ஞாநி
நல்ல சினிமாவின் தேவை நல்ல நடிகர்கள். ஆனால் வணிக சினிமாவின் தேவை நடிகர் அல்ல, ஸ்டாராக தன்னை உருமாற்றிக் கொள்ளக்கூடிய நடிகர்தான் அதற்குத் தேவை. அப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் வணிக சினிமா திறமையான சில நடிகர்களை ஸ்டார்களாக உருமாற்றம் செய்யும். அப்படி எம்.ஜிஆருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட சூப்பர் ஸ்டார்தான் ரஜினி.
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்திராத ஒரு வசதி ரஜினிக்கு அவருடைய நடிப்பு வாழ்க்கையின் அண்மை அத்தியாயத்தில் கிடைத்தது. அது என்ன ? எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பின்னரும் நடிக்க விரும்பினார். சட்டம் அனுமதிக்கவில்லை என்பது அவரது அதிர்ஷ்டம். அவர் கடைசியாக நடித்திருந்த படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். அரசியல் வெற்றியை வசப்படுத்திய சுந்தரபாண்டியனுக்கு, தனக்கு சினிமாவில் ஒரு காலத்தில் இருந்த பாக்ஸ் ஆபீஸ் வசூலை மீட்க முடியவில்லை. எம்.ஜி.ஆரின் ரசிகர்களே விரும்பாத அவருடைய சில படங்களில் ஒன்றாகவே மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் இருக்கிறது. காரணம் அவருடைய முதுமை கடைசி படங்களில் எல்லாம் வெட்ட வெளிச்சமாகப் பளிச்சென்று தெரிய ஆரம்பித்து விட்டதுதான்.
இதே சிக்கலை பாபா படத்தில் ரஜினியும் சந்தித்தார். ரஜினியின் அசல் வயதை அவர் பொதுமேடைகளில் ஒருபோதும் மறைக்காதவர் என்றாலும், சினிமா பாத்திரங்களில் இளமைத் துடிப்போடே இருக்கும் ஹீரோவாகவே தொடர்ந்து நீடிக்க அவரும் அவர் மீது பணம் கட்டி சூதாடும் பட முதலாளிகளும் விரும்பிவந்திருக்கிறார்கள். ஆனால் பாபாவில் அவரை எவ்வளவு கஷ்டப்பட்டும் இளமைத்துடிப்புள்ள முகமாகக் காட்டமுடியவில்லை. வறட்டுத்தனமான கதையின் சிக்கலும் சேர்ந்து படத்தை தோல்விப் படமாக்கிவிட்டன.
அதிலிருந்து அவரால் ‘சந்திரமுகி’யில் ஓரளவு மீள முடிந்ததற்குக் காரணம் கதையம்சமும் மேக்கப்பில் காட்டிய கூடுதல் அக்கறையும்தான். ஆனால் உண்மையிலேயே அவ்ரை எம்.ஜி. ஆர் நிலையை அடையவிடாமல் தடுத்தது அடுத்து வந்த ஷங்கரின் சிவாஜியேயாகும். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்திராத கம்ப்யூட்டர் கிராஃபிக்சும் டிஜிட்டல் இண்ட்ர்மீடியட்டும் அவற்றைப் பயன்படுத்துவதில் இருந்த ஷங்கரின் புத்திசாலித்தனமும் இப்போது ரஜினிக்கு கை கொடுத்தன. தொழில்நுட்ப உச்சத்தின் பயன் எந்திரன் படத்தில் ரஜினிக்குக் கிட்டியது. கணிசமான காட்சிகளில் ரஜினியே நடிக்கத் தேவையில்லாமல் ரஜினி நடித்த மாயையை தொழில் நுட்பம் ஏற்படுத்தித் தந்தது.
இனி அடுத்தது என்ன ? வணிக சினிமாவின் தயாரிப்பாளர்கள், பெரும் பணம் முதலீடு செய்து அதை விடப் பல மடங்குப் பெரும் பணத்தை லாபமாக ஈட்டும் பேராசையில் இருக்கும் முதலீட்டாளர்கள் போன்றோர் ரஜினியைக் கொண்டு இன்னொரு சிவாஜி, இன்னொரு எந்திரன் தயார் செய்ய முடியுமா என்ற கனவில் நிச்சயம் இருப்பார்கள். ஆனால் அதெல்லாம் அவர்களுடைய கனவு. ரஜினியின் கனவாக அதுவே இருக்க வேண்டும் என்ற அவசியம் எதுவுமில்லை.
இனி ரஜினி என்ன செய்ய வேண்டும் ? அவரால் என்ன செய்ய முடியும் என்பதை முதலில் பார்ப்போம். உடல் நலம் குன்றி சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தபின்னர் ரஜினி தொடர்பாக அறிவிக்கப்பட்ட எந்தப் பட வேலையும் வேகமாக முடிந்து படம் வெளியிடத் தயார் என்பதற்கான அறிகுறிகள் இல்லை. முதுமையும் தாக்கிச் சென்ற நோயின் தன்மையும் நிச்சயம் பழையபடி துடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கவிடாமல் அவரைத் தடுக்கும் சாத்தியங்களே அதிகம். திரும்பவும் முற்றிலும் தொழில்நுட்ப உதவியை நம்பி 25 வயது இளைஞன் பாத்திரத்தில் அவரை நடிக்கச் செய்து காசு பண்ணமுடியுமா என்று சிலர் முயற்சிக்க விரும்பலாம். ஆனால் அவர் ஏன் அதை விரும்பவேண்டும் என்பதே என் கேள்வி.
தன் 37 வருட சினிமா வாழ்க்கையில் ரஜினி பெரு விருப்பங்கள் எதுவுமில்லாதவராகவே இருந்து வந்திருக்கிறார். சினிமாவில் நுழைகிற காலத்தில் ஒரு நடிகனாக தான் நிலைக்க வேண்டும் என்று இருந்த ஆசையைத் தவிர அவர் பெரிதாக சினிமா சார்ந்து வேறு எதற்கும் ஆசைப்பட்டதாகத் தெரியவில்லை.
பலதரப்பட்ட பாத்திரங்களை செய்யும் திறமை இருந்தபோதும், சில வருடங்களிலேயே அவருக்கு அதற்கான வாய்ப்பு பறிக்கப்பட்டுவிட்டது. ஒரே மாதிரியான ஃபார்முலா ஹீரோ பாத்திரங்களை செய்து சூப்பர் ஸ்டாராக்கப்பட்டு, வணிக சினிமாவின் காமதேனுவாக இருக்க வேண்டும் என்று அவருக்கு சினிமா துறை விதித்த ‘அன்புத் தண்டனை’யை அவர் விரும்பி ஏற்று அடுத்த 30 வருடங்களாக தனக்குள் இருந்த நடிகனைக் கொன்று ஸ்டாராகவே இருந்து வந்திருக்கிறார். இந்த ஸ்டார் பாத்திரத்தில் அவருக்குள் இருந்த நடிகனால் செய்ய முடிந்த ஒரே கிரியேட்டிவிட்டி ஹீரோயிசத்துடன் காமெடியை சேர்த்துக் கொண்டதுதான்.
ரஜினியை வணிக சினிமா சூப்பர் ஸ்டாராக்கி லாபம் சம்பாதித்தது போல அவரை அரசியல் தலைவராக்கி அரசியல் லாபம் சம்பாதிக்கும் முயற்சிகளை வெளியில் ஓரிருவர் மேற்கொண்டார்கள். ஆனால் அவர் அதற்கானவன் தான் இல்லை என்ற உள்தெளிவுடனே இருந்து வந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.அவ்வப்போது அரசியல் சார்ந்து சில அதிரடி கருத்துகளைப் பேசுவது அவருடைய சினிமா வெற்றிக்கு உதவுகிறது என்பதை புரிந்துகொண்டு அந்த உத்தியைப் பயன்படுத்தியதைத் தவிர, நேரடி அரசியலில் அவருக்கு ஈடுபாடு இல்லை; அரசியல் பற்றிய ஆழமான புரிதலோ தெளிவோ கூட அவருக்கு இருப்பதாக சொல்லமுடியாது.
அரசியலைப் போலவே அவருடைய ஆன்மீக ஈடுபாடும் தெளிவற்றதுதான். அதில் பிறருக்கு உபதேசிப்பதற்கான எந்தத் தத்துவமும் இல்லை. ‘எல்லாரும் போய் குழந்தை குட்டிகளைப் படிக்க வையுங்க; வயசான அப்பா அம்மாவை நல்லா பாத்துக்குங்க.’ என்றெல்லாம் மற்றவர்களுக்குச் சொல்ல, பெரிய ஆன்மிக அறிவு எதுவும் யாருக்கும் தேவையில்லை. காலம் காலமாக முன்னால் போய் அடிபட்டவன் அடுத்து அடிபட இருப்பவனுக்கு சொல்லக்கூடியவைதான் அவை. தன் அரசியல், ஆன்மீக அறிவு பற்றியெல்லாம் ரஜினியே நன்றாக உணர்ந்திருப்பதனால்தான் அண்மைக்காலமாக அவரே அவை சார்ந்து எதுவும் பொது தளத்தில் பேசுவதில்லை.
எனவே இனி ரஜினி என்ன செய்யவேண்டும்? ரஜினியின் பலம் என்ன? அவருக்கு ஒரு பிராண்ட் வேல்யூ இருக்கிறது என்பது ஒரு பலம். திறமையான நடிகர் என்பது இன்னொரு பலம். இந்த இரண்டு பலத்தையும் அடுத்த கட்டத்துக்கு பயன்படுத்த அவர் என்ன செய்ய வேண்டும் என்றே அவர் சிந்திக்க வேண்டும்.
ரஜினியைப் போலவே கோபக்கார இளைஞன் பாத்திரங்களின் மூலம் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஹிந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த அமிதாப் பச்சன் முதுமையில் ஓர் அற்புதமான குணச்சித்திர நடிகராக தன்னை மாற்றிக் கொண்டு நான்காவது இன்னிங்சை அலட்சியமாக விளையாடிக் கொண்டிருப்பது ரஜினிக்கு ஒரு நல்ல ரோல் மாடல். அது ரஜினிக்கு சாத்தியப்படக்கூடியதுதான். தன் கதையம்சம் அடி-உதை-லவ்வு- பொறுக்கி என்ற ஹீரோ பாத்திரங்கள் சார்ந்து தேக்கமடைந்து போயிருக்கும் தமிழ் சினிமாவுக்கும் நல்லது. ரஜினி போன்ற திறமையான நடிகர் வயது முதிர்ந்த பாத்திரங்களில் நடிக்க முன்வந்தால், அவரைச் சுற்றி வலுவான கதையம்சத்துடன் முற்றிலும் வேறு விதமான களங்கள், கதைகள் வருவது சாத்தியப்படும். விடலை ஆடியன்சை மட்டுமே நம்பி ஒரே மாதிரி கதை பண்ணி நஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா உலகில், ரஜினி போன்ற திறமைசாலியான நடிகர் முதிர்ந்த பாத்திரங்களில் அடர்த்தியான கதைகளில் நடித்தால், மீண்டும் குடும்பங்களை திரையரங்குக்கு வரவழைப்பது சாத்தியப்படும்.
இன்று ஹாலிவுட்டில் பல முன்னாள் ஹீரோக்கள் வயது முதிர்ந்தபின்னர், நல்ல கதையம்சத்துடன் கூடிய சின்ன பட்ஜெட் படங்களை இயக்குவது, அல்லது தயாரிப்பது என்று தங்கள் கலை வாழ்க்கைக்கு புதிய பரிமாணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி நடிப்பைத் தவிர இயக்கம் போன்றவற்றில் எப்போதும் ஆரவம் காட்டியவரே அல்ல. ஆனால் அவர் ஒரு நல்ல தயாரிப்பாளராக மாறமுடியும். நல்ல ஸ்கிரிப்ட்டுடன் வரும் இளைஞர்களை கொண்டு பெரிய திரைக்கு இல்லாவிட்டாலும் கூட, சின்னத் திரைக்கான முழு நீள டெலி பிலிம்களைத் தயாரித்து அளிப்பவராக ரஜினி இயங்கமுடியும். அவருக்கு இருக்கும் பிராண்ட் வேல்யூ இப்படி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டால், டெலிவிஷனின் தன்மையைக் கூட அவரால் மாற்றியமைக்க முடியும்.
இதையெல்லாம் அவரிடம் விவாதித்துச் சொல்லக் கூடிய பார்வையும் ஆற்றலும் கொண்ட நெருக்கமான நண்பர் வட்டமோ தொழில் வட்டமோ தமிழ் சினிமா உலகில் இல்லை என்பது ஓர் இழப்புதான். ரசிகர்கள் அவருக்காக ரத்தம் கொடுக்கலாம்.ஆனால் டாக்டர்தான் சிகிச்சை தரமுடியும். சினிமா உலகின் டாக்டர்களாக இருக்க வேண்டிய மீடியா தானும் ரசிகனாக மட்டுமே குறுகிப் போய்விட்டது சமூகத்துக்கு இன்னொரு இழப்பாகும்.
(சினிமா எக்ஸ்பிரஸ் ரஜினி மலர் டிசம்பர் 2012)

No comments:
Post a Comment