Wednesday, February 6, 2013

தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?


தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு. தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமிழின அர்ச்சகர்கள். அரசு கொடுத்த அர்ச்சகர் சான்றிதழுடன் 'அம்போஎன்று வெளியில் நிற்கின்றனர். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.
புதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம்.
சிந்துவெளி நாகரிகம்:
சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.
நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது.
சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன:
1. ஆரியர் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறு, குளியலறை, கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது.
2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை.
3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.
4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது.
5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை பற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை.
6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது.
7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
8. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப்படவில்லை. (Sir John Marshall. Mohenjo-daro and the Indus Civilization.Vol.I. 1973. Pp.109- 112. Mr. I. Mahadevan. Indian Express. August 1994.)
9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப்படுகின்றன.
10. சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. ‘Review - An Encyclopaedia of the Indus Script’ by Asco Parpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 )
11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது. ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை.
12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.
சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷ்ஷிய. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இதுதிராவிட நாகரிகம்எனக் கூறியுள்ளனர்.
கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express - Madras - 5 August 1994).
சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது.
அண்மைக் காலங்களில். டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர்.
சிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம்ரேடியோ கார்பன் ஆய்வுப்படி’ (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (ndian Express - Madras - 5 August 1994)
Fr. ஹீராஸ் ‘Studies in Proto - Indo - Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’ எனும் இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.
தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வுஃ. 'பெயராய்வுஃகள் வெளிப்படுத்துகின்றன.
சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.
பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் .சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும் உலக நாடுகளில் காணப்படும் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந் துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்) அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ''கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்
புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்
'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.
 
சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.
புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.
சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும். அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.
எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.
சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்
பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.
பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது. கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.
எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.
நதிகள், மலைகளின் பெயர்கள்
நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.
கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான öறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.
பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரிஎன்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.
தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.
இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.
இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.
தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் .சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
2 - பூம்புகார்
அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.
18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி.
''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.
கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.
இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.
இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.
இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.
இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.
சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.
மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ''அண்டர்வேர்ல்ட்என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.
மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்
1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.
2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.
3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.
4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)
5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.
6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.
7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.
8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.
9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.
10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.
11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.
12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.
13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆய்வுகளின் நம்பகத் தன்மை:
1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.
2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.
4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.
6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.
7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.
ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:
1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.
2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.
3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.
4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.
7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.
8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.
9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.
10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.
11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.
13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.
14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.
15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.
16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
17. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.
18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).
19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.
(.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.. 2007. பக். 115-122)
இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.
ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.
ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.
மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 இதழில் வெளிவந்தது)



Monday, January 21, 2013

ரஜினி இனி என்ன செய்ய வேண்டும் ?

ஞாநி
நல்ல சினிமாவின் தேவை நல்ல நடிகர்கள். ஆனால் வணிக சினிமாவின் தேவை நடிகர் அல்ல, ஸ்டாராக தன்னை உருமாற்றிக் கொள்ளக்கூடிய நடிகர்தான் அதற்குத் தேவை. அப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் வணிக சினிமா திறமையான சில நடிகர்களை ஸ்டார்களாக உருமாற்றம் செய்யும். அப்படி எம்.ஜிஆருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட சூப்பர் ஸ்டார்தான் ரஜினி.
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்திராத ஒரு வசதி ரஜினிக்கு அவருடைய நடிப்பு வாழ்க்கையின் அண்மை அத்தியாயத்தில் கிடைத்தது. அது என்ன ? எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பின்னரும் நடிக்க விரும்பினார். சட்டம் அனுமதிக்கவில்லை என்பது அவரது அதிர்ஷ்டம்.  அவர் கடைசியாக நடித்திருந்த படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். அரசியல் வெற்றியை வசப்படுத்திய சுந்தரபாண்டியனுக்கு, தனக்கு சினிமாவில் ஒரு காலத்தில் இருந்த பாக்ஸ் ஆபீஸ் வசூலை மீட்க முடியவில்லை. எம்.ஜி.ஆரின் ரசிகர்களே விரும்பாத அவருடைய சில படங்களில் ஒன்றாகவே மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் இருக்கிறது. காரணம் அவருடைய முதுமை கடைசி படங்களில் எல்லாம் வெட்ட வெளிச்சமாகப் பளிச்சென்று தெரிய ஆரம்பித்து விட்டதுதான்.
இதே சிக்கலை பாபா படத்தில் ரஜினியும் சந்தித்தார். ரஜினியின் அசல் வயதை அவர் பொதுமேடைகளில் ஒருபோதும் மறைக்காதவர் என்றாலும், சினிமா பாத்திரங்களில் இளமைத் துடிப்போடே இருக்கும் ஹீரோவாகவே தொடர்ந்து நீடிக்க அவரும் அவர் மீது பணம் கட்டி சூதாடும் பட முதலாளிகளும்   விரும்பிவந்திருக்கிறார்கள்.  ஆனால் பாபாவில் அவரை எவ்வளவு கஷ்டப்பட்டும் இளமைத்துடிப்புள்ள முகமாகக் காட்டமுடியவில்லை. வறட்டுத்தனமான கதையின் சிக்கலும் சேர்ந்து படத்தை தோல்விப் படமாக்கிவிட்டன.
அதிலிருந்து அவரால் ‘சந்திரமுகி’யில்  ஓரளவு மீள முடிந்ததற்குக் காரணம் கதையம்சமும்  மேக்கப்பில் காட்டிய கூடுதல் அக்கறையும்தான். ஆனால் உண்மையிலேயே அவ்ரை எம்.ஜி. ஆர் நிலையை அடையவிடாமல் தடுத்தது அடுத்து வந்த ஷங்கரின் சிவாஜியேயாகும்.  எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்திராத கம்ப்யூட்டர் கிராஃபிக்சும் டிஜிட்டல் இண்ட்ர்மீடியட்டும் அவற்றைப் பயன்படுத்துவதில் இருந்த ஷங்கரின் புத்திசாலித்தனமும் இப்போது ரஜினிக்கு கை கொடுத்தன. தொழில்நுட்ப உச்சத்தின் பயன் எந்திரன் படத்தில் ரஜினிக்குக் கிட்டியது. கணிசமான காட்சிகளில் ரஜினியே நடிக்கத் தேவையில்லாமல் ரஜினி நடித்த மாயையை தொழில் நுட்பம் ஏற்படுத்தித் தந்தது.
இனி அடுத்தது என்ன ? வணிக சினிமாவின் தயாரிப்பாளர்கள், பெரும் பணம் முதலீடு செய்து அதை விடப் பல மடங்குப் பெரும் பணத்தை லாபமாக ஈட்டும் பேராசையில் இருக்கும் முதலீட்டாளர்கள் போன்றோர் ரஜினியைக் கொண்டு இன்னொரு சிவாஜி, இன்னொரு எந்திரன் தயார் செய்ய முடியுமா என்ற கனவில் நிச்சயம் இருப்பார்கள். ஆனால் அதெல்லாம் அவர்களுடைய கனவு. ரஜினியின் கனவாக அதுவே இருக்க வேண்டும் என்ற அவசியம் எதுவுமில்லை.
இனி ரஜினி என்ன செய்ய வேண்டும் ? அவரால் என்ன செய்ய முடியும் என்பதை முதலில் பார்ப்போம். உடல் நலம் குன்றி சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தபின்னர் ரஜினி தொடர்பாக அறிவிக்கப்பட்ட எந்தப் பட வேலையும் வேகமாக முடிந்து படம் வெளியிடத்  தயார் என்பதற்கான அறிகுறிகள் இல்லை. முதுமையும் தாக்கிச் சென்ற நோயின் தன்மையும் நிச்சயம் பழையபடி துடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கவிடாமல் அவரைத் தடுக்கும் சாத்தியங்களே அதிகம். திரும்பவும் முற்றிலும் தொழில்நுட்ப உதவியை நம்பி 25 வயது இளைஞன் பாத்திரத்தில் அவரை நடிக்கச் செய்து காசு பண்ணமுடியுமா என்று சிலர் முயற்சிக்க விரும்பலாம். ஆனால் அவர் ஏன் அதை விரும்பவேண்டும் என்பதே என் கேள்வி.
தன் 37 வருட சினிமா வாழ்க்கையில் ரஜினி பெரு விருப்பங்கள் எதுவுமில்லாதவராகவே இருந்து வந்திருக்கிறார். சினிமாவில் நுழைகிற காலத்தில் ஒரு நடிகனாக தான் நிலைக்க வேண்டும் என்று இருந்த ஆசையைத் தவிர அவர் பெரிதாக சினிமா சார்ந்து வேறு எதற்கும் ஆசைப்பட்டதாகத் தெரியவில்லை.
பலதரப்பட்ட பாத்திரங்களை செய்யும் திறமை இருந்தபோதும், சில வருடங்களிலேயே அவருக்கு அதற்கான வாய்ப்பு பறிக்கப்பட்டுவிட்டது. ஒரே மாதிரியான ஃபார்முலா ஹீரோ பாத்திரங்களை செய்து சூப்பர் ஸ்டாராக்கப்பட்டு, வணிக சினிமாவின் காமதேனுவாக இருக்க வேண்டும் என்று அவருக்கு சினிமா துறை விதித்த ‘அன்புத் தண்டனை’யை அவர் விரும்பி ஏற்று அடுத்த  30 வருடங்களாக தனக்குள் இருந்த நடிகனைக் கொன்று ஸ்டாராகவே இருந்து வந்திருக்கிறார். இந்த ஸ்டார் பாத்திரத்தில் அவருக்குள் இருந்த நடிகனால் செய்ய முடிந்த ஒரே கிரியேட்டிவிட்டி  ஹீரோயிசத்துடன் காமெடியை சேர்த்துக் கொண்டதுதான்.
ரஜினியை வணிக சினிமா சூப்பர் ஸ்டாராக்கி லாபம் சம்பாதித்தது போல அவரை அரசியல் தலைவராக்கி அரசியல் லாபம் சம்பாதிக்கும் முயற்சிகளை வெளியில் ஓரிருவர் மேற்கொண்டார்கள். ஆனால் அவர் அதற்கானவன் தான் இல்லை என்ற உள்தெளிவுடனே இருந்து வந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.அவ்வப்போது அரசியல் சார்ந்து சில அதிரடி கருத்துகளைப் பேசுவது அவருடைய சினிமா வெற்றிக்கு உதவுகிறது என்பதை புரிந்துகொண்டு அந்த உத்தியைப் பயன்படுத்தியதைத் தவிர, நேரடி அரசியலில் அவருக்கு ஈடுபாடு இல்லை; அரசியல் பற்றிய ஆழமான புரிதலோ தெளிவோ கூட அவருக்கு இருப்பதாக சொல்லமுடியாது.
அரசியலைப் போலவே அவருடைய ஆன்மீக ஈடுபாடும் தெளிவற்றதுதான். அதில் பிறருக்கு உபதேசிப்பதற்கான எந்தத் தத்துவமும் இல்லை.  ‘எல்லாரும் போய் குழந்தை குட்டிகளைப் படிக்க வையுங்க; வயசான அப்பா அம்மாவை நல்லா பாத்துக்குங்க.’ என்றெல்லாம் மற்றவர்களுக்குச் சொல்ல, பெரிய ஆன்மிக அறிவு எதுவும் யாருக்கும் தேவையில்லை.  காலம் காலமாக முன்னால் போய் அடிபட்டவன் அடுத்து அடிபட இருப்பவனுக்கு சொல்லக்கூடியவைதான் அவை. தன் அரசியல், ஆன்மீக அறிவு பற்றியெல்லாம் ரஜினியே நன்றாக உணர்ந்திருப்பதனால்தான் அண்மைக்காலமாக அவரே அவை சார்ந்து எதுவும் பொது தளத்தில் பேசுவதில்லை.
எனவே இனி ரஜினி என்ன செய்யவேண்டும்? ரஜினியின் பலம் என்ன? அவருக்கு ஒரு பிராண்ட் வேல்யூ இருக்கிறது என்பது ஒரு பலம். திறமையான நடிகர் என்பது இன்னொரு பலம். இந்த இரண்டு பலத்தையும் அடுத்த கட்டத்துக்கு பயன்படுத்த அவர் என்ன செய்ய வேண்டும் என்றே அவர் சிந்திக்க வேண்டும்.
ரஜினியைப் போலவே கோபக்கார இளைஞன் பாத்திரங்களின் மூலம் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஹிந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த அமிதாப் பச்சன் முதுமையில் ஓர் அற்புதமான குணச்சித்திர நடிகராக தன்னை மாற்றிக் கொண்டு நான்காவது இன்னிங்சை அலட்சியமாக விளையாடிக் கொண்டிருப்பது ரஜினிக்கு ஒரு நல்ல ரோல் மாடல். அது ரஜினிக்கு சாத்தியப்படக்கூடியதுதான். தன் கதையம்சம் அடி-உதை-லவ்வு- பொறுக்கி என்ற ஹீரோ பாத்திரங்கள் சார்ந்து  தேக்கமடைந்து போயிருக்கும் தமிழ் சினிமாவுக்கும் நல்லது. ரஜினி போன்ற திறமையான நடிகர் வயது முதிர்ந்த பாத்திரங்களில் நடிக்க முன்வந்தால், அவரைச் சுற்றி வலுவான கதையம்சத்துடன் முற்றிலும் வேறு விதமான களங்கள், கதைகள் வருவது சாத்தியப்படும். விடலை ஆடியன்சை மட்டுமே நம்பி ஒரே மாதிரி கதை பண்ணி நஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா உலகில், ரஜினி போன்ற திறமைசாலியான நடிகர் முதிர்ந்த பாத்திரங்களில் அடர்த்தியான கதைகளில் நடித்தால், மீண்டும் குடும்பங்களை திரையரங்குக்கு வரவழைப்பது சாத்தியப்படும்.
இன்று ஹாலிவுட்டில் பல முன்னாள் ஹீரோக்கள் வயது முதிர்ந்தபின்னர், நல்ல கதையம்சத்துடன் கூடிய சின்ன பட்ஜெட் படங்களை இயக்குவது, அல்லது தயாரிப்பது என்று தங்கள் கலை வாழ்க்கைக்கு புதிய பரிமாணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி நடிப்பைத் தவிர இயக்கம் போன்றவற்றில் எப்போதும் ஆரவம் காட்டியவரே அல்ல. ஆனால் அவர் ஒரு நல்ல தயாரிப்பாளராக மாறமுடியும். நல்ல ஸ்கிரிப்ட்டுடன் வரும் இளைஞர்களை கொண்டு பெரிய திரைக்கு இல்லாவிட்டாலும் கூட, சின்னத் திரைக்கான முழு நீள டெலி பிலிம்களைத் தயாரித்து அளிப்பவராக ரஜினி இயங்கமுடியும்.  அவருக்கு இருக்கும் பிராண்ட் வேல்யூ இப்படி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டால், டெலிவிஷனின் தன்மையைக் கூட அவரால் மாற்றியமைக்க முடியும்.
இதையெல்லாம் அவரிடம் விவாதித்துச் சொல்லக் கூடிய பார்வையும் ஆற்றலும்  கொண்ட நெருக்கமான நண்பர் வட்டமோ தொழில் வட்டமோ தமிழ் சினிமா உலகில் இல்லை என்பது ஓர் இழப்புதான். ரசிகர்கள் அவருக்காக ரத்தம் கொடுக்கலாம்.ஆனால் டாக்டர்தான் சிகிச்சை தரமுடியும். சினிமா உலகின் டாக்டர்களாக இருக்க வேண்டிய மீடியா தானும் ரசிகனாக மட்டுமே குறுகிப் போய்விட்டது சமூகத்துக்கு இன்னொரு இழப்பாகும்.
(சினிமா எக்ஸ்பிரஸ் ரஜினி மலர் டிசம்பர் 2012)

அன்புள்ள சின்மயிக்கு

அன்புள்ள சின்மயிக்கு அன்புடன் ஞாநி
வணக்கம்.
நாம் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறோம். எந்திரன் பட வெளியீடு சமயத்தில் ரஜினியின் பிம்பம் பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நாம் பங்கேற்றோம். எதிரெதிர் அணியில் இருந்தோம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நீங்கள் எந்திரன் படத்தில் பங்கேற்றவர். நான் எப்போதும் விமர்சகன்.
பின்னர் அண்மையில் என் சிநேகிதி பத்மாவும் நீங்களும் பங்கேற்ற ஒரு சமூக மேம்பாட்டு நிகழ்ச்சியில், இளம் மாணவிகளுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்படும் விதத்தில் நீங்கள் பேசியதாக அவர் எனக்குச் சொன்னார். சிறு வயதில் தந்தையால் கைவிடப்பட்டபோதும் தாயின் உறுதியான மனமும் கடும் உழைப்பும் உங்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்ததைப் பற்றி நீங்கள் பேசி அந்தச் சிறுமிகளுக்கு வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடுவதற்கான உத்வேகத்தை அளித்ததை அறிய. மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்கள் இளமைக் காலக் கசப்புகளை பேசுவதோ ஒப்புக் கொள்வதோ அவற்றிலிருந்து கற்றுக் கொண்டதைப் பகிர்வதோ அரிது.
அதன்பின் இணைய உலகில் டிவிட்டர் தளத்தில் உங்களுக்கும் உங்கள் அம்மாவுக்கும் எதிராக பாலியல் அவதூறுகளை செய்வதாக சிலரைக் குற்றம் சாட்டி நீங்கள் காவல் துறையில் புகார் செய்ததால் இருவர் கைதான செய்திகளைப் பார்த்ததும், இது தொடர்பான டிவிட்டுகளைத் தேடிப் படித்தேன். எல்லாம் கிடைக்கவில்லை. கிடைத்த வரை படித்தேன்.
முதலில் உங்கள் ட்விட்டுகளைப் பற்றிப் பேசிவிடுவோம். இட ஒதுக்கீட்டுக்கு எதிரான உங்கள் குமுறல் அதில் முக்கியமானது. தாழ்ந்த மனிதர் என்று யாரும் இல்லை. உங்கள் சம்மதம் இல்லாமல் உங்களை யாரும் தாழ்த்தப்பட்டவர்களாக வைத்திருக்கமுடியாது என்று நீங்கள் சொல்வது மிகச் சரி. அப்படி யாரேனும் தாழ்த்தி வைக்க முயன்றால், அடங்க மறு, அத்துமீறு, போராடு என்றுதான் இன்று தலித் தலைவர்களும் சொல்கிறார்கள். இதைத்தான் அம்பேத்கரும் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் சொன்னார். ஆனால் அவர் அதைச் சொல்வதற்கு முன்னால் நிலைமை அப்படி இருக்கவில்லை என்பதை நீங்கள் அறியவேண்டும். தலித்துகளின் சம்மதம் இல்லாமலேதான் அவர்கள் தாழ்த்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.
உங்கள் அறிக்கையில் உங்கள் கொள்ளுப் பாட்டனார்கள் தமிழறிஞர்கள் மு.ராகவைய்யங்காரையும் ரா.ராகவைய்யாங்காரையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இருவரும் தமிழர் வரலாற்றில் மறக்கக் கூடாத மாமேதைகள் என்று நண்பர் ஆய்வாளர் பொ.வேலுசாமி நெகிழ்ச்சியுடன் சொல்கிறார். எனவே வரலாறு முக்கியம் என்று உங்களுக்குத் தெரிந்திருப்பதால்தான் உங்களுடைய தமிழ்ப் பாரம்பரியத்தை வரலாற்றிலிருந்து தூசு தட்டி எடுத்துச் சொல்கிறீர்கள். வரலாறு முக்கியம். மிக மிக முக்கியம். ஆனால் முழு வரலாறும் முக்கியம். அதில் ஏதோ ஒரு பகுதி மட்டும் அல்ல.
ராகவைய்யங்கார்களின் சம கால மேதைதான் கணித அறிஞர் ராமானுஜம். மூவருமே உங்கள் டிவிட்டர் பாஷையில் ‘ஹையங்கார்கள்’தான். ராமானுஜத்தை, அன்றைய உங்கள் ஜாதி வைதீகர்கள் ஜாதிப்பிரஷ்டம் செய்தார்கள். பாரதியாவது கலகக்காரன். வைதீகர்களுக்குப் பிடிக்காததில் வியப்பில்லை. ஆனால் ராமானுஜம் அவர்களை எதிர்க்காமல், தன் கணக்கிலேயே மூழ்கிக் கிடந்தவர். அவரை விலக்கக் காரணம், ‘சாஸ்திர விரோதமாக’ அவர் கடல் கடந்து போய் வந்ததுதான். அவர் செத்தபோது சம்பிரதாயமான இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்தார்கள். அன்றைய ஹிந்து இதழ் ஆசிரியரின் முயற்சியால் ஒருவர் சடங்கு செய்ய முன்வந்தார். மொத்தமாகவே ஆறேழு பேர்தான் சுடுகாடு வரை சென்றார்கள்.
சொந்த ஜாதிக்காரனையே கடல் கடந்த குற்றத்துக்காக இப்படி நடத்திய வைதீகர்கள் அன்று தங்கள் பார்வையில் கீழ் ஜாதி என்று கருதப்பட்டவர்களை எப்படி நடத்தியிருப்பார்கள் என்று யோசியுங்கள். அந்த வரலாற்றையும் நீங்கள் தேடிப் பிடித்து படிக்க வேண்டும். ராகவைய்யங்கார்கள் ஏட்டுச் சுவடிகளைப் படித்து ரசித்து தமிழமுதில் இன்புற்றிருந்த வேளையில், இருளாண்டிகளும் அஞ்சலைகளும் என்ன நிலையில் இருந்தார்கள் என்பதும் வரலாற்றில் இருக்கிறது. உங்கள் நண்பர் ‘ஈ’ இயக்குநர் ராஜமௌலி டிவிட்டில் தவறாகச் சொல்வது போல அந்த நிலை தொழிலால் வந்ததல்ல. பிறப்பால் சுமத்தப்பட்டதுதான். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்படுவதற்கு அவர்களுடைய சம்மதத்தை யாரும் கேட்டது இல்லை. எதிர்த்தவர்களுக்கு சாணிப்பால் அபிஷேகமும் கசையடி அர்ச்சனையும்தான் கிடைத்தன. அந்த வரலாறுகளைத் தேடிப் பிடித்துப் படித்தால்தான், அந்த இடைவெளியை நிரப்பவே இன்றிருக்கும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பது உங்களுக்குப் புரியமுடியும்.
‘மறவர் சீமைப் பொண்ணு நான்’ என்று பெருமைப்படுகிறீர்கள். உங்கள் கொள்ளுப் பாட்டனார் காலத்தில் அந்த மறவரெல்லாம் குற்றப் பரம்பரையினர் என்று அரசாங்கத்தால் முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட வரலாற்றையும் சேர்த்துப் படித்தால்தான், ஏன் இன்று மறவருக்கும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பது புரியும்.
ட்விட்டரில், பேஸ்புக்கில் எல்லாம் எவரும் தங்களுக்கு ஆழமாக நேரடியாக தெரிந்திராத இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களைப் பற்றி டைனிங் டேபிளில் போகிற போக்கில் கமெண்ட் அடிப்பது போல எழுதும் பொறுப்பற்ற சுதந்திரம் இருப்பதே பிரச்சினை. இந்த விஷயங்களில் உங்களுக்கோ பிறருக்கோ அக்கறை இருப்பதை நான் நிச்சயம் வரவேற்கிறேன். 99.9 மதிப்பெண் வாங்கிய பிராமணப் பெண்ணுக்கு சீட் கிடைக்காத பிரச்சினைக்கும் தீர்வு தேவைதான். ஆனால் தீர்வைத் தடுப்பது இட ஒதுக்கீடு அல்ல என்பது புரிய, நீங்கள் நிறைய படிக்க வேண்டும். பல மொழிகளைப் படித்துத் தேர்ந்துள்ள உங்களால் இது முடியாதது அல்ல. தேவைப்படுவது நிஜமான தேடலும் ஜாதிகளுக்கு அப்பால் எல்லா சக மனிதர்கள் மீதான அன்பும் அக்கறையும்தான்.
இனி உங்கள் புகாரால் கைதாகியும் கைதை எதிர்நோக்கியும் இருக்கும் சக ட்விட்டர்களின் நடத்தையைப் பார்ப்போம். அதில் ஒருவரை நான் நேரடியாகவே அறிவேன். நான் நடத்தும் கேணி இலக்கிய கூட்டங்களுக்குத் தொடர்ந்து வருபவர். ஓராண்டாக சிறப்பாக வெளிவரும் தமிழின் அருமையான ஒரு சிற்றிதழுக்குப் பங்காற்றுபவர். உங்களுடன் சண்டையிட்ட ட்விட்டர்கள் பலர் இட ஒதுக்கீடு, மீனவர் நலன் இவற்றில் எல்லாம் அக்கறையும் உணர்ச்சிப் பூர்வமான ஈடுபாடும் உடையவர்கள். உங்களுடைய சில கருத்துகள் அவர்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும்.
ஆனால் அதற்காக பாலியல் சார்ந்த அவதூறுகளை கேலிகளை அவர்களில் யார் எழுதுவதையும் யாருக்கு எதிராக எழுதுவதையும் நான் நிச்சயம் ஏற்கவில்லை. கடுமையாகக் கண்டிக்கிறேன். நீங்களோ வேறு யாரோ இட ஒதுக்கீடு பற்றியோ, தாழ்த்தப்பட்டவர்கள் பற்றியோ, மீனவர் கொலைகள் பற்றியோ புரிந்தோ புரியாமலோ எவ்வளவு அபத்தமாகப் பேசினாலும், அவையெல்லாம் எப்படி அபத்தம் என்றுதான் புரிய வைக்க முயற்சிக்கலாம். அதற்கான பொறுமை இல்லாவிட்டால் உங்களை அலட்சியம் செய்துவிட்டுப் போகலாம். ஆனால் ஒருபோதும் யார் மீதும் பாலியல் வக்கிர அவதூறுகள், கேலிகள் செய்வது நிச்சயம் தவறு.
இங்கே நான் கவலையும் கவனமும் கொள்ள விரும்பும் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றை நிச்சயம் சட்டத்தால் தீர்க்கமுடியாது. .
அறிவுக் கூர்மையும் திறமையும் கடும் உழைப்பும் தன்னம்பிக்கையும் உடைய உங்களைப் போன்ற பலர் இதே சமூகத்தில் வாழும் கோடிக்கணக்கான சாதாரண மக்களின் பிரச்சினைகளை, அவற்றின் வேர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் உழைப்பே இல்லாமல் ஒரு முழு வாழ்க்கையை இன்றைய சமூகத்தில் வாழ்ந்து முடித்துவிட முடியும். புகழும் செல்வாக்கும் தரும் வசதியில் அந்தப் பிரச்சினைகளைப் பற்றி குழப்பமான மேம்போக்கான கருத்துகளைச் சொல்லவும் முடியும். ராகவைய்யங்கார் முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பிக்கும்போது ஒரு பாட்டில் தனக்கு ஒரு விஷயம் இன்னும் ஆழமாகத் தெரியவில்லை என்றால் எவ்வளவு தயங்கியிருப்பார், எவ்வளவு தேடியிருப்பார்.. தேடிப் பிடித்து படிக்காமல் அவசரப்பட்டு முடிவைச் சொல்லியிருந்தால் அவரை ஆய்வுலகம் கொண்டாடியிருக்குமா ?
மறுபக்கம் இந்த பிரச்சினைகளில் உணர்வுப் பூர்வமான ஈடுபாட்டுடன் , அவற்றிற்குத் தீர்வு வரவேண்டுமென்ற ஆர்வமும் கொண்டு பல்வேறு சமூக சித்தாந்தங்களில் ஓரளவு பரிச்சயமும் உடைய மிகச் சிலராக இன்று ஒரு புதிய தலைமுறை துடிப்புடன் உருவாகி வந்துள்ளது. சோகம் என்னவென்றால், அதில் சிலர், கூடவே பாலியல் வக்கிர மனசும் உடைய டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைடாக விளங்குகிறார்கள்.. உங்களை பகடி செய்த ட்விட்டர்களின் விரல்கள் கம்ப்யூட்டர் பட்டன்களில் பாலியல் வக்கிரத்தை தட்டும்போது, அவர்கள் படித்த பெரியாரோ, அம்பேத்கரோ, மார்க்சோ, சேகுவேராவோ ஏன் அவர்களுடைய தலைக்குள்ளிருந்து ஒரு எதிர்த் தட்டு தட்டமுடியாமல் போகிறது என்பதே என் இன்னொரு கவலை.
இன்றைய மீடியா சூழல்தான் காரணம். நீங்களும் சரி, உங்கள் டிவிட்டர் எதிரிகளும் சரி, ட்விட்டரில் எழுதிய பல வரிகளை ஒரு போதும் அச்சுப் பத்திரிகைகளில் எழுதமுடியாது. பத்திரிகை ஆசிரியர் தடுத்துவிடுவார். இணையம் தரும் சுதந்திரம் கட்டற்றது. ஆனால் அதைப் பயன்படுத்துவோருக்கு சுய கட்டுப்பாடும் பொறுப்பும் சொல்வதில் தெளிவும் தேவை. அது இல்லாத இருபிரிவினரிடையே நடக்கும் சண்டைதான் இந்த விவகாரம். இதனால் இணைய சுதந்திரத்துக்கே ஆபத்து.
உலக மகா அரசியல் சித்தாந்தங்களுடனெல்லாம் பரிச்சயம் கொண்டவர்களுக்கு, அடிமனதில் பெண் மீதான பாலியல் வக்கிரம் மட்டும் ஏன் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டே இருக்கிறது ? மீடியாதான் காரணம். எத்தனை அறிவார்ந்த நூல்களைப் படித்தாலும் கேட்டாலும், சினிமாவும் டி.வியும் காமப் பிசாசுகளை உசுப்பி விடும் வேலையையே பெரும்பாலும் செய்து கொண்டிருக்கின்றன. அதனால்தான் மற்றபடி நல்லவர்களாக தெரிபவர்கள் கூட இணைய முகமூடி மாட்டியதும் நிர்வாணக் குத்தாட்டம் ஆடுகிறார்கள். அவர்கள் தலைக்குள், நீங்கள் பணி புரியும் வணிக சினிமா துறை விதைத்த காமவித்துகள், குத்தும் கூரிய முட்களோடு தழைத்துக் கொண்டே இருக்கின்றன.
நீங்கள் ஆபாசப் பாடல்களைப் பாடியிருப்பதால்,உங்களுக்கு எதிராக ஆபாசமாக எழுதினால் என்ன தப்பு என்ற அராஜகமான வாதத்தை நிச்சயம் நான் ஏற்க மாட்டேன். ஆனால் அறிவுக்கூர்மை, மொழிப் புலமை எவ்வளவு இருந்தாலும், என்ன பாடுகிறோம் என்பதை முடிவு செய்யும் தேர்வைக் கறாராக செய்யாமல் வாய்ப்பு, பணம், புகழ் என்ற அளவுகோல்களை மட்டுமே பயன்படுத்தி நீங்கள் பாடிக் கொண்டிருக்கும் சினிமா பாடல்களின் விளைவுகள் என்ன என்ற கேள்வியை நீங்கள் புறக்கணிக்க முடியாது.
“ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி நான். என்னை மேய்ந்துவிடு மொத்தம்” என்று ஒரு பெண் பாடுவது ஆண் மனதில் என்ன உணர்ச்சியை எழுப்பும் ? ‘உன்னுள்ளே நுழைஞ்சதாரோ, பையக் குழைஞ்சதாரோ ?’ என்ற வரிகளை எழுதியவருக்கு பெரும் பணமும் சமூக அந்தஸ்தும் தரும் இதே சமூகம், அந்த வரிகளின் அர்த்தத்தை ஒருவர் ட்விட்டரில் எழுதினால் கழுத்தில் கை வைத்து சைபர் கிரைமுக்கு அல்லவா தள்ளிக் கொண்டு போகும் ? ‘தினம் ஆடை சண்டையிலே முதலில் தோற்பவள்‘ என்று தன்னைப் பற்றி பாடும் பாத்திரம் அதே பாட்டில் ‘நீ இடம் சுட்டிப் பொருள் விளக்கு’ என்று சொல்லும்போது எந்த இடத்தை, என்ன பொருளைச் சொல்கிறாள் என்ற சூட்சுமம் ஆபாசமாக எழுதும் ட்விட்டர்களுக்குத் தானே அல்வாவாக இனிக்கும். அது ராகவைய்யங்கார்கள் படித்த தமிழ் இலக்கணத்திற்கு அப்பாற்பட்டதல்லவா?
இந்தப் பாடல்களைக் கேட்டு வளரக் கூடிய ஒரு சிறுவன், நாளை க்வாண்ட்டம் பிசிக்ஸ் படித்து ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானியானாலும் அவன் அடிமனதில் பதிந்துவிட்ட பாலியல் வக்கிரம், வேறொரு சின்மயியுடன் சண்டை வரும்போது வெளிப்படத்தான் செய்யும். ‘பாடுவது என் தொழில். கொடுப்பதைப் பாடுகிறேன் ‘ என்று வாதாட இடமில்லை. அந்தப் பாட்டு, அதைக் கேட்கும் மனங்களை இழிவான மனநிலைக்கு அழைத்துப் போனால், அதற்கான பொறுப்பில் உங்கள் பங்கும் இருக்கிறது. ஒருவரின் சம்மதம் இல்லாமல் அவரை யாரும் தாழ்த்தப்பட்டவராக்கிவிடமுடியாது என்பது போலவே, உங்கள் சம்மதமில்லாமல் யாரும் உங்களை இழிவான பாடலகளைப் பாட வைத்துவிடமுடியாது. அப்படிப் பாட மறுத்ததால் வாய்ப்புகளை இழந்த உன்னிகிருஷ்ணன் ஒன்றும் நலிவுற்று ஓய்வூதியம் வாங்கவேண்டிய நிலைக்குப் போய்விடவில்லை.
சமூகத்தில் நாம் ஒவ்வொருவரும் மறைமுகமாகவோ நேரடியாகவோ இன்னொருவர் வாழ்க்கையோடு சம்பந்தப் பட்டிருக்கிறோம். அந்தப் பொறுப்பை நாம் உதறிவிடமுடியாது. உங்கள் மீது பாலியல் அவதூறுகளை வீசுபவர்களின் மன வக்கிரங்கள், காலம் காலமாக நம் ஊடகங்களால் விதைக்கப்பட்டவை. அதற்காக நியாயமாகவே பதறும் நீங்கள், அறிந்தோ அறியாமலோ அதே விஷ விதைகளை தூவிக் கொண்டிருக்கிறீர்கள். அவை விருட்சங்களாகும்போது உங்கள் மகளை அழைத்துக் கொண்டு நீங்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கும் நிலை வரலாம். அல்லது உங்கள் மகன் மீது வேறொரு தாய் புகார் கொண்டு வரலாம்.
இந்தப் பிரச்சினைகளை நாம் சட்டத்தால் மட்டும் திருத்திவிடமுடியாது. ஒருவரோடொருவர் விவாதிப்பதன் மூலம் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அடுத்த பாட்டைப் பாடும் முன்பு வரிகளின் அர்த்தத்தை யோசியுங்கள். அவற்றுக்கு என்ன மாதிரி காட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று யோசியுங்கள். அது உங்களுக்கு உடன்பாடானதுதானா என்று யோசியுங்கள். அடுத்த ட்விட்டை எழுதும் முன்பு அந்த விஷயம் பற்றிய உங்கள் புரிதல் முழுமையானதுதானா என்று யோசியுங்கள். இல்லையென்றால் முதலில் புரிந்துகொண்டு அப்புறம் விமர்சியுங்கள். நீங்கள் மட்டுமல்ல, உங்களையும் இன்னும் பலரையும் கீழ்த்தரமாக பகடி செய்த பதிவர்களும் கூட, தாங்கள் படித்த பெரியாரும் மார்க்சும் அம்பேத்கரும் ஏன் தங்கள் மூளைக்குள் பதிந்தார்களே ஒழிய மனங்களில் படியவில்லை என்பதை யோசிக்கவேண்டும் என்றே வேண்டுகிறேன். நாம் எல்லாரும் வெறும் செராக்ஸ் மெஷின்களல்ல.
உலகின் மிகச் சிறந்த நீதிமன்றம் நம் மனசாட்சிதான். அதையே உங்களுக்கும் சரவணகுமாருக்கும் ராஜனுக்கும் இன்னபிறருக்கும் பரிந்துரைக்கிறேன். இந்த மோசமான சூழலிலிருந்து நீங்கள் அனைவரும் மீண்டு வர வாழ்த்துகிறேன்.
அன்புடன் ஞாநி
கல்கி 3-11-2012

Tuesday, December 18, 2012

இ-மெயில் தமிழன்!

மெயிலைக் கண்டுபிடித்தது யார்? இதுவரை தெரியவில்லை என்றால் விடுங்கள்... இனி, தலை நிமிர்ந்து சொல்லுங்கள்...
இமெயிலைக் கண்டுபிடித்தது ஒரு தமிழன் என்று.
தென் தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த அந்தக் கறுப்புத் தமிழனின் பெயர் சிவா அய்யாதுரை. இந்த ராஜபாளையத்துக் காரர் இப்போது வசிப்பது அமெரிக்காவில்.
டைம்’ பத்திரிகை இவரை 'டாக்டர் இமெயில்’ என்று அழைக்கிறது. 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, 'வாஷிங்டன் போஸ்ட்’, 'நியூயார்க் டைம்ஸ்’ எனப் பிரபல மீடியாக்கள் 'இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ எனக் கொண்டாடுகின்றன. உலகின் மிகச் சிறந்த அறிவுஜீவி என போற்றப்படும் பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, 'டாக்டர் சிவாதான் இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ என்று செல்லும் இடங்களில் எல்லாம் பேசுகிறார். உலகின் பிரசித்தி பெற்றதும், மிகப் பெரியதுமான அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆவணக் காப்பகம் (Smithsonian museum), ''மின்சார விளக்கு, செயற்கை இதயம் போன்ற மிக முக்கியமான கண்டுபிடிப்புகளின் வரிசையில் இமெயிலையும் மதிப்பிட வேண்டும்!'' என்று வர்ணிக்கிறது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் சிஸ்டம்ஸ் விஷ§வலைசேஷன் (Systems Visualization) மற்றும் கம்பேரடிவ் மீடியா ஸ்டடீஸ் (Comparative Media Studies) ஆகிய இரு துறைகளில் பேராசிரியராக இருக்கும் சிவா அய்யாதுரை, நோம் சாம்ஸ்கி தலைமையில், இந்தியாவின் சாதிய அடுக்குநிலை தொடர்பாக ஆய்வுசெய்தவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் ஏழு நிறுவனங்களைத் தொடங்கி நடத்திவருபவர். (அதில் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்... அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை).
ஓர் அதிகாலை நேரத்தில் சிவா அய்யாதுரையுடன் நடத்திய மிக நீண்ட 'ஸ்கைப்’ உரையாடல் ஆச்சர்யங்களால் நிரம்பியது. ''ஹாய் பாரதி... வணக்கம்'' என்று அன்புத் தமிழுடன் வந்து அமர்கிற சிவா அய்யாதுரைக்கு 48 வயது.

''நீங்கள் யார்? இத்தனை நாளும் எங்கு இருந்தீர்கள்?''
''ஹா... ஹா... என் அப்பா அய்யாதுரைக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர். அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் பரமன்குறிச்சி. இருவரும் அந்தக் காலத்திலேயே நன்றாகப் படித்தவர்கள். ஆறு வயதுக்குள்ளாகவே எனக்குப் படிப்பின் மீது மிகப் பெரிய ஆர்வம் உண்டாகியது. மும்பையில் வசித்த எங்கள் குடும்பம், என்னை மேற்கொண்டு நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தது. இந்தியாவில் கோடை காலத்தில் பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதைப் போன்ற... ஒரு சம்மர் கிளாஸில் 'ஃபோர்ட்ரான் 4’ ­(FORTRAN IV) என்ற புரொகிராமிங் மொழியைக் கற்றுக்கொண்டேன். அப்போது எனக்கு பள்ளிப் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துகொண்டே வந்ததால், பள்ளியைவிட்டு நிற்கப்போவதாக அம்மாவிடம் சொன்னேன். அப்போது அம்மா 'யுனிவர்சிட்டி ஆஃப் மெடிசின் அண்ட் டென்டிஸ்ரி’யில் (University of Medicine and Dentistry of New Jersey) டேட்டா சிஸ்டம் அனலிஸ்ட்டாகப் பணிபுரிந்துகொண்டு இருந்தார். தன்னுடன் பணிபுரிந்த பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனிடம் என்னை அழைத்துச் சென்றார். மைக்கேல்சன், அப்போது அந்த மருத்துவமனையின் அன்றாட நடவடிக்கைகளைக் கணினி வழியாக ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறியும் முயற்சி யில்  இருந்தார். அவர் என்னைத் தன் ஆராய்ச்சி உதவியாளர்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டார். சவால் நிறைந்த அந்தப் பணி என் மனதுக்குப் பிடித்திருந்தது.
அப்போது அந்த மருத்துவ மனையில் ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக 'மெமோரண்டம்’ எழுதுவார்கள். நோயாளிபற்றிய விவரம், மருத்துவர்பற்றிய விவரம், டூ, ஃப்ரம், சப்ஜெக்ட் எல்லாம் எழுதப்பட்ட அந்த மெமோ ரண்டத்தை அங்கு இருக்கும் தபால் பெட்டி மூலம் மருத்துவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வார்கள். இதை அப்படியே மின்மயப்படுத்த வேண்டும். அந்த மெமோரண்டத்தை மருத்துவமனையில் உள்ள எந்த ஒரு கணினியில் இருந் தும், மற்றொரு கணினிக்கு எலெக்ட்ரானிக் வடிவத் தில் அனுப்ப முடிய வேண்டும். இதுதான் எங்கள் நோக்கம்.
இந்த ஆராய்ச்சியில் நான் உருவாக்கியதுதான் இமெயில் சிஸ்டம். 'ஃபோர்ட்ரான் 4’ மொழியில் 50 ஆயிரம் வரிகள்கொண்ட அந்த புரொகிராமை எழுதியபோது எனக்கு வயது 14. அது 1978-ம் ஆண்டு. அதற்கு இமெயில் (email) என்று பெயரிட்டேன். எலெக்ட்ரோ மெயில் என்பதன் சுருக்கம் அது.  'ஃபோர்ட்ரான் 4’ மொழியில் ஒரு புரொகிராமில் அதிகபட்சம் 5 எழுத்துருக்கள்தான் பயன் படுத்த முடியும் என்பதாலும், இமெயில்  என்ற சொல் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்ததாலும் அந்தப் பெயரை வைத்தேன். அகராதியில் அதற்கு முன்பு இமெயில் என்ற வார்த்தையே கிடையாது!''

''ஆனால், டேவிட் க்ராக்கர், ரே டாமில்சன் ஆகியோர் பெயர்கள்தான் இமெயில் கண்டுபிடித்தவர்கள்பற்றிய ஆய்வுகளில் பேசப்படுகின்றனவே?''
''அதெல்லாம் அப்போது. நான்தான் இ மெயிலைக் கண்டுபிடித்தேன் என்பதை ஸ்மித் சோனியன் ஆவணக் காப்பகம் அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு, இந்த சர்ச்சை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. 1978-ம் ஆண்டு உலகின் முதல் இமெயிலை எனது வழிகாட்டியான பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனுக்கு அனுப்பினேன். அது ஒரு டெஸ்ட் மெயில். அதன் ஒரிஜினல் புரொகிராமிங் கோடு, இப்போதும் ஸ்மித் சோனியன் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. பேராசிரியர் நோம் சாம்ஸ்கி என் ஆய்வுகளின் நேரடிச் சாட்சியாக இருக்கிறார்.
டேவிட் க்ராக்கர் கண்டுபிடித்தது 'டெக்ஸ்ட் மெசேஜ்’ அனுப்பும் தொழில்நுட்பத்தை. ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறோம் இல்லையா? அதைப் போல அவர் வெறுமனே டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாறிக்கொள்வதைக் கண்டறிந்தார். அதை இமெயில் என்று சொல்ல முடியாது. அதோடு ஒப்பிடுவதானால், நாம் தந்தி அனுப்புவதைத்தான் இமெயில் என்று அழைக்க வேண்டியிருக்கும். மாறாக, இமெயில் என்பது ஒரு முழுமையான சிஸ்டம். இன்று நாம் பயன்படுத்தும் இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், டிராஃப்ட்ஸ், டு, ஃப்ரம், சப்ஜெக்ட், டேட், பாடி,  சிசி, பிசிசி, கம்போஸ், அட்டாச்மென்ட்ஸ், க்ரூப்ஸ், உள்ளிட்ட 86 வகையான இ மெயில் புரொகிராம்களை எழுதி, வடிவமைத்தது நான்தான். இதுதான் முழுமையான இமெயில் சிஸ்டம். ரே டாமில்சன் இமெயிலில் இன்று பயன்படுத்தும் '@’ குறியீட்டைக் கண்டுபிடித்தார். அதற்கு மேல் அவரது பங்களிப்பு இதில் எதுவும் இல்லை.''

''ஆனால், இமெயிலைக் கண்டறிந்தவர் நீங்கள்தான் என்பது ஏன் பெரிய அளவுக்கு வெளியே தெரியவில்லை?''
''அமெரிக்காவில் பலருக்குத் தெரியும். ஒருவேளை தமிழ்நாட்டுக்குத் தெரியாமல் இருக்கலாம். 1981-ம் ஆண்டு அமெரிக்க அரசிடம் இருந்து பெற்ற இமெயிலுக்கான 'காப்பிரைட்ஸ்’ இன்றும் என்னிடம்தான் இருக்கிறது. இங்கு கண்டுபிடிப்பு என்பது வேலையின் ஒரு பகுதி. ஆனால், எனது கண்டுபிடிப்பை இவர்கள் ஒப்புக்கொள்ளாமல் சர்ச்சை ஏற்படுத்தக் காரணம், புலம் பெயர்ந்த; கறுப்பு நிறத் தோல் உடைய; 14 வயதுச் சிறுவன் ஒருவன்... இமெயிலைக் கண்டுபிடித்தான் என்பதை இவர்கள் நம்ப மறுப்பது தான். 50 ஆயிரம் வரிகளைக்கொண்ட ஒரிஜினல் புரொகிராமிங் கோட் வெள்ளைத் தோல் உடைய ஒருவரிடம் இருந்தால், இந்தச் சர்ச்சைகளுக்கு வாய்ப்பே இல்லை!''

''இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தீர்கள்?''
''1993-ம் ஆண்டு நான் பி.ஹெச்டி. ஆய்வில் ஈடுபட்டு இருந்தபோது, கிளின்டன் அமெரிக்க அதிபர். அப்போது வெள்ளை மாளிகைக்கு நாள் ஒன்றுக்கு 5,000 இமெயில்கள் வந்து குவியும். அதை நிர்வகிக்கும் வேலை சிக்கலானதாக இருந்தது. ஆகவே, அந்த மெயில்களை வகைவாரியாகப் பகுத்துப் பிரிக்கும் தானியங்கித் தொழில்நுட்பத்தைக் கண்டறிவதற்கான போட்டி ஒன்றை அறிவித்தது வெள்ளை மாளிகை. 147 பேர் கலந்துகொண்ட அந்தப் போட்டியில் நான் கண்டறிந்த 'எக்கோ மெயில்’ (Echo Mail) என்ற தொழில்நுட்பம் வெற்றிபெற்றது. பிறகு, இந்த 'எக்கோ மெயிலை’ ஒரு நிறுவனமாகத் தொடங்கினேன். இன்று 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த நிறுவனம், உலகின் மிக முக்கியமான நிறுவனங்களைத் தனது வாடிக்கையாளர்களாகக்கொண்டு இருக்கிறது. அதுபோக, வேறு சில நிறுவனங்களையும் நடத்துகிறேன். கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட மூடப்படும் நிலையில் நஷ்டத்தில் இயங்கிய அமெரிக்கத் தபால் துறையில் எனது புதிய இமெயிலிங் சிஸ்டத்தை நடைமுறைப்படுத்தியபோது, அது லாபகரமாக மாறியது. அப்போது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பில் இருந்து தப்பினார்கள். அமெரிக்க ஊடகங்கள் என்னைக் கொண்டாடின. ஆனால், எனக்கு இந்தியாவில் பணிபுரியவே விருப்பம். அதே சமயம், அங்கு எனக்குக் கிடைத்தவையோ கசப்பான அனுபவங்களே...'' 

''என்ன நடந்தது இந்தியாவில்? நீங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டீர்கள் என்று அறிகிறேன்...'' 
''ஆம், உண்மைதான். 2007-ம் ஆண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான சி.எஸ்.ஐ.ஆர். (கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்) துறையில் என்னைக் கூடுதல் செயலாளராக நியமித்தார் மன்மோகன் சிங். சில காலம் அங்கு இருந்தேன். அந்த சி.எஸ்.ஐ.ஆர். நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு. ஆனால், 60 ஆண்டுகளில் அதில் உள்ளவர்கள் எதுவுமே செய்யவில்லை. எங்கும் லஞ்சம், ஊழல். அறிவியல் கண்டுபிடிப்புக்கான சூழலே அங்கு இல்லை. இதைப் பற்றி 'கண்டுபிடிப்புகளுக்குச் சுதந்திரம் வேண்டும்’ என்ற தலைப்பில் 47 பக்கத்துக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதை உலகின் முக்கியமான 4,000 விஞ்ஞானிகளுக்கு மெயில் அனுப்பினேன். உலக அளவில் அது பெரிய விவாதமானது. உடனே, இந்தியாவின் சட்டத்தை நான் மீறிவிட்டதாகச் சொல்லி, திடீரென ஒரு நாள் என் வீடு முடக்கப்பட்டது. நான் நேபாளம், கத்தார் வழியே அமெரிக்கா வந்தேன். 'சிவா அய்யாதுரையை வெளியேற்றியது இந்தியா செய்த பெரிய தவறு’ என்று பல விஞ்ஞானிகள் எழுதினார்கள். அதைப் பற்றி இந்தியா கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இப்போதும் அங்கு சூழல் மாறிவிடவில்லை. அங்கு இருக்கும் நேர்மையற்ற அரசியல் சூழலில் அறிவியல் ஒருபோதும் வளராது!''

''உங்கள் பேச்சை வைத்துக் கேட்கிறேன்... நீங்கள் சயின்டிஸ்ட்டா, கம்யூனிஸ்ட்டா?''
''எம்.ஐ.டி-யில் படிக்கும்போது மாணவர் சங்கத்தில் இணைந்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். இலங்கையில் நம் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கொண்டு இருந்த சமயத்தில், அப்போது இலங்கை அதிபராக இருந்த பிரேமதாசாவை எதிர்த்து இங்கு போராடியது உட்பட. 'த ஸ்டூடன்ட்’ என்ற பெயரில் நான்கு ஆண்டுகள் பத்திரிகை நடத்தினேன். அதனால், நான் அடிப்படையில் கம்யூனிஸ்ட். பிறகுதான் சயின்டிஸ்ட். இன்று தொழில்நுட்பத்தையும் அறிவியல் வளர்ச்சியையும் பெரும் நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற இணைய நிறுவனங்களும் செல்போன் கம்பெனிகளும் மக்களை அன்றாடம் கண்காணிக்கின்றன. சந்தர்ப்பம் வரும்போது மக்களுக்கு எதிராகக் கைகோத்துக்கொள்கின்றன. சமீபத்தில், எகிப்தில் நடந்த மக்கள் புரட்சியை, எஸ்.எம்.எஸ். அனுப்புவதைத் தடைசெய்து ஒடுக்க முயன்றதே இதற்குச் சிறந்த உதாரணம்!''

''உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?''
''எனது முழு வாழ்க்கையும் அறிவியலில்தான் செலவாகும். அதில் சந்தேகம் இல்லை. அமெரிக்காவிலும் இந்தியாவிலுமாக மாறி மாறி இயங்கவே விரும்புகிறேன். இந்திய சித்த மருத்துவத்தின் மேன்மைகளை ஆராய்ச்சி செய்து, அதைக் கிழக்குலகின் பாரம்பரிய மருத்துவத்துடன் இணைத்து, மருத்துவத் துறையில் புதிய புரட்சியை உருவாக்குவதுதான் என் அடுத்த இலக்கு. இன்றைய கார்ப்பரேட் உலகம், தொழில்நுட்பங்களையும், அறிவியலை யும், அறிவையும் மேலும் மேலும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது. அது எல்லோ ருக்கும் கைவராத கலை என்பதைப் போலச் சித்திரிக்கிறது. ஆனால், அப்படி அல்ல. உலகத்தில் ஆயிரமாயிரம் சாம்ஸ்கிகள், சிவாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வெளியே கொண்டுவர வேண்டும். நான் அடிக்கடி சொல்லும் வாசகத்தையே இங்கும் சொல்கிறேன்: புதுமைகளை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், யாராலும் நிகழ்த்த முடியும்!''


Source: Vikatan

Thursday, December 6, 2012

அரசியலில் ஒரு மனிதன்!-இந்தர் குமார் குஜ்ரால்


http://www.vikatan.com/jv/2012/12/zmziyt/images/p35.jpg
ந்தர் குமார் குஜ்ரால் இறந்துபோனது, இன்றைய இந்தியாவுக்கு தலைப்புச் செய்தியாகக்கூட இடம்பெறவில்லை. இதுவரை இருந்த பிரதமர்களில் அவரும் ஒருவர் என்ற பட்டியலில் க்விஸ் கேள்விகளில் மட்டும்தான் இடம் பிடித்தார். ஆனால், தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள எத்தகைய கீழான காரியத்தையும் செய்யலாம் என்பதே விதியாகிவிட்ட இன்றைய அரசியல் உலகத்துக்கு, இந்தர் குமார் குஜ்ரால் போன்ற ஒருவரின் மறைவு... மாபெரும் ஏக்கப் பெருமூச்சைக் கிளப்புகிறது.

குஜ்ரால் என்பது அவரது பெயர் அல்ல. அவர் பிறந்த கிராமத்தின் பெயர். அது இந்தியாவில் இல்லை. பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் இருக்கிறது. ஆனால் குஜ்ரால், அப்பழுக்கற்ற இந்தியனாகவே இருந்தார். அவரது பூர்வீகம், காங்கிரஸ் கட்சி அல்ல. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்தவர். ஆனால், 35 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சிக்காகவே வாழ்ந்தவர்.
நல்லவர், நாணயஸ்தர் என்பதற்காக, அவருக்குப் பதவிகளைக் கொடுத்தனர். அதைத் தக்க​வைத்துக் ​கொள்வதற்காக யாரோடும் சமரசம் செய்து கொள்ளவே இல்லை அவர். அப்படி செய்திருந்​தால், இந்திரா காந்திக்கு அடுத்த இடத்தை அவர் தக்கவைத்துக் கொண்டு, காங்கிரஸிலேயே தொடர்ந்து இருக்கலாம். காங்கிரஸ் கட்சி ஒரு தலையாட்டிப் பிரதமரைத் தேடிக்கொண்டு இருந்த 1997-ல், குஜ்ரால் பதவியைப் பிடித்தார். ஆனால், அவர் தலையாட்டிப் பிரதமராக செயல்பட்டு இருந்தால், 11 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்தவர் என்ற நிலை வந்திருக்காது. காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியின் பூசாரியாக இருக்கச் சம்மதிக்காமல், ராஜினாமா செய்தவர் குஜ்ரால். அவரது மரணம் இந்தக் குணாம்சத்தின் வெற்றிடத்தையே நினைவுபடுத்துகின்றன.
பிரதமர் இந்திராவுக்கு மிகப்பெரிய களங்கம் 1975-ம் ஆண்டு காலத்து அவசரநிலைப் பிரகடனம். இந்திராவுக்கு எதிராக யாரும் எதுவும் எழுதக் கூடாது என்று பத்திரிகைகள் அனைத்தும் மௌனிக்கச் செய்யப்பட்டன. இந்த நேரத்தில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறையின் அமைச்சராக இருந்தவர் இந்தர் குமார் குஜ்ரால். மேலோட்டமாகப் பார்த்தால் இத்தனை காரியங்களையும் அவர்தான் செய்தார் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள் இருந்துகொண்டே, இந்திராவுக்குப் பக்கத்தில் இருந்தபடியே எமர்ஜென்சி நடவடிக்கை​களுக்கு எதிராகச் சண்டை போட்டவர் குஜ்ரால். அமைதியானவர், அதிர்ந்து பேசாதவர் என்று பெயர் எடுத்த குஜ்ரால், அன்றைய 'கிரேட் டிக்டேட்டர்’ சஞ்சய் காந்தியை எதிர்த்து சரிக்குச் சரி நின்றார். எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதற்கு அடுத்த நாள், குஜ்ராலை வீட்டுக்கு வரச்சொன்னார் சஞ்சய். 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததாகச் சொல்லி அவர் கோபப்பட, 'நீங்கள் என் மகன் வயது. நான் உங்கள் அம்மாவுடன் அரசியல் நடத்துபவன். உங்கள் அப்பாவின் நண்பராக இருந்தவன். மரியாதையாக நடத்துங்கள்’ என்று சொல்லி விட்டு வந்தார். அந்தக் காலகட்டத்தில் வெளியாகும் செய்தி புல்லட்டின்​களை சஞ்சய் காந்திக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு துறையின் அமைச்சர் சொன்ன​போது, மறுத்தார். அதன்பிறகு, பிரதமர் இந்திராவுடன் நேரடி மோதல் ஏற்பட்டது. அவர் சொன்னதை ஏற்க குஜ்ரால் மறுக்கவே, 'நீங்கள் விலகி விடுங்கள். எனக்கு வேண்டிய​வரை வைத்து இந்தத் துறையைக் கவனித்துக் கொள்கிறேன்’ என்று இந்திரா இவரைத் திருப்பி அனுப்பினார். வேறு துறைக்குத்தான் அவரை மாற்ற முதலில் இந்திரா நினைத்தார். பிறகு ரஷ்யத் தூதராக... கிட்டத்தட்ட மாஸ்கோவுக்கு நாடு கடத்தினார்.
அன்று அமைதியாக இருந்திருந்தால், இன்று மன்மோகன் சிங் இடத்தை நிரப்பி இருக்கலாம். இந்தப் பஞ்சாபிக்கு பதிலாக அந்தப் பஞ்சாபி இருந்திருக்​க​லாம். ஆனால், குஜ்ராலுக்கு மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. எமர்ஜென்சியை எதிர்த்துக் கிளம்பிய ஜனதாவில் தன்னை இணைத்துக்கொண்டார். 96-க்குப் பிறகு ஏற்பட்ட தொங்கு நாடாளுமன்றத்தில் குஜ்ராலும் 11 மாதங்கள் பிரதமர் ஆகும் பாக்கியம் கிடைத்தது.
ஒரு பக்கம் சீதாராம் கேசரி தலைமையிலான காங்கிரஸ், இன்னொரு பக்கம் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் தலைமை​யிலான இடதுசாரிகள், முலாயம், லல்லுபோன்ற இந்தி மாநிலத் தலைவர்கள், கருணாநிதியும் மூப்பனாரும் சந்திரபாபு நாயுடுவுமான தென்னகத் தலைவர்கள்... என, ஏக இந்தியாவும் சேர்ந்து குஜ்ராலை பிரதமராக முன்மொழிந்தது. அந்த அளவுக்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவராக இருந்தார். இதில் சிக்கலை உண்டாக்கியது ஜெயின் கமிஷன். ராஜீவ் கொலை வழக்கில் உள்ள சதிச் செயல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட இந்தக் கமிஷன், தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, 'இந்தக் கொலையில் தி.மு.க-வுக்குத் தொடர்பு இருக்கிறது. விடுதலைப்புலிகளை தமிழர்கள் ஆதரித்ததால், அவர்களுக்கும் கொலையில் பங்கு இருக்​கிறது’ என்று பெரிய காமெடி நடத்தியது. சொந்த வாழ்க்கையில் எந்தச் சாதனையும் செய்ய முடியாத சீதாராம் கேசரிக்கு, இந்த அறிக்கை கிடைத்தது. 'தி.மு.க-வை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்’ என்று குஜ்ராலைக் கட்டாயப்படுத்தினார். 'இதைவிடப் பெரிய அபத்தம் எதுவும் இருக்க முடியாது’ என்றார் குஜ்ரால். 'அப்படியானால் காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் வாங்கும்’ என்றார் கேசரி. 'நீங்கள் என்ன வாபஸ் வாங்குவது... நானே ராஜினாமா செய்கிறேன்’ என்று கும்பிடு போட்டார் குஜ்ரால். தன் மனசாட்சியை அடமானம் வைத்துவிட்டு நாற்காலி​யைத் தொட மாட்டேன் என்று வாழ்ந்த குஜ்ராலின் மறைவு, ஈடு செய்ய இயலாத இழப்பு.
பிரதமர்களின் வரிசையில் அல்ல... மகத்தான மனிதர்​களின் வரிசையில் இந்தர் குமார் குஜ்ரால் இடம் பிடித்து விட்டார்!

நன்றி : விகடன்