Saturday, January 25, 2014

இன்னும் விலகாத மர்மம்- நேதாஜி

 
இந்தியாவுக்கு வெளியே மூன்று லட்சம் பேரைக் கொண்ட இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வழிநடத்தியவர் நேதாஜி. 1944-ல் இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாய் அது. அப்போதுதான், ஹிரோஷிமா - நாகசாகி அணுகுண்டு தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் ராணுவத்திடம் சரணடைகிறது ஜப்பான். அப்போது சிங்கப்பூரில் ஐ.என்.ஏ. தலைமையகமான ‘கதே மாளிகை’யில் இருந்தார் நேதாஜி. அவரை அங்கிருந்து வெளியேறிவிடும்படி தகவல் அனுப்புகிறார் ஜப்பான் அதிபர் டோஜோ.
இதையடுத்து 18.08.1945 அதிகாலையில், தன்னுடைய உதவியாளர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் ஜப்பான் தளபதிகள் உள்ளிட்ட ஒன்பது பேருடன் தனி விமானம் மூலம் சிங்கப்பூரை விட்டுப் பறக்கிறார் நேதாஜி. எரிபொருள் நிரப்புவதற்காக ஜப்பான் எல்லைக்குள் (இப்போது தாய்வான்) மஞ்சூரியா என்ற இடத்தில் அந்த விமானம் தரையிறக்கப்படுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இதுவரை புரியாத மர்மம்!
வானொலியில் வந்த மரணச் செய்தி
“நேதாஜி பயணம் செய்த விமானம் மதியம் 12.45 மணிக்கு மஞ்சூரியாவை விட்டுப் புறப்படும்போது, எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானதில் நேதாஜி உள்ளிட்டவர்கள் இறந்துவிட்டார்கள். அவரது உதவியாளர் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் காயங்களுடன் உயிர்தப்பினார்கள்” என்று 1945 ஆகஸ்ட் 22-ல் ஜப்பான் வானொலி சேதி சொன்னது. நேதாஜி அபிமானிகள் இந்தச் செய்தியை நம்பவில்லை. காரணம், அதற்கு முன்பும் பலமுறை அவர் விமான விபத்தில் இறந்துவிட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டிருக்கின்றன.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கும் நேதாஜிக்கும் நெருக்கம் உண்டு. நேதாஜி இறந்துவிட்டதாகச் செய்தி வந்தபோது, தேவர் அரசியல் கைதியாக ஆந்திர மாநிலம் அமராவதி சிறையில் இருந்தார். அங்கிருந்தபடியே, “விமான விபத்து ஏதும் நடக்கவில்லை. இது திட்டமிட்ட நாடகம்” என்று அறிக்கை கொடுத்தார். ஆனால், விடுதலையான பிறகு, இரண்டு ஆண்டுகள் நேதாஜியைப் பற்றி எதுவும் பேசவில்லை தேவர். 1949 ஜனவரி 23-ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் நேதாஜி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய தேவர், “நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டது” என்று உறுதிபட அறிவித்தார். இந்த நிலையில், 1950-ல் தேவரும் தலைமறைவானார். அவர் எங்கே போனார் என்ற விவரம் யாருக்குமே தெரியாமல் இருந்த நிலையில், ஓராண்டு கழித்து, மீசையை மழித்துக்கொண்டு பாகவதர் கிராப்பில் வித்தியாசமான தோற்றத்துடன் மீண்டும் வெளியுலகுக்கு வருகிறார்.
சுஜ்ஜோ எல்லையில் நேதாஜி முகாம்
1951-ல் நடந்த நேதாஜி பிறந்த நாள் விழாவில், “நேதாஜி உயிருடன் இருக்கிறார். அவரை நான் சந்தித்துவிட்டு வந்தேன்” என்று மீண்டும் அறிவித்தார் தேவர். நான்கு ஆண்டுகள் கழித்து, பர்மா சென்று திரும்பும் வழியில் கொல்கத்தாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தேவர், “நம்முடைய நேதாஜி இறக்கவில்லை. இந்தியா, சீனா, பர்மா ஆகிய மூன்று நாட்டு எல்லைகளும் சந்திக்கும் இடத்தில் சுஜ்ஜோ என்ற ரயில் நிலையம் இருக்கிறது. அதற்கு அருகில் முகாம் அமைத்துத் தங்கியிருக்கிறார் நேதாஜி. அங்கே ‘ஆசிய சுதந்திர சேனா’அமைத்து, போர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார். விரைவில் அவர் இந்தியாவில் ராணுவ ரீதியிலான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார். இவை அனைத்தும் பிரதமர் நேருவுக்கும் அவரது சகோதரியும் ரஷ்யாவுக்கான இந்தியத் தூதருமான விஜயலட்சுமி பண்டிட்டுக்கும் தெரியும். தங்களது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், அவர்கள் மௌனம் காக்கிறார்கள். உண்மையிலேயே இவர்களுக்கு நல்லெண்ணம் இருக்குமானால், நேதாஜி மர்மம்குறித்து விசாரணை ஆணையம் அமைக்கட்டும்” என்று பேட்டி கொடுத்தார். இதை அடுத்துதான் 1956-ல், ஐ.என்.ஏ-யில் லெஃப்டினென்டாக இருந்த ஷாநவாஸ் கான் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார் நேரு.
மத்திய அரசு அமைத்த மூன்று ஆணையங்கள்
ஓராண்டுக்குள் விசாரணையை முடித்த ஷாநவாஸ் கான், நேதாஜி விமான விபத்தில் இறந்துவிட்டதாக 1957-ல் அறிக்கை சமர்ப்பித்தார். இதை இரண்டு ஆண்டுகள் கழித்து நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தது காங்கிரஸ் அரசு. “விபத்து நடந்ததாகச் சொல்லப்படும் மஞ்சூரியாவுக்கே போகாமல், அறைக்குள் உட்கார்ந்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை ஏற்க முடியாது” என ஃபார்வர்டு பிளாக் மட்டுமல்லாமல், காங்கிரஸில் இருந்த நேதாஜி அபிமானிகளுமே கேலிசெய்தார்கள். அத்தோடு அடங்கிப்போனது அந்த அறிக்கை பிரளயம். இதன் பிறகு, இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட கோஸ்வாமி ஆணையமும் நேதாஜி இறப்பை உறுதிசெய்தது. 1999-ல் பா.ஜ.க. ஆட்சியில் மீண்டும் எம்.கே. முகர்ஜி என்பவர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார்கள்.
விமான விபத்தே நடக்கவில்லை - தாய்வான்
விமான விபத்து நடந்ததாகச் சொல்லப்படும் தாய்வான் நாட்டு அரசிடம், 1945 பிப்ரவரியிலிருந்து டிசம்பர் மாதம் வரை நடந்த விமான விபத்துகள்பற்றிய விவரங்களைக் கேட்டது முகர்ஜி ஆணையம். அதற்கு, ‘அந்தக் காலகட்டத்தில் எந்த விமான விபத்தும் தங்கள் எல்லைக்குள் நடக்கவில்லை’ என அங்கிருந்து வந்த அறிக்கையால் மேலும் சர்ச்சையானது. ஆனால், ஆட்சி மாற்றத்தால் நாடாளுமன்றம் வராமலேயே அறிக்கை படுத்துக்கொண்டது. இதற்கிடையில், 1964-ல் நேரு இறந்தபோது, அவருக்கு நேதாஜி அஞ்சலி செலுத்த வந்ததாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அதன் பிறகும், நேதாஜி ரஷ்யாவில் இருக்கிறார், மத்தியப் பிரதேசம் சவுல்மாரி ஆசிரமத்தில் கும்னாமி பாபாவாக இருந்த துறவிதான் நேதாஜி என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டே இருந்தன.
அந்த 33 கோப்புகளில் இருப்பது என்ன?
இவை எதுவுமே நம்பும்படியாக இல்லை என்று சொல்லும் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர்கள், ‘‘இந்திய சுதந்திர ஒப்பந்தத்தின்போது நேதாஜி சர்வதேசப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதன் பிறகு ஸ்டாலின் காலத்தில் ரஷ்யாவில் கைதுசெய்யப்பட்ட நேதாஜி, அங்கேயே சிறைவைக்கப்பட்டார். அவர் மீதிருந்த நல்லெண்ணத்தால்கூட அவரை ஸ்டாலின் பிரிட்டிஷ் காரர்களிடம் ஒப்படைக்காமல் இருந்திருக்கலாம். இது சம்பந்தமான 33 கோப்புகளை ரஷ்ய அரசாங்கம் இந்திய அரசிடம் ஒப்படைத்திருக்கிறது. அதில் உள்ள விவரங்களை வெளியிட மறுக்கிறது மத்திய அரசு’’ என்கிறார்கள்.
போராடும் நேதாஜியின் உறவுகள்
நேதாஜி பற்றிய ரகசியக் கோப்புகளை வெளியிட உதவுமாறு நேதாஜியின் அண்ணன் சரத் சந்திர போஸின் பேரன் சந்திரகுமார் போஸ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியிடம் ஒரு ஆண்டுக்கு முன்பே கோரிக்கை மனு கொடுத்தார். ‘‘தாத்தா நேதாஜி போஸ் தொடர்பாக ரஷ்யா தங்களிடம் அளித்த 33 கோப்புகள் பத்திரமாக இருப்பதாக, தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட ஒரு நபருக்குப் பதில் கொடுத்திருக்கிறது மத்திய அரசு. அதை வெளியிட்டு, தாத்தாபற்றிய ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் மம்தாவின் உதவியை நாடினோம். ஆனாலும், இதுவரை எங்களது கோரிக்கை எடுபடவில்லை. இனியாவது, தாத்தா சம்பந்தமாக மத்திய அரசும் உளவு அமைப்புகளும் தங்கள் வசம் உள்ள ரகசிய விவரங்களை உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய இயக்கம் நடத்தத் தீர்மானித்திருக்கிறோம்’’ என்கிறார் சந்திரகுமார் போஸ்.
நகைகள் யாருக்கு?
இதற்கிடையே, “ஐ.என்.ஏ-வுக்காகப் பொதுமக்கள் நன்கொடையாகக் கொடுத்த தங்க நகைகள் 40 பெட்டிகளில் இருந்தன. இவை அனைத்தும் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ‘நேதாஜி பவன்’ என்ற அமைப்பை உருவாக்கி, நேதாஜி விட்டுச்சென்ற பணியைத் தொடரப்போகிறோம். அதற்காக, இந்திய அரசு வைத்திருக்கும் அந்த நகைப்பெட்டிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கோரிக்கை எழுப்பிக் கொண்டிருக்கிறது அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி.
இத்தனைக்கும் மத்தியில், இன்னமும் நேதாஜி உயிருடன் இருப்பதாக நம்புகிறார்கள் அவரது அதிதீவிர அபிமானிகள்.
- குள.சண்முகசுந்தரம்

Wednesday, January 22, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை!-Part 8 (இந்திய பிரதமர்கள் )

சஞ்சய் காந்தியை காங்கிரஸ் கட்சியின் எதிரிகள் மட்டுமல்ல, இந்திராவுக்கு அருகில் இருந்தவர்களே எரிச்சலோடுதான் பார்த்தார்கள். இவர் இருப்பதால், இவரது பேச்சைத்தான் இந்திரா அதிகமாகக் கேட்கிறார் என்ற விரக்தி கலந்த கோபம் ஒரு பக்கம் இருந் தாலும், இந்திராவைத் தவறாக வழிநடத்துவதன் மூலமாக காங்கிரஸ் கட்சியை விரைவில் சஞ்சய் காந்தி அதள பாதாளத்துக்குத் தள்ளிவிடுவார் என்றும் அவர்கள் பயந்தார்கள்.
 சஞ்சய் காந்தியின் போக்கு கட்சிக்கும் நல்லதல்ல; இந்திராவுக் கும் நல்லதல்ல என்று முதலில் சொன்னவர் பி.என்.ஹக்ஸர். இவர் வேறு யாருமல்ல, பிரதமர் இந்திராவின் செயலாளர். ஆனால் அவர் சொன்னது, சஞ்சய் மற்றும் இந்திராவின் விசுவாசிகளால் தவறான எண்ணத்துடன் பார்க்கப் பட்டது.
''சஞ்சய் காந்தி கார் கம்பெனி ஆரம்பிப்பது நல்லதல்ல. அவரால் நினைத்த அளவுக்குத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்ய முடியாது. கொடுத்த வாக்குறுதிப்படி 50 ஆயிரம் கார்கள் தர முடியாது. இந்த நிறுவனம் தொடங்குவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் பலாத்காரத்தின் அடிப்படையில் பறிக்கப்பட்டிருப்பதால் அரசுக்கு கெட்ட பெயர்தான் ஏற்படும்'' என்று இந்திராவிடமே நேரில் சொன்னார் பி.என்.ஹக்ஸர்.
''கார் நிறுவனத்துக்கு அருகில் பி.என்.ஹக்ஸருக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. சஞ்சய், தன்னுடைய நிலத்தையும் பறித்துவிடுவார் என்று ஹக்ஸர் பயப்படுகிறார். அதனால்தான் சஞ்சய்க்கு எதிராக தவறான பிரசாரம் செய்கிறார்'' என்று இந்திராவிடம் போட்டுக்கொடுத்தார்கள். இதனை இந்திராவும் நம்பினார்.
அந்தக் காலகட்டத்தில் இந்திராவின் குடும்ப நண்பராக இருந்த முஹம்மது யூனுஸை சந்தித்த பி.என்.ஹக்ஸர், ''அந்தப் பிள்ளையை இந்தப் பைத்தியக்காரத்தனமான திட்டத்தை கைவிடச் சொல்லுங்கள்'' என்று சொன்னார். ஆனால், ஹக்ஸர் தன்னுடைய சுயநலனுக்காக இப்படிச் சொல்வதாக யூனுஸும் நினைத்தார். இந்தக் காலகட்டத்தில்தான் சஞ்சய் மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை வைக்க ஆரம்பித்தன. இவர்கள் வெறும் அரசியல் தாக்குதல்களாக இல்லாமல், பல்வேறு ஆதாரங்களுடன் பேசினார்கள். அரசுக்கும், மத்திய தொழில் துறைக்கும், சஞ்சய் காந்திக்கும் மட்டுமே தெரிந்த ஆவணங்களை இவர்கள் வெளியிட்டார்கள். இது இந்திராவுக்கும் சஞ்சய்க்கும் சந்தேகம் கிளப்பியது.
பி.என்.ஹக்ஸர் தான் இந்த செய்திகளை வெளியில் விடுகிறார்... தன்னுடைய இடதுசாரி நண்பர்களுக்குத் தகவல்களைக் கொடுத்து பரப்புகிறார்... அவர்தான் தூண்டிவிடுகிறார்... என்று இந்திராவும் சஞ்சயும் நம்பினார்கள். இந்த நிலையில் பி.என்.ஹக்ஸர் பதவியில் இருந்து தூக்கப்பட்டார். ஹக்ஸருக்கு இந்த நிலைமை வரும் என்று யாரும் நினைக்கவில்லை. அந்தளவுக்கு செல்வாக்கான இடத்தில் இருந்தவர் அவர்.
சஞ்சய் காந்தியின் செல்வாக்கை காங்கிரஸ் பிரமுகர்களும் மற்றவர்களும் இதில் இருந்துதான் உணர்ந்து கொண்டனர். சஞ்சயை விமர்சித்தால் காங்கிரஸிலும் இருக்க முடியாது என்ற யதார்த்தம் வெளிப்பட்டது. சஞ்சய் காந்தியை காக்கா பிடித்தால்தான் காங்கிரஸில் காலம் தள்ள முடியும் என்ற நிலையே உருவானது.
அந்தக் காட்சிகளை முஹம்மது யூனுஸ் வர்ணிக்கிறார்...
''பல முதல்வர்கள் அடிக்கடி எனக்கு டெலிபோன் செய்து, 'யூனுஸ் சாகிப், சஞ்சய் பஞ்சாப், ஹரியானாவுக்கு மட்டும் போகிறாரே... நாங்கள் இருப்பது ஞாபகம் இல்லையா? எங்கள் மாநிலத்துக்கு அவரை அனுப்பி வையுங்கள்’ என்று ஒப்பாரி வைத்தார்கள். ஆந்திராவில் இருந்து வெங்காலராவ், தமிழக ஆளுநர், மகாராஷ்டிராவில் இருந்து எஸ்.பி.சவான் இப்படி எல்லோரும் சஞ்சயை வரவேற்றனர். எஸ்.பி.சவான் எல்லை மீறிப் புகழ்ந்தார். 'அவர் இளைஞர்கள் தலைவர் மட்டுமல்ல... தேசத்தின் தலைவரும்’ என்று பேசினார். அந்தக் காலத்தில் அதைப் புகழ்ச்சி என்றுகூடக் கூற முடியாது. அது தவிர்க்க முடியாத ஒன்றாகத் தெரிந்தது. இது காங்கிரஸின் அன்றைய நிலைமையை வைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று. காங்கிரஸார் தங்கள் லட்சியங்களை இழந்து போயினர். அநேகர் குறுக்கு வழியில் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். மற்றவர் புகழில் மறைந்து கொள்வதைக் காட்டிலும் சுலபமானது எதுவும் இல்லை. தனயனைப் புகழ்ந்து தாயாரை உச்சி குளிர வைத்து தங்களை நிலைநிறுத்திக்கொள்வதே அவர்களின் நோக்கமாகும்'' என்று எழுதி இருக்கிறார். இந்திரா குடும்பத்தின் முக்கியமான தலையாட்டி பொம்மைகளில் ஒருவரான முஹம்மது யூனுஸே இப்படி எழுதி இருக்கிறார் என்றால், நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதைக் கவனியுங்கள்.
இப்படிப்பட்ட நேரத்தில் பி.என்.ஹக்ஸர் மட்டும்தான், ''பிரதமருடன் ஒரே வீட்டில் வசிக்கும் வரை, எந்தவிதமான வர்த்தகரீதியான செயல்பாடுகளிலும் சஞ்சய் காந்தி ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்'' என்று துணிச்சலாகச் சொன்னார். இதனாலேயே ஓரங்கட்டப்பட்டார்.
இதேபோன்ற எண்ணம் இந்திரா காந்தியின் நெருங்கிய தோழி புபுல் ஜெயகருக்கும் இருந்தது. சஞ்சய் பற்றி வெளிப்படையாகச் சொன்னால் இந்திராவுக்குப் பிடிக்காது என்று புபுல் ஜெயகருக்குத் தெரியும். 'சஞ்சய் இதே மாதிரியான தொழில் எல்லாம் செய்ய வேண்டுமா? அரசியல் எதிரிகள் இதனைப் பயன்படுத்திக்கொள்வார்களே?’ என்று வருத்தப்பட்டு கேட்பதுபோல இந்திராவுக்குச் சொல்லிப் பார்த்தார். அதற்கு இந்திரா சொன்ன பதில், புபுல் ஜெயகரை பதில் யோசிக்கவிடாமலே தடுப்பது மாதிரி இருந்தது.
''பிரதமரின் மகன் என்பதற்காக சஞ்சய்க்கு ஆர்வமான தொழிலைச் செய்து சாதனை படைப்பதற்கு தடை போட முடியாது'' என்று சொன்ன இந்திரா,
''அது ஒரு கார் கம்பெனியைப் போலவே இல்லை என்று சிலர் கிண்டல் செய்கிறார்கள். ஒருநாள் நான், கான்ஸன்டைன் என்ற கிறிஸ்தவப் பாதிரியாரைச் சந்தித்தேன். அவருக்கு விமானம் செய்வதில் அதீத ஆர்வம் இருந்தது. இரண்டே இரண்டு அறைகள் கொண்டது அவரது கம்பெனி. அதில் அவர் ஒரு சிறிய விமானத்தை உருவாக்கி இருந்தார். அதில் தன்னுடைய நண்பர்களுடன் சுற்றி வருவார். ஒரு பாதிரியாரால் ஒரு விமானத்தை உருவாக்க முடியும்போது, சஞ்சயால் ஒரு காரைத் தயாரிக்க முடியாதா?'' என்று கேட்டாராம்.
ஒரு அறைக்குள் பறப்பதை விமானம் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால், சஞ்சய் தயாரித்ததையும் கார் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்திரா இப்படிச் சொன்னார் என்பதை அவர் இறந்ததற்குப் பல ஆண்டுகள் கழித்துத்தான் புபுல் ஜெயகருக்கே வெளியில் சொல்லத் தைரியம் வந்தது.
அந்தளவுக்கு யாராலும் இந்திராவால்கூட தட்டிக் கேட்க முடியாதவராக சஞ்சய் வலம் வந்தார். ஒரு உதாரணம் சொன்னால் புரியும்!
பாரத ஸ்டேட் வங்கியின் நாடாளுமன்ற வீதி கிளையின் தலைமைக் கணக்காளர் வேத பிரகாஷ் மல்ஹோத்ராவுக்கு ஒரு போன் வந்தது. ''நான் பிரதமரின் செயலாளர் ஹக்ஸர் பேசுகிறேன். பிரதமருக்கு அவசரமாக 60 லட்சம் பணம் தேவைப்படுகிறது'' என்று அந்தக் குரல் சொன்னது. அந்தக் குரல், போனை இன்னொருவரிடம் கொடுத்தது. அடுத்துப் பேசுபவர் பெண். ''பணத்தை நீங்கள் எடுத்து வந்து கொடுங்கள்'' என்றது. இது பிரதமர் இந்திராவின் குரல்தான் என்று அந்தக் கணக்காளர் பின்னர் நடந்த விசாரணையில் சொன்னார்.
60 லட்சம் ரூபாயை எடுத்தார் மல்ஹோத்ரா. காரில் வைத்தார். சொன்ன இடத்துக்குப் போனார். நின்ற நபரிடம் கொடுத்தார். பணத்தை வாங்கியவர் பெயர்தான் நகர்வாலா.
60 லட்சம் ரூபாய் என்பது இன்றைய ஊழல்களோடு ஒப்பிடும்போது குறைவாகத் தெரியலாம். 1971-ல் 60 லட்சம் ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு இருக்கும் எனப் பாருங்கள்!
60 லட்சம் ரூபாய் பணத்தை யாரிடமும் தான் கொடுக்கச் சொல்லவில்லை என்று ஹக்ஸர் கையை விரித்துவிட்டார், அப்படி யாருக்கும் நான் போன் செய்யவில்லை என்று சொல்லிவிட்டார். எதிர்கட்சிகள் இதனை நாடாளுமன்றத்தில் எழுப்பி இந்திராவை வளைத்தது. இந்திரா இதற்கு பதிலே பேசவில்லை. ''அந்த அதிகாரி சொல்வது நம்பும்படியாக இல்லை'' என்று சொல்லி, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நகர்வாலா கைது செய்யப்பட்டார். அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சில மாதங்களிலேயே நகர்வாலா சிறையில் இறந்தார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி டி.கே.காஷ்யப், ஒரு சாலை விபத்தில் இறந்து போனார்.
நகர்வாலா சாதாரண ஆள் அல்ல. இந்தியப் புலனாய்வுத் துறையில் வேலை பார்த்தவர். ஒரு வங்கி அதிகாரியையும், புலனாய்வு அதிகாரியையும் யார் பயன்படுத்த முடியும் என்பது தெரியாதது அல்ல. இது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என்று தெரிந்ததும், நகர்வாலாவை உடனடியாக கைது செய்கிறார்கள். அவரிடம் இருந்து பணம் அப்படியே கைப்பற்றப்படுகிறது. மிகப்பெரிய கிரிமினலாக இருந்திருந்தால் நகர்வாலா, உடனடியாக எங்காவது தப்பி இருக்கக் கூடும். அதைச் செய்யாமல் தானே சிக்கிக்கொண்டு, பணத்தையும் திருப்பி ஒப்படைத்தார்.
ஆனால் கடைசி வரை, போனில் பேசியது யாருடைய குரல் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இந்திரா அமைத்த விசாரணையில் மட்டும் அல்ல... அவரது ஆட்சிக்குப் பிறகு அமைந்த ஜனதா அரசு அமைத்த விசாரணையிலும் இதனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. 'விசாரணைக்குப் பிறகும் சந்தேகம் அதிகரிக்கவே செய்கிறது’ என்று நீதிபதி சொன்னார். ஆனால் உண்மைகள், விசாரணை கமிஷன்கள் வைத்து தேட வேண்டியதாக எப்போதும் இருக்காது.
60 லட்ச ரூபாய்  பணத்தை எடுத்துக் கொடுத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட மல்ஹோத்ராவுக்கு, தன்னுடைய கார் கம்பெனியில் சஞ்சய் காந்தி வேலை போட்டுக் கொடுத்திருந்ததன் மூலமாக உண்மை உணரத்தக்கது!
டுபாக்கூர் கம்பெனிகளை 'மன்னார் அண்ட் கம்பெனி’ என்று கிண்டல் செய்வார்கள். அம்மா இந்திராவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மகன் சஞ்சய் அந்தக் காலத்தில் ஆரம்பித்த கார் கம்பெனிக்கும் இந்த மன்னார் அண்ட் கம்பெனிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இல்லாத கறுப்புப் பூனையை இருட்டில் தேடுவது என்பார்களே... அப்படித்தான் சஞ்சய் அந்தத் தொழிலை நடத்தினார். கார் உற்பத்தி செய்யப்போவதாக எண்ணிக்கையைக் காட்டி, ஒரு நிறுவனத்தின் பெயரில் அனுமதியைப் பெற்று, பல்வேறு முறைகளில் பணத்தைத் திரட்டிய முறைகேடு சஞ்சய் மூலமாகத் தொடங்கியது. போஃபர்ஸ் முதல் ஸ்பெக்ட்ரம் வரை அனைத்து முறைகேடுகளுக்கும் அரிச்சுவடி போட்டுக்கொடுத்தது சஞ்சய் காந்தியின் செயல்.
 ராஜீவ் காந்தியைப்போல அமைதியானவர் அல்ல சஞ்சய். இளம் வயதிலேயே துடுக்கும் மிடுக்கும் நிறைந்தவராக வளர்ந்தார். ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி என்றால் எப்படித் துள்ளும்! அதைவிட அதிகமாகவே துள்ளினார். பெரும் குடும்பத்துப் பிள்ளைகள் படிக்கும் டூன் பள்ளியில் படித்தாலும், அவருக்கு அந்தக் கல்வி மீது ஆர்வம் இல்லை. அவரது எண்ணம் எப்போதும் கார், கார், கார்.
காரை வெகுவேகமாக ஓட்டுவதும், எந்த காராக இருந்தாலும் பிரித்து மேய்வதும் அவரது ஆசையும் வாடிக்கையாகவும் இருந்தன.
எந்த கார் கிடைத்தாலும் எடுத்துக்கொண்டு பறப்பார். அது பரவாயில்லை. யாருடைய காராக இருந்தாலும் எடுத்துச் செல்ல முடியுமா? அதையும் சஞ்சய் செய்தார். அதுதான் சிக்கல். அவரைப்போலவே கார் ஆசை கொண்ட இளைஞர்கள் படை ஒன்றை உருவாக்கிக்கொண்டார். கார்களில் இரவு பகலாக டெல்லியைச் சுற்றுவதே இவர்களின் ஒரே பொழுதுபோக்கு. இந்த நிலையில் ராணுவ அதிகாரி ஒருவரின் கார் காணாமல் போனது. மறுநாள், டெல்லி பாலம் விமான நிலையம் அருகில் அது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மயங்கிய நிலையில் ஒரு இளைஞன் இருந்தார். அவர், சஞ்சய் காந்தியின் நெருக்கமான நண்பரான அடில் ஷர்யார். இந்த கார் திருட்டை அன்றைய 'கரன்ட்’ பத்திரிகை அம்பலப்படுத்தியது. ஆனால், எந்தப் பயனும் இல்லை.
இதன் மூலமாக மகனுக்கு, மிக மோசமான இளைஞர்களின் சகவாசம் இருக்கிறது என்று இந்திரா உணர்ந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால், கார்களின் மீது மகனுக்கு ஆர்வம் இருப்பதை மட்டும்(!) இந்திரா உணர்ந்துகொண்டார். இங்கிலாந்தில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப அறிவு பெற அனுப்பிவைக்கப்பட்டார் சஞ்சய். மூன்றாண்டு படிப்பை முழுமையாக முடிக்காமல், இரண்டாவது ஆண்டே இந்தியா திரும்பினார் சஞ்சய். இந்திராவே அவரைக் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு வயதாலும் அனுபவத்தாலும் வளர்ந்திருந்தார். கார் மோகம் அவருக்கு இன்னும் அதிகமாகி இருந்தது. தனது நண்பர்களோடு கார் மெக்கானிக் வேலைகளில் மும்முரம் ஆனார்.
இந்தக் காலம் மாதிரி அப்போதெல்லாம் விதவிதமான கார்கள் கிடையாது. அதுவும் சிறிய கார்களும் இல்லை. இந்தியாவில் சிறிய கார்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனை மத்திய அரசுக்கும் இந்த தொழிலில் இருந்த நிறுவனங்களுக்குமே இருந்தது. மிகமிகக் குறைந்த விலையில், அதாவது அன்றைய (1968) மதிப்பில் சுமார் 6,000 ரூபாய்க்கு கார் உற்பத்தி செய்துவிட வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தது. அவர்கள் திட்டமிட்டதில், அறிவித்ததில் எந்தத் தவறும் இல்லை. நோக்கம் நல்ல நோக்கம்தான். ஆனால் அதனைச் செயல்படுத்தும்போதுதான் அதிகாரம் உள்ளே நுழைந்தது.
சிறிய கார் உற்பத்தியில் இறங்க அனுமதி கேட்டு 14 விண்ணப்பங்கள் வந்தன. அதில் ஒன்று சஞ்சய் காந்தியின் விண்ணப்பம். ரெனால்ட், சிட்ரன், டொயோட்டா, மஸ்டா போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தப் போட்டியில் இருந்தன. ஆனால் அவை, சஞ்சய் காந்தியைப்போல பிரதமரின் மகன் என்ற தகுதியைப் பெற்றதா என்ன?
சஞ்சய் காந்தி, இந்திய மக்களுக்கு புதிய கார் ஒன்றை தயாரித்துத் தரப்போகிறார் என்று அன்றைய மத்திய தொழில் துறை இணை அமைச்சர் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். '6,000 ரூபாய் மதிப்பில் சிறிய கார் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. அது லிட்டர் ஒன்றுக்கு 90 கி.மீ. ஓடும். அதனுடைய வேகம் மணிக்கு 85 கி.மீட்டர்’ என்றும் அவர் தெரிவித்தார். அதுதான் சஞ்சய் காந்தியின் கற்பனையில் உருவான 'மாருதி’ நிறுவனம். எல்லா லட்சியங்களுமே கனவுகளால் உருவாவதுதான். ஆனால், லட்சங்களைப் பெற்ற பிறகும் கனவிலேயே படம் காட்ட முடியுமா? காட்டும் திறமை சஞ்சய்க்கு இருந்தது.
50 ஆயிரம் கார்களைத் தயாரிப்பதற்கான அனுமதி, பிரதமர் இந்திரா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டது. அதற்கான கடிதத்தை சஞ்சய் காந்தியிடம் கொடுத்தவர், அன்றைய மத்திய தொழில் துறை அமைச்சர் தினேஷ் சிங்.
பிரதமர் மகன் தொடங்கும் கம்பெனி என்றால் அதிகார வர்க்கம், காலால் இட்ட வேலையை தலையால் செய்யும் அல்லவா? இங்கே வாருங்கள், அங்கே வாருங்கள்... என்று பலரும் அழைக்க, இறுதியில் அரியானா மாநிலத்தில் இந்த நிறுவனத்துக்கான இடம் தரப்பட்டது. கொடுத்தவர் பன்சிலால். டெல்லிக்கு சற்றே அருகில் உள்ள இடம் இது. ஆனால், அவை விவசாய நிலங்கள். அவை பலாத்காரமாகப் பறிக்கப்பட்டதாக முதல் புகார் எழுந்தது. விலை அதிகம் உள்ள இடத்தை குறைவான விலைக்கு வாங்குவதாக அடுத்தப் புகார் எழுந்தது. இவை எதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
எந்தத் தாமதமும் இல்லாமல் 1971-ல் நிறுவனம் தொடங்கப்பட்டது. கார் உற்பத்தி செய்வதற்கான அடிப்படை வேலைகள், உள்கட்டமைப்புகள் செய்யப்படுவதற்கு முன்பே... காரை விற்பனை செய்யும் டீலர்களை நியமித்தார் சஞ்சய். நாடு முழுவதும் நியமிக்கப்பட்ட 75 டீலர்களிடம் இருந்து பல லட்ச ரூபாய் முன்பணம் வாங்கப்பட்டது. முதல் லாபம் இது. ஆனாலும் நிறுவனத்தைத் தொடங்க முடியவில்லை. இந்தப் பணம் போதாது என்று நினைத்தார் சஞ்சய். தன்னுடைய கவலையை காங்கிரஸ் பிரமுகர்களிடம் சொன்னார். அவர்களுக்கு தெரிந்த, வசதியான ரூட்டைக் காட்டினார்கள்... வங்கிகள் நமக்கு தாராளமாக பணம் கொடுக்குமே என்று.  இரண்டு வங்கிகளிடம் கடன் கேட்டார்கள். ஏதாவது ஒன்று தந்தால் போதும் என்று நினைத்தார்கள். சஞ்சய் காந்தியின் அதிர்ஷ்டம், இரண்டு வங்கிகளுமே கடன் கொடுத்தன. 'வங்கிகளிடம் போய் ஏன் நிற்க வேண்டும்? எங்களிடம் கேட்டால் தரமாட்டோமா?’ என்று பல காங்கிரஸ் பிரமுகர்கள் முன்வந்தார்கள். பிரதமர் மகனின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் நமக்கு வேறு வசதிகள், லாபங்கள் கிடைக்கும் என்பதை எதிர்பார்த்து பல தொழிலதிபர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் முதலீடு செய்தார்கள். சஞ்சய் கையில் கோடிகளில் பணம் புரளத் தொடங்கியது. ஆனால், அந்தப் பணத்தை வைத்து நிறுவனம் பெரியதாக அமைக்கப்படவில்லை. அன்றைய இந்திராவின் எதிரிகள், 'கார் மெக்கானிக்கல் ஷெட்டை, கார் கம்பெனி என்று சஞ்சய் சொல்லிக்கொண்டு இருக்கிறார்’ என்று கிண்டல் அடித்தனர். பின்னர் 1977-ல் நடந்த தேர்தலில் ஜனதா கட்சித் தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்திலும் இப்படித்தான் சொன்னார்கள்.
இந்த நிலையில், 1972 நவம்பர் மாதம் டெல்லியில் நடந்த ஆசிய வர்த்தக கண்காட்சியில் தனது கனவு காரின் மாடலை கொண்டுவந்து நிறுத்தினார் சஞ்சய். இதனை சோதனை செய்துபார்க்க அப்போது சிலர் முயன்றதாகவும், அதற்கு அனுமதி தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், விரைவில் கார் ஓடும் என்று சஞ்சய் நம்பிக்கையுடன் சொன்னார்.
சில மாதங்கள் கழிந்தன...
இந்திய மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் கார் தரவேண்டும் என்ற முதல் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதுதான் இந்த அனுமதி. அதற்கே முதலில் வேட்டு வைத்தார் சஞ்சய்.
''6,000 ரூபாயில் கார் உற்பத்தி செய்ய முடியாது. புதிய காரின் விலை 11 ஆயிரத்து 300 ரூபாய்'' என்று சொன்னார். 6,000 ரூபாய்க்குத்தான் கார் தரவேண்டும் என்று மத்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு விலையை இரண்டு மடங்கு கூட்டியதைப்போல வேறு யாராவது செய்திருந்தால் அரசாங்கம் அனுமதிக்குமா? செய்தது சஞ்சய் என்பதால், யாராலும் தடைபோட முடியவில்லை.  
இந்த காரில் என்ன மாதிரியான இன்ஜின் பொருத்துவது என்ற குழப்பம் கடைசிவரை சஞ்சய்க்கு ஏற்பட்டது. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்று சொன்னார் அவரது நண்பர். சஞ்சய்யும் சரி என்று சொல்லிவிட்டார். வரவழைத்து பொருத்திவிட்டார்கள். ஆனால், இதுவும் அப்பட்டமான விதிமுறை மீறல்தான். அரசின் ஒப்பந்தப்படி, தயாராகும் காரில் பொருத்தப்படும் உதிரிப் பாகங்கள் அனைத்தும் இந்தியத் தயாரிப்பாகத்தான் இருக்க வேண்டும்.
ஒப்பந்தத்தின் முதல் ஷரத்து, காரின் விலை குறைவாக இருக்க வேண்டும். அதனை மீறி இரண்டு மடங்கு விலை அதிகமாக ஆக்கப்பட்டது. இரண்டாவது ஷரத்து, இந்திய உதிரிப் பாகங்கள்தான் பொருத்த வேண்டும். அதற்கு மாறாக ஜெர்மன் பாகங்கள் பொருத்தப்பட்டன. ஆனால், பிரதமர் மகன் நிறுவனத்தில் யாராவது கேட்க முடியுமா?
சரி, விதிமுறைகள்தான் மீறப்பட்டன. காராவது தயாரிக்கப்பட்டதா என்றால், அதுவும் இல்லை!
இப்போது வரப்போகிறது, அப்போது ஓடப்போகிறது என்ற செய்திதான் பரப்பப்பட்டதே தவிர, காரையே காணவில்லை. ஆனால், புதிய துணை நிறுவனங்களைத் தொடங்கி, கம்பெனி வளர்ந்துகொண்டு வருவதாகக் காட்டிக்கொண்டார். ரோடு ரோலர்கள் தயாரிப்பில் குதித்து, அதற்கான டெண்டர்களை கைப்பற்றத் தொடங்கினார் சஞ்சய். துணை நிறுவனங்கள் தொடங்கியதும்தான் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இதனைக் கேள்வியாய் போட்டு மடக்கியது. பிரதமர் இந்திரா, ''என்னுடைய மகன் என்பதற்காக, துடிப்பும் ஆர்வமும் உள்ள இளைஞரை ஊக்கப்படுத்தாமல் இருக்க முடியாது'' என்று பொத்தாம்பொதுவாகச் சொன்னாரே தவிர, விதிமீறல்களுக்கு விளக்கம் சொல்ல அவரால் முடியவில்லை.
ஆனால் சஞ்சய் காந்தியை, அளவுக்கு அதிகமாக இந்திரா ஊக்கப்படுத்தியதால் இந்தியா அடைந்த அவஸ்தைகள்தான் அதிகம்!

மகாத்மா முதல் மன்மோகன் வரை!-Part 7 (இந்திய பிரதமர்கள் )

குடியரசுத் தலைவர்  தேர்தல் குஸ்தி!
காங்கிரஸ் கட்சி நிறுத்திய வேட்பாளரை, காங்கிரஸ் கட்சியால் பிரதமர் ஆக்கப்பட்ட இந்திரா வீழ்த்திய விபரீதம் நடந்த ஆண்டு 1969. அந்த ஆண்டு மே மாதம் குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் மரணம் அடைந்தார். புதிய தலைவர் யார் என்ற கேள்வி காங்கிரஸ் தலைவர்கள் முன் எழுந்தது. யாரையும் ஆலோசனை செய்யாமல் ஜெகஜீவன் ராம் பெயரை பிரதமர் இந்திரா முன்மொழிந்தார். இது காங்கிரஸ் பார்லிமென்ட் போர்டு உறுப்பினர்களுக்கு உடன்பாடானதாக இல்லை.
இந்தக் குழுவில் எட்டு தலைவர்கள் இருந்தார்கள். இவர்களில் காங்கிரஸ் தலைவரான எஸ்.நிஜலிங்கப்பா, காமராஜர், மொரார்ஜி தேசாய், ஒய்.பி.சவான், எஸ்.கே.பாட்டீல் ஆகிய ஐந்து பேரும் சஞ்சீவி ரெட்டிதான் குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்று சொன்னார்கள். ஜெகஜீவன் ராமை, பக்ருதீன் அலி அகமது மட்டுமே ஆதரித்தார். ''மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா நெருங்கி வருகிறது. அவர் அரிஜன முன்னேற்றத்தைப் பெரிதும் விரும்பினார். அதனால், ஜெகஜீவன் ராம் குடியரசுத் தலைவர் ஆவதே பொருத்தமானது'' என்று இந்திரா சொன்னார். என்றாலும், உண்மையான காரணம் காங்கிரஸ் தலைவர்களால் புகுத்தப்படும் குடியரசுத் தலைவரை ஏற்கக் கூடாது என்பதுதான்!
இதே காலகட்டத்தில் ஆட்சியில் எடுக்கப்பட வேண்டிய பொருளாதாரக் கூறுகள் தொடர்பாக பிரதமர் இந்திராவுக்கும், காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பாவுக்கும் கருத்து வேற்றுமை தலைதூக்கி இருந்தது. வங்கிகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்ற இந்திராவின் எண்ணத்தை இடதுசாரிச் சிந்தனை என்று இவர்கள் எதிர்த்தார்கள். ஆனால், இவர்களை மீறி 14 வங்கிகளை தேசியமயமாக்கினார் இந்திரா. இது அவரது செல்வாக்கை அதிகப்படுத்தவும் பயன்பட்டது. ''வங்கிகளை முதலில் சமூகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின் தேசியமயமாக்குவதுதான் சரியானது. அதற்கு முன் உடனடியாக
முடிவுசெய்தால் நான் பொறுப்பேற்க முடியாது'' என்று துணை பிரதமரும் நிதி அமைச்சருமான மொரார்ஜி தேசாய் சொன்னார். இதனை இந்திரா முற்றிலுமாக நிராகரித்தார். உடனே தனது எதிர்ப்பைக் காட்டுவதற்காக மொரார்ஜி பதவியை விட்டு விலகினார்.
'பார்லிமென்டரி போர்டில் நீங்கள் விரும்பியதைச் செயல்படுத்த உங்களுக்கு உரிமை இருப்பதைப்போல, அரசாங்கத்தில் நான் விரும்பியதைச் செய்ய பிரதமர் என்ற முறையில் எனக்கு உரிமை இருக்கிறது அல்லவா?'' என்று பிரதமர் இந்திரா மடக்கினார். இதற்கு நிஜலிங்கப்பா போன்றவர்களால் பதிலளிக்க முடியவில்லை. பிரதமர் என்ற அடிப்படையில் இந்திரா எடுத்த நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. இதை அறிந்து மகிழ்ந்த இந்திரா, தன்னுடைய நன்றியின் அடையாளமாக... காங்கிரஸ் பார்லிமென்டரி போர்டால் அறிவிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரான நீலம் சஞ்சீவி ரெட்டியை தான் ஆதரிக்கத் தயார் என்று சொன்னார். அதற்கான விண்ணப்பத்திலும் இந்திரா கையெழுத்துப் போட்டு அனுப்பினார். சமாதானக் கொடி பறப்பதாகத்தான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் இந்திராவின் செயல்பாடுகளில் ஏதோ சந்தேகம் இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தார்கள். அவரும் அப்படித்தான் நடந்துகொண்டார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சஞ்சீவி ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். ஜனசங்கம், சுதந்திரா கட்சி ஆதரவுடன் சி.டி.தேஷ்முக் நிற்கிறார். அப்போது உதவி குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரியும் போட்டியில் இருந்தார். இவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க., முஸ்லிம் லீக், அகாலிதளம் ஆகிய கட்சிகள் ஆதரித்தன.
மத்தியிலும் காங்கிரஸுக்கு பெரிய பெரும்பான்மை இல்லை, பல்வேறு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டன. எனவே, காங்கிரஸ் ஓட்டுக்கள் முழுக்கவே சிந்தாமல் சிதறாமல் விழுந்தால்தான் காங்கிரஸ் வேட்பாளரான  சஞ்சீவி ரெட்டி வெற்றிபெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தார்கள். 'சஞ்சீவி ரெட்டிக்குத்தான் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்'' என்று பிரதமர் இந்திராவுக்கு காங்கிரஸ் பார்லிமென்ட் போர்டு கோரிக்கை வைத்தது. கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் அந்த உத்தரவுப்படிதான் நடந்துகொள்ள வேண்டும். மீறினால், அவர்கள் பதவியே பறிக்கப்படலாம். எனவேதான், கறாராக இந்த உத்தரவு வேண்டும் என்று பார்லிமென்ட் போர்டு நினைத்தது.
அதே நேரத்தில் இன்னொரு காரியத்தையும் இந்தத் தலைவர்கள் பார்த்தார்கள். அதுதான் இந்திராவை ஆத்திரம் கொள்ள வைத்தது.
காங்கிரஸ் தலைவரான நிஜலிங்கப்பா, சுதந்திரா கட்சி மற்றும் ஜனசங்கத் தலைவர்களைச் சந்தித்தார். அவர்களது இரண்டாவது வாக்கை சஞ்சீவி ரெட்டிக்கு தருமாறு கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர்களை காங்கிரஸ் தலைவர் சந்தித்திருப்பது, தன்னுடைய பதவிக்கு வைக்கப்படும் வேட்டு என்று நினைத்து பதறிப்போனார் இந்திரா. தன்னை விலக்கிவிட்டு, சுதந்திரா மற்றும் ஜனசங்க கட்சிகளின் ஆதரவுடன் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூட முடியும் அல்லவா என்று இந்திரா யோசித்தார்.
''என்னை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு வகுப்புவாத மற்றும் பிற்போக்கு சக்திகளுடன் ஒப்பந்தம் செய்கிறார்கள்'' என்று இந்திரா குற்றம் சாட்டினார். எனவே, அவர் தனது அஸ்திரத்தை எடுத்தார்.
''சஞ்சீவி ரெட்டிக்குத்தான் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு போட முடியாது. காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம்'' என்று இந்திரா அறிவித்து அகில இந்தியாவையும் பதறவைத்தார். ஒருவர் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம் என்றால், யாருக்கு வேண்டுமானாலும் தனது வாக்கைப் பயன்படுத்தலாம். காங்கிரஸ் உறுப்பினர்கள் காங்கிரஸ் வேட்பாளரான சஞ்சீவி ரெட்டிக்கும் வாக்களிக்கலாம். ஜனசங்கம் வேட்பாளருக்கும் வாக்களிக்கலாம். கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கும் வாக்களிக்கலாம். அனைத்து எம்.பி-க்களையும் இப்படி அவிழ்த்துவிட்டால் எப்படி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற முடியும்?
இந்திராவின் சந்தேகத்தில் நியாயம் இல்லை என்று நிஜலிங்கப்பா சொல்லிப் பார்த்தார். அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கும் எண்ணம் இல்லை என்றும், 1972 வரை பிரதமராக இந்திரா நீடிக்கலாம் என்றும் நிஜலிங்கப்பா வாக்குறுதி கொடுத்தார். ஆனாலும், இதனை இந்திரா நம்பவில்லை. நிஜலிங்கப்பாவின் கோரிக்கையை ஏற்று கொறடா உத்தரவு பிறப்பிக்கவும் அவர் சம்மதிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சி உடையாமலேயே இரண்டாக பிரிந்து நிற்கத் தொடங்கியது. இத்தகைய குழப்பமான சூழ்நிலையில் 16.8.1969 அன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தது. காங்கிரஸ் வேட்பாளரான சஞ்சீவி ரெட்டி தோற்றுப்போனார். இடதுசாரிகள், முஸ்லிம் லீக், அகாலிதளம், தி.மு.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளரான வி.வி.கிரி வெற்றிபெற்றார். அதாவது, இந்திரா அவரை வெற்றிபெற வைத்தார். வி.வி.கிரியின் வெற்றி இந்திராவின் வெற்றியாகவும், சஞ்சீவி ரெட்டியின் தோல்வி நிஜலிங்கப்பாவின் தோல்வியாகவும் வரலாற்றில் பதிவானது.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு வாக்களிக்காதது மட்டுமல்ல, எதிராக நின்றவரை வெற்றிபெறவும் வைத்தது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று நிஜலிங்கப்பா போன்றவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். இந்திரா உள்பட அவரது ஆதரவாளர்கள் பலருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ''காங்கிரஸ் கட்சி உடைவதையோ, சிலர் வெளியேற்றப்படுவதையோ, நான் விரும்பவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலோடு தொடர்புபடுத்தி ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முயற்சி செய்தால், கட்சியின் அழிவுக்கு வழிவகுத்துவிடும்'' என்று இந்திரா பயமுறுத்தத் தொடங்கினார். சிறு அசைவு ஏற்பட்டாலும் கட்சி உடைந்துவிடும் என்பதே நிலைமை.
இரண்டு தரப்பையுமே சமாதானம் செய்ய சிலர் முயற்சித்தார்கள். இதன் அடிப்படையில் 'ஒற்றுமைத் தீர்மானம்’ ஒன்றை நிறைவேற்றி இரண்டு தரப்பையும் அமைதிப்படுத்த விரும்பினார்கள். ஆனால், இந்திராவின் ஆதரவாளர்கள் நிஜலிங்கப்பாவுக்கு எதிரான அஸ்திரங்களை ஏவத் தொடங்கினார்கள். கட்சியின் மேல்மட்டத்தில் நிஜலிங்கப்பா போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு செல்வாக்கு இருந்தாலும், பிரதமர் என்ற அடிப்படையில் ஆட்சியில் இந்திராவின் செல்வாக்கு அபரிமிதமாக இருந்தது. அவரால் பதவியை பெற்றவர்கள், அனுபவித்து வருபவர்கள் சேர்ந்து, 'அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரான நிஜலிங்கப்பாவை நீக்கிவிட்டு, புதிய தலைவரைத் தேர்வுசெய்ய வேண்டும்’ என்று கையெழுத்து இயக்கம் நடத்த ஆரம்பித்தார்கள்.
இதைப் பார்த்து கோபமான நிஜலிங்கப்பா, காங்கிரஸ் காரிய கமிட்டியை அவரே கூட்டினார். இதற்கு இந்திரா வரவில்லை. அவர் தனது வீட்டில் ஒரு கூட்டத்தைக் கூட்டி, காரியக் கமிட்டியை தான் கூட்டப்போவதற்கான தேதியை அறிவித்தார். இது விதிமுறைக்கு புறம்பானது என்று நிஜலிங்கப்பா சொல்ல... நீங்கள் செல்வது எதுவுமே விதிமுறைப்படியானது அல்ல என்று இந்திரா சொல்ல... நேரடி மோதல் எழுந்தது. இருவருமே நேரில் சந்தித்தால் பிரச்னை தீரும் என்று மைசூர் முதலமைச்சர் வீரேந்திர பாட்டீல் நினைத்தார். அதன் அடிப்படையில் இந்திராவும் நிஜலிங்கப்பாவும் டெல்லியில் சந்தித்துப் பேசினார்கள். இதுவும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
இந்திராவைக் கட்சியை விட்டு நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தார்கள். 1969 நவம்பர் 12-ம் நாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடந்தது. மொத்தமுள்ள 21 உறுப்பினர்களில் 11 பேர் வந்திருந்தார்கள். கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய இந்திராவை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவது என இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. புதிய பிரதமரை தேர்வுசெய்ய திட்டமிடப்பட்டது. இதனை இந்திரா ஆதரவாளர்கள் ஏற்கவில்லை.
மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்களில் 220 பேர் இந்திராவை ஆதரித்தார்கள். சிண்டிகேட் காங்கிரஸ் தலைவர்களுக்கு 68 உறுப்பினர் ஆதரவே இருந்தது. எனவே, இந்திராவின் பிரதமர் பதவிக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மொத்த உறுப்பினர்கள் 705 பேர் இதில் 446 உறுப்பினர்கள் இந்திராவை ஆதரித்தார்கள். இவர்கள் சேர்ந்து நிஜலிங்கப்பாவை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஜெகஜீவன் ராமை தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். (இவர்தான் இன்று மக்களவை சபாநாயகராக இருக்கும் மீரா குமாரின் அப்பா).
நிஜலிங்கப்பா தலைமையிலானது காங்கிரஸ் (ஓ) என்றும் இந்திரா தலைமையிலானது காங்கிரஸ் (ஆர்) என்றும் அழைக்கப்பட்டது. முன்னதை ஸ்தாபன காங்கிரஸ் என்றும், பின்னது இந்திரா காங்கிரஸ் என்றும் அழைத்தார்கள். பெருந்தலைகள் வேறு கட்சியாக ஆகிப்போனது இந்திராவுக்கு வசதியாகப் போனது. தனது சர்வ வல்லமையை காங்கிரஸுக்குள் பயன்படுத்தத் தொடங்கினார். இனி அவரைக் கேள்வி கேட்க யாரும் இல்லை கட்சிக்குள். இடதுசாரிகள் நிறுத்திய வி.வி.கிரியை ஆதரித்து வாக்களித்ததால், இந்திரா ஆட்சியைக் காப்பாற்ற இடதுசாரிகளும் ஆதரவாக இருந்தார்கள்.
கட்சியும் ஆட்சியும் அவரது குடும்பச் சொத்தாக மாறத் தொடங்கியதன் அடையாளமாக சஞ்சய் காந்தி வந்தார்

கூட்டணி ஃபார்முலா உருவானது!  
நேருவை அறிந்தவர்கள், நேரு வயதை எட்டியவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுடன் பழகியவர்கள் என ஒரு பெருங்கூட்டம் கட்சியைவிட்டு விலகிப்போனதை வருத்தமாகப் பார்க்கவில்லை இந்திரா. தனக்கு வசதியாகிப் போனதாகவே உணர்ந்தார். அதிகாரக் குவிமையமாக தானும் காங்கிரஸ் தலைமையும் மாறுவது ஒன்றே லட்சியம் என்பதுபோலச் செயல்பட்டார். இந்த நோக்கத்துடன் இந்தியாவையே ஒற்றை ஆட்சி நாடாக ஆக்குவதற்கான முயற்சிகளை எடுத்தார்.
இந்தியா பரந்து விரிந்துபட்ட ஒரு தேசம். இதில் பல மொழிகளைப் பேசும் தேசிய இனங்கள் இருக்கின்றன. வேறு வேறு கடவுள்களை வணங்கும் மதங்களைச் சேர்ந்த மக்கள் இருக்கின்றனர். இந்தப் பரப்பில் வர்த்தகம் செய்த கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய தொழில்பரப்பை மொத்தமாக பிரிட்டிஷாருக்குத் தாரை வார்த்தபோது பல்வேறு சமஸ்தானங்கள், குறுநில மன்னர்கள், பாளையப்பட்டுகள் அனைத்தையும் சேர்த்து அளித்தனர். இதில் பலருடனும் சண்டையிட்டும் சமாதானமாகவும் மொத்த இடத்தையும் பிரிட்டிஷ் ஆட்சி வளைத்து, அதற்கு ஒன்றுபட்ட ஒரு வரைபடத்தை உருவாக்கியது. ஒற்றை ஆட்சிகொண்ட நிர்வாக முறை அமலானது.
ஒரு நாடு முழுவதும் ஒரே ஆட்சியால் ஆளப்பட்டால், அந்த முறைக்கு ஒற்றை ஆட்சி முறை என்று பெயர். ஒரு அரசாங்கத்தின் அனைத்து விதமான அதிகாரங்களும் ஒரு குறிப்பிட்ட மையத்தில், அதாவது மத்திய அரசாங்கத்திடம் இருந்து செயல்படுத்தப்படும் ஒற்றை ஆட்சியை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் செயல்படுத்தினார்கள்.

பல்வேறு மொழி, இன, மத, சாதி, பண்பாடு கொண்ட நாட்டை ஒற்றை ஆட்சி முறை எப்படி பிரதிபலிக்க முடியும்? எனவேதான், 'கூட்டாச்சி தத்துவம் மலர வேண்டும்’ என்று நம்முடைய விடுதலைப் போராட்ட வீரர்கள் குரல் கொடுத்தனர். கூட்டாட்சி என்பது பல்வேறு மாநிலங்கள் இருக்கும், அந்த மாநிலங்களை இணைக்கும் மத்தியக் கூட்டமைப்பு அரசு ஒன்று இருக்கும். ஒரே நாட்டுக்குள் ஒரு மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் இருக்கும். இந்தக் கூட்டாட்சி முறையைத்தான் காங்கிரஸ் கட்சியும் சுதந்திரப் போராட்ட காலத்தில் வலியுறுத்தியது.
'எதிர்கால இந்திய அரசமைப்பு, கூட்டாட்சி அமைப்பாகத்தான் இருக்கும்’ என்று காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் கூறியது. ஆனால், சுதந்திரம் அடையும் காலகட்டம் நெருங்கிவரும் சூழ்நிலையில், 'அநேகமாக விடுதலை பெற்ற இந்தியா ஒரு கூட்டாட்சி அமைப்பைக் கொண்ட இந்தியாவாகத்தான் இருக்கும். ஆனால், மிக அதிகமான ஒற்றை ஆட்சி முறைகளும் கட்டுப்பாடுகளும் ஏதோ ஒரு வகையில் அந்தக் கூட்டாட்சி அமைப்பில் இடம்பெற வேண்டும்’ என்று நேரு சொல்ல ஆரம்பித்தார். மாநிலத்தில் அரசுகள் இருந்தாலும் மத்திய அரசிடமே அனைத்து அதிகாரங்களும் அமைய வேண்டும் என்று நேரு நினைத்தார். காங்கிரஸ் கட்சியையும் ஒரு மத்திய மயமாக்கப்பட்ட ஒரு கட்சியாக உருவாக்கினார். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி மாநில காங்கிரஸ் கமிட்டிகள் இருந்தாலும், அனைத்துக்கும் அதிகாரம் பொருந்திய அமைப்பு... அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி. காங்கிரஸ் ஒர்க்கிங் கமிட்டி என்று இதைச் சொல்வார்கள். நடைமுறையில் காங்கிரஸ் காரிய கமிட்டி என்று அழைப்பது இதைத்தான். அனைவரையும் ஆட்டிப் படைக்கும் அதிகாரம் பொருந்தியது இந்தக் காரிய கமிட்டி. இது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரின் கண்ணசைவைப் பார்த்து மட்டுமே இயங்கக் கூடியது. இந்தத் தலைவரைத்தான் காங்கிரஸ் மேலிடம் என்றும் கட்சியின் ஹை கமாண்ட் என்றும் அழைக்கிறோம். மாநில காங்கிரஸ் தலைவர்களாக இருந்தாலும் மாநில அரசின் காங்கிரஸ் முதல்வர்களாக இருந்தாலும், இவர்கள் அனைவருமே இந்த ஹை கமாண்டுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் நினைத்தால் பதவியில் தொடரலாம். மனம் மாறினால் பதவியை இழக்கலாம். மாநிலத் தலைமைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கட்சி மட்டத்தில் முடிவெடுத்த காங்கிரஸ் கட்சி, மாநில அரசுகளுக்கே பெரிய அதிகாரங்கள் எதுவும் இல்லை என்ற சூழ்நிலையைப் படிப்படியாக உருவாக்கவும் செய்தது.
இன்னொன்று... அரசாங்கத்துக்கும் அரசாங்கத்தை ஆளும் கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற சூழ்நிலையையும் காங்கிரஸ் கட்சி உருவாக்கியது.
ஒரு அரசாங்கத்தை, ஒரு அரசியல் கட்சி ஆளலாம். அதற்காக அந்த அரசியல் கட்சியே அரசாங்கமாக ஆக முடியுமா? ஆனால், காங்கிரஸ் அப்படி வித்தியாசம் காண முடியாத அளவுக்கு ஒரு அரசாங்கத்தை ஆளும் அரசாங்க கட்சியாகவே செயல்படத் தொடங்கியது.
இந்தியாவின் நிர்வாக நெறிமுறைகளை ஆய்வுசெய்த வரலாற்று ஆசிரியர்கள் இந்த நுணுக்கமான குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மீது வைக்கிறார்கள். ''காங்கிரஸின் ஆட்சி முறை, ஒரு அரசியல் கட்சிக்கும் அரசுக்கும் இருக்க வேண்டிய எல்லைக் கோட்டை முழுவதும் மங்கச் செய்துவிட்டது'' என்று பேராசிரியர் கே.எம்.பாம்வெல் எழுதி இருக்கிறார். அதாவது, மத்தியில் அதிகாரத்தைக் குவிப்பது, மத்திய ஆட்சிக்கும் அதை ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கும் வித்தியாசம் இல்லாமல் பார்த்துக்கொள்வது - என்ற சூழ்நிலையை நேரு காலத்தில் லேசாக ஆரம்பித்து இந்திரா காலத்தில் அதைக் கெட்டிப்படுத்தினார்கள். 1947-1967 வரை இதில் அசைக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் எழுந்தன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை விட்டு இறங்கி தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததுபோல, பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது.
மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் ஏகபோகம் - 1967-ல் தகர்ந்தது என்றே சொல்லலாம். காங்கிரஸை வீழ்த்த வேண்டுமானால், 'ஒரே வழி எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர வேண்டும்; எந்தக் கட்சியும் எந்தக் கட்சியுடனும் சேரலாம். காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்பது ஒன்றே கொள்கை; மற்றவற்றை, ஓரமாக ஒதுக்கி வைத்துவிட வேண்டும்’ என்ற கூட்டணி ஃபார்முலா அப்போதுதான் உருவானது. உன்னதமான சோஷலிஸ்ட்கள் என்று கொண்டாடப்பட்ட ராம் மனோகர் லோஹியா, வகுப்புவாத ஜனசங்கத்துடனும் வலதுசாரி சுதந்திரா கட்சியுடனும் சேர்ந்தார். 'திராவிட இனவாதம்’ பேசிய அண்ணாவும் 'தமிழ்த் தேசியவாதம்’ பாடிய ம.பொ.சி-யும் மதச் சிந்தனைகள் கொண்ட முஸ்லிம் லீக்கும், வலதுசாரி எண்ணம் கொண்ட ராஜாஜியையும் கம்யூனிச சிந்தனையாளர்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்த்துக்கொண்டு காங்கிரஸை வீழ்த்தப் புறப்பட்ட காலம் அது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அமைத்தது. பஞ்சாபில் அகாலிதளம் தலைமையிலான அரசை, ஜனசங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்து ஆதரித்தார்கள். பஞ்சாப், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைந்த எதிர்க்கட்சி அரசாங்கங்களில் சுதந்திரா கட்சியும் ஜனசங்கமும் சோஷலிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடம்பெற்றன. அரசாங்கத்தில் சேராமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது.
இன்றைக்கு மதச்சார்பின்மைக்கு எதிராக மார்தட்டிக் கிளம்பி இருப்பவர்கள், கடந்த காலத்தில் காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மதவாத சக்திகளுடனும் வலதுசாரிகளுடனும் எந்தக் கூச்சமும் இல்லாமல் கூட்டணி வைத்துக்கொண்டவர்கள்தான் என்பதே வரலாற்றுப் புரிதல்.
இந்திராவுக்கு எதிராக தமிழகம் நீங்கலாக பிற மாநிலங்களில் அமைக்கப்பட்ட கூட்டணி அரசுகள், உள் முரண்பாடுகளால் உதிர ஆரம்பித்தன. 1967 முதல் 1970 வரை பீகாரில் ஏழு அரசுகள், உ.பி-யில் நான்கு அரசுகள், ஹரியானா, மத்தியப்பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளத்தில் தலா மூன்று அரசுகள் அமைந்தன. இந்த உள்குழப்பம் காரணமாக ஏழு மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. இந்த இடைப்பட்ட மூன்று ஆண்டு காலத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 800 எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறியதாகவும் அதில் 150 பேர் அமைச்சர்கள் ஆனதாகவும் ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்த ஸ்திரமற்ற தன்மையை மேலே உட்கார்ந்து இந்திரா ரசித்தார். மாநிலங்களில் அவரது செல்வாக்கு குறைந்தாலும், மத்தியில் அவரது அதிகாரம் பலமாக இருந்தது. 1971 தேர்தலில் 'இந்திராவை ஒழிப்போம்’ என்று ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா, ஜனசங்கம், எஸ்.எஸ்.பி. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன.
நன்றாகக் கவனியுங்கள். 1940-களில் இருந்து எந்த ராஜாஜியும் காமராஜரும் தனித்தனி தீவுகளாக இருந்து மோதினார்களோ... அந்த இருவரும் 1971 தேர்தலில் ஒன்றாகச் சேர்ந்தார்கள். இந்தக் கூட்டணியில் ஜனசங்கமும் இருந்தது. சோஷலிசம் பேசிய காமராஜரும், வலதுசாரி கொள்கை கொண்ட ராஜாஜியும் மதவாதிகளான ஜனசங்கமும் சேர்ந்து கூட்டணி அமைத்து சந்தித்த தேர்தல் அது. இந்த ஜனசங்கம்தான், இன்றைய பாரதிய ஜனதாவின் தாய். இந்தத் தேர்தலில் இந்திராவுடன் கூட்டணி வைத்தார் கருணாநிதி. சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸை வீழ்த்த மெகா கூட்டணி அமைத்த கட்சி அது.
காமராஜரும் ராஜாஜியும் ஜனசங்கமும் சேர்ந்துவிட்டதால், அந்த அணியே வெற்றிபெறும் என்று செய்திகள் பரவியது. சென்னை கடற்கரையில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்கூட்டத்தில் மைக் முன் பேசப் போன காமராஜரை அழைத்து, தன் ஜிப்பாவில் வைத்திருந்த பொட்டலத்தை அவிழ்த்து விபூதியை எடுத்து நெற்றியில் இட்டார் ராஜாஜி. அன்று பேசிய ராஜாஜி, ''ஞானோதயம் வந்த பிறகுதான் யார் நல்லவர் என்று புரிகிறது'' என்றார். ''நான் சொல்வதற்கு கொஞ்சம் கூச்சப்படுகிறேன். திருமணத்துக்குப் பிறகு மகனும் மருமகளும் ஒன்றுபடுவதுபோல நானும் காமராஜரும் ஒரே குடும்பமாகிவிட்டோம்'' என்று ராஜாஜி சொன்னபோது, ஸ்தாபன காங்கிரஸ் வென்று இந்திரா தோல்வியடைந்ததுபோல எல்லோரும் கைதட்டினர்.
அகில இந்திய அளவில் நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து நடத்தப்பட்ட இந்தப் பொதுத்தேர்தலில் இந்திராவுக்கும் காங்கிரஸுக்கும் சாதகமான நிலை (1971-ல்) ஏற்பட்டது. பெரும்பான்மை மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மை பலத்தை இந்திரா பெற்றார். ஒற்றை ஆட்சி தன்மைகொண்ட ஒரு மத்திய அரசை, மாநிலங்களை அடிமையாக மட்டுமே வைத்திருக்கும் மத்திய அரசை உருவாக்க நினைத்தார். ''மத்திய அரசின் கீதத்துக்கு ஏற்ப மாநில அரசுகள் தாளம் போட வேண்டும் என்பது மிகமிகத் தேவையானது'' என்று திருப்பதியில் பேசும்போது பிரதமர் இந்திரா வெளிப்படையாகச் சொன்னார். தான் நினைத்ததே கட்சியிலும், தான் நினைத்ததே ஆட்சியிலும், தான் நினைத்ததே மாநில ஆட்சிகளிலும் என்று இந்திரா செயல்பட 1971 தேர்தல் வழி அமைத்துக் கொடுத்தது.
இதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல; 'இந்திரா நாயகம்’ என்று புதிய பெயரையே சூட்டினார் இரா.செழியன். இந்த யுகத்தின் நாயகனாக 'மாருதி’ காரில் வந்தார் இந்திராவின் இளைய மகன் சஞ்சய்.

Monday, January 20, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை!-Part 6 (இந்திய பிரதமர்கள் )







கர்ம வீரரும் கசந்தார்!  
பெருந்தலைவர் காமராஜரும் கசக்க ஆரம்பித்ததுதான் இந்திரா வாழ்க்கையில் மறைக்க முடியாத வடுவாக இன்று வரைக்கும் இருக்கிறது.
பெரிய விவகாரமாக இருந்தால் எதையும் நான்கு பேராக யோசித்துச் செய்ய வேண்டும் என்பார்கள். படேல் - ராஜாஜி, ஆசாத் ஆகிய மூவரோடுதான் ஆரம்ப காலத்தில் நேரு ஆலோசனை நடத்துவார். அதன் பிறகு சாஸ்திரி - காமராஜ் - இந்திரா ஆகிய மூவரோடுதான் கலந்து ஆலோசனை செய்தார். இதில் காமராஜரின் பிம்பம்தான் இந்திராவை எரிச்சலூட்டுவதாக இருந்தது. ஏனென்றால், நேருவுக்கு இணையாக அகில இந்தியத் தலைவர்கள் அனைவராலும் காமராஜர் மதிக்கப்பட்டார். நேருவிடம் சொல்ல முடியாததையும் காமராஜரிடம் அனைவரும் சொல்வார்கள். நள்ளிரவைத் தாண்டியும் அவரது வீட்டில் ஆலோசனைகள் தொடரும். நேருவுக்கு அடுத்து பிரதமர் யார் என்ற போட்டி நிலவியபோது, சாஸ்திரியைக் கொண்டு வந்ததும் அல்லாமல், அதற்கு எதிராக இருந்த மொரார்ஜி அணியை எழ முடியாமல் ஆக்கிய சாமர்த்தியம் காமராஜருக்கு இருந்தது.
அதேபோல் சாஸ்திரிக்குப் பிறகு யார் பிரதமர் என்ற கேள்வி வந்தபோது, ஏக காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் இந்திராவைவிட்டால் வேறு வழியில்லை என்று சொல்லவில்லை. இந்திரா பெயரை காமராஜர் உச்சரித்ததால்தான் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். காமராஜர் இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை என்பதால் அவர் மீது கூடுதல் பாசம்தான் வந்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ வேறு விதமாக இந்திரா நினைத்தார்.
ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவர்கள் இனி கட்சியில் இருந்தால் அது நம்முடைய பதவிக்கு, நாற்காலிக்கே வினையாகிவிடும் என்று அரசியல் தலைவர்கள் நினைப்பது எந்தக் கட்சியிலும் வாடிக்கைதானே. இதற்கு இந்திராவும் விதிவிலக்கு அல்ல. காரணம், அந்த அளவுக்கு காமராஜர் செல்வாக்கு காங்கிரஸில் கொடிகட்டிப் பறந்தது.
இன்று டெல்லியில் நடக்கும் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் சோனியாவுக்கு என்ன மரியாதை தரப்படுகிறதோ அதைப்போல மரியாதை அன்று காமராஜருக்கு தரப்பட்டு வந்தது. 1963-ல் நடந்த ஜெய்ப்பூர் காங்கிரஸில், 'இனி நம்முடைய தலைவர் காமராஜர்தான்’ என்று அறிவித்தபோது அத்தனை பேரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். அடுத்த ஆண்டு நடந்த புவனேஸ்வர் காங்கிரஸில் ஹீரோவே காமராஜர்தான். இந்தக் காட்சியைப் பார்க்க தமிழ்நாட்டில் இருந்து பலரும் கிளம்ப... சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 'புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு ரயிலே போனது. காமராஜரும் இந்த ரயிலில் போனார். சென்னையில் இருந்து ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வர் வரைக்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும் காங்கிரஸ் தொண்டர்கள் கூடி நின்று கூடை கூடையாகப் பூக்களைத் தூவினார்கள் காமராஜரோடு வந்த 700 பேருக்கும் அந்தந்த ஊரில் காங்கிரஸ் தொண்டர்கள் உணவு கொடுத்து உபசரித்தார்கள். இப்படி வந்து சேர்ந்த காமராஜரை, ஒரிஸ்ஸா தலைவர் பட்நாயக் ரயில் நிலையத்துக்கு வந்து வரவேற்றார். இது 68-வது காங்கிரஸ் என்பதால் 68 குண்டுகள் முழங்கி காமராஜர் வரவேற்கப்பட்டார். பல்வேறு கலைக்குழுவினர் முன்னே நடந்து காமராஜர் அழைத்து வரப்பட்டார்.
மாநாட்டுப் பந்தலிலும் 68 குண்டுகள் முழங்க... 68 அடி உயர கொடிக் கம்பத்தில் காங்கிரஸின் கொடியை காமராஜர் ஏற்ற... ஜோதிக்கு எண்ணெய் ஊற்றிய நேரு... 'நீங்கள் எண்ணெய் ஊற்றுங்கள்’ என்று சொல்ல... அந்த இடமே காமராஜரின் கும்பாபிஷேகமாக இருந்தது.
இதுவரை காங்கிரஸ் தலைவராக இருந்த சஞ்சீவய்யா, 'எனக்குத் தமிழ் தெரியும். தலைவர் காமராஜுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் அளிக்குமாறு பிரார்த்திக்கிறேன்’ என்று சொல்லி மாலையைப் போடுகிறார்.
'ஈவு இரக்கமற்ற அசோகச் சக்ரவர்த்தியை ஒரு மகாபுருஷராக மனம் மாற்றம் செய்த இந்த இடத்துக்கு வந்துள்ளவர்களை வரவேற்கிறேன்’ என்று சொல்லி காமராஜருக்கு மாலை அணிவிக்கிறார் பட்நாயக். 'காமராஜ் ஜிந்தாபாத்’ என்று மூன்று முறை முழக்கமிட்ட பட்நாயக்கின் மகன்தான் இன்றைய ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்.
மாநாட்டில் நடந்து போய்க்கொண்டிருந்த சஞ்சீவி ரெட்டியை தடுத்து நிறுத்திய ஜெகஜீவன்ராம், ''என்னைப் பார்க்க என் அறைக்கு வருவதாகச் சொன்னீர்களே, ஏன் வரவில்லை?'' என்று செல்லமாகக் கடிந்துகொண்டார். ''நான் என்ன செய்வேன்? மாப்பிள்ளைத் தோழன் போல காமராஜுக்குத் தோழனாக நான் இருக்கிறேன். காமராஜுடன் இருப்பதால் ராஜோபசாரம் கிடைக்கிறது'' என்று சஞ்சீவி ரெட்டி சொன்னார் என்றால் நிலைமையைக் கவனியுங்கள்.
காமராஜரைச் சந்திப்பதற்காக அவரது அறைவாசலில் மாஜி மன்னர் ஒருவர் காத்திருந்தார் அவர் பெயர் ராஜா கிருஷ்ண சந்திரமான்சிங் ஹரிச்சந்திர மராத்ராஜ் பிரமார்பரே பாரிகுட் ராஜா என்பதாகும். ''யாரையும் பார்க்க முடியாது'' என்று காமராஜ் அவரைத் திருப்பிஅனுப்பினார் என்றால் கொடி எவ்வளவு தூரம் பறந்தது என்று பாருங்கள்.இவ்வளவையும் இந்திரா பார்த்துக்கொண்டுதான் இருந்தார் புவனேஸ்வரில். இந்த மாநாட்டுக்கு வந்த நேரு உடல் நலிவுற்று திரும்பிவிட்டார். அவருக்கான நாற்காலி, காலியாகவே மேடையில் இருந்தது. அந்த நாற்காலி தனக்கா... அல்லது காமராஜருக்கா? என்று இந்திரா யோசித்திருப்பார்.
இந்த மாநாடு முடிந்ததும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் காமராஜர் சுற்றுப்பயணம் கிளம்பினார். 18 நாட்கள், 300 ஊர்கள், 2000 மைல்கள் கடந்து ஒரு கோடி பேரைச் சந்தித்த அந்தப் பயணத்தில்தான் வட இந்திய மக்கள். 'காலா காந்தி... காலா காந்தி’ என்று அழைத்தார்கள். கருப்பு காந்தியாக அவர் வலம் வரத் தொடங்கினார். இதன் பிறகே நேருவின் மறைவும், சாஸ்திரி பிரதமர் ஆனதும், அவர் மறைந்ததும் நடந்தன. சாஸ்திரிக்குப் பிறகு காமராஜர் பிரதமராக வரவேண்டும் என்று அதுல்யாகோஷ் போன்றவர்கள் யோசனை சொன்னபோது, 'இந்த விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்’ என்று நேருக்கு நேராக மறுத்துவிட்டார். இதுவும் அவரது பெயரை உயர்த்தியது. அதனால்தான் 1964 முதல் 67 வரை இரண்டு முறை அவரால் தலைவராக இருக்க முடிந்தது. இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டு காலத்தில் இந்தியா மூன்று பிரதமர்களை அதாவது நேரு, சாஸ்திரி, இந்திரா ஆகியோரைக் கண்டது. ஆனால் கர்மவீரரை நகர்த்த முடியவே இல்லை.
''காமராஜ் எதை எல்லாம் செய்யச் சொல்கிறாரோ அதையெல்லாம் செய்வேன். அவர் வழிகாட்டுதல்படியே நடப்பேன்'' என்று சொன்ன இந்திரா, அப்படி நடந்துகொள்ளவில்லை. ஆனால் காமராஜர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. 1967 பொதுத் தேர்தல் நெருங்கி வந்ததால் அமைதியாக இருந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. மொத்தம் இருந்த 518 உறுப்பினர்களில் (அன்று எம்.பி-க்கள் எண்ணிக்கை இதுதான்) 282 பேர் மட்டுமே காங்கிரஸ் உறுப்பினர்கள். இந்த தடவையும் பிரதமர் பதவிக்கு இந்திராவை எதிர்த்துப் போட்டியிட்டார் மொரார்ஜி. இந்திராவுக்கும் மொரார்ஜிக்கும் யார் பிரதமர் என்பதற்கான தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் மொரார்ஜியை சமாதானப்படுத்தினார் காமராஜர். ''யார் தோற்றாலும் கட்சி உடையும். காங்கிரஸைக் காப்பாற்ற நீங்கள் போட்டியிலிருந்து விலகித்தான் ஆக வேண்டும்'' என்று காமராஜர் சொன்னதை மொரார்ஜியால் தட்டமுடியவில்லை. போட்டியிலிருந்து விலகினார். இறுதியில், ஏகமனதாக இந்திரா தேர்வு செய்யப்பட்டார்.
இங்குதான் காமராஜரின் ராஜதந்திரம் வெளிப்பட்டது. கடிவாளம் இல்லாத குதிரையாக இந்திராவை விடுவது ஆபத்தானது என்பதைக் கடந்த இரண்டாண்டு காலம் (1966-67) காமராஜருக்கு உணர்த்தி இருந்தது. மொரார்ஜியை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திராவிடம் வலியுறுத்திய காமராஜர், 'அவருக்கு நிதி அமைச்சர் பதவி தரவேண்டும், மேலும் துணைப் பிரதமர் பதவி கொடுத்தால் அமைதியாகிவிடுவார்’ என்று சொன்னார். இதை இந்திரா எதிர்பார்க்கவில்லை. தன்னை பிரதமர் ஆக்குவதற்கு இருந்த அத்தனை தடைக்கற்களையும் நொறுக்கிவிட்டு காமராஜர் நல்ல பாதை போட்டுக்கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடுவார் என்று நினைத்து இந்திரா காத்திருக்க... மொரார்ஜி என்ற சிவப்பு விளக்கை தலையில் கொண்டுவந்து மாட்டுவார் என்று எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?
ஆனால் கேட்டவர் காலா காந்தி ஆச்சே! கர்ம வீரர் ஆச்சே! அப்பாவுக்கே தலைவராக இருந்தவர் ஆச்சே! இன்று நாம் பிரதமர் ஆகி ஆட்சி நம் வசம் வந்தாலும், கட்சி அவர் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது! நினைக்க நினைக்க சிக்கல், சிக்கிக்கொண்டே போனது. வேறு வழியில்லை. மொரார்ஜியை நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு இந்திரா தள்ளப்பட்டார். ஆனால் அன்று முதல் காமராஜர் என்ற பெயர் இந்திராவுக்குக் கசக்க ஆரம்பித்தது.
சினம் கொள்ள வைத்த சிண்டிகேட்!   
''உங்கள் வழிகாட்டுதல்படிதான் இனி நான் நடந்துகொள்வேன்'' - என்று பெருந்தலைவர் காமராஜருக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு இந்தியாவின் தலைமை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்ட இந்திரா அப்படி நடந்துகொள்ளவில்லை.
சிறுசிறு சம்பவங்களில் இந்திரா அப்படி நடந்துகொள்வதை காமராஜர் கண்டுகொள்வதில்லை. ஆனால் நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் நிகழ் காலத்தையும் பாதிக்கும் பல நிகழ்வுகளிலும் இந்திரா இப்படி நடந்துகொள்வதை காமராஜர் சகிக்கத் தயாராக இல்லை.
முக்கியமான முரண்பாடு, இந்திய ரூபாயின் மதிப்பை குறைப்பதில் ஏற்பட்டது. இந்திய ரூபாயின் மதிப்பை திடீரென இந்திரா குறைத்தார். காமராஜர் இதனைக் கடுமையாகக் கண்டித்தார்.
இந்திய ரூபாயின் மதிப்பை எதற்காக இந்திரா குறைத்தார் என்றால்... அன்று இந்தியப் பொருளாதாரம் வேகவேகமாக சீர்குலைந்துகொண்டு இருந்தது. பாகிஸ்தான் ஊடுருவல் காரணமாக நாடும் அச்சுறுத்தலில் இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து உலக வங்கியும், சர்வதேச நிதி ஆணையமும் இந்தியாவுக்கு அதுவரை தந்துவந்த உதவிகளை நிறுத்திவிட்டன. இந்தியாவுக்கு உதவ வேண்டும் என்று கேட்டபோது, 'ரூபாயின் மதிப்பைக் குறையுங்கள்’ என்று இந்த இரண்டு நிறுவனங்களும் நிபந்தனை விதித்தன. இப்படி நிபந்தனை விதிக்க அமெரிக்காவும் தூண்டியது. இதனை ஏற்றுக்கொண்டு இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைத்தால் அந்நிய மூலதனம் நம்முடைய நாட்டுக்குள் வரும் என்று பொருளாதார ஆலோசகர்கள் ஆலோசனை சொன்னார்கள். இதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் இந்திரா, இந்திய ரூபாயின் மதிப்பை 35.5 சதவிகிதமாக குறைத்தார். 1966-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் நாள் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை எதிர்க் கட்சிகள் அனைத்தும் எதிர்த்தன. 'அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணிந்துவிட்டது என்று கண்டித்தன. இவர்களோடு, சேர்ந்து காமராஜரும் இதனை எதிர்த்தார். 'பிரதமர் என்னைக் கலந்துகொள்ளாமல் எடுத்த முடிவு’ என்று வெளிப்படையாகக் கூறினார்.
நடப்பது காங்கிரஸ் ஆட்சி. ஆனால் காங்கிரஸ் தலைவர் காமராஜருக்குத் தெரியாமல் மிகமிக முக்கியமான ஒரு பொருளாதார முடிவு எடுக்கப் படுகிறது. அதுவும் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய முடிவு என்றால் எப்படி இருக்கும்?
''நாணய மதிப்புக் குறைப்பைத் தொழில் வளர்ச்சிபெற்ற நாடுகள் தங்கள் உற்பத்தியில் ஈடுசெய்ய முடியும். ஆனால் விவசாயத்தை மட்டுமே பெரிதாக நம்பியுள்ள நம் நாட்டுக்கு இது மேலும் துன்பத்தையே கொடுக்கும்'' என்பது காமராஜரின் எண்ணம், இதனை இந்திரா மறுத்தார். ''ரூபாயின் மதிப்பைக் குறைத்தால் ஏற்றுமதிகள் அதிகரிக்கும். அந்நிய மூலதனம் அதிகமாக வரும்'' என்பதையே திரும்பத் திரும்பச் சொன்னார் இந்திரா. அமெரிக்காவிடம் அதிகமான நிதியை இந்திரா வேண்டி நின்றார். தருவதற்கு ஒப்புக்கொண்ட அமெரிக்கா, மொத்தமாகத் தராமல் பிய்த்துப் பிய்த்து வழங்கியது. இதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. இந்தியா தனது விவசாயக் கொள்கையை மாற்ற வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்தபோதுதான்  இந்திராவுக்கு லேசான விழிப்பு ஏற்பட்டது. வடக்கு வியட்நாம் மீது அமெரிக்கா தாக்குதல் தொடங்கியபோது முழு விழிப்பு இந்திராவுக்கு வந்தது.
''நாம் ஏதோ ஒரு சுழலில் சிக்க வைக்கப் பட்டோம்'' என்று ஓராண்டு கழித்துத்தான் இந்திரா உணர்ந்தார். ''அது நான் எடுத்த தவறான முடிவு. இதனால் அதிகமான தீங்குதான் ஏற்பட்டன'' என்று பிற்காலத்தில் இந்திரா அந்தத் தவறை ஒப்புக்கொண்டார்.
ஆனாலும், காமராஜர் இந்திராவை விட்டு மனதளவில் விலகத்தொடங்கினார். 1967 தேர்தல் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது தன்னிச்சையாக இந்திரா நடந்துகொள்வதாக காமராஜர் நினைத்தார். ''நான் செய்த தவறு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் எல்லா அதிகாரமும் தன்னிடமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆகவே, யாரையும் எக்காரணத்துக்காகவும் அருகில் நெருங்க விடுவது இல்லை'' என்று காமராஜர் வருந்திப் பேச ஆரம்பித்தார். காமராஜர் எதிர்பார்த்தது மாதிரியே 1967 தேர்தல் காங்கிரஸுக்கு மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. மொத்தமுள்ள 518 நாடாளுமன்றத் தொகுதிகளில் 282 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி பெற முடிந்தது என்பதைவிட முக்கியமானது... அனைத்து மாநிலங்களிலும் அதுவரை ஏகபோகமாக இருந்த காங்கிரஸ் கட்சி தனது பழைய செல்வாக்கை இழந்தது.
பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு, கேரளா எனப் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ். இந்திராவின் தவறான வழிகாட்டுதலும், தன்னிச்சையான நடத்தையுமே இதற்குக் காரணம் என்று நினைத்த காமராஜ், ஒரு கடிவாளம் போட்டார்.
''காங்கிரஸின் கொள்கைகளைத் தெளிவுபட எடுத்துவைக்க வேண்டியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பு. அவற்றை செயல்முறைக்குக் கொண்டுவர வேண்டியது காங்கிரஸ் அரசின் கடமை'' என்ற தீர்மானத்தை காங்கிரஸ் காரியக் கமிட்டியில் வைத்தே நிறைவேற்றினார் காமராஜர். காங்கிரஸ் கட்சி சொல்வதைத்தான், காங்கிரஸ் ஆட்சி செய்ய வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியது இந்தத் தீர்மானம். அதாவது பிரதமர் பதவி அதிகாரம் பொருந்தியது அல்ல. காங்கிரஸ் கட்சித் தலைவரே அதிகாரம் பொருந்தியவர் என்பதைச் சொல்லாமல் சொல்லியது இந்தத் தீர்மானம்.
பிரதமர் ஆவது முக்கியமல்ல; காங்கிரஸ் தலைவராக இருப்பதே அதைவிட முக்கியம் என்பதை உணர்ந்து இந்திரா உழன்றார். அந்த காங்கிரஸ் தலைவர் பதவி எட்டு ஆண்டுகளுக்கு முன் தனக்கு கிடைத்தபோது, ஓராண்டு காலத்தில் அலட்சியமாக ராஜினாமா செய்துவிட்டுப் போனோமே என்று வருந்தினார். மூன்று விதமான சிந்தனைகள் அவரை அலைபாயவைத்தன.
இப்போது தலைவராக இருக்கும் காமராஜரை அந்த இடத்தில் இருந்து நகர்த்த வேண்டும். காங்கிரஸ் தலைவராக தான் அந்த இடத்தில் அமர வேண்டும். தான் வர முடியாவிட்டால், தனக்கு வசதியான தன் பேச்சைக் கேட்கக் கூடிய ஒருவரை கொண்டுவந்துவிட வேண்டும். - இந்த மூன்றும் அவரை தூங்கிவிடாமல் தவிக்கவைத்தன.
காமராஜர் மூன்றாவது முறையும் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால் அவரை எப்படி எதிர்கொள்வது என்று நினைத்தார் இந்திரா. ஆனால், அவருக்கு கஷ்டம் கொடுக்கவில்லை காமராஜர். இரண்டு முறை தலைவர் பதவியில் இருந்த காமராஜருக்கு மூன்றாவது முறையும் இதனை அடைய விருப்பம் இல்லை. முதல்முறை இருந்த மகிழ்ச்சி இரண்டாவது தடவை இருந்தபோது இல்லை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்தார். ஆனால், அவரே தலைவராக இருக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள். காமராஜர் என்ன நினைக்கிறார் என்பதை அறிய அவரைச் சந்தித்தார் இந்திரா. அவரிடமும் தனது நிலைப்பாடு இதுதான் என்பதை தெளிவுபடுத்தினார். இந்திராவுக்கு முதல் தடை உடைந்தது.
அடுத்து தன்னை கொண்டுவர காமராஜ் முயற்சிப்பாரா என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எந்தப் பேச்சையும் காமராஜர் எழுப்பாதது அவருக்கு ஏமாற்றமே. காமராஜர் போட்டியிடவில்லை என்றதும் தலைமைப் பதவிக்கு எஸ்.கே.பாட்டீல், அதுல்யா கோஷ் போன்றவர்கள் முயற்சித்தார்கள். 'யாரைத் தேர்ந்தெடுத்தாலும் போட்டியின்றித் தேர்ந்தெடுப்பதே கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது’ என்று காமராஜ் சொன்னார்.
எஸ்.கே.பாட்டீல், மோகன் தாரியா, அனுமந்தயா ஆகிய மூவரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். போட்டி என்று வந்துவிட்டது. அதுல்யா கோஷ், மனு தாக்கல் செய்யவில்லை. காமராஜரைச் சந்தித்த இந்திரா, சில பெயர்களை பரிந்துரை செய்தார். சுகாதியா, நந்தா, சஞ்சீவையா ஆகியோர் தலைவராக வந்தால் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று இந்திரா கோரிக்கை வைத்தார். ஆனால் காமராஜரின் பார்வையும், பாதையும் வேறு மாதிரி இருந்தது. தலைவர் பதவிக்கு மனுச் செய்திருந்தவர்களையும் ஒதுக்கினார். இந்திரா கொடுத்த பட்டியலையும் நிராகரித்தார். மைசூருக்கு தகவல் அனுப்பினார். மறுநாள் அந்த மனிதர் டெல்லிக்கு வந்தார். நள்ளிரவு நேரம்... 'நீங்கள்தான் அகில இந்திய காங்கிரஸின் அடுத்த தலைவர். நாளை காலை என்னை வந்து சந்தியுங்கள்’ என்று சொல்லி அவரை அனுப்பினார். மறுநாள் காலை வந்த அவரை அழைத்துச் சென்ற காமராஜ், இந்திரா முன் உட்கார வைத்தார். அவர்தான் நிஜலிங்கப்பா.
தன்னால் பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவரைக்கூடத் தலைவராக்க காமராஜ் விரும்பவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், டெல்லி செல்வாக்கு இல்லாத நிஜலிங்கப்பாவை பின்னர் நம்மால் சமாளிக்க முடியும் என்று இந்திரா திருப்திப்பட்டுக்கொண்டார். தான் தலைவராக வேண்டும் என்று நினைத்தார். நடக்கவில்லை. தான் விரும்பியவரை தலைவராக்க வேண்டும் என்று நினைத்தார். அதுவும் செயல்படவில்லை. காமராஜர் மீண்டும் தலைவராகக் கூடாது என்று விரும்பினார். அது மட்டும் நடந்தது. பரவாயில்லை, சமாளிப்போம் என்று சமாதானம் அடைந்தார். ஆனால் நிஜலிங்கப்பாவின் நிஜமுகம் சில மாதங்களிலேயே இந்திராவுக்குத் தெரிய ஆரம்பித்து. அவர் முகம் இருளத் தொடங்கியது.
தன்னிடம் இருக்கும் பிரதமர் பதவியையே நிஜலிங்கப்பா பறிந்துவிடுவாரோ என்ற பீதி வந்துவிட்டது இந்திராவுக்கு. காமராஜருக்காவது, இது நேருவின் மகள் என்ற பாசம் இருந்திருக்கும். ஆனால் நிஜலிங்கப்பா, நேருக்கு நேராக முஷ்டியை உயர்த்தினார். தலைமைக்குக் கட்டுப்பட்டதுதான் கட்சி என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் நிரூபிக்க முயற்சித்தார். அதனை தயவு தாட்சண்யம் இல்லாமல் வெளிப்படுத்தவும் தொடங்கினார்.
பெரிய தலைவர்கள் கூடிக்கூடி உட்கார்ந்துகொண்டு தனக்கு அறிவுரை சொல்வதை அவஸ்தையாக நினைத்தார் இந்திரா. இந்தப் பெருந்தலைவர்கள் 'சிண்டிகேட்’ என அழைக்கப்பட்டார்கள். இந்திரா ஆதரவாளர்கள் இதனை கேலிச் சொல்லாகவும் பயன்படுத்தினார்கள்.
''1962-ல் சீனப் படையெடுப்பு நிகழ்ந்த பின், அதனால் மிகவும் மனம் நொந்துபோன நேருஜி, தேசத்தின் எதிர்காலம் பற்றி மிகவும் அதிகமாகக் கவலைப்படத் தொடங்கினார். அந்த நாட்களில் நேருஜி, என்னையும் சஞ்சீவி ரெட்டி போன்ற நண்பர்கள் சிலரையும் அடிக்கடி அழைத்து பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிப்பார். இப்படி அவருடன் ஆலோசனை நடத்துவதற்காக நாங்கள் அடிக்கடி சென்று வந்தபோது, இந்த ஆலோசனைக் குழுவை பத்திரிகையாளர்கள் 'சிண்டிகேட்’ என்று பெயரிட்டு அழைத்தார்கள். இந்த சிண்டிகேட்தான் நேருவின் மறைவுக்குப் பிறகு லால்பகதூரைப் பிரதமராக்க முடிவு செய்தது. இதே சிண்டிகேட்தான் அவர் மறைவுக்குப் பிறகு இந்திராவையும் பிரதமர் ஆக்கியது'' என்று 'சிண்டிகேட்’க்கு விளக்கம் சொன்னார் காமராஜர்.நேருஜியின் 'சிண்டிகேட்’ இந்திராவை சினம்கொள்ள வைத்தது. அதற்கு நிஜலிங்கப்பாவே நிஜக் காரணமாய் ஆனார்.

பெரியாரை பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கன்களேன் -சாவி (பெரியார் பேசுகிறார்)


பெரியார் பேசுகிறார் 1965
திருச்சி பெரியார் மாளிகைக்குள் காலடி எடுத்துவைக்கும்போதே, எங்கள் பார்வையில் பட்ட கறுப்புச் சட்டை இளைஞர், ''ஐயா உள்ளேதான் இருக்கார். நீங்க வரப்போறீங்கனு சொல்லியிருக்கேன். உள்ளே போங்க'' என்று புன்சிரிப்போடு வழி காட்டுகிறார்.
உள்ளே... கட்டிலின் மீது சம்மணமிட்டு அமர்ந்திருந்த பெரியாரைப் பார்த்ததும், ''வணக்கம் ஐயா!'' என்று கும்பிடுகிறோம்.
''வாங்க... வாங்க, ரொம்ப சந்தோசம்...'' எங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றபடியே ''இப்படி உட்காருங்க'' என்கிறார்.
சாதாரண வெள்ளைப் பனியன். நாலு முழம் வேட்டி. வயிற்றின் நடுப் பாதியில் வேட்டியின் இரு முனைகளையும் பனியனுக்கு மேல் கட்டியிருக்கிறார். அந்த முனைகள் இரண்டும் அவ்வப்போது தளர்ந்துபோகும் நேரங்களில் கைகள் தாமாகவே அவற்றை இறுக்கிவிடுகின்றன. நாய் ஒன்று வீட்டுக்குள்ளேயே குறுக்கும் நெடுக்கும் அலைகிறது, சிற்சில சமயங்களில் பலமாகக் குரைத்து வீட்டையே அதிரவைக்கிறது. பெரியாரின் பேச்சு எதனாலும் தடைபடவே இல்லை.
''ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து வந்திருக்கோம்.''
''தெரியுமே. வாசன் அவங்களை எனக்கு ரொம்பக் காலமாத் தெரியும். நான் 'குடியரசு’ பத்திரிகை ஆரம்பிச்ச காலத்திலே அடிக்கடி சந்திச்சுக்குவோம். 'கல்கி’ கிருஷ்ணமூர்த்தியும் என்கிட்டேதான் கதர் போர்டிலே கிளார்க்கா இருந்தார். ரொம்ப யோக்யமானவரு. கதர் போர்டு ஆட்டம் கொடுத்ததும், நான்தான் திரு.வி.க-வுக்கு கடுதாசி கொடுத்தனுப்பிச்சேன். 'நவசக்தி’யிலே சேர்ந்து கொஞ்ச நாளைக்கு வேலை செஞ்சாரு. அப்புறம்தான் விகடன்லே சேர்ந்துட்டார்.''
''ராஜாஜியோடு தங்களுக்குப் பழக்கம் ஏற்பட்டது எப்போது?''
''அதுவா? அந்தக் காலத்துலே ஈரோட்லே பி.வி.நரசிம்மய்யர்னு எனக்கு ரொம்ப வேண்டிய வக்கீல் ஒருத்தர் இருந்தார். ஈரோட்லே நான் சேர்மனா இருந்தப்போ, குடியானவங்க வழக்கெல்லாம் என்கிட்டே நிறைய வரும். அந்த கேஸ் எல்லாம் அவருக்கு அனுப்புவேன். யாருக்கு? நரசிம்மய்யருக்கு. நான் சேர்மனா வர்றது சில பேருக்குப் பிடிக்கலே. பொறாமையினாலே எம் பேரிலே கலெக்டருக்கு பெட்டிஷன் எழுதிப் போட்டாங்க. சேர்மன் பதவின்னா இப்ப மாதிரி எலெக்ஷன்ல ஜெயிச்சதும் நேராப் போயி சேர்ல உட்கார்ந்துட முடியாது. கலெக்டர் சிபாரிசு செய்யணும்னு வெச்சிருந்தாங்க. அந்தச் சமயத்துலே சர் பி.ராஜகோபாலச்சாரிங்கிறவர் சப்-கலெக்டரா இருந்தார். அவருக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியுமானதாலே, பெட்டிஷனைப் பொய்னு தள்ளிட்டு என்னை சேர்மனாக்கிட்டார்.''
''ஆமாம். அந்த மாதிரி உங்களைப் பற்றித் தவறா பெட்டிஷன் எழுதிப் போட்ட ஆசாமி யார்?''
''சீனிவாச முதலின்னு ஒரு வக்கீல். ஒரு நான்பிராமின் வக்கீலாயிருக்காரே, முன்னுக்குக் கொண்டாருவோம்னு நான்தான் அவரை முன்னுக்குக் கொண்டுவந்தேன். ஆனால், அவரே என் பேரில் பெட்டிஷன் கொண்டுவந்தார். அப்ப ராஜகோபாலாச்சாரி சேலத்துலே வக்கீல். கெட்டிக்கார வக்கீல்னு சொல்வாங்க. அதனாலே என்கிட்டே வர்ற கேஸெல்லாம் அவருக்கு அனுப்பிவைப்பேன். அந்தப் பழக்கத்துலே அவர் வரப் போக இருந்தாரு. எங்க வூட்டுக்கு அடிக்கடி வருவார். அவரும் அப்ப சேலத்துலே சேர்மன்.''
''எந்த வருஷம் அது?''
''தொள்ளாயிரத்துப் பத்தொன்பதுனு ஞாபகம்...''
''வரதராஜுலு நாயுடு கேஸ் சம்பந்தமா அவர் மதுரைக்குப் போறப்ப நீங்களும் கூடப் போறது உண்டு இல்லையா?''
''ஆமா; போயிருக்கேன். 'நீ சேர்மன் பதவியை விட்டுட்டு காங்கிரஸ்ல சேர்ந்துடு. நானும் விட்டுடறேன். ரெண்டு பேரும் சேர்ந்து பொதுப் பணி செய்யலாம்’னார். வரதராஜுலு நாயுடுவும் வற்புறுத்தினார். சரின்னு விட்டுட்டேன். அப்ப காங்கிரஸ் சத்தியமூர்த்தி 'குரூப்’ கையிலே இருந்தது. அமிர்தசரஸ் காங்கிரஸின்போது காங்கிரஸ் பிளவுபட்டு ரெண்டு குரூப்பாப் பிரிஞ்சுட்டது. சத்தியமூர்த்தி, ரங்கசாமி ஐயங்கார், திலகர் இவங்க ஒரு 'குரூப்’... காந்தி, ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராஜன் இவங்களெல்லாம் ஒரு 'குரூப்’.
நான் காங்கிரஸ்ல சேர்ந்ததே அமிர்தசரஸ் காங்கிரஸுக்கு அப்புறம்தான். அதுவரைக்கும் ராஜகோபாலச்சாரியும் நானும் நண்பர்கள்தான். அப்புறம்தான் சேர்ந்து வேலை செஞ்சோம்.''
''அதுக்கப்புறம் என்ன ஆச்சு?''
''எங்க நட்பு வளர்ந்தது. காங்கிரஸும் வளர்ந்தது. எங்களுக்குள்ளே ஒற்றுமையாயிருந்தோம். நான் கோவை ஜில்லா காங்கிரஸ் காரியதரிசி. அப்பவெல்லாம் செகரெட்டரிதான்; பிரசிடென்ட் கிடையாது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வந்தது. அப்பவும் நான்தான் செகரெட்டரி.''
''ஆமாம்; ராஜாஜி உங்களை எதுக்கு காங்கிரஸுக்கு இழுத்தார்?''
''ஜஸ்டிஸ் பார்ட்டிக்கு எதிரா காங்கிரஸ் வளர்றதுக்கு காங்கிரஸ்ல நான்பிராமின்ஸ் இருக்காங்கன்னு காட்டிக்க வேண்டியிருந்தது.''
''உங்களோடு வேறு யாரும் இல்லையா?''
''இருந்தாங்க... திரு.வி.க-வும் வரதராஜுலு நாயுடுவும் இருந்தாங்க. எங்க மூணு பேரையும்தான் எந்தக் கூட்டத்துலேயும் முதல்லே பேச விடுவாங்க. வரதராஜுலு நாயுடு பேச்சில் வசவு இருக்கும். திரு.வி.க. பேச்சு தித்திப்பா இருக்கும். நல்ல தமிழ் பேசுவார். என் பேச்சில் பாயின்ட் இருக்கும். பாயின்ட்டாப் பேசி கன்வின்ஸ் பண்ணுவேன். நாங்க மூணு பேரும் பேசினப்பறம்தான், சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரி எல்லாம் எழுந்து பேசுவாங்க...''
''இந்த 'பிராமின் - நான்பிராமின்’ தகராறு முதல் முதல் எப்ப ஏற்பட்டது?''
''எப்படி வந்தது வினைன்னா - வ.வே.சு.ஐயரால் வந்தது. சேரன்மாதேவியில் 'நேஷனல் காலேஜ்’னு ஒண்ணு ஆரம்பிச்சு, வீரர்களை உற்பத்தி செய்யப்போறதாச் சொன்னாங்க. பரத்வாஜ் ஆசிரமமோ என்னவோ அதுக்குப் பேர். அந்த குருகுலத்துக்கு எல்லாரும் ஆதரவு கொடுத்தாங்க. சிங்கப்பூர், மலேயாவில் இருந்தெல்லாம் பணம் வசூல் செஞ்சாங்க. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலேருந்தும் பணம் கேட்டாங்க. நான் அப்ப தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செகரெட்டரி. ராஜாஜி 'நாயக்கரைக் கேளு’ன்னுட்டார். வ.வே.சு.ஐயர் வந்து உட்கார்ந்துக்கிட்டு இருபதாயிரம் வேணும்னார். நான், 'முதல்லே பத்தாயிரம் இருக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்’னு சொன்னேன். ராஜாஜி சரின்னுட்டார்.''
வ.வே.சு.ஐயர் அன்னிக்கு சாயந்திரமே பணம் வேணும்னு அவசரப்படுத்தினார். ஐயாயிரம்தான் கொடுத்தனுப்பிச்சேன்...''
''பத்தாயிரம் இருக்கட்டும்னு சொன்னீங்களே...''
''ஆமாம்; அப்படித்தான் சொன்னேன். ஆனா, எனக்கென்னவோ சரியாப் படலே, அதனாலே ஐயாயிரம்தான் கொடுத்தேன். நான் சந்தேகப்பட்டதுக்குத் தகுந்தாப்பலேயே காரியம் நடந்துட்டுதே!''
''என்ன ஆச்சு?''
''முதல் மந்திரியாயிருந்தாரே ஓ.பி.ஆர்.ரெட்டியார்...''
''ஆமாம்...''
''அவர் மகன் அந்தக் குருகுலத்துலே படிச்சுட்டிருந்தான். அடுத்த மாசமே அவன் வந்து கம்ப்ளெய்ன்ட் சொன்னான். 'என்னடா?’னு கேட்டோம். 'குருகுலத்துலே பார்ப்பனப் பிள்ளைங்களையும் எங்களையும் வித்தியாசமா நடத்துறாங்க. அவங்களுக்கு இலை போட்டு சாப்பாடு. எங்களுக்கு பிளேட். அவங்களுக்கு உப்புமா, எங்களுக்கு பழைய சோறு. அவங்க உள்ளே படுக்கணும். நாங்க வெளியே படுக்கணும். அவங்களுக்கு ஒரு பிரார்த்தனை. எங்களுக்கு ஒரு பிரார்த்தனை’னான். அவ்வளவுதான். ஜாதி வேற்றுமையை வளர்க்கிற குருகுலத்துக்கு இனி பணம் கிடையாதுன்னுட்டேன். அத்தோடு இந்த சங்கதியைப் பற்றி ராஜகோபாலாச்சாரிக்குத் தெரியப்படுத்தினேன். அவர் உடனே வ.வே.சு.ஐயரைக் கூப்பிட்டு விசாரிச்சாரு. 'என்ன இது? காலம் என்ன? இதான் தேசியமா? தேசாபிமானமா? கொஞ்சம்கூட நல்லாயில்லே’னு கோபிச்சுக்கிட்டார்.''
''வ.வே.சு.ஐயர் அதுக்கு என்ன சொன்னார்?''
''என்ன சொன்னாரு! 'நான் என்ன செய்யட்டும்? குருகுலம் ஆரம்பிச்சிருக்கிற இடம் ஒரு வைதீக சென்டர். அதனாலே அந்த இடத்துல அப்படி நடக்க வேண்டி வந்துட்டுது’னு சமாதானம் சொன்னார். அப்ப ரெண்டு ஜாயின்ட் செகரெட்டரிங்க. கே.எஸ்.சுப்பிரமணியம்னு கடையத்துக்காரர் ஒருத்தர். அவர் ஒரு செகரெட்டரி. வ.வே.சு.ஐயர், எனக்குத் தெரியாம அவர்கிட்டே போய் இன்னொரு ஐயாயிரத்துக்கு செக்கை வாங்கிட்டுப் போயிட்டார். அதுக்குப் பின்னாலே ஒரு மாசம் கழிச்சுத்தான் இந்த சங்கதி அம்பலத்துக்கு வந்தது.''
''கடையத்துக்காரர் எப்படி செக் கொடுக்கலாம்?''
''செகரெட்டரி டு சைன்’ங்கிறது ரெசல்யூஷன். கடையத்துக்காரர் ஒரு செகரெட்டரிங்கிறதால, அவர்கிட்டே தந்திரமா கையெழுத்து வாங்கிட்டுப் போயிட்டார்.''
''அந்தக் கடையத்துக்காரர் இப்போ எங்கே இருக்காரு..?''
''அவரா! அவர் அப்ப எடுத்த ஓட்டம்தான். அப்புறம் எங்கே போனாரோ? ஆசாமி திரும்பி வரலே.
ராஜாஜிக்கு அப்பவே எல்லாம் புரிஞ்சுபோச்சு, கோளாறு வந்துட்டுதுன்னு. அதுக்கப்புறம் நான் சும்மா இருக்க முடியுமா? அந்த விஷயத்தை ஒரு முக்கியப் போராட்டமா எடுத்துக்கிட்டேன். அதுக்கு சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்னு பேர். டாக்டர் வரதராஜலு நாயுடு, திரு.வி.க. இவங்க ரெண்டு பேரும் எனக்கு ஆதரவு கொடுத்தாங்க. வரதராஜுலு நாயுடுவே இந்தப் போராட்டத்தை நடத்தினார். குருகுலம் ஒழிஞ்சது.''
''ராஜாஜி உங்க போராட்டத்தில் சேர்ந்தாரா?''
''சொல்லிக்கிட்டு வர்றேனே கேளுங்க... வரதராஜுலு நாயுடு காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமா வகுப்பு உணர்ச்சியைத் தூண்டுற மாதிரி நடந்துக்கிறார்னு அடுத்த கமிட்டி மீட்டிங்ல ராஜாஜி ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். எனக்கு அது சரியாப் படலே. வோட்டுக்கு விட்டாங்க. ஈக்வல் ஓட்டாச்சு. நான் தலைவன்கிற முறையில் ஒரு வோட்டைப் போட்டு ராஜாஜி தீர்மானத்தைத் தோற்கடிச்சேன். ராஜாஜி ராஜினாமா பண்ணிட்டார். என்.எஸ்.வரதாச்சாரி, சாமிநாத சாஸ்திரி, டாக்டர் ராஜன், கே.சந்தானம், ஹாலாஸ்யம் இவங்களெல்லாம் ராஜாஜி பக்கம் சேர்ந்துட்டாங்க. நான், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், வரதராஜுலு நாயுடு எல்லாம் ஒரு பக்கம். எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை பச்சையா நான் கண்டிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டுது...''
''க்ளிக்!'' - போட்டோகிராபர் படமெடுத்துக் கொள்கிறார்.
இந்தச் சமயம் கறுப்புச் சட்டை அணிந்த இளைஞர் பெரியசாமி, காபி கொண்டுவந்து எங்கள் முன் வைக்கிறார்.
நானும் நண்பர் மணியனும் அந்தக் காபியை எடுத்து அருந்துகிறோம்.
''சாதி வேற்றுமையெல்லாம் இப்போ ரொம்பக் குறைஞ்சுபோச்சு. முப்பது வருஷங்களுக்கு முன்னாலே பிராமணர்கள் யாராவது உங்க வீட்டில் இந்த மாதிரி வந்து சாப்பிட்டிருக்காங்களா?'' - இவ்வாறு நான் கேட்டதும் பெரியார் ஒரு கணம் என்னை உற்றுப் பார்க்கிறார்.
''வெங்காயம்! அதுக்கு இத்தனை வருஷமா நான் செய்துக்கிட்டு வர்ற பிரசாரம்தான் காரணம். இன்னும் ரொம்ப மாறணும். புத்தனுக்கு அப்புறம் பகுத்தறிவுப் பிரசாரம் செய்றவன் யாரு? நான் ஒருத்தன்தானே!'' -
உணர்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் பெரியாரின் கைகள், தளர்ந்துவிட்ட வேட்டியின் முடிகளைத் தாமாகவே இறுக்கிக் கட்டுகின்றன.
''அந்தக் காலத்துல எங்க வீட்டுக்கு ஒரு ஐயர் வருவார். எங்க அம்மா ரொம்ப ஆசாரம். ஒருநாள் அந்த ஐயர் தாகத்துக்குத் தண்ணி வேணும்னு கேட்டார். குடுத்தோம். அந்த தண்ணியைக் குடிக்க வேண்டியதுதானே? கொஞ்சம் மோர் இருக்குமானு கேட்டார். மோர் கொண்டுவந்து கொடுத்தோம். அந்தத் தண்ணியிலே கொஞ்சம் மோரை ஊத்திக் குடிச்சாரு. அந்த மோர், அந்தத் தண்ணியைச் சுத்தப்படுத்திட்டுதாம். அதெப்படி சுத்தப்படுத்தும்? தண்ணி எங்க வூட்டுது. மோரும் எங்க வூட்டுது. எங்க வூட்டு மோர், எங்க வூட்டுத் தண்ணியைச் சுத்தப்படுத்திடுமா?'' - சிரிக்கிறார் பெரியார்.

''வைக்கம் வீரர்னு உங்களுக்கு எப்படிப் பேர் வந்தது?'' - மணியன் கேட்கிறார்.
''அதுவா? அது ஒரு கதை... சொல்றேன். நீங்க என்னமோ கேட்டீங்களே, என்னது?'' என்று என் பக்கமாகத் தலையைச் சாய்த்து காதைக் கைவிரல்களால் அணைத்துக் கேட்கிறார்.
'' 'காந்தியை நீங்க சந்திச்சிருக்கீங்களா?’னு கேட்டேன்...'' என்கிறேன் நான்.
''எங்க வூட்டுக்கே வந்து தங்கியிருக்காரே. சட்டசபைப் பிரவேசத்துக்கு காங்கிரஸை அவர் அனுமதிச்சபோது நான் 'கூடாது’னு தடை பண்ணினேன்; எதிர்த்தேன்; வாதாடினேன். அப்ப அவர் சொன்னார்: ''நீ என்ன இப்படிச் சொல்றே? மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் இவங்களையெல்லாம் நினைச்சுப் பாக்கணும். அவங்களையெல்லாம் விட்டுட முடியுமா? உனக்கு வேணாம்னா, பேசாம இருந்துக்கோ''ன்னாரு. ஏன் அப்படிச் சொன்னாருங்கிற ரகசியம் எனக்குத்தான் தெரியும். என்ன ரகசியம்னா, காங்கிரஸ், சட்டசபைக்குப் போகலேன்னா ஜஸ்டிஸ் கட்சியே நிலைச்சு இருந்துடுங்கிற பயம்தான்!''
''அதுக்கப்புறம் நீங்க என்ன செய்தீங்க?''
''சட்டசபைக்குள் போறதா இருந்தா அம்பது பெர்சன்ட் 'நான் பிராமின்ஸ்’க்கு ஒதுக்கணும்னு ஒரு தீர்மானம் கொண்டு வந்தேன். 'இதைக் கொள்கையா வேணும்னா வெச்சுக்குவோம். தீர்மானமாப் போட வேண்டாம்’னு ராஜாஜி கேட்டுக்கிட்டார். 1920-ல் திருநெல்வேலி மகா நாட்டிலே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வற்புறுத்தி ஒரு தீர்மானம் கொண்டுவந்தேன். அப்ப தலைவராயிருந்த எஸ்.சீனிவாசயங்கார் அதை அனுமதிக்காமத் தடுத்துட்டார். அப்புறம் திருப்பூர்ல, சேலத்துல, திருவண்ணாமலையில எல்லா இடத்துலேயும் தடுத்துட்டாங்க...''
''உங்க தீர்மானத்தை அதோடு விட்டுட்டீங்களா?''
''விட்டுடுவனா? திரு.வி.க-வை காஞ்சீபுரம் மகா நாட்டுக்குத் தலைவராக் கொண்டு வந்தேன். சட்டசபைக்குள் போறதா இருந்தா அம்பது பெர்சன்ட் நான் பிராமின்ஸ்க்கு ஒதுக்கணும்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்தேன். திரு.வி.க. 'பாலிஸிக்கு விரோதம்’னு சொல்லி பிரசிடென்ட்டுங்கிற முறையிலே 'டிஸ் அலவ்’ பண்ணிட்டார். நான் கொண்டுவந்த தீர்மானத்தை நான் கொண்டு வந்த தலைவரே அனுமதிக்க மறுத்துட்டார். எதிரிங்ககிட்டேருந்தும் எனக்கு அடி. என் ஆளுகிட்டேருந்தும் அடி. ஆக, ரெண்டு பக்கத்திலேருந்தும் அடி.''
''ரொம்பச் சங்கடம்தான்!''
''ஆனாலும் தீர்மானத்தை விட்டுடலே... ஓபன் மகாநாட்டிலே கொண்டுவர்றதுக்குப் பாடுபட்டேன். ஓபன் மகாநாட்டிலே தீர்மானத்தை எடுத்துக்கணும்னா, அம்பது பேர் கையெழுத்து வேணும்னாரு. அம்பது என்ன? இந்தா எழுபத்தைந்து கையெழுத்துனு சொல்லிக் கையெழுத்தும் வாங்கிட்டுப் போனேன். திரு.வி.க., பயந்துபோய் தீர்மானத்தை அனுமதிக்க மறுத்துட்டார். எனக்குக் கோவம் வந்துட்டுது. 'முதலியாரே! உங்களை யோக்கியன்னு நினைச்சேன். 'கையெழுத்து வாங்கிட்டு வா’னு சொல்றப்போ சொந்த புத்தி, இப்ப வேற புத்தியா?’னு கேட்டுட்டு, இப்படித்தான் துண்டை எடுத்து தோள் மேலே போட்டுக்கிட்டு (பக்கத்திலுள்ள டவல் ஒன்றை எடுத்துத் தோள் மீது போட்டுக்கொள்கிறார்.) வெளியே நடந்துட்டேன்.
அப்புறம் எல்லாருமாப் பஞ்சாயத்துக்கு வந்தாங்க. காங்கிரஸ்காரங்க போக்கு எனக்குப் பிடிக்கலே. வெளியே வந்துட்டேன். ஆனா, அதுக்கப்புறமும் கொஞ்ச நாளைக்கு காங்கிரஸ்காரனாத்தான் இருந்தேன். அப்படி இருந்துக்கிட்டே காங்கிரஸை எதிர்த்துப் பிரசாரம் பண்ணினேன். காங்கிரஸை எதிர்த்தாலும் ஜஸ்டிஸ் கட்சிக்குச் சாதகமா இல்லே.''
''உத்தியோகம், காலேஜ் அட்மிஷன் இதெல்லாம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருப்பது சரினு நினைக்கிறீங்களா? திறமையைப் பார்த்துத் தேர்ந்தெடுத்துக்கட்டுமே...'' - மணியன் கேட்கிறார்.
பெரியாருக்குக் கோபம் வந்துவிடுகிறது.
''என்ன திறமை வேண்டியிருக்குது? வெங்காயம்! ஜெயிலுக்குள்ளே போய்ப் பாருங்க. ஜாதிக் கணக்குப்படித்தானே அங்கேயும் இருக்காங்க. பார்ப்பன ஜாதி கொஞ்சம் குறைச்சலா இருக்கும். அதுக்குக் காரணம் என்னன்னா, அவன் கொஞ்சம் பயந்தவன். கொலை, கொள்ளைக்குப் போவ மாட்டான். அவ்வளவுதானே? மத்தப்படி ஜாதி விகிதாசாரப்படிதானே ஜெயில்லயும் இருக்காங்க? ஆனபடியாலே சர்க்கார் உத்தியோகம், காலேஜ் அட்மிஷன் இதிலேயும் ஜாதி விகிதாச்சாரம் இருந்துட்டுப் போவட்டுமே...''
''காங்கிரஸை விட்டு விலகினீங்களே... அப்புறம் என்ன ஆச்சு?''
'' 'கம்யூனல் ஃபீலிங்’ வளர ஆரம்பிச்சது. சி.என்.முத்துரங்க முதலியார், சி.பி.சுப்பையா, காமராஜ் இவங்களை வெச்சு காங்கிரஸை வளர்த்துட்டாங்க...'' சட்டென்று நண்பர் மணியன் பக்கமாகத் திரும்பி ''நீங்க என்னமோ கேட்டீங்களே? ஆமா... வைக்கம் சங்கதி... சொல்றேன், கேளுங்க...'' என்கிறார்.
காலை நாங்கள் பெரியார் மாளிகைக்குள் சென்றபோது மணி ஒன்பதரை இருக்கலாம். அப்போது அவர் கட்டிலின் மீது உட்கார்ந்திருந்தார். எங்களுடன் பேசி முடிக்கும்போது மணி இரண்டு. அந்த இடத்தில் எப்போது உட்கார்ந்தாரோ தெரியாது. எங்களுடன் பேசி முடிக்கும் வரை அப்பால் இப்பால் நகரவில்லை. இடையில் காபி கொண்டு வந்து வைக்கப்பட்டபோதுகூட ''ஐயா! காபி ஆறிப்போறது'' என்று ஞாபகப்படுத்திய பின்னரே அதை எடுத்து அருந்தினார்.
இதற்குள் நான் இருபது முறை கால்களை மாற்றிப் போட்டுக்கொண்டேன். பின்பக்கம் சாய்ந்தேன். முன்பக்கம் சாய்ந்தேன். முகத்தை இடது கையினால் தாங்கிக்கொண்டேன். எத்தனைவிதமான கோணங்களில் உட்கார முடியுமோ, அப்படியெல்லாம் மாறி மாறி உட்கார்ந்தேன்.
பத்து நிமிடங்களுக்கு மேல் எந்த இடத்திலும் நிலைத்து உட்கார முடியாதவர் நண்பர் மணியன். அவர் நான்கு முறை எழுந்து நின்றார். இரண்டு முறை டெலிபோனில் பேசிவிட்டு வந்தார். கைகளைச் சொடுக்கினார். கால்களை நீட்டினார். இப்படி ஏதேதோ தேகப் பயிற்சிகள் எல்லாம் செய்துகொண்டிருந்தார். சற்றும் சோர்வின்றி, அலுக்காமல், சலிக்காமல், சளைக்காமல் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்த பெரியாரின் அதிசய சக்தியைப் பற்றி நான் மனதுக்குள் வியந்துகொண்டிருந்தேன். பெரியார் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்:
''வைக்கம் என்கிற ஊர் கேரளாவிலே இருக்குது. அந்த ஊரிலே ஒரு தெரு வழியா தாழ்த்தப்பட்டவங்க யாரும் நடக்கக் கூடாதுனு ரொம்ப நாளாக் கட்டுப்பாடு. இந்தப் பக்கத்துலே உள்ளவங்க குடிதண்ணீர் கொண்டுவரணும்னா, குறுக்கே உள்ள அந்தத் தெருவைத் தாண்டித்தான் போய் வரணும்.''
''வேற வழி இல்லையா?''
''வேறொரு தெருப் பக்கமாகவும் போகலாம். ஆனால், அது சுத்து வழி. 'ஜாதிப் பேரால நடக்கிற இந்த அக்கிரமத்தை ஒழிச்சுடணும், தெருவிலே நடந்துபோறதுக்கு எல்லாருக்கும் சம உரிமை இருக்கணும்கிறதுதான் போராட்டம். அந்தப் போராட்டத்தை ஜார்ஜ் ஜோசப், நீலகண்ட நம்பூதிரி இவங்கள்லாம் நடத்தினாங்க. திருவாங்கூர் சர்க்கார் அவங்க எல்லோரையும் புடிச்சு ஜெயில்லே போட்டுது. போராட்டம் கலகலத்துப்போச்சு. எனக்கு லெட்டர் போட்டாங்க. யாரு? ஜார்ஜ் ஜோசப்பும் நீலகண்ட நம்பூதிரியும். நீங்க உடனே வைக்கத்துக்கு வந்து போராட்டத்தை ஏற்று நடத்தினால்தான் எங்க மானம் மிஞ்சும், கால தாமதம் செய்யாமல் புறப்பட்டு வரணும்னு ஜெயிலுக்குள்ளேயிருந்து லெட்டர் எழுதி அனுப்பிச்சாங்க.
அப்ப எனக்கு உடம்பு சரியில்லை. ஆனாலும், உடனே புறப்பட்டுப் போய்ப் போராட்டத்தை நடத்தினேன். ரொம்பப் பேர் என்னோடு சேர்ந்து வந்தாங்க. மலையாளத்துக்காரங்களும் வந்தாங்க. தமிழ்நாட்டுக்காரங்களும் வந்தாங்க. போராட்டம் வலுவடைஞ்சுது. நான் ரெண்டு முறை ஜெயிலுக்குப் போனேன். கடைசியிலே சத்தியாக்கிரகம் வெற்றி அடைஞ்சுது. அதோடு அந்தத் தெரு வழியா எல்லோரும் நடக்கலாம்னு ஆயிட்டுது.''
வைக்கத்திலே உள்ள கோயில், கோயிலுக்குப் பக்கத்திலே உள்ள அந்தத் தெரு, குடி தண்ணீருக்குச் சுற்றிக்கொண்டு போக வேண்டிய இன்னொரு வழி இவ்வளவையும் ஒரு காகிதத்தில் 'பிளான்’ போட்டுக் காட்டுகிறார் பெரியார்.
''ரெண்டு முறை எதுக்கு ஜெயிலுக்குப் போனீங்க?''- நான் கேட்கிறேன்.
''முதல் முறை ஒரு மாசம் போட்டாங்க. இருந்துட்டு வெளியே வந்தேன். அப்புறம் கேரளாவுக்குள்ளேயே கால் வைக்கக் கூடாதுனு தடை போட்டாங்க; மீறினேன். மறுபடியும் தண்டனை கொடுத்து திருவாங்கூர் சென்ட்ரல் ஜெயில்ல கொண்டுபோய்ப் போட்டாங்க...''
''அண்ணாதுரை உங்க கட்சியிலே எப்போது சேர்ந்தார்னு சொல்ல முடியுமா?'' மணியன் கேட்கிறார்.
''பொப்பிலி ராஜாகிட்டே கணக்கு எழுதிட்டிருந்தாரு. என்கிட்டே வந்தாரு. இருக்கச் சொன்னேன். கூட்டத்துக்கெல்லாம் கூடவே வருவாரு. ஒருநாள் எழுந்து பேசினாரு. இப்படியே பேசிப் பேசித் தலைவனாயிட்டாரு...'' ('விடுங்க, இப்ப எதுக்கு அந்தப் பேச்செல்லாம்’ என்ற பாவனை பெரியார் முகத்தில் தெரிகிறது.)


'ராஜாஜி உங்களை ஜெயில்ல போட்டாரே, அது எப்போ?''
''முப்பத்தேழுலே நடந்த எலெக்ஷன்ல ஜஸ்டிஸ் கட்சி தோத்தது. அப்ப அந்தக் கட்சிக்கு பொப்பிலி ராஜாதான் தலைவர். பொப்பிலி, பெத்தாபுரம் எல்லாரும் தோத்துப்போனாங்க. காங்கிரஸ் ஜெயிச்சுட்டுது. ராஜாஜி, மந்திரிசபை அமைச்சாரு. அப்பத்தான் கட்டாய இந்தியைக் கொண்டுவந்தாங்க. நான் எதிர்த்தேன். புரொகிபிஷனைக் காரணம் காட்டி விற்பனை வரி போட்டாங்க. என்னை ஜெயில்ல போட்டாங்க. ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களைப் பழிவாங்க ஆரம்பிச்சாங்க. நான் ஜெயிலுக்குள்ளே இருக்கிறபோதே பொப்பிலி எல்லாம் சேர்ந்து, என்னை ஜஸ்டிஸ் கட்சித் தலைவனாக்கிட்டாங்க.''
''அப்புறம் எப்ப ஜெயில்லருந்து வந்தீங்க?''
''அஞ்சாறு மாசத்துக்கெல்லாம் என்னை விட்டுட்டாங்க. ஆனா, இந்தியை மட்டும் விடாம வெச்சுட்டிருந்தாங்க...''
''எப்பத்தான் விட்டாங்க?''
''இதுக்குள்ளே காங்கிரஸிலேயே தகராறு. 'பட்டாபி சீதாராமய்யா தோல்வி, என் தோல்வி’னு காந்தி சொன்னாரே ஞாபகம் இருக்குதா? அந்தத் தகராறுதான். தலைவர் தேர்தல்ல பட்டாபி தோத்துட்டாரு... சுபாஷ் போஸ் ஜெயிச்சுட்டாரு. போஸ் கட்சியைச் சேர்ந்தவங்க, 'காங்கிரஸுக்குப் பதவி மோகம்’னு சொன்னாங்க. கொஞ்ச நாளைக்கெல்லாம் ராஜாஜி மந்திரிசபை ராஜினாமா செய்யவேண்டி வந்துட்டுது. அந்தச் சமயத்திலே கவர்னர் என்னைக் கூப்பிட்டு 'மந்திரிசபை’ அமைக்கச் சொன்னாரு.
சீமையிலே இப்படித்தான் வழக்கம். ஒரு கட்சி விலகிட்டுதுனா, அடுத்த பெரிய கட்சியைக் கூப்பிட்டு மந்திரிசபை அமைக்கச் சொல்லுவாங்க. இப்ப காங்கிரஸுக்கு அடுத்த பெரிய கட்சி, ஜஸ்டிஸ் கட்சிதான், 'நீ என்ன சொல்றே?’னாரு. நான் 'மாட்டேன்’னேன். மந்திரிசபை அமைச்சா, அத்தோடு ஜஸ்டிஸ் கட்சியே போயிடும். வேண்டாம்னு வந்துட்டேன். சண்முகம் செட்டி, குமாரராஜா, பன்னீர்செல்வம் எல்லாரையுமே கூப்பிட்டுப் பேசினாரு கவர்னர்.''
''அவங்களெல்லாம் என்ன சொன்னாங்க?''
''அவங்கள்ல சில பேருக்கு ஆசைதான். எங்களுக்குள்ளே விவாதம் நடந்தது. 'ஜஸ்டிஸ் கட்சிக்கு நோ எலெக்ஷன்; நோ மந்திரிசபை... இதுதான் என் கொள்கை’ன்னேன். எல்லோரும் அப்போஸ் பண்ணாங்க. என் மேலே ரொம்பக் கோவம் அவங்களுக்கு. சௌந்தரபாண்டியன்கூட 'ஏன் இப்படி முரட்டுத்தனமா இருக்கீங்க?’னு கேட்டாரு.''
''நீங்க என்ன சொன்னீங்க?''
'''என்னைத் தலைவனாப் போட்டதுக்கு இதுதான் பலன்’னு சொன்னேன். 'வேணும்னா என்னைத் தோற்கடிச்சுடுங்க’ன்னேன். பன்னீர்செல்வத்துக்கு மட்டும் என்னை விட்டுடறதுல இஷ்டமில்லே. அவருக்குத் தெரியும், நான் இல்லாட்டி கட்சி ரொம்ப வீக்காப் போயிடும்னு...''
''உங்களை மந்திரிசபை அமைக்கச் சொன்னாரே, அவர் பேர் என்ன?''
''காளை மாடு, விவசாயம்னு சொல்லிக்கிட்டிருப்பாரே, ஒருத்தர்... யாரது?''
''லின்லித்கோ...''
''ஆ, லின்லித்கோ! அவனேதான். கிண்டிக்குக் கூப்பிட்டுப் பேசினான். நான் சொன்னேன், 'மந்திரிசபை அமைச்சா யார் யாருக்கு மந்திரிங்கிறதுலேயே எங்களுக்குள்ளே சண்டை வந்துடும். கொள்கை அடிபட்டுப்போகும். 'முடியாது’ன்னேன். அப்புறம் வேவல்கூட என்னைக் கூப்பிட்டு சம்மதிக்கச் சொன்னாரு. 'முடியவே முடியாது’ன்னுட்டு வந்துட்டேன். அப்புறம்தான் ரொம்ப முக்கியமான சங்கதி ஒண்ணு நடந்தது... கவனிக்கணும்.''
''சொல்லுங்க...''
''ராஜாஜி வந்தாரு. மெதுவா எங்கிட்டே வந்து, 'நாயக்கரே, நல்ல சமயம்... கஷ்டப்பட்டுப் பிடிச்ச சர்க்காரை வெள்ளைக்காரன்கிட்டே விட்டுடக் கூடாது. நீங்க மந்திரிசபையை ஒப்புக்கணும். நிலைச்சு நிக்கும்; கவலைப்படாதீங்க. வேணுமானா காந்தி, காங்கிரஸ் எல்லார்கிட்டேயும் நான் சம்மதம் வாங்கித் தர்றேன். இதிலே உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா, நீங்களும் இஷ்டப்பட்டா, என்னையும் ஒரு மந்திரியாச் சேர்த்துக்குங்க; நானும் உங்ககூட இருந்து பக்க பலமா வேலை செய்யறேன்’னாரு...''
''ராஜாஜிக்கு என்ன பதில் சொன்னீங்க?''
'' 'நீங்க சொல்றதுலே சந்தோஷம்தான். ஆனா, யார் யாரோ சொல்லியும் மாட்டேன்னுட்டேன். இப்ப நீங்க சொல்றதுனாலே யோசனை பண்ணிப் பாக்கறேன்’னேன். 'நல்லா யோசிச்சுச் சொல்லுங்க’னு போயிட்டாரு. எங்க ஆளுங்களோட யோசிச்சேன். முதல்லே மந்திரிசபையை ஒப்புக்கணும்னு சொன்ன ஆசாமிங்க எல்லாம், ராஜாஜி மந்திரிசபைக்கு வர்றார்னு சொன்னதும் 'வேணவே வேணாம்’னுட்டாங்க''
''அப்புறம் என்ன நடந்தது?''
''ஒரு வேடிக்கை நடந்தது. என்ன வேடிக்கைனா... வாருக்கு அப்புறம் வெள்ளைக்காரன் பவரை ஹேண்ட்ஓவர் பண்றப்போ, நான் போய்க் கேட்டேன்... 'நாங்க பாடுபட்டோம், சர்க்காரோடு ஒத்துழைச்சோம். கடைசியிலே பவரை அவங்க கையிலே கொடுக்கிறது என்ன நியாயம்?’னு கேட்டேன்.''
''வெள்ளைக்காரன் அதுக்கு 'வி நோ ஹிண்டு அண்டு முஸ்லிம் ஒன்லி. ரெண்டே ரெண்டு பார்ட்டிதான் எங்களுக்குத் தெரியும். பிராமின்-நான்பிராமின் இந்த விஷயமெல்லாம் தெரியாது’னு பதில் சொல்லிட்டான்.''
''அதோடு நீங்க திரும்பி வந்துட்டீங்களா?''
''வருவேனா? 'இதுதான் வெள்ளைக்காரன் யோக்கியதையா?’னு கேட்டேன்.''
''என்ன பதில் சொன்னாங்க?''
''என்னத்தைச் சொல்லுவான். சிரிச்சு மழுப்பிட்டான். சரி... இத்தோட விட்டுடக் கூடாதுன்னு ஜின்னாவைப் பார்த்துப் பேசறதுக்காக, பம்பாய் போயிருந்தேன். அவரைக் கண்டு எல்லா சங்கதியையும் பேசினேன். நான் சொல்றதையெல்லாம் கவனமாக் கேட்டுக்கிட்டு 'சரி, நான் மெட்ராஸுக்கு வர்றப்போ முஸ்லிமும் ஜஸ்டிஸ் பார்ட்டியும் சேர்ந்து சப்ஜெக்ட்டை ஒண்ணா டேபிள் பண்ணுவோம்’னு சொன்னாரு.''
''அப்பறம் ஜின்னா வந்தாரா?''
''வந்தாரு. 'உன் கட்சி விஷயம் என்னா?’னு கேட்டாரு. 'என் கட்சியிலே முக்கியமா ஒன்பது பேரு இருக்கோம். ஒன்பது பேரும் ஒன்பது ஜாதி. ஆனா, ஆல் நான்பிராமின்ஸ்’னேன். ஜின்னா சிரிச்சுட்டு, 'என்ன நினைச்சு இப்படி ஒரு கட்சி வெச்சிருக்கீங்க? நல்ல கட்டில்தான். ஆனா, கால் இல்லாக் கட்டிலாயிருக்குதே’ன்னு கேலி பண்ணாரு.
'என்ன செய்யறது? எப்படியோ இதைத்தான் ஒரு கட்டிலா வெச்சு ஓட்டிட்டிருக்கோம்’னேன்.''
''ரெண்டு பேரும் சேர்ந்து டேபிள் பண்ணலாம்னு சொன்ன விஷயம் என்ன ஆச்சு?''
'' 'உன் பிரச்னையைத் தனியாவே எடுத்துச் சொல்லிக்கோ’னுட்டுப் போயிட்டாரு. 'அப்பத்தான் ராமசாமி மூஞ்சியிலே ஜின்னா கரியைப் பூசிட்டார்’னு பத்திரிகையிலே எழுதினாங்க.''
''52-லே ஜெனரல் எலெக்ஷன் நடந்ததே, அப்ப நீங்க யாரை ஆதரிச்சீங்க?''
''காங்கிரஸை எதிர்த்துப் பிரசாரம் செஞ்சேன். காங்கிரஸ் தோத்தது. நல்லபடியாத் தோத்தது. மந்திரிசபை அமைக்கிறாப்ல எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கலே. மறுபடியும் ராஜாஜி வந்தாரு. படையாச்சி, கவுண்டரு எல்லாரையும் சரிபண்ணிக்கிட்டு மந்திரிசபை அமைச்சாரு. குலக் கல்வி, ஒரு நேரப் படிப்புன்னாரு. 6,000 பள்ளிக்கூடங்களை மூடினாரு. எதிர்த்தோம்... அதுக்குப் பின்னாலதான் காமராஜ் முதல் மந்திரியா வந்தாரு. தமிழர் நலனுக்காக நல்ல காரியமெல்லாம் செய்ய ஆரம்பிச்சாரு. அதிலிருந்து வெளிப்படையா நான் காங்கிரஸை ஆதரிக்க ஆரம்பிச்சுட்டேன்.''
''காமராஜை நீங்க எப்பவாவது சந்திச்சிருக்கீங்களா?''
''எப்பவோ ஒரு சமயம் நான் ஜெனரல் ஆஸ்பத்திரியில படுத்திருக்கப்போ, அவராகவே வந்து 'எப்படி இருக்கீங்க?’னு விசாரிச்சாரு. அந்த நேரம் சி.சுப்பிரமணியமும் அதே ஆஸ்பத்திரியிலே படுத்திருந்தாரு. அவரைப் பார்க்க வந்தப்போ, என்னையும் பார்த்துட்டுப் போனாரு.''
''அந்தக் காலத்துலே இந்தியை எதிர்த்துப் போராட்டமெல்லாம் நடத்தினீங்களே, இப்ப ஏன் சும்மா இருக்கீங்க?''
காதை வலது கையால் அணைத்து நான் சொல்வதை உற்றுக் கேட்டுக்கொண்ட பெரியார் கோபத்தை வெளியே காட்டாமல், ''அப்படியா? மன்னிக்கணும்; இப்ப இந்தி எங்கே இருக்குது? தெரியாமத்தான் கேக்கறேன். சொல்லுங்கோ?''
''இந்திதான் ஆட்சி மொழியா வந்துட்டுதே...''
''எங்கே வந்துட்டுது? உனக்குத்தான் இங்கிலீஷ் இருக்குதே. இந்தியா ஒண்ணா இருக்கணும்னா, பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே? இந்திக்காரன் உங்களை மாதிரி இங்கிலீஷை நினைக்கலையே. இங்கிலீஷை அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக்காரன் சொல்றபடி, இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா?''
''ஒரு நாளைக்கு இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு இந்தி வரத்தானே போகுது?''
''நல்லாருக்குதே! ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாளைக்குச் சாவு வரத்தானே போகுதுன்னு எவனாவது இப்பவே போய் கிணத்துலே விழுவானா? அப்படியே ஒருவேளை இந்தி வந்ததுன்னா, உயிரோடு இருந்தா... அதை எதிர்க்கப்போறவன் நான்தானே?''
''மத்திய சர்க்கார்ல உத்தியோகம் கிடைக்கிறதுக்கு இந்தி அவசியம் இல்லேன்னாலும், உத்தியோகத்துலே சேர்ந்தப்புறம் படிக்கச் சொல்றாங்களே...''
''படிச்சிட்டுப்போயேன். தாசில்தார் உத்தியோகம் படிக்கப்போறவங்க 'சர்வே’ படிப்பு படிக்கிறதில்லையா? அந்த மாதிரி இந்தியைப் படிச்சுக்கிறது. உனக்கு இதிலே என்ன கஷ்டம்? இல்லே, நஷ்டம்? அவன் நேரத்துலே அவன் கொடுக்கிற சம்பளத்துல, நீ இன்னொரு மொழியைப் படிச்சுத் தெரிஞ்சுக்கப்போறே... இது லாபம்தானே?''

Thursday, January 16, 2014

தகவல் அறியும் உரிமை சட்டம்- சவாலும் எதிர்பார்ப்பும்



திரிவேணி ஒரு ஏழைப்பெண். கிழக்கு டெல்லி குடிசைப்பகுதி ஒன்றில் வசிப்பவர். பரம ஏழைகளுக்கான அந்த்யோதயா அட்டை அவரிடம் உள்ளது. இதை எடுத்துக் கொண்டு எப்போது சென்றாலும் நியாய விலைக்கடையில் இவருக்கு உணவு தானியம் கிடைப்பதே இல்லை. கடை மூடப்பட்டிருக்கும் அல்லது கடைக்காரர் ""ஸ்டாக் தீர்ந்துவிட்டது'' என்பார். ஆறு மாதங்களாக இதே நிலை.

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி இவர் மனு சமர்ப்பித்தார். தனது நியாய விலைக்கடையில் எவ்வளவு தானியம் தனது பெயருக்கு வழங்கப்பட்டது என்ற விபரமும் இதற்கான ரொக்க ரசீதுகள், நகல்களும் தேவை என்று அவர் கோரியிருந்தார். ஒரு மாதத்திற்குப் பின் அவருக்கு பதில் வந்தது. கடந்த 3 மாதங்களில் மாதத்திற்கு கிலோ 2 ரூபாய் வீதம் 25 கிலோ அரிசியும் கிலோ 3 ரூபாய் வீதம் 10 கிலோ கோதுமையும் வழங்கப் பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரொக்க ரசீது களில் இவரது பெருவிரல் ரேகை பதியப்பட்டிருந்தது. ஆனால், திரிவேணி 10-வது வகுப்பு படித்தவர். கையெழுத்துதான் போடுவார்; கைநாட்டு போட மாட்டார். எனவே ரசீதில் இருந்தது இவரது கட்டைவிரல் கைரேகை அல்ல, போலிக் கைரேகை. கடைக்காரர் இவர் பெயரில் பல மாதங்களாக உணவு தானியங்களை அதிக விலைக்கு யாருக்கோ விற்று வந்திருக்கிறார் என்பது தெளிவானது. திரிவேணிக்கு அதிர்ச்சி. அவரிடம் கடைக்காரருக்கு எதிரான அத்தாட்சிகள் உள்ளன. அவர் நடவடிக்கை  எடுக்குமுன் கடைக்காரர் அவரிடம் வந்து தன்னை மன்னிக்கும்படியும் இனிமேல் தவறான நடவடிக்கையில் ஈடுபடமாட்டேன் என்றும் கெஞ்சினார். அதன் பிறகு திரிவேணிக்கு சரியான விலையில் சரியான அளவுகளில் நியாய விலைக்கடையில் தானியம் கிடைக்கிறது.

இதேபோல நன்னு என்பவர் தினக்கூலி. கிழக்கு டெல்லியின் மற்றொரு குடிசைப் பகுதியில் வெல்கம் மஸ்டூர் குடியிருப்பில் வசிக்கிறார். ஜனவரி மாதம் தனது குடும்ப அட்டை தொலைந்துபோனதால் புதிய அட்டை கோரி மனு செய்தார். பின்னர் 3 மாத காலம் உள்ளூர் உணவு அலுவலகம் உணவு பொருள் வழங்குத் துறை என அலைந்தார். ஆனால் எழுத்தர்களும் அதிகாரிகளும் இவரை ஏரெடுத்துக்கூட பார்க்க வில்லை; பின்னர் இவருக்கு புதிய அட்டை வழங்குவதெப்படி? இவரது மனுவின் நிலை என்ன? பதில் இல்லை. கடைசியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி அவர் மனுச் செய்தார். தனது குடும்ப  அட்டை மனு மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ன? இம்மனுவைப் பரிசீலனை செய்ய வேண்டிய அதிகாரிகள் எழுத்தர்கள் யார் யார்? இவர்கள் மீது காலதாமதத்திற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பவையே இவர் கேட்ட தகவல்கள். தகவல் அறியும் உரிமை சட்டப்படி மனுக்கொடுத்த ஒருவாரத்தில் உணவுத்துறை அலுலவர் ஒருவர் நன்னுவைத் தேடி வந்தார். அவருக்கு குடும்ப அட்டை தயாராக இருக்கிறது என்றும், அதனை அவர் அலுவலகத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார். அடுத்த நாள் நன்னு அலுவலகத்திற்கு சென்றபோது அவருக்கு அன்பான வரவேற்பு. தேநீர் கொடுத்து உபசாரம். கூடவே ஒரு வேண்டுகோள். குடும்ப அட்டைதான் கிடைத்துவிட்டதே மனுவை விலக்கிக் கொள்ளுங்கள் என்பதுதான் அது. வரவேற்று உபசரித்து வேண்டுகோள் விடுத்தது வட்டார உணவுப் பொருள் வழங்கல் அலுவலரேதான்.

இந்த இரு நிகழ்வுகளும் விதி விலக்குகள் அல்ல. டெல்லி அரசு தகவல் அறியும் உரிமைச்சட்டம் அமல்படுத்திய பிறகு நகரின் அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் பரவலாக நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன. அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையேயான உறவுகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. சாதாரணமாக திரிவேணி மற்றும் நன்னு போன்ற ஏழை மக்களுக்கு என்னதான் வழியிருந்தது? அரசு அதிகாரிகளிடம் புகார் கூறலாம். ஆனால் திரிவேணி சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள்; நன்னு சொல்வதையும்தான்.

அரசு நிர்வாகத்திற்குள் அரசு அதிகாரிகளைப் பொறுப்பாக்கும் எந்த அமைப்பு முறையும் இல்லை. தங்களுக்கு ஏதும் ஆகாது என்பது அதிகாரிகளுக்குத் தெரியும். அவரது திறமையின்மையும் ஊழலும் கண்டுபிடிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மிகமிக அரிது. எனவே அவர்கள் தங்கள் போக்கில் தொடருகிறார்கள். ஊழல்  என்பது ஊழல் அதிகாரிகளைப் பொறுத்தவரை ஒரு வியாபாரம் என்கிறார் முன்னாள் மத்திய தலைமை கண்காணிப்பு ஊழல் தடுப்பு அலுவலர் என். விட்டல். இந்த ஊழல் வியாபாரத்தில் ஆபத்து அபாயம் ஏதுமில்லை. இதில் மாற்றம் தேவை எனில் அரசு ஊழியர்களின் பொறுப்பேற்கும் தன்மை சித்தரிக்கப்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்த நடவடிக்கையை எடுக்க வகைசெய்கிறது. இதுவரை கோப்புகளிலும் ஆவணங்களிலும் பதிவேடுகளிலும் ஒளிந்திருந்த ஊழல், திறமையின்மை ஆகியவற்றிற்கெதிரான அத்தாட்சிகள் இதனால் வெளிவர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை காரணமாக திரிவேணி போன்ற எளிய பிரிவு மக்களுக்கு நியாய விலைக்கடைக்காரர் போன்றோருக்கு எதிரான அத்தாட்சிகள் கிடைத்து விடுவதால்  அவர்களுக்கும் கடைக்காரர் போன்ற அதிகாரி களுக்குமிடையே நிலவிய உறவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திரிவேணி விரும்பியிருந்தால் கடைக்காரர் உரிமத்தை ரத்து செய்து விடமுடியும். இதேபோல நன்னு தனது புகார் பற்றிய நிலவரத்தை அறிய இச்சட்டத்தைப் பயன்படுத்தும்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தங்கள் திறமையின்மையை எழுத்துபூர்வமாக ஏற்கின்றனர். தமது புகார் மீது பல்வேறு நிலைகளில் பொறுப்பேற்கும் அதிகாரிகள் பெயரை நன்னு கேட்டபோது அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தவறிழைத்த அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகள் வெகுவாக உயர்ந்து விட்டன. இது இதுவரை இல்லாத வாய்ப்புதானே.


ஏழைகளுக்கான ரேஷன் பொருட்களை வெளியே விற்று லாபம் சம்பாதிக்கும் நியாய விலைக் கடைக்காரர் களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க டெல்லி அரசு நீண்டகாலமாக மறுத்து வந்துள்ளது. டெல்லியில் பெரும் பகுதிகளில் பொது வினியோக முறையானது கோப்புகளில் மட்டுமே காணப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக சிலபகுதிகளில் மக்கள் ரேஷன் கடையில் தானியம் ஏதும் பெறவேயில்லை. இந்த கடைக்காரர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி வெளிக்கொணர்ந்து இந்த மக்களிடம் காட்டியபோது அவர்கள் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போயினர். நியாய விலைக்கடைக்காரர் குடும்ப அட்டை வைத்திருப்போர் கையெழுத்துக்களை அவர்களே போட்டு பொருட்களை விற்று விடுகின்றனர். டெல்லியில் அனைத்து ரேஷன் கடைக்காரர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் கையெழுத்துக்களையும் போட்டு ஏமாற்றி வருகின்றனர். இவ்வளவு தடயங்கள் இருக்கின்றன. அரசு இவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து முன்னுதாரணமாக திகழ இவை எல்லாம் வாய்ப்புகள். ஆனால் உணவுத்துறை அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் தானோ என்னவோ நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இக்கடை களில் சரக்கு இருப்பு கணக்குகளுடன் பொருந்துவதில்லை. இந்தக் கடைகளில் ஆய்வு என்பது நடைபெறுவதேயில்லை.

மக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி ஆவணங்களைப் பெற்று அரசிடம் அசைக்க முடியாத அத்தாட்சியுடன் புகார் செய்தாலும் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அரசு மறுக்கிறது.

இங்கு பிரச்சினை ரேஷன் பொருட்கள் தொடர்புடையது மட்டுமே அல்ல. அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு பகுதி யிலும் இதேநிலை உள்ளது. சமுதாயத்தின் அனைத்துக் தரப்பிலும் உள்ள சக்தி வாய்ந்தவர்கள் சட்ட விரோத செயல்கள் மூலம் தங்கள் சுயநலங்களை பாதுகாக்க ஒன்றாகச் சேர்ந்து செயல்படுகின்றனர். கருத்து வேறு பாடுகளும், சண்டைச் சூழ்நிலையும் இந்த இடங்களில் தயாராக உள்ளன. சுரண்டல்காரர்கள் ஒருபுறம், சுயநலமி களும், சக்திவாய்ந்த ரவுடி கும்பல்கள் மறுபுறம் இந்தக் கடைக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இவர்கள் சட்ட அமலாக்க அமைப்புகளின் ஆதரவுடன் தங்கள் சட்டவிரோத செயல்களை தொடருகின்றனர். சட்டம்-ஒழுங்கை அமல்படுத்த வேண்டிய இந்த அமைப்புகள் அராஜக செயல்களை கண்டு கொள்ளாமல் இவர்களுக்கு எதிராக ஆய்வுகளை மேற்கொள்பவர்களை தடுத்து இடையூறு செய்கின்றனர்.

மறுபக்கம் ஏழைகள், எழுத்தறிவற்றோர் மற்றும் ஆதரவற்றோர் இதனால் தொடர்ந்து தங்கள் உரிமைகளை இழந்து வருகின்றனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்த விரும்புவோர் தங்கள் நடவடிக்கைகளை சுயநலக்காரர் களுக்கும், அவர்களுக்கு துணை போவர்களும் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பார்கள் என எதிர் பார்க்கக் கூடாது. அவர்கள் திருப்பித்தாக்கத்தான் செய்வார்கள். காவல் துறையினரோ, அரசு முகமைகளோ இவர்களுக்குத் தேவையான உதவியை அளிக்காமல் போகலாம். வருங்காலங்களில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த விரும்பும் அமைப்புகள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்சினை இது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தகவல் பெறுவதில் உள்ள பிரச்சினைகள் கேட்டவுடனேயே தகவல் தரப்படும் என மக்கள் எதிர்பார்க்க முடியாது. அலுவலர்களில் பலத்த எதிர்ப்பு இருக்கும். ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி தகவல் தர மறுப்பார்கள். எனவே தேவைப்பட்டால் மக்கள் மேல் முறையீடு அமைப்புகளை அணுகத் தவறக்கூடாது. இல்லாத தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பொது மக்கள் குறைதீர்க்கும் ஆணையம் (டஏஈ) இத்தகைய அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீறிய அதிகாரி களுக்கு அபராதம் விதித்து அதனை மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யும் அதிகாரத்தை நிர்வாக ஆணை மூலம் டெல்லி அரசு பொதுமக்கள் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. பொதுமக்கள் குறை தீர்ப்பு ஆணையம் (டன்க்ஷப்ண்ஸ்ரீ ஏழ்ண்ங்ஸ்ஹய்ஸ்ரீங்ள் ஈர்ம்ம்ண்ள்ள்ண்ர்ய்)லி டஏஈலிக்கு சுமார் 1300-க்கு மேல் முறையீட்டு மனுக்கள் வந்துள்ளன. இவை அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்ட மீறல் சார்ந்தவைகளே. இவற்றில் 70% மேற்பட்டவை மக்களுக்கு சாதகமான தீர்ப்புகளில் பெற்றவை எனில் மக்களின் குற்றச்சாட்டு உண்மையானது என்று பொருள். ஆனால் இதுவரை ஒரு அதிகாரிக்குக்கூட தண்டனை விதிக்கப்படவில்லை. பொதுமக்கள் குறைதீர்க்கும் ஆணையத் தலைவர் எவருக்கும் எதிரான தண்டனை விதிக்க தயாராக இல்லை. இதனால் தகவல் தரா விட்டாலும் தங்களுக்கு ஒன்றும் நேராது என்று அதிகார வர்க்கம் எண்ணம் கொண்டுள்ளது.

பி.ஜி.சி. தலைமைப் பதவியில் வழக்கமாக முன்னாள் அரசு தலைமைச் செயலர்களே இருந்து வருகின்றனர். ஓய்வு பெற்றவுடன் தலைமைச் செயலர் இப்பதவிக்கு வருகிறார். இதனால் அவரது செயல்பாட்டில் குழப்பம் நேருகிறது. தான் அரசின் உயர்ந்த பதவியான தலைமைச் செயலர் பதவியில் இருந்தபோது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல் தர வேண்டிய நிலையில் அவர் உள்ளார்.

இதிலிருந்து அறியும் பாடம் என்ன? மத்திய மாநில அரசுகள் தகவல் ஆணையர்களை நியமிக்கும்போது உள் நோக்க குறுக்கீடுகள் ஏற்படாத நிலையில் உள்ள அதிகாரிகளையே அப்பதவியில் நியமிக்க வேண்டும்.

தகவல் கேட்பதற்கு பதிலாக தகவலை கேட்பு ஏதுமின்றி அளிப்பதுமுழுமையான வெளிப்படைத்தன்மை நோக்கி அரசு தானாகவே நடைபோட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மக்கள் தகவல் கேட்டுப் பெறுவதற்கு பதிலாக அரசு தானே முன்வந்து மக்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தகவல்களை கேட்பு ஏதுமின்றி வழங்க வேண்டும். தற்போதைய டெல்லி உணவுத்துறை ஆணையரின் நடவடிக்கை இதில் முன்னுதாரணம் எனலாம். நியாய விலைக்கடைகளின் ஆவணங்கள் அனைத்தையும் மக்கள் பார்வைக்கு அனுமதிக்க வேண்டுமென அவர் ஆணையிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமைபெறும் சட்டப்படி எந்த மனுவும் எவரும் அளிக்க வேண்டியதில்லை. மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை எவர் வேண்டுமானாலும் எந்த ஆவணத்தை வேண்டுமானாலும் பார்வையிடலாம்.

இத்தகைய நடவடிக்கைகள் அரசின் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது நியாயமான பொறுப்பு உள்ள அரசுக்கு தேவைதான். ஆனால் இது மட்டும் போதாது மேலும் பல விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். எனினும் தகவல் பெறும் உரிமை சட்டம் சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல் உறுதியான நடவடிக்கை என்பதில் ஐயமில்லை.