Sunday, June 24, 2012

திராவிடர் இயக்கம் part II

திராவிடர் இயக்கம் part II நூறாண்டு காலத்திற்கு முன் அனைத்துத்  தரப்பு மக்களும் கல்வி கற்கக்கூடிய வாய்ப்பு இல்லை. தகுதியான கல்வி கற்று உரிய வேலையைப் பெறவும் முடியாத நிலை இருந்தது. சமுதாயத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகளின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டு, அதன் காரணமாக வேலை வாய்ப்பினைப் பெற முடியாத நிலை நீடித்தது.

உயர்சாதியினர் எனப்படும் பிராமண சமுதாயத்தினரே அதிகம் படித்தவர்களாகவும், அரசின் முக்கிய பதவிகளில் இடம்பிடிக்கக்கூடியவர்களாகவும் இருந்தனர். இந்நிலையில் தான், 1912-இல் சென்னையில் டாக்டர் சி.நடேசனாரும் மற்றவர்களும் தொடங்கிய தி மெட்ராஸ் யுனைடெட் லீக் என்ற அமைப்பு, 1913-இல் திராவிடர் சங்கம் என்ற பெயர் பெற்றது. பிராமணரல்லாத மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக திராவிடர் இல்லம் என்ற இலவச விடுதியை அமைத்து, உணவு வசதியையும் இலவசமாக செய்து கொடுத்தார். திராவிடர் சங்கத்தின் விழாக்களில் சிந்தனையாளர் சிங்கார வேலர், தமிழ்த்தென்றல் திரு.வி.க, அன்னிபெசன்ட் அம்மையார் உள்ளிட்ட பலரும் உரையாற்றி வந்தனர். திராவிடர்கள் பற்றிய நூல்களும் வெளியிடப்பட்டன.

அப்போது இந்தியாவில் காங்கிரஸ் கட்சி வளர்ந்து வந்தது. தமிழகத்திலும்  அதன் செல்வாக்கு உயர்ந்திருந்தது. காங்கிரஸ் கட்சியில் செயலாற்றி வந்த சென்னைப் பிரமுகர் களில் டாக்டர் டி.எம்.நாயர் (தாரவாட் மாதவன் நாயர்) முக்கியமானவர் ஆவார். இவர் புகழ்பெற்ற காது-மூக்கு- தொண்டை மருத்துவர். அன்றைய சென்னை நகராட்சியின் (தற்போதைய மாநகராட்சி) உறுப்பினராக இருந்தவர். பொதுநலனில் அக்கறை கொண்டவர். காங்கிரஸ் கட்சியில் பிராமண சமுதாயத்து பிரமுகர்களுக்கே முக்கியத்துவமும் கட்சிப் பொறுப்புகளும் கிடைத்து வந்தன. சென்னை மாகாண சட்டமன்றத்திலிலிருந்து டெல்லிலி இம்பீரியல் சட்டமன்றத்துக்குத் தேர்வுசெய்யப்படும் உறுப்பினர் பதவிக்கு டி.எம்.நாயர் போட்டியிட்டார். வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட டி.எம்.நாயர் தோல்வியடைந்தார். தன்னை பிராமண சமுதாயத்து காங்கிரஸ் பிரமுகர்கள் புறக்கணிப்பதை உணர்ந்து, கட்சிப்பணிகளிலிலிருந்து ஒதுங்கியபடி இருந்தார் டி.எம்.நாயர்.

சென்னை நகரில் காங்கிரசின் மற்றொரு முக்கிய பிரமுகர் சர் பிட்டி.தியாகராயர். இவர் பெரும் செல்வந்தர். பொதுநலத்தில் அக்கறை கொண்ட வள்ளல். சென்னை நகராட்சியின் 40 ஆண்டுகால உறுப்பினர். சென்னை மாநகராட்சியின் (அதிகாரப் பற்றற்ற) முதல் தலைவர். அவர் மயிலாப்பூர் கபாலீஸ்வரர்  கோவில் திருப்பணிக்காக 5000 ரூபாய் நிதி வழங்கினார். அன்றைக்கு அது மிகப் பெரிய தொகை. குடமுழுக்கு நாளில் அவர் கோவிலுக்கு சென்றபோது அவரை கோபுரத்தின் மீது ஏற அங்கிருந்த பிராமணர்கள் அனுமதிக்கவில்லை. திருப்பணிக்காக பெருந் தொகையை நன்கொடையாகக் கொடுத்திருந்தாலும், சாதியில் பிராமணர்களுக்குக் கீழான சூத்திரர் என்பதால் அவர் மேலே ஏறக்கூடாது என அவரிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்த பிராமணர் ஒருவரே தியாகராயரைத் தடுத்துவிட்டார். இந்த நிகழ்ச்சி தியாகராயருக்கு பெரும் அவமானமாகிவிட்டது. பிராமணர்களே சமுதாயத்திலும் அரசாங்கத்திலும் செல்வாக்குடையவர்களாக இருக்கிறார்கள் என்றும், மற்ற சாதியினருக்கு உரிய வாய்ப்புகள் அமையவில்லை என்பதை யும் உணர்ந்தார் தியாகராயர்.

திராவிடர் சங்கத்தின் செயலாளராக இருந்த டாக்டர் சி.நடேசனார், பிராமணரல்லாத பிரமுகர்களை ஒருங் கிணைக்கும் பணிகளில் தீவிரமாக இருந்தார். அவருடைய முயற்சியால் டாக்டர் டி.எம்.நாயரும், சர். பிட்டி தியாகராயரும் பிராமணரல்லாத மற்ற சமுதாயத்தினர் விழிப்புணர்வு பெறும் வகையில் பொதுத்தொண்டாற்ற முன் வந்தனர். 1916-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் நாள் பிராமணரல்லாத பிரமுகர் களின் கூட்டம் ஒன்று கூடியது. அதுவே, நீதிக்கட்சி-ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் தோற்றமாகும். இந்த இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட, பிராமணரல்லாதார் அறிக்கையே நீதிக்கட்சியின் நோக்கத்தையும் குறிக்கோளையும் முழுமையாக வெளிப்படுத்தியது.

பிராமணரல்லாதார் முதலில் தங்களுக்குத் தாங்களே உதவி புரிந்து கொண்டு முன்னேறி வரவேண்டியது  அவசியமாகும். பரந்த நிரந்தர அடிப்படையில் அவர்கள் கல்வி, சமுதாயம், அரசியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முன்னேற்றமடைவதற்கு அவசியமான எல்லாச் செயல்களையும் மேற்கொள்ள வேண்டும்- என்பதே அந்த அறிக்கையின் சாராம்சமாகும். திராவிடர் இயக்கத்தின் முன்னோடிகளாக டாக்டர் சி.நடேசனார், சர் பிட்டி.தியாகராயர், டாக்டர். டி.எம்.நாயர் ஆகியோர் அழைக்கப்படுகிறார்கள்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சார்பில் ஜஸ்டிஸ் என்ற ஆங்கில ஏடு நடத்தப்பட்டது. அதனால் அந்த இயக்கத்தை ஜஸ்டிஸ் கட்சி என்று குறிப்பிட்டனர்.  அதை அப்படியே தமிழில் நீதிக்கட்சி என்று அழைக்கத் தொடங்கினர். அரசியல் நிர்வாகத்தில் பங்கேற்பதன் மூலமாக திராவிடர்களான பிராமணரல்லாத மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு- சமுதாய அந்தஸ்து ஆகியவை கிடைக்கச் செய்யவேண்டும் என்பதைக் குறிக்கோளாகக்  கொண்டிருந்தது நீதிக்கட்சி.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் அதிகாரம் மிக்கவர்களாக ஆங்கிலேயர்கள் இருந்தார்கள். ஆட்சி நிர்வாகத்தில் இந்தியர்களுக்குக் குறைந்தளவே அதிகாரமும் பிரதிநிதித்துவமும் இருந்தன. 1909-ஆம் ஆண்டு, இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ஆங்கிலேயர் மிண்டோவும்- இங்கிலாந்தில் இந்தியாவின் அமைச்சராக இருந்த ஆங்கிலேயர் ஜான் மார்லிலியும் வழங்கிய அரசியல் சீர் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன்படி, இந்தியாவில் உயர் பதவிகளிலும் நீதித்துறையிலும் இந்தியர் களுக்கு பொறுப்பளிப்பது, லண்டனில் உள்ள இந்தியாவுக் கான அமைச்சரின் ஆலோசனை சபையில் இந்தியர்களுக்கு இடமளிப்பது, மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர் களுக்குத் தனித்தொகுதிகள் ஒதுக்குவது ஆகியவை இச்சீர் திருத்தத்தின் முக்கிய அம்சங்களாகும். இதன்படி செயல்பட்ட இந்தியாவின் மத்திய சட்டமன்றமும், மாநில சட்டமன்றங்களும் போதிய அளவு சட்டமியற்றும் அதிகாரங்களைப் பெற்றிருக்கவில்லை. இதனால், மிண்டோ- மார்லிலி சீர்திருத்தங் களுக்கு காங்கிரஸ் கட்சியும் சுதந்திரப் போராட்டத் தலைவர்களும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இதனையடுத்து, மாண்டேகு-செம்ஸ்போர்ட் வழங்கிய சீர் திருத்தங் களை இந்தியாவில் நடைமுறைப்படுத்த பிரிட்டிஷ் அரசு முன்வந்தது. மாண்டேகு, இந்தியாவுக்கான அமைச்சராக இங்கிலாந்தில் செயல்பட்டவர். செம்ஸ்போர்ட், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்.

லண்டனிலிலிருந்து மாண்டேகு இந்தியாவுக்கு வந்து, இங்குள்ள கட்சிகளுடன் ஆலோசனைகள் நடத்தினார். அப்போது, நீதிக்கட்சி சார்பில் அவரை சந்தித்த டாக்டர் டி.எம்.நாயர், பிராமணரல்லாதாருக்குத் தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் எனும் வகுப்புவாரி உரிமைக் கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், இக்கோரிக்கையை மாண்டேகு-செம்ஸ்போர்டு குழு ஏற்றுக்கொள்ளவில்லை. வாக்குரிமைக் கமிட்டியிடம் வலிலியுறுத்தி, தனித் தொகுதி கோரிக்கையை வலிலியுறுத்திப் பெறவேண்டும் என நீதிக்கட்சி முடிவுசெய்தது. இதற்காகத் தன் சொந்த செலவில் லண்டன் சென்று ஆதரவைத் திரட்டினார் டி.எம்.நாயர். நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிடம் தன் கருத்துகளைத்  தெரிவிப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டார். கூட்டுக்குழுவிடம் சாட்சியம் சொல்வதற்கு முதல்நாளான, 1919 ஜூலை 17-ஆம் தேதி நாயரின் உயிர் பிரிந்தது. இது நீதிக்கட்சியின் கோரிக்கைக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையிலான  இந்தியச் சட்டத்தை 1919-ஆம் டிசம்பர் 23-ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இதன்படி, இந்தியாவுக்கான மத்திய சட்டமன்றம், இரண்டு அவைகளுடன் ஏற்படுத்தப்பட்டன. சென்னை உள்பட எட்டு மாகாண சட்டமன்றங்கள் அமைந்தன. இந்த சட்டமன்றங் களில் இரட்டையாட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. நிதி, நீதி உள்ளிட்டவை ஆங்கிலேய கவர்னரிடமும், கல்வி- விவசாயம்-உள்ளாட்சி போன்றவை இந்தியர்களிடமும் இருக்கும் என்பதே இரட்டையாட்சி முறை.

வகுப்புரிமை கோரிக்கையை நீதிக்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலிலியுறுத்தியதால், இது பற்றி கவனிக்க லார்டு மெஸ்டன் என்பவரை பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்தது. வகுப்புவாரி உரிமை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டது. முஸ்லிலிம்கள், சீக்கியர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டதுபோல தனித் தொகுதிகள் எதுவும் பிராமணரல்லாதாருக்கு ஒதுக்கப்படவில்லை. ஆனால், சென்னை மாகாணத்தின் 65 பொதுத் தொகுதிகளிலேயே 28 இடங்கள் பிராமணரல்லாதாருக்கு ஒதுக்கப்பட்டன.

(அன்றைக்குத் தனித் தொகுதி என்பது ஒரு தொகுதி யிலேயே பொதுவான வாக்குரிமைக்காக ஒன்றும், குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கான வாக்குரிமை ஒன்றுமாக அமைந்திருந்தது)

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் அடிப்படையில், 1920-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. 21 வயது நிறைந்த பிரிட்டிஷ்-இந்திய குடிமக்களில் சொத்து உள்ளவர்கள், வரிசெலுத்துவோர், எழுதப்படிக்கத் தெரிந்தோருக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்பட்டது. இதிலும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. இந்தத் தேர்தலிலில் காங்கிரஸ் கட்சி நேரடியாகப் பங்கேற்கவில்லை. அக்கட்சியைச் சேர்ந்த சிலர் சுயராஜ்ஜியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டனர். சென்னை மாகாணத் தேர்தலிலில் நீதிக்கட்சி போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றது. சட்டமன்றத்திற்கான மொத்த இடங்கள் 127-இல் 81 இடங்கள் நீதிக்கட்சிக்குக் கிடைத்தன. 
தொடரும் 

No comments:

Post a Comment