Thursday, January 16, 2014

தகவல் அறியும் உரிமை சட்டம்- சவாலும் எதிர்பார்ப்பும்



திரிவேணி ஒரு ஏழைப்பெண். கிழக்கு டெல்லி குடிசைப்பகுதி ஒன்றில் வசிப்பவர். பரம ஏழைகளுக்கான அந்த்யோதயா அட்டை அவரிடம் உள்ளது. இதை எடுத்துக் கொண்டு எப்போது சென்றாலும் நியாய விலைக்கடையில் இவருக்கு உணவு தானியம் கிடைப்பதே இல்லை. கடை மூடப்பட்டிருக்கும் அல்லது கடைக்காரர் ""ஸ்டாக் தீர்ந்துவிட்டது'' என்பார். ஆறு மாதங்களாக இதே நிலை.

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி இவர் மனு சமர்ப்பித்தார். தனது நியாய விலைக்கடையில் எவ்வளவு தானியம் தனது பெயருக்கு வழங்கப்பட்டது என்ற விபரமும் இதற்கான ரொக்க ரசீதுகள், நகல்களும் தேவை என்று அவர் கோரியிருந்தார். ஒரு மாதத்திற்குப் பின் அவருக்கு பதில் வந்தது. கடந்த 3 மாதங்களில் மாதத்திற்கு கிலோ 2 ரூபாய் வீதம் 25 கிலோ அரிசியும் கிலோ 3 ரூபாய் வீதம் 10 கிலோ கோதுமையும் வழங்கப் பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரொக்க ரசீது களில் இவரது பெருவிரல் ரேகை பதியப்பட்டிருந்தது. ஆனால், திரிவேணி 10-வது வகுப்பு படித்தவர். கையெழுத்துதான் போடுவார்; கைநாட்டு போட மாட்டார். எனவே ரசீதில் இருந்தது இவரது கட்டைவிரல் கைரேகை அல்ல, போலிக் கைரேகை. கடைக்காரர் இவர் பெயரில் பல மாதங்களாக உணவு தானியங்களை அதிக விலைக்கு யாருக்கோ விற்று வந்திருக்கிறார் என்பது தெளிவானது. திரிவேணிக்கு அதிர்ச்சி. அவரிடம் கடைக்காரருக்கு எதிரான அத்தாட்சிகள் உள்ளன. அவர் நடவடிக்கை  எடுக்குமுன் கடைக்காரர் அவரிடம் வந்து தன்னை மன்னிக்கும்படியும் இனிமேல் தவறான நடவடிக்கையில் ஈடுபடமாட்டேன் என்றும் கெஞ்சினார். அதன் பிறகு திரிவேணிக்கு சரியான விலையில் சரியான அளவுகளில் நியாய விலைக்கடையில் தானியம் கிடைக்கிறது.

இதேபோல நன்னு என்பவர் தினக்கூலி. கிழக்கு டெல்லியின் மற்றொரு குடிசைப் பகுதியில் வெல்கம் மஸ்டூர் குடியிருப்பில் வசிக்கிறார். ஜனவரி மாதம் தனது குடும்ப அட்டை தொலைந்துபோனதால் புதிய அட்டை கோரி மனு செய்தார். பின்னர் 3 மாத காலம் உள்ளூர் உணவு அலுவலகம் உணவு பொருள் வழங்குத் துறை என அலைந்தார். ஆனால் எழுத்தர்களும் அதிகாரிகளும் இவரை ஏரெடுத்துக்கூட பார்க்க வில்லை; பின்னர் இவருக்கு புதிய அட்டை வழங்குவதெப்படி? இவரது மனுவின் நிலை என்ன? பதில் இல்லை. கடைசியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி அவர் மனுச் செய்தார். தனது குடும்ப  அட்டை மனு மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ன? இம்மனுவைப் பரிசீலனை செய்ய வேண்டிய அதிகாரிகள் எழுத்தர்கள் யார் யார்? இவர்கள் மீது காலதாமதத்திற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பவையே இவர் கேட்ட தகவல்கள். தகவல் அறியும் உரிமை சட்டப்படி மனுக்கொடுத்த ஒருவாரத்தில் உணவுத்துறை அலுலவர் ஒருவர் நன்னுவைத் தேடி வந்தார். அவருக்கு குடும்ப அட்டை தயாராக இருக்கிறது என்றும், அதனை அவர் அலுவலகத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார். அடுத்த நாள் நன்னு அலுவலகத்திற்கு சென்றபோது அவருக்கு அன்பான வரவேற்பு. தேநீர் கொடுத்து உபசாரம். கூடவே ஒரு வேண்டுகோள். குடும்ப அட்டைதான் கிடைத்துவிட்டதே மனுவை விலக்கிக் கொள்ளுங்கள் என்பதுதான் அது. வரவேற்று உபசரித்து வேண்டுகோள் விடுத்தது வட்டார உணவுப் பொருள் வழங்கல் அலுவலரேதான்.

இந்த இரு நிகழ்வுகளும் விதி விலக்குகள் அல்ல. டெல்லி அரசு தகவல் அறியும் உரிமைச்சட்டம் அமல்படுத்திய பிறகு நகரின் அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் பரவலாக நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன. அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையேயான உறவுகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. சாதாரணமாக திரிவேணி மற்றும் நன்னு போன்ற ஏழை மக்களுக்கு என்னதான் வழியிருந்தது? அரசு அதிகாரிகளிடம் புகார் கூறலாம். ஆனால் திரிவேணி சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள்; நன்னு சொல்வதையும்தான்.

அரசு நிர்வாகத்திற்குள் அரசு அதிகாரிகளைப் பொறுப்பாக்கும் எந்த அமைப்பு முறையும் இல்லை. தங்களுக்கு ஏதும் ஆகாது என்பது அதிகாரிகளுக்குத் தெரியும். அவரது திறமையின்மையும் ஊழலும் கண்டுபிடிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மிகமிக அரிது. எனவே அவர்கள் தங்கள் போக்கில் தொடருகிறார்கள். ஊழல்  என்பது ஊழல் அதிகாரிகளைப் பொறுத்தவரை ஒரு வியாபாரம் என்கிறார் முன்னாள் மத்திய தலைமை கண்காணிப்பு ஊழல் தடுப்பு அலுவலர் என். விட்டல். இந்த ஊழல் வியாபாரத்தில் ஆபத்து அபாயம் ஏதுமில்லை. இதில் மாற்றம் தேவை எனில் அரசு ஊழியர்களின் பொறுப்பேற்கும் தன்மை சித்தரிக்கப்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்த நடவடிக்கையை எடுக்க வகைசெய்கிறது. இதுவரை கோப்புகளிலும் ஆவணங்களிலும் பதிவேடுகளிலும் ஒளிந்திருந்த ஊழல், திறமையின்மை ஆகியவற்றிற்கெதிரான அத்தாட்சிகள் இதனால் வெளிவர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை காரணமாக திரிவேணி போன்ற எளிய பிரிவு மக்களுக்கு நியாய விலைக்கடைக்காரர் போன்றோருக்கு எதிரான அத்தாட்சிகள் கிடைத்து விடுவதால்  அவர்களுக்கும் கடைக்காரர் போன்ற அதிகாரி களுக்குமிடையே நிலவிய உறவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திரிவேணி விரும்பியிருந்தால் கடைக்காரர் உரிமத்தை ரத்து செய்து விடமுடியும். இதேபோல நன்னு தனது புகார் பற்றிய நிலவரத்தை அறிய இச்சட்டத்தைப் பயன்படுத்தும்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தங்கள் திறமையின்மையை எழுத்துபூர்வமாக ஏற்கின்றனர். தமது புகார் மீது பல்வேறு நிலைகளில் பொறுப்பேற்கும் அதிகாரிகள் பெயரை நன்னு கேட்டபோது அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தவறிழைத்த அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகள் வெகுவாக உயர்ந்து விட்டன. இது இதுவரை இல்லாத வாய்ப்புதானே.


ஏழைகளுக்கான ரேஷன் பொருட்களை வெளியே விற்று லாபம் சம்பாதிக்கும் நியாய விலைக் கடைக்காரர் களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க டெல்லி அரசு நீண்டகாலமாக மறுத்து வந்துள்ளது. டெல்லியில் பெரும் பகுதிகளில் பொது வினியோக முறையானது கோப்புகளில் மட்டுமே காணப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக சிலபகுதிகளில் மக்கள் ரேஷன் கடையில் தானியம் ஏதும் பெறவேயில்லை. இந்த கடைக்காரர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி வெளிக்கொணர்ந்து இந்த மக்களிடம் காட்டியபோது அவர்கள் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போயினர். நியாய விலைக்கடைக்காரர் குடும்ப அட்டை வைத்திருப்போர் கையெழுத்துக்களை அவர்களே போட்டு பொருட்களை விற்று விடுகின்றனர். டெல்லியில் அனைத்து ரேஷன் கடைக்காரர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் கையெழுத்துக்களையும் போட்டு ஏமாற்றி வருகின்றனர். இவ்வளவு தடயங்கள் இருக்கின்றன. அரசு இவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து முன்னுதாரணமாக திகழ இவை எல்லாம் வாய்ப்புகள். ஆனால் உணவுத்துறை அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் தானோ என்னவோ நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இக்கடை களில் சரக்கு இருப்பு கணக்குகளுடன் பொருந்துவதில்லை. இந்தக் கடைகளில் ஆய்வு என்பது நடைபெறுவதேயில்லை.

மக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி ஆவணங்களைப் பெற்று அரசிடம் அசைக்க முடியாத அத்தாட்சியுடன் புகார் செய்தாலும் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அரசு மறுக்கிறது.

இங்கு பிரச்சினை ரேஷன் பொருட்கள் தொடர்புடையது மட்டுமே அல்ல. அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு பகுதி யிலும் இதேநிலை உள்ளது. சமுதாயத்தின் அனைத்துக் தரப்பிலும் உள்ள சக்தி வாய்ந்தவர்கள் சட்ட விரோத செயல்கள் மூலம் தங்கள் சுயநலங்களை பாதுகாக்க ஒன்றாகச் சேர்ந்து செயல்படுகின்றனர். கருத்து வேறு பாடுகளும், சண்டைச் சூழ்நிலையும் இந்த இடங்களில் தயாராக உள்ளன. சுரண்டல்காரர்கள் ஒருபுறம், சுயநலமி களும், சக்திவாய்ந்த ரவுடி கும்பல்கள் மறுபுறம் இந்தக் கடைக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இவர்கள் சட்ட அமலாக்க அமைப்புகளின் ஆதரவுடன் தங்கள் சட்டவிரோத செயல்களை தொடருகின்றனர். சட்டம்-ஒழுங்கை அமல்படுத்த வேண்டிய இந்த அமைப்புகள் அராஜக செயல்களை கண்டு கொள்ளாமல் இவர்களுக்கு எதிராக ஆய்வுகளை மேற்கொள்பவர்களை தடுத்து இடையூறு செய்கின்றனர்.

மறுபக்கம் ஏழைகள், எழுத்தறிவற்றோர் மற்றும் ஆதரவற்றோர் இதனால் தொடர்ந்து தங்கள் உரிமைகளை இழந்து வருகின்றனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்த விரும்புவோர் தங்கள் நடவடிக்கைகளை சுயநலக்காரர் களுக்கும், அவர்களுக்கு துணை போவர்களும் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பார்கள் என எதிர் பார்க்கக் கூடாது. அவர்கள் திருப்பித்தாக்கத்தான் செய்வார்கள். காவல் துறையினரோ, அரசு முகமைகளோ இவர்களுக்குத் தேவையான உதவியை அளிக்காமல் போகலாம். வருங்காலங்களில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த விரும்பும் அமைப்புகள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்சினை இது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தகவல் பெறுவதில் உள்ள பிரச்சினைகள் கேட்டவுடனேயே தகவல் தரப்படும் என மக்கள் எதிர்பார்க்க முடியாது. அலுவலர்களில் பலத்த எதிர்ப்பு இருக்கும். ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி தகவல் தர மறுப்பார்கள். எனவே தேவைப்பட்டால் மக்கள் மேல் முறையீடு அமைப்புகளை அணுகத் தவறக்கூடாது. இல்லாத தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பொது மக்கள் குறைதீர்க்கும் ஆணையம் (டஏஈ) இத்தகைய அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீறிய அதிகாரி களுக்கு அபராதம் விதித்து அதனை மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யும் அதிகாரத்தை நிர்வாக ஆணை மூலம் டெல்லி அரசு பொதுமக்கள் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. பொதுமக்கள் குறை தீர்ப்பு ஆணையம் (டன்க்ஷப்ண்ஸ்ரீ ஏழ்ண்ங்ஸ்ஹய்ஸ்ரீங்ள் ஈர்ம்ம்ண்ள்ள்ண்ர்ய்)லி டஏஈலிக்கு சுமார் 1300-க்கு மேல் முறையீட்டு மனுக்கள் வந்துள்ளன. இவை அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்ட மீறல் சார்ந்தவைகளே. இவற்றில் 70% மேற்பட்டவை மக்களுக்கு சாதகமான தீர்ப்புகளில் பெற்றவை எனில் மக்களின் குற்றச்சாட்டு உண்மையானது என்று பொருள். ஆனால் இதுவரை ஒரு அதிகாரிக்குக்கூட தண்டனை விதிக்கப்படவில்லை. பொதுமக்கள் குறைதீர்க்கும் ஆணையத் தலைவர் எவருக்கும் எதிரான தண்டனை விதிக்க தயாராக இல்லை. இதனால் தகவல் தரா விட்டாலும் தங்களுக்கு ஒன்றும் நேராது என்று அதிகார வர்க்கம் எண்ணம் கொண்டுள்ளது.

பி.ஜி.சி. தலைமைப் பதவியில் வழக்கமாக முன்னாள் அரசு தலைமைச் செயலர்களே இருந்து வருகின்றனர். ஓய்வு பெற்றவுடன் தலைமைச் செயலர் இப்பதவிக்கு வருகிறார். இதனால் அவரது செயல்பாட்டில் குழப்பம் நேருகிறது. தான் அரசின் உயர்ந்த பதவியான தலைமைச் செயலர் பதவியில் இருந்தபோது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல் தர வேண்டிய நிலையில் அவர் உள்ளார்.

இதிலிருந்து அறியும் பாடம் என்ன? மத்திய மாநில அரசுகள் தகவல் ஆணையர்களை நியமிக்கும்போது உள் நோக்க குறுக்கீடுகள் ஏற்படாத நிலையில் உள்ள அதிகாரிகளையே அப்பதவியில் நியமிக்க வேண்டும்.

தகவல் கேட்பதற்கு பதிலாக தகவலை கேட்பு ஏதுமின்றி அளிப்பதுமுழுமையான வெளிப்படைத்தன்மை நோக்கி அரசு தானாகவே நடைபோட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மக்கள் தகவல் கேட்டுப் பெறுவதற்கு பதிலாக அரசு தானே முன்வந்து மக்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தகவல்களை கேட்பு ஏதுமின்றி வழங்க வேண்டும். தற்போதைய டெல்லி உணவுத்துறை ஆணையரின் நடவடிக்கை இதில் முன்னுதாரணம் எனலாம். நியாய விலைக்கடைகளின் ஆவணங்கள் அனைத்தையும் மக்கள் பார்வைக்கு அனுமதிக்க வேண்டுமென அவர் ஆணையிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமைபெறும் சட்டப்படி எந்த மனுவும் எவரும் அளிக்க வேண்டியதில்லை. மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை எவர் வேண்டுமானாலும் எந்த ஆவணத்தை வேண்டுமானாலும் பார்வையிடலாம்.

இத்தகைய நடவடிக்கைகள் அரசின் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது நியாயமான பொறுப்பு உள்ள அரசுக்கு தேவைதான். ஆனால் இது மட்டும் போதாது மேலும் பல விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். எனினும் தகவல் பெறும் உரிமை சட்டம் சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல் உறுதியான நடவடிக்கை என்பதில் ஐயமில்லை.

பாரத ரத்னா நெல்சன் மண்டேலா







னத்தின் விடுதலைக்காகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, சற்றும் தளராமல் தன் இலட்சியத்தில் வெற்றி பெற்ற போராளி, தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா. சென்ற நூற்றாண்டின் கடைசி அறவழிப் போராளியான அவரை இந்த நூற்றாண்டில் உலகம் இழந்துவிட்டது.

தென்னாப்பிரிக்கா நாட்டின் கேப் மாகாணத்தில் உம்டாடா பகுதியில் உள்ள மெவிசோ கிராமத்தில் 1918-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் பிறந்தார் நெல்சன் மண்டேலா. அவரது அப்பா, காட்லா. அம்மா, நோஸ்கெனி. பிறந்தபோது அவருக்கு வைக்கப்பட்ட பெயர், ரோபிசலா மண்டேலா. ரோபிசலா என்றால் கலகக்காரர் என்று அர்த்தம். பின்னாளில், அவர் உரிமைகளைப் பெறுவதற்கான கலகத்தில் ஈடுபட்டு உலகத்தின் கவனத்தையே தன் பக்கம் ஈர்த்தார்.

மண்டேலாவின் முன்னோர்கள் அப்பகுதி மக்களின் நிர்வாகத் தலைவராக இருந்தவர்கள். அதனால், ராஜ குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாக இருந்தனர் மண்டேலா குடும்பத்தினர். ராஜ வம்சத்தினர் கையில் நிலப்பகுதி இருந்தாலும் அவர்களையும் ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்காவையும் வெள்ளைக்காரர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தனர்.


இந்தியாவிலிருந்து வழக்கறிஞராக தென்னாப்பிரிக் காவுக்குச் சென்ற காந்தியடிகள், அங்கு ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தபோது, அவர் கருப்பு நிறத்தவர் என்பதால் வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர் ஒருவர் காந்தியடிகளை ரயிலிலிருந்து கீழே தள்ளியதையும் இதனையடுத்து நிறவெறிக்கெதிராக காந்தியடிகள் தன்னுடைய சத்யாகிரகப் போராட்டத்தை தென்னாப்பிரிக்காவில் தொடங்கியதையும் அறிவோம். அவருடைய போராட்டத்தினால் தென்னாப்பிரிக்காவில் தொழிலாளர்களாக இருந்த ஆயிரக்கணக்கான இந்திய குடும்பத்தினருக்கு உரிமைகள் கிடைத்தன.

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் அனுபவித்த கொடுமைகளைவிட அதிகமான கொடுமைகளை அந்நாட்டின் பூர்வகுடிகளான கறுப்பின மக்கள் அனுபவித்து வந்தனர்.  அவர்களை அடிமைகள்போல வெள்ளைக்காரர்கள் நடத்தி வந்தனர். மண்டேலாதான் அவரது குடும்பத்தில் முதன்முதலாக பள்ளிக்குச் சென்று படித்தவர். பள்ளியில் இருந்த ஆசிரியைதான் அவரது பெயருக்கு முன்பாக நெல்சன் என்பதைச் சேர்த்தார்.  அந்நாளில், தென்னாப்பிரிக்க மாணவர்களின் பள்ளிப் பதிவேட்டில் ஆங்கிலப் பெயர் இருக்கவேண்டும் என்கிற ஆதிக்க உத்தரவை வெள்ளைக்காரர்கள் விதித் திருந்தனர். அதனால்தான் மண்டேலாவின் பெயருக்கு முன்பாக நெல்சன் என்ற பெயர் சேர்க்கப்பட்டது. தங்கள் சொந்த அடையாளத்தைப் பெயரில்கூட காப்பாற்ற முடியாதவர்களாக தன் இன மக்கள் இருப்பதை பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்தார் மண்டேலா.  இரு சகோதரி களுடன் வளர்ந்த மண்டேலா, கிராமப்புறத்தில் கால்நடை களை மேய்ப்பார். சக வயது நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பார். தெம்பு அரண்மனையில் சட்ட-நிர்வாகப் பொறுப்புகளில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் அவருக் கிருந்ததால், பள்ளிப்படிப்புக்குப் பிறகு தன் ஆர்வத்திற்கேற்ற உயர்படிப்புகளை நாடினார்.

பி.ஏ. பட்டம் பெற்றதுடன், தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரமான ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பும் பயின்றார். கல்லூரி வாழ்க்கையின் போது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் வால்டர் சிசுலுவுடன் மண்டேலாவுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அதுபோல, கம்யூனிச இயக்கத்தவர்களுடனும் தொடர்பு ஏற்பட்டது. கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்கள், விளாடிமிர் இல்யீச் லெனினின் புரட்சிகர செயல்பாடுகள் அவரைக் கவர்ந்தன. எனினும் தென்னாப்பிரிக்காவில் வர்க்க பேதத்தைவிட நிற-இன பேதமே சிக்கல்களுக்கு காரணமாக இருப்பதாக உணர்ந்த மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவில் இணைந்து உரிமைப் போராட்டங்களில் பங்கேற்றார். கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. பொது இடங்களில் வெள்ளை நிறத்தவர் மட்டுமே நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் எதிர்த்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் போராடிவந்தது.


இயக்கப்போராட்டத்தில் இணைந்திருந்த எவிலின் என்ற பெண்ணை 1944-இல் மண்டேலா திருமணம் செய்து கொண்டார். போராட்டக்களங்களில் தொடர்ந்து பங்கேற்றார். 1947-இல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவின் தலைவரானார். பின்னர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவராகவும் இளம் வயதிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார் மண்டேலா. அவருடைய போராட்டங்கள் காந்தியடிகளைப் போல அறவழியில் அமைந்தன. பெருமளவில் மக்கள் திரண்டனர். இதனால் அவர் மீது தேசத்துரோக சதி குற்றச்சாட்டை சுமத்தி 1956-இல் கைது செய்தது தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு. நான்காண்டு சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு  அந்த வழக்கை அரசு கைவிட்டது. இதனிடையே, அவருடைய திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டது. பின்னர், வின்னி என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.

1960-ஆம் ஆண்டில் வெள்ளையர்களுக்கு சிறப்பு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்க தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு முடிவு செய்ததை எதிர்த்த கறுப்பின மக்கள் போராட்டம் நடத்தினர். ஷார்ப்வில்லி நகரத்தில் மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 69 பேர் கொல்லப்பட்டனர். இனி, அறவழிப் போராட்டம் பலன் தராது என்ற முடிவுக்கு வந்த மண்டேலா ஆயுதப் போராட்டத்திற்குத் திரும்பினார்.  1961-இல் இனவெறிக்கு எதிரான முதலாவது ஆயுத தாக்குதல் மண்டேலா தலைமையில் நடந்தது. தென்னாப்பிரிக்க வெள்ளை அரசின் ராணுவ மையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. மண்டேலாவைப் பிடிக்க வெள்ளை அரசு தீவிரமானது. அவர் தலைமறைவானார். அவரைத் தேடுவது என்ற பெயரில் கறுப்பின மக்களைத் துன்புறுத்தியது அமெரிக்கா போன்ற வெளிநாடுகள் மூலமாகவும் நெருக்கடிகள் உருவாயின. மண்டேலா தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். 1962-ஆம் ஆண்டு அவரது இருப்பிடத்தை, மாறுவேடத்தில் சென்ற காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் உள்பட 10 முக்கிய தலைவர்கள் மீது புரட்சி, சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 1963-இல் தொடங்கி 1964 வரை நடந்த இந்த விசாரணையின் முடிவில் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ராபன் தீவில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு, பாறைகளை உடைத்தல் போன்ற கடுமையான வேலை களுக்குட்படுத்தப்பட்டார். போராட்டத்தைக் கைவிட்டு, மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்வதாக அரசாங்கம் கூறியது. அதற்கு மண்டேலா மறுத்துவிட்டு சிறைவாசத்தைத் தொடர்ந்தார். 1964-லிருந்து 1982 வரை 18 ஆண்டுகள் அவர் அந்த சிறையில் அடைபட்டிருந்தார். 1982 முதல் போல்ஸ்மோர் சிறையிலும், 1988-லிருந்து விக்டர் வெர்ஸ்டர் சிறையிலும் அடைக்கப் பட்டார். அவர் சிறைப்பட்டிருந்தபோதும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தன. காந்திய வழியே தனது மக்களுக்கான  சிறந்த போராட்ட வழி என்பதை மண்டேலா உணர்ந்தார். அதன்படியே போராட்டங்கள் தொடர்ந்தன.

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என உலகநாடுகள் அழுத்தமாகக் குரல் கொடுத்தன. தென்னாப்பிரிக்க வெள்ளை அரசுக்கு நெருக்கடி உருவானது. தென்னாப்பிரிக்க அதிபராக அப்போது          டி கிளார்க் இருந்தார். அவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கினார். இதனைத் தொடர்ந்து 27 ஆண்டுகால சிறைவாசத்துக்குப்பிறகு 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். விடுதலைப்போராட்டத்தில் இத்தனை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தலைவர் உலகில் வேறு யாருமில்லை.

1994-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக் காவில் மக்களாட்சி முறையிலான தேர்தல் நடைபெற்றது. அதில் மண்டேலா வெற்றிபெற்று அதிபரானார். முன்னாள் அதிபர் டி கிளார்க்கை துணை அதிபராக பதவியேற்கச் செய்ததுடன், அவரை அதிபர் மாளிகையில் தங்கவும் அனுமதித்தார் மண்டேலா. பகைவருக்கும் அருளும் நெஞ்சம் கொண்ட மண்டேலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசு அவருக்கும் டி கிளார்க்குக்கும் சேர்த்து வழங்கப்பட்டது. இந்திய பிரதமராக வி.பி.சிங் இருந்தபோது நம் நாட்டிற்கு வருகை தந்த நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா விருதும் அளிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்க அதிபரான மண்டேலா அந்நாட்டை வளர்ச்சிப்பாதையை நோக்கி நகர்த்துவதற்கு கடும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அப் பணிகளை மேற்கொண்டார். 1999-இல் மீண்டும் தேர்தல் வந்தபோது, இரண்டாம் முறையாக அதிபராக மாட்டேன் என்று சொல்லி கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களுக்கு வழிவிட்டார். இதனிடையே வின்னியுடனான அவருடைய திருமண வாழ்க்கையும் முறிவு ஏற்பட்டு, கிரேசா என்பவரை மணம் செய்துகொண்டார் மண்டேலா.

தென்னாப்பிரிக்க மக்களின் உரிமைகளுக்கான அவருடைய செயல்பாடுகள் தொடர்ந்தன. எனினும் மிக நீண்டகால சிறைவாசம், அங்கு அனுபவித்த சித்ரவதைகள், அதனால் ஏற்பட்ட உடல் உபாதைகள் இவற்றின் காரணமாக மண்டேலாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவர் 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் நாள் மரணமடைந்தார்.
மனிதகுலத்தின் விடுதலைக்கானப் போராட்டங்கள் ஓய்வதில்லை. விடுதலைக்காகப் பாடுபட்டவர்களும் வரலாற்றிலிருந்து அழிவதில்லை.
Source:Pothu arivu ulagam

வரலாற்றுப் பக்கங்களிலிருந்து...




""நான்தான் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர். நான் இளங்கலைப் பட்டதாரி. ஜோகன்னஸ்பர்கில் வழக்குரைஞராக ஆலிவர் டாம்போவுடன் இணைந்து சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியே சென்றதற்காக குற்றம் சுமத்தப் பட்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறேன். மேலும் தன் மீது மே 1961-ஆம் ஆண்டு பொது வேலைநிறுத்ததிற்கு அழைத்ததற்காகவும் தண்டிக்கப்பட்டுள்ளேன்.

நான் ஒன்றை முதலிலேயே கூறிவிட விரும்புகிறேன்.தென் ஆப்பிரிக்க அரசு இங்கு நடக்கும் போராட்டங்களை அயல்நாட்டுச் சக்திகள் மற்றும் கம்யூனிஸ்ட்களின் தூண்டுதல் என்று கூறுவதை மறுக்கிறேன். அது தவறு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒரு தனி  மனிதனாகவும், எனது மக்களின் தலைவனாகவும் நான் என்ன செய்ததாகக் கூறப்பட்டேனோ அதை நான் செய்தேன். இவற்றை நான் ஏன் செய்தேன் என்பது எனது தாய்நாட்டில் நான் பெற்ற அனுபவம் காரணமாகவே தவிர ஏதோ அயல்நாட்டு செல்வாக்கினால், புறத் தூண்டுதல் களினால் அல்ல.

ட்ரான்ஸ்கீயில் நான் என் இளம்பிராயத்தைக் கழித்த போது எனது இனத்தின் மூத்தவர்கள், சான்றோர்கள் எனக்கு பழைய நாட்களைப் பற்றிய கதைகளைக் கூறியுள்ளார்கள். அதில் தங்களது சொந்த நாட்டைக் காப்பாற்ற எங்கள் மூதாதையர்கள் போராடியது பற்றிய கதைகளே அதிகம். டிங்கானே மற்றும் பாம்பட்டா, ஹின்ட்சா மற்றும் மாகானா, ஸ்குன்க்டி மற்றும் டலாசிலி, மொஷூஷூ மற்றும் செகுகுனி ஆகியோர்கள் இந்த ஒட்டுமொத்த ஆப்பிரிக்க நாட்டிலும் அவர்களது செயல்களுக்காகக் கொண்டாடப்படுபவர்கள். அப்போது நான் யோசித்தேன், வாழ்க்கை எனக்கு இந்த தேசத்திற் காகவும் விடுதலைக்காகவும் வாய்ப்பை வழங்குமா என்று. இந்த வழக்கைப் பொறுத்தவரை என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதைச் செய்ததற்கு நான் மேற்கூறிய சம்பவங்கள், கதைகள் தூண்டுகோலாக அமைந்தது.

இவற்றையெல்லாம் நான் கூறும்போது, வன்முறை என்ற விஷயம் பற்றி சற்று நீளமாகவே கூற விரும்புகிறேன். இந்த நீதிமன்றத்தில் கூறப்பட்ட சில விஷயங்கள் உண்மை. சில விஷயங்கள் பொய். ஆனால் நான் சதிக்குத் திட்டமிட்டேன் என்பதை மறுக்கப் போவதில்லை. ஆனால் நான் அதனை ஒரு அலட்சியப் போக்கினாலோ அல்லது வன்முறையை நான் நம்புகிறேன் என்பதாலோ மேற்கொள்ளவில்லை. ஆண்டாண்டு காலமாக வெள்ளை நிறவெறி எங்கள் மக்கள் மீது செலுத்தும் வன்முறை, துரோகம், சுரண்டல், அடக்குமுறை ஆகியவற்றை அமைதியான முறையில் யோசித்து  நிதானமாக திட்ட மிட்ட செயலாகும். சக மனிதனை பிறப்பின் அடிப்படையில் இழிவுபடுத்தும் நாட்டில் எப்படி போராடாமல் இருக்க முடியும். போராட்டத்தை நாங்கள் விரும்பவில்லை மனிதனை மதிக்காத மனித உரிமை மீறல் தான் எங்களை போராட தூண்டுகின்றது. இதற்காக துவங்கப் பட்ட அமைப்பு உருவாக நான் ஒரு அங்கமாக இருந்தேன். இதற்காக ஆகஸ்ட் 1962-இல் நான் கைது செய்யப்பட்டேன்.

முதலில் இந்த அரசின் கொள்கையினால், ஆப்பிரிக்க மக்கள் வன்முறையின் பாதையை தேர்வு செய்வது என்பது தடுக்க முடியாததும் தவிர்க்க முடியாததும் ஆகி விடும். இதனால் ஏற்படும் வன்முறை பயங்கரவாதமாக மாறி இந்த நாட்டில் வாழும் பல இன மக்களுக்குள் கடும் காழ்ப்பும், மோதல் போக்கும், பகைமையும் உருவாகும். ஒரு போர்கூட இத்தகைய பயங்கரத்தை நிகழ்த்தமுடியாத நிலை உருவாகியிருந்ததை உம்காண்ட்டோ இயக்கம் பரிசீலனை செய்தது.
மேலும் வெள்ளை நிறவெறி மேட்டிமைக்கு எதிராக ஆப்பிரிக்க மக்களுக்கு வன்முறையைத் தவிர வேறு பாதைகளும் இல்லை என்பதையும் நாங்கள் ஆலோசித்தோம். வெள்ளை நிறவெறிக்கு எதிராக சட்ட பூர்வமாக கேள்விகள் எழுப்பும் போராடும் வடிவங்களை சட்டபூர்வமாகவே அரசு நசுக்கியது. இந்த நிலையில் ஒன்று நாங்கள் தொடர்ந்து கீழான இனம் என்ற  அடையாளத்தை ஏற்று அடங்கவேண்டும் அல்லது அரசை எதிர்த்து போராட வேண்டும்.

நாங்கள் இதனால் முதலில் சட்டத்தை உடைக்க முடிவு செய்தோம். அதாவது வன்முறைக்கு வித்திடாத வகையில் சட்டத்தை உடைக்க திட்டமிட்டோம். இந்தக் கொள்கையை அரசு கண்மூடித்தனமாக வன்முறையினால் ஒடுக்கிய போது நாங்கள் வன்முறைக்குப் பதில் வன்முறையே என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டோம். ஆனால் இந்த வன்முறை பயங்கரவாதம் அல்ல.

உம்கான்ட்டோ இயக்கத்தை ஆரம்பித்த நாங்கள் அனைவரும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் உறுப்பினர் களே. இதன் பின்னணியில் அகிம்சை என்ற பெரிய மரபு உள்ளது. பிரச்சனைகளை பேசித் தீர்ப்பது எங்கள் கொள்கை. தென் ஆப்பிரிக்கா இங்கு வாழும் அனைவருக்கும் உரித்தானது, ஒரு பிரிவினருக்கு மட்டும் சொந்தமானதல்ல. அந்தப் பிரிவு வெள்ளை இனமாக இருந்தாலும் சரி கறுப்பினமாக இருந்தாலும் சரி. இனப்போரை நாங்கள் விரும்பவில்லை கடைசி வரை எங்கள் கொள்கையும் மார்க்கமும் இதுதான். இதன் மீது அரசிற்கு சந்தேகம் இருந்தால் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் வரலாறு இதனை நிரூபிக்கும்.

1912-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க உரிமைகளை பாதுகாக்கத் தொடங்கப்பட்டதே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ். ஆப்பிரிக்க மக்கள் உரிமைகள் தென் ஆப்பிரிக்க சட்டம் மூலம் பெரிதும் குறைக்கப்பட்ட காலம் அது. 37 ஆண்டுகள் அரசியல் சட்டப் போராட்டத்தை அது தாங்கிப்பிடித்தது. பேச்சுவார்த்தைகள் மூலம் ஆப்பிரிக்க மக்கள் நலனை காக்க அனைத்தையும் நாங்கள் செய்தோம். ஆனால் வெள்ளை அரசு துரோக மிழைத்துவிட்டது.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸை நிறுவிய எங்கள் தலைவர் லுடுலியின் வார்த்தைகளை நான் இங்கு நினைவு கூறுகிறேன்.

"30 ஆண்டுகளாக பொறுமையாக, மிதவாத உணர்வுடன் நாங்கள் அதிகாரத்தின் கதவுகளை தட்டியதை யார் கேட்காமல் இருக்க முடியும். யார் மறுக்க முடியும்? அகிம்சை போராட்டத்தின் பலன்கள் என்ன? கடந்த 30 ஆண்டுகளாக பல சட்டங்கள் எமது மக்களின் உரிமைகளை காவு வாங்கியுள்ளது. இப்போது உரிமைகள் என்பதேயில்லை என்ற நிலையைத்தான் எட்டியிருக்கிறோம். எங்கள் கோரிக்கைகள் போராட்டங்கள் விரயமாகிவிட்டன.'

1949-க்குப் பிறகு கூட ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வன்முறையைத் தவிர்க்க பெரிதும் முயன்றது. ஆனால் இந்தத் தருணத்தில்தான் சட்டத்திற்குட்பட்ட போராட்டங்கள் பற்றிய மாற்றங்கள் எங்களிடம் தோன்றியது. சில சட்டங்களுக்கு எதிராக அமைதியாக ஆனால் சட்டவிரோதமாக போராடத் துணிந்தோம். ஒத்துழையாமை இயக்கம் போன்ற ஒன்றைத் தொடங்கி னோம். 8,500 பேர் நிறவெறிக்கொள்கைகளை மீறினர், ஜெயிலுக்கு சென்றனர். ஆனால் இதில் வன்முறை என்ற ஒரு துளியைக் கூட காட்ட முடியாது.

நானும் 19 பேரும் இந்தப் போராட்டத்தை நடத்தியதற் காகக் கைது செய்யப்பட்டோம். ஆனால் நீதிபதி எங்கள் நடவடிக்கைகளில் வன்முறையை காணமுடியவில்லை. அகிம்சை போராட்டமே என்பதை தீர்ப்பின் மூலம் வெளியிட்டார். அப்போதுதான் செயல்வீரர்கள் குழுவை அமைத்தோம். ஆனால் கொள்கைகள் அதேதான், செயல்வீரர்கள் ஏதோ வெள்ளை இனத்திற்கு எதிராக அணி திரளும் கறுப்பர் ராணுவப்படை அல்ல. வெள்ளையர் களோடு சிவில் யுத்தம் நடத்துவது அவர்கள் குறிக்கோள் அல்ல. அவர்கள் இயக்கத்தின் ஜனநாயக நடவடிக்கை களையே மேற்கொண்டனர். அதற்காகவே தற்போது சாட்டையடி தண்டனை சட்டத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

1960-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க குடியரசை அறிவிக்கும் தீர்மானம் அரசால் நிறைவேற்றப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் பெரும்பான்மையான, 70% மக்கள்தொகை கொண்ட கறுப்பரின மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. வெள்ளைக் குடியரசின் மீது எங்களுக்கு ஐயம் எழுந்து தேசத்தின் எதிர்காலம் என்னாவது என்ற கவலை எழுந்தது. அப்போதுதான் மாநாடு ஒன்றைக்கூட்டி நான் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தேன். வீட்டிலேயே இருப்பது என்ற அந்தப் போராட்டம் அமைதியான போராட்டம் ஆகும். வன்முறையில் யாரும் ஈடுபடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். ஆனால் ஆப்பிரிக்க அரசு மீண்டும் மீண்டும் வன்முறையை மக்கள் மீது பயன் படுத்தியது. இதனால்தான் உம்கான்ட்டோ என்ற இயக்கம் உருவானது.

போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்று முடிவெடுத்தோம். இதுவல்லாது மற்ற வழிமுறைகள் என்பது ஒரு இழிவான சரணாகதியாகவே முடிந்து விடும் என்பதை நாங்கள் அறிந்தோம். போராட்டம் என்பதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. ஆனால், தொடர்ந்து போராடுவது எப்படி என்ற கேள்வி எங்களிடம் இருந்தது. நிறவெறியல்லாத ஜனநாயகத்திற்காகவே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பாடுபட்டுவருகிறது. ஆனால் 50 ஆண்டுகால அகிம்சை போராட்டம் என்ன சாதித்தது என்றால் மேலும் மேலும் ஒடுக்குமுறை சட்ட அமலாக்கங்களையே.

வெள்ளை நிறவெறிக்கு எதிராக போராடத் துணிந்த காலங்களிலிருந்தே மக்கள் வன்முறை பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் அவர்களை வேறு வழிக்கு திருப்பியுள்ளது. ஆனாலும் அகிம்சை முறை தொடர்ந்து தோல்விகளைத் தழுவ எங்களது தொண்டர்கள் வன்முறை எனும் தொந்தரவு தரும் கருத்துக்களை யோசிக்கத் தொடங்கினர்.

1957 முதல் 1961-ஆம் ஆண்டு வரை ஆங்காங்கே வன்முறைகள் வெடிக்கத்தான் செய்தன. இவையெல்லாம் வன்முறையை விட்டால் தீர்வு இல்லை என்ற எண்ணப் போக்கை ஆப்பிரிக்க மக்களிடையே உருவாக்கியது. நகர்ப்புறத்தில் சிறு குழு ஒன்றே உருவானது. இவர்களை வளரவிட்டால் இவர்கள் வெள்ளையர்களுக்கு மட்டுமல்ல கறுப்பர்களுக்கு எதிராகவும் திரும்பிவிடுவர் என்பதை நாங்கள் அறியாமலில்லை.

ஜூன் மாதம் 1961-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சூழ்நிலையினை நீண்ட பரிசீலனை செய்தபிறகு நானும் எனது தோழர்களும் முடிவுக்கு வந்தோம், வன்முறை இந்த தேசத்தில் தவிர்க்க முடியாத ஒன்று என்பதை. இந்தத் தருணத்தில் அகிம்சையையும், சமாதானத்தையும் பிரச்சாரம் செய்வது நல்லதல்ல என்பதை தலைவர்கள் உணரத் தொடங்கிவிட்டனர். ஏனெனில் எங்களது அமைதியான கோரிக்கைகளை அரசு அடக்குமுறையால் ஒடுக்கியது.

இந்த நிலைலியில்தான் உம்கான்ட்டோ வீ சிஸ்வி என்ற அமைப்பு தோற்றம் கொண்டது. இதை நாங்கள் ஏதோ ஆசைப்பட்டு துவங்கவில்லை. அரசின் கொள்கைகள் எங்களை இந்த முனைக்கு நகர்த்தியது. உம்கான்ட்டோ அரசியல் பிரகடனத்தில் நாங்கள் என்ன கூறினோம் என்றால், எந்த ஒரு தேசத்திற்கும் அதன் வாழ்க்கையில் ஒருநேரம் வரும். அதாவது இரண்டே இரண்டு தெரிவுகளே உள்ளன. ஒன்று அடங்கு அல்லது அடக்கு. இந்தத் தருணம் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு வந்துவிட்டது. நாங்கள் அடங்கப்போவதில்லை, அனைத்துத் தரப்பிலிருந்தும் தாக்குவது ஒன்றே வழி என்ற முறைக்கு வந்தோம். மக்களைக் காப்பாற்ற, எங்கள் எதிர்காலத்தைக் காப்பற்ற, எங்கள் சுதந்திரத்தை அடைய. இனவெறி ஆதிக்கத்தை தகர்த்தெறிவோம்!

Tuesday, January 14, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை!-Part 5 (இந்திய பிரதமர்கள் )


ஜனநாயகக் குழந்தையைக்  கொன்ற பொம்மை!
அப்பா நேரு, இந்தியப் பிரதமராக இருக்கும்போது மகள் இந்திரா அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரானால் அதிகாரம் எப்படி தூள் கிளப்பி, துஷ்பிரயோகமாக மாறும் என்பதற்கு மறக்க முடியாத உதாரணம் கேரளா.
இயற்கை எழில் கொஞ்சும் கேரளத்தை, சர்வாதிகாரக் கொடுக்குகள் சிறுகச்சிறுகச் சித்ரவதை செய்து கடைசியில் சிதைத்துப் போடும் காரியத்தை நேருவும் இந்திராவும் செய்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில ஆட்சியை, ஒரு துளி மையால் அழித்தனர். 'எங்கள் பூமியை நாங்கள்தானே ஆளவேண்டும், அந்நியரான ஆங்கிலேயருக்கு ஆள என்ன அருகதை இருக்கிறது?’ என்று கேள்விகேட்டு சுதந்திரப் போராட்​டம் நடத்தியவர்கள் 'சுதந்திரத்தின் பலனை’ இப்படிச் சுக்கு​நூறாக உடைத்துக் கொண்டாடிக் கழித்தனர். சர்வாதிகாரத்தின் பலிபீடத்தில் ஜன​நாயகக் குழந்தை யாரும் கேள்விகேட்க முடியாத கும்மிருட்டில் கழுத்தறுக்கப்பட்ட எதேச்​சதிகாரத்தின் தொடக்கம் அது. வெறும் பொம்மை என்று சொல்லப்பட்ட இந்திரா, நான் வெறும் பொம்மை அல்ல, ஷாக் அடிக்கும் பொம்மை என்று சொல்லிய ஆண்டு 1959!
ஆம்! கேரள மாநிலத்தை ஆண்டுகொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி கலைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் இந்திரா தூண்டினார். ஜனநாயகம் குறித்தும் மக்களாட்சி பற்றியும் பக்கம் பக்கமாக எழுதிய பிரதமர் நேருவும் அதற்கு சம்மதித்தார். 'முதலில் சம்மதிக்கவில்லை. ஆனால், இந்திராவின் பிடிவாதம் காரணமாக இறுதியில் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று’ என்று சொல்வார்கள். வரலாறு எப்போதுமே முடிவுகளையே வரவு வைக்கும். முடிவுக்கு முந்தைய விவாதங்கள், காலங்கள் கடந்ததும் வீணானவையே!
1957-ல் கேரளாவில் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் இருந்த 126 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 60 இடங்களில் வென்றது. அதன் ஆதரவு சுயேச்சைகள் 5 இடங்களைப் பிடித்தனர். காங்கிரஸ் படர்ந்த நாடாக இருந்த இந்தியாவில் கம்யூனிஸம் மலர்ந்த மாநிலமாக கேரளா ஆனது. அப்போது கேரள எல்லைக்குள்ளும் அதன் பிறகு இந்திய பொதுவுடைமைத் தலைவர்களில் ஒருவராகவும் உயர்ந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், அந்த மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்தப்பட்டார். இந்தியாவில் தொடங்கப்பட்ட கால் நூற்றாண்டு காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது ஒரு கௌரவமாகவும், கம்யூனிஸ சமுதாயம் உருவாவதற்கான ஆரம்பமாகவும் கேரள ஆட்சி உற்சாகம் கொடுத்தது. 'இன்று கேரளா, நாளை இதர மாநிலங்கள், இறுதியில் மத்திய அரசாங்கம்’ என்று கம்யூனிஸ்ட்கள் பேசத் தொடங்கினார்கள். ஆனால், இதனை காங்கிரஸ் கட்சி கசப்பாகவே பார்க்க ஆரம்பித்தது.
''ஐந்து சுயேச்சைகளையும் தனித்தனியாக அழைத்துப் பேசுவேன். அவர்கள் சொல்வது திருப்தியானால்தான் உங்களைப் பதவியேற்க விடுவேன்'' என்று கேரள ஆளுநராக இருந்த ஹைதராபாத் காங்கிரஸ்காரர் கிடுக்கிப்பிடி போட்டுத்தான் ஈ.எம்.எஸ்-ஸை பதவி ஏற்கவே அனுமதித்தார். ஆங்கிலோ இந்திய பிரதிநிதி ஒருவரை சட்டமன்றத்துக்கு நியமித்துக்கொள்ளும் அதிகாரம் ஆட்சியை அமைக்கும் ஆளுங்கட்சிக்கு உண்டு. அது அன்று மட்டுமல்ல... இன்றுவரை இருக்கும் நடைமுறை. ஆனால், காங்கிரஸ்காரரான அந்த ஆளுநர், ஆங்கிலோ இந்திய உறுப்பினரை நான்தான் நியமனம் செய்வேன் என்பதில் பிடிவாதம் காட்டினார். இத்தகைய சூழ்நிலையில் ஆட்சியை அமைத்த ஈ.எம்.எஸ். சில முக்கியமான முடிவுகளை, கொள்கைகளை அமல்படுத்தினார். அமல்படுத்த முயற்சித்தார்.
1. மலபார், கொச்சி, திருவிதாங்கூர் ஆகிய முக்கியமான மூன்று பகுதிகளிலும் வெவ்வேறு விதமான நிலக் குத்தகை முறை இருந்தது. பதவியேற்ற ஒருவார காலத்தில் அனைத்துவகை வெளியேற்றங்களையும் தடைசெய்து ஒரு அவசரச் சட்டத்தை போட்டார்கள். இது விவசாய சீர்திருத்தம் எனப்பட்டது. அதாவது கிராமப்புற சாதாரண மக்களுக்கும் நகர்ப்புறத்தில் இருந்த நடுத்தர மக்களுக்கும் இது மகிழ்ச்சியைக் கொடுத்தது. சமூகத்தின் வசதி படைத்தவர்களுக்கு இது கோபத்தைக் கிளப்பியது.
2. நகர்ப்புறங்களில் நடந்த வேலை நிறுத்தங்களின்போது போலீஸைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது. போலீஸின் வேலை கிரிமினல்களைப் பிடிப்பதுதானே தவிர தொழில் உறவுகளில் தலையிடக்கூடாது என்று சொல்லப்பட்டது. 'இது சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும்’ என்று விமர்சனம் செய்யப்பட்டது.
3. மத்திய அரசின் நிதி ஒத்துழைப்பு இல்லாததால், மாநிலத்துக்கு வெளியே இருக்கும் தொழில் அதிபர்களை கேரளா பக்கமாக ஈர்க்க இந்த ஆட்சி முயற்சிகள் எடுத்தது. இது உள்ளூர் தொழில் அதிபர்களை ஆத்திரம் அடைய வைத்தது.
4. புதிய கல்வி மசோதாவைக் கொண்டு வந்தார்கள். தனியார்கள் தங்கள் கட்டுப்பாட்டில் பள்ளிகளை வைத்துக் கொண்டு தங்குதடையற்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு இது முற்றுப்புள்ளி வைத்தது. சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் மொத்தமாக பள்ளி, கல்லூரிகளை ஆரம்பித்தவர்களுக்கு செக் வைத்தது. மதத்துக்கு ஆபத்து என்று இவர்கள் கிளம்பினார்கள்.
5. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, இதர பின்தங்கியவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்ந்தது. அதில் ஒரு சீர்திருத்தத்தை இந்த ஆட்சி கொண்டுவந்தது. இடஒதுக்கீடு பெறுபவர்களே ஒரு குறிப்பிட்ட அளவு வருட வருமானத்தை அடைய ஆரம்பித்துவிட்டால் அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று செய்யப்பட்ட அறிவிப்புக்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகு இந்தத் திருத்தத்தை வாபஸ் வாங்கிவிட்டனர்.
-இந்த ஐந்து கொள்கை முடிவுகளுக்கு எதிராகவும் நடந்த அனைத்துப் போராட்டங்களையும் காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. நிலச்சீர்திருத்தம் மற்றும் கல்வி மசோதாவுக்கு அனுமதி வழங்காமல் மத்திய அரசினரும் குடியரசுத் தலைவரும் இழுத்தடித்தனர். இவை அனைத்தையும் 'பரிசோதனை முயற்சிகள்’ என்று கம்யூனிஸ்ட் அரசாங்கம் சொல்லிக்கொண்டது. ஆனால், இந்தப் பரிசோதனைகளை அனுமதிக்க காங்கிரஸ் தயாராக இல்லை. இத்தனைக்கும் அன்றைய பிரதமர் நேரு, சோஷலிசம் பேசிக்கொண்டு இருந்தார். அவர் சொல்லிக்கொண்டு இருந்ததும், இவர்கள் அமல்படுத்த நினைத்ததும் ஏறத்தாழ ஒன்றுபோல் நினைக்கத் தக்கவையே. ஆனால், காங்கிரஸின் ஏகபோகத்துக்கு இந்த மாதிரியான மாற்றுக் கட்சிகளின் பரிசோதனை முயற்சிகள் இடையூறாக இருக்கும் என்று அன்றைய காங்கிரஸ் தலைவர் இந்திரா நினைத்தார். மாநில அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களை, 'வெகுஜன எழுச்சி’ என்று நேருவும் இந்திராவும் பட்டம் கொடுத்தனர். ''கேரளாவில் நடக்கும் எழுச்சி எங்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது'' என்று இவர்கள் சொல்லிக் கொண்டார்கள். 'இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாக உடனடியாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்’ என்று சொன்னார்கள். கேரளாவில் அரசாங்கம் அமைந்து இரண்டு ஆண்டுகள்கூட முழுமையாக முடியவில்லை. இந்த யோசனையை முதல்வர் ஈ.எம்.எஸ். கடுமையாக எதிர்த்தார்.
''தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமானது, சட்டமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், அதனுடைய ஐந்து வருட பதவிக் காலத்துக்குள்ளேயே புதிய தேர்தலுக்கு ஆட்பட வேண்டும் என்று எவரும் கேட்க முடியாது. பிரதமராக இருந்தாலும் அதனைக் கேட்க முடியாது. பெரும்பான்மையே இருந்தாலும் நாங்கள் பதவியை விட்டு விலக வேண்டும் என்பதே இதன் உள் அர்த்தம். நாங்கள் பதவி விலக வேண்டும் என்று சொல்லும் வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் இதுதான்''- என்று ஈ.எம்.எஸ். அறிவித்தார். அதன் பிறகு, ஆட்சியைக் கலைக்க நேரு காலதாமதம் செய்தார். ஆனால், இந்திரா கட்டாயப்படுத்தினார். ஒரு மாநிலத்தில் அமையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 356-வது சட்டப்பிரிவு குடியரசுத் தலைவருக்கு வழங்கி இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த இந்திரா வலியுறுத்தினார். நோக்கம் நிறைவேறியது. ஈ.எம்.எஸ். ஆட்சி கலைக்கப்பட்டது. 200 ஆண்டு காலம் போராடிப் பெற்ற சுதந்திரத்தின் பலனை, ஜனநாயகத்தின் அருமையை 28 மாதங்கள்கூட 'அடுத்த கட்சி’ அனுபவிக்க அனுமதியாத சர்வாதிகார வடிவம் கேரளாவில் இருந்து தொடங்கியது. இந்த எடுத்தேன், கவிழ்த்தேன் போக்கு இந்திராவுக்குப் பிடித்திருந்தது.
அன்றைய தேதியில் கேரளா தவிர அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது. கேரளாவில் ஈ.எம்.எஸ். அரசாங்கம் 59-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் காங்கிரஸ் தலைவராக உட்கார்ந்தார் இந்திரா. உட்கார்ந்த உடனேயே ஒரு மக்களாட்சிக்கு உலை வைத்தார். இதற்கு இன்னொரு உள்நோக்கம் கற்பிக்கப்படும். 'கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கலைக்க அமெரிக்க உளவு நிறுவனம் சில முயற்சிகளை மேற்கொண்டது. அதற்கு டெல்லி காங்கிரஸின் அதிகார மட்டத்தில் இருந்த சிலர் பயன்படுத்தப்பட்டார்கள்’ என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டானியல் பேட்ரிக் எழுதியதாகச் சொல்வார்கள். இதைப் பின்பற்றி மலையாளத்திலும் புத்தகங்கள் வெளிவந்தன. அது உண்மையானால் இன்னும் ஆபத்தானது.
'ஐவஹர்லால் நேருவுக்கு பெண் பிறந்ததற்குப் பதிலாக ஒரு மகன் பிறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? மகன் தந்தைக்கு தோழனாகவும் பின்னர் வாரிசாகவும் ஆகியிருந்தால் அதிக சிரமம் இருந்திருக்காது அல்லவா?’ என்று அமெரிக்கப் பத்திரிகை நிருபர் ஒருவர் இந்திராவிடம் கேட்டார். ''அதெப்படி சொல்ல முடியும்? ஒருவேளை சிரமங்கள் அதிகமாகி இருக்கலாம் அல்லவா?'' என்று இந்திரா பதில் சொன்னார். எந்தப் பொருளில் அப்படிச் சொன்னாரோ, இந்திய ஜனநாயக நெறிமுறைகளுக்கு அதிகப்படியான சிரமங்களை இந்திரா தனது ஆட்சி காலத்தில் செய்தார். அவர் 1966 ஜனவரி 24-ம் தேதி இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றார். அன்று முதல் 1977 வரையிலான 11 ஆண்டு காலத்தில் 356-வது பிரிவைப் பயன்படுத்தி 29 முறை இந்தியாவின் பல்வேறு மாநில ஆட்சிகளைக் கலைத்தார். அதற்கான ருசியை ஏற்படுத்திக் கொடுத்தது கேரளா. மத்தியில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி. அப்படி ஆட்சி அமையவில்லையானால் வேறு கட்சி ஆட்சி அமைந்தால் அதனைக் கலைத்துவிட்டால் போகிறது என்ற 'அதிகார உச்சபட்ச குணம்’ கேரளாவில்தான் அரும்பியது. அடுத்த 25 ஆண்டுகள் அதுவே ஆட்டிப் படைத்தது.

மொரார்ஜியை வென்ற இந்திரா! 
கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி கலைக்கப்பட்டது இந்திய அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் அதற்கு முன் அப்படி ஒரு காட்சியை இந்தியா பார்த்தது இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இந்திரா ஆனதன் அடையாளம்தான் இது என்று அன்றைய தலைவர்கள் சொல்லத் தொடங்கினர்.
இந்திரா, தலைவர் ஆக்கப்பட்டதாகத் தகவல் வந்தபோது ராஜாஜி, பெங்களூரில் இருந்தார். அன்று அவரும் மசானியும் ஒரு கூட்டத்தில் பேசினார்கள். மசானி, நேருவையும் இந்திராவையும் தர்க்கரீதியாக விமர்சித்துப் பேசினார். எப்போதும் தர்க்கரீதியாகப் பேசும் ராஜாஜி அன்று கோபமாகப் பேசினார். ''எனக்கு முன்பு பேசிய மசானி, நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் ஜாக்கிரதையாகப் பேசினார். ஆனால் எனக்கு அந்தக் கட்டுப்பாடு எதுவும் இல்லை'' என்று சொன்ன ராஜாஜி, ''நேருவுக்குத் தன்னைவிட்டால் வேறு ஆள் கிடையாது என்ற பித்தம் தலைக்கேறிவிட்டது. அதனால்தான் இப்படி நடந்துகொள்கிறார்'' என்று குற்றம்சாட்டினார். அந்தக் கூட்டத்தில்தான், ''புதிய கட்சியை அமைத்துவிட வேண்டியதுதான். அதற்கான காலம் நெருங்கிவிட்டது'' என்றும் ராஜாஜி சொன்னார். அதாவது, காங்கிரஸ் கட்சி நேரு, இந்திரா என வாரிசு அடிப்படையில் வலம் வர ஆரம்பித்துவிட்டது என்ற கொந்தளிப்புத்தான் ராஜாஜியை சுதந்திரா கட்சியை தொடங்க வைத்தது.
கேரள ஆட்சி கலைக்கப்பட்டபோதும் ராஜாஜி அந்தக் கொந்தளிப்பை அதிகமாகக் காட்டினார். ராஜாஜிக்கு கம்யூனிஸ்ட்களைக் கண்டாலே பிடிக்காது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடியவதைவிட சுதந்திர இந்தியாவில் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக அதிகம் பேசியவர் ராஜாஜி. அப்படிப்பட்ட ராஜாஜிக்கு கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி கலைக்கப்பட்டது மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். ஆனால், இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான சர்வாதிகார நடவடிக்கை என்று ராஜாஜி குற்றம்சாட்டினார்.
''கம்யூனிஸ்ட்கள் இப்போதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்றார்கள். அவர்களை ஜனநாயக மரபுகள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அவர்களை இந்த மாதிரி நடத்தினால் அவர்கள் மீண்டும் தலைமறைவாகி சதிச்செயல்களில் ஈடுபட வேண்டிய நிர்ப் பந்தத்துக்கு ஆளாவார்கள். மேலும், சட்டசபையில் அவர்களது பெரும்பான்மை பலம் குறையவில்லை என்பது தெளிவாக இருக்கும்போது ஆட்சியை டிஸ்மிஸ் செய்வது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. எனக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள் உடன்பாடானவை அல்ல. ஆனால் அவர்களை நடத்தவேண்டிய விதம் இது அல்ல'' என்று தன்னுடைய 'சுயராஜ்யா’ பத்திரிகையில் ராஜாஜி எழுதினார். அந்த அளவுக்கு இந்திராவின் நடவடிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கேரள அரசு கலைக்கப்பட்டதை ஃபெரோஸ் காந்தி கடுமையாகக் கண்டித்தார். நேருவின் நெருங்கிய நண்பராக இருந்த வி.கே.கிருஷ்ண மேனன் இதனை முழுமையாக எதிர்த்தார். ஆனாலும் இந்திரா கேட்கவில்லை. இந்திராவை நேருவால் தடுக்க முடியவில்லை.
பின்பு ஒருமுறை பேட்டி அளித்த இந்திரா, கேரள அரசு கலைக்கப்பட்டதற்கு நான் காரணம் அல்ல என்றார். ''காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் கம்யூனிஸ்ட் அமைச்சரவையை அகற்றிவிட்டு ஜனாதிபதி ஆட்சியைப் பிரகடனப்படுத்தும்படி எந்தக் காரணங்களுக்காக ஆலோசனை கூறினீர்கள்?'' என்று பத்திரிகையாளர் கே.ஏ.அப்பாஸ் கேட்டபோது, ''நான் அப்படி ஆலோசனை சொல்லவில்லை. கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சியின் காரணமாக மாநிலத்தில் ஒரு குழப்பமான நிலைமை இருந்தது. அதனால் மீண்டும் தேர்தல் நடத்தி வாக்காளர்கள் இன்னும் தெளிவான தீர்ப்பு அளிப்பதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கருதினோம்'' என்று இந்திரா சொன்னார். இதேபோன்ற சூழ்நிலை காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் நடந்திருந்தால் இப்படிச் செய்திருப்பீர்களா என்று அப்பாஸ் திருப்பிக் கேட்கவில்லை. இது சரியா, தவறா என்ற விவாதங்களைத் தாண்டி 'இந்திரா என்றால் நினைத்ததை சாதிக்கக் கூடியவர்’, 'நேருவின் மகள் மன உறுதி படைத்தவர்’ என்ற பிம்பம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் ஏற்பட இந்த சம்பவம் காரணமாகிவிட்டது. அதாவது காங்கிரஸ் கட்சிக்குள் இந்திராவின் செல்வாக்கை உணர்த்துவதற்கு இந்த ஆட்சிக் கலைப்புப் பயன்பட்டது. இப்படி ஒரு சூழ்நிலையில் ஓராண்டு காலத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இந்திரா விலகியது இன்னும் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியது.
ஒருவர் காங்கிரஸ் கட்சித் தலைவராக ஆனால், இரண்டு ஆண்டுகாலம் அந்தப் பதவியில் இருக்கலாம். அது முடிவதற்கு முன்னதாகப் பதவியைவிட்டு விலகி நேருவுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கினார் இந்திரா. கேரள ஆட்சியைக் கலைக்கும் முடிவுக்கு முழுமையான ஆதரவை காங்கிரஸ் தலைவர்கள் தராததும் பம்பாய் மாநிலத்தை மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்று அவர் எடுத்த முடிவை சில தலைவர்கள் எதிர்த்ததும்தான் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. நேருவுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காவது பெண்மணி என்ற தகுதியை அப்போது அடைந்திருந்தார் இந்திரா. அதற்கு முன் அன்னிபெசன்ட், சரோஜினி தேவி, நெல்லி சென்குப்தா ஆகிய மூவர் தலைவராக இருந்துள்ளார்கள். நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் தலைவராக ஆனதில் மூன்றாவது நபர் என்ற தகுதியும் இந்திராவுக்கு இருந்தது. மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு ஆகியோருக்கு அடுத்து இவர் தலைவராகி இருந்தார். இப்படி ஒரு கௌரவத்தை ஒருநாள் இரவில் திரும்பக் கொடுத்துவிட்டார் இந்திரா. அதாவது, தான் நினைத்தது நடக்காவிட்டால் அந்தப் பதவியே தேவையில்லை என்ற மனோபாவம் கொண்டவராக அவர் இருந்தார். அப்படித்தான் வளர்ந்தார்.
நேரு இருந்த காலக்கட்டத்திலேயே இப்படி என்றால் நேருவே இல்லாத சூழ்நிலையில்..? 'இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா’ என்ற பெரும் முழக்கமே யதார்த்த வடிவம் எடுத்தது.
நேரு தன்னுடைய இறுதிக் காலக்கட்டத்தில் எடுத்த தூய்மை நடவடிக்கை ஒன்று மறைமுகமாக இந்திராவுக்கு வசதியாகப் போனது. 1962 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் சரிவைச் சந்தித்தபோது நேரு மிகவும் வருந்தினார். தன்னுடைய லட்சியங்களை நிறைவேற்ற முடியாத ஏக்கம் ஒருபுறம், காங்கிரஸ் பிரமுகர்கள் மீது எழுந்த ஊழல் முறைகேடுகள் மறுபுறம் அவரை வாட்டியது. அப்போது நேருவும் காமராஜரும் சேர்ந்து எடுத்த முடிவுதான், காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுப்பதற்கு வசதியாக மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவியை விட்டு விலகுவதும், கட்சிப் பணிகளுக்குத் திரும்புவதும் என்பது. 'கே பிளான்’ என்று வரலாற்றில் இது பதிவானது. இந்த அடிப்படையில், இதை முன்மொழிந்த காமராஜரே, தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். பிஜு பட்நாயக் (ஒடிசா), சந்திர பானு குப்தா (உத்தரப்பிரதேசம்), பஷி குலாம் முகமது (காஷ்மீர்), ஜீவராஸ் மேத்தா (குஜராத்), பகவதிராய் மண்ட்லோய் (மத்தியப் பிரதேசம்) ஆகிய முதலமைச்சர்களும் பதவி விலகினார்கள்.
மத்திய அமைச்சரவையில் இருந்து லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன்ராம், எஸ்.கே.பாட்டீல், பி.கோபால், கே.எல். ஸ்ரீமலி ஆகியோரும் பதவி விலகினார்கள். பதவியைவிட்டு விலகி, கட்சிப் பணியாற்ற பெரிய தலைவர்கள் செல்வது ஒரு பக்கம் நல்ல விஷயமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் நேருவின் எதிரிகள் வேறுமாதிரியாகச் சொல்ல ஆரம்பித்தனர். 'அனுபவம் வாய்ந்த தலைவர்கள் அனைவரது சிறகுகளையும் மறைமுகமாக நேரு வெட்டிவிட்டார்’ என்றனர். ஏனென்றால் அமைச்சர் பதவியை விட்டு விலகியவர்களில் பலருக்கும் கட்சிப் பணிகளோ, பதவிகளோ பின்னர் தரப்படவில்லை.
காமராஜரை அடுத்து லால்பகதூர் சாஸ்திரிதான் நேருவின் நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தார். பதவி விலகிய சாஸ்திரியை அழைத்து, மீண்டும் அமைச்சர் ஆக்கினார் நேரு. புவனேஸ்வர் காங்கிரஸ் மாநாட்டில் காமராஜர், காங்கிரஸின் அகில இந்திய தலைவர் ஆனதும், சில மாதங்களில் நேரு மறைந்ததும் நடந்தது. நேருவின் மறைவுக்குப் பிறகு சாஸ்திரியைப் பிரதமர் ஆக்குவதற்கு மொரார்ஜி தேசாய் தவிர வேறு யாரிடமும் எந்தத் தடங்கலும் இல்லாமல் போனது. சாஸ்திரி - மொரார்ஜி மோதலில் காமராஜர், சாஸ்திரி பக்கம் இருந்தார். அவரை பிரதமர் ஆக்க அனைத்தையும் செய்தார். அதைப் போலவே, அப்பாவின் மறைவுக்குப் பிறகு அமைதியாக உட்கார்ந்து அரசியல் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துவந்த இந்திராவை, மத்திய அமைச்சரவைக்குள் கொண்டுவருவதற்கும் காமராஜர் நினைத்தார். தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இந்திரா ஆனார். மொத்தமே 17 மாதங்கள்தான் சாஸ்திரி பிரதமர் நாற்காலியில் அமருவதற்கு இயற்கை அனுமதித்தது.

அடுத்தது யார் என்ற கேள்வி அதற்குள் வரும் என்பதை காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் மொரார்ஜி முகம் முன்னுக்கு வந்தது. நேர்மையாளர் என்று பெயர் எடுத்தாலும் நெகிழ்வுதன்மை இல்லாதவர் என்று பெயர் வாங்கியவர் மொரார்ஜி. அவரை சமாளிக்கவே முடியாது என்று காமராஜர் நினைத்தார். அப்போது இந்திராவைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. 'இந்திராதான் அடுத்த பிரதமர்’ என்ற முடிவோடு களத்தில் இறங்கிய காமராஜர், தனக்கு அடுத்த இடத்தில் இருந்த அல்லது தன்னைவிட பெரிய மனிதர்களாக இருந்த அனைவரிடமும் இந்திராவைப் பிரதமராக்குவதற்காக ஆதரவு கேட்டு அலைந்தார். நிஜலிங்கப்பாவோ, சஞ்சீவி ரெட்டியோ ஆரம்பக் கட்டத்தில் இந்திராவை ஆதரிக்கவில்லை. 'இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்’ என்றுதான் சொன்னார்கள். ஆனால் தன்னுடைய இத்தனை ஆண்டுகால கடும் உழைப்பால் திரட்டி வைத்திருந்த அத்தனை பேரையும், புகழையும் பயன்படுத்தி, இந்திராவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வைத்தார் காமராஜர். ஆனாலும் மொரார்ஜி, இந்திராவை எதிர்த்து தேர்தலில் நின்றார்.
ரகசிய வாக்கெடுப்பு நடந்த நாளில், வெண்மையான கதர் புடவையும் பழுப்புநிற காஷ்மீர் சால்வை அணிந்து, அதில் சிறு ரோஜாப் பூவையும் செருகி நாடாளுமன்ற மத்திய மண்டபத்துக்கு வந்தார் இந்திரா. மொரார்ஜியைப் பார்த்ததும் அருகில் சென்று கை கொடுத்தார். அடுத்த சில மணிநேரத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு 189 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக இந்திரா அறிவிக்கப்பட்டது அவரை பிரதமர் ஆக்க உழைத்த அனைத்துத் தலைவர்களுக்கும் மகிழ்ச்சியளித்தது.
ஆனால் அந்த மகிழ்ச்சியை இந்திரா நீடிக்கவிடவில்லை. காமராஜர் உள்ளிட்ட அனைவரையும் காயப்படுத்தும் காரியங்களைத் தொடங்கி முழு அதிகார மையமாக இந்திரா தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்டார்

மகாத்மா முதல் மன்மோகன் வரை!-Part 4 (இந்திய பிரதமர்கள் )








போராட்டக் காலத்தில் கொள்கை பொங்கப் பேசுபவர்கள், பதவியை அடைந்ததும் பெரும்பாலும் பதுங்கிப் படுத்துவிடுகிறார்கள் என்பதற்கு நேருவும் விதிவிலக்கு இல்லை. அதற்குக் காரணம், நேருவை எதிர்க்க காங்கிரஸுக்குள்ளேயே தலைவர்கள் இல்லாமல் போனதுதான்!
 'ஜவஹர்லால் நேருதான் என்னுடைய வாரிசு’ என்று சொன்ன மகாத்மா காந்தி, சுதந்திரம் அடைந்த சில மாதங்களில் மரணத்தைத் தழுவினார். அடுத்த பிரதமர் யார் என்ற போட்டி வந்தபோது நேருவுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் பேசப்பட்ட சர்தார் வல்லபபாய் படேல், சில ஆண்டுகளில் மரணம் அடைந்தார். குடியரசுத் தலைவர் ஆகிவிட்டதால் நடைமுறை அரசியல் விவகாரங்களில் இருந்து ஒதுங்கிவிட்டார் பாபு ராஜேந்திர பிரசாத். உடம்பு முழுக்க மூளை கொண்டவர் என்று வர்ணிக்கப்பட்ட ராஜாஜியும், அதேபோல் அரசியல் செய்ய முடியாத கவர்னர் ஜெனரல், மேற்கு வங்க ஆளுநர் என்ற பதவிகளில் போய் உட்கார்ந்தார். காந்தியின் சீடரான ஆச்சார்ய கிருபளாளி, கிசான் மஸ்தூர் பிரஜா என்ற கட்சியை உருவாக்கிவிட்டுப் போய்விட்டார். நேரு தலைமையிலான இடைக்கால அமைச்சரவையில் அங்கம் வகித்த ஸ்யாமா பிரசாத் முகர்ஜி, ஜனசங்கம் தொடங்கி அங்கே போய்விட்டார். கொள்கையும் அஞ்சாமையும் கொண்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், காங்கிரஸில் இருந்து விலகி பிரஜா சோஷலிஸ்ட் கட்சியை உருவாக்கிக் கொண்டார். மௌலானா அபுல்கலாம் ஆசாத் அரசியல் ஆர்வம் இல்லாமல் போனார். இவரது அறிவு நமக்குத் தேவை என்று எந்த அம்பேத்கரை நேரு தனது அமைச்சரவையில் சேர்த்தாரோ... அந்த அம்பேத்கர், பதவி விலகிவிட்டார்.
தனித்திறமை கொண்ட ஒவ்வொரு ஆளுமைகளும் வெவ்வேறு காரணங்களால் காங்கிரஸை விட்டும், தன்னுடைய அமைச்சரவையை விட்டும் வெளியேறியது நேருவுக்கு வசதியாகப் போனது. தன்னைத் தவிர யாருமே இல்லையே என்ற யதார்த்த நிலைமை, தன்னைத் தவிர இனி யார் இருக்கிறார்கள் என்ற கர்வ எண்ணமாக மாறியது. 'காங்கிரஸ்தான் நாடு; நாடுதான் காங்கிரஸ்’ என்று அவர் சொல்லத் தொடங்கினார். இதைத்தான் அவரது மகள் இந்திரா ஆட்சி காலத்தில், 'இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா’ என்று மாற்றிச் சொல்லப்பட்டது.
சிலர் விலகிப் போனார்கள் என்றால் சிலரை அடக்கியாக வேண்டும் என்று நேரு முடிவெடுத்தார். அதற்குக் காரணம், படேல். 'இன்னொரு படேல் கட்சிக்குள் வந்துவிடக் கூடாது’ என்பதில் நேரு உறுதியாக இருந்தார். எனவே, லேசாகத் தலைதூக்கிய பிரபலங்களை எல்லாம் முடிந்த அளவுக்கு களையெடுக்க நேரு முயற்சித்தார்.
நேர்மையும் சுயசிந்தனையும் கொண்ட தலைவர்களில் ஒருவராக அன்றைய தினம் புருஷோத்தம்தாஸ் டாண்டன் இருந்தார். அவரை காங்கிரஸ் தலைவர் ஆக்குவதற்குத்தான் பலரும் விரும்பினார்கள். அவரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால் நேருவுக்கு ஏனோ பிடிக்கவில்லை. எல்லாவற்றிலும் கறாராகக் கருத்துச் சொல்லக்கூடியவர் டாண்டன் என்பதும் நேருவின் கோபத்துக்கு காரணமாக இருக்கலாம். 'டாண்டனுக்கு பதிலாக கிருபளானியை தலைவர் ஆக்கலாம்’ என்றார் நேரு. ஆனால், இதனை படேல் போன்றவர்கள் ஆதரிக்கவில்லை. டாண்டனுக்கு ஆதரவு அதிகமானது. உடனடியாக பிரதமர் பதவியை விட்டும் கட்சிப் பதவியை விட்டும் விலக நேரு திட்டமிட்டார். 'இனி நான் கட்சிக்கும் ஆட்சிக்கும் பயன்பட மாட்டேன்’ என்றார். அவர் ராஜினாமா அஸ்திரத்தை எடுப்பது அது முதல் தடவை அல்ல.
காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னால், 'நான் ராஜினாமா செய்யப் போகிறேன்’ என்று மிரட்டல் விடுத்தவர் நேரு. 'ராஜேந்திர பிரசாத்தை குடியரசுத் தலைவர் ஆக்கக் கூடாது’ என்று சொல்லி அதனை யாரும் ஏற்காதபோதும், 'ராஜினாமா செய்யப் போகிறேன்’ என்றவர் நேரு. அரசியலில், 'ராஜினாமா’ அஸ்திரத்தை அதிகமாகவிட்டு, அதனை வாபஸ் வாங்கியும் சாதனை படைக்கலாம் என்பதைத் தொடங்கிவைத்து அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டியவர் நேரு என்றும் சொல்லலாம்.
அவர்தான் டாண்டன் தலைவர் ஆகக்கூடாது என்பதற்காகவும் ராஜினாமா அஸ்திரத்தை எடுத்தார். 'என்னை எல்லோரும் துணிக் கடை பொம்மைபோல நடத்த நினைக்கிறார்கள்’ என்றும் சொல்லிக் கொண்டார். அவை எதுவும் எடுபடவில்லை. டாண்டன்தான் தேர்தலில் வென்றார். ஆனால், அவரைத் தனது கட்சித் தலைவராகவே நேரு நடத்தவில்லை. டாண்டனுக்கு யாரையெல்லாம் பிடிக்காதோ அவர்களை எல்லாம் நாடாளுமன்றக் கமிட்டியில் இணைத்தார் நேரு. தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களையெல்லாம் சேர்ப்பதைத் தடுத்தார் டாண்டன். 'நான் உபயோகமாக இருந்த காலம் முடிந்துவிட்டது’ என்று நேரு வருந்தி சொல்லிக்கொண்டார். இந்தப் பிரச்னைகள் அனைத்துக்கும் ராஜாஜியை பஞ்சாயத்து செய்பவராக நேரு வைத்திருந்தார். ஒருகட்டத்தில் தன்னுடைய வாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலைமைக்கு ராஜாஜி தள்ளப்பட்டார். ஆனாலும் எந்த முடிவையும் ராஜாஜிக்கு தெரியாமலேயே நேரு எடுத்தார். ஒரு காரியத்தைச் செய்துவிட்டு தகவல் தருவதுதான் நேருவின் வழக்கமாக மாறியது.
'இப்படியெல்லாம் செய்து காங்கிரஸைக் குழப்பி அழிப்பதற்கு முன்னதாக என்னை நீங்கள் விடுவித்துவிட வேண்டும். தயவுசெய்து என்னை பைத்தியக்காரனாக ஆக்கிவிடாதீர்கள்'' என்று நேருவுக்கு கடிதம் எழுதிவிட்டு டெல்லியில் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓடி வந்துவிட்டார் ராஜாஜி. அவரை எப்படியாவது டெல்லியில் உட்காரவைத்து தன்னுடைய காரியங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நேரு நினைத்தார். அப்போது ராஜாஜி சொன்னது இன்றைய அரசியல் தலைவர்கள் அனைவரும் ஞாபகம்வைக்க வேண்டியது. ''நான் 'ஞாபகசக்தியை இழந்துவிட்ட வயதான முட்டாள்’ என்று அறிவிக்கப்பட்ட பிறகு ஓய்வெடுக்க விரும்பவில்லை'' என்று சொன்னார் ராஜாஜி.
அதாவது தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக நேரு எப்படியெல்லாம் செயல்பட்டார் என்பதற்கு இவை எல்லாம் உதாரணங்கள்!
'அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும், அதிக அதிகாரம் அதிக ஊழலுக்கு வழிவகுக்கும்’ என்பது புகழ்பெற்ற அரசியல் பொன்மொழிகளில் ஒன்று. தட்டிக் கேட்பதற்கான சகாக்கள் தனக்கு இல்லை என்பதால்தான் செய்வதும், சொல்வதும்தான் சரியானது என்ற நிலைமை நேருவின் ஆட்சி காலத்திலேயே தொடங்கியது. ஆனால், அதனை எல்லாம் பச்சையாக இல்லாமல் சாமர்த்தியமாக நேரு செய்தார். ஏனென்றால் அவர் சாராசரி அரசியல்வாதி அல்ல!
அடிமை இந்தியாவில் ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தவர். மகாத்மாவை அருகில் இருந்து தரிசித்தவர். தந்தை மோதிலால் நேருவின் தர்க்க நியாயங்களைக் கவனித்தவர். அனைத்துக்கும் மேலாக உலக நாடுகளை நேரில் கண்டவர். பல்வேறு நாடுகளில் அடக்குமுறை ஆட்சியாளர்கள் எப்படி எல்லாம் வீழ்ந்தார்கள் என்பதை எழுத்தெண்ணிப் படித்தவர் நேரு. 'பிரதமர்’ நேருவை, 'தியாகி’ நேரு சிலநேரங்களில் பின்னால் இருந்து இழுத்துக்கொண்டே இருந்தார். அதனால், முதல் வாரம் சோசலிசத்துக்கு ஆதரவாகவும் அடுத்த வாரமே, அதற்கு எதிராகவும் பேச வேண்டியதாயிற்று. ''புதிய தொழில்களை அரசாங்கமே ஆரம்பிக்கும். தொழில் முறைகள் அனைத்தையும் அரசாங்கமே நடத்தும். தனிப்பட்டவர்களிடம் தொழிலைக் கொடுக்காது’ என்று ஒருநாள் நேரு பேசிவிட்டார். அடுத்த நாளே பிர்லா, மோடி, ஷராப் போன்ற தொழிலதிபர்கள் அவரை வந்து சந்தித்தார்கள். 'இப்போதைக்கு எந்தத் தொழிலையும் அரசாங்கம் ஏற்றுச் செயல்படுத்தப் போவதில்லை’ என்று நேரு சொன்னார். இதில் எது ஒரிஜினல் என்ற குழப்பம் அவர் ஆட்சியில் இருந்த 16 ஆண்டுகளும் இருந்தது. இந்த ஊசலாட்டத்தின் காரணமாகச் சிலரை காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டுவர நேரு நினைத்தார்.
பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவரான ஜெயப்பிரகாஷ் நாராயணனை அழைத்துப் பேசினார். அவரை காங்கிரஸ் கட்சிக்குள் வர வேண்டும் என்று நேரு கேட்டுக்கொண்டார். அப்படியானால் நேரு என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டும் என்று ஜே.பி. பட்டியல் கொடுத்தார். அந்தப்பட்டியல் இன்றுவரை பொருத்தமானதுதான்.
''மத்தியில் அதிகாரங்கள் குவிந்து கிடக்கிறது. அதனைப் பகிர்ந்துகொடுத்து நிர்வாகச் சீர்திருத்தங்கள் செய்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும். வணிகத் துறையை அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும்...'' என்று பல்வேறு கோரிக்கைகளை ஜே.பி. அடுக்கினார். ஆறு மாத காலம் பேச்சுவார்த்தையை இழுத்த நேரு இறுதியில், 'இதை எல்லாம் நிறைவேற்றும் அதிகாரம் எனக்கு இல்லை. பிரதமராகவும் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருக்கின்ற என்னால் இதையெல்லாம் நிறைவேற்ற இயலாது’ என்றுசொல்லி அமைதியாகிவிட்டார். ''மாஸ்கோவை இந்தியாவுக்கு கொண்டுவந்து காட்டுவேன்'' என்று சொன்ன நேருவே, ''எதனையும் ஒழுங்காக இயக்குவதற்குரிய வழிமுறைகள் வகுக்காமல் நாட்டுடமை ஆக்குதல் ஆபத்தானது'' என்று சொல்லும் அளவுக்கு தன்னை மாற்றிக்கொண்டார். சோஷலிசத்தை திசை திருப்பும் தந்திரம் என்று சோஷலிசத் தலைவர்கள் சொன்னார்கள். அன்று அண்ணா சொன்ன வாசகம்தான், ''காகிதப் பூ மணக்காது, காங்கிரஸின் சோஷலிசம் இனிக்காது!’
அதற்காக நேரு தனது ஆட்சிக்காலத்தின் அனைத்து முறைகேடுகளுக்கும் உடன்பட்டார், அவருக்குத் தெரிந்துதான் அனைத்தும் நடந்தன என்று சொல்ல வரவில்லை. 'எனக்குச் சொத் துடைமை மனப்பான்மை இல்லை. செல்வத்தையும் சொத்துக்களையும் சுமந்துகொண்டு இருப்பது ஒரு பெரிய பாரம் என்பதையும் நான் அறிவேன். தொல்லை என்பதையும் உணர்வேன்’ என்றார். ஆனால், ஊழல் புரிந்தவர்களை அவரால் தடுக்க முடியவில்லை. முறைகேடுகளைத் தட்டிக் கேட்க முடியவில்லை. அதற்கு ஓர் உதாரணம்... அவரது செயலாளர் எம்.ஓ.மத்தாய்.

அதிகாரம் அப்பாவிடம் இருந்து மகளுக்கு! 
பிரதமராக நேரு இருந்தபோது அதிக அதிகாரம் பொருந்தியவராக அவரது செயலாளர் மத்தாய்தான் இருந்தார். அமைச்சர்களுக்கே உத்தரவிடும் கட்டளைத் தளபதியாகவும் அவர் இருந்தார். வருமானத்தை மீறிச் சொத்துச் சேர்த்ததாக மத்தாய் மீது புகார் கிளம்பியது. தேயிலைத் தோட்டங்கள் அவருக்கு இருந்ததாகக் கண்டுபிடித்துச் சொன்னார்கள். அதனை முதலில் நேரு நம்பவில்லை. ஆதாரங்கள் தரப்பட்டதும் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இறுதியில் மத்தாய் பதவி விலகவேண்டியது ஆயிற்று. இவையெல்லாம் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்தபோதுதான், நேருவின் மீதான பிம்பம் படிப்படியாக உடைந்தது. அவர் அதிகாரம் பொருந்தியவராக இருந்தார். அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதனால், அவருக்கு ஆலோசனை சொல்வதற்குக்கூட யாருமே இல்லாமல் போனார்கள். அதிகாரத்தை தன்னுடைய கொள்கைகளை அமல்படுத்துவதற்காக நேரு செலுத்தவில்லை என்பதுதான் துரதிருஷ்டமான உண்மை. அந்த அதிகாரத்தை மற்றவர்களை அடக்குவதற்குப் பயன்படுத்தினார். இதனால் அவரது நிர்வாகம் தேங்கிக் கிடந்தது. சிறந்த நிர்வாகத்தில் அதிகாரக் குவிப்பு இருக்காது. தான் ஒன்றை எப்படிச் செய்வோமோ அதனை அப்படியே செய்து காட்டக்கூடிய திறமைசாலிகளை தன்னோடு வைத்துக்கொண்டு வேலை வாங்குவதுதான் சிறந்த நிர்வாகத்துக்கு அழகு. 'நானே அனைத்தும் செய்து முடிப்பேன்’ என்பது திறமையைக் காட்டாது. ஆணவத்தையே வெளிப்படுத்தும். இதனால் காலப்போக்கில் திறமைசாலிகள் வெளியேறினார்கள். அதனால் சோஷலிசம் என்ற அலங்காரமான வார்த்தை மட்டும்தான் அவரிடம் மிச்சம் இருந்தது.
'விழாக்களில் நேரு கொஞ்சுவதற்காக கொழுகொழு குழந்தைகளைத் தேடிப் பிடித்தார்களே தவிர, சராசரி இந்தியக் குழந்தை அப்படி இல்லையே’ என்று கிண்டல் செய்யும் அளவுக்குத்தான் நேருவின் ஆட்சி நிலைமை இருந்தது. மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் அவரது ஆட்சியில் போடப்பட்டன. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, ''எவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் இன்றளவும் இந்தியாவின் பல பாகங்களில் ஒரு பானை குடிநீருக்குக்கூட மக்கள் அலைந்து திரிகின்ற காட்சிகளைப் பார்க்கின்றபோது நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்’ என்றுதான் பிரதமர் நேருவால் சொல்ல முடிந்தது. ''ஊழல் என்பது ஜனநாயக முறைகளின் கீழ் இயங்கும் நாட்டின் நடைமுறையில் ஒரு பகுதியாக மாறி வருகிறது. அது ஓரளவு வளர்ந்துள்ளது என்று சொல்வதற்காக நான் பயப்படுகிறேன். ஜனநாயகக் கோட்பாடு தருகின்ற தீமைகளின் பங்கு இது'' என்று வெளிப்படையாகச் சொல்லியாக வேண்டிய நிலைமைக்கு நேருவே தள்ளப்பட்டார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்து ஊழல்களை ஃபெரோஸ் வெளிப்படுத்தினார் என்றால், இந்த ஆட்சி மீதான மிகத் தெளிவான விமர்சனங்களை வைத்ததில் முதன்மையானவர் ராஜாஜி.
இந்தியா சுதந்திரம் அடைந்து 6 மாதம்கூட ஆகவில்லை. ராஜாஜி என்ன சொன்னார் தெரியுமா?
'50 ஆண்டுகள் போராடிப் பெற்ற இந்திய சுதந்திரம் என்பது வெறும் லஞ்ச ஊழலாக முடியுமானால் அதைவிடச் சோகம் வேறென்ன இருக்க முடியும்?'' என்று ராஜாஜி கேட்டபோது, அவர் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார். காங்கிரஸ் அளித்த பதவியில் இருந்தார். பிரதமர் நேருவுக்கு நெருக்கமாக இருந்தார். அவரது அமைச்சரவைக்கு ஆலோசனை சொல்பவராக இருந்தார். இதனாலேயே அதிகார மையத்தில் இருப்பவர்களால் உதாசீனப்படுத்தப்பட்டு ராஜாஜி, காங்கிரஸைவிட்டு வெளியேறினார். ''நேரு சொல்லும் சோஷலிசம், இந்தியாவுக்குப் பயன்படாது'' என்று சொல்லிவிட்டு சுதந்திராக் கட்சி ஆரம்பித்தாலும், ''இன்றைய காங்கிரஸ் கட்சியும் அதனுடைய ஆட்சியும் நாம் எதிர்பார்க்கும் நேர்மைத் திறத்துடன் இல்லை'' என்பதுதான் ராஜாஜிக்கு அதிகப்படியான கோபத்துக்குக் காரணம். அதனால்தான் நேரு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் அன்றைய காங்கிரஸ் கட்சியின் முறைகேடுகளை அதிர்வேட்டுகளைப்போல ராஜாஜி வெளிப்படுத்தினார்.
''காங்கிரஸ்காரர்கள் ரொம்ப வசதியாக இருப்பதுபோல் காணப்படுகிறார்கள். அவர்கள் ஏதாவது புதிய தொழிலை மேற்கொண்டு பணம் சம்பாதிக்கிறார்களா என்ன? எங்கிருந்து அவர்களுக்கு கிடைத்தது பணம்?''- இந்தக் கேள்வியை 1956-ல் ராஜாஜி கேட்டுள்ளார்.
''முழுநேரக் காங்கிரஸ்காரர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு காங்கிரஸ்காரனாக இருப்பதே உத்தியோகமாகிவிட்டது. இவர்கள் ஆட்சி, அரசியல் மட்டங்களில் தங்களது அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள். ஒட்டுண்ணி போலிருந்து பணத்தைச் உறிஞ்சிக் கொள்கிறார்கள்'' - என்று 1958-ல் ராஜாஜி சொல்லி இருக்கிறார்.
அன்றைய மத்திய அரசுக்கு அவர் ஒரு பெயரை வைத்தார், 'பட்மிட்-லைசென்ஸ்-கோட்டா ஆட்சி.’ சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 'பட்மிட் ராஜ்.’
குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சலுகை கொடுத்தார்கள், லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகைகள் கிடைத்தன என்று ராஜாஜி குற்றம்சாட்டினார். ''பட்மிட் - லைசென்ஸ்-கோட்டா முறையானது காங்கிரஸ் கட்சியின் பணக்கார நண்பர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்கியது. ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்கியது'' என்று பகிரங்கமாக ராஜாஜி சொல்ல ஆரம்பித்தார். நேருவின் காலமே இத்தகைய விமர்சனத்துக்கு ஆளாகியது என்றால் கல்மாடி காலத்தில் எப்படி இருக்கும்? இதனை இன்று தடுக்க முடியாதவராக மன்மோகன் சிங் இருப்பதைப்போலத்தான் நேருவும் இருந்துள்ளார். அதனால்தான் விமர்சனங்கள் அவர் மீது இவ்வளவு வந்தன.
நேரு எப்படிப்பட்டவர் என்பதை நேதாஜி முன்பு ஒருமுறை சொன்னார்,
''ஒரு நெருக்கடியான நேரத்தில் நீங்கள் வெற்றிபெறும் வகையில் செயல்படுவது இல்லை. ஊசலாடும் மனம் உங்களுடையது'' என்பதே அது. ஆனால் நேரு அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. இந்த விமர்சனங்களை எல்லாம் தூரத் தூக்கி வைத்துவிட்டு, மகள் இந்திராவுக்கு மகுடம் சூட்டும் காரியத்தை நேரு கனகச்சிதமாகப் பார்த்தார். நேருவின் மறைவுக்குப் பிறகு சாஸ்திரி வந்தார், சாஸ்திரி இறந்த பிறகு, 'வேறு வழியில்லாமல் இந்திரா அழைத்துவரப்பட்டார்’ என்று சிலர் புதிய வரலாற்றை உருவாக்கிவிட்டார்கள். உண்மை அது அல்ல. பிரதமர் நாற்காலியில் நேரு உட்கார்ந்து இருக்கும்போதே காங்கிரஸ் தலைவராக இந்திரா உட்கார வைக்கப்பட்டார். அன்றைய இந்திராவுக்கு 'அலங்கார பொம்மை’ என்று பெயர். எமர்ஜென்சியைக் கொண்டுவந்த அடங்காத இந்திரா அல்ல, அவர் அப்போது!

நேரு எங்கே போனாலும் மகளை அழைத்துச் சென்றார். அரசாங்கச் செலவில் வெளிநாடுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டார். எங்கே நேரு இருந்தாலும் இந்திரா அருகில் இருப்பார். யாரோடும் பேசமாட்டார். லேசாகச் சிரிப்பார் அவ்வளவுதான். ஒரு அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நேருவுக்கு அருகில் புரோட்டக்கால் நெறி முறைகளை மீறி இந்திரா உட்கார வைக்கப்பட்டார். அந்த விழாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட அழைப்பு இல்லை. ''ஏன் எங்களுக்கு அழைப்பு அனுப்பவில்லை?'' என்று ஃபெரோஸ் காந்தி கேட்டார். ''யாருக்குமே அழைப்பு அனுப்பவில்லையே?'' என்று நேரு பதில் சொன்னார். ''அப்படியானால் உங்கள் மகள் மட்டும் அந்த விழாவில் கலந்துகொண்டது எப்படி?'' என்று கேட்டார் ஃபெரோஸ். நேருவால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. கேள்வி கேட்பது மருமகன். கேட்பது மகளைப் பற்றி. நேருவின் எதிரிகள் அனைவரும் ரசித்த காட்சி அது. ஆனாலும் இந்திராவை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்வதை நேரு விடவில்லை.  இதைத் தொடர்ந்து காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக இந்திரா ஆக்கப்பட்டார். அடுத்து கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு தேர்தல் குழுவில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவே 1959-ல் இந்திரா உட்கார வைக்கப்பட்டார். 'இனி என்ன செய்வீர்கள்?’ என்று கேட்பதைப்போல இருந்தது நேருவின் நடவடிக்கைகள்!
காமராஜர் இருக்கும்போது, லால்பகதூர் சாஸ்திரி இருக்கும்போது, நிஜலிங்கப்பா இருக்கும்போது, கோவிந்த வல்லபந்த் இருக்கும்போது துணிச்சலாக இந்திராவை காங்கிரஸ் தலைவர் நாற்காலியில் கொண்டுவந்து நேரு உட்கார வைக்கிறார் என்றால், இந்தக் கட்சியில் தனக்குப் பிறகு தன்னுடைய மகள் இந்திராதான் இந்தப் பதவிக்கு வரத் தகுதியானவர், இந்திரா மட்டுமே தகுதியானவர் என்று நினைத்ததுதான் காரணம். இன்று ராகுல் காந்தியின் துதிபாட ஒரு திக் விஜய்சிங் இருப்பதைப்போல அன்று இந்திராவுக்கு கோவிந்த வல்லபந்த் கிடைத்தார். 'நான் பிரதமராக இருக்கும்போது என் மகள் காங்கிரஸ் தலைவராக இருப்பது நல்லதல்ல’ என்று நேரு சும்மா சொல்லிப் பார்த்தார். கடைசியில் 'வேறு வழியில்லாமல்’ இந்திரா தலைவர் ஆனார். இன்று ராகுலை அறிமுகப்படுத்துவதற்கு எந்த வார்த்தையைச் சொல்கிறார்களோ அந்த வார்த்தையை நேரு சொன்னார். ''புது முகங்களை வரவேற்க மக்கள் தயாராகிவிட்டார்கள்'' என்று நேரு அன்று சொன்ன வார்த்தைதான் இன்று வரைக்கும் அனைத்து அரசியல் தலைவர்களாலும் தந்திரமாக உச்சரிக்கப்படுகிறது.
'இந்திரா என்னுடைய மகள் என்பதில் முதலில் பெருமைப்பட்டேன். என்னுடைய தோழர் என்பதில் அடுத்ததாகப் பெருமை அடைந்தேன். இப்பொழுது என்னுடைய தலைவர் என்ற பெருமையும் அடைந்துவிட்டேன்'' என்று நேரு சொன்னார்.
ஆனால் நேரு பெருமைப்படுவது மாதிரி எதையும் செய்பவராக இந்திரா இல்லை!