Sunday, June 24, 2012

பெரியார் தமிழர் பகைவரா?

மிழர்களுக்காகப் போராடுவதாகச் சொல்பவர்கள் சமீப காலமாக, பெரியாரைப் புறக்கணிப்பதும் எதிரியாகச் சித்திரிப்பதும் தொடர் கிறது. இந்தப்பட்டியலில் புதுவரவு, சீமான் நடத்தும் 'நாம்தமிழர் கட்சி’. கோவையில் கடந்த 18-ம் தேதி அந்தக் கட்சி வெளியிட்ட கொள்கை ஆவணத்தின் சில பகுதிகள் பெரியாருக்கு எதிரானவை. 'பெரியார் படத்தை இனி நாம் பயன்படுத்தக் கூடாது’ என்ற அளவுக்கு தீவிரம். இதற்கு, பெரியாருடன் நெருங்கிப் பழகியவரும் மார்க்ஸியப் பெரியாரிய பொதுஉடமைக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளருமான பெரியவர் வே.ஆனைமுத்துவின் பதில் என்ன?
''நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணத்தில் '1938-ல் சென்னை மாகாண முதல்வரான ராஜாஜி, பாடத் திட்டத்தில் இந்தியைப் புகுத்தினார். அதை எதிர்த்து நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள் ஆகியோரின் தலைமையில் தமிழ்நாடு தமிழருக்கே என்று தமிழர்கள் திரண்டனர். அந்நேரத்தில் அவர்களை ஆதரிப்பதுபோல வந்த பெரியார், தமிழர்களை அடிமைப்படுத்தும் திட்டத்தின்கீழ் திராவிட நாடு முழக் கத்தை முன்னெடுத்தார்..’ என்று கூறப்பட்​​டுள்ளது. அதுகுறித்த உங்களது விளக்கம் என்ன..?''
''வரலாற்றை ஒழுங்காகப் படிக்கா​தவர் கூற்று இது! இந்தியாவில் அன்று இருந்த ஒன்பது மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்தன. அதில் வங்காளம், பஞ்சாப், குஜராத், சென்னை போன்ற பெரும்பான்மையான மாகாணங்களில் இந்தி பேசுபவர்கள் இல்லை. அந்த மாகாணங்களில் ஆட்சி செய்பவர்கள் யாரும் இந்தியைப் புகுத்த நினைக்காத​போது ராஜாஜி மட்டும் சென்னை மாகாணத்தில் இந்தியைப் பாடத் திட்டத்தில் புகுத்தினார். தமிழ் அறிஞர்கள் அதை எதிர்த்தனர். அன்று இந்தியை எதிர்த்தவர்களைக் கருத்து ரீதியாக எதிர்த்தவர்கள், களப்பணி ஆற்றியவர்கள் என இரண்டாகப் பார்க்க வேண்டும். ஈழத்து சிவானந்த அடிகள்தான் ராஜாஜியின் அறிவிப்பை எதிர்த்து முதலில் அறிக்கை வெளியிட்டவர். திருச்சி தி.பொ. வேதாசலம், கி.ஆ.பெ. விசுவநாதம், சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள் என்று பலரும் இந்தியை எதிர்த்து எழுதினர். அவர்களைக்கொண்டு அப்போது திருச்சியில் நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர் பெரியார். அதாவது களப்பணி ஆற்றியவர் பெரியார்.
அதைத்தொடர்ந்து, இந்தி எதிர்ப்புப் போராட்டம் பெரியார் தலைமையில் தமிழ்நாட்டில் 20 மாதங்கள் நடந்தன. தினமும் இரண்டு பேர் சிறைக்குச் செல்வார்கள். அப்படியாக, 20 மாதங்களில் 1,230 பேர் சிறைக்குச் சென்றனர். பெரியாருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி, பெல்லாரி சிறைச்சாலையில் அடைத்தனர். அண்ணா உள்ளிட்ட பல தலைவர்கள் சிறை சென்றனர். சிறைக்கொடுமையில் இரண்டு தோழர்கள் இறந்துபோனார்கள். மக்கள் மனதில் அது பெரும்கொந்தளிப்பாக இருந்தது. இந்த நேரத்தில் ராஜாஜி, 'சோற்றுக்கு இல்லாதவர்களும் படிப்பறிவு இல்லாதவர்களும்தான் இந்தியை எதிர்த்துச் சிறைக்குப் போகிறார்கள்’ என்றார். அது, கொந்தளிப்பை மேலும் அதிகமாக்கியது. ஆறு மாதங்களில் சிறையில் இருந்து பெரியார் விடுதலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து திருச்சி முதல் சென்னை வரை  இந்தி எதிர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது. சென்னையில் பேரணியை நிறைவுசெய்து பேசிய பெரியார், 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கினார்.
அந்தச் சூழலில் நடந்த நீதிக்கட்சிக் கமிட்டிக் கூட்டத்தில் ஆந்திர, கன்னட, ஒரிஸா மற்றும் கேரளத் தலைவர்கள், தமிழ்நாடு தமிழருக்கே என்றால் நாங்கள் எல்லாம் யார் என்று பெரியாரிடம் கேட்டனர். அதன்பிறகே 'திராவிட நாடு திராவிடருக்கே’ என்று அறிக்கை வெளியிட்டார். 1940-ல் திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் தமிழில் ஒரு மணி நேரம் பேசிய பெரியார், தெலுங்கில் அரை மணி நேரம் பேச வேண்டியிருந்தது. அந்த மாநாட்டில் தெலுங்கர்கள் அந்த அளவுக்கு இடம் பெற்றிருந்ததே அதற்குக் காரணம். ஆக, அன்றைய சென்னை மாகாணம் தென்னிந்தியாவை உள்ளடக்கியதாக இருந்ததால், திராவிட நாட்டுக் கொள்கை இயல்பாக எழுந்த ஒன்றே. 40-களில் வெளிவந்த ஜி.டி. நாயுடுவின் 'இந்தி போர்முரசு’, ம.இளஞ்செழியனின் 'தமிழன் தொடுத்த போர்’ என்ற நூல்கள், பெரியாரின் இந்தி எதிர்ப்புப் போரை விரிவாக விளக்கும். எனவே, பெரியார்தான் 1938 போராட்டத்தில் களப்பணி ஆற்றியவர்!''
''தமிழை அறிவியல் அற்ற மொழி. அதை தமிழர் வாழ்வியலில் இருந்து தலை முழுகிவிடுவதே அறிவுடமை.. எனப் பெரியார் கூறியதையும் அந்தக் கொள்கை ஆவணத்தில் கண்டித்திருக்கிறார்கள். பெரியார் ஏன் அவ்வாறு கூறினார்?''
''தமிழில் அறிவியல் கலைச்சொற்கள் குறைவாக இருப்பதைத்தான் அவர் சொன்னார். 'சென்றுடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று பாரதி பாடினார். ஆனால், தமிழர்கள் அதைச் செய்யவில்லை. அது தமிழர்களின் குறைபாடே அன்றி, தமிழின் குறைபாடு அல்ல. மருத்துவ, பொறியியல், இயற்பியல், வேதியியல் நூல்கள் தமிழில் இன்னமும் வெளியாவது இல்லையே.. அறிவியல் அற்ற மொழி என்று, தமிழை அவர் சொன்னது அந்தப் பொருளில்தான்.
பன்னிருப் பாட்டியல் என்ற யாப்பெருங்கலக்காரிகை நூல் தமிழில் உண்டு. அதில், தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் எது பிராமண எழுத்து, எது சூத்திர எழுத்து, எது சத்திரிய எழுத்து என்றெல்லாம் உள்ளது. ஆங்கிலத்தில் அவன் என்பதற்கு லீமீ என்று ஒரு வார்த்தை உள்ளது. ஏழை, பணக்காரன்,பெரியவர், சிறியவர், கடவுள் எல்லாவற்றுக்கும் அதுதான். ஆனால் தமிழில் அவன், அவர், அவர்கள் என்று எழுது கிறோம், சொல்கிறோம். ஆக, எழுத்தில் வர்ணபேதம் உள்ளதை, புராணக் கட்டுக்கதைகள் மிகுந்திருப்பதைக் கண்டிப்பதற்காக தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று ஒரு கட்டத்தில் சொன்னார். தமிழ் மொழியின் பெருமையையும் பல சமயங்களில் பேசியிருக்கிறார். தமிழ் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று பேசினார். நெடிய வாழ்க்கை வாழ்ந்து வெவ்வேறு போராட்டங்களைக் கண்டவர் பெரியார். வெவ்வேறு பிரச்னைகளின்போது அவர் கூறியதில் சில வார்த்தைகளை மட்டும் தனியாகப் பார்த்தால், பெரிய முரண்பாடு இருப்பதுபோலத் தெரியும். நாம் அவர் சொன்ன சூழலையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது அவசியம்.''
''ஈழத் தந்தை செல்வா, பெரியாரிடம் ஆதரவு கேட்டபோது, நானே அடிமை, இன்னொரு அடிமைக்கு உதவுவது எப்படி? எனவும் சிங்களர் களுக்குப் பணிந்து செல்லுமாறு கூறியதாகவும் நாம் தமிழர் அமைப்பு கண்டித்திருக்கிறதே..''
''22.2.72 அன்று செல்வா சென்னைக்கு வந்து பெரியாரைச் சந்தித்துப் பேசினார். 'ஒரு அடிமை இன்னொரு அடிமைக்காகப் போராட முடியாது. நீங்கள் அங்கு சென்று போராடுங்கள்’ என்றுதான் பெரியார் சொன்னார்... பணிந்து போய்விடுங்கள் என்று சொல்லவில்லை!''
- ஜூனியர் விகடனில் இருந்து

காவிரி... 10 உண்மைகள்!

காவிரி... 10 உண்மைகள்!

மேட்டூர் அணையின் வரலாற் றில், 53-வது ஆண்டாக ஜூன் 12-ம் தேதி அணை திறப்பது தள்ளிப்போய் இருக்கிறது. இந்த ஆண்டும் குறுவைச் சாகுபடி இல்லை. குறுவைச் சாகுபடி இல்லாமல்போனால் என்னவாகும்? காவிரிப் படுகை காய்ந்துபோனால் என்ன இழப்பு? சில
உண்மைகள்...
உண்மை 1: தமிழகத்தின் நெல் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியைத் தரவல்லது காவிரிப் படுகை. குறுவை, சம்பா, தாளடி என்று மூன்று பருவச் சாகுபடி. இதில் குறுவை 4 லட்சம் ஏக்கர்; சம்பா 8 லட்சம் ஏக்கர்; தாளடி 4 லட்சம் ஏக்கர் சாகுபடியாகும். இந்த மூன்று பருவங்களில் குறுவைப் பருவம்தான் நல்ல விளைச்சல் தரும். தவிர, குறுவைச் சாகுபடி இல்லாமல் போனால், 17.36 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வீட்டில் முடங் கிப்போவார்கள்.
உண்மை 2: காவிரி கர்நாடகத்தில் உற்பத்தியாகிறது. ஆனால், அதைவைத்து 2,000 ஆண்டுகளுக்கு மேலாக நெல் சாகுபடி செய்துவருவது தமிழக விவசாயிகள்தான். நதி நீர் உரிமையைப் பொறுத்த அளவில், அது உற்பத்தியாகும் இடத்தைவைத்துத் தீர்மானிக்கப்படுவது இல்லை. பாரம்பரிய மாக அதைப் பயன்படுத்தி வருவோருக்கே முதல் உரிமை. இது சர்வதேச அளவிலான நடைமுறை.
உண்மை 3: தமிழகத்தில் கரிகாலன் கட்டிய கல்லணை, அதற்குப் பின் ஆங்கி லேயர் காலத்தில் கட்டப்பட்ட மேலணை, கீழணை நீங்கலாக, காவிரியில் 1924 வரை அணைகள் எதுவும் கிடையாது. இங்கு மேட்டூர் அணையைக் கட்டும்போது, இன்றைய கர்நாடகத்தின் முதல் அணையான கிருஷ்ணராஜசாகர் அணையைக் கட்டிக்கொள்ள மைசூர் மன்னருக்கு ஆங்கிலேய அரசு அனுமதி அளித்தது. கர்நாடகம் நெல் சாகுபடியை ஆரம்பித்ததும் காவிரி அரசியலை ஆரம்பித்ததும் இதற்குப் பிறகுதான். கிருஷ்ணராஜசாகர் அணை நீங்கலாக கர்நாடகம் காவிரியில் கட்டிய அனைத்து அணைகளும் சட்டத்துக்குப் புறம்பானவை. அதாவது, மத்திய அரசின் அனுமதி பெறாதவை. ஒரு மாநில அரசு இப்படி முறைகேடாக நடந்துகொண்டால், அந்த அரசைக் கலைக்க மத்திய அரசுக்கு உரிமை உண்டு. கர்நாடகத்தின் இந்த முறைகேடு அரசியலை முதலில் தொடக்கிவைத்தது காங்கிரஸ் அரசு.
உண்மை 4: 1901-ல் அன்றைய மைசூர் மாகாணத்தின் சாகுபடிப் பரப்பு - 1.11 லட்சம் ஏக்கர். 1970-ல் கர்நாடகத்தின் சாகுபடிப் பரப்பு - 6.83 லட்சம் ஏக்கர். 1991-ல் நடுவர் மன்றத்தில் தன்னுடைய சாகுபடிப் பரப்பு 11.2 லட்சம் ஏக்கர் என்று சொன்னது கர்நாடக அரசு. இதற்கு மேல் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கக் கூடாது; தண்ணீர்ப் பற்றாக்குறை மேலும் தீவிரமாகும் என்று கர்நாடகத்துக்குக் கட்டுப்பாடு விதித்தது நடுவர் மன்றம். ஆனால், இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்துக்கு அதே நடுவர் மன்றம் 18.85 லட்சம் ஏக்கருக்குத் தண்ணீர் ஒதுக்கியது. இப்போது தன்னுடைய பாசனப் பரப்பை 23.85 லட்சம் ஏக்கராக விரிவாக்கியுள்ளது கர்நாடகம். மேட்டூர் அணை பயன்பாட்டுக்கு வந்த 1934-ல் தொடங்கி 1970 வரை ஆண்டு தோறும் அணைக்கு வந்த சராசரி நீரின் அளவு 378 டி.எம்.சி. காவிரி நடுவர் மன்ற இடைக் காலத் தீர்ப்பு இதை 205 டி.எம்.சி. ஆக்கியது; இறுதித் தீர்ப்பு 192 டி.எம்.சி. ஆக்கியது. 
உண்மை 5: காவிரிப் பிரச்னையில் கர்நாடக அரசியல் கட்சிகள் எல்லாக் காலங்களிலும் சேர்ந்தே செயல்படுகின்றன. மாநில நலனே அங்கு பிரதானம். தமிழகத்திலோ நேர் எதிர்நிலை. காவிரிப் பிரச்னையில் ராஜதந்திரரீதியாக ஒரு வரலாற்றுத் தவறைத் தமிழகம் செய்தது. காவிரிப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தபோது, 1971-ல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்திரா காந்தியுடன் கூட்டணி சேர்ந்த பிறகு, அவருடைய சமரசத்தை ஏற்று பேச்சுவார்த்தைக்காக அந்த வழக்கைத் திரும்பப் பெற்றார் கருணா நிதி. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா மூவருமே காவிரியை அரசியல்ரீதியாகவே அணுகினார்கள்.
உண்மை 6: இதற்கிடையே 1983-ல் காவிரி விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் இழுத்தடித்து, 21 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தபோது, மீண்டும் உச்ச நீதிமன்றப் படியேறி தன்னையும் அந்த வழக்கில் இணைத்துக்கொண்டது தமிழகம். உச்ச நீதிமன்ற ஆணைப்படி, 1990-ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 17 ஆண்டுகள், 568 அமர்வுகளுக்குப் பின் இறுதித் தீர்ப்பை வழங்கியது நடுவர் மன்றம். காவிரியின் ஒட்டுமொத்த நீரோட்டத்தை 740 டி.எம்.சி. எனக் கணக் கிட்டு அதில், தமிழகம் 562 டி.எம்.சி., கர்நாடகம் 465 டி.எம்.சி., கேரளம் 92.9 டி.எம்.சி., புதுவை 9.24 டி.எம்.சி. கேட்டன. இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு, 419 டி.எம்.சி., கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி., கேரளத்துக்கு 30 டி.எம்.சி., புதுவைக்கு 7 டி.எம்.சி., சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 10 டி.எம்.சி., கடலில் கலக்கும் அளவு 4 டி.எம்.சி. என ஒதுக்கீடு செய்தது நடுவர் மன்றம். தமிழகத்துக்கு இது சேதம் தரும் தீர்ப்பு. எனினும், இரு தரப்பு விவசாயிகளின் நலன்களையும் ஒப்பிட்டு, அரை மனதோடு ஏற்க வேண்டிய நிலை. ஆனால், இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குப் போனது கர்நாடகம். வேறு வழி இல்லாமல் தமிழகமும் உச்ச நீதிமன்றத்துக்குப் போனது. இந்த முறையீடுகள் ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் முடங்கிக்கிடக்கின்றன. 
உண்மை 7: காவிரிப் படுகையில் ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், குட்டைகள் இருந்தன. ஊருக்கு ஊர் கோட்டகம் எனப்படும் நீர்ப்பிடிப்புப் பகுதி இருந்தது. குடிமராமத்து முறை வழக்கொழிந்த பின், படிப்படியாக இவற்றில் பெரும்பாலானவை ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்தன. அரசு ஆழ் குழாய் விவசாயத்தை ஆதரித்தது. இதனால், நாலைந்து அடிக்குள் பிள்ளைக்கேணி தோண்டி விவசாயம் செய்த இடங்களில், இன்றைக்கு நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழே போய்விட்டது. இந்த நீர்நிலைகளை மீட்டுருவாக்குவதுடன் காவிரி நீர்ப் பாதையைப் புனரமைத்துக் கட்டுக்கோப்பாக்கி, மழைக் காலங்களில் உபரியாகக் கிடைக்கும் நீரைத் தேக்கிவைக்க கதவ ணைகள் கட்டினால், சுமார் 50 டி.எம்.சி. வரை நீராதாரத்தை உருவாக்க முடியும். 1980-களில் இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்த 1,000 கோடி ஆகலாம் என்று சொன்னது உலக வங்கி. இன்றைக்கு 10,000 கோடி ஆகலாம். ஆனால், தமிழக அரசு அதை இன்றுவரை பொருட்படுத்தவே இல்லை.
உண்மை 8: காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான ஆணையத்தின் வழிமுறைகள், நீதிமன்ற உத்தரவுகள், நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு... இப்படி எதையும் கர்நாடகம் இதுவரை மதித்தது இல்லை. தமிழகத் துக்குத் தண்ணீர் தர முடியாது என்று கூறாத கர்நாடக முதல்வர்களே வரலாற் றில் இல்லை. மத்தியில் ஆண்ட காங்கிரஸ், பாரதிய ஜனதா, ஜனதா தளம் ஆகிய தேசியக் கட்சிகளே கர்நாடகத்தையும் ஆண்டன; ஆள்கின்றன.
உண்மை 9: உலகில் எத்தனையோ நாடுகள் நதி நீரை நியாயமான முறையில் பகிர்ந்துகொள்கின்றன. தண்ணீருக்கு அலையும் சூழலில் உள்ள பரம்பரை வைரிகளான இஸ்ரேலும் பாலஸ்தீனமும்கூட நியாயமான முறையில் தண்ணீரைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்திய அரசால் பாகிஸ்தானுடன் சுமுகமான முறையில் தண்ணீரைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால், உள்நாட்டுக்குள் பகிர்ந்தளிக்க முடியவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் காவிரிப் படுகை மாவட்ட விவசாயிகள் பல முறை வறட்சியிலும் பஞ்சத்திலும் அடிபட்டனர். நாட்டுக்கே உணவு கொடுத்தவர்கள் கஞ்சித் தொட்டியில் கஞ்சி வாங்கிக் குடிக்கும் நிலைக்கும் வயல்களில் எலிகளைப் பிடித்துத் தின்னும் நிலைக்கும்கூடத் தள்ளப்பட்டனர். ஆனால், மத்திய அரசு துளியும் அலட்டிக்கொள்ள வில்லை. இயற்கைக்கு முரணான நதி நீர் இணைப்புபற்றி நம்முடைய ஆட்சியாளர் கள் நிறையப் பேசுகின்றனர். ஆனால், நதிகளை தேசிய உடைமையாக்கி - அதாவது, நதி நீர்ப் பங்கீடு உள்ளிட்ட சகல உரிமைகளையும் மத்திய அரசே நிர்வகிக்க - எவரும் குரல் கொடுக்கவில்லை.
உண்மை 10: காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு... துரோகங்கள் தொடர்கின்றன. நாம் வேடிக்கை பார்க்கிறோம்.
ஆனந்த விகடனிலிருந்து...

அயோத்தியின் வரலாறு






யோத்தி இந்து, முஸ்லீம் ஆகிய இரு பிரிவு மக்களுக்கும் புனிதத் தலமாக விளங்குகிறது. இந்து மக்கள் ராமர் பிறந்த பூமியாக  கருதுகின்றனர்.  முஸ்லீம்களுக்கு  அயோத்தியில் சராயு ஆற்றின் கரையில் ஷியா, "ஆதாமின் பேரன்' புதைக்கப்பட்ட இடு காடாகும். அயோத்தி ராமர் இந்து காலண்டு படி  தீர்த்த யுகத்தில்  9,00,000 வருடங்களுக்கு முன் பிறந்ததாக  நம்பப்படுகிறது. புராதன வரலாறுப்படி அயோத்தி கோசல ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது. மேலும் கி.மு. ஆறாவது மற்றும்  ஐந்தாவது நூற்றாண்டுகளில் எழுச்சி யுற்ற புத்த மதத்தினால் அதன் தலை நகரத்துடன் இணைந்ததாகவும், அங்கே புத்தர் சில காலம்  தங்கியதாகவும் கூறப்படுகிறது. அன்றைய சாக்தான் என்றழைக்கப்பட்ட பகுதிதான் இன்றைய அயோத்தி என அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் அயோத்தி  விக்கிரமாதித்தனால் புனரமைக்கப் பட்டதாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் புத்த மதம் பிராமண ஆதிக்கத்தால் மறைய  தொடங்கியது. பேராசிரியர் ரொமிலா தாபர்,  ""இரண்டாம் சந்திரகுப்தர் தான் விக்கிரமாதித்தன் என்ற பட்டப்பெயரை கொண்டவர்'' என கூறுகிறார். பேராசிரியர் ஷேர் சிங், ""ஸ்கந்தகுப்தா தனது தலைநகரை சாக்தா (அயோத்தி)  மாற்றியதற்கான ஆதாரமில்லை'' என்று கூறுகிறார்.   

அயோத்தி இந்துக்களின் ஏழு புனித தலங் களில் ஓன்றாக விளங்குவதற்கான காரணம் அது ராமர்  பிறந்த இடமாக சொல்லப்பட்டது. அயோத்தியாவில் உள்ள 6,000 இந்து கோயில் களில் 4,000 கோயில்கள் ராமர் தொடர்புடைய தாகும். இதனால் இந்து  அமைப்புகள் அயோத்தி இந்துக்களின் தலைநகரம் என்றும், ராமர் தேசிய கடவுள் என்றும் கூறி வருகின்றனர். அயோத்தி இல்லை என்றால் நாடே இல்லை என்றும், எப்படி கிறிஸ்துவர்களுக்கு வாடிகன் புனித பூமியோ அதுபோல இந்துக்களுக்கு அயோத்தி புனித பூமி  என்பது அவர்கள் வாதம்.அடுத்த பிரச்சினையானது அயோத்தியின் இருப்பிடம் பற்றியது. அயோத்தி  பைசாபாத் மாவட்டத்தில் சராயு நதிக்கரைக்கு வலது புறத்தில் தொல்லிலியல் அறிஞர்கள் நடத்திய ஆராய்ச்சியில், அயோத்தியில்   மனித வாழ்க்கை யானது வடக்கு பள்ளப்பான கருப்பு மண் பானை நாகரிகத்தை   (Northern Black Polished ware-NBPW) தாண்டி போகவில்லை என காட்டியது. இது கி.மு 700-ஆம் ஆண்டை சேர்ந்ததாகும். இராமாயணம் உண்மையாகவே நடந்திருந்தால் அதற்கான வரலாற்றுஆதாரங்கள் கிடைத்திருக்கும்.(பி.பி.லால்-ராமாயணா இடங்களின் அகழ்வாராய்ச்சி அறிக்கை-1992)  அதேபோல வால்மீகியின் ராமாயணமும் சில நூல்களையும் பேராசிரியர் ஷேர்சிங் ஒப்பிட்டு கூறுகையில், ""வால்மீகியின் கூற்றுப்படி  அயோத்தியா சரி என்றால், அது நேபாளத்தில் பாயும் சராயு ஆற்றின் தெற்கே 22 கிலோமீட்டர் உள்ள இடமாகும். ( பி.எஸ். ஸ்ரீதர மூர்த்தியின் நூல்- ராமா, இராமாயணா மற்றும் பாபர். 1988- ஆம் ஆண்டு வெளியீடு)

முஸ்லீம் வெற்றிக்கு பின்னர் அயோத்தி பிரச்சினை முக்கியக் கட்டத்திற்கு வந்தது. மன்னர் பாபரின் தளபதியான மீர்பாக்ஷி 1528-ம் ஆண்டில் அயோத்தியில் இராமர் கோயிலை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு,  அந்த இடத்தில் பாபர் மசூதியை கட்டினார் என கூறப்படுகிறது. இப்போது இதுதான் பிரச்சினை. அயோத்தியில் 1975-ம் ஆண்டு முதல் ஆய்வு செய்த  தொல்பொருள் நிபுணர் பி.பி. லால் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு இதை மறுத்துள்ளது. மேலும் அங்கு கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்க வில்லை என்று தெரிவித்தது. ராஷ்டீரிய சேவா சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பு நடத்தும் மானதன்  (Manthan)  பத்திரிக்கையில் 1990 -ஆம் ஆண்டு அக்டோபர் மாத இதழில் இராமர் கோயிலின் தூண்கள் தென்பட்டதாக செய்தி வெளியிட்டது.

18-ஆம் நூற்றாண்டில் நவாப்கள், அவாத், ஷீஜா-உத்-தௌலத் மற்றும் ஆசப்-உத்-தௌலத் ஆதரவினால் அயோத்தி மீண்டும் இந்துக்களின் புனிததலமாக விளங்கியது. பின்னர் இந்து பக்தி இயக்கம் அவந்தி நோக்கி திரும்பியதனால் ஆங்கிலேய அரசு அயோத்தியை தங்களுக் காக எடுத்துக்கொண்டது. இந்த சமயத்தில் நிர்மோஸ் என்ற இந்து துறவி இது இராமர் பிறந்த இடமென பாபர் மசூதி உள்ள இடத்தை உரிமைக்கோரினார். மேலும் ராமர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பாபர் மசூதி கட்டப் பட்டுள்ளதாகவும் கூறினார். அப்போதுதான் அயோத்தி பிரச்சினை உருவானது. இது 1853-55-இல் மிகப்பெரிய கலவரம் வெடிக்க காரணமாக அமைந்தது. (வரலாற்று அறிஞர் சுசில் ஸ்ரீவத்சவா, மசூதிப் பிரச்சினை: ஒரு வரலாற்று விசாரணை என்ற நூல்.). 1883-ம் ஆண்டு மே மாதம் பைசாபாத் கமிஷனர் இந்துக்கள் சாபூத்ரா (நடைபாதை) வலது பக்கத்தில் கோயில் அமைக்க முயன்றபோது முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதற்கு அனுமதி மறுத்தார். 1885-ல் மசுந்ந் ரகுபார் தாஸ் பைசாபாத் சப்கோர்ட்டில் கோயில் கட்ட அனுமதி கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கோயில் கட்ட 1886 -இல் அனுமதித்ததுடன், அதற்கு எதிரான மனுக்களையும் தள்ளுபடி செய்தார். இதனால் பதட்டம் நிலவியது. முஸ்லீம் போராட்டக் காரர்கள் பாபர் மசூதி முன் கூடினார்கள். இந்துக்களும் அருகிலுள்ள அனுமர் சிலை முன்பு கூடினார்கள். இரு தரப்புக்கும் இடையே மூண்ட கலவரத்தில் 75 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். இந்துக்கள் பாபர் மசூதியை கைப்பற்றினார்கள்.

19-ம் நூற்றாண்டில்தான் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியதாக பரப்பப்பட்ட செய்தி ஆவணங்களில் பதிவானது. 1822-ல் பைசாபாத் நீதிமன்ற அலுவலர் ஹபிஜுல்லா என்பவர்  பாபரால் கட்டப்பட்ட மசூதி ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது என்று கூறினார். அதன்பின்பு இந்த கதையானது, பி.கார்னேகி என்பவரால் பைசாபாத் வரலாற்று ஆவணத்தை 1870- இல் தயாரித்து அலுவலக ஆவணமாக மாற்றப்பட்டது. இது குறித்து பைசாபாத் மாவட்ட ஆவணத்தில் பாபரின் நினைவுகள் என்ற நூலை இதற்காக மொழி பெயர்த்திருப்பது பதிவாகியுள்ளது. ஆங்கிலேய அரசு தனது கோப்பில் "ஜன்மஸ்தன் மசூதி அஜிதியா' என்று எழுதி அதை பதற்றம்  நிறைந்த கோயிலிலின் முன்பாக வைத்தது. 1920-30-ஆம் ஆண்டுகளில் மசூதி முஸ்லீம்களிடம் இருந்த போது அவர்கள் அதை தூக்கி எறிந்தனர். இதனை பைசாபாத் கமிஷனர் 1938- ஆம் ஆண்டு செப்டம்பர் 16- ம் நாள்  கண்டித்தார்.

1949-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி இரவு மசூதியின் உள்ளே சிலைகள் வைக்கப்பட்டன. இதனால் அப்போதைய நிர்வாகம்  இருதரப்பி னருக்கும் கலவரம் ஏற்படாமலிலிருக்க மசூதியை மூடியது. அதையடுத்து முதன் முதலாக இப் பிரச்சினைக்காக  முதல் விசாரணை அறிக்கை பதிவு செய்யப்பட்டது.  அதில் அபதி ராம்தாஸ், சுதர்சன் தாஸ், ராம் சுக்லா தாஸ் ஆகிய மூவர் மீதும் முதல் தகவல் அறிக்கை அயோத்தி காவல் நிலையத்தில் பதிவுவானது. இவர் களுடன் மேலும்  50-லிருந்து 60 பேர் வரை கையில் சிலைகளுடன் மசூதியில் நுழைய முயன்றதை அப்போது பணியில் இருந்த அதிகாரிகளும்,  பொதுமக்களும் பார்த்தனர். இதன் அடிப்படையில் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதற்கு சிறிது காலத்திற்கு பிறகு 5,000- 6,000 மக்கள் கீர்த்தனைகள் மற்றும் கோஷங்கள் எழுப்பியவாறு மசூதிக்குள் நுழைய முயன்றனர். ஆனால்  அவர்கள் தடுத்து  நிறுத்தப்பட்டனர். 1950-ஜனவரி 16-ம் தேதி கோபால் சிங் விஷார்ட் என்பவர் கோயிலில் வழிபட அனுமதி வேண்டி பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.  நீதிபதி சிலைகளை அப்புறப் படுத்த உத்தரவிட்டு வழிபாட்டுக்கு அனுமதி மறுத்தார். இதை எதிர்த்து 1950-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி  உத்திரபிரதேச அரசு நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது குறித்து வரலாற்று அறிஞர் சுசில் ஸ்ரீவத்சவா கூறும்போது ""1951-1986  வரை பைசாபாத்தில் நிலைமை அமைதியாகவே இருந்தது. 1936-1950 வரை பதட்டமான சூழ்நிலை நிலவியது. 1951- 1986 வரை எந்த  ஒரு கலவரமும் இல்லாமல் அமைதி காணப்பட்டது. அனைத்திந்திய இந்து மகாசபா மற்றும் பாரதீய ஜனசங்கம் அயோத்தி, மதுரா மற்றும் காசிக்கு ரதயாத்திரை நடத்தியது. 1983-ம் ஆண்டு முழுவதும் விஷ்வ இந்து பரிஷத் பல முக்கிய தலைவர்களுடன் ரதயாத்திரை நடத்தி பல நதிகளின் புனிதநீரை சேகரித்தது  பிரச்சினையை அதிகரிக்க தொடங்கியது''.

1984-ம் ஆண்டு அக்டோபர் வி.ஹெச்.பி          தனது ஸ்ரீ ராம ஜென்ம பூமி முக்தி யாஜ்னா சமிதி மூலம் இதனை தேசிய அளவில் பிரச்சினை ஆக்க முயன்றது. இந்த சமிதி 1984-ஆம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி உருவாக்கப் பட்டது. 1984-ம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி  அயோத்தியிலிலிருந்து மாநில தலைநகர் லக்னோவிற்கு 130 கிலோமீட்டர் பாதயாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரை அக்டோபர் 14-ஆம்  தேதி லக்னோ வந்தடைந்தது. அங்கு நடைப்பெற்ற பொதுகூட்டத்தில் முதலமைச் சரிடம் இந்துக்களின் கோரிக்கைகள் நிறைவேறப்பட  வேண்டும் என வலிலியுறுத்தப் பட்டது. அதற்கு அடுத்த நாளே ஸ்ரீ ராம ரத யாத்திரை உத்திர பிரதேசத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும்  நடத்தப்பட்டது. இந்த ரதயாத்திரை அக்டோபர் 31-ஆம் தேதி டெல்லி வந்தடைந்தது.  அங்கு நவம்பர் 2-இல் நடை பெறும் இந்துக்கள்  மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இவர்கள் வந்திருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதால்  இந்நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது.

1985-இல்  பைசாபாத் மாவட்ட நீதிபதி மசூதியின் பூட்டை  திறக்க உத்தரவிட்டு சாமியார்கள் உள்ளே செல்ல அனுமதித்தார். இந்த உத்தரவின் காரணமாக 1986-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி மசூதியின் பூட்டு திறக்கப் பட்டது. அப்போதைய ராஜீவ் காந்தி அரசு தேர்தலிலில் மக்களின் வாக்குகளை பெற இவ்வாறாக நடந்துக் கொண்டது. இதனால் நாடு முழுவதும் முஸ்லீம் மக்களிடையே ஒருவித பதட்டம் எழுந்தது., வி.ஹெச்.பி தொண்டர்கள் பேரணிகளை நடத்தினார்கள். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த  ராஜேந்திரகுமாரி பாஜ்பாய் ""முஸ்லீம்கள் நீதி மன்ற ஆணையை மதித்து அமைதிகாக்க வேண்டும்'' என்றார்.

சங்க் பரிவார் அமைப்பின் இயக்கம் நாடு முழுவதும் தேசிய சிந்தனை மாநாடுகளை நடத்தியது. பெரும் இக்கட்டான சூழ்நிலை 1989 தேர்தல்களின் போது ஏற்பட்டது. அப் போது மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்ட நாடு முழுவதிலிலிருந்து செங்கற்கள் கொண்டு  வரப்பட்டன. இதை பற்றி என். ராம் கூறுகையில் ""1989 பொது தேர்தலுக்கு முன்பாக ராஜீவ் காந்தி அரசு வி.ஹெச்.பி அமைப்பினை அடிக்கல் நாட்ட அனுமதித்தது. இது வி.ஹெச்.பி பிஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களை உற்சாகப்படுத்தியது'' என்றார். 1989-ஆம் ஆண்டு நவம்பர் 22-24 பொது தேர்தல்கள் மோசமான வன்முறை களமாக இந்திய வரலாற்றில் அமைந்தது. இதில் 800 பேர் உயிரிழந்தனர். பாரதீய ஜனதா  கட்சியின் ஆதரவோடு 88 தொகுதிகளை கைப்பற்றி வி.பி.சிங் பிரதமரானார். அவர் பதவி ஏற்றவுடன் இந்த மோதல் குறித்து விவாதிக்க அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு குழுவை ஜனவரி 8, 1990-ஆம் ஆண்டு அமைத்தார். நீதி மன்றம் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்தது.

1990-ஆம் ஜனவரி 12-இல் சுப்ரீம் கோர்ட்டு இந்து அமைப்பை சேர்ந்தவர்களிடம் விளக்கம் அளிக்குமாறு கோரியது. அப்போது "அனைத் திந்திய  பாபர் மஸ்ஜித் நடவடிக்கை குழு' சம்பவம் குறித்து விசாரிக்க தென் மாநிலங்களை சேர்ந்த நீதிபதிகளை நியமிக்கலாம் என்றும், ஆனால்  அவர்கள் இந்துவாகவோ, முஸ்லீ மாகவோ இருக்ககூடாது என்று கூறியது. பிறகு முஸ்லீம் தலைவர்கள் வி.பி. சிங்கை சந்தித்து இது இடத்திற்கான பிரச்சினை அல்ல, வரலாற்று பிரச்சினை என்றும் இதில் கோர்ட்டு முடிவு செய்ய தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும்  கூறினர். 1990-ஆம் ஆண்டு ஜனவரி 27-28-இல் தர்மாச்சாரியா சாமிகள் தலைமையில் இந்து அமைப்புகள் அலகாபாத்தில் கூடி, அதில்  பிப்ரவரி 14-ஆம் தேதி கோயில் கட்டலாம் என்று முடிவு செய்தன. வி.பி. சிங் மிகுந்த சிரமங்களுக்கு இடையே காஷ்மீர் மற்றும் பஞ்சாப் நிலையை எடுத்து கூறி கட்டுமான பணியை தள்ளி வைத்தார். அதற்கு பிறகு அரசாங்கத்திடம் இருந்து எந்த ஆதரவான பதிலும்  வராததால் ஹரித்துவாரில் கூடிய வி.ஹெச்.பி கட்டுமான பணியை அக்டோபர் 30-இல் தொடங்குவது என்று முடிவு செய்தது.

வி.பி.சிங் பாராளுமன்றத்தில் மண்டல் கமிஷன் மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு மேல் ஜாதி இந்துக்கள், பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சமயத்தில் எல்.கே. அத்வானி அயோத்தியில் கோயில் கட்ட அனுமதிக்க கோரியும் இந்துத்துவாவிடம் அதை  ஒப்படைக்க கோரியும் 10,000 கி.மீட்டர் ரதயாத்திரையை தொடங்கினார். அத்வானியும் அவருடன் யாத்திரை மேற்கொண்டவர்களும்  அக்டோபர் 23-ஆம் தேதி பீகாரில் கைது செய்யப்பட்டனர். இதனால் பாரதீய ஜனதா கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் வி.பி.சிங் அரசு நவம்பர் 9-ஆம் தேதி பதவி விலகியது.

நவம்பர் 1990 முதல் மார்ச் 1991 வரை பிரதம ராக இருந்த சந்திரசேகர் வி.ஹெச்.பியையும் முஸ்லீம் அமைப்பையும் பேச்சுவார்த்தையில்  ஈடுபட செய்தார். இந்த இரு அமைப்புகளும் முதல்முறையாக டிசம்பர் 1, 1990-ஆம் தேதி சந்தித்தன. இந்த இரு அமைப்புகளும் தங்களிடம்  இருந்து ஆதாரங்களை டிசம்பர் 23-ஆம் தேதி  அரசாங்கத்திடம் அளித்தன.  பின்பு மீண்டும் ஜனவரி 10, 1991-இல் மீண்டும் சந்தித்தன. அப்போது அவை இரு அமைப்புகளில் இருந்து நான்கு குழுக்களை அமைக்க ஒப்புதல் அளித்தன. இதன் மூலம் வரலாற்று ஆய்வு நடத்தி  அறிக்கை அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. பின்னர் பிரதமரான நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் இந்து அமைப்புகள் மசூதியை இடிப்போம் என்று  அறிவித்தன. இருந்தபோதிலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயங்கினார் நரசிம்மராவ்.

1992, டிசம்பர் 6 பி.வி. நரசிம்மராவ் அயோத்தி பற்றி பாராளுமன்றத்தில் பேச இயலாமல் போன நேரத்தில் 70,000 சேவா தொண்டர்கள் ராம சதா காஞ்ச்  பகுதியில் பொதுக் கூட்டத்திற்காக கூடினார்கள். மேலும் 500 சாதுக்களும், சாமியார்களும் அடிக்கல் நாட்டு பூஜைக்கு தயாரானார்கள். காலை  11.50 மணிக்குள் ஏறத்தாழ 1500 கர சேவர்கள் தடுப்பை தகர்த்து உள்ளே நுழைந்து போலீசார் மீது கற்களை வீசினார்கள். 1,000 கரசேவா தொண்டர்கள் பாபர் மசூதி உள்ளே நுழைந்த னர். சிலர் மசூதியின் மேலேறி கோபுரங்களை உடைத்தனர். 12.20 மணியளவில்  ஏறத்தாழ 25,000 கரசேவர்கள் வளாகத்தினுள் கூடினர். 2.40 மணியளவில் 75,000 பேர் மசூதியை சூழ்ந்து கொண்டு இடித்தனர்.  இப்போது  பிரதமர் பி.வி. நரசிம்மராவ் தனது இல்லத்தில் தூங்கிக் கொண்டிருந்தார் என பின்னர் தெரிய வந்தது. அத்வானி, முரளி  மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அசோக் சிங்கால், விஷ்ணு ஹரி டால்மியா  (வி.ஹெ.ச்.பி) பஜ்ரங்தலை சேர்ந்த வினய் கதியார் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

டிசம்பர் 8-ஆம் தேதி அன்று அத்வானி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இது நாட்டுக் காக இந்து மக்களுக்காக நடத்தப்பட்ட யுத்தம்  என்றும், இதில் அரசாங்கம் தலையிட்டு தொண்டர்களை கைது செய்தது அடக்குமுறையே என்றும், இது அமைப்பை பலப்படுத்துமே  அன்றி அதை அழிக்க இயலாது என்றும் குறிப்பிட்ட அவர், பாபர் மசூதி இடிப்பு  அயோத்தி இயக்கத்தின் ஒரு பகுதியே என்று ஆவேசமாக  குறிப்பிட்டார்.

உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகே பிரச்சினைக்குரிய இடத்தில் அமைதி திரும்பும்

திராவிடக் கட்சிகளால்தான் வீழ்ந்தோம்???

  ""திராவிடக் கட்சிகளால்தான் வீழ்ந்தோம். எனவே இனி திராவிடக் கட்சிகளோடு எப்போதும் கூட்டணியே இல்லை''’என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மேடைதோறும் பேசிக் கொண் டிருக்கிறார். அதேபோல் நாம் தமிழர் இயக்க சீமானும் தனது கட்சிக்கான கொள்கை ஆவணத்தில் பல இடங்களில் திராவிட இயக் கத்தை குற்றம் சுமத்தி இருக்கிறார். இது திராவிடர் கழகத்தினரை ரொம்பவே கொதிப்படைய வைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ’தந்தை பெரியாரும் திராவிட இயக்கங்களும் தமிழகத் திற்கு செய்தவைகளை பட்டிமன்றங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு செல்லுங்கள்’ என திரா விடர் கழகத் தலைவர் வீரமணி,  இயக்கத்தின ருக்கு வேண்டுகோள் விடுக்க... திருச்சி திராவிடர் கழகத்தினர் முதல் பட்டிமன்றத்தை பரபரப்பாக நடத்தினர்.

முனைவர் துரை.சந்திரசேகர் :  நடுவர் அவர்களே, நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. சென்னையில் ஒருகாலத்தில் ரொம்பவும் புகழ்பெற்ற சினிமா கொட்டகையான ஒத்தவாடை கொட்டகையில், அபிதான சுந்தரின்னு ஒரு நாடகம் நடந்தது.  அதற்கான விளம்பர நோட்டீஸில், சூத்திரர்களுக்கும் தொழுநோயாளிகளுக்கும் அனுமதியில்லைன்னு பிரசுரம் பண்ணியிருந் தானுங்க. இதைப்பார்த்து தந்தை பெரியார், யாரையடா இழிவுபடுத்தறீங்கன்னு கொதிச்சுப் போய்ட்டார். மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி, எல்லோரும் நாடகம் பார்க்கலாம்ங்கிற நிலைமையை ஏற்படுத்தினார். தந்தை பெரியார் அப்படி போராடலைன்னா, இன்னைக்கும் சீமான் மாதிரியான ஆளுங்க தியேட்டருக்குப் போய் சினிமா கூட பார்த்திருக்க முடியாது. சுதந்திரத்துக்கு முன்னாடி நீடாமங்கலத்தில் காங்கிரஸ் மாநாட்டில் உயர் ஜாதிக்காரர்களோடு சாப்பிட உட்கார்ந்ததற்காக தாழ்த்தப்பட்டவர்களை கட்டிவைத்து மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தினார்கள் சனாதனவாதிகள். அப்போ அவங்களுக்காக சிங்கம்போல் கிளர்ந்தெழுந்து சனாதனவாதிகளை கண்டித்ததோடு பாதிக்கப்பப்படவர்களை நேரில் சந்தித்து ஒத்தடம் கொடுத்தவர் தந்தை பெரியார். இதையெல்லாம் தெரிந்துகொள்ளாத ராமதாஸ் போன்றோரை அறியாமை கொண்டோரின் பட்டியலிலேதான் சேர்க்க வேண்டும்.

அதிரடி அன்பழகன் : நடுவரே அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துடாதீங்க. ஆரியர்கள் நம்மை வீழ்த்தணும்னு அனைத்து சாம பேத தண்ட உத்திகளையும் கையாண்டாங்க.. ஆனா அவங்களால் நம்மை வீழ்த்த முடியலை. காரணம் பெரியார் என்ற அரண் நமக்கு பாதுகாப்பாக நின்றது. அதனால் ஆரியர்கள் தங்கள் காலை நக்கக்கூடியவர்களை பொறுக்கி எடுத்து அவர்களை நமக்கு எதிராக களமிறக்கிக்கொண்டிருக்கிறார்கள். "சிந்திக்கத் தெரியாதவன் முட்டாள், சிந்திக்க மறுக்கிறவன் அயோக்கியன்' என்று பெரியார் சொல்வார். இவர்கள் அயோக்கியர்கள். தமிழ்பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்கள் என்றால் இங்குள்ள ஆரியர்கள் கூட தமிழ்பேசுகிறவர்கள்தானே. அதனால்தான் மொழி அடிப்படையில் நாம் பார்க்காமல் இன அடிப்படையில் நாம் நம்மைப் பார்க்கிறோம். அதனால்தான் நாம் திராவிடர்களாக நம்மை பறைசாற்றிக் கொள்கிறோம். இதெல்லாம் தெரிந்தும் நமக்கு எதிராகவே பேசிவருபவர்கள் கண்டிப்பாக அகம்பாவம் பிடித்தவர்கள்தான்.


பெரியார் செல்வம் : ராமதாசும் சாமான்யனாக இருந்து சீமானாகியிருப் பவரும் அறியாமை என்ற நிலையையும் கடந்து மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போலாகிவிட்டார் கள். கம்யூனிஸ்ட் உடையாமல் ஒரே கம்யூனிஸ்ட்டாக இருந்தபோது தலைவராக இருந்தவர் டாங்கே. அவர் தமிழகம் வந்தபோது ஒரு சுயமரியாதைத் திருமணத்தைப் பார்த்துவிட்டு, இப்படி ஒரு அமைதிப் புரட்சியை இங்கே நடத்தியிருக்கும் பெரியார்தான் உண்மையான சீர்திருத்தவாதி என்று பாராட்டினார். உண்மையான தமிழ்ப்புத்தாண்டு தை முதல்நாள் என்பதை மாற்றிவிட்டு ஆரிய வழக்கப்படி சித்திரை 1 தான் தமிழ்ப்புத்தாண்டு என்று ஆரியம் அறிவித்தபோது, இந்த தமிழ் உணர்வாளர்கள் எங்கே போனார்கள். தெரிந்தே அந்த ஆரியத்தின் அதிகார மையத்தைப் பாராட்டும் இவர்கள் அகம்பாவம் பிடித்தவர்கள்தான்.

பூவை.புலிகேசி : படித்த பாமரன் படிக்காத பாமரன் என்று ரெண்டு வகையாக பெரியார் பிரிப் பார். படிக்காத பாமரனை விட படித்த பாமரன் மோச மானவன். சென்னை மாநிலக் கல்லூரியில் பணி யாற்றிய தமிழ்ப் பேராசிரியர் நமச்சிவாய முதலியாருக்கு 80 ரூபா மட்டுமே சம்பளம். சமஸ்கிருதப் பேராசிரியரான குப்புசாமி ஐயருக்கு 300 ரூபாய் சம்பளம். தமிழ் என்ன இளக்காரமா? என்று போர்க் குரல் கொடுத்து சம்பள வேறுபாட்டைக் களைந்தவர் தந்தை பெரியார். இதையெல்லாம் தெரிந்தும் கூட பெரியாரால் என்ன நடந்தது? திராவிடத்தால்தான் வீழ்ந்தோம் என்று சொல்பவர்கள், நிச்சயமாக அகம்பாவம் கொண்டவர்கள்தான்.

தீர்ப்புரையில் நடுவர் அறிவுக்கரசு : பிராமணர்கள் மட்டுமே கோயில் கருவறைக்குள் நுழைய முடியும் என்பதை மாற்றி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் கொண்டு வந்து சாதித்தது திராவிடர்களின் ஆட்சிதான். முன்பெல்லாம் பிராமணர்கள் சாப்பிடும் இடம் என்று ஓட்டலில் அவர்களுக்கு ஸ்பெஷலாக இடம் ஒதுக்குவார்கள். அந்த இழிநிலையைத் துடைத்தெறிந்த கைகள் திராவிட இயக்கத்தினரின் கைகள். இதையெல்லாம் அறிந்தும் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் திராவிட இயக்கங்களோடு உறவு இல்லை என்றும் கூப்பாடு போடுபவர்கள் நிச்சயமாக அகம்பாவக்காரர்கள்தான்.

-இப்படி விறுவிறுப்பாக பட்டிமன்றம் நடந்த நிலையில் சிறப்புரை ஆற்றிய தி.க. தலைவர் வீரமணி, ""திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று அறியாமையால் சொல்பவர்களைக் கூட விட்டுவிடலாம். ஆனால் அகம்பாவத்தால் அப்படி சொல்பவர்களை நாம் கண்டித்தே ஆகவேண்டும். அவர்கள் திருத்தப்பட வேண்டியவர்கள்''’என தீர்ப்பிற்கு அழுத்தம் கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சேகர் இல்லத்  திருமணம் சாதி மற்றும் மத மறுப்புத் திருமணமாக எளிமையாக நடந்தது.

அரசியல் நிகழ்வுகளை விவாதிக்கும் இது போன்ற பட்டிமன்றங்கள், மக்களை ரொம்பவே கவரத் தொடங்கியுள்ளன. 
Ref:Nakkeeran

இந்தியா - பாகிஸ்தான் போரும் சமாதானமும்!

கொண்டாட்டம் நிறைந்த பிறந்தநாள் விழாவில், முழு கேக்கைத் துண்டாக்குவது ஆங்கிலேயர் மரபு. இந்தியாவுக்கு சுதந்திரக் கொண்டாட்டத்தை வழங்கியபோதும் தங்கள் மரபுப்படி துண்டு போடத் தவறவில்லை வெள்ளைக்காரர்கள். அப்போது அவர்கள் துண்டுபோட்டது கேக்கை அல்ல, தேசத்தை! 1947-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதற்கு முதல் நாளே (ஆகஸ்ட் 14) பாகிஸ்தான் என்ற இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட  புதிய சுதந்திர நாட்டை தந்துவிட்டது பிரிட்டிஷ் அரசு.

முஸ்லிம் நாடாக பாகிஸ்தானும் மதசார் பற்ற நாடாக இந்தியாவும் அறியப்பட்டாலும் மதத்தை முன்வைத்து இருநாடுகளிலும் பிரச்சினைகள் ஏற்பட்டதோடு, இருநாடுகளுக் கிடையிலான பிரச்சினைகளும் 63 ஆண்டு களாகத் தொடர்ந்து வருகிறது. அதன் காரண மாக எல்லையோர மோதல்கள், இருநாட்டுக்கு மான போர், அதன்பின் சமாதான பேச்சு வார்த்தைகள், புதிய ஒப்பந்தங்கள் என பல விதமான சூழல்கள் ஏற்பட்டாலும் நிரந்தரத் தீர்வு இன்றுவரை ஏற்படவில்லை.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பெரும் பிரச்சினையாக முன்வைக்கப்படுவது, காஷ்மீர். முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதி என்பதால் பாகிஸ்தான் அதனை உரிமை கொண்டாடு கிறது. நிலவியல் அடிப்படையில் அது நம்முடையது என்கிறது இந்தியா. காஷ்மீரின் மண்ணின் மைந்தர்களோ  இருநாடுகளுடனும் சேர விரும்பாமல் தனிநாடு கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

1947-ல் காஷ்மீர் யாருக்கு என இருநாடு களுக்கும் முதன்முதலாக சிக்கல் எழுந்தபோது, அந்த மாநிலத்தைக் கையகப்படுத்த பாகிஸ் தான் தன் படைகளை அனுப்பியது. காஷ் மீரின் மகாராஜா இந்தியாவின் உதவியை நாடி னார். இதையடுத்து இந்தியப் படைகளுக்கும் பாகிஸ்தான் படைகளுக்கும் 1947-ஆம் ஆண்டு  அக்டோபரில் தொடங்கிய போர், 1948 ஏப்ரல் வரை நடந்தது. ஐ.நா.சபை தலையிட்டது. மகாராஜா விருப்பப்படி இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தது. அதேநேரத்தில், காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்கள் எந்த நாட்டுடன் சேர விரும்புகிறார்கள் என்பதை அறிய வாக் கெடுப்பு நடத்தவேண்டும் என்றும் தீர்மானிக் கப்பட்டது. இன்றுவரை அதற்கான வாக் கெடுப்பு நடத்தப்படவில்லை.  காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு ஒன்று வரை யறுக்கப்பட்டு, அந்தக் கோட்டினை இருநாடு களும் மீறக்கூடாது என முடிவானது.

இந்த முடிவுகள் மீறப்படும்போது எல்லைப் புற மோதல்களும் பெரிய அளவிலான போர்களும் நடப்பது தொடர்கதையாகி விட்டது. 1965-ல் காஷ்மீருக்குள் பாகிஸ்தான் படைகள் நுழைந்ததால் போர் மூண்டது. இந்தியப் பிரதமராக லால்பகதூர் சாஸ்திரி இருந்தார். ஜெய் ஜவான்-ஜெய் கிஸான் என்ற முழக்கத்துடன் இந்தியப் படைகள் போரில் ஈடுபட்டன. நாடு முழுவதும் இந்த முழக்கம் எதிரொலித்து, எல்லையில் போராடும் வீரர் களுக்கு உத்வேகம் அளித்தது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் அதிக அளவில் பீரங்கி டாங்கிகள் பயன்படுத்தப்பட்ட இந்தப் போரில் இந்தியப் படைகள் வேகமாக முன்னேறின. பாகிஸ்தான் படையால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

1966-ல் அன்றைய சோவியத் யூனியனுக்கும் பட்ட (இன்றைய உஸ்பெகிஸ்தான்) தாஷ் கண்ட் நகரில் இந்திய பிரதமர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டது. போருக்கு முன்பு இரு நாட்டுப் படைகளும் எங்கு இருந்தனவோ அந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டும் என்றும், ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் இன்னொரு நாடு தலையிடக்கூடாது என்றும் இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவு வளர் வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த ஒப்பந்தத்தில்  வலி யுறுத்தப்பட்டது. ஒப்பந்தத்திற்காக தாஷ் கண்ட் சென்ற பிரதமர் சாஸ்திரி , உடல்நலக் குறைவால் அங்கேயே மரணமடைந்தார் .

தாஷ்கண்ட் ஒப்பந்தத்திற்குப்பிறகும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த காஷ் மீரின் சில பகுதிகள் இந்தியாவசம் ஒப்படைக் கப்படவில்லை. ஆசாத் காஷ்மீர்  என்று பாகிஸ்தான் அதை அழைக்கிறது. இந்தியாவோ, அதை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் என்கிறது. தொடர்ச்சியாக பல மோதல்கள் நிலவி வந்த சூழலில், பாகிஸ்தான் பிரிவினையின்போது அந்நாட்டுடன் இணைக்கப்பட்ட கிழக்கு வங்காள மாநில மக்கள் தங்களுக்கான தனிநாடு கோரி போராடினர். அவர்கள் மீது பாகிஸ்தான் ஏவிய அடக்குமுறையின் காரணமாக, இலட்சக் கணக்கான கிழக்கு வங்காளிகள்  இந்தியா விற்கு அகதிகளாக வந்தனர். நெருக்கடிக் குள்ளான இந்தியா, வங்கதேச விடுதலையை ஆதரிக்கும் விதத்தில் பாகிஸ்தான் மீது போர் தொடுத்தது.

1971-ல் நடந்த இந்தப் போரை இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி மிகத் திறம்பட வழிநடத்தினார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்காவும், இந்தியாவுக்கு ஆதரவாக சோவியத் யூனியனும் (ரஷ்யா) களமிறங்கிய தால் இது உலகப்போராக மாறுமோ என்ற அச்சம் பரவியது. இப்போரில் இந்தியா  பெரும் வெற்றி பெற்று, பங்களாதேஷ் என்ற சுதந்திர நாடு உருவாக காரணமானது. இப் போரில் பாகிஸ்தான் படையினர் 90ஆயிரம் பேர் இந்தியாவிடம் சரணடைந்தனர்.  இந்தியாவின் வலிமையையும் இந்திரா காந்தியின் வல்லாண்மையையும் உலக அளவில்  எடுத்துக்காட்டும் விதத்தில் இந்தப் போர் அமைந்தது. இந்தப் போருக்குப்பின் 1972-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் நாள் போடப் பட்ட சிம்லா ஒப்பந்தத் தின் படி இருநாடுகளும் அமைதி வழியில் பிரச் சினைக்குத் தீர்வுகாண வலியுறுத்தியது.

இருநாடுகளுமே அûதியை நிலை நிறுத்து வதில் உண்மையான அக்கறைசெலுத்த வில்லை என்பதைத் தான் தொடர்ச்சியான மோதல்கள் காட்டுகின்றன. 1999-ல் கார்கில் எல்லைப்புறம் வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் படைகளை இந்தியப் படைகள் எதிர் கொண்டன. கார்கில் போர் என வர்ணிக்கப்பட்ட இந்த யுத்தத்தில் இந்தியப் படைகளின் வேகமான முன்னேற்றத்தினால் பாகிஸ்தான் படைகள் எல்லைக் கட்டுப் பாட்டு கோட்டுக்கு அப்பால் திரும்பின. இதையடுத்து 2001-ஆம் ஆண்டில் ஆக்ராவில் இந்தியப் பிரதமர் வாஜ்பாயும், பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபும் சந்தித்தனர். முக்கியமான முடிவுகள் எடுக்கப்படாவிட்டாலும் அமைதித் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை பிறந்தது.

இருநாடுகளுக்குமிடையே மீண்டும் பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை சீராயின. எனினும், இந்திய நாடாளுமன்றம் மீது 2001, டிசம்பர் 13-ந் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல், 2008, நவம்பர் 26-ல் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் ஆகிய வற்றில் பாகிஸ்தான் அரசுக்குத் தொடர்பிருப்ப தாக இந்திய அரசு தெரிவித்துவரும் குற்றச் சாட்டுகளை பாகிஸ்தான் அலட்சியப்படுத்துவ தாலும், இத்தாக்குதல் சம்பவத்தில் தொடர் புடைய தீவிரவாதிகளை ஒப்படைக்க பாகிஸ் தான் அரசு மறுப்பதாலும் அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரோஷி இடையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தை முறிந்ததுடன், இந்தியத் தரப்பு கசப்பான அனுபவங்களை சந்திக்க நேர்ந்தது.

காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. மன்றத்தின் மூலம் சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகள் இன்றுவரை பயனளிக்க வில்லை. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் தங்கள் நாடு இப் பிரச்சினையில் தலையிடாது எனத் தெரிவித்து விட்டார். உண்மையான அமைதியை விரும்பாத வரையில், கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு கைகுலுக்குவதுபோலத் தான் இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவு.