Tuesday, January 14, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை!-Part 2 (இந்திய பிரதமர்கள் )


ராபர்ட் கிளைவ் இறந்து விட் டார். ஆனால், இப்போது இருப்பவர்களுக்கும் ராபர்ட் கிளைவுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல முடி யுமா?  
 ''ராபர்ட் கிளைவ் குவித்த செல் வத்துக்கு அளவே இல்லை. வங் காளத்தில் இருந்த பொக்கிஷத்தை எல்லாம் தன்வசப்படுத்தினார். இந்திய மன்னர்கள் குவியல் குவியலாகச் சேகரித்து வைத்திருந்த நாணயம், நகைகள், ரத்தினங்கள் அனைத்தும் கிளைவுக்கு சொந்தம் ஆக்கப்பட்டது. கிளைவ், பொன்குவியல்களுக்கும் வெள்ளிக் குவியல்களுக்கும் இடையே உல்லாசமாக இருந்தார். வைரங்கள், நவரத்தினங்களுக்கு மத்தியில் கிளைவ் மூழ்கிக் கிடந்தார்'' என்று சுதேசித் தலைவர்கள் சொல்லவில்லை. தன்னுடைய குறிப்புகளில் இப்படி எழுதியிருப்பது மெக் காலே. இன்று நாம் எந்தச் சட்டத்தைக் கடைப்பிடிக்கிறோமோ... எந்தக் கல்வி முறையைப் பின்பற்றுகிறோமோ... அதற்கு அடித்தளம் அமைத்த மெக்காலேதான் இப்படி வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்!
ராபர்ட் கிளைவ் இறந்து போனார் என்றால் ராபர்ட் வதேரா யார்? கேத்தன் தேசாய் யார்? அமர் சிங் யார்?
இந்தியாவிலேயே உயர்ந்த ரியல் எஸ்டேட் அதிபராக ராபர்ட் வதேரா உயர்ந்திருக்கிறார். 2007-ம் ஆண்டு பித்தளை வியாபாரம் பார்க்க ஆரம்பித்த ராபர்ட் வதேரா, இந்தியாவின் உயர்ந்த குடும்பத்தின் மகளான பிரியங்காவை அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டவர். ஒரே ஒரு இடத்தை விற்று 42 கோடி ரூபாய் பணம் கிடைத்தது. ஆனால், 2009-ம் ஆண்டுக்குப் பிறகு வாங்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு மற்றும் அவை வந்த பாதைகள் பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம். அவரது சொத்தும் முதலீடும், 20 ஆண்டுகளாக பெருந்தொழிலில் இருப்பவர்களால்கூட அடைய முடியாதது. ஊடகங்களுக்கு முன்னால் தலைதொங்கி ராபர்ட் வதேரா நின்றுகொண்டு இருக்கிறார். சோனி யாவிடம் ராகுல் சொன்னதாக டெல்லியில் ஒரு ஜோக் உண்டு.
 
''முதலில் 2ஜி, அப்புறம் நிலக்கரிஜி, இப்போது ஜிஜாஜி'' என்றாராம் ராகுல். (ஜியாஜி என்றால் மச்சான்!)
2008-ம் ஆண்டு இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு ஏற்பட்டது. இதனால், இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக்கொண்டதால், காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லா வாக்கு கோரப்பட்டது. பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்களுக்கு மாற்றி வாக்களிக்குமாறு கோரிக்கை வைத்த அமர் சிங், ஒவ்வொரு எம்.பி-க்கும் மூன்று கோடி ரூபாய் தருவதாக வாக்களித்தார். 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்துக்கு வந்த எம்.பி-க்கள் சிலர், தங்களுக்குத் தரப்பட்ட ஒரு கோடி ரூபாயைக் கொண்டுவந்து காட்டினர். கரன்சியால் மிதந்தது நாடாளுமன்றம். ஒரே ஒரு தடவைதான் இப்படி பணத்தைக் கொண்டுவந்து காட்டினர் என்பதால், ஒரே ஒரு தடவைதான் இப்படி நடந்திருக்கும் என்று சொல்ல முடியுமா? அந்தப் பெரிய மனிதர்கள் யாரும் இதுவரை சிக்கவில்லை!
இப்படித்தான் சுதந்திரத்துக்கு முந்தைய இந் தியாவிலும் பணம் பொங்கியது!
''கடல் பொங்குவதுபோல் இந்தியாவின் பணம் இங்கிலாந்துக்குப் பொங்கி வந்தது''- என்று எழுதினார் மெக்காலே. அந்த அளவுக்கு கிழக்கிந்திய கம்பெனி மூலமாக இந்தியாவின் பணம் இங்கிலாந்துக்குப் போனது. கிரீஸ் தேசத்து அலெக்சாண்டர், இந்தியாவுக்குள் நுழைந்ததும் எப்படி நடந்துகொண்டாரோ... கஜினி, வட இந்தியாவின் கானோஜ் சமஸ்தானத்தில் எதைச் செய்தாரோ... அதைத்தான் பிரிட்டிஷ் அரசாங்கமும் செய்தது. இப்படி, வந்தவர்கள் எல்லாம் கொள்ளையடிக்கும் வசதி கொண் டதாகத்தான் இந்தியா இருந்தது.
இந்தியாவுக்கு பிரிட்டிஷார் ஏன் வந்தனர்? வியாபாரம் செய்வதற்கு! இந்தியா ஏழை நாடாக இருந்திருந்தால், யாராவது வியாபாரம் செய்வதற்கு வந்திருப்பார்களா? வளமுள்ள இடத்தில்தானே வியாபாரம் நடக்கும்? எனவே, பிரிட்டிஷார் வருவதற்கு முன்பே இந்தியா வள மாகத்தான் இருந்தது.
''வங்கதேசம் சொத்து உள்ள நாடாக இருந்தது. வழிப்போக்கர்களில் யாராவது சொத்தை வழியில் இழந்து விட்டால், அந்த சொத்தைக் கண்டெடுத்தவர்கள் பக்கத்து மரங்களில் அதைக் கட்டி வைத்து விடுவார்கள். அதன்பிறகு அருகில் உள்ள காவலர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள்'' என ஹால்வெல் என்ற வெளிநாட்டுப் பயணி எழுதி இருக்கிறார். இதே வங்கநாடு, பிரிட்டிஷ் ஆளுகைக்கு வந்த பிறகு, பெரிய மாறுதலை அடைந்தது. இந்தியாவில் இருந்து இங்கிலாந்து போகும் ஒவ்வொரு கப்பலிலும் வங்கநாட்டு நிதிக்குவியல் போய்க்கொண்டே இருந்தது.
இந்த நிலைமை 1850-களில் அப்படியே மாறி விட்டது. இதை, டாக்டர் மார்ஷமன் எழுதினார். ''வங்கநாட்டில் உள்ள மக்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக மாறியிருக்கிறது. நாய் வசிக்கத் தகுதியற்ற பாழடைந்த சிறு குடிசைகளில், கந்தல் துணியுடனும் ஒருவேளை உணவு இல்லாமலும் மக்கள் துன்பப்படுகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு 40 லட்சம் ரூபாய் வருமானத்தை மட்டும் திரட்டுபவர்களின் காதுகளில், மக்களின் பரிதாபக் கூக்குரல் விழாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?'' என்று கேட்டார்.
நான்கு விதங்களில் பணத்தை கிழக்கிந்திய கம்பெனி திரட்டி, இங்கிலாந்துக்குக் கொண்டுசென்றது. அன்றைக்கு இருந்த மன்னர்களிடம் இனாமாகவும் காணிக்கையாகவும் பெற்ற பணம், மக்களிடம் வசூல் செய்தது, கம்பெனி ஆட்கள் செய்த வர்த்தகத்தின் மூலமாக திரட்டிய பணம், சுதேச சமஸ்தானங்களிடம் இருந்து தட்டிப்பறித்த பணம்... என்று பொன்னும் பொருளும் பணமும் திரட்டப்பட்டது.
இந்தியாவின் உள்நாட்டு வியாபாரம் அனைத்தும் கம்பெனியின் நன்மைக்காக நடந்தது. கம்பெனி அதிகாரிகள் இந்திய தறி நெசவாளர்களைக் கொடுமைப்படுத்தினர். ஒரு விலையைச் சொல்லி, அந்த விலைக்குத்தான் பொருட்களைத் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். தொழிலாளர்களையும் நெசவாளர்களையும் கம்பெனிக்காக மட்டுமே தவிர, மற்றவர்களுக்கு வேலை செய்யக் கூடாது என்று கட்டளையிட்டனர். இதை எழுதி வாங்கினர். எழுதித்தர மறுத்தவர்களை, மரத்தில் கட்டிவைத்து அடித்தனர். இந்தக் கொடுமைக்குப் பயந்த பல நெசவாளிகள் தங்களது கையின் கட்டை விரலை வெட்டிக்கொண்டனர். 'விரல் இருந்தால்தானே நெசவு நெய்துதரச் சொல்வாய்?’ என்று நினைத்து கட்டை விரலை வெட்டிக்கொண்டார்களாம். சில இடங்களில் தங்களது பேச்சைக் கேட்காத தொழிலாளர்கள் மற்றும் நெசவாளிகளின் கட்டை விரலை பிரிட்டிஷாரே வெட்டியுள்ளனர்.
1765 முதல் 1771 வரையிலான ஐந்து ஆண்டு காலத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு நான்கு கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் கம் பெனிக்கு வந்த மொத்தப் பணம் 13 கோடி என்றால், மூன்றில் ஒரு பங்கு பணம் இங்கிலாந்துக்குச் சென்றது. படை நடத்த, போர் புரிய, சம்பளம் கொடுக்க, சாப்பிட, உள்கட்டமைப்பு வசதி போக மிஞ்சியது அனைத்தையும் இங்கிலாந்துக்குக் கொண்டுபோனார்கள்.
கம்பெனி வர்த்தகம் செய்தது போக, கம்பெனியின் அதிகாரிகள் தனியாக வர்த்தகம் பார்த்தனர். உப்பு, வெற்றிலை பாக்கு, புகையிலை வியாபாரம் பார்த்தார் கிளைவ். அவர் இதைச் செய்யக் கூடாது என்று கம்பெனியின் வர்த்தகர்களும், கீழே இருந்த அதிகாரிகளும் கோரிக்கை வைத்தனர். ஆனாலும், அவர் கேட்கவில்லை.
புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான விசாரணை ஆணையத்தை பிரிட்டிஷ் அரசு அமைத்தபோது, அதில் ஜான்ஸவிவன் என்ற நிர்வாகி (1804 முதல் 1841 வரை இந்திய நிர்வாகத்தில் அதிகாரியாக இருந்தவர்) சாட்சியம் அளித்தார். ''தர்மத்தின்படியும் பொருளாதார நிலை மையின்படியும் என்னைக் கேட்டால், அவர்களது பழைய சுதேச மன்னர்களிடமே இந்த ஆட்சியை ஒப்படைத்துவிடுவதே சரியானது என்று கூறுவேன். அவர்களிடம் இருந்து நாம் பணம் பெறுவதை அவர்கள் குறை சொல்லவில்லை. ஆனால், அவர்களிடம் இருந்து பெறும் பணத்தை அவர்களது நாட்டில் செலவழிக்காததையே அவர்கள் குறை சொல்கிறார்கள். இந்தியா சுரண்டப்படுவதாக நினைக்கிறார்கள். எல்லா நல்ல பொருள்களையும் - பஞ்சு, பன்னீரை இழுத்துக்கொள்வதைப் போல - நம் ஆளுகைக்கு இழுத்துக்கொண்டு, கங்கையில் உள்ளதை தேம்ஸ் நதிக்கரையில் கொண்டுபோய் கொட்டிக்கொண்டு இருக்கிறோம்'' என்று அவர் சாட்சியத்தில் சொன்னார்.
அப்போது தேம்ஸில் மட்டுமே கொட்டினார்கள். இன்று எல்லா நாடுகளிலும் கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதில் பேதம் காட்டுவது இல்லை!
இந்த வருத்தங்கள் மெள்ள எழுந்தபோது, 'உங்களுக்கு என்ன சலுகை எல்லாம் செய்து தருகிறோம்’ என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் பட்டியல் போட ஆரம்பித்தனர். ''தற்கால நாகரிகத்தை ஒட்டிய தொழில்களையும், தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சாதகமான ஒரு அரசாங்கத்தை அடைந்த பாக்கியம் ஒன்றே உங்களுக்குப் போதுமே'' என்று, லண்டனில் இருந்த இந்திய ஆலோசனை சபை உறுப்பினர் ஸர்ஜான் ஸ்ட்ராச்சி சொன்னார்.
இதைப் படிக்கும்போது ஆ.ராசா சொன்னது உங்களுக்கு ஞாபகம் வரவேண்டும். ''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் செய்த ஒரே தவறு, சாமான்யர்கள் அனைவர் கையிலும் செல்போன் இருக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டேன் அல்லவா... அது ஒன்றுதான் நான் செய்த தவறு'' என்றார் ஆ.ராசா. பிரிட்டிஷார் எல்லாம் செய்துவிட்டு, தொழில் வளர்ச்சி என்று பேசினர். இன்றைய இந்திய ஆட்சியாளர்கள், மக்கள் நலன் என்கிறார்கள்.
அன்றைக்கு ராபர்ட் கிளைவ் கொள்ளையடித்துச் சென்ற பணத்துக்கு அவரை மட்டுமே குற்றம்சாட்டி தண்டனை வழங்கியது பிரிட்டிஷ் கோர்ட். இன்றும் அதுதானே நடக்கிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கில், ஆ.ராசா மட்டுமே குற்றவாளி என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை அறிக்கை சொல்கிறது. ''இல்லை! இந்தியாவின் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் தெரியாமல் எந்த விதிமுறையையும் நான் மாற்றவில்லை. அனைவருக்கும் எனது நடவ டிக்கைகளைச் சொல்லியே வந்தேன்'' என்கிறார் ஆ.ராசா. இன்னும் ஒருபடி மேலே போன கருணாநிதி, ''தனிப்பட்ட ஒருவரால் இவ்வளவு பெரிய விஷயத்தைச் செய்திருக்க முடியுமா?'' என்று கேட்டார். ராசாவை மட்டும் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. பிரதமரையும் நிதி அமைச் சரையும் ராசா குற்றம் சாட்டுகிறார். இதில் இருந்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதி என்ன?
கற்பரசி கண்ணகியா, சீதையா என்று பட்டிமன்றம் நடந்ததாம். கண்ணகியை கற்பரசி என்று பேசியவர்கள், சீதையைக் கொச்சைப்படுத்தினர். சீதையைக் கற்பரசி என்று பேசியவர்கள், கண்ணகியைக் கொச்சைப்படுத்தினர். விவாதத்தைக் கேட்டவர்கள், கண்ணகியையும் சீதையையும் சந்தேகப்பட ஆரம்பித்தார்களாம். அப்படித்தான் நடந்தது ஸ்பெக்ட்ரம் விவகாரமும்!
''அனைத்து நிலைகளிலும் ஊழல்கள் நமது சமுதாயம் முழுவதும் பெருநோயாக பரவிவருகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஊழல் என்ற நோய்க்கு ஏழைகள்தான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. அவர்கள்தான் அதன் சுமையைச் சுமக்க வேண்டி இருக்கிறது'' என்று 83-வது காங்கிரஸ் மாநாட்டில் சோனியா சொன்னார். அதையே அவரது அத்தை இந்திராவும் சொன்னார். அதையே நேருவும் சொன்னார். ஆனால், என்றும் மாறாததாக ஊழல் இருந்தது. இருக்கிறது. இருக்கும்!
''கள்ளச் சந்தைக்காரர்களும் கறுப்புப் பணக்காரர்களும் அதிகமாகிவிட்டார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் அருகில் உள்ள மின் கம்பங்களில் அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்படுவார்கள்'' என்று அடிமை இந்தியாவில் நேரு சொன்னார். ஆனால் அவரால் அதைச் செய்ய முடிந்ததா?
மரத்தை வெட்ட மரக்கோடரியே பயன்படுவதைப்போல, பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்திய முறைகேடுகளை அவரது மருமகன் ஃபெரோஸ் காந்தியே வெளிப்படுத்த வேண்டியதாயிற்று!
 இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி, மேனகா காந்தி, ராகுல் காந்தி, வருண் காந்தி, பிரியங்கா காந்தி... என்று 'காந்தி’யை ஒட்டாகச் சேர்க்கப்பட்டு இருப்பதற்குக் காரணம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மீதான பாசம், பற்று, நேசத்தால் அல்ல. காந்தி என்பது ஃபெரோஸ் காந்தியின் குடும்பப் பெயர். குஜராத்தைச் சேர்ந்த ஜஹான்கீர் காந்திக்கும் ஹட்டா காந்தி என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர் ஃபெரோஸ் காந்தி. பார்சி வகுப்பைச் சேர்ந்தவர்கள் இவர்கள். குஜராத்தில் பார்சிக்களும் இந்துக்களும் தங்களது குடும்பப் பெயராக காந்தி என்று வைத்துக்கொள்வது உண்டு. அதனால்தான் மகாத்மாவுக்கும் காந்தி என்ற பெயர் வந்தது. ஃபெரோஸுக்கும் காந்தி என்ற பெயர் வந்து சேர்ந்தது. ஆனால், மகாத்மா காந்தியின் வாரிசுகளாக இவர்கள் அடையாளப்படுத்திக் கொண்டு அரசியல் நடத்தியதுகூடப் பரவாயில்லை. அது தவறுகளை மறைப்பதற்கான முகமூடியாகப் போனதுதான் மகாத்மாவுக்கு அவலம்.
இந்திராவின் கணவர் என்பதற்காகவோ, நேருவின் மருமகன் என்பதற்காகவோ ஃபெரோஸுக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை. சுதந்திர தாகம்கொண்ட இளைஞராகத்தான் இளமைப் பருவம் முதல் அவர் வளர்ந்தார். வர்த்தகக் குடும்பத்துக்கு அரசியல் அலர்ஜி என்பதால், போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றில் கலந்துகொள்ளாமல் பிள்ளையை வளர்க்கவே ஃபெரோஸின் பெற்றோர் விரும்பினார்கள். அலகாபாத் ஈவினிங் கல்லூரியில் மதியநேர உச்சி வெயிலில் பெண்கள் படையோடு ஆர்ப்பாட்டம் செய்யப் போன, நேருவின் மனைவி கமலா மயங்கி விழ... அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த ஃபெரோஸ் போய் அவரைத் தாங்கிப்பிடிக்க... அதன் பிறகுதான் ஆனந்த பவனத்துக்குள் அவர் போனார். ஆரோக்கியமற்ற உடல்நிலையைக் கொண்ட கமலா பெரும்பாலும் மருத்துவமனையிலும் படுக்கையிலும் காலம் கழித்தபோது அடிக்கடி போய் பார்த்து வந்தார் ஃபெரோஸ். அதன்பிறகு இவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அந்தக் காலக்கட்டத்தில்தான் இந்திராவைச் சந்தித்தார். காதல் வயப்பட்டார். இந்திராவுக்கு 16 வயது இருக்கும்போது தன்னுடைய காதலைச் சொன்னார் ஃபெரோஸ். ஆனால், அதனை இந்திரா ஏற்கவில்லை. அம்மாவின் சிகிச்சைக்காக ஜெர்மன் போனார் இந்திரா. ஃபெரோஸும் படிக்க லண்டன் போனார். கமலாவின் உடல்நிலை மோசமானது. கமலாவைப் பார்க்க ஃபெரோஸ் சென்றிருந்த நேரத்தில்தான் அவர் இறந்து போனார். அதற்கு முன்னரே இந்திரா மீதான தனது காதலை ஃபெரோஸ், கமலாவிடம் சொல்ல, 'அவள் சின்னப் பெண்’ என்று சொல்லி மறுத்துவிட்டார். தன்னுடைய அம்மாவின் கடைசிக் காலத்தில் கவனித்துக் கொண்டவர் என்ற அடிப்படையில் இந்திராவுக்கும் ஃபெரோஸ் மீது கரிசனம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. அதாவது 1933 ஃபெரோஸ் வெளிப்படுத்திய காதலை, நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் இந்திரா ஏற்றுக்கொண்டார். அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் நேருவிடம் இந்திரா சொன்னார். அவரும் இந்தக் காதலை ஏற்கவில்லை. தட்டிக் கழிக்க நினைத்தவர் காந்தி உட்பட தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரது சம்மதத்தையும் இந்திரா வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார் நேரு. காந்தி ஏற்றுக் கொண்டார். ஆனால் நேரு குடும்பத்தினர் அனைவரும் எதிர்த்தார்கள். ஆனால், இந்திரா தன்னுடைய வைராக்கியத்தால் வென்று, ஃபெரோஸைக் கைப்பிடித்தார்.
தன்னை நேரு, முதலில் இருந்தே ஏற்கவில்லை என்ற கோபம் ஃபெரோஸுக்கு இருந்தது. திருமணம் ஆனதும், இந்திராவை அந்த பெரிய வீட்டில் இருந்து அழைத்துச் சென்று தனிக்குடித்தனம் வைத்தார் ஃபெரோஸ். நேருவின் வெளிச்சத்தில் வாழ விரும்பவில்லை. ஆனால் இந்தியத் தலைவர்கள் அனைவரும் சுற்றிச்சுற்றி கைதான சூழ்நிலையில் ஃபெரோஸும், இந்திராவுமே கைதாகி பல மாதங்கள் சிறையில் இருந்தார்கள். விடுதலை ஆகி வந்தவர்கள், ஆனந்தபவனத்தில் குடியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏனென்றால் அப்போது நேரு, சிறையில் இருந்தார். அதன்பிறகு அப்படியே தங்கிவிட்டார் ஃபெரோஸ்.
முதல் குழந்தை பிறந்தது. ராஜீவ் ரத்னா என்று பெயர் வைக்க ஆசைப்பட்டார் இந்திரா. பிர்ஜிஸ் என்று வைக்க நினைத்தார் நேரு. 'எங்காவது நேரு என்று சேர்க்க முடியுமா?’ என்று தாத்தா மனது துடித்தது. ஃபெரோஸ் தனது குடும்பப் பெயரான காந்தி என்பதைச் சேர்க்க ஆசைப்பட்டார். அனைத்தையும் சேர்த்து ராஜீவ் ரத்னா பிர்ஜிஸ் நேரு காந்தி என்று பெயர் வைக்கப்பட்டது. தன்னை மனப்பூர்வமாக நேரு ஏற்றுக் கொள்ளவில்லை என்று நினைத்த ஃபெரோஸ், தனது வாழ்க்கையை லக்னோவை நோக்கி நகர்த்தினார். அடிப்படையில் மார்க்சீய ஆர்வம் கொண்டவர் ஃபெரோஸ். பாசிசத்துக்கு எதிரான குரல்களைப் பதிவு செய்தவர். அடக்குமுறைகளை எதிர்த்தவர். எழுதுவதிலும் அதீத விருப்பம் கொண்டவர். 'நேஷனல் ஹெரால்ட்’ இதழின் நிர்வாக இயக்குநராக ஆனார். இது ஒருகாலத்தில் நேரு நடத்திய பத்திரிகைதான். லக்னோவுக்கும் அலகாபாத்துக்கும் போய் வந்துகொண்டு இருந்தார் இந்திரா. அதன் பிறகு சஞ்சய் பிறந்தார். சஞ்சய் என்று பெயர் வைக்கப் போகிறோம் என்றோ, என்ன பெயர் வைக்கலாம் என்றோ ஃபெரோஸிடம் யாரும் கேட்கவில்லை, இந்திரா உட்பட. அதனையும் சகித்துக்கொண்டார். இந்திராவுக்கு இளமைக் காலம் முதல் காச நோய் உண்டு. அதனால், குழந்தைகளை தனியாக வளர்ப்பது சாத்தியம் இல்லை என்பதால் அப்பா வீட்டோடு இருந்தாக வேண்டிய நெருக்கடி அவருக்கு. இந்த நிலையில் ரேபரேலி தொகுதியில் இருந்து ஃபெரோஸ் எம்.பி-யாக தேர்வானார். எம்.பி-களுக்கான பங்களா கிடைத்தது. நேருவின் தீன்மூர்த்தி பவனில் இருந்து படிப்படியாக வெளியேறி எம்.பி. பங்களாவில் தங்க ஆரம்பித்தார்.

 

நேருவின் தலைமையில் புதிய முகங்கள் அதிகாரம் செலுத்தும் ஆட்சி உட்கார்ந்து இருந்ததை ஃபெரோஸால் ஏக்கத்தோடும் ஏமாற்றத்தோடும் பார்த்துக்கொண்டு இருக்கவே முடிந்தது. அந்த வட்டாரத்துக்குள் அவரால் போகவே முடியவில்லை. அந்த விரக்தியும், தன்னை ஆரம்பத்தில் இருந்தே உதாசீனம் செய்த நேருவின் மீதான கோபமும், தன்னைவிட அப்பா நேருவின் வார்த்தைகளுக்கே மனைவி இந்திரா கட்டுப்படுகிறார் என்ற எரிச்சலும் சேர்ந்தது. அப்போது அவருக்குள் இந்த பத்திரிகையாளன் மெள்ளத் தலைதூக்கினான். நேருவும் நேருவைச் சுற்றி இருப்பவர்களும் என்ன செய்கிறார்கள் என்பதைத் தோண்டித்துருவ ஆரம்பித்தார். காங்கிரஸ் கட்சியைத் தாண்டி வேறு கட்சியில் இருந்து வந்த எம்.பி-க்களோடு கைகோத்து அலைய ஆரம்பித்தார். அப்போது அவர் கையில் இன்ஷூரன்ஸ் மோசடி வசமாக மாட்டியது. இன்ஷூரன்ஸ் திட்டத்தில் செய்யவேண்டிய மாறுதல்கள் சம்பந்தமான புதிய மசோதா அமல்படுத்தப்பட்டபோது மைக் பிடித்தார் ஃபெரோஸ். வீட்டுக்குள் இருந்தே வாள் பாய்ந்து வரும் என்று நேரு எதிர்பார்க்காத பேச்சு அது.
இதோ நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் பேசுகிறார்...
''காலம் தாழ்ந்து நடந்திருந்தாலும் நல்லதே நடந்திருக்கிறது. இந்தியாவில் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களைப்போல எக்கச்சக்கமான இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் நிறைய முளைத்துவிட்டன. இவற்றில் நடந்துவரும் குளறுபடிகள்தான் இப்போது இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரக் காரணம். இவர்கள் பொதுமக்கள் பணத்துடன் விளையாடுவதை அனுமதிக்க முடியுமா?
ஒரு கம்பெனியில் முதலீடு, பின்பு வேறு கம்பெனியில், அதன் பிறகு வேறு ஒரு கம்பெனியில், பின்னர் பேர் இல்லாத பற்பல கம்பெனிகள் என்ற வகையில் பணத்தை பந்தாடிப் பந்தாடி கொள்ளை லாபம் அடித்துள்ளார்கள். இவை அனைத்துமே அவர்கள் உடல் உழைத்து ஈட்டிய பணமா? இல்லவே இல்லை. ஒன்றும் தெரியாத அப்பாவி பொதுமக்கள் பணம்தான். இது நமது நிதித் துறை வசம் உள்ள வருமானவரித் துறைக்குத் தெரியாதா? தெரியாது என்று சொன்னால் நம்பும்படியாக இருக்கிறதா? ஏன் இந்த அரசாங்கம் கண்டும் காணாதது போல இருக்கிறது? யாரைக் காப்பாற்ற இந்த அரசாங்கம் தன் நம்பகத்தன்மையை இழக்க வேண்டும்? நிதி அமைச்சர் எதற்காக காலஅவகாசம் கொடுக்கிறார்? ஏன் ஒட்டு மொத்தமாக இந்தப் பணத்தைத் திரும்பப்பெற முயற்சி எடுக்கவில்லை?

இதற்கெல்லாம் நம்முடைய அரசாங்கமும் நிதி அமைச்சகமும் முழுபொறுப்பேற்று நிலைமையை சீரடையச் செய்ய வேண்டுமா இல்லையா? அங்கும் இங்கும் சிற்சில விசாரணைகள் மட்டுமே நடைபெற்றன. நான் நமது வருவாய்த் துறை அமைச்சரிடம் கேட்டேன். அவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஜால்ஜாப்பு சொல்கிறார். 'நான் அட்டர்னி ஜெனரலை கன்சல்ட் செய்கிறேன்’ என்பார். சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பார். ஆனால், இரண்டரை வருடங்கள் ஓடிவிட்டன. ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை. நான் இறுதியாக நிதி அமைச்சரைக் கேட்டுக் கொள்வதெல்லாம்,
எப்படியாவது மோசடி செய்யப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுங்கள். கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் என்பது பொதுமக்கள் வியர்வை சிந்தி உழைத்துச் சம்பாதித்த பணம். இவ்வாறு செய்வது இந்த அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் கடமை.'' - ஃபெரோஸின் இந்தப் பேச்சு இன்றுவரை பொருத்தமாகத்தான் இருக்கிறது. இரண்டரை வருடங்களில் எதுவும் நடக்கவில்லை என்று ஃபெரோஸ் வருந்தினார். 60 ஆண்டுகளாக அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. 'சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன்’ என்ற வார்த்தைக்கு வாய் இருந்தால் கதறிக்கதறி அழும். பிரதமர் ஆரம்பித்து, விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் உட்பட அனைவருமே, 'சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’ என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். எந்தச் சட்டப்படி என்பதுதான் இன்றுவரை விளங்கவில்லை. அட்டர்னி ஜெனரல் பற்றியும் ஃபெரோஸ் சொன்னதில் இன்றுவரை மாற்றம் இல்லை. நிலக்கரி வழக்கில் கோப்புகளே மாயம் ஆனது. 'கோப்புகளைக் காணாமல் போனதைக் கண்டுபிடிக்க என்ன முயற்சி எடுத்தீர்கள்? இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்தீர்களா?’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்டபோது, அட்டர்னி ஜெனரல் வாகனவதி, 'சி.பி.ஐ-க்கு நிலக்கரித் துறை அமைச்சகம் ஒத்துழைப்பு அளிக்கும்'' என்று மையமாகச் சொன்னார். இன்னொருநாள் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டார். ''எல்லா விவரங்களையும் மூளையில் பதிவுசெய்து ஒப்பிக்க என்னால் இயலாது. முன்னறிவிப்பு இன்றி என்னிடம் எழுப்பப்படும் கேள்விகள் சங்கடமாக உள்ளது'' என்று மழுப்பினார். மறுநாள் வந்து, ''நான் இப்படி பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று சொன்னதும் அவர்தான்.
ஃபெரோஸின் பேரன் பிரதமர் ஆகப் போகும் காலக்கட்டத்திலும் எதுவுமே மாறவில்லை!


Thursday, January 9, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை!-Part 1 (இந்திய பிரதமர்கள் )


ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் எதற்காக இருக்கிறது? 
55 கோடி ரூபாய் பணத்துக்காகத்தான் மகாத்மா உயிரைவிட்டார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

''நான் (கோட்சே) ஏன் காந்தியைக் கொலை செய்தேன்? இப்படிப்பட்ட சிந்தனை எனக்கு எதற்காக வந்தது? தாதாபாய் நௌரோஜி, விவேகானந்தர், கோபாலகிருஷ்ண கோகலே, பாலகங்காதர திலக், வீரசாவர்க்கர் ஆகியோரின் படைப்புகளையும், இவற்றுக்கு எல்லாம் மேலாக காந்தியின் எழுத்தோவியங்களையும்தான் அதிகம் படித்தேன். நான் படித்த படிப்பெல்லாம் என் கடமை எது என்பதை உணர்த்தியது.
இந்த நாட்டைப் பிளந்து துண்டாடியவரை தெய்வம் என்று மற்றவர்கள் மதித்தாலும், என் உள்ளம் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. காந்தி மீது எனக்கு கோபம்தான் வருகிறது. காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பது எனக்குத் தெரியும். என் எதிர்காலம் சிதைந்துபோய்விடும் என்பதும் உறுதி. ஆனால், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருந்தும் அட்டூழியத்தில் இருந்தும் இந்தியா விடுதலை அடைய வேண்டும். என்னை நீங்கள் முட்டாள் என்று சொல்லலாம். ஆனால், இந்தியா பலமுள்ள நாடாக ஆகவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இந்தியா பலமுள்ள வல்லரசாக மாற வேண்டுமானால், காந்தியின் கொள்கை​களை நாம் கைவிட வேண்டும். அவர் உயிரோடு இருந்தால், அவரது விருப்பத்தை மீறி நம்மால் செயல்பட முடியாது. அதனால்தான் அவரைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டேன். தேசத்தந்தை என்று அவர் அழைக்கப்பட்டார். ஆனால், உண்மையான தந்தைக்குரிய கடமையில் இருந்து அவர் தவறிவிட்டார். அதனால்தான் பட்டப்பகலில் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்தியைச் சுட்டேன். இது உண்மை...


இந்தியாவின் தலையெழுத்தைத் தீர்மானித்த மகாத்மா காந்தியின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கோட்சே அளித்த வாக்குமூலத்தின் சாராம்சம் இது!
'இந்தியாவை இரண்டு துண்டாடுவதற்கு காந்தி சம்மதம் தெரிவித்தார். தனது பிரார்த்தனைக் கூட்டங்களில் பகவத் கீதையுடன் குரான் ஓதுவதற்கு அனுமதித்தார். இந்துக்கள் கொல்லப்படும்போது அமைதியாக இருந்தவர், முஸ்லிம்கள் கொலையாகும்போது அதிகமாகக் கவலைப்பட்டார்.’ - என்றெல்லாம் காந்தி மீது கோட்சேவுக்கு கோபம் இருந்தாலும், உடனடியாக காந்தியைக் கொலை செய்தே ஆகவேண்டும் என்று ஜனவரி 30-ம் தேதியை சதி நாளாகத் தீர்மானிக்க வைக்கக் காரணம்... அந்த 55 கோடி ரூபாய் பணம்!
1947 ஆகஸ்ட் முதல் கொந்தளிப்பான காலகட்டம். இந்திய - பாகிஸ்தான் எல்லையில் ரத்தக்களறி தினந்தோறும் நடக்கிறது. அந்தச் செய்திகள் உடனுக்குடன் கோட்சேவுக்கு வருகிறது. 'நம் தாய்நாடு கூறு போடப்பட்டுவிட்டது. கழுகுகள் பாரத தேவியின் சதையைத் துண்டு துண்டாகக் கிழித்துவிட்டன’ என்று தன்னுடைய கொந்தளிப்பை வார்த்தைகளால் வடிக்கிறார் கோட்சே. கொல்கத்தா நவகாளி கலவரப் பகுதிக்குப் போய்விட்டு டெல்லி திரும்பிய காந்தி, ஏழு கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் உட்காருகிறார். இந்தக் கோரிக்கைகளில்  ஒன்றுதான், பாகிஸ்தானுக்கு இந்தியா தருவதற்கு ஒப்புக்கொண்ட பணத்தைத் தரவேண்டும் என்பது!
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்கு இந்தியா 75 கோடி ரூபாய் பணத்தைத் தரவேண்டும். இதில், 20 கோடி ரூபாய் உடனடியாகத் தரப்பட்டது. மீதம் உள்ள 55 கோடியை இந்தியா தரவேண்டும். இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திக்கொண்டு இருப்பதால், அந்தப் பணத்தைக் கொடுத்தால் அதனை நமக்கு எதிரான போருக்குப் பயன்படுத்துவார்கள் என்று இந்தியா நினைத்தது. 55 கோடியைத் தராமல் இழுத்தடித்தனர். ''இந்த 55 கோடி ரூபாயை உடனடியாக பாகிஸ்தானுக்குக் கொடுத்தால்தான் உண்ணாவிரதத்தை நிறுத்துவேன்'' என்று காந்தி சொல்லிவிட்டார். காந்தியை இனியும் உண்ணாவிரதம் இருக்க அனுமதித்தால், அவர் உயிருக்கே அது ஆபத்தாக முடியலாம் என்பதை அவரது உடல் சொல்லியது.
இப்படிப்பட்ட இரண்டு கடினமான நெருக்கடியில் பிரதமர் நேருவும் அமைச்சர் படேலும் சிக்கிக்கொண்டனர். விடுதலை வாங்கிக் கொடுத்த மகாத்மாவை அநாதையாகச் சாகவிடும் அளவுக்கு அவர்களுக்கு மனம் கல்லாக ஆகிவிடவில்லை. உடனடியாக 55 கோடியை அனுப்பிவைக்கிறோம் என்று படேல் வாக்குறுதி கொடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட காந்தி தனது உண்ணாவிரதத்தை ஜனவரி 18-ம் தேதி முடித்துக்கொண்டார்.
''பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுத்தே ஆகவேண்டும் என்று நிபந்தனை விதித்து காந்தி உண்ணாவிரதம் தொடங்கிவிட்டார்'' என்ற தகவல் கோட்சேவுக்குக் கிடைக்கிறது. இதுபற்றி   அவருடைய நண்பர் ஆப்தேவிடம் சொல்கிறார். ''இந்துக்களுக்கு எதிராக எதையாவது செய்துகொண்டே இருக்கிறார் காந்தி. இந்துக்கள் மானத்தோடு வாழ வேண்டுமானால், அது காந்தி உயிரோடு இருக்கும்வரை நடக்காத காரியம். அவரைக் கொலை செய்தே ஆகவேண்டும்'' என்று அப்போதுதான் கோட்சே முடிவுக்கு வருகிறார். அதனை அவரது சகாக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஜனவரி 30-ம் தேதி காந்தி, உயிரற்ற உடலாகச் சரிகிறார்.
காந்தியின் மீது பல்லாண்டுகளாக இவர்களுக்கு கோபம் இருந்தாலும்... உடனடிக் கோபம், பாகிஸ்தானுக்கு 55 கோடி கொடுக்கக் கூடாது என்பதுதான்!
55 கோடியை இன்னொரு நாட்டுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காக மகாத்மாவைப் பறிகொடுத்தோம். ஆனால், எத்தனை லட்சம் கோடிப் பணம் இந்தியாவை விட்டு வெளியில் இந்த 60 ஆண்டுகளில் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் போயிருக்கிறது?
உலக அளவில் கறுப்புப் பணம் பதுக்கலில் இந்தியாவுக்கு 8-வது இடம் கிடைத்துள்ளது. சுவிஸ் உள்ளிட்ட பல நாட்டு வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் 25 லட்சம் கோடி முதல் 70 லட்சம் கோடி வரை இருக்கலாம் என்று சொல்கின்றன புள்ளி விவரங்கள். இங்கே இருந்து கறுப்பாக வெளியே போய் வெள்ளையாக உள்ளே வருவதை 'முதலீடு’ என்றுகூடப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
2000 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவுக்குள் வந்துள்ள அந்நிய முதலீடுகளில் 41.80 சதவிகிதம் மொரிஷியஸ் நாட்டில் இருந்தும், 9.17 சதவிகிதம் சிங்கப்பூரில் இருந்தும் வந்துள்ளது என்று கடந்த ஆண்டு மத்திய அரசு சொல்லியது. கறுப்புப் பணத்தின் கொல்லைப்புற வழி இதுதான் என்று சி.பி.ஐ. மிகத் தாமதமாகக் கண்டுபிடித்துள்ளது. மொரிஷியஸ், கேமேன் தீவுகள் உள்ளிட்ட வரியில்லாத சொர்க்கங்கள் வழியாகத்தான், இவை மீண்டும் இந்தியாவுக்குள் வருகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனையோ லட்சம் கோடி ரூபாய் வரை கணக்கில் வராத கறுப்புப் பணம் உருவாக்கப்படுகிறது என்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கறுப்புப் பணத்தை அரசியல்வாதிகள் மட்டுமே போட்டு வைத்துள்ளார்கள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிடி அமைப்பின் இயக்குநர் ரேமண்ட் பேக்கர் சொன்னதாக வெளியான அறிக்கையின்படி, அரசியல்வாதிகள் போட்டுவைத்திருப்பது மொத்தமே மூன்று சதவிகிதம்தான். மற்றவை அனைத்தும் பன்னாட்டு கம்பெனிகள், தொழில் அதிபர்கள், வர்த்தக முதலைகள் பதுக்கிவைத்திருப்பது.
அதைப்பற்றி எல்லாம் கவலைப்படும் பிரதமராக இல்லை மன்மோகன் சிங். ''கறுப்புப் பணம் இருப்பது உண்மைதான். ஆனால், இந்தப் பிரச்னை எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் இருக்கிறது. இந்தியக் கறுப்புப் பணம் குறித்து ஆளாளுக்கு ஒரு தொகை சொல்கிறார்கள். எப்படி இவர்கள் இந்தத் தொகையைக் கணிக்கிறார்கள் என்று தெரியவில்லை?'' என்று எதுவும் தெரியாதவராகக் கேட்கிறார் மன்மோகன்.
ஏழை நாடு, வளரும் நாடு... என்று சொல்லிப் புலம்பியபடி பல லட்சம் கோடி ரூபாயை வெளிநாட்டில் பதுக்குவது, ஆயிரம் கோடி, லட்சம் கோடி ரூபாய் என்று ஊழல் செய்வதும் சர்வசாதாரணமாகப் போய்விட்டது என்றால், வெள்ளையர்களை விரட்டியதே உள்ளூர்க்காரர்கள் கொள்ளையடிப்பதற் காகத்தானா? இதனைத்தானே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் செய்தார்கள். அவர்களை விரட்டியதும் அதற்குத்தானே?
பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களைப் பற்றி தாதாபாய் நௌரோஜி எழுதினார்...
''பிரிட்டிஷாருக்கு முந்தைய படையெடுப்பாளர்கள் நாட்டைச் சூறையாடி கொள்ளையடித்து திரும்பியபோது, பெரும் காயங்களை ஏற்படுத்தினர். இருப்பினும், தன் விடாமுயற்சியால் இந்தியா மீண்டும் பலம் பெற்றது. காயங்கள் ஆறின. படையெடுப்பாளர்கள் இந்தியாவிலேயே தங்கி ஆட்சியாளர்கள் ஆனபோதுகூட, அவர்களது ஆட்சி அன்றைய சூழலுக்கு ஏற்றார்போல் அமைந்திருந்ததே தவிர, நாட்டின் செல்வங்கள் ஏதும் வெளியேறவில்லை. இந்தியா உற்பத்திசெய்த பொருட்கள் இந்திய நாட்டிலேயே தங்கின.
ஆனால், ஆங்கிலேயரைப் பொறுத்தவரை பிரச்னை நூதனமானதாகும். போர்களின் மூலம் நாட்டின் மீது ஆங்கிலேயர் சுமத்திய கடன், பெரும் காயத்தை ஏற்படுத்தியது. உயிர்காக்கும் ரத்தத்தைத் தொடர்ந்து வெளியேற்றுவதன் மூலம், அடைந்த காயம் ஆறாதவாறு செய்கின்றனர்.
முன்னாள் படையெடுப்பாளர்கள் எல்லாம், இங்கும் அங்கும் வெட்டிய கசாப்புக்காரர்கள் என்றால்... ஆங்கிலேயர், நிபுணத்துவம் மிக்க கத்தியை இதயத்துக்குள் பாய்ச்சுபவர்களாக உள்ளனர். காயம் வெளியே தெரியாத அளவுக்கு நாகரிகம், வளர்ச்சி எனப் பேசி அதை மறைக்கின்றனர். அனைத்துக்கும் சவால் விட்டு இந்தியாவின் நுழைவாயிலில் காவலர்களாக நின்றுகொண்டு எத்தகைய செல்வத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்கிறார்களோ அவற்றையே பின்கதவு வழியாக அபகரித்து எடுத்துச் செல்கிறார்கள்''  - என்று எழுதினார் தாதாபாய் நௌரோஜி.
இன்றும் இந்த நிலைமைதான் தொடர்கிறது என்றால், இந்தியா பெற்றது சுதந்திரமா... வெறும் தந்திரமா? அல்லது சுரண்டலுக்கான சுதந்திரமா?
அடுத்த வீட்டுக்குள் புகுந்து அப கரிப்பவர்​களுக்குப் பெயர் கொள் ளையன், திருடன் என்றால்... சொந்த வீட்டுக் குள்ளேயே திருடுபவர்களுக்கு என்ன பெயர்? அரசியல்​வாதிகளா?!
ஊழல் செய்தார், லஞ்சம் வாங்கினார், முறைகேட்டில் ஈடுபட்டார்... என்பதெல்லாம் இன்று வெட்கித் தலைகுனிய வைக்கும் கீழான செயல்களின் பட்டியலில் இல்லை. மாறாக, அது ஒரு கௌரவமாக மாறிவிட்டது. 'அஞ்சு வருஷம் இருந்தாரு... நல்லா சம்பாதிச்சாரு’ என்று மக்களே நற்சாட்சிப் பத்திரம் கொடுக்கப் பழகிவிட்டனர். 'அஞ்சு வருஷம் பதவியில இருந்தாரு... நல்லா திருடுனாரு’ என்று எவரையும் சொல் வதில்லை. காரணம், எப்படியாவது பணம் வந்தால், அது தகுதி வந்ததாக வரவு வைக்கப்படுகிறது. அதனால்தான், இன்று ஊழல்கள் வெளிப்படையாகவே வக்காலத்து வாங்கப்படுகின்றன.
நிலக்கரி முறைகேடு வெளிச்​சத்துக்கு வந்தபோது, உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே சொன்னதுதான், இந்திய மனச் சாட்சியின் குரல்.
''நிலக்கரி... நிலக்கரி... என்று பேசு​கிறார்கள். சில நாட்களுக்கு அப்படித்தான் பேசுவார்கள். பிறகு மறந்துவிடுவார்கள். இப்படித்தான் ஒரு காலத்தில் போஃபர்ஸ்... போஃபர்ஸ்... என்று பேசினர். அதன் பிறகு மறந்துவிட்டனர் அல்லவா? அப் படித்தான் நிலக்கரியையும் மறந்து போவார்கள்! யாரும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்'' - என்று ஷிண்டே சிரித்துக்கொண்டே சொல்ல... முன்வரிசையில் இருந்தவர்கள் சிலிர்த்தபடி கைதட்டினர். உற்சாகமான ஷிண்டே, தன் முன்னால் இருந்த மேஜையைப் பெருமிதமாகத் தட்டிக்கொண்டார். அந்தக் காட்சியை டி.வி-யில் பார்த்தவர்களுக்குத் தெரியும், எத்தகைய மலை முழுங்கி மகாதேவன்கள் மத்தியில் நாம் வாழ்ந்து​கொண்டிருக்​கிறோம் என்று.
 
போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் என்பது, காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தலை​குனிவை இன்றுவரை ஏற்படுத்திவரும் விவகாரம். காங்கிரஸ் கட்சி 1984-க்கு முன்பும் பின்பும் 450 இடங்களை இந்திய நாடாளுமன்றத்தில் பெற முடிந்தது இல் லை. அப்படிப்பட்ட செல்வாக்குடன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை, 1989 தேர்தலில் அதல பாதாளத்துக்குத் தள்ளியது போஃபர்ஸ். நேரு, இந்திரா, ராஜீவ் என்று 40 ஆண்டுகளாக இந்தியா முழுக்க அறிமுகமான குடும்பத்தை... நான்கு மாதங்களுக்கு முன்பு வரை இன்னார் என்று தெரியாத வி.பி.சிங், அருண் நேரு... போன்றவர்கள் வீழ்த்தக் காரணமானது போஃபர்ஸ். அதைத்தான் மக்கள் மறந்துவிட்டனர் என்றார் ஷிண்டே. மக்கள் மறந்துவிட்டதாக ஷிண்டேக்கள் நினைக்கிறார்கள். இப்படிச் சொல்வதன் மூலமாக போஃபர்ஸ் பீரங்கிகளை எளிதாக மறைக்க முடியும் என்று நம்புவதுதான் அரசியல் துரதிருஷ்டம்.
நிலக்கரிக்கு முன்னதாகக் கிளம்பியது ஸ்பெக்ட்ரம். இந்த முறைகேட்டால் லாபம் அடைந்த நிறுவனங்கள் பெற்ற உரிமத்தை  உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது. அப்போது அமைச்சர் சல்மான் குர்ஷித் கொடுத்த வாக்கு மூலம் மொத்த இந்தியர்களையும் தலைகுனிய வைத்தது.
''இப்படியெல்லாம் லைசென்ஸை கேன்சல் செய்தால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்குவார்கள். இதனால் இந்தியாவுக்குத்தான் நஷ்டம்'' என்று குதித்தார் குர்ஷித்.
இந்திய அரசின் கஜானாவுக்கு வரவேண்டிய பணத்தை தனியார் சிலர் கொழிப்பதற்காக விதிமுறைகளை மீறி வேறுபக்கமாகத் திருப்பி விட்டனர் என்பதுதான் ஸ்பெக்ட்ரம் வழக் கின் மையமான குற்றச்சாட்டு. சிலரின் சுயநலச் சுரண்டலால் இந்திய அரசு நஷ்டம் அடைந்தது சல்மான் குர்ஷித்தின் கண்ணுக்குத் தெரியவில்லை. 'கொள்ளை லாபம் அடைய முடியாமல் வாசலை அடைத்தால் இந்தியாவுக்கு முதலீடு வராது. அதனால் இந்தியாவுக்கு இழப்பு’ என்று ஊழலுக்கு பச்சையாக உரம் போட்டு வளர்க்கிறார்கள். 'நீ வா... இந்தியாவுக்குள் வா... எந்த விதிமுறைமீறலும் செய்துகொள்’ என்று அழைப்பதற்குப் பெயர் வர்த்தகமா? கூட்டுக் கொள்ளையா?
''சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வாருங்கள்'' என்று நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் கோரிக்கை வைத்தபோது அன்றைய நிதி அமைச்சரும் இன்றைய குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு கோபம் பீறிட்டது. ''மீட்டுக்கொண்டு வாருங்கள்... மீட்டுக்கொண்டு வாருங்கள் என்றால், பணத்தை மீட்டுவர ராணுவத்தையா அனுப்ப முடியும்?'' என்று கேட்டார். யார் யார் பணம் போட்டு வைத்துள்ளனர் என்ற பட்டியலையாவது கொடுங்கள் என்றபோது, இன்னொரு பல்டி அடித்தார்.
''கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக வெளி நாடுகளில் இருந்து 36 ஆயிரம் தகவல்களைப் பெற்றுள்ளோம். ஆனால், வெளியிட மாட்டோம் என்று சொல்லித்தான் அந்தத் தகவல்களை வாங் கினோம்.'' -இது பிரணாப் அளித்த பதில். யாருக்கும் சொல்லாமல், நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க, அந்தத் தகவலை எதற்காக வாங்க வேண்டும்? அதாவது, அரசியல் நெருக்கடி காரணமாக தகவ லைப் பெற்று, அதை அப்படியே ஊறவைப்பது ஊழலுக்கு உரமாகத்தான் அமையுமே தவிர, உலை வைக்காது.
''எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போவதோ?'' என்று பாரதி பாடியது, அந்நிய வியாதிகளைப் பார்த்து. ஆனால், அது சுதேசி  அரசியல்வாதிகளுக்கும் பொருத்தமாய் இருக்கிறது.  
'இதுதான் சுரண்டல் கொள்கை’ என்ற வரையறையை இந்திய மண்ணில் முதலில் பேசியவர் தாதாபாய் நௌரோஜி. இந்தியாவின் வளம் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுதான் இங்கிலாந்தின் சுரண்டல் தத்துவம் என்று வரையறுத்தார். 'வறுமையும் இந்தியாவில் பிரிட்டிஷ் அல்லாத ஆட்சியும்’ என்ற அவரது புத்தகம் 1901-ம் ஆண்டு வெளியானது. 'இந்தியா தொடர்ந்து வறுமையான நாடாக மாறுவதற்குக் காரணம் இந்தச் சுரண்டல்தான்’ என்று பிரிட்டிஷ் ஆதிக்கத்தை பொருளாதாரப் பார்வை கொண்டு பார்த்தவர் இவர். பிரிட்டிஷ் ஆதிக் கத்தை பொருளாதார நோக்கத்துடன் பார்க்க வேண்டும் என்று காந்தியைத் தூண்டியது இந்தப் புத்தகம். ''நான் இந்தியாவின் ஏழ்மையின் ஆழ, அகலங்களை தாதாபாயின் புத்தகத்தில் இருந்துதான் தெரிந்துகொண்டேன்'' என்று காந்தி எழுதியிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியின் இந்தச் சொத்துச் சுரண்டல்தான் இந்தியாவில் வறுமைத் தன்மையை அதிகப்படுத்தியது என்று தாதாபாயும் காந்தியும் சொன்னது  உண்மையானால், இன் றைய வறுமைக்கும் ஏழ்மைக்கும், இன்றைய ஊழலும் கறுப்புப் பணமும்தானே காரணமாக இருக்க முடியும்?
 
சுதந்திரம் மலர்ந்து 60 ஆண்டுகள் ஆன பிறகும், புதிய பொருளாதாரக் கொள்கை பூத்து 23 ஆண்டுகள் ஆனபிறகும், இந்தியாவின் வறுமையும் ஏழ்மையும் குறையவில்லை. அதிகமாகத்தான் ஆகி இருக்கிறது.
கிராமத்தில் 27 ரூபாய் 20 பைசாவுக்கு மேலும், நகரத்தில் 33 ரூபாய் 40 பைசாவுக்கு மேலும் ஒரு நாளைக்கு செலவுசெய்யக் கூடியவர்களை ஏழைகளாகக் கருத முடியாது என்று வரையறுத்துள்ளனர். இந்த அடிப்படையில் பார்த்தால் 2012-ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 26 கோடியே 90 லட்சம் பேர். இந்த செலவுக் கணக்குக்கு முன்னதாக 2004-ம் ஆண்டு எடுக் கப்பட்ட கணக்கின்படி, இந்தியாவில் ஏழை களின் எண்ணிக்கை 40 கோடியே 70 லட்சம் பேர். ஒரு நாளைக்கு கிராமத்தில் 28 ரூபாயையும், நகரத்தில் 34 ரூபாயையும் வைத்து எதையுமே செய்ய முடியாது என்பது, இந்த வரையறையைச் செய்தவர்களுக்குத் தெரியும். ஆனால், 'ஃபுல் மீல்ஸ் சாப் பிடலாம்’ என்று எகத்தாளம் காட்டியவர் ரசூல் மஷீத். மருத் துவ இடத்தை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, இப்போது சிறையில் களி தின்றுகொண்டு இருக்கிறார். இந்த ரூபாயை வைத்து ஒரு நாளை ஓட்ட முடியுமா, முடியாதா என்பதல்ல கேள்வி. 'இன்னமும் 28 ரூபாய், 34 ரூபாய் தரத்துடன் இந்திய வாக்காளன் இருக்கிறானே... அவனிடம் வாக்குக் கேட்டுப் போகிறோமே...’ என்ற வெட்கம் அதிகார வர்க்கத்துக்கு இருக்கிறதா? இந்த வறுமைக்குக் காரணம், ஊழலும் கறுப்புப் பணமும்தான். கடந்த 17 ஆண்டுகளில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 940 விவசாயிகள் இறந்துபோயிருக்கிறார்கள். இன்னும் பல லட்சம் பேர் சாவின் விளிம்பில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் லட்சம் கோடி ரூபாய், ஆயிரம் கோடி ரூபாய் என்று வெளிநாடுகளில் பதுக்கும் தகவலும் நமது நாட்டில்தான் என்றால், இதை எப்படி புரிந்துகொள்வது.
இரண்டே வாக்கியத்தில் கார்ல் மார்க்ஸ் சொன்னார்: ''ஒரு முனையில் செல்வம் குவிகிறது. இதன் விளைவாக இன்னொரு முனையில் வறுமைத் துயர் குவிகிறது.''
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, கட்டாந்தரையான விவசாய நிலங்கள், தற் கொலை செய்துகொள்ளும் விவசாயிகள், தொழில் உற்பத்தியின் வீழ்ச்சி... இவ்வளவுக்கும் மத்தியில் ஊழல் செய்வதற்கு மட்டும் பணம் எங்கிருந்து கிடைக்கிறது? பதுக்குவதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது?
இந்தியா வாங்கியுள்ள கடன் 2007-ம் வருட கணக்கின்படி 62.3 பில்லியன் டாலராக இருந் தது. கடந்த ஆண்டு டிசம்பரில் அது 376.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில், குறுகியகாலக் கடன் 159.6 பில்லியன் டாலர். 2014 மார்ச் மாதத்துக்குள் 172 பில்லியன் டாலரை நாம் செலுத்தியாக வேண்டும். இந்தியாவில் வறுமை தாண்டவம் ஆடுகிறது. தலையை கடன் அமுக்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால், வெளிநாட்டில் கறுப்புப் பணம் குவிந்துகொண்டு இருக்கிறது. இந்த சொத்துச் சுரண்டலை புரிந்துகொள்ளாவிட்டால் வாழ்ந்து பயனில்லை.
எந்த அமெரிக்காவாக நாம் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ... அந்த அமெரிக்காவே பல லட்சம் கோடி கடனில்தான் இருக்கிறது. ''கடன்தான் மிகவும் மோசமான வறுமை'' என்று தாமஸ் ஃபுல்லர் சொன்னார். ''இளையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில், அவர்கள்தான் தேசியக் கடனை ஏற்றுக்கொள்ளப் போகிறவர்கள்'' என்று அமெரிக்க பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்ட அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவர் சொன்னார். அப்படி ஆசீர்வதிக்கப்பட்ட இளைஞர்கள் தலையில் ஏராளமான கடனை ஏற்றிவைத்துவிட ஊழலும் முறைகேடும்தான் காரணம்.
இந்தியாவின் மிக முக்கியமான பொரு ளாதார மேதைகளில் ஒருவரான ஜி.வி.ஜோஷி எழுதினார்... ''நாம் வரலாற்றைச் சரியாகப் படித்தால், செல்வத்தை நோக்கித்தான் அதி காரம் ஈர்க்கப்படும்.''
ஆம்! இந்தியா விடுதலை அடைந்தது முதலே பணத்தை நோக்கித்தான் அதிகாரம் ஈர்க்கப்பட்டது!