதாலும் அனுபவத்தாலும் வளர்ந்திருந்தார். கார் மோகம் அவருக்கு இன்னும் அதிகமாகி இருந்தது. தனது நண்பர்களோடு கார் மெக்கானிக் வேலைகளில் மும்முரம் ஆனார்.
இந்தக் காலம் மாதிரி அப்போதெல்லாம் விதவிதமான கார்கள் கிடையாது. அதுவும் சிறிய கார்களும் இல்லை. இந்தியாவில் சிறிய கார்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனை மத்திய அரசுக்கும் இந்த தொழிலில் இருந்த நிறுவனங்களுக்குமே இருந்தது. மிகமிகக் குறைந்த விலையில், அதாவது அன்றைய (1968) மதிப்பில் சுமார் 6,000 ரூபாய்க்கு கார் உற்பத்தி செய்துவிட வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தது. அவர்கள் திட்டமிட்டதில், அறிவித்ததில் எந்தத் தவறும் இல்லை. நோக்கம் நல்ல நோக்கம்தான். ஆனால் அதனைச் செயல்படுத்தும்போதுதான் அதிகாரம் உள்ளே நுழைந்தது.
சிறிய கார் உற்பத்தியில் இறங்க அனுமதி கேட்டு 14 விண்ணப்பங்கள் வந்தன. அதில் ஒன்று சஞ்சய் காந்தியின் விண்ணப்பம். ரெனால்ட், சிட்ரன், டொயோட்டா, மஸ்டா போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தப் போட்டியில் இருந்தன. ஆனால் அவை, சஞ்சய் காந்தியைப்போல பிரதமரின் மகன் என்ற தகுதியைப் பெற்றதா என்ன?
சஞ்சய் காந்தி, இந்திய மக்களுக்கு புதிய கார் ஒன்றை தயாரித்துத் தரப்போகிறார் என்று அன்றைய மத்திய தொழில் துறை இணை அமைச்சர் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். '6,000 ரூபாய் மதிப்பில் சிறிய கார் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. அது லிட்டர் ஒன்றுக்கு 90 கி.மீ. ஓடும். அதனுடைய வேகம் மணிக்கு 85 கி.மீட்டர்’ என்றும் அவர் தெரிவித்தார். அதுதான் சஞ்சய் காந்தியின் கற்பனையில் உருவான 'மாருதி’ நிறுவனம். எல்லா லட்சியங்களுமே கனவுகளால் உருவாவதுதான். ஆனால், லட்சங்களைப் பெற்ற பிறகும் கனவிலேயே படம் காட்ட முடியுமா? காட்டும் திறமை சஞ்சய்க்கு இருந்தது.
50 ஆயிரம் கார்களைத் தயாரிப்பதற்கான அனுமதி, பிரதமர் இந்திரா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டது. அதற்கான கடிதத்தை சஞ்சய் காந்தியிடம் கொடுத்தவர், அன்றைய மத்திய தொழில் துறை அமைச்சர் தினேஷ் சிங்.
பிரதமர் மகன் தொடங்கும் கம்பெனி என்றால் அதிகார வர்க்கம், காலால் இட்ட வேலையை தலையால் செய்யும் அல்லவா? இங்கே வாருங்கள், அங்கே வாருங்கள்... என்று பலரும் அழைக்க, இறுதியில் அரியானா மாநிலத்தில் இந்த நிறுவனத்துக்கான இடம் தரப்பட்டது. கொடுத்தவர் பன்சிலால். டெல்லிக்கு சற்றே அருகில் உள்ள இடம் இது. ஆனால், அவை விவசாய நிலங்கள். அவை பலாத்காரமாகப் பறிக்கப்பட்டதாக முதல் புகார் எழுந்தது. விலை அதிகம் உள்ள இடத்தை குறைவான விலைக்கு வாங்குவதாக அடுத்தப் புகார் எழுந்தது. இவை எதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
எந்தத் தாமதமும் இல்லாமல் 1971-ல் நிறுவனம் தொடங்கப்பட்டது. கார் உற்பத்தி செய்வதற்கான அடிப்படை வேலைகள், உள்கட்டமைப்புகள் செய்யப்படுவதற்கு முன்பே... காரை விற்பனை செய்யும் டீலர்களை நியமித்தார் சஞ்சய். நாடு முழுவதும் நியமிக்கப்பட்ட 75 டீலர்களிடம் இருந்து பல லட்ச ரூபாய் முன்பணம் வாங்கப்பட்டது. முதல் லாபம் இது. ஆனாலும் நிறுவனத்தைத் தொடங்க முடியவில்லை. இந்தப் பணம் போதாது என்று நினைத்தார் சஞ்சய். தன்னுடைய கவலையை காங்கிரஸ் பிரமுகர்களிடம் சொன்னார். அவர்களுக்கு தெரிந்த, வசதியான ரூட்டைக் காட்டினார்கள்... வங்கிகள் நமக்கு தாராளமாக பணம் கொடுக்குமே என்று.  இரண்டு வங்கிகளிடம் கடன் கேட்டார்கள். ஏதாவது ஒன்று தந்தால் போதும் என்று நினைத்தார்கள். சஞ்சய் காந்தியின் அதிர்ஷ்டம், இரண்டு வங்கிகளுமே கடன் கொடுத்தன. 'வங்கிகளிடம் போய் ஏன் நிற்க வேண்டும்? எங்களிடம் கேட்டால் தரமாட்டோமா?’ என்று பல காங்கிரஸ் பிரமுகர்கள் முன்வந்தார்கள். பிரதமர் மகனின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் நமக்கு வேறு வசதிகள், லாபங்கள் கிடைக்கும் என்பதை எதிர்பார்த்து பல தொழிலதிபர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் முதலீடு செய்தார்கள். சஞ்சய் கையில் கோடிகளில் பணம் புரளத் தொடங்கியது. ஆனால், அந்தப் பணத்தை வைத்து நிறுவனம் பெரியதாக அமைக்கப்படவில்லை. அன்றைய இந்திராவின் எதிரிகள், 'கார் மெக்கானிக்கல் ஷெட்டை, கார் கம்பெனி என்று சஞ்சய் சொல்லிக்கொண்டு இருக்கிறார்’ என்று கிண்டல் அடித்தனர். பின்னர் 1977-ல் நடந்த தேர்தலில் ஜனதா கட்சித் தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்திலும் இப்படித்தான் சொன்னார்கள்.
இந்த நிலையில், 1972 நவம்பர் மாதம் டெல்லியில் நடந்த ஆசிய வர்த்தக கண்காட்சியில் தனது கனவு காரின் மாடலை கொண்டுவந்து நிறுத்தினார் சஞ்சய். இதனை சோதனை செய்துபார்க்க அப்போது சிலர் முயன்றதாகவும், அதற்கு அனுமதி தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், விரைவில் கார் ஓடும் என்று சஞ்சய் நம்பிக்கையுடன் சொன்னார்.
சில மாதங்கள் கழிந்தன...
இந்திய மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் கார் தரவேண்டும் என்ற முதல் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதுதான் இந்த அனுமதி. அதற்கே முதலில் வேட்டு வைத்தார் சஞ்சய்.
''6,000 ரூபாயில் கார் உற்பத்தி செய்ய முடியாது. புதிய காரின் விலை 11 ஆயிரத்து 300 ரூபாய்'' என்று சொன்னார். 6,000 ரூபாய்க்குத்தான் கார் தரவேண்டும் என்று மத்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு விலையை இரண்டு மடங்கு கூட்டியதைப்போல வேறு யாராவது செய்திருந்தால் அரசாங்கம் அனுமதிக்குமா? செய்தது சஞ்சய் என்பதால், யாராலும் தடைபோட முடியவில்லை.  
இந்த காரில் என்ன மாதிரியான இன்ஜின் பொருத்துவது என்ற குழப்பம் கடைசிவரை சஞ்சய்க்கு ஏற்பட்டது. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்று சொன்னார் அவரது நண்பர். சஞ்சய்யும் சரி என்று சொல்லிவிட்டார். வரவழைத்து பொருத்திவிட்டார்கள். ஆனால், இதுவும் அப்பட்டமான விதிமுறை மீறல்தான். அரசின் ஒப்பந்தப்படி, தயாராகும் காரில் பொருத்தப்படும் உதிரிப் பாகங்கள் அனைத்தும் இந்தியத் தயாரிப்பாகத்தான் இருக்க வேண்டும்.
ஒப்பந்தத்தின் முதல் ஷரத்து, காரின் விலை குறைவாக இருக்க வேண்டும். அதனை மீறி இரண்டு மடங்கு விலை அதிகமாக ஆக்கப்பட்டது. இரண்டாவது ஷரத்து, இந்திய உதிரிப் பாகங்கள்தான் பொருத்த வேண்டும். அதற்கு மாறாக ஜெர்மன் பாகங்கள் பொருத்தப்பட்டன. ஆனால், பிரதமர் மகன் நிறுவனத்தில் யாராவது கேட்க முடியுமா?
சரி, விதிமுறைகள்தான் மீறப்பட்டன. காராவது தயாரிக்கப்பட்டதா என்றால், அதுவும் இல்லை!
இப்போது வரப்போகிறது, அப்போது ஓடப்போகிறது என்ற செய்திதான் பரப்பப்பட்டதே தவிர, காரையே காணவில்லை. ஆனால், புதிய துணை நிறுவனங்களைத் தொடங்கி, கம்பெனி வளர்ந்துகொண்டு வருவதாகக் காட்டிக்கொண்டார். ரோடு ரோலர்கள் தயாரிப்பில் குதித்து, அதற்கான டெண்டர்களை கைப்பற்றத் தொடங்கினார் சஞ்சய். துணை நிறுவனங்கள் தொடங்கியதும்தான் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இதனைக் கேள்வியாய் போட்டு மடக்கியது. பிரதமர் இந்திரா, ''என்னுடைய மகன் என்பதற்காக, துடிப்பும் ஆர்வமும் உள்ள இளைஞரை ஊக்கப்படுத்தாமல் இருக்க முடியாது'' என்று பொத்தாம்பொதுவாகச் சொன்னாரே தவிர, விதிமீறல்களுக்கு விளக்கம் சொல்ல அவரால் முடியவில்லை.
ஆனால் சஞ்சய் காந்தியை, அளவுக்கு அதிகமாக இந்திரா ஊக்கப்படுத்தியதால் இந்தியா அடைந்த அவஸ்தைகள்தான் அதிகம்!

மகாத்மா முதல் மன்மோகன் வரை!-Part 7 (இந்திய பிரதமர்கள் )

குடியரசுத் தலைவர்  தேர்தல் குஸ்தி!
காங்கிரஸ் கட்சி நிறுத்திய வேட்பாளரை, காங்கிரஸ் கட்சியால் பிரதமர் ஆக்கப்பட்ட இந்திரா வீழ்த்திய விபரீதம் நடந்த ஆண்டு 1969. அந்த ஆண்டு மே மாதம் குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் மரணம் அடைந்தார். புதிய தலைவர் யார் என்ற கேள்வி காங்கிரஸ் தலைவர்கள் முன் எழுந்தது. யாரையும் ஆலோசனை செய்யாமல் ஜெகஜீவன் ராம் பெயரை பிரதமர் இந்திரா முன்மொழிந்தார். இது காங்கிரஸ் பார்லிமென்ட் போர்டு உறுப்பினர்களுக்கு உடன்பாடானதாக இல்லை.
இந்தக் குழுவில் எட்டு தலைவர்கள் இருந்தார்கள். இவர்களில் காங்கிரஸ் தலைவரான எஸ்.நிஜலிங்கப்பா, காமராஜர், மொரார்ஜி தேசாய், ஒய்.பி.சவான், எஸ்.கே.பாட்டீல் ஆகிய ஐந்து பேரும் சஞ்சீவி ரெட்டிதான் குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்று சொன்னார்கள். ஜெகஜீவன் ராமை, பக்ருதீன் அலி அகமது மட்டுமே ஆதரித்தார். ''மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா நெருங்கி வருகிறது. அவர் அரிஜன முன்னேற்றத்தைப் பெரிதும் விரும்பினார். அதனால், ஜெகஜீவன் ராம் குடியரசுத் தலைவர் ஆவதே பொருத்தமானது'' என்று இந்திரா சொன்னார். என்றாலும், உண்மையான காரணம் காங்கிரஸ் தலைவர்களால் புகுத்தப்படும் குடியரசுத் தலைவரை ஏற்கக் கூடாது என்பதுதான்!
இதே காலகட்டத்தில் ஆட்சியில் எடுக்கப்பட வேண்டிய பொருளாதாரக் கூறுகள் தொடர்பாக பிரதமர் இந்திராவுக்கும், காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பாவுக்கும் கருத்து வேற்றுமை தலைதூக்கி இருந்தது. வங்கிகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்ற இந்திராவின் எண்ணத்தை இடதுசாரிச் சிந்தனை என்று இவர்கள் எதிர்த்தார்கள். ஆனால், இவர்களை மீறி 14 வங்கிகளை தேசியமயமாக்கினார் இந்திரா. இது அவரது செல்வாக்கை அதிகப்படுத்தவும் பயன்பட்டது. ''வங்கிகளை முதலில் சமூகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின் தேசியமயமாக்குவதுதான் சரியானது. அதற்கு முன் உடனடியாக
முடிவுசெய்தால் நான் பொறுப்பேற்க முடியாது'' என்று துணை பிரதமரும் நிதி அமைச்சருமான மொரார்ஜி தேசாய் சொன்னார். இதனை இந்திரா முற்றிலுமாக நிராகரித்தார். உடனே தனது எதிர்ப்பைக் காட்டுவதற்காக மொரார்ஜி பதவியை விட்டு விலகினார்.
'பார்லிமென்டரி போர்டில் நீங்கள் விரும்பியதைச் செயல்படுத்த உங்களுக்கு உரிமை இருப்பதைப்போல, அரசாங்கத்தில் நான் விரும்பியதைச் செய்ய பிரதமர் என்ற முறையில் எனக்கு உரிமை இருக்கிறது அல்லவா?'' என்று பிரதமர் இந்திரா மடக்கினார். இதற்கு நிஜலிங்கப்பா போன்றவர்களால் பதிலளிக்க முடியவில்லை. பிரதமர் என்ற அடிப்படையில் இந்திரா எடுத்த நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. இதை அறிந்து மகிழ்ந்த இந்திரா, தன்னுடைய நன்றியின் அடையாளமாக... காங்கிரஸ் பார்லிமென்டரி போர்டால் அறிவிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரான நீலம் சஞ்சீவி ரெட்டியை தான் ஆதரிக்கத் தயார் என்று சொன்னார். அதற்கான விண்ணப்பத்திலும் இந்திரா கையெழுத்துப் போட்டு அனுப்பினார். சமாதானக் கொடி பறப்பதாகத்தான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் இந்திராவின் செயல்பாடுகளில் ஏதோ சந்தேகம் இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தார்கள். அவரும் அப்படித்தான் நடந்துகொண்டார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சஞ்சீவி ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். ஜனசங்கம், சுதந்திரா கட்சி ஆதரவுடன் சி.டி.தேஷ்முக் நிற்கிறார். அப்போது உதவி குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரியும் போட்டியில் இருந்தார். இவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க., முஸ்லிம் லீக், அகாலிதளம் ஆகிய கட்சிகள் ஆதரித்தன.
மத்தியிலும் காங்கிரஸுக்கு பெரிய பெரும்பான்மை இல்லை, பல்வேறு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டன. எனவே, காங்கிரஸ் ஓட்டுக்கள் முழுக்கவே சிந்தாமல் சிதறாமல் விழுந்தால்தான் காங்கிரஸ் வேட்பாளரான  சஞ்சீவி ரெட்டி வெற்றிபெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தார்கள். 'சஞ்சீவி ரெட்டிக்குத்தான் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்'' என்று பிரதமர் இந்திராவுக்கு காங்கிரஸ் பார்லிமென்ட் போர்டு கோரிக்கை வைத்தது. கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் அந்த உத்தரவுப்படிதான் நடந்துகொள்ள வேண்டும். மீறினால், அவர்கள் பதவியே பறிக்கப்படலாம். எனவேதான், கறாராக இந்த உத்தரவு வேண்டும் என்று பார்லிமென்ட் போர்டு நினைத்தது.
அதே நேரத்தில் இன்னொரு காரியத்தையும் இந்தத் தலைவர்கள் பார்த்தார்கள். அதுதான் இந்திராவை ஆத்திரம் கொள்ள வைத்தது.
காங்கிரஸ் தலைவரான நிஜலிங்கப்பா, சுதந்திரா கட்சி மற்றும் ஜனசங்கத் தலைவர்களைச் சந்தித்தார். அவர்களது இரண்டாவது வாக்கை சஞ்சீவி ரெட்டிக்கு தருமாறு கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர்களை காங்கிரஸ் தலைவர் சந்தித்திருப்பது, தன்னுடைய பதவிக்கு வைக்கப்படும் வேட்டு என்று நினைத்து பதறிப்போனார் இந்திரா. தன்னை விலக்கிவிட்டு, சுதந்திரா மற்றும் ஜனசங்க கட்சிகளின் ஆதரவுடன் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூட முடியும் அல்லவா என்று இந்திரா யோசித்தார்.
''என்னை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு வகுப்புவாத மற்றும் பிற்போக்கு சக்திகளுடன் ஒப்பந்தம் செய்கிறார்கள்'' என்று இந்திரா குற்றம் சாட்டினார். எனவே, அவர் தனது அஸ்திரத்தை எடுத்தார்.
''சஞ்சீவி ரெட்டிக்குத்தான் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு போட முடியாது. காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம்'' என்று இந்திரா அறிவித்து அகில இந்தியாவையும் பதறவைத்தார். ஒருவர் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம் என்றால், யாருக்கு வேண்டுமானாலும் தனது வாக்கைப் பயன்படுத்தலாம். காங்கிரஸ் உறுப்பினர்கள் காங்கிரஸ் வேட்பாளரான சஞ்சீவி ரெட்டிக்கும் வாக்களிக்கலாம். ஜனசங்கம் வேட்பாளருக்கும் வாக்களிக்கலாம். கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கும் வாக்களிக்கலாம். அனைத்து எம்.பி-க்களையும் இப்படி அவிழ்த்துவிட்டால் எப்படி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற முடியும்?
இந்திராவின் சந்தேகத்தில் நியாயம் இல்லை என்று நிஜலிங்கப்பா சொல்லிப் பார்த்தார். அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கும் எண்ணம் இல்லை என்றும், 1972 வரை பிரதமராக இந்திரா நீடிக்கலாம் என்றும் நிஜலிங்கப்பா வாக்குறுதி கொடுத்தார். ஆனாலும், இதனை இந்திரா நம்பவில்லை. நிஜலிங்கப்பாவின் கோரிக்கையை ஏற்று கொறடா உத்தரவு பிறப்பிக்கவும் அவர் சம்மதிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சி உடையாமலேயே இரண்டாக பிரிந்து நிற்கத் தொடங்கியது. இத்தகைய குழப்பமான சூழ்நிலையில் 16.8.1969 அன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தது. காங்கிரஸ் வேட்பாளரான சஞ்சீவி ரெட்டி தோற்றுப்போனார். இடதுசாரிகள், முஸ்லிம் லீக், அகாலிதளம், தி.மு.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளரான வி.வி.கிரி வெற்றிபெற்றார். அதாவது, இந்திரா அவரை வெற்றிபெற வைத்தார். வி.வி.கிரியின் வெற்றி இந்திராவின் வெற்றியாகவும், சஞ்சீவி ரெட்டியின் தோல்வி நிஜலிங்கப்பாவின் தோல்வியாகவும் வரலாற்றில் பதிவானது.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு வாக்களிக்காதது மட்டுமல்ல, எதிராக நின்றவரை வெற்றிபெறவும் வைத்தது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று நிஜலிங்கப்பா போன்றவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். இந்திரா உள்பட அவரது ஆதரவாளர்கள் பலருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ''காங்கிரஸ் கட்சி உடைவதையோ, சிலர் வெளியேற்றப்படுவதையோ, நான் விரும்பவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலோடு தொடர்புபடுத்தி ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முயற்சி செய்தால், கட்சியின் அழிவுக்கு வழிவகுத்துவிடும்'' என்று இந்திரா பயமுறுத்தத் தொடங்கினார். சிறு அசைவு ஏற்பட்டாலும் கட்சி உடைந்துவிடும் என்பதே நிலைமை.
இரண்டு தரப்பையுமே சமாதானம் செய்ய சிலர் முயற்சித்தார்கள். இதன் அடிப்படையில் 'ஒற்றுமைத் தீர்மானம்’ ஒன்றை நிறைவேற்றி இரண்டு தரப்பையும் அமைதிப்படுத்த விரும்பினார்கள். ஆனால், இந்திராவின் ஆதரவாளர்கள் நிஜலிங்கப்பாவுக்கு எதிரான அஸ்திரங்களை ஏவத் தொடங்கினார்கள். கட்சியின் மேல்மட்டத்தில் நிஜலிங்கப்பா போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு செல்வாக்கு இருந்தாலும், பிரதமர் என்ற அடிப்படையில் ஆட்சியில் இந்திராவின் செல்வாக்கு அபரிமிதமாக இருந்தது. அவரால் பதவியை பெற்றவர்கள், அனுபவித்து வருபவர்கள் சேர்ந்து, 'அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரான நிஜலிங்கப்பாவை நீக்கிவிட்டு, புதிய தலைவரைத் தேர்வுசெய்ய வேண்டும்’ என்று கையெழுத்து இயக்கம் நடத்த ஆரம்பித்தார்கள்.
இதைப் பார்த்து கோபமான நிஜலிங்கப்பா, காங்கிரஸ் காரிய கமிட்டியை அவரே கூட்டினார். இதற்கு இந்திரா வரவில்லை. அவர் தனது வீட்டில் ஒரு கூட்டத்தைக் கூட்டி, காரியக் கமிட்டியை தான் கூட்டப்போவதற்கான தேதியை அறிவித்தார். இது விதிமுறைக்கு புறம்பானது என்று நிஜலிங்கப்பா சொல்ல... நீங்கள் செல்வது எதுவுமே விதிமுறைப்படியானது அல்ல என்று இந்திரா சொல்ல... நேரடி மோதல் எழுந்தது. இருவருமே நேரில் சந்தித்தால் பிரச்னை தீரும் என்று மைசூர் முதலமைச்சர் வீரேந்திர பாட்டீல் நினைத்தார். அதன் அடிப்படையில் இந்திராவும் நிஜலிங்கப்பாவும் டெல்லியில் சந்தித்துப் பேசினார்கள். இதுவும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
இந்திராவைக் கட்சியை விட்டு நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தார்கள். 1969 நவம்பர் 12-ம் நாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடந்தது. மொத்தமுள்ள 21 உறுப்பினர்களில் 11 பேர் வந்திருந்தார்கள். கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய இந்திராவை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவது என இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. புதிய பிரதமரை தேர்வுசெய்ய திட்டமிடப்பட்டது. இதனை இந்திரா ஆதரவாளர்கள் ஏற்கவில்லை.
மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்களில் 220 பேர் இந்திராவை ஆதரித்தார்கள். சிண்டிகேட் காங்கிரஸ் தலைவர்களுக்கு 68 உறுப்பினர் ஆதரவே இருந்தது. எனவே, இந்திராவின் பிரதமர் பதவிக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மொத்த உறுப்பினர்கள் 705 பேர் இதில் 446 உறுப்பினர்கள் இந்திராவை ஆதரித்தார்கள். இவர்கள் சேர்ந்து நிஜலிங்கப்பாவை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஜெகஜீவன் ராமை தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். (இவர்தான் இன்று மக்களவை சபாநாயகராக இருக்கும் மீரா குமாரின் அப்பா).
நிஜலிங்கப்பா தலைமையிலானது காங்கிரஸ் (ஓ) என்றும் இந்திரா தலைமையிலானது காங்கிரஸ் (ஆர்) என்றும் அழைக்கப்பட்டது. முன்னதை ஸ்தாபன காங்கிரஸ் என்றும், பின்னது இந்திரா காங்கிரஸ் என்றும் அழைத்தார்கள். பெருந்தலைகள் வேறு கட்சியாக ஆகிப்போனது இந்திராவுக்கு வசதியாகப் போனது. தனது சர்வ வல்லமையை காங்கிரஸுக்குள் பயன்படுத்தத் தொடங்கினார். இனி அவரைக் கேள்வி கேட்க யாரும் இல்லை கட்சிக்குள். இடதுசாரிகள் நிறுத்திய வி.வி.கிரியை ஆதரித்து வாக்களித்ததால், இந்திரா ஆட்சியைக் காப்பாற்ற இடதுசாரிகளும் ஆதரவாக இருந்தார்கள்.
கட்சியும் ஆட்சியும் அவரது குடும்பச் சொத்தாக மாறத் தொடங்கியதன் அடையாளமாக சஞ்சய் காந்தி வந்தார்

கூட்டணி ஃபார்முலா உருவானது!  
நேருவை அறிந்தவர்கள், நேரு வயதை எட்டியவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுடன் பழகியவர்கள் என ஒரு பெருங்கூட்டம் கட்சியைவிட்டு விலகிப்போனதை வருத்தமாகப் பார்க்கவில்லை இந்திரா. தனக்கு வசதியாகிப் போனதாகவே உணர்ந்தார். அதிகாரக் குவிமையமாக தானும் காங்கிரஸ் தலைமையும் மாறுவது ஒன்றே லட்சியம் என்பதுபோலச் செயல்பட்டார். இந்த நோக்கத்துடன் இந்தியாவையே ஒற்றை ஆட்சி நாடாக ஆக்குவதற்கான முயற்சிகளை எடுத்தார்.
இந்தியா பரந்து விரிந்துபட்ட ஒரு தேசம். இதில் பல மொழிகளைப் பேசும் தேசிய இனங்கள் இருக்கின்றன. வேறு வேறு கடவுள்களை வணங்கும் மதங்களைச் சேர்ந்த மக்கள் இருக்கின்றனர். இந்தப் பரப்பில் வர்த்தகம் செய்த கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய தொழில்பரப்பை மொத்தமாக பிரிட்டிஷாருக்குத் தாரை வார்த்தபோது பல்வேறு சமஸ்தானங்கள், குறுநில மன்னர்கள், பாளையப்பட்டுகள் அனைத்தையும் சேர்த்து அளித்தனர். இதில் பலருடனும் சண்டையிட்டும் சமாதானமாகவும் மொத்த இடத்தையும் பிரிட்டிஷ் ஆட்சி வளைத்து, அதற்கு ஒன்றுபட்ட ஒரு வரைபடத்தை உருவாக்கியது. ஒற்றை ஆட்சிகொண்ட நிர்வாக முறை அமலானது.
ஒரு நாடு முழுவதும் ஒரே ஆட்சியால் ஆளப்பட்டால், அந்த முறைக்கு ஒற்றை ஆட்சி முறை என்று பெயர். ஒரு அரசாங்கத்தின் அனைத்து விதமான அதிகாரங்களும் ஒரு குறிப்பிட்ட மையத்தில், அதாவது மத்திய அரசாங்கத்திடம் இருந்து செயல்படுத்தப்படும் ஒற்றை ஆட்சியை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் செயல்படுத்தினார்கள்.

பல்வேறு மொழி, இன, மத, சாதி, பண்பாடு கொண்ட நாட்டை ஒற்றை ஆட்சி முறை எப்படி பிரதிபலிக்க முடியும்? எனவேதான், 'கூட்டாச்சி தத்துவம் மலர வேண்டும்’ என்று நம்முடைய விடுதலைப் போராட்ட வீரர்கள் குரல் கொடுத்தனர். கூட்டாட்சி என்பது பல்வேறு மாநிலங்கள் இருக்கும், அந்த மாநிலங்களை இணைக்கும் மத்தியக் கூட்டமைப்பு அரசு ஒன்று இருக்கும். ஒரே நாட்டுக்குள் ஒரு மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் இருக்கும். இந்தக் கூட்டாட்சி முறையைத்தான் காங்கிரஸ் கட்சியும் சுதந்திரப் போராட்ட காலத்தில் வலியுறுத்தியது.
'எதிர்கால இந்திய அரசமைப்பு, கூட்டாட்சி அமைப்பாகத்தான் இருக்கும்’ என்று காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் கூறியது. ஆனால், சுதந்திரம் அடையும் காலகட்டம் நெருங்கிவரும் சூழ்நிலையில், 'அநேகமாக விடுதலை பெற்ற இந்தியா ஒரு கூட்டாட்சி அமைப்பைக் கொண்ட இந்தியாவாகத்தான் இருக்கும். ஆனால், மிக அதிகமான ஒற்றை ஆட்சி முறைகளும் கட்டுப்பாடுகளும் ஏதோ ஒரு வகையில் அந்தக் கூட்டாட்சி அமைப்பில் இடம்பெற வேண்டும்’ என்று நேரு சொல்ல ஆரம்பித்தார். மாநிலத்தில் அரசுகள் இருந்தாலும் மத்திய அரசிடமே அனைத்து அதிகாரங்களும் அமைய வேண்டும் என்று நேரு நினைத்தார். காங்கிரஸ் கட்சியையும் ஒரு மத்திய மயமாக்கப்பட்ட ஒரு கட்சியாக உருவாக்கினார். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி மாநில காங்கிரஸ் கமிட்டிகள் இருந்தாலும், அனைத்துக்கும் அதிகாரம் பொருந்திய அமைப்பு... அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி. காங்கிரஸ் ஒர்க்கிங் கமிட்டி என்று இதைச் சொல்வார்கள். நடைமுறையில் காங்கிரஸ் காரிய கமிட்டி என்று அழைப்பது இதைத்தான். அனைவரையும் ஆட்டிப் படைக்கும் அதிகாரம் பொருந்தியது இந்தக் காரிய கமிட்டி. இது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரின் கண்ணசைவைப் பார்த்து மட்டுமே இயங்கக் கூடியது. இந்தத் தலைவரைத்தான் காங்கிரஸ் மேலிடம் என்றும் கட்சியின் ஹை கமாண்ட் என்றும் அழைக்கிறோம். மாநில காங்கிரஸ் தலைவர்களாக இருந்தாலும் மாநில அரசின் காங்கிரஸ் முதல்வர்களாக இருந்தாலும், இவர்கள் அனைவருமே இந்த ஹை கமாண்டுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் நினைத்தால் பதவியில் தொடரலாம். மனம் மாறினால் பதவியை இழக்கலாம். மாநிலத் தலைமைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கட்சி மட்டத்தில் முடிவெடுத்த காங்கிரஸ் கட்சி, மாநில அரசுகளுக்கே பெரிய அதிகாரங்கள் எதுவும் இல்லை என்ற சூழ்நிலையைப் படிப்படியாக உருவாக்கவும் செய்தது.
இன்னொன்று... அரசாங்கத்துக்கும் அரசாங்கத்தை ஆளும் கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற சூழ்நிலையையும் காங்கிரஸ் கட்சி உருவாக்கியது.
ஒரு அரசாங்கத்தை, ஒரு அரசியல் கட்சி ஆளலாம். அதற்காக அந்த அரசியல் கட்சியே அரசாங்கமாக ஆக முடியுமா? ஆனால், காங்கிரஸ் அப்படி வித்தியாசம் காண முடியாத அளவுக்கு ஒரு அரசாங்கத்தை ஆளும் அரசாங்க கட்சியாகவே செயல்படத் தொடங்கியது.
இந்தியாவின் நிர்வாக நெறிமுறைகளை ஆய்வுசெய்த வரலாற்று ஆசிரியர்கள் இந்த நுணுக்கமான குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மீது வைக்கிறார்கள். ''காங்கிரஸின் ஆட்சி முறை, ஒரு அரசியல் கட்சிக்கும் அரசுக்கும் இருக்க வேண்டிய எல்லைக் கோட்டை முழுவதும் மங்கச் செய்துவிட்டது'' என்று பேராசிரியர் கே.எம்.பாம்வெல் எழுதி இருக்கிறார். அதாவது, மத்தியில் அதிகாரத்தைக் குவிப்பது, மத்திய ஆட்சிக்கும் அதை ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கும் வித்தியாசம் இல்லாமல் பார்த்துக்கொள்வது - என்ற சூழ்நிலையை நேரு காலத்தில் லேசாக ஆரம்பித்து இந்திரா காலத்தில் அதைக் கெட்டிப்படுத்தினார்கள். 1947-1967 வரை இதில் அசைக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் எழுந்தன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை விட்டு இறங்கி தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததுபோல, பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது.
மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் ஏகபோகம் - 1967-ல் தகர்ந்தது என்றே சொல்லலாம். காங்கிரஸை வீழ்த்த வேண்டுமானால், 'ஒரே வழி எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர வேண்டும்; எந்தக் கட்சியும் எந்தக் கட்சியுடனும் சேரலாம். காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்பது ஒன்றே கொள்கை; மற்றவற்றை, ஓரமாக ஒதுக்கி வைத்துவிட வேண்டும்’ என்ற கூட்டணி ஃபார்முலா அப்போதுதான் உருவானது. உன்னதமான சோஷலிஸ்ட்கள் என்று கொண்டாடப்பட்ட ராம் மனோகர் லோஹியா, வகுப்புவாத ஜனசங்கத்துடனும் வலதுசாரி சுதந்திரா கட்சியுடனும் சேர்ந்தார். 'திராவிட இனவாதம்’ பேசிய அண்ணாவும் 'தமிழ்த் தேசியவாதம்’ பாடிய ம.பொ.சி-யும் மதச் சிந்தனைகள் கொண்ட முஸ்லிம் லீக்கும், வலதுசாரி எண்ணம் கொண்ட ராஜாஜியையும் கம்யூனிச சிந்தனையாளர்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்த்துக்கொண்டு காங்கிரஸை வீழ்த்தப் புறப்பட்ட காலம் அது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அமைத்தது. பஞ்சாபில் அகாலிதளம் தலைமையிலான அரசை, ஜனசங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்து ஆதரித்தார்கள். பஞ்சாப், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைந்த எதிர்க்கட்சி அரசாங்கங்களில் சுதந்திரா கட்சியும் ஜனசங்கமும் சோஷலிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடம்பெற்றன. அரசாங்கத்தில் சேராமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது.
இன்றைக்கு மதச்சார்பின்மைக்கு எதிராக மார்தட்டிக் கிளம்பி இருப்பவர்கள், கடந்த காலத்தில் காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மதவாத சக்திகளுடனும் வலதுசாரிகளுடனும் எந்தக் கூச்சமும் இல்லாமல் கூட்டணி வைத்துக்கொண்டவர்கள்தான் என்பதே வரலாற்றுப் புரிதல்.
இந்திராவுக்கு எதிராக தமிழகம் நீங்கலாக பிற மாநிலங்களில் அமைக்கப்பட்ட கூட்டணி அரசுகள், உள் முரண்பாடுகளால் உதிர ஆரம்பித்தன. 1967 முதல் 1970 வரை பீகாரில் ஏழு அரசுகள், உ.பி-யில் நான்கு அரசுகள், ஹரியானா, மத்தியப்பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளத்தில் தலா மூன்று அரசுகள் அமைந்தன. இந்த உள்குழப்பம் காரணமாக ஏழு மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. இந்த இடைப்பட்ட மூன்று ஆண்டு காலத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 800 எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறியதாகவும் அதில் 150 பேர் அமைச்சர்கள் ஆனதாகவும் ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்த ஸ்திரமற்ற தன்மையை மேலே உட்கார்ந்து இந்திரா ரசித்தார். மாநிலங்களில் அவரது செல்வாக்கு குறைந்தாலும், மத்தியில் அவரது அதிகாரம் பலமாக இருந்தது. 1971 தேர்தலில் 'இந்திராவை ஒழிப்போம்’ என்று ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா, ஜனசங்கம், எஸ்.எஸ்.பி. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன.
நன்றாகக் கவனியுங்கள். 1940-களில் இருந்து எந்த ராஜாஜியும் காமராஜரும் தனித்தனி தீவுகளாக இருந்து மோதினார்களோ... அந்த இருவரும் 1971 தேர்தலில் ஒன்றாகச் சேர்ந்தார்கள். இந்தக் கூட்டணியில் ஜனசங்கமும் இருந்தது. சோஷலிசம் பேசிய காமராஜரும், வலதுசாரி கொள்கை கொண்ட ராஜாஜியும் மதவாதிகளான ஜனசங்கமும் சேர்ந்து கூட்டணி அமைத்து சந்தித்த தேர்தல் அது. இந்த ஜனசங்கம்தான், இன்றைய பாரதிய ஜனதாவின் தாய். இந்தத் தேர்தலில் இந்திராவுடன் கூட்டணி வைத்தார் கருணாநிதி. சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸை வீழ்த்த மெகா கூட்டணி அமைத்த கட்சி அது.
காமராஜரும் ராஜாஜியும் ஜனசங்கமும் சேர்ந்துவிட்டதால், அந்த அணியே வெற்றிபெறும் என்று செய்திகள் பரவியது. சென்னை கடற்கரையில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்கூட்டத்தில் மைக் முன் பேசப் போன காமராஜரை அழைத்து, தன் ஜிப்பாவில் வைத்திருந்த பொட்டலத்தை அவிழ்த்து விபூதியை எடுத்து நெற்றியில் இட்டார் ராஜாஜி. அன்று பேசிய ராஜாஜி, ''ஞானோதயம் வந்த பிறகுதான் யார் நல்லவர் என்று புரிகிறது'' என்றார். ''நான் சொல்வதற்கு கொஞ்சம் கூச்சப்படுகிறேன். திருமணத்துக்குப் பிறகு மகனும் மருமகளும் ஒன்றுபடுவதுபோல நானும் காமராஜரும் ஒரே குடும்பமாகிவிட்டோம்'' என்று ராஜாஜி சொன்னபோது, ஸ்தாபன காங்கிரஸ் வென்று இந்திரா தோல்வியடைந்ததுபோல எல்லோரும் கைதட்டினர்.
அகில இந்திய அளவில் நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து நடத்தப்பட்ட இந்தப் பொதுத்தேர்தலில் இந்திராவுக்கும் காங்கிரஸுக்கும் சாதகமான நிலை (1971-ல்) ஏற்பட்டது. பெரும்பான்மை மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மை பலத்தை இந்திரா பெற்றார். ஒற்றை ஆட்சி தன்மைகொண்ட ஒரு மத்திய அரசை, மாநிலங்களை அடிமையாக மட்டுமே வைத்திருக்கும் மத்திய அரசை உருவாக்க நினைத்தார். ''மத்திய அரசின் கீதத்துக்கு ஏற்ப மாநில அரசுகள் தாளம் போட வேண்டும் என்பது மிகமிகத் தேவையானது'' என்று திருப்பதியில் பேசும்போது பிரதமர் இந்திரா வெளிப்படையாகச் சொன்னார். தான் நினைத்ததே கட்சியிலும், தான் நினைத்ததே ஆட்சியிலும், தான் நினைத்ததே மாநில ஆட்சிகளிலும் என்று இந்திரா செயல்பட 1971 தேர்தல் வழி அமைத்துக் கொடுத்தது.
இதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல; 'இந்திரா நாயகம்’ என்று புதிய பெயரையே சூட்டினார் இரா.செழியன். இந்த யுகத்தின் நாயகனாக 'மாருதி’ காரில் வந்தார் இந்திராவின் இளைய மகன் சஞ்சய்.

Monday, January 20, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை!-Part 6 (இந்திய பிரதமர்கள் )







கர்ம வீரரும் கசந்தார்!  
பெருந்தலைவர் காமராஜரும் கசக்க ஆரம்பித்ததுதான் இந்திரா வாழ்க்கையில் மறைக்க முடியாத வடுவாக இன்று வரைக்கும் இருக்கிறது.
பெரிய விவகாரமாக இருந்தால் எதையும் நான்கு பேராக யோசித்துச் செய்ய வேண்டும் என்பார்கள். படேல் - ராஜாஜி, ஆசாத் ஆகிய மூவரோடுதான் ஆரம்ப காலத்தில் நேரு ஆலோசனை நடத்துவார். அதன் பிறகு சாஸ்திரி - காமராஜ் - இந்திரா ஆகிய மூவரோடுதான் கலந்து ஆலோசனை செய்தார். இதில் காமராஜரின் பிம்பம்தான் இந்திராவை எரிச்சலூட்டுவதாக இருந்தது. ஏனென்றால், நேருவுக்கு இணையாக அகில இந்தியத் தலைவர்கள் அனைவராலும் காமராஜர் மதிக்கப்பட்டார். நேருவிடம் சொல்ல முடியாததையும் காமராஜரிடம் அனைவரும் சொல்வார்கள். நள்ளிரவைத் தாண்டியும் அவரது வீட்டில் ஆலோசனைகள் தொடரும். நேருவுக்கு அடுத்து பிரதமர் யார் என்ற போட்டி நிலவியபோது, சாஸ்திரியைக் கொண்டு வந்ததும் அல்லாமல், அதற்கு எதிராக இருந்த மொரார்ஜி அணியை எழ முடியாமல் ஆக்கிய சாமர்த்தியம் காமராஜருக்கு இருந்தது.
அதேபோல் சாஸ்திரிக்குப் பிறகு யார் பிரதமர் என்ற கேள்வி வந்தபோது, ஏக காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் இந்திராவைவிட்டால் வேறு வழியில்லை என்று சொல்லவில்லை. இந்திரா பெயரை காமராஜர் உச்சரித்ததால்தான் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். காமராஜர் இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை என்பதால் அவர் மீது கூடுதல் பாசம்தான் வந்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ வேறு விதமாக இந்திரா நினைத்தார்.
ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவர்கள் இனி கட்சியில் இருந்தால் அது நம்முடைய பதவிக்கு, நாற்காலிக்கே வினையாகிவிடும் என்று அரசியல் தலைவர்கள் நினைப்பது எந்தக் கட்சியிலும் வாடிக்கைதானே. இதற்கு இந்திராவும் விதிவிலக்கு அல்ல. காரணம், அந்த அளவுக்கு காமராஜர் செல்வாக்கு காங்கிரஸில் கொடிகட்டிப் பறந்தது.
இன்று டெல்லியில் நடக்கும் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் சோனியாவுக்கு என்ன மரியாதை தரப்படுகிறதோ அதைப்போல மரியாதை அன்று காமராஜருக்கு தரப்பட்டு வந்தது. 1963-ல் நடந்த ஜெய்ப்பூர் காங்கிரஸில், 'இனி நம்முடைய தலைவர் காமராஜர்தான்’ என்று அறிவித்தபோது அத்தனை பேரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். அடுத்த ஆண்டு நடந்த புவனேஸ்வர் காங்கிரஸில் ஹீரோவே காமராஜர்தான். இந்தக் காட்சியைப் பார்க்க தமிழ்நாட்டில் இருந்து பலரும் கிளம்ப... சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 'புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு ரயிலே போனது. காமராஜரும் இந்த ரயிலில் போனார். சென்னையில் இருந்து ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வர் வரைக்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும் காங்கிரஸ் தொண்டர்கள் கூடி நின்று கூடை கூடையாகப் பூக்களைத் தூவினார்கள் காமராஜரோடு வந்த 700 பேருக்கும் அந்தந்த ஊரில் காங்கிரஸ் தொண்டர்கள் உணவு கொடுத்து உபசரித்தார்கள். இப்படி வந்து சேர்ந்த காமராஜரை, ஒரிஸ்ஸா தலைவர் பட்நாயக் ரயில் நிலையத்துக்கு வந்து வரவேற்றார். இது 68-வது காங்கிரஸ் என்பதால் 68 குண்டுகள் முழங்கி காமராஜர் வரவேற்கப்பட்டார். பல்வேறு கலைக்குழுவினர் முன்னே நடந்து காமராஜர் அழைத்து வரப்பட்டார்.
மாநாட்டுப் பந்தலிலும் 68 குண்டுகள் முழங்க... 68 அடி உயர கொடிக் கம்பத்தில் காங்கிரஸின் கொடியை காமராஜர் ஏற்ற... ஜோதிக்கு எண்ணெய் ஊற்றிய நேரு... 'நீங்கள் எண்ணெய் ஊற்றுங்கள்’ என்று சொல்ல... அந்த இடமே காமராஜரின் கும்பாபிஷேகமாக இருந்தது.
இதுவரை காங்கிரஸ் தலைவராக இருந்த சஞ்சீவய்யா, 'எனக்குத் தமிழ் தெரியும். தலைவர் காமராஜுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் அளிக்குமாறு பிரார்த்திக்கிறேன்’ என்று சொல்லி மாலையைப் போடுகிறார்.
'ஈவு இரக்கமற்ற அசோகச் சக்ரவர்த்தியை ஒரு மகாபுருஷராக மனம் மாற்றம் செய்த இந்த இடத்துக்கு வந்துள்ளவர்களை வரவேற்கிறேன்’ என்று சொல்லி காமராஜருக்கு மாலை அணிவிக்கிறார் பட்நாயக். 'காமராஜ் ஜிந்தாபாத்’ என்று மூன்று முறை முழக்கமிட்ட பட்நாயக்கின் மகன்தான் இன்றைய ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்.
மாநாட்டில் நடந்து போய்க்கொண்டிருந்த சஞ்சீவி ரெட்டியை தடுத்து நிறுத்திய ஜெகஜீவன்ராம், ''என்னைப் பார்க்க என் அறைக்கு வருவதாகச் சொன்னீர்களே, ஏன் வரவில்லை?'' என்று செல்லமாகக் கடிந்துகொண்டார். ''நான் என்ன செய்வேன்? மாப்பிள்ளைத் தோழன் போல காமராஜுக்குத் தோழனாக நான் இருக்கிறேன். காமராஜுடன் இருப்பதால் ராஜோபசாரம் கிடைக்கிறது'' என்று சஞ்சீவி ரெட்டி சொன்னார் என்றால் நிலைமையைக் கவனியுங்கள்.
காமராஜரைச் சந்திப்பதற்காக அவரது அறைவாசலில் மாஜி மன்னர் ஒருவர் காத்திருந்தார் அவர் பெயர் ராஜா கிருஷ்ண சந்திரமான்சிங் ஹரிச்சந்திர மராத்ராஜ் பிரமார்பரே பாரிகுட் ராஜா என்பதாகும். ''யாரையும் பார்க்க முடியாது'' என்று காமராஜ் அவரைத் திருப்பிஅனுப்பினார் என்றால் கொடி எவ்வளவு தூரம் பறந்தது என்று பாருங்கள்.இவ்வளவையும் இந்திரா பார்த்துக்கொண்டுதான் இருந்தார் புவனேஸ்வரில். இந்த மாநாட்டுக்கு வந்த நேரு உடல் நலிவுற்று திரும்பிவிட்டார். அவருக்கான நாற்காலி, காலியாகவே மேடையில் இருந்தது. அந்த நாற்காலி தனக்கா... அல்லது காமராஜருக்கா? என்று இந்திரா யோசித்திருப்பார்.
இந்த மாநாடு முடிந்ததும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் காமராஜர் சுற்றுப்பயணம் கிளம்பினார். 18 நாட்கள், 300 ஊர்கள், 2000 மைல்கள் கடந்து ஒரு கோடி பேரைச் சந்தித்த அந்தப் பயணத்தில்தான் வட இந்திய மக்கள். 'காலா காந்தி... காலா காந்தி’ என்று அழைத்தார்கள். கருப்பு காந்தியாக அவர் வலம் வரத் தொடங்கினார். இதன் பிறகே நேருவின் மறைவும், சாஸ்திரி பிரதமர் ஆனதும், அவர் மறைந்ததும் நடந்தன. சாஸ்திரிக்குப் பிறகு காமராஜர் பிரதமராக வரவேண்டும் என்று அதுல்யாகோஷ் போன்றவர்கள் யோசனை சொன்னபோது, 'இந்த விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்’ என்று நேருக்கு நேராக மறுத்துவிட்டார். இதுவும் அவரது பெயரை உயர்த்தியது. அதனால்தான் 1964 முதல் 67 வரை இரண்டு முறை அவரால் தலைவராக இருக்க முடிந்தது. இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டு காலத்தில் இந்தியா மூன்று பிரதமர்களை அதாவது நேரு, சாஸ்திரி, இந்திரா ஆகியோரைக் கண்டது. ஆனால் கர்மவீரரை நகர்த்த முடியவே இல்லை.
''காமராஜ் எதை எல்லாம் செய்யச் சொல்கிறாரோ அதையெல்லாம் செய்வேன். அவர் வழிகாட்டுதல்படியே நடப்பேன்'' என்று சொன்ன இந்திரா, அப்படி நடந்துகொள்ளவில்லை. ஆனால் காமராஜர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. 1967 பொதுத் தேர்தல் நெருங்கி வந்ததால் அமைதியாக இருந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. மொத்தம் இருந்த 518 உறுப்பினர்களில் (அன்று எம்.பி-க்கள் எண்ணிக்கை இதுதான்) 282 பேர் மட்டுமே காங்கிரஸ் உறுப்பினர்கள். இந்த தடவையும் பிரதமர் பதவிக்கு இந்திராவை எதிர்த்துப் போட்டியிட்டார் மொரார்ஜி. இந்திராவுக்கும் மொரார்ஜிக்கும் யார் பிரதமர் என்பதற்கான தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் மொரார்ஜியை சமாதானப்படுத்தினார் காமராஜர். ''யார் தோற்றாலும் கட்சி உடையும். காங்கிரஸைக் காப்பாற்ற நீங்கள் போட்டியிலிருந்து விலகித்தான் ஆக வேண்டும்'' என்று காமராஜர் சொன்னதை மொரார்ஜியால் தட்டமுடியவில்லை. போட்டியிலிருந்து விலகினார். இறுதியில், ஏகமனதாக இந்திரா தேர்வு செய்யப்பட்டார்.
இங்குதான் காமராஜரின் ராஜதந்திரம் வெளிப்பட்டது. கடிவாளம் இல்லாத குதிரையாக இந்திராவை விடுவது ஆபத்தானது என்பதைக் கடந்த இரண்டாண்டு காலம் (1966-67) காமராஜருக்கு உணர்த்தி இருந்தது. மொரார்ஜியை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திராவிடம் வலியுறுத்திய காமராஜர், 'அவருக்கு நிதி அமைச்சர் பதவி தரவேண்டும், மேலும் துணைப் பிரதமர் பதவி கொடுத்தால் அமைதியாகிவிடுவார்’ என்று சொன்னார். இதை இந்திரா எதிர்பார்க்கவில்லை. தன்னை பிரதமர் ஆக்குவதற்கு இருந்த அத்தனை தடைக்கற்களையும் நொறுக்கிவிட்டு காமராஜர் நல்ல பாதை போட்டுக்கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடுவார் என்று நினைத்து இந்திரா காத்திருக்க... மொரார்ஜி என்ற சிவப்பு விளக்கை தலையில் கொண்டுவந்து மாட்டுவார் என்று எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?
ஆனால் கேட்டவர் காலா காந்தி ஆச்சே! கர்ம வீரர் ஆச்சே! அப்பாவுக்கே தலைவராக இருந்தவர் ஆச்சே! இன்று நாம் பிரதமர் ஆகி ஆட்சி நம் வசம் வந்தாலும், கட்சி அவர் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது! நினைக்க நினைக்க சிக்கல், சிக்கிக்கொண்டே போனது. வேறு வழியில்லை. மொரார்ஜியை நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு இந்திரா தள்ளப்பட்டார். ஆனால் அன்று முதல் காமராஜர் என்ற பெயர் இந்திராவுக்குக் கசக்க ஆரம்பித்தது.
சினம் கொள்ள வைத்த சிண்டிகேட்!   
''உங்கள் வழிகாட்டுதல்படிதான் இனி நான் நடந்துகொள்வேன்'' - என்று பெருந்தலைவர் காமராஜருக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு இந்தியாவின் தலைமை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்ட இந்திரா அப்படி நடந்துகொள்ளவில்லை.
சிறுசிறு சம்பவங்களில் இந்திரா அப்படி நடந்துகொள்வதை காமராஜர் கண்டுகொள்வதில்லை. ஆனால் நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் நிகழ் காலத்தையும் பாதிக்கும் பல நிகழ்வுகளிலும் இந்திரா இப்படி நடந்துகொள்வதை காமராஜர் சகிக்கத் தயாராக இல்லை.
முக்கியமான முரண்பாடு, இந்திய ரூபாயின் மதிப்பை குறைப்பதில் ஏற்பட்டது. இந்திய ரூபாயின் மதிப்பை திடீரென இந்திரா குறைத்தார். காமராஜர் இதனைக் கடுமையாகக் கண்டித்தார்.
இந்திய ரூபாயின் மதிப்பை எதற்காக இந்திரா குறைத்தார் என்றால்... அன்று இந்தியப் பொருளாதாரம் வேகவேகமாக சீர்குலைந்துகொண்டு இருந்தது. பாகிஸ்தான் ஊடுருவல் காரணமாக நாடும் அச்சுறுத்தலில் இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து உலக வங்கியும், சர்வதேச நிதி ஆணையமும் இந்தியாவுக்கு அதுவரை தந்துவந்த உதவிகளை நிறுத்திவிட்டன. இந்தியாவுக்கு உதவ வேண்டும் என்று கேட்டபோது, 'ரூபாயின் மதிப்பைக் குறையுங்கள்’ என்று இந்த இரண்டு நிறுவனங்களும் நிபந்தனை விதித்தன. இப்படி நிபந்தனை விதிக்க அமெரிக்காவும் தூண்டியது. இதனை ஏற்றுக்கொண்டு இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைத்தால் அந்நிய மூலதனம் நம்முடைய நாட்டுக்குள் வரும் என்று பொருளாதார ஆலோசகர்கள் ஆலோசனை சொன்னார்கள். இதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் இந்திரா, இந்திய ரூபாயின் மதிப்பை 35.5 சதவிகிதமாக குறைத்தார். 1966-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் நாள் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை எதிர்க் கட்சிகள் அனைத்தும் எதிர்த்தன. 'அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணிந்துவிட்டது என்று கண்டித்தன. இவர்களோடு, சேர்ந்து காமராஜரும் இதனை எதிர்த்தார். 'பிரதமர் என்னைக் கலந்துகொள்ளாமல் எடுத்த முடிவு’ என்று வெளிப்படையாகக் கூறினார்.
நடப்பது காங்கிரஸ் ஆட்சி. ஆனால் காங்கிரஸ் தலைவர் காமராஜருக்குத் தெரியாமல் மிகமிக முக்கியமான ஒரு பொருளாதார முடிவு எடுக்கப் படுகிறது. அதுவும் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய முடிவு என்றால் எப்படி இருக்கும்?
''நாணய மதிப்புக் குறைப்பைத் தொழில் வளர்ச்சிபெற்ற நாடுகள் தங்கள் உற்பத்தியில் ஈடுசெய்ய முடியும். ஆனால் விவசாயத்தை மட்டுமே பெரிதாக நம்பியுள்ள நம் நாட்டுக்கு இது மேலும் துன்பத்தையே கொடுக்கும்'' என்பது காமராஜரின் எண்ணம், இதனை இந்திரா மறுத்தார். ''ரூபாயின் மதிப்பைக் குறைத்தால் ஏற்றுமதிகள் அதிகரிக்கும். அந்நிய மூலதனம் அதிகமாக வரும்'' என்பதையே திரும்பத் திரும்பச் சொன்னார் இந்திரா. அமெரிக்காவிடம் அதிகமான நிதியை இந்திரா வேண்டி நின்றார். தருவதற்கு ஒப்புக்கொண்ட அமெரிக்கா, மொத்தமாகத் தராமல் பிய்த்துப் பிய்த்து வழங்கியது. இதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. இந்தியா தனது விவசாயக் கொள்கையை மாற்ற வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்தபோதுதான்  இந்திராவுக்கு லேசான விழிப்பு ஏற்பட்டது. வடக்கு வியட்நாம் மீது அமெரிக்கா தாக்குதல் தொடங்கியபோது முழு விழிப்பு இந்திராவுக்கு வந்தது.
''நாம் ஏதோ ஒரு சுழலில் சிக்க வைக்கப் பட்டோம்'' என்று ஓராண்டு கழித்துத்தான் இந்திரா உணர்ந்தார். ''அது நான் எடுத்த தவறான முடிவு. இதனால் அதிகமான தீங்குதான் ஏற்பட்டன'' என்று பிற்காலத்தில் இந்திரா அந்தத் தவறை ஒப்புக்கொண்டார்.
ஆனாலும், காமராஜர் இந்திராவை விட்டு மனதளவில் விலகத்தொடங்கினார். 1967 தேர்தல் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது தன்னிச்சையாக இந்திரா நடந்துகொள்வதாக காமராஜர் நினைத்தார். ''நான் செய்த தவறு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் எல்லா அதிகாரமும் தன்னிடமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆகவே, யாரையும் எக்காரணத்துக்காகவும் அருகில் நெருங்க விடுவது இல்லை'' என்று காமராஜர் வருந்திப் பேச ஆரம்பித்தார். காமராஜர் எதிர்பார்த்தது மாதிரியே 1967 தேர்தல் காங்கிரஸுக்கு மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. மொத்தமுள்ள 518 நாடாளுமன்றத் தொகுதிகளில் 282 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி பெற முடிந்தது என்பதைவிட முக்கியமானது... அனைத்து மாநிலங்களிலும் அதுவரை ஏகபோகமாக இருந்த காங்கிரஸ் கட்சி தனது பழைய செல்வாக்கை இழந்தது.
பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு, கேரளா எனப் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ். இந்திராவின் தவறான வழிகாட்டுதலும், தன்னிச்சையான நடத்தையுமே இதற்குக் காரணம் என்று நினைத்த காமராஜ், ஒரு கடிவாளம் போட்டார்.
''காங்கிரஸின் கொள்கைகளைத் தெளிவுபட எடுத்துவைக்க வேண்டியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பு. அவற்றை செயல்முறைக்குக் கொண்டுவர வேண்டியது காங்கிரஸ் அரசின் கடமை'' என்ற தீர்மானத்தை காங்கிரஸ் காரியக் கமிட்டியில் வைத்தே நிறைவேற்றினார் காமராஜர். காங்கிரஸ் கட்சி சொல்வதைத்தான், காங்கிரஸ் ஆட்சி செய்ய வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியது இந்தத் தீர்மானம். அதாவது பிரதமர் பதவி அதிகாரம் பொருந்தியது அல்ல. காங்கிரஸ் கட்சித் தலைவரே அதிகாரம் பொருந்தியவர் என்பதைச் சொல்லாமல் சொல்லியது இந்தத் தீர்மானம்.
பிரதமர் ஆவது முக்கியமல்ல; காங்கிரஸ் தலைவராக இருப்பதே அதைவிட முக்கியம் என்பதை உணர்ந்து இந்திரா உழன்றார். அந்த காங்கிரஸ் தலைவர் பதவி எட்டு ஆண்டுகளுக்கு முன் தனக்கு கிடைத்தபோது, ஓராண்டு காலத்தில் அலட்சியமாக ராஜினாமா செய்துவிட்டுப் போனோமே என்று வருந்தினார். மூன்று விதமான சிந்தனைகள் அவரை அலைபாயவைத்தன.
இப்போது தலைவராக இருக்கும் காமராஜரை அந்த இடத்தில் இருந்து நகர்த்த வேண்டும். காங்கிரஸ் தலைவராக தான் அந்த இடத்தில் அமர வேண்டும். தான் வர முடியாவிட்டால், தனக்கு வசதியான தன் பேச்சைக் கேட்கக் கூடிய ஒருவரை கொண்டுவந்துவிட வேண்டும். - இந்த மூன்றும் அவரை தூங்கிவிடாமல் தவிக்கவைத்தன.
காமராஜர் மூன்றாவது முறையும் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால் அவரை எப்படி எதிர்கொள்வது என்று நினைத்தார் இந்திரா. ஆனால், அவருக்கு கஷ்டம் கொடுக்கவில்லை காமராஜர். இரண்டு முறை தலைவர் பதவியில் இருந்த காமராஜருக்கு மூன்றாவது முறையும் இதனை அடைய விருப்பம் இல்லை. முதல்முறை இருந்த மகிழ்ச்சி இரண்டாவது தடவை இருந்தபோது இல்லை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்தார். ஆனால், அவரே தலைவராக இருக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள். காமராஜர் என்ன நினைக்கிறார் என்பதை அறிய அவரைச் சந்தித்தார் இந்திரா. அவரிடமும் தனது நிலைப்பாடு இதுதான் என்பதை தெளிவுபடுத்தினார். இந்திராவுக்கு முதல் தடை உடைந்தது.
அடுத்து தன்னை கொண்டுவர காமராஜ் முயற்சிப்பாரா என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எந்தப் பேச்சையும் காமராஜர் எழுப்பாதது அவருக்கு ஏமாற்றமே. காமராஜர் போட்டியிடவில்லை என்றதும் தலைமைப் பதவிக்கு எஸ்.கே.பாட்டீல், அதுல்யா கோஷ் போன்றவர்கள் முயற்சித்தார்கள். 'யாரைத் தேர்ந்தெடுத்தாலும் போட்டியின்றித் தேர்ந்தெடுப்பதே கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது’ என்று காமராஜ் சொன்னார்.
எஸ்.கே.பாட்டீல், மோகன் தாரியா, அனுமந்தயா ஆகிய மூவரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். போட்டி என்று வந்துவிட்டது. அதுல்யா கோஷ், மனு தாக்கல் செய்யவில்லை. காமராஜரைச் சந்தித்த இந்திரா, சில பெயர்களை பரிந்துரை செய்தார். சுகாதியா, நந்தா, சஞ்சீவையா ஆகியோர் தலைவராக வந்தால் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று இந்திரா கோரிக்கை வைத்தார். ஆனால் காமராஜரின் பார்வையும், பாதையும் வேறு மாதிரி இருந்தது. தலைவர் பதவிக்கு மனுச் செய்திருந்தவர்களையும் ஒதுக்கினார். இந்திரா கொடுத்த பட்டியலையும் நிராகரித்தார். மைசூருக்கு தகவல் அனுப்பினார். மறுநாள் அந்த மனிதர் டெல்லிக்கு வந்தார். நள்ளிரவு நேரம்... 'நீங்கள்தான் அகில இந்திய காங்கிரஸின் அடுத்த தலைவர். நாளை காலை என்னை வந்து சந்தியுங்கள்’ என்று சொல்லி அவரை அனுப்பினார். மறுநாள் காலை வந்த அவரை அழைத்துச் சென்ற காமராஜ், இந்திரா முன் உட்கார வைத்தார். அவர்தான் நிஜலிங்கப்பா.
தன்னால் பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவரைக்கூடத் தலைவராக்க காமராஜ் விரும்பவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், டெல்லி செல்வாக்கு இல்லாத நிஜலிங்கப்பாவை பின்னர் நம்மால் சமாளிக்க முடியும் என்று இந்திரா திருப்திப்பட்டுக்கொண்டார். தான் தலைவராக வேண்டும் என்று நினைத்தார். நடக்கவில்லை. தான் விரும்பியவரை தலைவராக்க வேண்டும் என்று நினைத்தார். அதுவும் செயல்படவில்லை. காமராஜர் மீண்டும் தலைவராகக் கூடாது என்று விரும்பினார். அது மட்டும் நடந்தது. பரவாயில்லை, சமாளிப்போம் என்று சமாதானம் அடைந்தார். ஆனால் நிஜலிங்கப்பாவின் நிஜமுகம் சில மாதங்களிலேயே இந்திராவுக்குத் தெரிய ஆரம்பித்து. அவர் முகம் இருளத் தொடங்கியது.
தன்னிடம் இருக்கும் பிரதமர் பதவியையே நிஜலிங்கப்பா பறிந்துவிடுவாரோ என்ற பீதி வந்துவிட்டது இந்திராவுக்கு. காமராஜருக்காவது, இது நேருவின் மகள் என்ற பாசம் இருந்திருக்கும். ஆனால் நிஜலிங்கப்பா, நேருக்கு நேராக முஷ்டியை உயர்த்தினார். தலைமைக்குக் கட்டுப்பட்டதுதான் கட்சி என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் நிரூபிக்க முயற்சித்தார். அதனை தயவு தாட்சண்யம் இல்லாமல் வெளிப்படுத்தவும் தொடங்கினார்.
பெரிய தலைவர்கள் கூடிக்கூடி உட்கார்ந்துகொண்டு தனக்கு அறிவுரை சொல்வதை அவஸ்தையாக நினைத்தார் இந்திரா. இந்தப் பெருந்தலைவர்கள் 'சிண்டிகேட்’ என அழைக்கப்பட்டார்கள். இந்திரா ஆதரவாளர்கள் இதனை கேலிச் சொல்லாகவும் பயன்படுத்தினார்கள்.
''1962-ல் சீனப் படையெடுப்பு நிகழ்ந்த பின், அதனால் மிகவும் மனம் நொந்துபோன நேருஜி, தேசத்தின் எதிர்காலம் பற்றி மிகவும் அதிகமாகக் கவலைப்படத் தொடங்கினார். அந்த நாட்களில் நேருஜி, என்னையும் சஞ்சீவி ரெட்டி போன்ற நண்பர்கள் சிலரையும் அடிக்கடி அழைத்து பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிப்பார். இப்படி அவருடன் ஆலோசனை நடத்துவதற்காக நாங்கள் அடிக்கடி சென்று வந்தபோது, இந்த ஆலோசனைக் குழுவை பத்திரிகையாளர்கள் 'சிண்டிகேட்’ என்று பெயரிட்டு அழைத்தார்கள். இந்த சிண்டிகேட்தான் நேருவின் மறைவுக்குப் பிறகு லால்பகதூரைப் பிரதமராக்க முடிவு செய்தது. இதே சிண்டிகேட்தான் அவர் மறைவுக்குப் பிறகு இந்திராவையும் பிரதமர் ஆக்கியது'' என்று 'சிண்டிகேட்’க்கு விளக்கம் சொன்னார் காமராஜர்.நேருஜியின் 'சிண்டிகேட்’ இந்திராவை சினம்கொள்ள வைத்தது. அதற்கு நிஜலிங்கப்பாவே நிஜக் காரணமாய் ஆனார்.