Thursday, December 6, 2012

அரசியலில் ஒரு மனிதன்!-இந்தர் குமார் குஜ்ரால்


http://www.vikatan.com/jv/2012/12/zmziyt/images/p35.jpg
ந்தர் குமார் குஜ்ரால் இறந்துபோனது, இன்றைய இந்தியாவுக்கு தலைப்புச் செய்தியாகக்கூட இடம்பெறவில்லை. இதுவரை இருந்த பிரதமர்களில் அவரும் ஒருவர் என்ற பட்டியலில் க்விஸ் கேள்விகளில் மட்டும்தான் இடம் பிடித்தார். ஆனால், தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள எத்தகைய கீழான காரியத்தையும் செய்யலாம் என்பதே விதியாகிவிட்ட இன்றைய அரசியல் உலகத்துக்கு, இந்தர் குமார் குஜ்ரால் போன்ற ஒருவரின் மறைவு... மாபெரும் ஏக்கப் பெருமூச்சைக் கிளப்புகிறது.

குஜ்ரால் என்பது அவரது பெயர் அல்ல. அவர் பிறந்த கிராமத்தின் பெயர். அது இந்தியாவில் இல்லை. பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் இருக்கிறது. ஆனால் குஜ்ரால், அப்பழுக்கற்ற இந்தியனாகவே இருந்தார். அவரது பூர்வீகம், காங்கிரஸ் கட்சி அல்ல. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்தவர். ஆனால், 35 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சிக்காகவே வாழ்ந்தவர்.
நல்லவர், நாணயஸ்தர் என்பதற்காக, அவருக்குப் பதவிகளைக் கொடுத்தனர். அதைத் தக்க​வைத்துக் ​கொள்வதற்காக யாரோடும் சமரசம் செய்து கொள்ளவே இல்லை அவர். அப்படி செய்திருந்​தால், இந்திரா காந்திக்கு அடுத்த இடத்தை அவர் தக்கவைத்துக் கொண்டு, காங்கிரஸிலேயே தொடர்ந்து இருக்கலாம். காங்கிரஸ் கட்சி ஒரு தலையாட்டிப் பிரதமரைத் தேடிக்கொண்டு இருந்த 1997-ல், குஜ்ரால் பதவியைப் பிடித்தார். ஆனால், அவர் தலையாட்டிப் பிரதமராக செயல்பட்டு இருந்தால், 11 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்தவர் என்ற நிலை வந்திருக்காது. காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியின் பூசாரியாக இருக்கச் சம்மதிக்காமல், ராஜினாமா செய்தவர் குஜ்ரால். அவரது மரணம் இந்தக் குணாம்சத்தின் வெற்றிடத்தையே நினைவுபடுத்துகின்றன.
பிரதமர் இந்திராவுக்கு மிகப்பெரிய களங்கம் 1975-ம் ஆண்டு காலத்து அவசரநிலைப் பிரகடனம். இந்திராவுக்கு எதிராக யாரும் எதுவும் எழுதக் கூடாது என்று பத்திரிகைகள் அனைத்தும் மௌனிக்கச் செய்யப்பட்டன. இந்த நேரத்தில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறையின் அமைச்சராக இருந்தவர் இந்தர் குமார் குஜ்ரால். மேலோட்டமாகப் பார்த்தால் இத்தனை காரியங்களையும் அவர்தான் செய்தார் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள் இருந்துகொண்டே, இந்திராவுக்குப் பக்கத்தில் இருந்தபடியே எமர்ஜென்சி நடவடிக்கை​களுக்கு எதிராகச் சண்டை போட்டவர் குஜ்ரால். அமைதியானவர், அதிர்ந்து பேசாதவர் என்று பெயர் எடுத்த குஜ்ரால், அன்றைய 'கிரேட் டிக்டேட்டர்’ சஞ்சய் காந்தியை எதிர்த்து சரிக்குச் சரி நின்றார். எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதற்கு அடுத்த நாள், குஜ்ராலை வீட்டுக்கு வரச்சொன்னார் சஞ்சய். 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததாகச் சொல்லி அவர் கோபப்பட, 'நீங்கள் என் மகன் வயது. நான் உங்கள் அம்மாவுடன் அரசியல் நடத்துபவன். உங்கள் அப்பாவின் நண்பராக இருந்தவன். மரியாதையாக நடத்துங்கள்’ என்று சொல்லி விட்டு வந்தார். அந்தக் காலகட்டத்தில் வெளியாகும் செய்தி புல்லட்டின்​களை சஞ்சய் காந்திக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு துறையின் அமைச்சர் சொன்ன​போது, மறுத்தார். அதன்பிறகு, பிரதமர் இந்திராவுடன் நேரடி மோதல் ஏற்பட்டது. அவர் சொன்னதை ஏற்க குஜ்ரால் மறுக்கவே, 'நீங்கள் விலகி விடுங்கள். எனக்கு வேண்டிய​வரை வைத்து இந்தத் துறையைக் கவனித்துக் கொள்கிறேன்’ என்று இந்திரா இவரைத் திருப்பி அனுப்பினார். வேறு துறைக்குத்தான் அவரை மாற்ற முதலில் இந்திரா நினைத்தார். பிறகு ரஷ்யத் தூதராக... கிட்டத்தட்ட மாஸ்கோவுக்கு நாடு கடத்தினார்.
அன்று அமைதியாக இருந்திருந்தால், இன்று மன்மோகன் சிங் இடத்தை நிரப்பி இருக்கலாம். இந்தப் பஞ்சாபிக்கு பதிலாக அந்தப் பஞ்சாபி இருந்திருக்​க​லாம். ஆனால், குஜ்ராலுக்கு மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. எமர்ஜென்சியை எதிர்த்துக் கிளம்பிய ஜனதாவில் தன்னை இணைத்துக்கொண்டார். 96-க்குப் பிறகு ஏற்பட்ட தொங்கு நாடாளுமன்றத்தில் குஜ்ராலும் 11 மாதங்கள் பிரதமர் ஆகும் பாக்கியம் கிடைத்தது.
ஒரு பக்கம் சீதாராம் கேசரி தலைமையிலான காங்கிரஸ், இன்னொரு பக்கம் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் தலைமை​யிலான இடதுசாரிகள், முலாயம், லல்லுபோன்ற இந்தி மாநிலத் தலைவர்கள், கருணாநிதியும் மூப்பனாரும் சந்திரபாபு நாயுடுவுமான தென்னகத் தலைவர்கள்... என, ஏக இந்தியாவும் சேர்ந்து குஜ்ராலை பிரதமராக முன்மொழிந்தது. அந்த அளவுக்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவராக இருந்தார். இதில் சிக்கலை உண்டாக்கியது ஜெயின் கமிஷன். ராஜீவ் கொலை வழக்கில் உள்ள சதிச் செயல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட இந்தக் கமிஷன், தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, 'இந்தக் கொலையில் தி.மு.க-வுக்குத் தொடர்பு இருக்கிறது. விடுதலைப்புலிகளை தமிழர்கள் ஆதரித்ததால், அவர்களுக்கும் கொலையில் பங்கு இருக்​கிறது’ என்று பெரிய காமெடி நடத்தியது. சொந்த வாழ்க்கையில் எந்தச் சாதனையும் செய்ய முடியாத சீதாராம் கேசரிக்கு, இந்த அறிக்கை கிடைத்தது. 'தி.மு.க-வை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்’ என்று குஜ்ராலைக் கட்டாயப்படுத்தினார். 'இதைவிடப் பெரிய அபத்தம் எதுவும் இருக்க முடியாது’ என்றார் குஜ்ரால். 'அப்படியானால் காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் வாங்கும்’ என்றார் கேசரி. 'நீங்கள் என்ன வாபஸ் வாங்குவது... நானே ராஜினாமா செய்கிறேன்’ என்று கும்பிடு போட்டார் குஜ்ரால். தன் மனசாட்சியை அடமானம் வைத்துவிட்டு நாற்காலி​யைத் தொட மாட்டேன் என்று வாழ்ந்த குஜ்ராலின் மறைவு, ஈடு செய்ய இயலாத இழப்பு.
பிரதமர்களின் வரிசையில் அல்ல... மகத்தான மனிதர்​களின் வரிசையில் இந்தர் குமார் குஜ்ரால் இடம் பிடித்து விட்டார்!

நன்றி : விகடன் 

No comments:

Post a Comment