கடவுளைக்
கண்டதாக கூறும் ஆத்திக உலகில் கடவுள் துகளை கண்டதாக கூறும் CERN
ஆய்வுக்கூட விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு அறிவியலின் அடுத்த கட்டத்தை
எட்டும் முயற்சி. இது உலகின் பிறப்பு ரகசியத்தை வெளிப்படுத்தும் என்ற
எதிர்பார்ப்பை மட்டுமின்றி துகள் இயற்பியலில் அடுத்த படிநிலையை எட்டும்
என்ற நம்பிக்கையையும் விதைத்துள்ளது.உலகம்
பருப்பொருளால் ஆக்கப்பட்டவை. உலகில் காணும் அனைத்து உயிருள்ள மற்றும்
உயிரற்ற பொருட்களும் பருப்பொருளால் ஆனவை. சிறிய நுண் துகள் முதல்
மிகப்பெரிய கோள்கள் வரை அனைத்தின் மூலமும் பருப் பொருள்களே. பருப்பொருள்கள்
எவ்வாறு தோன்றின என்பதை தெரிந்து கொள்வதன் மூலமே உலகம் எப்படி உருவானது
மற்றும் கோள்கள், நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன், இயற்கை, மனிதன்,
விலங்குகள் போன்ற அனைத்தும் எப்படி தோன்றின என்பதன் ரகசியத்தை அறிய
முடியும். சுருங்கக்கூறின், பருப்பொருள்களால் ஆன உலகின் பிறப்பு ரகசியம்
அதன் மிகச்சிறிய அலகான அணுத் துகளில் அடங்கியுள்ளது. அணுத் துகளின்
மிகச்சிறிய கூறுகளை யும், அதன் பண்புகளையும், அக்கூறுகளை பிணைத்துக்
கொண்டிருக்கும் பிணைப்பு விசைகளையும் ஆராய்வதன் மூலமே அவை எவ்வாறு
தோன்றியிருக்கும் என்பதனை விளங்கிக் கொள்ள முடியும்.

பருப்பொருளின்
மிகச்சிறிய அலகு அணு. ஓர் அணுவின் உட்கருவில் புரோட்டான் மற்றும்
நியூட்ரான் அதனைச்சுற்றி எலக்ட்ரான் உள்ளதென்பது நாமறிந்த ஒன்றே. இம்மூன்று
துகள்களும் குறிப்பிட்ட நிறையைக் கொண்டவை. மேலும் குறிப்பிட்ட
மின்னூட்டத்தினைக் கொண்டவை. (நியூட்ரானைத் தவிர) அணுவின் உட் கருவினை
மேலும் ஆராய்ந்ததில் புரோட்டானும் நியூட்ரானும் அடிப்படை துகள்கள் இல்லை.
இவற்றிற்கும் அடிப்படையான துகள்களால் புரோட்டான்களும் நியூட்ரான்களும்
ஆக்கப்பட்டிருக்கிறது என்று கண்டறிந்தனர். இந்த அடிப்படையான துகள்களை
குவார்க்குகள் என்றழைத்தனர். மேலும் இந்த குவார்க்குகளின் முந்தைய
நிலையானது நான்குவகை. அவை (புதிய, சௌந்தர்ய, கீழ் மற்றும் மேல் ஆகியவை
குவார்க்குகளாக இருந்திருக்க வேண்டும் எனவும் எலக்ட்ரான்கள் மற்றும்
எலக்ட்ரான் நியூட்ரினோக்களின் (லெப்டான்கள்) முந்திய நிலையில் நான்குவகை
(மியூவான், மியூவான் நியூட்ரி னோ, டௌ, டௌ நியூட்ரினோ) லெப்டான்களாக
இருந்திருக்க வேண்டும் எனவும் அணுமானித்துடன் 19- நூற்றாண்டின் பல்வேறு
கால கட்டங்களில் அதனைக் கண்டறியவும் செய்தனர். இந்த
நான்கு குவார்க்குகளும் நான்கு லெப்டான்களும் தான் பெரு வெடிப்பு
நிகழ்ந்து முடிந்து உண்டான இரண்டாம் கட்ட துகள்களாக இருந்திருக்க வேண்டும்
என அறிவிலர்கள் கருதினர். ஆனால் இந்த பெருவெடிப்பு நிகழ்ந்த முடிந்த
தருணத்தில் உருவான துகள்கள் 19-ஆம் நூற்றாண்டின் பல்வேறு கால கட்டங்களில்
அறிவியலர்கள் முயற்சிகளின் விளைவாக கண்டறியப் பட்டன. போட்டான் (1900),
குளுவான் (1979), Z போசான் (1983), W+ போசான் (1983). W- போசான் (1983)
ஆனால் இவற்றில் ஆறாவதாக ஒரு துகளை கண்டறியப்பட இயலவில்லை. இந்த ஆறு துகளும்
தான் பெருவெடிப்பில் உண்டானவை. அதில் இந்த ஆறாவது துகள் தான்
பருப்பொருளின் நிறைக்கு காரணமான துகள். இந்த ஆறு துகள்களும் விசை தூக்கிகள்
(Force Carriers) என்றழைக்கப்படுகின்றன. இதற்கு காரணம் உண்டு.
இயற்கையிலேயே நான்கு வகையான அடிப்படை விசைகள் ஒவ்வொரு பருப் பொருளிலும்
(அணு) உண்டு. வலுவான மற்றும் வலு வற்ற உட்கருவிசை, மின்காந்தவிசை மற்றும்
ஈர்ப்புவிசை ஆகியன. இந்த விசைகள் பரவியிருக்கும் புலங்களை (Field)
விசைப்புலங்கள் எனலாம். இவ்வகை விசை புலங்களை இந்த ஆறுவகையான துகள்கள்
உருவாக்கு கின்றன. மின்காந்த விசை புலத்தை போட்டான்களும், வலுவான உட்கரு
விசையை (குவார்க்குகளுக்கிடையே) குளுவான்களும், வலுவற்ற உட்கருவிசையை
(நியூட்ரான் புரோட்டானாகவும், புரோட்டான் எலெக்ட்ரான்களாகவும் மாற்றம் பெற
காரணமான விசை) W மற்றும் Z போசான் களும் உருவாக்குகின்றன. ஆறாவது துகள்
தனக்கென வலுவான அல்லது வலுவற்ற உட்கரு விசை புலங்களை உருவாக்கும். இந்த
புலத்தினை ஹிக்ஸ் புலம் எனவும் இதனை உருவாக்கும் துகளுக்கு விரிக்ஸ் போசான்
துகள் என்றும் பெயர். ஹிக்ஸ் கண்டுபிடித்த, போஸ்- ஐன்ஸ்டீன் புள்ளியியல்
முறையில் இயங்கும் துகள்தான் ஹிக்ஸ்-போசான். இதனைத்தான் ""கடவுள் துகள்''
என்று அழைக்கின்றனர்.1963-ஆம்
ஆண்டு அமெரிக்க பௌதீகவியலர் ட.ர. ஆண்டர்சன் குறுக்கமடைந்த பொருள்
இயற்பியலில் சில புதிய கருத்தாக்கங்களை முன்வைத்தார். உலோகங் களிலும், மீ
கடத்திகளிலும் ஏற்படுவதைப் போன்று திண்மங்களிலும் சிலவகை ஆற்றல்
கிளர்ச்சிகள் நிறையினைப் போன்ற பண்புகளுடன் ஏற்படுவதாக கூறினார். உண்மையில்
அவர் முன்வைத்தது உயர் ஆற்றல்-பௌதீகவியலுக்கு இந்த சிந்தனையை
பயன்படுத்தலாம் என்பதனைதான். அவர் கூறிய இந்த சிந்தனையை பீட்டர் ஹிக்ஸ்
மற்றும் ஐந்து பௌதீகவியலர் களும் பின்பற்றி தங்களின் ஆய்வு கட்டுரைகளை
சமர்ப்பித்தனர். நியம மாதிரியின் சார்பியல் தொடர்ச்சி களை திசையிலி
புலங்களைக் கொண்டு (Scalar Field) விளக்கியதுடன் தன்னிச்சை சமச்சீர்
பிளவு (Spontaneous Symmetry Breaking) என்றொரு புதிய தொழில்நுட்பத்தினை
(Mechanism) அறிமுகப்படுத்தினார் ஹிக்ஸ்.

தன்னிச்சை
சமச்சீர் பிளவினை மெக்சிகன் குல்லாய் மூலம் விளக்கலாம். ஹிக்ஸ்
தன்னுடைய நிலை ஆற்றல் மிகுந்த புலத்தை மெக்சிகன் குல்லாய் (hat) வடிவில்
கற்பனை செய்தார். அதன் உச்சியில் ஒரு பந்து வைக்கப்பட்டிருப்பின், அப்பந்து
எந்த பக்கமும் விழாதவரை புலமானது செங்குத்து அச்சினைப்பற்றி சுழல்
சமச்சீரினை கொண்டிருக்கும். அப்பந்து தான் ஹிக்ஸ் போசான் துகள். அப்பந்து
எந்த பக்கமும் விழுவதற்கான வாய்ப்பினை கொண்டுள்ளது. பந்து நழுவி
கீழ்மட்டத்திற்கு வருமாயின் அப்புலத்தின் சமச்சீர் உடைபடும் அல்லது
மாறிவிடும். ஆனால் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பொதுவான சீர் மாறாமையை
(gauge invariance) கொண்ட கோட்பாட்டில் கோட்பாட்டின் சமச்சீர்
நிலைநிறுத்தப்படும் என்பதுடன், நிறையற்ற துகள்கள் நிறையினைப் பெறும்
என்பதுதான் (ஹிக்ஸ் பொறிநுட்பம்) குறிப்பாக குவார்க்குகளுக்கிடையேயான
வலுவற்ற உட்கரு விசைகளை உருவாக்கும் W மற்றும் Z போசான்கள், நிறையினை
பெறும். பீட்டர் ஹிக்ஸின் ஆராய்ச்சி கட்டுரைகள் முறையே உடைபட்ட சமச்சீர்கள்
(Broken Symmetries) நிறையற்ற துகள்கள் மற்றும் கேஜ் புலங்கள் (Fields)
1964-லும், உடைபட்ட சமச் சீர்கள் மற்றும் கேஜ் போசான்களின் நிறைகள் 1966-
ஆண்டிலும் Physics Letters இதழில் வெளிவந்தன.முதலில்
வெளியிட்ட கட்டுரை அப்படியே ஏற்று கொள்ளப்பட்டது. ஆனால் இரண்டாவது கட்டுரை
பௌதீகத்திற்கு பொருத்தமானதாகவும் தெளிவானதாகவும் இல்லை என்று
நிராகரிக்கப்பட்டது. ஹிக்ஸ் அதனுடன் மற்றுமோர் பத்தியை (Paragraph)
இணைத்து அதனை ஏற்றுக் கொள்ளச் செய்தார். துகள்களின் வலுவான
செயல்பாடுகளுக்கு தன்னுடைய கோட் பாடுகளை பயன்படுத்துவதற்கான
சாத்தியக்கூறுகளை எடுத்து வைத்தார். மேலும் இது உண்மையில் நிகழ
சாத்தியமற்றதாக இருந்தபோதும், தன் ஆராய்ச்சியின் வழியில் சமச்சீர்களை
உடைத்து மிகப்பெரிய வெக்டர் மெசான்களை (Vector Mesons) உற்பத்தி செய்ய
இயலும் என்ற கருத்துதான் அது. இந்த பத்திதான் பெயரில் ஹிக்ஸ் போசான் துகள்
என்று அழைக்க காரணமாயிற்று என பீட்டர் ஹிக்ஸ் வெளிப்படுத்தினார். கடந்த
11 வருடங்களாக CERN ஆய்வுக்கூடம் ஹிக்ஸ் போசான் துகளை கண்டறிய முனைப்புடன்
ஈடுபட்டு வருகிறது. 2000-ஆம் ஆண்டில் CERN ஆய்வுக்கூடத்தில் பெரிய
எலக்ட்ரான்-பாசிட்ரான் மோதற் களத்தின் (Large Electron - Positron
Collider) உதவியுடன் எலக்ட்ரான்களையும் பாசிட்ரானையும் மோத செய்தபோது
114.4 Gev நிறையுடைய துகள்கள் தட்டுப் பட்டன. இது அறவியலர்களை
உற்சாகப்படுத்தினாலும் தெளிவான முடிவுகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து
அமெரிக்காவின் பெர்மிலாபில் உள்ள அடுத்த தலைமுறை முடுக்கிகளில் ஆய்வு
செய்யப் பட்டது. இது புரோட்டான்- எதிர் புரோட்டானை மோத விடும் டெவ்ரான்
மோதற்களம். டெவ்ரானில் புரோட் டான்கள் அதிக ஆற்றல் நிலையில்
மோதவிடப்பட்டது. புரோட்டான் மற்றும் எதிர்புரோட்டான்கள் 1 டிரில்லியன்
எலக்ட்ரான் வோல்ட் () ஆற்றலுடன் மோதவிடப்பட்டது. இதன் மோதல் ஆற்றல் 2
டிரில்லியன் எலக்ட்ரான் வோல்ட். அதே சமயம் CERN -ன் ஆய்வு கூடத்தில்
அமைந்துள்ள மிகப்பெரிய மோதற்களத்தில் (LHC) உயர் ஆற்றல் கொண்ட புரோட்டான்
துகள்களை மோதவிட்டு அதன் தகவல்களை ஆராய்ந்தனர். உலகளவில் இணைக்கப்பட்ட, ஒரே
நேரத்தில் 2,00,000 இயற்பியல் தரவுகளை அலசி ஆராயக்கூடிய கஐஈயின் கணினிகள்
மூலம் ஆய்வு முடிவுகள் ஆராயப்பட்டன. CERN ஆய்வுக்கூடத்தின் ATLAS
மற்றும் CMS ஆய்வகங்களின் முக்கியப் பணி ஹிக்ஸ் போசன் துகளை தேடுவதே-LEPயை
மாற்றிவிட்டு LHC உருவாக்கியதும் அதன் திறன் முன் எப்போதும் இல்லாதவிதம்
கூடவே செய்தது. LHC-யின் முடுக்கிகளில் மோதற் புரோட்டான்களின் ஆற்றல்
3.5பங்ஸ் ஆகவே இருந்தது. (மோதல் ஆற்றல் 7Lev இவ்வருடம் ஏப்ரல் 5-ந்தேதி
புரோட்டான்களின் ஆற்றல் 4Lev க்கு (மொத்த மோதல் ஆற்றல் 8Lev)
உயர்த்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 500 டிரில்லியன்
புரோட்டான்- புரோட்டான் மோதல்களின் தரவுகள் ஆராயப் பட்டன. 2011 ஆண்டில் 7Lev
மோதல் ஆற்றலின்போது எடுக்கப்பட்ட தரவுகளுடன் 2012-ஆம் ஆண்டின் தரவுகளையும்
சேர்த்து மொத்தம் 900 டிரில்லியன் மோதல்களை அலசி ஆராய்ந்தபோது ஹிக்ஸ்
போசான் துகள்கள் உருவானதை கண்டதாக CERN விஞ்ஞானிகள் அறிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற ஹிக்ஸ் போசன் துகளின் நிறை CMS (Compact Muon Solenoid)
ஆய்வகத்தின் முடிவுகளில் 125.6GEV (0.6GEV பிழையுடன் ஆகவும் ATLAS
(Atoroidal LHC Apparatus) ஆய்வகத்தின் முடிவுகளில் 125.3 GEV (0.6GEV
பிழையுடன்) ஆகவும் இருந்தது. ஆக இரு முடிவுகளும் கிட்டத்தட்ட ஒரே அளவினை
காட்டியது.
பரிசோதனைகளின்
போது கிடைக்கும் ஹிக்ஸ் போசான் துகளின் ஆயுட்காலம் மிக மிக குறுகியது
(10-22) வினாடி. இவ்வளவு குறுகிய ஆயுளைக் கொண்ட ஹிக்ஸ் துகளை
கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமம் உள்ளது. மேலும் ஹிக்ஸ் வெளிப்பட்டு 10லி22
வினாடி ஆனவுடன் அது சிதைவடைந்து இரண்டாம் நிலை துகள் களாக (போட்டான்,
லெப்டான், ர மற்றும் ழ போசான் களாக) மாறிவிடும். ஹிக்ஸ் துகள் 5 வழிகளில்
சிதை வுறும். ஹிக்ஸ் இரு போட்டான்களாக, ஹிக்ஸ் 4 லெப்டான்களாக
(எலக்ட்ரான்/மியுவான்) ஹிக்ஸ் ழ ழ போசான்களாக, ஹிக்ஸ் ஜ்ஜ் போசான்களாக,
ஹிக்ஸ் டௌ, டௌ துகள்களாக என சிதைவடையும். CERN ஆய்வுக்கூடம் ஹிக்ஸ்போசான்
துகள்களை மட்டுமல்ல அதன் சிதைவையும் ஆராய்ந்து வருகிறது. இதில் ஹிக்ஸ் 4
லெப்டான் சிதைவு முறையானது கோல்டன் சேனல் என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் இது
ஒரு தெளிவான வழிமுறை. ஆபகஆந மேற்கூறப் பட்ட முதல் இரு வழிமுறைகளில் ஹிக்ஸ்
துகளின் நிறையை கணக்கிட்டது. ஈஙந ஐந்து வழிமுறைகளிலும் ஹிக்ஸ் துகளை
ஆராய்ந்தது. ஹிக்ஸ் துகள் சிதைவடைந்து இரண்டாம் நிலையை அடையும் குறுகிய
காலத்தில் ஹிக்ஸ் துகளின் நிறை கணக்கிடப்பட்டது. தனித்தனியாக ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்ட ATLAS மற்றும் CMS ஆய்வகங்களின் முடிவுகள் ஒப்பிட்டு
பார்க்கும்போது ஹிக்ஸ் துகளின் நிறை 125- 126 GEC அளவிலேயே இருந்தது.இனி
மீதமுள்ள மூன்று வழிமுறைகளிலும் ஹிக்ஸ் துகளை இரு ஆய்வகங்களும் ஆராய்ந்து
ஆய்வு முடிவு களை உறுதிசெய்வதே CERN ஆய்வு கூடத்தின் முக்கிய பணியாக
இருக்கும். இரு வழிகளை மட்டுமே கையாண்டு ஹிக்ஸ் போசான்துகள் தட்டுப்பட்டாலோ
என்னவோ கிட்டத்தட்ட ஹிக்ஸ் போசானை கண்டு பிடித்துவிட்டதாக CERN வெளிப்படுத்தியது.
பல
அறிவியலர்கள் இதுவரை கண்டறியப்பட்ட துகள்களை மட்டும் வைத்துக்கொண்டு
(ஹிக்ஸ் போசான் துகளை தவிர்த்துவிட்டு) பருப்பொருள் மாதிரியை விளக்க
முனைந்தனர். ஆனால், எவராலும் ஒரு சரியான மாதிரியை முன்வைக்க முடியவில்லை.
மட்டுமின்றி ஹிக்ஸ் போசான் துகளை கண்டறியும் போட்டியில் ஐரோப்பாவின் CERN
ஆய்வுக்கூடமும் அமெரிக்காவின் பெர்மிலேப் ஆய்வுக்கூடமும் போட்டி
போடுகின்றன. பெர்மிலேப் ஜூலை 2-ந்தேதி தன்னுடைய அரைகுறையான ஆராய்ச்சியின்
முடிவாக ஹிக்ஸ் துகள் வெளிப்பட்டதாக சந்தேகத்துடன் கூற, CERN
ஆய்வுக் கூடம் ஹிக்ஸ் போசானை கண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால்,
அது ஹிக்ஸ் போசான் துகளின் ஒருவகையாக இருக்கலாம் என்று ஐயத்தினையும்
எழுப்புகிறது.ஹிக்ஸ் போசான்
பெயருக்கு இந்திய சம்பந்தம் உண்டு. கொல்கத்தாவில் பிறந்த சத்யேந்திர நாத்
போஸ் என்ற அறிவியலர் உருவாக்கிய ஒரு கணக்கு முறையை ஐன்ஸ்டீன் விரிவுபடுத்தி
ஆராய்ச்சி இதழில் வெளியிட்டார். இதுபோல் - ஐன்ஸ்டீன் புள்ளியியல்
என்றழைக்கப்பட்டது. இப்புள்ளியியல் அடிப்படையில் இயங்கும் பொருளுக்கு
பால்டிராக் என்ற அறிவியலர் போசான் (சத்யேந்திரநாத்போஸ் பெயரின் கடைசி
இரண்டு எழுத்தும் ஐன்ஸ்டீன் கடைசி எழுத்தும் இணைத்தது)என்று பெயரிட்டார்.
இது பின்னாளில் ஹிக்ஸ் துகளுக்கு பொருந்தி வரவே அதனை ஹிக்ஸ் போசான் துகள்
என்றழைக்கப்படலாயிற்று.இந்தியாவின் அணுசக்திக் கழகமும் (DAE) CERN ஆய்வகமும் பல ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 1991லும் CERN
ஆய்வுக் கூடத்தின் கட்டமைப்பு பணிகள் மற்றும் இயக்கக் கூட்டணிகள்
மேற்கொள்ள 1996லும் (AEC) கையெழுத்தானது. மட்டுமின்றி இந்தியாவின் TIFR,
SINPECIL போன்ற நிறுவனங்கள் PMPS ஜாக்குகள், மென்பொருள் கண்டுபிடிப்பான்,
LHC யின் மீ கடத்தி காந்தங்கள் போன்ற பல பகுதிகளை உருவாக்குவதில்
பங்களித்தது. மேலும் CMS-ன் இந்திய பகுதியை டாடா அடிப்படை ஆராய்ச்சி
நிறுவனம் இயக்கியது.சமீபகால
கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு இதுதான். பருப்பொருள்
மாதிரியில் கண்டுபிடிக்கபடாமலிருந்த இறுதி துகள் ஹிக்ஸ் போசான். ஹிக்ஸ்
போசான் துகளின் கண்டுபிடிப்பு மட்டுமே துகள் இயற்பியல் துறைக்கு
இறுதியாகாது. மிகை சமச்சீர் கோட்பாடு (super symmetry theory) குறைந்தது 5
ஹிக்ஸ் துகள்கள் இருப்பதாக கூறுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டது இதில்
ஏதேனும் ஒன்றானால் மீதி நான்கு துகளையும் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.
இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக உலக பிறப்பு மட்டுமல்ல கடவுள் துகள் பிறப்பும்
(கடவுள்) அறியப்படும் என்பதில் ஐயமில்லை.
-கோவி. லெனின்
திராவிடர்
கழகத் தலைவரான தந்தை பெரியாருக்கும், அக்கட்சியின் பொதுச்செயலாளரும்
பெரியாரின் தளபதியாக விளங்கியவருமான அண்ணாவுக்கும் சில கருத்து வேறுபாடுகள்
இருந்து வந்தன. கழகத்தினர் அனைவரும் கருஞ்சட்டை அணியவேண்டும் என்ற
பெரியாரின் கருத்தில் அண்ணாவுக்கு மாறுபாடு இருந்தது. கருஞ்சட்டை என்பது,
பொதுமக்களிடமிருந்து கழகத்தினரை அன்னியப்படுத்திவிடும் என்றும், தொண்டர்களை
நிர்பந்திப்பது ஜனநாயக முறையாகாது என்றும் அண்ணா கருதினார். அதுபோலவே,
சுதந்திர நாளை துக்க நாளாக பெரியார் அறிவித்ததிலும் அண்ணா முரண்பட்டார்.
வெள்ளையர்கள்-
பார்ப்பனர்கள் என்ற இரு எதிரி களில் ஓர் எதிரி இந்த நாட்டைவிட்டு
வெளியேறும் நாள் என்பதால் அதனை நாம் இன்பநாளாகவே கருத வேண்டும் என்றும்
இல்லையென்றால் திராவிடர் கழகத்தினர் வெள்ளைக்காரர்களின் தாசர்கள் என்ற
காங்கிரசாரின் குற்றச்சாட்டு உண்மையாகிவிடும் என்றும் அண்ணா தனது
திராவிடநாடு இதழில் எழுதினார். இருவருக்குமான கருத்து வேறுபாடுகள் நீடித்த
நிலையில், தனக்கும் தனது உடைமைகளுக்கும் சட்டப் படியான வாரிசு தேவை என்ற
அடிப்படையில் மணி யம்மையாரை வாரிசுரிமையாக ஆக்கிக் கொள்வதாகப் பெரியார்
அறிவித்தார். பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இது ஒரு சட்டப்பூர்வமான
ஏற்பாடு என்பதே இந்தத் திருமணம் பற்றிய பெரியாரின் விளக்கம்.
72 வயது பெரியார், 26 வயது மணியம்மையாரைத்
திருமணம் செய்துகொண்ட செயலும், கழகத்தில் உள்ள யாரையும் தன்னுடைய வாரிசாக
நம்பமுடியவில்லை என்று பெரியார் சொன்னதும் அண்ணா உள்ளிட்ட கழக
நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரியாரோ இது தன் சொந்த விஷயம்
என்று சொல்லிலிவிட்டார். இதனைத் தொடர்ந்து, திராவிடர் கழகத்தில் பிளவு
ஏற்பட்டது.
1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள்
சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற
புதிய இயக்கம் தொடங்கப்பட்டது. திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக்
கழகமும் ஒரே கொள்கையைக் கொண்டதுதான் என்றும் அதனை செயல்படுத்தும்
வழிமுறைகள்தான் மாறுபட்டவை என்றும் அண்ணா சொன்னார். தி.மு.கவுக்குத் தலைவர்
பதவியை அண்ணா உருவாக்கவில்லை. பெரியாரைத் தவிர வேறொரு தலைவரை அவர்
ஏற்றுக்கொண்டதில்லை என்பதால், புதிய கழகத்தின் தலைமைப் பதவி
காலிலியாகவே இருக்கும் என்றும் அறிவித்தார் அண்ணா."திராவிடர் கழகம்' எனும்போது அது
திராவிடர்களாகிய மக்களைக் குறிக்கும் சொல் ஆகிறது. "திராவிட முன்னேற்றக்
கழகம்' எனும்போது திராவிட என்பது நிலத்தைக் குறிக்கும் சொல் ஆகிறது.
திராவிடர் எனும் இனத்தைக் குறிக்கும்போது அதில் ஆரியராகிய பிராமணர்கள்
எதிர் நிலையில் நிறுத்தப்படுகிறார்கள். திராவிட என்ற நிலத்தைக்
குறிக்கும்போது, இந்த மண்ணில் வாழ்கின்ற அனைத்துத் தரப்பு மக்களும்
உட்படுகிறார்கள். தி.மு.கவை ஒரு ஜனநாயக இயக்கமாக, அரசியல் களத்திற்குக்
கொண்டு செல்லும் காலம் வரும் போது, அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவும்
வாக்கு களும் வேண்டும் என்ற அடிப்படையில் அண்ணா இந்தப் பெயரைத் தெரிவு
செய்து வைத்தார்.
இனம்-மொழி-தமிழக
நலன் காப்பதில் தி.க.வும் தி.மு.கவும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என்று
அண்ணா சொன்னார். இரண்டுக்கும் ஒரே இலக்குதான் என்பது இதன் பொருள்.
அதற்கானக் களங்களும் அடுத்தடுத்து அமைந்தன. 1950-இல் இந்தியா, குடியரசு
நாடானது. இந்தியாவிற்கான அரசியலமைப்புக் சட்டம் அந்த ஆண்டு நடைமுறைக்கு
வந்தது. அப்போது, பிராமணர் சமுதாயத்தைச் சேர்ந்த செண்பகம் துரைராசன் என்ற
மாணவி, நீதிக்கட்சி ஆட்சிக்காலத்திலிலிருந்து நடை முறைப்படுத்தப்படும்
வகுப்புவாரி உரிமையினால் தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை
என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இது போலவே
சி.ஆர்.சீனிவாசன் என்ற பிராமணர் சமுதாயத்து மாணவர் தனக்கு பொறியியல்
கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என மனு செய்தார்.
ஜாதிபேதம்
காட்டுகிற வகுப்புவாரி உரிமைக்கான உத்தரவானது, இந்திய அரசமைப்புச்
சட்டத்தின் 15-வது விதி மற்றும் 29(2)வது விதி ஆகியவற்றிற்கு முரணானது
என்றும் தனிநபர் உரிமையைப் பாதிக்கும் வகுப்புவாரி உரிமையை ரத்து
செய்யவேண்டும் என்றும் இவர்களின் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இவர்கள்
சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் அல்லாடி கிருஷ்ணசாமி
அய்யர், இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவில் இடம்
பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசமைப்புச் சட்டத்தை
உருவாக்குவதில் துணைநின்றவரே, அந்த சட்டத்திற்கு சவால்விடும் வழக்கில்
வாதாடினார். வகுப்புவாரி உரிமையை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம்
தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சென்னை மாகாண அரசு உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்தது. அப்போதுதான், மாணவி செண்பகம் துரைராசன்,
மருத்துவக்கல்லூரிக்கே விண்ணபிக்காமல் இப்படியொரு மனுவைத் தாக்கல்
செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. எனினும், வகுப்புவாரி உரிமை
செல்லாது என்கிற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றமும்
உறுதிசெய்தது.
நீதிக்கட்சி
ஆட்சியினால் பிராமணரல்லாத சமுதாயத்தினருக்கு கிடைத்து வந்த கல்வி- வேலை
வாய்ப்பு உரிமைகள், நீதிமன்றங்களின் இந்த உத்தரவினால் பறிபோவதை உணர்ந்த
திராவிட இயக்கங்கள் போராட்டக் களம் கண்டன. வகுப்புவாரி உரிமையைப்
பாதுகாக்கும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் வேண்டும் எனப்
பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், கண்டன ஊர்வலங்கள், பள்ளி-கல்லூரி மாணவர்களின்
வகுப்புப் புறக்கணிப்பு எனப் போராட்டங்கள் நடைபெற்றன. வடமாநிலங்களில்
இருந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த
எழுச்சி, மத்தியிலும் மாகாணத்திலும் இருந்த காங்கிரஸ் கட்சியினருக்கு
அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சென்னை மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சி
தோல்வியடைந்த நிலையில், அதன் ஆட்சியில் கொண்டு வந்த வகுப்புவாரி உரிமை
மறுக்கப்பட்டால், அதனை முன் வைத்து திராவிடக் கட்சிகள் வளர்ச்சி
பெற்றுவிடும் என்று டெல்லிலித் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
பெரியார்- அண்ணா ஆகியோர் நடத்தும் போராட்டங்களை எடுத்துச் சொல்லிலி,
அரசியல் சட்டத்திருத்தத்தை மேற் கொள்ளுமாறு பிரதமர் நேருவிடம் பெருந்தலைவர்
காமராஜர் வலிலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இந்திய அரசியல் சட்டத்தில்
முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இந்திய
நாடாளுமன்றத்தில் 2.6.1951 அன்று கொண்டு வரப்பட்ட இத்திருத்தம், இந்திய
அரசமைப்புச் சட்டத்தின் 15-வது விதியின் 4-ஆம் உட்பிரிவாகச்
சேர்க்கப்பட்டது. அதன்படி, இந்த 15-வது விதியில் உள்ள எதுவும்- அல்லது
29(2)-இல் கண்ட எதுவும் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய மக்களுக்கும்
அல்லது தாழ்த்தப்பட்ட மற்றும் மலை ஜாதி மக்களுக்கும் முன்னேற்றம்
அளிக்கக்கருதி, மாகாண அரசாங்கம் தனிச்சலுகை வழங்குவதற்காகச் செய்யும் எந்த
ஏற்பாட்டையும் தடை செய்யாது என்ற திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இத்திருத்தத்திற்கு, 18.6.1951 அன்று குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்
பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது.இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகச் செயல்பட்ட
திராவிடர் இயக்கங்களின் போராட்டக் குணம் இந்திய அரசமைப்புச் சட்டத்தையே
திருத்தும் வலிலிமை கொண்ட தாக அமைந்ததை இந்திய அரசியல் வரலாற்றிலிருந்து
மறைக்க முடியாது.
1952-இல்
சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. சென்னை
மாகாணத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வில்லை.
கம்யூனிஸ்ட் கட்சிகளே அதிக இடங்களைப் பிடித்திருந்தன. எனினும் மற்ற
கட்சிகளின் ஆதரவைப் பெற்று, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை அமைத்து,
முதலமைச்சரானார் ராஜாஜி. அவர், 1953-இல் குலக்கல்வித் திட்டம் எனும் புதிய
கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தார். இதன்படி பள்ளியில் பாதி நேரம் படிப்பு,
மீதி நேரத்தில் மாணவர்கள் தங்கள் பெற்றோர் செய்யும் தொழிலை மேற்கொள்ள
வேண்டும். இதன் மூலம் குயவர் மகன் குயவனாகவும், நாவிதர் மகன் நாவிதனாகவும்
வேலை செய்யும் சூழல் ஏற்பட்டு, வர்ணாசிரமக் கொள்கை நிலைநாட்டப்படும்
என்பதால் தி.க.வும் தி.மு.கவும் இந்தக் கல்வித்திட்டத்தை எதிர்த்து
பெரும்கிளர்ச்சி செய்தன. பலத்த எதிர்ப்பு எழுந்ததைக் கண்டு, குலக்கல்வித்
திட்டத்தை ரத்து செய்தவிட்டு, உடல்நிலையைக் காரணம் காட்டி முதல்வர்
பதவியிலிலிருந்து விலகினார் ராஜாஜி. தமிழகத்தின் புதிய முதல்வரானார்
பெருந்தலைவர் காமராஜர்.
தி.கவும்
தி.மு.கவும் தனித்தனியாகப் பல போராட்டங் களை நடத்திவந்தன. இரண்டு
கட்சிகளுக்கும் கடும் வாக்குவாதங்கள்-தனி மனிதத் தாக்குதல்கள் என்கிற
அளவுக்கு விமர்சனங்கள் சூடாக இருந்தன. எனினும், இரண்டு இயக்கங்களும்
இனம்-மொழி நலனுக்கானப் போராட்டங்களைத் தொடர்ந்தன. டால்மியாபுரம் என்ற
வடநாட்டு முதலாளியின் பெயரை மாற்றி, கல்லக்குடி என்கிற பழைய தமிழ்ப்பெயரைச்
சூட்டவேண்டும் என்று தி.மு.க அறிவித்த போராட்டத்தில், ரயில் தண்டவாளத்தில்
தலை வைத்துப் போராடி 6 மாதம் சிறைத் தண்டனை பெற்றார் தி.மு.கவின் துணைப்
பொதுச்செயலாளராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி. அவரைத் தொடர்ந்து கவிஞர்
கண்ணதாசன் போன்றவர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்று சிறைப்பட்டனர்.
திராவிடநாடு எனும் தனிநாடு கோரிக்கையை
வலிலியுறுத்தி தி.மு.க தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்தது. பிரதமர்
நேருவுக்குக் கறுப்புக்கொடி காட்டுவது உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தியது.
திராவிடர் கழகத்தின் சார்பில் சமுதாய மாற்றங்களுக்கானப் பிரச்சாரங்களையும்
போராட்டங்களையும் கடும் எதிர்ப்பிற்கிடையே நடத்தி வந்தார் பெரியார். அதே
நேரத்தில், பச்சைத்தமிழர் என்ற அடிப்படையில் காமராஜர் ஆட்சியைப் பெரியார்
ஆதரித்தார்.
1956-இல்
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. சென்னை மாகாணத்துடன் இருந்த ஆந்திரா,
கர்நாடகா, கேரளாவின் பகுதிகள் பிரிக்கப்பட்டு அந்தந்த மொழி பேசும்
மக்களின் பகுதிகளுடன் இணைந்த தனி மாநிலங் களாயின. அப்போது தமிழகத்தின்
எல்லைகளை நிர்ணயிப்பதற்கானப் போராட்டங்கள் நடந்தன. சென்னையைப்
பெற்றுக்கொண்டு, திருப்பதி-சித்தூர் உள்ளிட்ட பகுதிகளை இழந்தது தமிழகம்.
அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தைப் பெற்றுக்கொண்டு, தேவிகுளம்- பீர்மேடு-
மூணாறு உள்ளிட்டப் பகுதிகளை இழந்தது. இந்த எல்லைப் பிரச்சினை தொடர்பாக
தி.மு.கவின் நிலைப்பாடும் தி.கவின் நிலைப்பாடும் வேறுவேறாக இருந்தன.
இருப்பதைப் பாதுகாக்கும் நிலையில் பெரியாரும், இழந்ததைப் பெறும் நிலையில்
அண்ணாவும் இருந்தனர்.
இரண்டாவது
பொதுத்தேர்தல் 1957-இல் நடை பெற்றது. அதில் தி.மு.க முதன்முறையாகப்
போட்டியிட்டது. காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு பெரியார் தீவிரப்
பிரச்சாரம் செய்தார். காங்கிரசே மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. எனினும்
தி.மு.க சார்பில் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட 15 பேர் சட்டமன்ற
உறுப்பினர்களகாவும், ஈ.வெ.கி.சம்பத், தர்மலிலிங்கம் ஆகிய 2 பேர் நாடாளுமன்ற
உறுப்பினர்களாகவும் வெற்றி பெற்றனர். தேர்தல் களத்தில் தனது முதல்
வெற்றியைத் தி.மு.க பதிவு செய்தது.
இந்தி
பேசாத மக்கள் விரும்புகிறவரை அந்த மாநிலங்களில் ஆங்கிலமும் ஆட்சிமொழியாக
நீடிக்கும் என்று பிரதமர் நேருவிடம் உறுதிமொழி பெற்றவர் தி.மு.கவின்
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வெ.கி.சம்பத்.
1957-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள், சட்ட
எரிப்புப் போராட்டத்தை நடத்தினார் பெரியார். இந்திய அரசியல் சட்டத்தில்,
ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவை நீக்கவேண்டும் என்பதை வலிலியுறுத்தியே இந்தப்
போராட்டம். இதனைத் தடுப்பதற்காக காங்கிரஸ் அரசு ஒரு தனி சட்டத்தை
இயற்றியது. தேசத்தலைவர்கன் படங்கள்- அரசியல் சட்டம் இவற்றை எரித்தால்
மூன்றாண்டு சிறை தண்டனை என்ற அந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று
சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார் அண்ணா. ஆனால், பெரியாரின்
ஆதரவில் வெற்றிபெற்ற காங்கிரஸ் அரசு அந்த சட்டத்தை நிறைவேற்றியது. சட்டத்தை
மீறிப் போராடிய பெரியார் உள்ளிட்ட 3000-க்கும் மேற்பட்ட தி.கவினர் கைது
செய்யப்பட்டனர். 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை பலவிதமான சிறைத் தண்டனைகள்
அளிக்கப்பட்டன. சிறையிலேயே மணல்மேடு வெள்ளைச்சாமி, பட்டுக் கோட்டை ராமசாமி
உள்ளிட்ட 3 பேர் இறந்தனர். விடுதலையானபிறகும், சிறைக்கொடுமையின்
தாக்கத்தால் 15 பேர் பலிலியாயினர். எனினும், தி.க.வின் கருஞ்சட்டைப்படை
இந்தப் போராட்டத்தை வீரமுடன் நடத்தியது.
பெருமையும் பாரம்பரியமும் மிக்க சென்னை
மாநகராட்சிக்கு 1959-ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலில் தி.மு.க வெற்றி பெற்றது.
மாநகராட்சியின் மேயராக தி.மு.கவைச் சேர்ந்த அ.பொ.அரசு பொறுப்பேற்றார்.
1961-ஆம் ஆண்டில் திராவிடர் இயக்கத்தில் மேலும் ஒரு பிளவு ஏற்பட்டது.
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரும் பெரியாரின் அண்ணன் மகனுமான
ஈ.வெ.கி.சம்பத்தும் அவரது ஆதரவாளர்களான கவிஞர் கண்ணதாசன் போன்றவர்களும்
தி.மு.கவிலிலிருந்து பிரிந்து, தமிழ்த்தேசியக் கட்சி என்ற புதிய கட்சியைத்
தொடங்கினர். உள்கட்சி மோதல்களே இந்தப் பிரிவுக்குக் காரணம். திராவிட நாடு
சாத்தியமல்ல என்றும், பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னாட்சித்
தமிழகம்தான் சரியான கோரிக்கை யாக இருக்க முடியும் என்று சம்பத்
வலிலியுறுத்தினார். அண்ணாவோ, அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு
என்று முழங்கினார்.
மூன்றாவது
பொதுத்தேர்தல் 1962-இல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
தி.மு.க சார்பில் 50 பேர் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர்.
ஆனால், அண்ணா தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலிலில் காமராஜருக்காகத்
தீவிரப்பிரச்சாரம் செய்தார் பெரியார். தி.மு.கவிலிலிருந்து பிரிந்த தமிழ்த்
தேசியக் கட்சி பெருந்தோல்வியை சந்தித்தது. பின்னர் அது காங்கிரஸ்
கட்சியில் இணைந்தது. சட்டமன்றத்தில் தி.மு.க பிரதான எதிர்க்கட்சியானது.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார் அண்ணா. அங்கே திராவிட நாடு
கோரிக்கையை வலிலியுறுத்தி வலுவான வாதங்களை வைத்தார். வடநாட்டுத் தலைவர்கள்
அவருடைய வாதத் திறமை கண்டு வியந்தனர்.
தனிநாடு
கோரும் ஒரு இயக்கம் வளர்ந்து வருவதை காங்கிரஸ் கட்சி உன்னிப்பாகக்
கவனித்தது. இதனைத் தொடர்ந்து 1963-இல் பிரிவினைத் தடைச்சட்டம் கொண்டு
வரப்பட்டது. தனிநாடு கோரினால், கட்சி தடை செய்யப்படும் என்ற நிலையில்,
அந்தக் கோரிக்கையை தி.மு.க கைவிடுவதாக அண்ணா அறிவித்தார். பிரிவினையைக்
கைவிட்டாலும், "பிரிவினைக்கானக் காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன'
என்றார்.
நெசவாளர்களின்
துயர் துடைப்பதற்காக கைத்தறித் துணி விற்பனை, சீனப் படையெடுப்பைத்
தொடர்ந்து யுத்தநிதி திரட்டுதல், போன்ற செயல்களில் ஈடுபட்டதுடன், விலைவாசி
உயர்வு எதிர்ப்பு உள்ளிட்ட மும்முனைப் போராட்டத்தை தி.மு.க நடத்தியது.
எனினும், அதனுடைய முக்கிய கோரிக்கையான திராவிடநாடு கோரிக்கை
கைவிடப்பட்டதால், அது வீழ்ச்சியையே காணும் என அரசியல் நோக்கர்களால்
எதிர்பார்க்கப்பட்டது.
நடந்ததோ வேறு. எந்தக் கொள்கையை தி.மு.க
முன்னிறுத்தியதோ, அதனை அரசியல் சூழல் ஏற்படுத்திய நெருக்கடி காரணமாகக்
கைவிட்டபிறகும் அதன் பலம் குறைவதற்குப்பதில் அதிகரிக்கவே செய்தது.
தி.மு.கவை மாபெரும் ஜனநாயக அரசியல் இயக்கமாகக் கட்டி யமைப்பதில் அண்ணா
கவனம் செலுத்தினார். அவருடைய தம்பிகளான கட்சி நிர்வாகிகள் துணை நின்றனர்.
மேடைப் பேச்சு, பிரச்சார நாடகம், பத்திரிகைகள், திரைப்படம் ஆகிய ஊடகங்களை
ஆயுதமாகப் பயன் படுத்தினர். கட்சியின் சார்பில் பல படிப்பகங்களை அமைத்து,
வாசகர்களும் பொதுமக்களும் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கினர். தேநீர்
நிலையங்கள், முடி திருத்தும் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் புழங்கும் இடங்
களில் திராவிட இயக்கத்தினரின் அரசியல் கருத்துகள் வலுப்பெற்றன. தி.மு.கவின்
செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. அதன் எழுச்சியைக் காட்டும் விதத்தில்
அமைந்தது இந்தி எதிர்ப்புப் போராட்டம்.
1963-ஆம்
ஆண்டு ஏப்ரல் 13-ஆம் நாள் நாடாளு மன்றத்தில் உள்துறை அமைச்சர் லால்பகதூர்
சாஸ்திரி ஆட்சி மொழி மசோதாவை தாக்கல் செய்தார். அதன்படி, 1965-ஆம் ஆண்டு
ஜனவரி 26-ஆம் நாள் முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாகும். இந்தி மொழிக்குத்
துணையாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். மத்திய அரசின் ஆணைகள், சட்டங்கள்
உள்ளிட்டவை இந்தி மொழியில் வெளியிடப்படும். மாநில அரசின் ஆணைகளும்
சட்டங்களும் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு ஆளுநர் ஒப்புதலுடன்
வெளியிடப்பட்டால்தான் அது அதிகாரப் பூர்வமானதாகும்.
இந்த
மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் போராட்ட அலை வீசக் தொடங்கியது. இந்தியைத்
திணிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தி.மு.கவும் மாணவர்
அமைப்புகளும் போர்க்கோலம் பூண்டன. பல கட்சிகளும் ஆதரவளித்தன. அரசியல் சட்ட
எரிப்புப் போராட்டத்தை தி.மு.க நடத்தியது. அண்ணா உள்ளிட்டோர் கைதாகி, 6 மாத
சிறைத்தண்டனை அடைந்தனர். 1965-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி-குடியரசு
தினத்தை துக்கநாளாகக் கொண்டாடுவது என தி.மு.க முடிவு செய்தது. 1964-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் நாள் திருச்சி
மாவட்டத்தைச் சேர்ந்த கீழப்பழுவூர் சின்னசாமி என்ற 21 வயது இளைஞர், இந்தி
ஆட்சிமொழியாவதை எதிர்த்து பொது இடத்தில் தீக்குளித்து உயிர் துறந்தார்.
அவர் பற்ற வைத்த தீ பல இடங்களுக்கும்
பரவியது. கோடம்பாக்கம் சிவலிலிங்கம், விருகம்பாக்கம் அரங்க நாதன்,
அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், சத்திய மங்கலம் முத்து, மயிலாடுதுறை
மாணவர் சாரங்கபாணி உள்ளிட்ட பலர் தீக்குளித்து உயிர் துறந்தனர். உலகில்
தங்கள் தாய் மொழியைக் காப்பதற்காக இளைஞர்களும் மாணவர்களும் தீக்குளித்து
உயிர் துறந்த நிகழ்வு தமிழகத்தில்தான் முதலிலில் நடந்தது. இப்படி உயிர்
துறப்பது சரியானதல்ல என்றாலும், அவர்களுடைய உணர்ச்சியின் வேகம்,
போராட்டக்களத்தைத் தீவிரமாக்கியது.
அப்போது
தமிழக முதல்வராக பக்தவத்சலம் பொறுப் பேற்றிருந்தார். கட்சிப்பணிக்காக
காமராஜர் முதல்வர் பதவியிலிலிருந்து விலகியதையடுத்து, பக்தவத்சலம்
முதல்வரானார். அவர், மாணவர் போராட்டத்தின் வலிலிமையை உணரவில்லை. சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய இந்தி ஆட்சிமொழி எதிர்ப்பு
ஊர்வலத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராஜேந்திரன் என்ற
மாணவர் குண்டடிபட்டு பலிலியானார். மாணவர்களின் போராட்ட எழுச்சி தமிழக
மெங்கும் பரவியது. சட்டஎரிப்பு, ரயில் மறியல், அஞ்சலக முற்றுகை என அவர்கள்
தீவிரமாயினர். பல இடங்களில் துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தப்பட்டு
மாணவர்கள் பலர் பலிலியாயினர். மாணவர்களைத் தூண்டி விட்டதாக கலைஞர்
மு.கருணாநிதி கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத்தண்டனையில் பாளையங்கோட்டை
தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். கி.ஆ.பெ.விசுவ நாதம், பேராசிரியர்
இலக்குவனார் உள்ளிட்ட தமிழறிஞர் களும் போராட்டக் களம் கண்டு சிறைப்பட்டனர்.
இந்தி யுடன் ஆங்கிலமும் இணை ஆட்சி மொழியாக இருக்கும் என மத்திய அரசு
அறிவித்தபிறகே போராட்டத்தின் வேகம் தணிந்தது.
1967-ஆம்
ஆண்டு நான்காவது பொதுதேர்தல் நடை பெற்றது. இந்தத் தேர்தலிலில் தி.மு.க
புதிய கூட்டணி அமைத்தது. ராஜாஜியின் சுதந்திர கட்சி, மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிலிம் லீக், பிரஜாசோஷலிஸ்ட், தமிழரசு கழகம்
உள்ளிட்ட கட்சிகள் இந்த அணியில் இடம்பெற்றன. காங்கிரஸ் கட்சியை பெரியார்
ஆதரித்தார். தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தை
ஏற்படுத்தின.
தி.மு.க 138
தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி யமைக்கும் வலிலிமையை அடைந்தது. காங்கிரஸ்
கட்சிக்கு 49 இடங்கள் மட்டுமே கிடைத்தன. காமராஜர், பக்த வத்சலம் உள்ளிட்ட
பல தலைவர்களும் தோல்வியடைந்த னர். செல்வாக்குமிக்க நடிகர்களான எம்.ஜி.ஆர்.
எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தி.மு.க சார்பில் பெருவெற்றி பெற்றார்கள்.
தி.மு.க பொதுச்செயலாளரான அண்ணா, வெற்றிச்செய்தி கிடைத்ததும் திருச்சிக்கு
சென்று பெரியாரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 18ஆண்டுகால
பிரிவுக்குப்பின் இரு கழகத்தினரும் ஒன்றிணைந்தது அப்போதுதான்.
1967
மார்ச் 6-ஆம் நாள், தமிழகத்தின் புதிய முதல்வராக அண்ணா பொறுப்பேற்றார்.
அவரது அமைச்சரவையில் நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் மு. கருணாநிதி,
கே.ஏ.மதியழகன், சத்தியவாணிமுத்து, சாதிக்பாட்சா, செ. மாதவன்,
ஏ.கோவிந்தசாமி, முத்துசாமி ஆகியோர் அமைச்சர்களானார்கள். இந்த ஆட்சி
பெரியாருக்குக் காணிக்கை என்று அறிவித்தார் அண்ணா. 1937-இல் நடந்த
தேர்தலிலில் நீதிக்கட்சியைத் தோல்வியடையச் செய்து காங்கிரஸ் அரசை அமைத்தவர்
ராஜாஜி. அவருடனேயே கூட்டணி அமைத்து 1967-இல் மீண்டும் திராவிட இயக்கத்தின்
ஆட்சியைக் கொண்டுவந்தவர் அண்ணா.
நமக்குத் தெரியாதவை பற்றி அறிந்து கொள்ள முதலில் அதற்கான பின்னணியைத் தெரிந்துகொள்ளல் அவசியமாகும்.
இந்திய
சரித்திரத்தை ஐரோப்பிய கருத்தியலுக்குத்தக்க ஒரு நெறிமுறையுடன் எழுதும்
வழக்கு 18-ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது. வின்சென்ட் ஸ்மித்தின் இந்திய
வரலாற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடுவர். இந்திய வரலாற்றினை ஆங்கிலேயர்
தம் காலனித்துவ சிந்தனைகட்கு ஏற்ப வடிவமைத்தனர்.
19-ஆம்
நூற்றாண்டுகளில் ஆங்கிலேயருக்கு எதிரான சுதேசிகள் போராட்டம் வலு வடைந்தது.
ஆங்கிலம் கற்ற இந்திய சுதேசிகள்- அதிலும் முக்கியமாக வட இந்தியர் தேசியப்
போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் அரும்பிய சுதேசிய புத்திஜீவிகள்
இந்தியாவின் தேசியப் பெருமைகளைக் கூறும் வகையில் இந்திய வரலாற்றை
வடிவமைத்தனர். சந்திர குப்தமௌரியனும், அசோகனும், அக்பரும் வீரசிவாஜியும்
இந்திய பெரும் அரசர்களாக அவ்வரலாறுகளில் இடம்பெற்றனர். எல்லோரா அஜந்தா
குகைச் சிற்பங்களும் ஓவியங்களும், தாஜ்மஹாலும், வட இந்திய கோயில்களும்
இந்திய உன்னத சின்னங் களாகக் காட்டப்பட்டன. இவையாவும் இந்திய சமூக
அமைப்பின் மையத்தைச் சேர்ந்த வரலாறும் பண்பாடும்தான். இவ்வரலாறுகளில்
தமிழ்நாடு பெரும் இடத்தைப் பிடித்திருக்க வில்லை. தமிழ்ப் பண்பாடு
கூறப்பட்டிருக்க வில்லை. 18-ஆம், 19-ஆம் நூற்றாண்டுகளிலே பின்வரும்
விஷயங்கள் தமிழ்நாட்டில் நடந்தேறின.
1. ஏட்டுச் சுவடியிருந்த பண்டைய தமிழ் இலக்கியங்கள்- முக்கியமாக சங்க இலக்கியங்கள்-பதிப்பிக்கப்பட்டன. அச்சில் வெளிவந்தன.
2. சிலப்பதிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது அது அச்சில் வெளிவந்தது.
3. கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம், ஆரிய மொழிக் குடும்பத்திற்கு மாறாக திராவிட மொழிக் குடும்பம் ஒன்று உண்டு என நிறுவியது.
4.
சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப் பட்டது. அது ஆரியருக்கு முற்பட்டது என
நிறுவப்பட்டதுடன் அது பண்டைய இந்தியாவில் வாழ்ந்த திராவிட கலாச்சாரம்
எனவும் கூறப் பட்டது.
5. திராவிடர் தமிழர் எனவும், சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் எனவும் நிறுவும் முயற்சிகள் மேலெழும்பின.
இவற்றால்
தமிழர் மத்தியில் கல்வி கற்று மேலெழுந்த மேட்டுக்குடியினர் இந்திய
வரலாற்றில் தமக்குரிய தேசியப் பெருமைகள் தரப்படவில்லை என்ற எண்ணத்துடன்
தமிழர் வரலாற்றை உருவாக்கினார்.
சதாசிவ
பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரி போன்றோர் சோழர்கால கல்வெட்டுகள், செப்புப்
பட்டயங்களை ஆராய்ந்து சோழர்கால ஆட்சி பற்றியும் அதன் உன்னதங்கள் பற்றியும்
அதிகம் வெளிக் கொணர்ந்தனர். 19-ஆம், 20-ஆம் நூற்றாண்டு களில் ஏற்பட்ட
தமிழ்த் தேசிய உணர்வு காரணமாக அசோகனைப்போல, அக்பரைப் போல, அஜந்தா போல,
தாஜ்மஹால் போல தமிழிரிடமும் ராஜ இராஜசோழனும், குலோத்துங்க சோழனும்
இருந்தார்கள் என்றும், தமிழரிடம் அஜந்தா எல்லோரா குகை போல மாமல்லபுரக்
குகைக் கோயில் களும், தாஜ்மஹால் போல இராஜராஜேஸ்வரக் கோயிலும் இருந்தன
என்றும் தமிழர் தேசிய பெருமை கூறும் வரலாறுகள் தமிழ்ப் அறிவுஜீவிகளினால்
எழுதப்படலாயின.
நாவலாசிரியர்களான
கல்கியும், (சிவகாமி யின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு)
அகிலனும் (வேங்கையின் மைந்தன்) சாண்டியல்யனும் (கடற்புறா) விக்கிரமனும்
(பாண்டியன் மனைவி) தமது சரித்திர நாவல்கள் மூலம் மகோன்னதமான தமிழ் அரசர்களை
உருவாக்கினர். அவர்களது ஆட்சிச் சிறப்பினையும், அவர் தம் மதியூகங்
களையும், மக்கள் மத்தியில் இச்சரித்திர நாவலாசிரியர் பரப்பினர். தமிழ்ப்
பெரும் அரசர்கள் அனைவரும் இந்நாவல்களில் மகா புருஷர்களாக,
அறிவும்-வீரமும்-அன்பும் நிறைந்த லட்சிய புருஷர்களாகச் சித்திரிக்கப்
பட்டனர். ஒரு வகையில் காவியங்கள் கூறிய குறைகள் அற்ற காவிய நாயகர்களாகக்
காட்டப்பட்டனர். இவர்கள் யாவரும் சமூக அமைப்பின் மையத்தில் வாழ்ந்தோர்கள்
ஆவர்.
1. சேர சோழ பாண்டிய மன்னர் ஆண்ட காலம்
2. களப்பிரர் எனும் அந்நியர் ஆண்ட காலம் (இருண்ட காலம்)
3. பல்லவ மன்னர் ஆண்ட காலம்
4. சோழ மன்னர் ஆண்ட காலம்
5. நாயக்க மன்னர் ஆண்ட காலம்
6. ஐரோப்பியர் ஆண்ட காலம்
எனத்
தமிழர் வரலாறு கட்டமைக்கப் பட்டது. ஐரோப்பியரையும், களப்பிரரையும் தவிர
ஏனையவர்கள் யாவரும் தமிழ் மன்னர் களாகவும் தமிழ் மக்களுக்கும், தமிழ்ப்
பண்பாட்டுக்கும் பெரும் சேவை புரிந்தவர் களாகவும் காட்டப்பட்டனர்.
இம்மன்னர்கள் வியக்கத்தக்க தமிழர் பெருமை கூறக்கூடிய பெரும் கோயில்களையும்,
கட்டிடங்களையும் கட்டியவர்களாகவும் கலை களையும் இலக்கியங்களையும்
வளர்த்தவர் களாகவும் தமிழர் சரித்திரம் எழுதப்பட்டது. பாடசாலை களிலும்
பல்கலைக்கழகங்களிலும் இவையே கற்பிக்கப்பட்டன.
தமிழ்
மன்னர்களுள் உன்னதமானவர்களாக கரிகாற் பெருவளத்தானும் (காவேரி அணைக் கரை
கட்டியவன்) ராஜராஜசோழனும் (தஞ்சைப் பெரும் கோயில் கட்டியவன்) ராஜேந்திர
சோழனும் (இலங்கையும், கங்கை யையும் வெற்றி கொண்டவன்) குலோத்துங்க சோழனும்
(கங்கம் வென்றவன்) மாறவர்மன் சுந்தரபாண்டியனும் (இலங்கை வென்றன்)
கட்டபொம்மனும், ஊமைத்துரையும், சின்னமருதுவும் பெரிய மருதுவும் (ஆங்கிலேயரை
எதிர்த்த வீரர்கள்) வரலாற்று நூல்களிலே காட்டப்பட்டனர். தமிழர் வரலாறாக
நாம் இதனைத் தான் தெரிந்து வைத்துள்ளோம்.
தமிழ்ப்
பண்பாடாக சங்க காலத்தில் ஐந்து விதமான நிலங்களிலும் தமிழர் வாழ்ந்த ஐந்து
விதமான வாழ்க்கை, முக்கியமாக அவர்களது அகப் புற வாழ்க்கை, அவர்களிடம்
ஏற்பட்ட அற ஒழுக்க சிந்தனைகள், தமிழர் பண்பாட்டில் திருக்குறள் தமிழ்
வேதமாக எழுந்தமை, சமண பௌத்த மதங்களுக்கு எதிராக வைதீக மதம் மக்களை
அரவணைத்து எழுந்தமை, அதனடி யாக எழுந்த பக்தி இலக்கியங்கள், காவியங்கள்,
தமிழ் மன்னர் எழுப்பிய இந்துக் கோயில்கள், இந்துக் கலைகள், பரதநாட்டியம்,
கர்நாடக இசை என தமிழரின் பண்பாடு காட்டப் பட்டது. நாம் தெரிந்து
வைத்துள்ளவற்றில் மிகச் சிலவற்றையே நான் மேலே குறிப் பிட்டுள்ளேன்.
இவையாவும் மையத்தில் வாழ்ந்தோரின் வரலாறுகளும், பண்பாடுகளும் என்பதனை நாம்
இலகுவாக இப்போது புரிந்து கொள்கிறோம்.
மையத்தில்
வாழாமல் இடையிலும், விளிம்பிலும் வாழ்ந்த மிகப் பெரும்பான்மை யான
மக்களிடையே சமூக வாழ்வு இல்லையா? அவர்களிடம் பண்பாட்டு வாழ்க்கை முறை
இல்லையா? அவர்கள் மத்தியில் தலைவர்கள் உருவாகவில்லையா? அவர்கள் மையத்தில்
வாழ்ந்த மக்கள் போல பிறநாட்டை வெற்றி கொண்டு வந்த பெரும் செல்வத்தைப்
பகிர்ந்து உண்டு உடுத்து மகிழ்ந்து வாழ்ந்தார்களா? அகப்புறம் என்ற தமிழர்
பண்பாட்டு வாழ்க்கையில் திளைத்து வாழ்ந்தார்களா? மையத்தில் வாழ்ந்தோர் போல
கல்வி அறிவு பெற்று, ஆடை அணி புனைந்து பெரும் கோயிற் பண்பாட்டை உள்வாங்கி
பிராமணர் துணையுடன் வாழ்ந்தார்களா? குதிரை, யானை வைத்திருந்தார்களா? என்ற
பல கேள்விகள் நமக்கு எழுகின்றன. இடையிலும், விளிம்பிலும் வாழ்ந்த
பெரும்பான்மைத் தமிழ் மக்களின் வரலாறும் பண்பாடும் நமக்குத் தெரியாதவை.
ஆனால்
கொலை குற்றவாளி தன்தை யறியாமல் தடயங்களை விட்டுச் செல்லுவது போல
வரலாற்றில் மன்னர்களும் ஏனையவர்களும் எழுதி வைத்த கல்வெட்டுகள், சான்றுகள்
என்பன இவ்விடைநிலை, விளிம்பு நிலை மக்கள் பற்றிய செய்திகளைத் தருகின்றன.
அச்செய்திகளின்படி மையத்தில் வாழாத மக்கள் மையத்தில் வாழ்ந்தோர் போல
மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் வாழவில்லை. சமூகத்தின் முழுச் சுமையையும்
ஏற்றுக் கொண்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டே வாழ்ந்தவர்களாகத்
தெரிகிறார்கள். முக்கியமாக விளிம்பு நிலை மக்கள் அடக்கப்பட்டவர்களாக,
ஒடுக்கப்பட்டவர்களாக அடிமைகளாக வாழ்ந்திருக்கிறார்கள். கோயில்களுக்குள் புக
இவர்களுக்கு அனுமதியில்லாதிருந்தது. சில பொருட்களைத் தொட மேட்டிமைகளின்
வீட்டுக்குள் புகக் கூட இவர்களுக்கு உரிமை தரப்படவில்லை. சேரியிலும்,
ஊருக்குப் புறம்பான இடங்களிலும் இவ்வடிநிலை மக்கள் வாழ்ந்தனர்.
எனினும்
இவர்கள் வாழ்க்கை நடத்தினர். தமக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி தம்மளவில்
திருப்தியுடன் வாழ முயன்றனர். தமக்கென கலைகளையும் பண்பாட்டையும்
உண்டாக்கிக் கொண்டனர். இவர்களும் தமிழரே, இவர்கள் வாழ்வும் தமிழ் வாழ்வே.
இவர்கள் பண்பாடும் தமிழ்ப் பண்பாடே. இவர்களின் வரலாறும் பண்பாடும் எமக்குத்
தெரியவில்லை. தெரிவதில்லை. தமிழர் பண்பாட்டிலும் வரலாற்றிலும் நமக்குத்
தெரியாதவை யாவை? என அடுத்து நோக்குவோம்
தமிழர்
வரலாற்றையும், பண்பாட்டையும் மையத்தில் வாழ்ந்தோரின் வரலாறாகவும்,
பண்பாடாகவும், கட்டமைத்தவர்களுக்குப் (நான் முன்னனே குறிப்பிட்ட ஆரம்ப கால
வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வாளருக்கும்) பின்னால் 1960-களில் புதிய ஆய்வாளர்
குழு தமிழ் ஆராய்ச்சி உலகுக்குள் உருவாகிறது. இவர்கள் மாக்ஸிய நெறியில்
வர்க்கப் போரே வரலாறு என்ற சித்தாந்தத்தால் கவரப் பட்டவர்கள். இந்திய
வரலாற்றையும், பண்பாட்டையும் மாக்ஸிய நெறியில் அணுகிய டாங்கே, கோஸாம்பி,
கே.ஆர் சர்மா, சர்தேசாய், ரொமிலா தாப்பர் வழியில் தமிழகத்திலும்
இலங்கையிலும் வாழ்ந்தவர்கள். நா.வானமாலை, கைலாசபதி, சிவத்தம்பி,
ஆ.சிவசுப்பிரமணியம், சிதம்பரரகுநாதன், வே.கிருஷ்ணமூர்த்தி, தொ. பரமசிவன்
போன்றவர்கள்.
இவர்கட்குப்
பின்னர் வரலாற்றையும் பண்பாட்டையும் மக்கள் வரலாறாகவும் பண் பாடாகவும்
புரிந்துக் கொண்ட சிறந்த வரலாற்றுப் பண்பாட்டாய்வாளர்கள் ஆராய்ச்சி உலகில்
தோன்றுகிறார்கள். இவர் களுள் வெளிநாட்டவர்கள் குறிப்பிடத்தக்க வர்கள்.
பேர்ட்டன்ஸ்ரைன், நொபுறுகறோ சிமா, ஹெய்ல்ட் ஒம்வெல்ட், செண்பகலஷ்மி,
சுப்பராயலு, கதலின்கௌ, கமில் சுவலபில் போன்றோரும் அ.மாக்ஸ், வேலுச்சாமி,
ராஜ் கௌதமன், குணா போன்றோரும் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள்
பலர் அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம், நியூ மாக்ஸியம்,
பின்காலனித் துவம், முதலான சித்தாந்தாங்களால் கவரப் பட்டவர்கள். புதிய
சிந்தனைகளுக்கு பரிச்சய மானவர்கள். இவர்கள் எழுத்துக்களும் ஆய்வும் தமிழர்,
வரலாறு, பண்பாடு பற்றி தெரியாத பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு
வந்தன. இவர்களுள் சிலர் கிடைத்த ஆதாரங்களுக்குப் புதிய விளக்கங்களுமளித்த
னர். இதனால் மையத்தில் வாழ்ந்த தமிழர் வரலாறு, பண்பாடு மட்டுமன்றி
இடையிலும் விளிம்பிலும் வாழ்ந்த மக்கள் பற்றிய செய்தி களும் வெளிவரலாயின.
இவர்களுள்
நான் குறிப்பிட்ட இரண்டா வது தலைமுறையினர் அதாவது மாக்ஸிய நெறிமுறை நின்று
அணுகியோர் வரலாற்றையும், பண்பாட்டையும் பரிணாச் சுழலேணி முறையிலும்,
தமிழ்நாட்டில் பண்பாட்டு வரலாற்றை வர்க்கப்போரின் பின்னணியிலும்
விளக்கினர். அதன் பின் வந்தோர் மையம்/ விளிம்பு என பிரித்து விளக்கினர்.
பரிணாம வளர்ச்சியில் தமிழர் வரலாறும் பண்பாடும்
புதிய
ஆராய்ச்சிப் பரம்பரையினர், தமிழர் பண்டைய காலத்தில் குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களில் தனித்தனிப் பண்பாட்டுடனும்,
பெருமிதத் துடனும், அகப்/புற கோட்பாடுகளுடன் வாழ்ந்தனர் என்ற
மரபுக்கருத்துக்கு மாறாக இவர்கள் இந்த 5 நிலக்கோட்பாட்டை சமூக பரிணாம
வளர்ச்சிக் கோட்பாட்டில் விளக்கி னர். குறிஞ்சியில் வேட்டையாடிய தமிழ்
இனம், முல்லையில் வேட்டையில் பிடித்த மிருகங்களை கொல்லாது வளர்த்து கால்நடை
மேய்க்கும் இனமாக பரிணாமமுற்று, அதன் வளர்ச்சியாக, நதிக்கரைகளில்
நிரந்தரமாக இருந்து வேளாண்மை செய்து, பொருள் பெருக்கி அப்பொருட்களை காக்க
கோட்டை, கொத்தளம் படை என அமைத்து அரசு உருவாக்கி மருத நாகரிகம் வளர்த்து
பின்னர் பெருகிய செல்வத்தை பிற நாட்டுடன் பகிர்ந்தும், பெற்றும் வாழ கடல்
கடந்து வாணிபம் செய்து நெய்தல் நில நாகரிகம் கண்டு, பேரரசுகள் அமைத்து
வாழத் தொடங்கினர் என பண்டைய தமிழர் வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் இவர்கள்
புதிய விளக்கமளித்தனர். சுருங்கச் சொன்னால்
(புணர்ச்சி) / வேட்டையாடுதல் / (குறிஞ்சி)
(இருத்தல்) / மந்தை மேய்த்தல் / (முல்லை)
(ஊடல்) / விவசாயம் செய்தல் / (மருதம்)
(பிரிதல்)
கடல் கடந்த வாணிபம் செய்தல் / (நெய்தல்) என்று குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல் என்று திணைக்கோட்பாட்டுக்கு, வேட்டையாடுதலில் இருந்து கடல் கடந்து
வெளிநாட்டு வியாபாரம் செய்தது வரையான பரிணாம வளர்ச்சி என்று புதிய
விளக்கத்தை இவர்கள் அளித்தனர். இந்த வளர்ச்சி வரலாற்றுக்கு முந்திய காலம்
தொட்டு கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வரை நடைபெற்றதென்றும் இந்த வளர்ச்சியினூடே
சிறு சிறு குழுக்களாக வாழ்ந்த இனங்கள் தமக்குள் மோதிக்கொண்டன என்றும்
இம்மோதலில் வெற்றிப்பெற்ற பெரும் இனக் குழுக்களான சேர, சோழ, பாண்டிய
இனக்குழுக்கள் முறையே தமிழ்நாட்டின் வடக்கிலும் (தஞ்சாவூர்) தெற்கிலும்
(மதுரை) மேற்கிலும் (கேரளா) மூவரசுகளை தோற்றுவித்தன என்றும் இந்த ஓயாத
போரையும் போரில் அடித்த கொள்ளையையும் போருக்கு மன்னனை ஊக்குவித்த
புலவர்களின் மனப் பாங்கையும், போரைக் கடிந்த புலவர்களின் மனப்பாங்கையுமே
சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன என்றும் இவர்கள் சங்க
இலக்கியங்களுக்குப் புது விளக்கமளித்தனர்.
சங்க
இலக்கியங்கள் யாவும் பெரும்பாலும் மன்னர்களின் வேண்டுகோளின்படி புலவர்
களால் மன்னர்களையும் மன்னர் சார்ந்து வாழ்ந்த உயர் குடியினரையும்
மையப்படுத்தி தொகுக்கப்பட்ட நூல்களாகும். திட்டமிட்டு தொகுக்கப்பட்ட
அத்தொகுப்புகள் விட்டுச் சென்ற தடயங்களை வைத்தே இவ்வாசிரியர்கள் அன்றைய
சமூகத்தினை மீள்கட்டுடைத்தனர். மன்னர் புகழ் பாடிய அவர்களைப் போருக்கு
ஊக்குவித்த அக்கால கட்டத்திலேதான் மன்னனை எதிர்த்துப் பாடிய பாடல்களும்,
போர் களையும் குழுச்சண்டைகளையும் எதிர்த்துப் பாடிய பாடல்களும்
தோன்றியுள்ளன. தொகுக்கப்பட்டுள்ளன. அப்பாடல்களின் மூலம் போரின்
மறுபக்கமும், காதல் வாழ்க்கை யின் மறுபக்கமும் தெரியவரலாயிற்று.
சங்க
இலக்கியத்தில் வரும் தலைவனும், தலைவியும் மையத்தில் இருந்த மக்களே. அக்கால
வாழ்வே உயர்ந்த அகத்திணை (தூய அகம்) என்று கூறப்பட்டது. விளிம்பில்
வாழ்ந்தோரின் காதல் கைக்கிளை, பெருந் திணை என அகத்திணைக்குப் புறம்பாக
(அகப்புறம்) வைக்கப்பட்டது.
தொல்காப்பியர்
அடியோர், வினைவலர் (அடிமைகள், தொழிலாளிகள்) காதலை அகத்திணைக்கு புறம்பாக
வைத்ததை இவர்கள் கூட்டிக்காட்டினர். இவ்வண்ணம் பண்டைய தமிழ் வரலாறும்,
பண்பாடும் நாம் தெரிந்தது போல் அல்லாது முரண்பாடுகளும் வேற்றுமை களும்
கொண்டதாக அமைந்தது என்று இவர்கள் கூறியவற்றை அண்மையில் செய்யப் பட்ட
அகழ்வாராய்வுகளும், கிடைத்த புதை பொருட் சின்னங்களும் உறுதி செய்வனவாகவே
உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் வரலாறும் பண்பாட்டு வரலாறும் தமிழர்களுக்கு இடையே தோன்றிய வர்க்கங்களின் போராகும்
வேட்டையாடி
வாழ்ந்த குறிஞ்சி நில மக்களிடையே பேதங்கள் இருக்கவில்லை. கிடைத்ததை சமமாக
பகிர்ந்து பேதா பேத மின்றி சமத்துவமாக தமிழர் வாழ்ந்தனர். மந்தை மேய்த்து,
விவசாயம் செய்து, வாணிபம் செய்து, அரசமைத்து வளர்ந்த போது சொத்துப்
பெருகியது. அதிகாரம் பெருகியது. விவசாயம் செய்தோர் வேளாளராயினர். அரசமைத்த
அரசர்கள் இவ்வேளாள நிலக் குடியிலிருந்து எழுந்த நிலவுடைமையாளர் களாவர்.
வெளியில் இருந்து தமிழ்நாடு புகுந்து அரசர்களுக்கு ஆலோசகர்களாக மாறிய
பிராமணர்களுக்கும் நிலங்களை மன்னர் கொடுக்க அவர்களும் நிலவுடைமையாளர்
களாயினர். இவ்வண்ணம் நிலவுடைமை வர்க்கம் மையத்தில் தம் ஆட்சியையும்
அதிகாரத்தையும் வைத்துக் கொண்டது.
கடல்
கடந்து வியாபாரம் செய்த வணிகர் பெரும் செல்வமீட்டினர். அரசர்களுக்கு நிகர
வாழ்ந்தனர். அரசர்களுக்கு கடனும் கொடுத்தனர். இதனால் வணிக வர்க்கம் என்ற
பெருவர்க்கம் ஒன்றும் எழுந்தது. மையத்தில் வாழ்ந்த மக்களுக்கு நிகர வணிகர்
வாழ்ந்த னர். மைய நிலவுடைமை வர்க்கமும், வணிக வர்க்கமும் மைய
அதிகாரத்திற்குப் போரிட்ட வர்க்கப் போரே மையத்திலிருந்து கட்டப்பட்ட
வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் அடித்தளம் என இவ்வாய்வாளர் நிறுவனர்.
பேராசிரியர்
கைலாசபதி, சிவத்தம்பி, வானமாமலை ஆகியோரின் ஆய்வுகள் இவற்றில் முக்கியம்
பெறுகின்றன. பல்லவர் காலத்தில் நடைபெற்ற சமயப்போரையும் பக்தி
இலக்கியத்தையும் வரலாற்றுச் சான்று கொண்டும் இலக்கியச் சான்று கொண்டும் அது
நிலவுடைமையாளரான சைவருக்கும் வணிகரான சமணருக்கும் நடந்த போர் என இவர்கள்
நிறுவினர். இப்பெரும்போரில் மையத்தில் வாழ்ந்த நிலவுடைமையாளர் தமக்குச்
சார்பாக அடிநிலை மக்களான திருநாளைப்போவார் (பறையர்) கண்ணப்பர் (வேடர்)
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் (வண்ணார்) திருநீலகண்ட யாழ்ப்பாணர் (பாணர்)
முதலிய அடிநிலைச் சாதியினரையும் சேர்த்துக் கொண்டனர். ஆனால் சமணருக்கு
எதிரான போராட்டம் வெற்றிபெற்று சைவம் தன்னை நிலைநிறுத்தி, பிராமணர்
ஆதரவுடன் பெரும் கோயில்கள் கட்டி சைவசித்தாந்தம் கண்டு பெரும் நிறுவனமாக
உருவாகிய பின் சேர்ந்து போராடிய இவ்வடிநிலை மக்களுக்குக் கோயிலுக்குள் புக
உரிமை மறுக்கப்பட்டது என்ற கொடுமைகளை இவர்கள் சுட்டிக் காட்டினர்.
சமணர்களுக்கு
எதிரான போரில் அனைவரையும் இணைத்த பக்தி இயக்கம் தன் அலுவல் முடிந்ததும்
அடிநிலை மக்களை கைவிட்ட கதையை இவர்கள் வெளிக் கொணர்ந்தனர்.
திருநாளைப்போவாரான பறையரான நந்தனார், தில்லைவெளியில் சிவனுடன் ஒளியில்
கலக்கவில்லை. அந்தணர்கள் திட்டமிட்டு அப்பாவியான அவரை எரித்து ஒளிமயமாக்கி,
ஒளிமயமான இறைவனுடன் கலந்து விட்டார் என்று இவர் களும் ஒரு புது வரலாறு
கட்டினர். (இந்திரா பார்த்தசாரதியின் நந்தன் கதை நாடகம்) சோழ காலத்தில்
உருவான பேரரசும், பெரும் சித்தாந்தமான சைவசித்தாந்தமும் நில உடமையாளரதும்,
பிராமணரதும் வர்க்க நலன்களுக்கு அமையும் விதத்தில் செயல்பட்ட முறைமையை
பேரா.கைலாசபதியின் "பேரரசும் பெரும் தத்துவமும்&ஹல்ர்ள்; என்ற
கட்டுரையும் பேரா. சிவதம்பியின் "சைவ சித்தாந்தம் ஒரு சமூக வரலாற்று
நோக்கு&ஹல்ர்ள்; என்ற கட்டுரையும் விளக்கின.
தமிழர்களின்
பொற்காலம் என்பது முழுத் தமிழர்களினதும் பொற்காலமன்று, மையத்தில் வாழ்ந்த
நிலவுடைமயாளரான தமிழரதும் வைதீகர்களினதும் பொற்காலமேயாகும்.
ஏற்கனவே
இருந்த தகவல்களின்படி சங்க காலமும் சோழர் காலமுமே தமிழ் மக்களின்
பொற்காலம் என்று கட்டமைக்கப்பட்டது. இதனோடு பல்லவ காலத்தையும் இணைக்கும்
வழக்கமுண்டு. இவை ஏன் பொற்காலமென்று கட்டமைக்கப்பட்டதெனில் இக்கால
கட்டத்திலேதான் மையத்தில் வாழ்ந்த நில வுடைமையாளரும் அவருக்கு துணையாக
நின்ற வைதீக மதங்களும் மேலோங்கி நின்ற காலங்களாகும். ஏனைய காலங்களில்
களப்பிரர் காலத்தை "இருண்ட காலம்&ஹல்ர்ள்; எனவும் சோழருக்குப் பின்னர்
தமிழ்நாட்டை இஸ்லாமியரும் தெலுங்கரும் மராத்தியரும் கிறித்தவர்களான மேற்கு
நாட்டவர்களும் ஆண்ட காலத்தை பொற்காலம் அல்லாத காலம் எனவும் முன்னோர்
கட்டமைத்தனர். சமணர் பௌத்தரின் தமிழ்நாட்டு வருகை நிலவுடைûயாளருடன்
போராடிக் கொண்டிருந்த வணிக சமுதாயத்தினருக்குச் சார்பாயிற்று. சமணரின்
வைதீகமத எதிர்ப்பு மையத்தின் பண்பாட்டு விழுமியங்களைக்
கேள்விக்குட்படுத்தின.
அனைவருக்கும் கல்வி (கல்வித் தானம்)
அனைவருக்கும் மருத்துவம் (ஔடத தானம்)
அனைவருக்கும் அடைக்கலம் (அபய தானம்)
அனைவருக்கும் உணவு (அன்னதானம்)
என்பன
சமணரின் கோட்பாடு. சமண மதமும் பௌத்த மதமும் மையத்தைத் தாண்டி இடைநிலையை
ஊடறுத்து விளிம்புநிலை மக்களிடையே வேரூன்றின. அடிநிலை மக்கள் சமூகக்
கொடுமைகளிலிருந்தும் அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை வேண்டினர். தம்மை
மனிதர்களாக மதிக்கும் சமண பௌத்தத்தில் அதிகளவு சேர்ந்தனர். கி.பி. 2-ஆம்
நூற்றாண்டு தொடக்கம் 6-ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர் ஆட்சிக்காலத்தில்
சமணமும் பௌத்தமுமே தமிழகத்தில் பிரதான மதங்களாக இருந்தன.
சமூகத்தில்
ஒதுக்கப்பட்ட தாசிகுல மகளான மாதவியும் மணிமேகலையும் அங்கீகரிக்கப்பட்டனர்.
மணிமேகலை பௌத்த துறவியானாள். அவள் துறவியானதும் அவளைக் குறைத்துப் பார்த்த
மக்களே அவளது காலில் விழுகின்றனர். தம்மை வருத்திய சமூகக் கொடுமைகளினின்று
விடுதலை பெறவிரும்பிய அடிநிலை மக்கள் விடுதலைக்கு வழிகாட்டிய மதங்களின்
பின் செல்லுதல் வியப்பில்லை அல்லவா?
இவ்வண்ணமே
இஸ்லாமியர் வருகையும் அடிநிலை மக்களுக்குச் சார்பாக அமைந்தது. சாதிபேதம்
காட்டாத இஸ்லாமில் பெருந் தொகை அடிநிலை மக்கள் இணைந்தனர். இஸ்லாமிய
அரசர்களின் படைகளில் இவர் களில் இணைக்கப்பட்டனர். ஐரோப்பியர் ஆட்சியிலும்
இதுவே நிலவியது. கிறிஸ்துவ பாதிரிமாரினால் கட்டப்பட்ட பாடசாலை களும்
அறநிலையங்களும் அடிநிலை மக்களின் கல்வி நிலையையும் வாழ்க்கை முறைகளையும்
உயர்த்தின. பல அடிநிலை மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். சமண, இஸ்லாமிய
கிறிஸ்தவ மதங்கள் பெரு வளர்ச்சியுற்ற காலம் ஒரு வகையில் அடிநிலை மக்களின்
பொற் காலமாக இருந்தது. அடிநிலை மக்களின் பொற்காலம் மையத்தில் வாழ்ந்த
உயர்நிலை மக்களுடைய பொற்காலம் ஆகாதுதானே. இவ்வண்ணம் தமிழரின் பொற்காலம்
என்று கட்டமைக்கப்பட்ட கட்டமைப்புகள் ஆராய்ச்சியாளர்களினால் கேள்விக்குட்
படுத்தப்பட்டன.
சமணம், பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற சமயங்களும் தமிழையும் பண்பாட்டையும் பெரிதும் வளர்த்தன.
வரலாற்றுப்
போக்கில் தமிழர்கள் வாழ்வில் பல்வேறு மதங்கள் கலந்திருக்கின்றன. அவை
அம்மக்களின் வாழ்க்கை முறைகளும் சிந்தனைகளும் வளர உதவி புரிந்துள்ளன.
திருக்குறள், நாலடியார், அற ஒழுக்கக் கருத்துக்களும் நீதிநூல்களும்,
தொல்காப்பியம், நன்னூல் முதலான இலக்கணங்களும் சூளாமணி, சீவக சிந்தாமணி
முதலான இலக்கியங்களும் சமணர் தமிழுக்கு அளித்த கொடைகளாகும். ஏக வணக்கக்
கருத்துக்களும் சமத்துவ சிந்தனைகளும் சீறாப்புராணம், இராஜநாயகம் முதலான
காவியங்களும் இஸ்லாம் தமிழர்க்களித்த செல்வங்களாகும். தாராண்மை
வாதக்கருத்துக்களும், முற்போக்கு சிந்தனைகளும் தேம்பாவணி, சதுரகராதி,
ஒப்பிலக்கணம் முதலான இலக்கண இலக்கியங்களும் கிறிஸ்தவர் தமிழர்க்களித்த
செல்வங்களாகும்.
சமத்துவ
சிந்தனைகளையும் அறநெறிச் சிந்தனைகளையும் மணிமேகலை, வீர சோழியம், குண்டலகேசி
முதலான இலக்கிய இலக்கணங்களும் பௌத்தர் தமிழர்க்களித்த செல்வங்களாகும்.
இந்நான்கு மதங்களினதும் வருகை தமிழர் சிந்தனைகளையும் தமிழ் இலக்கியத்தையும்
வளர்த்துள்ளன என்ற கருத்துக்களை மயிலை வேங்கடசாமி, சக்கரவர்த்தி நயினார்,
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் போன்ற தமிழ் அறிஞர்கள் வெளிக் கொணர்ந்தனர்.
சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், இஸ்லாமும் தமிழும், கிறிஸ்தவமும்
தமிழும் என்ற கருத்துருவங்கள் தோன்றின. வைதிகச் சிமிழுக்குள்ளும் சைவ
வேலிக்குள்ளும் இருந்தும் தமிழை மீட்டு அது அனைத்து மதங்களுக்கும் உரியது
என்ற புதிய கருத்துக்கள் கட்டமைக்கப்பட்டன.
சோழர்கால கோயில் அமைப்பு சுரண்டல் தன்மை கொண்டது.
சோழர்கால
மன்னர்கள் கோயில்களைப் பெருமளவு கட்டினார்கள். இராஜராஜசோழன் கட்டிய தஞ்சை
இராஜராஜேஸ்வரம், அவன் மகன் இராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் என்பன
தமிழர் கலை களின் கொடுமுடிச்சின்னங்களாகக் கொள்ளப் பட்டுள்ளன. "கோயில்
இல்லா ஊறில் குடியிருக்க வேண்டாம்&ஹல்ர்ள்; என்ற பழமொழியும் உருவானது.
ஆரம்ப
காலத்தில் கோயில்கள் பெரும் பொருளாதார நலன்கள் அற்றவையாகவும் மக்கள்
அனைவரும் கூடி வழிபடும் இடங் களாகவும் அமைந்திருந்தன. கல்லால் கோயில்
கட்டப்பட்ட பல்லவர் காலத்தில் அவை சில கட்டுப்பாடுகளுடனும்
சித்தாந்தங்களுடனும் வழிபடும் இடங்களாயின. சோழர் காலத்திலோ கோயில் ஒரு
பெரும் நிறுவனமாகிவிட்டது.
கோயிலுக்கு மூன்று வகைகளில் நிலங்கள் கிடைத்தன.
1. ஏற்கனவே கோயிலுக்கு இருந்த நிலங்கள்.
2. அரசர்களாலும் குடும்பத்தினராலும் அன்பளிப்பு செய்யப்பட்ட நிலங்கள்.
3.
சிறிய நிலப்பரப்பு வைத்திருந்த விவசாயி களுக்கு கடன் கொடுத்து அக்கடனை
விளைச்சலின்மையால் கட்டத்தவறிய விவசாயிகளிடமிருந்து பறித்தெடுத்த நிலங்கள்.
(இத்தகைய
விவசாயிகளை கோயில் அடிமைகளாக்கி சூலக் குறிசுட்டு கோயில் அடிமைகளாக
வைத்துக் கொண்டதுடன் கோயில் தனது நிலங்களில் வேலை செய்யவும் வைத்தது.)
இவ்வண்ணம்
கோயிலில் உள்ள இறைவனின் பெயரால் நிலங்களையும் அடிமை களையும் மேலும் மேலும்
சேர்த்துக் கோயில் பெரும் நிலவுடமை நிறுவனமாகியது.
கோயிலுக்கு
அளிக்கப்பட்ட நிலங்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களில் "தேவ
தானம்&ஹல்ர்ள்; என்று அழைக்கப்பட்டன. அவற்றை நிர்வகிக்கும் உரிமை
கோயிற் சபையாரிடம் இருந்தது. இவர்கள் பெரும்பாலும் தமக்கென நிலமுடைய
நிலவுடமையாளர்களே. அதாவது மையத்தில் வாழ்ந்தவர்களே.
இவ்வகையில்
சோழர் ஆட்சியில் கோயிலில் ஒரு பெரு நிறுவனமாகிவிட்டது. பெரும் நிலப்
பரப்புகள் கொண்ட நிலவுடமை நிறுவனமாக, மக்களுக்கு கடன் கொடுக்கும் வங்கியாக,
சோழர்கால நிலவுடமைப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் நிலவுடமை அமைப்பாக
தன்னகத்தே பெரும் பொற்குகைகளைக் கொண்ட தங்க பொன் சுரங்கமாக நடனம்,
சங்கீதம், சிற்பம், ஓவியம் சார்ந்த நளின கலை களை வளர்க்கும் கலைக்கூடமாக
சுருங்கச் சொன்னால் சர்வ வல்லமை உள்ள அதிகாரம் கொண்ட நிறுவனமாக விளங்கியது.
இக் கலைஞர்கள் யாவும் மையத்தில் வாழ்ந்த அரசர்களையும் நிலப்பிரபுக்களையுமே
மகிழ்ச்சியுற செய்தன. கோயிலுக்கு வெளியே நின்ற அடிமட்ட மக்களுக்கு
இம்மகிழ்ச்சி கிடைக்கவில்லை.
இத்தகைய
கோயில்கள் அதிகாரம் மிகுந்த அரசனைக்கூட கட்டுப்படுத்தும் சக்திமிக்க
நிலையங்களாக இருந்துள்ளன. இவ்வாறு இவை அரசியல் மையங்களாக உருப்பெற்றன.
கோயிலின் சுரண்டலுக்கு எதிராக எழுந்த சுரண்டப்பட்ட மக்களின் போராட்டங்கள்
இச்சுரண்டல்
முறைகளை மக்கள் எப்போதும் சகித்துக் கொண்டிருந்தார்கள் என்று கூற
முடியாது. வாழ்க்கை துயரங்கள் அவர்களை ஒன்றுபடுத்தின. கொடுமை அளவு
மீறும்போது அவர்கள் போராடினர். சில அபூர்வ கல்வெட்டுகள் இப்போராட்டம் பற்றி
கூறுகின்றன.
தஞ்சாவூரில்
புஞ்சைக் கிராம கல்வெட்டு ஒன்றில், தங்களுக்கு ஜீவிதமான நிலத்தை கோயில்
சபையார் கைப்பற்றிய அநீதியை அக்கோயிலின் பணியாட்கள் முறையிட்டும்
நீதிகிடைக்காத போது அவர்கள் அக்கோயிலின் முன் தீ வளர்த்து தீயிலிறங்கி
உயிர்தியாகம் செய்தமை கூறப்பட்டுள்ளது.
இதேபோல்
தங்கள் உரிமையை நிலை நாட்ட உழைக்கும் மக்கள் வீரமாக உயிர்நீத்த செய்திகள்
கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன. மக்கள் ஆதரவைத் திரட்டவும் மன்னன்
கவனத்தை ஈர்க்கவும் கோயிற் சபையாரின் அநீதியை அம்பலப்படுத்தவும்
ஊர்க்கோபுரத்தின் மேல் ஏறி கீழே விழுந்து உயிர் நீத்த செய்திகள் சில கோயில்
சாசனங் களில் இருந்து தெரியவருகின்றன.
கோயில்களிலே ஆடல் பாடல் நிகழ்ந்த தேவரடியாள்கள் நியமிக்கப்பட்டனர். இரண்டு வகை தேவரடியார்கள் கோயிலுக்கு இருந்தன.
ஒருவகையினர்,
அரசக்குடும்பத்தை சேர்ந்த வர்களும் வணிக குடும்பத்தை சேர்ந்தவர்களும்
தம்மிடமுள்ள பெரும் செல்வத்தை கோயிலுக்கு கொடுத்து தேவரடியாள்கள் ஆகிய
செல்வாக்கு மிக்க பணக்கார தேவரடியாள்கள்.
மற்றவகையினர்
பஞ்சம், வெள்ளம் காலத்தில் நிலம் இல்லாதவர்கள் தங்களுடைய பெண்களைக்
கோயிலுக்கு விற்றுவிடுவார்கள். அவ்வண்ணம் வரும் ஏழைத்தேவரடியாள்கள்.
அப்பெண்களுக்குக் கோயில் நிர்வாகம் சிறிது நிலம் கொடுக்கும். அந்நிலத்தை
வைத்து அப்பெண்ணின் குடும்பம் வாழும். ஆனால் குடும்பம் அதிகரிக்க
அந்நிலத்திற்கு வட்டி கட்ட முடியாத நிலை வர அந்நிலத்தை கோயில்
பறித்துக்கொள்ளும். இவ்வண்ணம் அக்குடும்பம் பெண்ணையும் நிலத்தையும்
இழக்கும். இது ஒரு மறைமுக சுரண்டல் ஆகும்.
இரண்டாம்
நிலை தேவரடியாள்கள் ஒன்று திரண்டு தமது நிலப் பறிப்புக்கு எதிராக
போராட்டம் நடத்தி உள்ளனர். சதுரி மாணிக்கம் என்ற தேவரடியாள் இவ்வண்ணம்
அடிமையாக வந்த இரண்டாம் நிலைத் தேவரடியாள். இவள் தமது உரிமையை நிலை நாட்ட
கோபுரத்தின் மேல் ஏறி விழுந்து உயிர் விட்டாள் என்ற கல்வெட்டு உண்டு.
(இதனால் அக்கட்டளையை மாற்ற அரசன் விடுத்த கல்வெட்டில் இதிலுள்ளது.)
சில
சமயங்களில் ஆட்சியின் அநீதியையும் நிலவுடமையின் கொடுமையையும் தாங்க
முடியாத மக்கள் ஆயுதம் தாங்கி போராடியும் இருக்கிறார்கள். நிலங்களை
இப்படித்தான் பங்கிட வேண்டும், கோயிலுக்கு இன்ன இன்ன உரிமைகள் இருக்கின்றன
என்று கோயிற் சுவர்களில் எழுதப்பட்ட கல்வெட்டுக்களை இடித்து
அழித்திருக்கிறார்கள்.
காலங்களால்
இத்தகைய கல்வெட்டுக்கள் அழிந்துவிட்டதை குறிப்பிட்டுப் புதிய
பத்திரங்களையும் கல்வெட்டுக்களையும் உண்டாக்கும்படி அரசன் பொறித்த
சாசனங்கள் மூலம் இதனை உணர்கிறோம்.
இவ்வண்ணம்
தம்மை அடக்கிய, தம்மை சுரண்டிய மைய நிறுவனமாக கோயிற் கொடுமைகளுக்கு எதிராக
மையத்திலும் இடையிலும் வாழ்ந்த சிறு நிலம் வைத்திருந்த ஏழைகளும்
அடக்கப்பட்டோரும் போராடி உள்ளனர்.
அரசின் தன்மைகள்
தமிழ்
நாட்டு அரசர்கள் சர்வ வல்லமை கொண்டவர்களாகவும், தெய்வீக உரிமை
பெற்றவர்களுமாகவே நமக்கு தெரிந்திருந்த னர். குலோத்துங்க சோழனை திருமாலின்
அவதாரமாகவே ஜெயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் கூறுகிறார். கடவுளின்
பிரதிநிதியாகவே அரசன் ஆள்கிறான் என்பதனைக் காட்டும் வகையில் இராஜ
ராஜசோழனுக்கு சிவபெருமான் முடிசூட்டும் சிற்பம் ஒன்று வடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடவுள் பிரதிநிதியான அரசனின் மறுபக்கம் நமக்குத் தெரியாத ஒன்று.
இராஜராஜசோழனும்,
ராஜேந்திர சோழர் களும் கடல் கடந்து படை எடுத்தனர். பிறநாட்டுச்
செல்வங்களைத் தம் நாட்டுக்கு கொண்டு வந்தனர். தோற்றவர்களையும் அவர்கள்
நாட்டுப் பெண்களையும் தம் நாட்டுக்கு அடிமைகளாகக் கொணர்ந்தனர். போரிலே
பிறநாட்டவரைக் கொலை செய்த னர். எதிரிகள் நாட்டை கொள்ளையிட்டனர். ஆவும்,
பார்ப்பனரும், அறவோரும் பெண் களும் சென்று விடுங்கள் என்று அறமுரைத்துப்
போர் தொடங்கினாலும் போரிலே அற விதிகள் மீறப்பட்டன.
பிறநாட்டுப்
படை எடுப்புக்களால் கவர்ந்த பணம், உள்நாட்டு வரிகளால் பெற்ற பணம்,
பாரம்பரியச் செல்வம் பிற மன்னர்களின் திறை, உள்ளூர்ப் பணக்காரர்களின்
அன்பளிப்பு என மன்னனுக்குப் பல வழி களாலும் பெரும் செல்வம் கிடைத்தது.
மிகப் பெரும் நிலவுடமையாளனாகவும், செல்வ னாகவும் மன்னன் இருந்தான்.
நாட்டைக் காப்பதற்காகவே வரி என்ற பெயரில் மக்கள் மன்னனால் சுரண்டப்பட்டனர்.
நாலு
வர்ணப் பாகுபாடு சமூக அமைப்பின் நீதியாக இருந்தது. மனுதர்மம் அதுவே எனக்
கூறப்பட்டது. பிராமணர் மிக உயர்ந்தோர், அரசர் (ஷத்திரியர்) இரண்டாமவர்,
வணிகர் (வைசியர்) மூன்றாமவர், சூத்திரர் (உழைப் பாளிகள்) நான்காம்
நிலையினர் என தர்மம் வகுப்பட்டது.
சட்டத்திலும்
தண்டனை முறைகள் சாதிக்குச் சாதி வேறுபட்டன. பிராமணருக்கு மரண தண்டனையில்லை
என்ற சட்டமே இருந்தது. சாதி முறைமைகள் மீறுவோர் மிகவும்
தண்டிக்கப்பட்டனர்.
பிராமணரும்
சத்திரியரும், வைசியரும் சூத்திரரும் மையத்திலும் இடையிலும் வாழ்ந்தனர்.
மையத்தில் வாழ்ந்த சூத்திரர் எனப்படுவோர் உழைப்பாளி உயர் வகுப்பினராவர்.
இவர்களுள்
அடங்காத பஞ்சமர் (அடி நிலை மக்கள்) ஊருக்கு வெளியே வைக்கப் பட்டனர்.
நால்வகை வருணத்துக்குள்ளும் இவர்கள் அடங்கவில்லை. (பத்து அவதாரங்கள்
எடுத்த, பன்றி அவதாரம் கூட எடுத்த கிருஷ்ணன் ஒரு பஞ்சம அவதாரம்
எடுக்கவில்லை என்பது கவனத்திற் கொள்ள வேண்டியது.) இதுவே சமூக நீதியாக அன்று
உரைக்கப்பட்டது. இச்சமூக நீதியை நிலை நிறுத்துவனவாக அரசன் இருந்தான்.
இவ்வரசர்கள் யுக புருஷர்கள், அவதாரங்கள் என்று வேறு அழைக்கப்பட்டனர்.
ராஜராஜசோழன்
தமிழ் வளர்த்ததைவிட சமஸ்கிருதத்தையே அதிகம் வளர்த்திருக் கிறான் போலத்
தெரிகிறது. பிரமதேயம் என்ற பெயரில் பிராமணர்கட்கு நிலங்கள் கொடுக்கப்
பட்டன. அவை சதுர் வேதிமங்கலம் என்றழைக்கப்பட்டன. வேதப் பாடசாலைகள்
நிறுவப்பட்டன. சமஸ்கிருதம் அரச மொழி யாக அமைந்தது. இவ்வகையில் தமிழை விட
சமஸ்கிருதத்தையே அம்மன்னன் அதிகம் வளர்த்தான்.
மிக அதிகமாக மன்னர்கள் கோயில் கட்டி னார்கள். பெரும் கோயில்களை மன்னர்கள் கட்டியமைக்கு இரண்டு காரணங்கள் கூறப் படுகின்றன.
ஒன்று
சமூக அமைப்பைக் கட்டிக் காக்கும் நிறுவனமாக, ஒரு படையின் வேலையை கலாசாரம்
என்ற போர்வையில் கோயில் செய்தது. அது ஒரு வகைப் பண்பாட்டு அடக்குமுறை.
படையின் வேலையின் ஒரு பகுதியைக் கோயில் செய்தமையினால் படைக்கு ஒதுக்கும்
பெரும் பணத்தின் ஒரு பகுதியைக் கோயில் கட்ட ஒதுக்குதல் அரசனுக்கு அவசியமாக
இருந்தது.
மற்றது படை
எடுப்பில் செய்த படுகொலைக்குப் பிராயசித்தம் கோயில் கட்டி இறைவனைக்
குடியிருத்தி அவர் தொண்டுகள் செய்தலேயாகும். இவ்வண்ணம் செய்தால் மக்களைக்
கொலை செய்த பிரமஹத்தி மன்னனுக்கு வராது என பிராமணர் செய்த போதனைகளை கேட்டு
பெரும் கோயில்களை மன்னன் கட்டினான்.
சோழர் காலப் பொருளாதார அமைப்பின் சுரண்டல்முறை
சோழர்
காலத்தில் நிலமே பிரதான உற்பத்தி கருவியாக இருந்தது. சோழர் காலத்தில்
நிலவுடமை முறையில் நான்கு வகையான நிலவுடமை முறைகள் இருந்தன.
1. வெள்ளான் வகை - இது சொந்த நிலம், உழுவித்து உண்ணும் நிலக்கிழாருக்குரியது.
2. தேவதானம் - இவை கோயில்களுக்கு உடைமையாக இருந்தன. சபையார் இதற்குப் பொறுப்பு.
3. பிரமதேயம் - பிராமணருக்கு உடை மையான நிலங்கள்.
4. ஜீவிதம்- கோயில் பணி செய்வாருக்கு உரித்தான நிலங்கள்.
இந்த
நிலங்கள் ஏதும் இல்லாமல் வசதியற்ற மையத்திற்குத் தூரமான இடங்களில் வாழ்ந்த
தீண்டத்தகாத மக்கள் வாழ்ந்த இடங்களும் இருந்தன. அவை எந்தவித பயனுமற்ற
விளைச்சல் அற்ற நிலங்களாகும்.
சோழர்
காலத்தில் நிலவுடமை முறைகளில் பல மாற்றங்கள் செய்தனர். வெள்ளான் வகையில்
சிறு நிலச் சொந்தக்காரர்களின் உடைமைகளைப் பறித்து கோயில் தேவதானமாக
மாற்றினர்.
சிலவற்றை
பிராமணருக்குரிய பிரமதேய மாக்கினார்கள். இவ்வண்ணம் கோயில் நிர்வாகத்தில்
ஆதிக்கம் செலுத்திய மேல் வர்க்கத்திற்கே நில உரிமை மாற்றப்பட்டது. இதனால்
உழுவித்து உண்போர் சுகமாக வாழ உழுதுண்டோர் நிலை மேலும் மேலும் தாழ்ந்தது.
அடிமை முறைகள் தமிழர் மத்தியில் இருந்தனர்
தமிழர் மத்தியில் சங்க காலத்திலிருந்து ஆங்கிலேயர் காலம் வரை அடிமை முறைகள் இருந்துள்ளன. இவ்வடிமைகளைப் பின் வருமாறு பிரிக்கலாம்.
1. போரினால் கொண்டுவரப்பட்ட போர் அடிமைகள்
2. வீட்டடிமைகள்
3. கோயில் அடிமைகள்
4. மட அடிமைகள்
அந்தணர்களும் அரசர்களும் வேளாளர் களும், அரச
அதிகாரிகளும் கோயில்களுக்கும், மடங் களுக்கும் அடிமைகளாகத் தாமாகவோ
விலைக்கோ கொடுத்த செய்திகளைக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. ஒரு
குறிப்பிட்ட தேவைக்கு மேல் அடிமைகள் தேவையில்லை என்ற நிலையில் இதனைச்
செய்திருக்கலாம்.
இவ்வடிமைகளுக்கு
கைகளில் பாதங்களில் இலச்சினை பொறிக்கப்பட்டன. (ஆடு மாடுகளுக்கு
குறியிடுவதுபோல) வழியடிமை, என்ற சொற்றொடர் பரம்பரையாக அடிமை களை வைக்கும்
வழக்கத்தைக் காட்டுகிறது.
இவ்வடிமைகள் அனைவரும் தமிழர்களே. இங்கு தமிழரே தமிழரை அடிமைகளாக வைத்திருந்த ஒரு பண்பாட்டினை நாம் அறிந்துகொள்கிறோம்.
மையத்திற்குள்ளும் முரண்பாடு
மையத்திற்குள்
அதிகாரத்திலும் சமூக மேலடுக்கிலும் இருந்த வர்க்கங்களுக்கிடையே
போராட்டங்களும், மோதல்களும் நடை பெற்றுள்ளன. எனினும் அடி நிலைமக்களைச்
சுரண்டுவதில் மைய வர்க்கங்கள் தமக்குள் சமரசமும் செய்து கொண்டன. மையத்தில்
வாழ்ந்த அரசருக்கும் வணிகருக்கும் நடை பெற்ற முரண்பாட்டையே சிலப்பதிகாரம்
காட்டுகிறது. அரச வணிக முரணில் அங்கு வணிகர் வெல்கின்றனர். பல்லவர்
காலத்தில் நடைபெற்ற நிலவுடமையாளரான சைவர், சமணரான வணிகர் முரண்பாட்டில்
வணிகர் அழித்தொழிக்கப் படுகின்றனர். (18000 சமணர் கழுவேற்றப்பட்டதாக
வரலாறு) சைவ மதத்திற்கும் வைணவத்திற்கும் நடைபெற்ற முரண்பாடுகூட மையத்தில்
வாழ்ந்த இரண்டு வித நிலவுடமை வர்க்கங்கிடையே நடந்த போரே என்று பலர்
விளக்கியுள்ளனர். (சமூக அமைப்பை இறுக்கமாகப் பேணியது, சைவம், சமூக
அமைப்பைச் சற்று நெகிழ்ந்துப் பார்த்தது வைணவம்)
இவ்வாறு நமக்குத் தெரியாத தகவல்கள் பல வரலாற்றிலும் பண்பாட்டிலும் உள்ளன. இவை யாவும் மையம் சார்ந்தவைதாம்.
எனினும்
மையத்தை விட்டு இடையிலும் வெகுதூரம் விளிம்பிலும் தமிழர் வாழ்ந்தனர்.
இடையில் வாழ்ந்தவர்கள் மையத்தோடு தொடர்புடைய ஆனால் மையத்தை விட்டுத் தள்ளி
வைக்கப்பட்ட கைவினைஞர்கள், சிறு நிலவுடமையாளர் இடைப்பட்ட சாதிகள் ஆவர்.
விளிம்பில் வாழ்ந்தோர் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆவர். பாணன், பறையன், துடியன்,
கடம்பன் என நான்கு பெரும் குடிகளாகப் பெருமையுடன் சங்ககாலத்தில் வாழ்ந்த
இந்நான்கு குடிகளும் காலப்போக்கில் விளிம்பு நிலை
மக்களாக்கப்பட்டுவிட்டனர். அவர் களைப் பற்றி நமக்கு அடியோடு தெரிவதில்லை.
மையத்துக்கு வெளியே காணப்பட்ட தமிழ்ப் பண்பாடு
மையத்துக்கு
வெளியே இடையிலும் விளிம்பிலும் தமிழ் மக்கள் மிகப் பெரும் பான்மையினர்
வாழ்ந்தனர். அவர்கள் தமக்கென தனிப்பண்பாடுகளுடன் வாழ்ந்த னர். அவர்களின் மத
அனுஷ்டானங்கள், வழி பாட்டு முறைகள், இலக்கியங்கள், மொழி, வாழ்க்கை முறைகள்
என்பன மையத்தைவிட வேறாக இருந்தன.
மைத்திலிருந்தோர்
சிவன், திருமால், முருகன், பிள்ளையார், சக்தி என்று ஆகம மயப்பட்ட பிராமணர்
பூசை புரியும் பெரும் தெய்வங்களை வணங்க, இவ்விடை நிலை மக்களோ பெரும்
தெய்வங்களுடன் காளி, மாரியம்மன் திரௌபதி முதலாம் பல்வேறு வகையான பெண்
தெய்வங்களையும், வைரவர், மதுரை வீரன் முதலாம் ஆகம முறைசாராத பூசாரிமார்
பூசை புரியும் சிறு தெய்வங்களை வணங்கினர். வருடம் தோறும் இத்தெய்வ
விழாக்கள் மையத்தில் வாழ்ந்த கோயில் திருவிழாக்கள் போல அல்லாமல்
தீப்பாய்தல், பள்ளயம் கொடுத்தல், பலி கொடுத்தல், கும்பம் சொரிதல், மடை என்ற
வித்தியாசமான வழிபாட்டு முறைகளைக் கொண்டதாயிருந்தன.
இத்தெய்வங்களை
வழிபட அவர்கள் தேவாரம் அல்லாத அம்மன் அகவல், சிறு காவியம், தாலாட்டு,
சிந்து என்ற பாடல்களைப் பாடினர். பாடல்களுக்கும் ஆடல்களுக்கும் இசைவாக
உடுக்கு, பறை என்பன அடித்தனர்.
உடுக்கு
அடித்து, சிலம்பொலித்து பறைதட்டி மாரி, காளி, முதலாம் தெய்வங்களை மனிதரில்
வரவழைத்து அத்தெய்வங்களுடன் தரகர்களின்றித் தாமே பேசி தம் தெய்வ வழி
பாடுகளை இவர்கள் நிகழ்த்தினர். சாமி யாடுதல், தெய்வமாடுதல், கலையாடுதல்,
பேயாடுதல் என்று இவை அழைக்கப்பட்டன.
தெருக்கூத்து, ஒயிலாட்டம்
தமிழ்நாட்டில்
வட ஆர்க்காட்டில் பல கிராமங்களில் வருடம்தோறும் 18 நாட்கள் நடைபெறும்
பிராமணர் இடம்பெறாத திரௌபதை அம்மன் கோயிற் சடங்குகளையும் அங்கு நடைபெறும்
பாரதப்படிப்பு, சடங்கு சார் நாடகங்கள் சடங்குகளில் நாடகங்கள் சடங்குகளில்
மக்கள் பங்கு கொள்ளும் தன்மைகள் யாவற்றையும் அல்பஹில்பைற்றல் தனது ஈன்ப்ற்
ர்ச் பட்ண்ழ்ஹன்ல்ஹற்ட்ண் (திரௌபதி வழிபாடு பாகம் ஒ,ஒஒ) எனும் நூல்களில்
விபரமாகக் கூறி யுள்ளார். இதுபோன்ற வழிபாடுகள் இடை நிலை மக்களிடையே
தமிழ்நாட்டின் பல பாகங்களிலுமுண்டு. ஊருக்கு ஊர் தெய்வம் வேறுபடும்.
இடைநிலையில்
வாழ்ந்த இப்பெரும் பான்மைத் தமிழ் மக்களின் உடை, வீடு, வாழ்க்கைமுறை,
விளையாட்டுக்கள், பொழுது போக்குகள், நம்பிக்கைகள், எழுதப்பட்ட இலக்கியங்கள்
(இதனை நாம் வாய்மொழிக்கும் செந்நெறி இலக்கியங்களுக்கும் இடைப்பட்ட
இலக்கியங்கள் எனலாம். புகழேந்திப் புலவர் பாடிய அல்லியரசாணிமாலை,
நல்லதங்காள் கதை என்பனவும் மாரி அம்மன் தாலாட்டு, மாரி அம்மன் காவியம்
என்பன இதற்குள் அடங்கும். இதனை ஆங்கிலத்தில் ர்ழ்ஹற்ன்ழ்ங் என்பர்.
ர்ழ்ஹற்ன்ழ்ங் என்பது ர்ழ்ஹப் என்ற வாய் மொழிப் பண்பும்
ப்ண்ற்ங்ழ்ஹற்ன்ழ்ங் என்ற எழுத்துப் பண்பும் கொண்ட இலக்கியங்களாகும்.
இதனையே நாம் வாய்மொழி இலக்கியம் என்கிறோம், என்பவற்றுடன் அவர்களிடம்
கூத்தும் பாட்டும் இருந்தன. தெருக்கூத்து, தேவராட்டம், ஒயிலாட்டம், கும்மி,
கோலாட்டம் என அவை விரியும்.
இவர்கள்
பேசியது பேச்சுமொழி. அது கொடுந்தமிழ் என அழைக்கப்பட்டது. மைய மக்களைவிட
வேறானது. இவர்களின் பண்பாடு மைய மக்களைவிட வேறானதாக இருந்தன. இதனை நாம்
தமிழர் பண்பாட்டின் மறுபகுதி என்று குறிப்பிடலாம்.
மையத்துக்கு வெளியே காணப்பட்ட அடிநிலைத் தமிழ்ப் பண்பாடு
இடைநிலைக்கு
அப்பால் விளிம்பு நிலை யில் வாழ்ந்த அடித்தள மக்களிடமும் இடை நிலை
மக்களிடமும் காணப்பட்ட மாரியம்மன், காளியம்மன் வழிபாடு இருப்பினும் இவர்கள்
தம் குலத்தலைவர்களையும், முன்னோர் வழிபட்ட தெய்வங்களையும், ஆவிகளையும்
வணங்கினர். (இது பண்டைய தமிழர் வணக்க முறையின் எச்ச சொச்சம்)
இவர்களிடம்
இடைநிலை மக்களிடம் காணப்பட்ட எழுதப்பட்ட () இருக்கவில்லை. எழுத்து
அவர்களிடம் இன்மையால் வாய் மொழியாக மாத்திரமே அவற்றை வைத் திருந்தனர்.
வாய்மொழியாகவே அவர்கள் தம் தலைமுறைக்கு அதனைக் கடத்தினர்.
அவர்களது
வாழ்க்கைமுறை, பொழுது போக்கு, விளையாட்டுகள், நம்பிக்கைகள் வீடு
கட்டும்முறை என்பன இன்னும் வேறாக இருந்தன. அவர்களும் தம்மளவில் தனித்தவ மான
பண்பாடுகளைக் கொண்டிருந்தனர். இவர்களது பண்பாட்டின் ஊற்றுக் கண்களை ஆரியப்
பண்பாடும், பிராமணியப் பண்பாடும் சற்றும் கலக்காத மிகப் புராதன தமிழர்
பண்பாட்டுடன் இன்றைய மானிடவியலார் இனம் காணுகின்றனர். இம்மக்கள் தம்மை
இன்று தலித்துகள் என்ற மாத்திரமல்ல ஆதிதிராவிடர் என்றும் அழைத்துக்
கொள்கின்றனர்.
மிகப்
பெரும்பான்மையாகத் தமிழர்களாக இடைநிலை, விளிம்புநிலைத் தமிழரின் பண்பாடுகள்
தமிழ்ப் பண்பாட்டின் பிரதான வட்டத்துக்குள் கொண்டு வரப்படுவதில்லை.
இப்பண்பாடுகள் நமக்குப் பெரிதாகத் தெரியப்படுத்தப்படுவதில்லை. இவற்றுள் சில பண்பாட்டு அம்சங்கள் நமக்கு அடியோடு தெரியாதவை.
அடியோடு
தெரியாத பெரும்பான்மைத் தமிழ் மக்களின் வரலாற்றையும், பண் பாட்டையும்
அறிந்துகொள்ள இன்று புதிய ஆய்வு முறைகளும் அறிவு முறைகளும் தோன்றியுள்ளன.
இப்புதிய சிந்தனைகள் நமக்குத் தெரியாதவற்றை மேலும் மேலும் தெரிந்துகொள்ள
புதிய வழிகளை தந்துள்ளன.
கட்டுரையாளர்
பேராசிரியர். மௌனகுரு இலங்கையின் மிகச்சிறந்த நாடகவியலர்; ஆய்வாளர்.
தமிழரின் நுண்கலை மற்றும் வரலாற்றை பற்றி பல நூல்களை எழுதியவர்