Monday, November 5, 2012

திராவிட இயக்க ஆட்சி

 -கோவி. லெனின்
திராவிடர் கழகத் தலைவரான தந்தை பெரியாருக்கும், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் பெரியாரின் தளபதியாக விளங்கியவருமான அண்ணாவுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. கழகத்தினர் அனைவரும் கருஞ்சட்டை அணியவேண்டும் என்ற பெரியாரின் கருத்தில் அண்ணாவுக்கு மாறுபாடு இருந்தது. கருஞ்சட்டை என்பது, பொதுமக்களிடமிருந்து கழகத்தினரை அன்னியப்படுத்திவிடும் என்றும், தொண்டர்களை நிர்பந்திப்பது ஜனநாயக முறையாகாது என்றும் அண்ணா கருதினார். அதுபோலவே, சுதந்திர நாளை துக்க நாளாக பெரியார் அறிவித்ததிலும் அண்ணா முரண்பட்டார்.

வெள்ளையர்கள்- பார்ப்பனர்கள் என்ற இரு எதிரி களில் ஓர் எதிரி இந்த நாட்டைவிட்டு வெளியேறும் நாள் என்பதால் அதனை நாம் இன்பநாளாகவே கருத வேண்டும் என்றும் இல்லையென்றால் திராவிடர் கழகத்தினர் வெள்ளைக்காரர்களின் தாசர்கள் என்ற காங்கிரசாரின் குற்றச்சாட்டு உண்மையாகிவிடும் என்றும் அண்ணா தனது திராவிடநாடு இதழில் எழுதினார். இருவருக்குமான கருத்து வேறுபாடுகள் நீடித்த நிலையில், தனக்கும் தனது உடைமைகளுக்கும் சட்டப் படியான வாரிசு தேவை என்ற அடிப்படையில் மணி யம்மையாரை வாரிசுரிமையாக ஆக்கிக் கொள்வதாகப் பெரியார் அறிவித்தார். பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இது ஒரு சட்டப்பூர்வமான ஏற்பாடு என்பதே இந்தத் திருமணம் பற்றிய பெரியாரின் விளக்கம்.
72 வயது பெரியார், 26 வயது மணியம்மையாரைத் திருமணம் செய்துகொண்ட செயலும், கழகத்தில் உள்ள யாரையும் தன்னுடைய வாரிசாக நம்பமுடியவில்லை என்று பெரியார் சொன்னதும் அண்ணா உள்ளிட்ட கழக நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரியாரோ இது தன் சொந்த விஷயம் என்று சொல்லிலிவிட்டார். இதனைத் தொடர்ந்து, திராவிடர் கழகத்தில் பிளவு ஏற்பட்டது.
1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டது. திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரே கொள்கையைக் கொண்டதுதான் என்றும் அதனை செயல்படுத்தும் வழிமுறைகள்தான் மாறுபட்டவை என்றும் அண்ணா சொன்னார். தி.மு.கவுக்குத் தலைவர் பதவியை அண்ணா உருவாக்கவில்லை. பெரியாரைத் தவிர வேறொரு தலைவரை அவர் ஏற்றுக்கொண்டதில்லை என்பதால், புதிய கழகத்தின் தலைமைப் பதவி      காலிலியாகவே இருக்கும் என்றும் அறிவித்தார் அண்ணா."திராவிடர் கழகம்' எனும்போது அது திராவிடர்களாகிய மக்களைக் குறிக்கும் சொல் ஆகிறது. "திராவிட முன்னேற்றக் கழகம்' எனும்போது திராவிட என்பது நிலத்தைக் குறிக்கும் சொல் ஆகிறது. திராவிடர் எனும் இனத்தைக் குறிக்கும்போது அதில் ஆரியராகிய பிராமணர்கள் எதிர் நிலையில் நிறுத்தப்படுகிறார்கள். திராவிட என்ற நிலத்தைக் குறிக்கும்போது, இந்த மண்ணில் வாழ்கின்ற அனைத்துத் தரப்பு மக்களும் உட்படுகிறார்கள். தி.மு.கவை ஒரு ஜனநாயக இயக்கமாக, அரசியல் களத்திற்குக் கொண்டு செல்லும் காலம் வரும் போது, அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவும் வாக்கு களும் வேண்டும் என்ற அடிப்படையில் அண்ணா இந்தப் பெயரைத் தெரிவு செய்து வைத்தார்.

இனம்-மொழி-தமிழக நலன் காப்பதில் தி.க.வும் தி.மு.கவும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என்று அண்ணா சொன்னார். இரண்டுக்கும் ஒரே இலக்குதான் என்பது இதன் பொருள். அதற்கானக் களங்களும்  அடுத்தடுத்து அமைந்தன. 1950-இல் இந்தியா, குடியரசு நாடானது. இந்தியாவிற்கான அரசியலமைப்புக் சட்டம் அந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அப்போது, பிராமணர் சமுதாயத்தைச் சேர்ந்த செண்பகம் துரைராசன் என்ற மாணவி, நீதிக்கட்சி ஆட்சிக்காலத்திலிலிருந்து நடை முறைப்படுத்தப்படும் வகுப்புவாரி உரிமையினால் தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இது போலவே சி.ஆர்.சீனிவாசன் என்ற பிராமணர் சமுதாயத்து மாணவர் தனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என மனு செய்தார்.

ஜாதிபேதம் காட்டுகிற வகுப்புவாரி உரிமைக்கான உத்தரவானது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15-வது விதி மற்றும் 29(2)வது விதி ஆகியவற்றிற்கு முரணானது என்றும் தனிநபர் உரிமையைப் பாதிக்கும் வகுப்புவாரி உரிமையை ரத்து செய்யவேண்டும் என்றும் இவர்களின் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் துணைநின்றவரே, அந்த சட்டத்திற்கு சவால்விடும் வழக்கில் வாதாடினார். வகுப்புவாரி உரிமையை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சென்னை மாகாண அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போதுதான், மாணவி செண்பகம் துரைராசன், மருத்துவக்கல்லூரிக்கே விண்ணபிக்காமல் இப்படியொரு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. எனினும், வகுப்புவாரி  உரிமை செல்லாது என்கிற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதிசெய்தது.

நீதிக்கட்சி ஆட்சியினால் பிராமணரல்லாத சமுதாயத்தினருக்கு கிடைத்து வந்த கல்வி- வேலை வாய்ப்பு உரிமைகள், நீதிமன்றங்களின் இந்த உத்தரவினால் பறிபோவதை உணர்ந்த திராவிட இயக்கங்கள் போராட்டக் களம் கண்டன. வகுப்புவாரி உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் வேண்டும் எனப் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், கண்டன ஊர்வலங்கள், பள்ளி-கல்லூரி மாணவர்களின் வகுப்புப் புறக்கணிப்பு எனப் போராட்டங்கள் நடைபெற்றன. வடமாநிலங்களில் இருந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த எழுச்சி, மத்தியிலும் மாகாணத்திலும் இருந்த காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சென்னை மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சி தோல்வியடைந்த நிலையில், அதன் ஆட்சியில் கொண்டு வந்த வகுப்புவாரி உரிமை மறுக்கப்பட்டால், அதனை முன் வைத்து திராவிடக் கட்சிகள் வளர்ச்சி பெற்றுவிடும் என்று டெல்லிலித் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பெரியார்- அண்ணா ஆகியோர் நடத்தும் போராட்டங்களை எடுத்துச் சொல்லிலி, அரசியல் சட்டத்திருத்தத்தை மேற் கொள்ளுமாறு பிரதமர் நேருவிடம் பெருந்தலைவர் காமராஜர் வலிலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்திய நாடாளுமன்றத்தில் 2.6.1951 அன்று கொண்டு வரப்பட்ட இத்திருத்தம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15-வது விதியின் 4-ஆம் உட்பிரிவாகச் சேர்க்கப்பட்டது. அதன்படி, இந்த 15-வது விதியில் உள்ள எதுவும்- அல்லது 29(2)-இல் கண்ட எதுவும் சமூகத்திலும் கல்வியிலும்  பின்தங்கிய மக்களுக்கும் அல்லது தாழ்த்தப்பட்ட மற்றும் மலை ஜாதி மக்களுக்கும் முன்னேற்றம் அளிக்கக்கருதி, மாகாண அரசாங்கம் தனிச்சலுகை வழங்குவதற்காகச் செய்யும் எந்த ஏற்பாட்டையும் தடை செய்யாது என்ற திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்திருத்தத்திற்கு, 18.6.1951 அன்று குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப் பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது.இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகச் செயல்பட்ட திராவிடர் இயக்கங்களின் போராட்டக் குணம் இந்திய அரசமைப்புச் சட்டத்தையே திருத்தும் வலிலிமை கொண்ட தாக அமைந்ததை இந்திய அரசியல் வரலாற்றிலிருந்து மறைக்க முடியாது.

1952-இல் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்  தேர்தல் நடைபெற்றது. சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளே அதிக இடங்களைப் பிடித்திருந்தன. எனினும் மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை அமைத்து, முதலமைச்சரானார் ராஜாஜி. அவர், 1953-இல் குலக்கல்வித் திட்டம் எனும் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தார். இதன்படி பள்ளியில் பாதி நேரம் படிப்பு, மீதி நேரத்தில் மாணவர்கள் தங்கள் பெற்றோர் செய்யும் தொழிலை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் குயவர் மகன் குயவனாகவும், நாவிதர் மகன் நாவிதனாகவும் வேலை செய்யும் சூழல் ஏற்பட்டு, வர்ணாசிரமக் கொள்கை நிலைநாட்டப்படும் என்பதால் தி.க.வும் தி.மு.கவும் இந்தக் கல்வித்திட்டத்தை எதிர்த்து பெரும்கிளர்ச்சி செய்தன. பலத்த எதிர்ப்பு எழுந்ததைக் கண்டு, குலக்கல்வித் திட்டத்தை ரத்து செய்தவிட்டு, உடல்நிலையைக் காரணம் காட்டி முதல்வர் பதவியிலிலிருந்து விலகினார் ராஜாஜி. தமிழகத்தின் புதிய முதல்வரானார் பெருந்தலைவர் காமராஜர்.

தி.கவும் தி.மு.கவும் தனித்தனியாகப் பல போராட்டங் களை நடத்திவந்தன. இரண்டு கட்சிகளுக்கும் கடும் வாக்குவாதங்கள்-தனி மனிதத்  தாக்குதல்கள் என்கிற அளவுக்கு விமர்சனங்கள் சூடாக இருந்தன. எனினும், இரண்டு இயக்கங்களும் இனம்-மொழி நலனுக்கானப் போராட்டங்களைத் தொடர்ந்தன. டால்மியாபுரம் என்ற வடநாட்டு முதலாளியின் பெயரை மாற்றி, கல்லக்குடி என்கிற பழைய தமிழ்ப்பெயரைச் சூட்டவேண்டும் என்று தி.மு.க அறிவித்த போராட்டத்தில், ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் போராடி 6 மாதம் சிறைத் தண்டனை பெற்றார் தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி. அவரைத் தொடர்ந்து கவிஞர் கண்ணதாசன் போன்றவர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்று சிறைப்பட்டனர்.
திராவிடநாடு எனும் தனிநாடு கோரிக்கையை வலிலியுறுத்தி தி.மு.க தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்தது. பிரதமர் நேருவுக்குக் கறுப்புக்கொடி காட்டுவது உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தியது. திராவிடர் கழகத்தின் சார்பில் சமுதாய மாற்றங்களுக்கானப் பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் கடும் எதிர்ப்பிற்கிடையே நடத்தி வந்தார் பெரியார். அதே நேரத்தில், பச்சைத்தமிழர் என்ற அடிப்படையில் காமராஜர் ஆட்சியைப் பெரியார் ஆதரித்தார்.

1956-இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. சென்னை மாகாணத்துடன் இருந்த ஆந்திரா, கர்நாடகா, கேரளாவின் பகுதிகள் பிரிக்கப்பட்டு அந்தந்த  மொழி பேசும் மக்களின் பகுதிகளுடன் இணைந்த தனி மாநிலங் களாயின. அப்போது தமிழகத்தின் எல்லைகளை நிர்ணயிப்பதற்கானப் போராட்டங்கள் நடந்தன. சென்னையைப் பெற்றுக்கொண்டு, திருப்பதி-சித்தூர் உள்ளிட்ட பகுதிகளை இழந்தது தமிழகம். அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தைப் பெற்றுக்கொண்டு, தேவிகுளம்- பீர்மேடு- மூணாறு உள்ளிட்டப் பகுதிகளை இழந்தது. இந்த எல்லைப் பிரச்சினை தொடர்பாக தி.மு.கவின் நிலைப்பாடும் தி.கவின் நிலைப்பாடும் வேறுவேறாக இருந்தன. இருப்பதைப் பாதுகாக்கும் நிலையில் பெரியாரும், இழந்ததைப் பெறும் நிலையில் அண்ணாவும் இருந்தனர்.

இரண்டாவது பொதுத்தேர்தல் 1957-இல் நடை பெற்றது. அதில் தி.மு.க முதன்முறையாகப் போட்டியிட்டது. காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு பெரியார் தீவிரப் பிரச்சாரம் செய்தார். காங்கிரசே மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. எனினும் தி.மு.க சார்பில் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட 15 பேர்  சட்டமன்ற உறுப்பினர்களகாவும், ஈ.வெ.கி.சம்பத், தர்மலிலிங்கம் ஆகிய 2 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் வெற்றி பெற்றனர். தேர்தல் களத்தில் தனது முதல் வெற்றியைத் தி.மு.க பதிவு செய்தது.

இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை அந்த மாநிலங்களில் ஆங்கிலமும் ஆட்சிமொழியாக நீடிக்கும் என்று பிரதமர் நேருவிடம் உறுதிமொழி பெற்றவர் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வெ.கி.சம்பத்.
1957-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள், சட்ட எரிப்புப் போராட்டத்தை நடத்தினார் பெரியார். இந்திய அரசியல் சட்டத்தில், ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவை நீக்கவேண்டும் என்பதை வலிலியுறுத்தியே இந்தப் போராட்டம். இதனைத் தடுப்பதற்காக காங்கிரஸ் அரசு ஒரு தனி சட்டத்தை இயற்றியது. தேசத்தலைவர்கன் படங்கள்- அரசியல் சட்டம் இவற்றை எரித்தால் மூன்றாண்டு சிறை தண்டனை என்ற அந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார் அண்ணா. ஆனால், பெரியாரின் ஆதரவில் வெற்றிபெற்ற காங்கிரஸ் அரசு அந்த சட்டத்தை நிறைவேற்றியது. சட்டத்தை மீறிப் போராடிய பெரியார் உள்ளிட்ட 3000-க்கும் மேற்பட்ட தி.கவினர் கைது செய்யப்பட்டனர். 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை பலவிதமான சிறைத் தண்டனைகள் அளிக்கப்பட்டன. சிறையிலேயே மணல்மேடு வெள்ளைச்சாமி, பட்டுக் கோட்டை ராமசாமி உள்ளிட்ட 3 பேர் இறந்தனர். விடுதலையானபிறகும், சிறைக்கொடுமையின் தாக்கத்தால் 15 பேர் பலிலியாயினர். எனினும், தி.க.வின் கருஞ்சட்டைப்படை இந்தப் போராட்டத்தை வீரமுடன் நடத்தியது.
 
பெருமையும் பாரம்பரியமும் மிக்க சென்னை மாநகராட்சிக்கு 1959-ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலில் தி.மு.க வெற்றி பெற்றது. மாநகராட்சியின் மேயராக தி.மு.கவைச் சேர்ந்த அ.பொ.அரசு பொறுப்பேற்றார். 1961-ஆம் ஆண்டில் திராவிடர் இயக்கத்தில் மேலும் ஒரு பிளவு ஏற்பட்டது. தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரும் பெரியாரின் அண்ணன் மகனுமான ஈ.வெ.கி.சம்பத்தும் அவரது ஆதரவாளர்களான கவிஞர் கண்ணதாசன் போன்றவர்களும் தி.மு.கவிலிலிருந்து பிரிந்து, தமிழ்த்தேசியக் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினர். உள்கட்சி மோதல்களே இந்தப் பிரிவுக்குக் காரணம். திராவிட நாடு சாத்தியமல்ல என்றும், பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னாட்சித் தமிழகம்தான் சரியான கோரிக்கை யாக இருக்க முடியும் என்று சம்பத் வலிலியுறுத்தினார். அண்ணாவோ, அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு என்று முழங்கினார்.

மூன்றாவது  பொதுத்தேர்தல் 1962-இல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. தி.மு.க சார்பில் 50 பேர் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். ஆனால், அண்ணா தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலிலில் காமராஜருக்காகத் தீவிரப்பிரச்சாரம் செய்தார் பெரியார். தி.மு.கவிலிலிருந்து பிரிந்த தமிழ்த் தேசியக் கட்சி பெருந்தோல்வியை சந்தித்தது. பின்னர் அது காங்கிரஸ் கட்சியில் இணைந்தது. சட்டமன்றத்தில் தி.மு.க பிரதான எதிர்க்கட்சியானது. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார் அண்ணா. அங்கே திராவிட நாடு கோரிக்கையை வலிலியுறுத்தி வலுவான வாதங்களை வைத்தார். வடநாட்டுத்  தலைவர்கள் அவருடைய வாதத் திறமை கண்டு வியந்தனர்.

தனிநாடு கோரும் ஒரு இயக்கம் வளர்ந்து வருவதை காங்கிரஸ் கட்சி உன்னிப்பாகக் கவனித்தது. இதனைத் தொடர்ந்து 1963-இல் பிரிவினைத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. தனிநாடு கோரினால், கட்சி தடை செய்யப்படும் என்ற நிலையில், அந்தக் கோரிக்கையை தி.மு.க கைவிடுவதாக அண்ணா அறிவித்தார். பிரிவினையைக் கைவிட்டாலும், "பிரிவினைக்கானக் காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன' என்றார்.

நெசவாளர்களின் துயர் துடைப்பதற்காக கைத்தறித் துணி விற்பனை, சீனப் படையெடுப்பைத் தொடர்ந்து யுத்தநிதி திரட்டுதல், போன்ற செயல்களில் ஈடுபட்டதுடன், விலைவாசி உயர்வு எதிர்ப்பு உள்ளிட்ட மும்முனைப் போராட்டத்தை தி.மு.க நடத்தியது. எனினும், அதனுடைய முக்கிய கோரிக்கையான திராவிடநாடு கோரிக்கை கைவிடப்பட்டதால், அது வீழ்ச்சியையே காணும் என அரசியல் நோக்கர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
நடந்ததோ வேறு. எந்தக் கொள்கையை தி.மு.க முன்னிறுத்தியதோ, அதனை அரசியல் சூழல் ஏற்படுத்திய நெருக்கடி காரணமாகக் கைவிட்டபிறகும் அதன் பலம் குறைவதற்குப்பதில் அதிகரிக்கவே செய்தது. தி.மு.கவை மாபெரும் ஜனநாயக அரசியல் இயக்கமாகக் கட்டி யமைப்பதில் அண்ணா கவனம் செலுத்தினார். அவருடைய தம்பிகளான கட்சி நிர்வாகிகள் துணை நின்றனர். மேடைப் பேச்சு, பிரச்சார நாடகம், பத்திரிகைகள், திரைப்படம் ஆகிய ஊடகங்களை ஆயுதமாகப் பயன் படுத்தினர். கட்சியின் சார்பில் பல படிப்பகங்களை அமைத்து, வாசகர்களும் பொதுமக்களும் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கினர். தேநீர் நிலையங்கள், முடி திருத்தும் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் புழங்கும் இடங் களில் திராவிட இயக்கத்தினரின் அரசியல் கருத்துகள் வலுப்பெற்றன. தி.மு.கவின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. அதன் எழுச்சியைக் காட்டும் விதத்தில் அமைந்தது இந்தி எதிர்ப்புப் போராட்டம்.

1963-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் நாள் நாடாளு மன்றத்தில் உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி ஆட்சி மொழி மசோதாவை தாக்கல் செய்தார். அதன்படி, 1965-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாகும். இந்தி மொழிக்குத் துணையாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். மத்திய அரசின் ஆணைகள், சட்டங்கள் உள்ளிட்டவை இந்தி மொழியில் வெளியிடப்படும். மாநில அரசின் ஆணைகளும் சட்டங்களும் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு ஆளுநர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டால்தான் அது  அதிகாரப் பூர்வமானதாகும்.

இந்த மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் போராட்ட அலை வீசக் தொடங்கியது. இந்தியைத் திணிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தி.மு.கவும் மாணவர் அமைப்புகளும் போர்க்கோலம் பூண்டன. பல கட்சிகளும் ஆதரவளித்தன. அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை தி.மு.க நடத்தியது. அண்ணா உள்ளிட்டோர் கைதாகி, 6 மாத சிறைத்தண்டனை அடைந்தனர். 1965-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி-குடியரசு தினத்தை துக்கநாளாகக் கொண்டாடுவது என தி.மு.க முடிவு செய்தது.  1964-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் நாள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கீழப்பழுவூர் சின்னசாமி என்ற 21 வயது இளைஞர், இந்தி ஆட்சிமொழியாவதை எதிர்த்து பொது இடத்தில் தீக்குளித்து உயிர் துறந்தார். 
அவர் பற்ற வைத்த தீ பல இடங்களுக்கும் பரவியது. கோடம்பாக்கம் சிவலிலிங்கம், விருகம்பாக்கம் அரங்க நாதன், அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், சத்திய மங்கலம் முத்து, மயிலாடுதுறை மாணவர் சாரங்கபாணி உள்ளிட்ட பலர் தீக்குளித்து உயிர் துறந்தனர். உலகில் தங்கள் தாய் மொழியைக் காப்பதற்காக இளைஞர்களும் மாணவர்களும் தீக்குளித்து உயிர் துறந்த நிகழ்வு தமிழகத்தில்தான் முதலிலில் நடந்தது. இப்படி உயிர் துறப்பது சரியானதல்ல  என்றாலும், அவர்களுடைய உணர்ச்சியின் வேகம், போராட்டக்களத்தைத் தீவிரமாக்கியது.

அப்போது தமிழக முதல்வராக பக்தவத்சலம் பொறுப் பேற்றிருந்தார். கட்சிப்பணிக்காக காமராஜர் முதல்வர் பதவியிலிலிருந்து விலகியதையடுத்து, பக்தவத்சலம் முதல்வரானார். அவர், மாணவர் போராட்டத்தின் வலிலிமையை உணரவில்லை. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய இந்தி ஆட்சிமொழி எதிர்ப்பு ஊர்வலத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராஜேந்திரன் என்ற மாணவர் குண்டடிபட்டு பலிலியானார். மாணவர்களின் போராட்ட எழுச்சி தமிழக மெங்கும் பரவியது. சட்டஎரிப்பு, ரயில் மறியல், அஞ்சலக முற்றுகை என அவர்கள் தீவிரமாயினர். பல இடங்களில் துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தப்பட்டு மாணவர்கள் பலர் பலிலியாயினர். மாணவர்களைத் தூண்டி விட்டதாக கலைஞர் மு.கருணாநிதி கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத்தண்டனையில் பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். கி.ஆ.பெ.விசுவ நாதம், பேராசிரியர் இலக்குவனார் உள்ளிட்ட தமிழறிஞர் களும் போராட்டக் களம் கண்டு சிறைப்பட்டனர். இந்தி யுடன் ஆங்கிலமும் இணை ஆட்சி மொழியாக இருக்கும் என மத்திய அரசு அறிவித்தபிறகே போராட்டத்தின் வேகம் தணிந்தது.

1967-ஆம் ஆண்டு நான்காவது பொதுதேர்தல் நடை பெற்றது. இந்தத் தேர்தலிலில் தி.மு.க புதிய கூட்டணி அமைத்தது. ராஜாஜியின் சுதந்திர கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிலிம் லீக், பிரஜாசோஷலிஸ்ட், தமிழரசு கழகம் உள்ளிட்ட கட்சிகள் இந்த அணியில் இடம்பெற்றன. காங்கிரஸ் கட்சியை பெரியார் ஆதரித்தார். தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தின.

தி.மு.க 138 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி யமைக்கும் வலிலிமையை அடைந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 49 இடங்கள் மட்டுமே கிடைத்தன. காமராஜர், பக்த வத்சலம் உள்ளிட்ட பல தலைவர்களும் தோல்வியடைந்த னர். செல்வாக்குமிக்க நடிகர்களான எம்.ஜி.ஆர். எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தி.மு.க சார்பில் பெருவெற்றி பெற்றார்கள். தி.மு.க பொதுச்செயலாளரான அண்ணா, வெற்றிச்செய்தி கிடைத்ததும் திருச்சிக்கு சென்று பெரியாரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 18ஆண்டுகால பிரிவுக்குப்பின் இரு கழகத்தினரும் ஒன்றிணைந்தது அப்போதுதான்.

1967 மார்ச் 6-ஆம் நாள், தமிழகத்தின் புதிய முதல்வராக அண்ணா பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் மு. கருணாநிதி, கே.ஏ.மதியழகன், சத்தியவாணிமுத்து, சாதிக்பாட்சா, செ. மாதவன், ஏ.கோவிந்தசாமி, முத்துசாமி ஆகியோர் அமைச்சர்களானார்கள். இந்த ஆட்சி பெரியாருக்குக் காணிக்கை என்று அறிவித்தார் அண்ணா. 1937-இல் நடந்த தேர்தலிலில் நீதிக்கட்சியைத் தோல்வியடையச் செய்து காங்கிரஸ் அரசை அமைத்தவர் ராஜாஜி. அவருடனேயே கூட்டணி அமைத்து 1967-இல் மீண்டும் திராவிட இயக்கத்தின் ஆட்சியைக் கொண்டுவந்தவர் அண்ணா.    

No comments:

Post a Comment