Wednesday, January 22, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை!-Part 7 (இந்திய பிரதமர்கள் )

குடியரசுத் தலைவர்  தேர்தல் குஸ்தி!
காங்கிரஸ் கட்சி நிறுத்திய வேட்பாளரை, காங்கிரஸ் கட்சியால் பிரதமர் ஆக்கப்பட்ட இந்திரா வீழ்த்திய விபரீதம் நடந்த ஆண்டு 1969. அந்த ஆண்டு மே மாதம் குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் மரணம் அடைந்தார். புதிய தலைவர் யார் என்ற கேள்வி காங்கிரஸ் தலைவர்கள் முன் எழுந்தது. யாரையும் ஆலோசனை செய்யாமல் ஜெகஜீவன் ராம் பெயரை பிரதமர் இந்திரா முன்மொழிந்தார். இது காங்கிரஸ் பார்லிமென்ட் போர்டு உறுப்பினர்களுக்கு உடன்பாடானதாக இல்லை.
இந்தக் குழுவில் எட்டு தலைவர்கள் இருந்தார்கள். இவர்களில் காங்கிரஸ் தலைவரான எஸ்.நிஜலிங்கப்பா, காமராஜர், மொரார்ஜி தேசாய், ஒய்.பி.சவான், எஸ்.கே.பாட்டீல் ஆகிய ஐந்து பேரும் சஞ்சீவி ரெட்டிதான் குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்று சொன்னார்கள். ஜெகஜீவன் ராமை, பக்ருதீன் அலி அகமது மட்டுமே ஆதரித்தார். ''மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா நெருங்கி வருகிறது. அவர் அரிஜன முன்னேற்றத்தைப் பெரிதும் விரும்பினார். அதனால், ஜெகஜீவன் ராம் குடியரசுத் தலைவர் ஆவதே பொருத்தமானது'' என்று இந்திரா சொன்னார். என்றாலும், உண்மையான காரணம் காங்கிரஸ் தலைவர்களால் புகுத்தப்படும் குடியரசுத் தலைவரை ஏற்கக் கூடாது என்பதுதான்!
இதே காலகட்டத்தில் ஆட்சியில் எடுக்கப்பட வேண்டிய பொருளாதாரக் கூறுகள் தொடர்பாக பிரதமர் இந்திராவுக்கும், காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பாவுக்கும் கருத்து வேற்றுமை தலைதூக்கி இருந்தது. வங்கிகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்ற இந்திராவின் எண்ணத்தை இடதுசாரிச் சிந்தனை என்று இவர்கள் எதிர்த்தார்கள். ஆனால், இவர்களை மீறி 14 வங்கிகளை தேசியமயமாக்கினார் இந்திரா. இது அவரது செல்வாக்கை அதிகப்படுத்தவும் பயன்பட்டது. ''வங்கிகளை முதலில் சமூகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின் தேசியமயமாக்குவதுதான் சரியானது. அதற்கு முன் உடனடியாக
முடிவுசெய்தால் நான் பொறுப்பேற்க முடியாது'' என்று துணை பிரதமரும் நிதி அமைச்சருமான மொரார்ஜி தேசாய் சொன்னார். இதனை இந்திரா முற்றிலுமாக நிராகரித்தார். உடனே தனது எதிர்ப்பைக் காட்டுவதற்காக மொரார்ஜி பதவியை விட்டு விலகினார்.
'பார்லிமென்டரி போர்டில் நீங்கள் விரும்பியதைச் செயல்படுத்த உங்களுக்கு உரிமை இருப்பதைப்போல, அரசாங்கத்தில் நான் விரும்பியதைச் செய்ய பிரதமர் என்ற முறையில் எனக்கு உரிமை இருக்கிறது அல்லவா?'' என்று பிரதமர் இந்திரா மடக்கினார். இதற்கு நிஜலிங்கப்பா போன்றவர்களால் பதிலளிக்க முடியவில்லை. பிரதமர் என்ற அடிப்படையில் இந்திரா எடுத்த நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. இதை அறிந்து மகிழ்ந்த இந்திரா, தன்னுடைய நன்றியின் அடையாளமாக... காங்கிரஸ் பார்லிமென்டரி போர்டால் அறிவிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரான நீலம் சஞ்சீவி ரெட்டியை தான் ஆதரிக்கத் தயார் என்று சொன்னார். அதற்கான விண்ணப்பத்திலும் இந்திரா கையெழுத்துப் போட்டு அனுப்பினார். சமாதானக் கொடி பறப்பதாகத்தான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் இந்திராவின் செயல்பாடுகளில் ஏதோ சந்தேகம் இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தார்கள். அவரும் அப்படித்தான் நடந்துகொண்டார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சஞ்சீவி ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். ஜனசங்கம், சுதந்திரா கட்சி ஆதரவுடன் சி.டி.தேஷ்முக் நிற்கிறார். அப்போது உதவி குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரியும் போட்டியில் இருந்தார். இவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க., முஸ்லிம் லீக், அகாலிதளம் ஆகிய கட்சிகள் ஆதரித்தன.
மத்தியிலும் காங்கிரஸுக்கு பெரிய பெரும்பான்மை இல்லை, பல்வேறு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டன. எனவே, காங்கிரஸ் ஓட்டுக்கள் முழுக்கவே சிந்தாமல் சிதறாமல் விழுந்தால்தான் காங்கிரஸ் வேட்பாளரான  சஞ்சீவி ரெட்டி வெற்றிபெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தார்கள். 'சஞ்சீவி ரெட்டிக்குத்தான் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்'' என்று பிரதமர் இந்திராவுக்கு காங்கிரஸ் பார்லிமென்ட் போர்டு கோரிக்கை வைத்தது. கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் அந்த உத்தரவுப்படிதான் நடந்துகொள்ள வேண்டும். மீறினால், அவர்கள் பதவியே பறிக்கப்படலாம். எனவேதான், கறாராக இந்த உத்தரவு வேண்டும் என்று பார்லிமென்ட் போர்டு நினைத்தது.
அதே நேரத்தில் இன்னொரு காரியத்தையும் இந்தத் தலைவர்கள் பார்த்தார்கள். அதுதான் இந்திராவை ஆத்திரம் கொள்ள வைத்தது.
காங்கிரஸ் தலைவரான நிஜலிங்கப்பா, சுதந்திரா கட்சி மற்றும் ஜனசங்கத் தலைவர்களைச் சந்தித்தார். அவர்களது இரண்டாவது வாக்கை சஞ்சீவி ரெட்டிக்கு தருமாறு கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர்களை காங்கிரஸ் தலைவர் சந்தித்திருப்பது, தன்னுடைய பதவிக்கு வைக்கப்படும் வேட்டு என்று நினைத்து பதறிப்போனார் இந்திரா. தன்னை விலக்கிவிட்டு, சுதந்திரா மற்றும் ஜனசங்க கட்சிகளின் ஆதரவுடன் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூட முடியும் அல்லவா என்று இந்திரா யோசித்தார்.
''என்னை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு வகுப்புவாத மற்றும் பிற்போக்கு சக்திகளுடன் ஒப்பந்தம் செய்கிறார்கள்'' என்று இந்திரா குற்றம் சாட்டினார். எனவே, அவர் தனது அஸ்திரத்தை எடுத்தார்.
''சஞ்சீவி ரெட்டிக்குத்தான் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு போட முடியாது. காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம்'' என்று இந்திரா அறிவித்து அகில இந்தியாவையும் பதறவைத்தார். ஒருவர் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம் என்றால், யாருக்கு வேண்டுமானாலும் தனது வாக்கைப் பயன்படுத்தலாம். காங்கிரஸ் உறுப்பினர்கள் காங்கிரஸ் வேட்பாளரான சஞ்சீவி ரெட்டிக்கும் வாக்களிக்கலாம். ஜனசங்கம் வேட்பாளருக்கும் வாக்களிக்கலாம். கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கும் வாக்களிக்கலாம். அனைத்து எம்.பி-க்களையும் இப்படி அவிழ்த்துவிட்டால் எப்படி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற முடியும்?
இந்திராவின் சந்தேகத்தில் நியாயம் இல்லை என்று நிஜலிங்கப்பா சொல்லிப் பார்த்தார். அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கும் எண்ணம் இல்லை என்றும், 1972 வரை பிரதமராக இந்திரா நீடிக்கலாம் என்றும் நிஜலிங்கப்பா வாக்குறுதி கொடுத்தார். ஆனாலும், இதனை இந்திரா நம்பவில்லை. நிஜலிங்கப்பாவின் கோரிக்கையை ஏற்று கொறடா உத்தரவு பிறப்பிக்கவும் அவர் சம்மதிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சி உடையாமலேயே இரண்டாக பிரிந்து நிற்கத் தொடங்கியது. இத்தகைய குழப்பமான சூழ்நிலையில் 16.8.1969 அன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தது. காங்கிரஸ் வேட்பாளரான சஞ்சீவி ரெட்டி தோற்றுப்போனார். இடதுசாரிகள், முஸ்லிம் லீக், அகாலிதளம், தி.மு.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளரான வி.வி.கிரி வெற்றிபெற்றார். அதாவது, இந்திரா அவரை வெற்றிபெற வைத்தார். வி.வி.கிரியின் வெற்றி இந்திராவின் வெற்றியாகவும், சஞ்சீவி ரெட்டியின் தோல்வி நிஜலிங்கப்பாவின் தோல்வியாகவும் வரலாற்றில் பதிவானது.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு வாக்களிக்காதது மட்டுமல்ல, எதிராக நின்றவரை வெற்றிபெறவும் வைத்தது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று நிஜலிங்கப்பா போன்றவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். இந்திரா உள்பட அவரது ஆதரவாளர்கள் பலருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ''காங்கிரஸ் கட்சி உடைவதையோ, சிலர் வெளியேற்றப்படுவதையோ, நான் விரும்பவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலோடு தொடர்புபடுத்தி ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முயற்சி செய்தால், கட்சியின் அழிவுக்கு வழிவகுத்துவிடும்'' என்று இந்திரா பயமுறுத்தத் தொடங்கினார். சிறு அசைவு ஏற்பட்டாலும் கட்சி உடைந்துவிடும் என்பதே நிலைமை.
இரண்டு தரப்பையுமே சமாதானம் செய்ய சிலர் முயற்சித்தார்கள். இதன் அடிப்படையில் 'ஒற்றுமைத் தீர்மானம்’ ஒன்றை நிறைவேற்றி இரண்டு தரப்பையும் அமைதிப்படுத்த விரும்பினார்கள். ஆனால், இந்திராவின் ஆதரவாளர்கள் நிஜலிங்கப்பாவுக்கு எதிரான அஸ்திரங்களை ஏவத் தொடங்கினார்கள். கட்சியின் மேல்மட்டத்தில் நிஜலிங்கப்பா போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு செல்வாக்கு இருந்தாலும், பிரதமர் என்ற அடிப்படையில் ஆட்சியில் இந்திராவின் செல்வாக்கு அபரிமிதமாக இருந்தது. அவரால் பதவியை பெற்றவர்கள், அனுபவித்து வருபவர்கள் சேர்ந்து, 'அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரான நிஜலிங்கப்பாவை நீக்கிவிட்டு, புதிய தலைவரைத் தேர்வுசெய்ய வேண்டும்’ என்று கையெழுத்து இயக்கம் நடத்த ஆரம்பித்தார்கள்.
இதைப் பார்த்து கோபமான நிஜலிங்கப்பா, காங்கிரஸ் காரிய கமிட்டியை அவரே கூட்டினார். இதற்கு இந்திரா வரவில்லை. அவர் தனது வீட்டில் ஒரு கூட்டத்தைக் கூட்டி, காரியக் கமிட்டியை தான் கூட்டப்போவதற்கான தேதியை அறிவித்தார். இது விதிமுறைக்கு புறம்பானது என்று நிஜலிங்கப்பா சொல்ல... நீங்கள் செல்வது எதுவுமே விதிமுறைப்படியானது அல்ல என்று இந்திரா சொல்ல... நேரடி மோதல் எழுந்தது. இருவருமே நேரில் சந்தித்தால் பிரச்னை தீரும் என்று மைசூர் முதலமைச்சர் வீரேந்திர பாட்டீல் நினைத்தார். அதன் அடிப்படையில் இந்திராவும் நிஜலிங்கப்பாவும் டெல்லியில் சந்தித்துப் பேசினார்கள். இதுவும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
இந்திராவைக் கட்சியை விட்டு நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தார்கள். 1969 நவம்பர் 12-ம் நாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடந்தது. மொத்தமுள்ள 21 உறுப்பினர்களில் 11 பேர் வந்திருந்தார்கள். கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய இந்திராவை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவது என இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. புதிய பிரதமரை தேர்வுசெய்ய திட்டமிடப்பட்டது. இதனை இந்திரா ஆதரவாளர்கள் ஏற்கவில்லை.
மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்களில் 220 பேர் இந்திராவை ஆதரித்தார்கள். சிண்டிகேட் காங்கிரஸ் தலைவர்களுக்கு 68 உறுப்பினர் ஆதரவே இருந்தது. எனவே, இந்திராவின் பிரதமர் பதவிக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மொத்த உறுப்பினர்கள் 705 பேர் இதில் 446 உறுப்பினர்கள் இந்திராவை ஆதரித்தார்கள். இவர்கள் சேர்ந்து நிஜலிங்கப்பாவை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஜெகஜீவன் ராமை தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். (இவர்தான் இன்று மக்களவை சபாநாயகராக இருக்கும் மீரா குமாரின் அப்பா).
நிஜலிங்கப்பா தலைமையிலானது காங்கிரஸ் (ஓ) என்றும் இந்திரா தலைமையிலானது காங்கிரஸ் (ஆர்) என்றும் அழைக்கப்பட்டது. முன்னதை ஸ்தாபன காங்கிரஸ் என்றும், பின்னது இந்திரா காங்கிரஸ் என்றும் அழைத்தார்கள். பெருந்தலைகள் வேறு கட்சியாக ஆகிப்போனது இந்திராவுக்கு வசதியாகப் போனது. தனது சர்வ வல்லமையை காங்கிரஸுக்குள் பயன்படுத்தத் தொடங்கினார். இனி அவரைக் கேள்வி கேட்க யாரும் இல்லை கட்சிக்குள். இடதுசாரிகள் நிறுத்திய வி.வி.கிரியை ஆதரித்து வாக்களித்ததால், இந்திரா ஆட்சியைக் காப்பாற்ற இடதுசாரிகளும் ஆதரவாக இருந்தார்கள்.
கட்சியும் ஆட்சியும் அவரது குடும்பச் சொத்தாக மாறத் தொடங்கியதன் அடையாளமாக சஞ்சய் காந்தி வந்தார்

கூட்டணி ஃபார்முலா உருவானது!  
நேருவை அறிந்தவர்கள், நேரு வயதை எட்டியவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுடன் பழகியவர்கள் என ஒரு பெருங்கூட்டம் கட்சியைவிட்டு விலகிப்போனதை வருத்தமாகப் பார்க்கவில்லை இந்திரா. தனக்கு வசதியாகிப் போனதாகவே உணர்ந்தார். அதிகாரக் குவிமையமாக தானும் காங்கிரஸ் தலைமையும் மாறுவது ஒன்றே லட்சியம் என்பதுபோலச் செயல்பட்டார். இந்த நோக்கத்துடன் இந்தியாவையே ஒற்றை ஆட்சி நாடாக ஆக்குவதற்கான முயற்சிகளை எடுத்தார்.
இந்தியா பரந்து விரிந்துபட்ட ஒரு தேசம். இதில் பல மொழிகளைப் பேசும் தேசிய இனங்கள் இருக்கின்றன. வேறு வேறு கடவுள்களை வணங்கும் மதங்களைச் சேர்ந்த மக்கள் இருக்கின்றனர். இந்தப் பரப்பில் வர்த்தகம் செய்த கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய தொழில்பரப்பை மொத்தமாக பிரிட்டிஷாருக்குத் தாரை வார்த்தபோது பல்வேறு சமஸ்தானங்கள், குறுநில மன்னர்கள், பாளையப்பட்டுகள் அனைத்தையும் சேர்த்து அளித்தனர். இதில் பலருடனும் சண்டையிட்டும் சமாதானமாகவும் மொத்த இடத்தையும் பிரிட்டிஷ் ஆட்சி வளைத்து, அதற்கு ஒன்றுபட்ட ஒரு வரைபடத்தை உருவாக்கியது. ஒற்றை ஆட்சிகொண்ட நிர்வாக முறை அமலானது.
ஒரு நாடு முழுவதும் ஒரே ஆட்சியால் ஆளப்பட்டால், அந்த முறைக்கு ஒற்றை ஆட்சி முறை என்று பெயர். ஒரு அரசாங்கத்தின் அனைத்து விதமான அதிகாரங்களும் ஒரு குறிப்பிட்ட மையத்தில், அதாவது மத்திய அரசாங்கத்திடம் இருந்து செயல்படுத்தப்படும் ஒற்றை ஆட்சியை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் செயல்படுத்தினார்கள்.

பல்வேறு மொழி, இன, மத, சாதி, பண்பாடு கொண்ட நாட்டை ஒற்றை ஆட்சி முறை எப்படி பிரதிபலிக்க முடியும்? எனவேதான், 'கூட்டாச்சி தத்துவம் மலர வேண்டும்’ என்று நம்முடைய விடுதலைப் போராட்ட வீரர்கள் குரல் கொடுத்தனர். கூட்டாட்சி என்பது பல்வேறு மாநிலங்கள் இருக்கும், அந்த மாநிலங்களை இணைக்கும் மத்தியக் கூட்டமைப்பு அரசு ஒன்று இருக்கும். ஒரே நாட்டுக்குள் ஒரு மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் இருக்கும். இந்தக் கூட்டாட்சி முறையைத்தான் காங்கிரஸ் கட்சியும் சுதந்திரப் போராட்ட காலத்தில் வலியுறுத்தியது.
'எதிர்கால இந்திய அரசமைப்பு, கூட்டாட்சி அமைப்பாகத்தான் இருக்கும்’ என்று காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் கூறியது. ஆனால், சுதந்திரம் அடையும் காலகட்டம் நெருங்கிவரும் சூழ்நிலையில், 'அநேகமாக விடுதலை பெற்ற இந்தியா ஒரு கூட்டாட்சி அமைப்பைக் கொண்ட இந்தியாவாகத்தான் இருக்கும். ஆனால், மிக அதிகமான ஒற்றை ஆட்சி முறைகளும் கட்டுப்பாடுகளும் ஏதோ ஒரு வகையில் அந்தக் கூட்டாட்சி அமைப்பில் இடம்பெற வேண்டும்’ என்று நேரு சொல்ல ஆரம்பித்தார். மாநிலத்தில் அரசுகள் இருந்தாலும் மத்திய அரசிடமே அனைத்து அதிகாரங்களும் அமைய வேண்டும் என்று நேரு நினைத்தார். காங்கிரஸ் கட்சியையும் ஒரு மத்திய மயமாக்கப்பட்ட ஒரு கட்சியாக உருவாக்கினார். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி மாநில காங்கிரஸ் கமிட்டிகள் இருந்தாலும், அனைத்துக்கும் அதிகாரம் பொருந்திய அமைப்பு... அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி. காங்கிரஸ் ஒர்க்கிங் கமிட்டி என்று இதைச் சொல்வார்கள். நடைமுறையில் காங்கிரஸ் காரிய கமிட்டி என்று அழைப்பது இதைத்தான். அனைவரையும் ஆட்டிப் படைக்கும் அதிகாரம் பொருந்தியது இந்தக் காரிய கமிட்டி. இது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரின் கண்ணசைவைப் பார்த்து மட்டுமே இயங்கக் கூடியது. இந்தத் தலைவரைத்தான் காங்கிரஸ் மேலிடம் என்றும் கட்சியின் ஹை கமாண்ட் என்றும் அழைக்கிறோம். மாநில காங்கிரஸ் தலைவர்களாக இருந்தாலும் மாநில அரசின் காங்கிரஸ் முதல்வர்களாக இருந்தாலும், இவர்கள் அனைவருமே இந்த ஹை கமாண்டுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் நினைத்தால் பதவியில் தொடரலாம். மனம் மாறினால் பதவியை இழக்கலாம். மாநிலத் தலைமைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கட்சி மட்டத்தில் முடிவெடுத்த காங்கிரஸ் கட்சி, மாநில அரசுகளுக்கே பெரிய அதிகாரங்கள் எதுவும் இல்லை என்ற சூழ்நிலையைப் படிப்படியாக உருவாக்கவும் செய்தது.
இன்னொன்று... அரசாங்கத்துக்கும் அரசாங்கத்தை ஆளும் கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற சூழ்நிலையையும் காங்கிரஸ் கட்சி உருவாக்கியது.
ஒரு அரசாங்கத்தை, ஒரு அரசியல் கட்சி ஆளலாம். அதற்காக அந்த அரசியல் கட்சியே அரசாங்கமாக ஆக முடியுமா? ஆனால், காங்கிரஸ் அப்படி வித்தியாசம் காண முடியாத அளவுக்கு ஒரு அரசாங்கத்தை ஆளும் அரசாங்க கட்சியாகவே செயல்படத் தொடங்கியது.
இந்தியாவின் நிர்வாக நெறிமுறைகளை ஆய்வுசெய்த வரலாற்று ஆசிரியர்கள் இந்த நுணுக்கமான குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மீது வைக்கிறார்கள். ''காங்கிரஸின் ஆட்சி முறை, ஒரு அரசியல் கட்சிக்கும் அரசுக்கும் இருக்க வேண்டிய எல்லைக் கோட்டை முழுவதும் மங்கச் செய்துவிட்டது'' என்று பேராசிரியர் கே.எம்.பாம்வெல் எழுதி இருக்கிறார். அதாவது, மத்தியில் அதிகாரத்தைக் குவிப்பது, மத்திய ஆட்சிக்கும் அதை ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கும் வித்தியாசம் இல்லாமல் பார்த்துக்கொள்வது - என்ற சூழ்நிலையை நேரு காலத்தில் லேசாக ஆரம்பித்து இந்திரா காலத்தில் அதைக் கெட்டிப்படுத்தினார்கள். 1947-1967 வரை இதில் அசைக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் எழுந்தன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை விட்டு இறங்கி தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததுபோல, பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது.
மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் ஏகபோகம் - 1967-ல் தகர்ந்தது என்றே சொல்லலாம். காங்கிரஸை வீழ்த்த வேண்டுமானால், 'ஒரே வழி எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர வேண்டும்; எந்தக் கட்சியும் எந்தக் கட்சியுடனும் சேரலாம். காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்பது ஒன்றே கொள்கை; மற்றவற்றை, ஓரமாக ஒதுக்கி வைத்துவிட வேண்டும்’ என்ற கூட்டணி ஃபார்முலா அப்போதுதான் உருவானது. உன்னதமான சோஷலிஸ்ட்கள் என்று கொண்டாடப்பட்ட ராம் மனோகர் லோஹியா, வகுப்புவாத ஜனசங்கத்துடனும் வலதுசாரி சுதந்திரா கட்சியுடனும் சேர்ந்தார். 'திராவிட இனவாதம்’ பேசிய அண்ணாவும் 'தமிழ்த் தேசியவாதம்’ பாடிய ம.பொ.சி-யும் மதச் சிந்தனைகள் கொண்ட முஸ்லிம் லீக்கும், வலதுசாரி எண்ணம் கொண்ட ராஜாஜியையும் கம்யூனிச சிந்தனையாளர்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்த்துக்கொண்டு காங்கிரஸை வீழ்த்தப் புறப்பட்ட காலம் அது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அமைத்தது. பஞ்சாபில் அகாலிதளம் தலைமையிலான அரசை, ஜனசங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்து ஆதரித்தார்கள். பஞ்சாப், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைந்த எதிர்க்கட்சி அரசாங்கங்களில் சுதந்திரா கட்சியும் ஜனசங்கமும் சோஷலிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடம்பெற்றன. அரசாங்கத்தில் சேராமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது.
இன்றைக்கு மதச்சார்பின்மைக்கு எதிராக மார்தட்டிக் கிளம்பி இருப்பவர்கள், கடந்த காலத்தில் காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மதவாத சக்திகளுடனும் வலதுசாரிகளுடனும் எந்தக் கூச்சமும் இல்லாமல் கூட்டணி வைத்துக்கொண்டவர்கள்தான் என்பதே வரலாற்றுப் புரிதல்.
இந்திராவுக்கு எதிராக தமிழகம் நீங்கலாக பிற மாநிலங்களில் அமைக்கப்பட்ட கூட்டணி அரசுகள், உள் முரண்பாடுகளால் உதிர ஆரம்பித்தன. 1967 முதல் 1970 வரை பீகாரில் ஏழு அரசுகள், உ.பி-யில் நான்கு அரசுகள், ஹரியானா, மத்தியப்பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளத்தில் தலா மூன்று அரசுகள் அமைந்தன. இந்த உள்குழப்பம் காரணமாக ஏழு மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. இந்த இடைப்பட்ட மூன்று ஆண்டு காலத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 800 எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறியதாகவும் அதில் 150 பேர் அமைச்சர்கள் ஆனதாகவும் ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்த ஸ்திரமற்ற தன்மையை மேலே உட்கார்ந்து இந்திரா ரசித்தார். மாநிலங்களில் அவரது செல்வாக்கு குறைந்தாலும், மத்தியில் அவரது அதிகாரம் பலமாக இருந்தது. 1971 தேர்தலில் 'இந்திராவை ஒழிப்போம்’ என்று ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா, ஜனசங்கம், எஸ்.எஸ்.பி. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன.
நன்றாகக் கவனியுங்கள். 1940-களில் இருந்து எந்த ராஜாஜியும் காமராஜரும் தனித்தனி தீவுகளாக இருந்து மோதினார்களோ... அந்த இருவரும் 1971 தேர்தலில் ஒன்றாகச் சேர்ந்தார்கள். இந்தக் கூட்டணியில் ஜனசங்கமும் இருந்தது. சோஷலிசம் பேசிய காமராஜரும், வலதுசாரி கொள்கை கொண்ட ராஜாஜியும் மதவாதிகளான ஜனசங்கமும் சேர்ந்து கூட்டணி அமைத்து சந்தித்த தேர்தல் அது. இந்த ஜனசங்கம்தான், இன்றைய பாரதிய ஜனதாவின் தாய். இந்தத் தேர்தலில் இந்திராவுடன் கூட்டணி வைத்தார் கருணாநிதி. சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸை வீழ்த்த மெகா கூட்டணி அமைத்த கட்சி அது.
காமராஜரும் ராஜாஜியும் ஜனசங்கமும் சேர்ந்துவிட்டதால், அந்த அணியே வெற்றிபெறும் என்று செய்திகள் பரவியது. சென்னை கடற்கரையில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்கூட்டத்தில் மைக் முன் பேசப் போன காமராஜரை அழைத்து, தன் ஜிப்பாவில் வைத்திருந்த பொட்டலத்தை அவிழ்த்து விபூதியை எடுத்து நெற்றியில் இட்டார் ராஜாஜி. அன்று பேசிய ராஜாஜி, ''ஞானோதயம் வந்த பிறகுதான் யார் நல்லவர் என்று புரிகிறது'' என்றார். ''நான் சொல்வதற்கு கொஞ்சம் கூச்சப்படுகிறேன். திருமணத்துக்குப் பிறகு மகனும் மருமகளும் ஒன்றுபடுவதுபோல நானும் காமராஜரும் ஒரே குடும்பமாகிவிட்டோம்'' என்று ராஜாஜி சொன்னபோது, ஸ்தாபன காங்கிரஸ் வென்று இந்திரா தோல்வியடைந்ததுபோல எல்லோரும் கைதட்டினர்.
அகில இந்திய அளவில் நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து நடத்தப்பட்ட இந்தப் பொதுத்தேர்தலில் இந்திராவுக்கும் காங்கிரஸுக்கும் சாதகமான நிலை (1971-ல்) ஏற்பட்டது. பெரும்பான்மை மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மை பலத்தை இந்திரா பெற்றார். ஒற்றை ஆட்சி தன்மைகொண்ட ஒரு மத்திய அரசை, மாநிலங்களை அடிமையாக மட்டுமே வைத்திருக்கும் மத்திய அரசை உருவாக்க நினைத்தார். ''மத்திய அரசின் கீதத்துக்கு ஏற்ப மாநில அரசுகள் தாளம் போட வேண்டும் என்பது மிகமிகத் தேவையானது'' என்று திருப்பதியில் பேசும்போது பிரதமர் இந்திரா வெளிப்படையாகச் சொன்னார். தான் நினைத்ததே கட்சியிலும், தான் நினைத்ததே ஆட்சியிலும், தான் நினைத்ததே மாநில ஆட்சிகளிலும் என்று இந்திரா செயல்பட 1971 தேர்தல் வழி அமைத்துக் கொடுத்தது.
இதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல; 'இந்திரா நாயகம்’ என்று புதிய பெயரையே சூட்டினார் இரா.செழியன். இந்த யுகத்தின் நாயகனாக 'மாருதி’ காரில் வந்தார் இந்திராவின் இளைய மகன் சஞ்சய்.

No comments:

Post a Comment